நம் வாழ்வில் முக்கியமான முடிவுகள் இந்த ஒரு வார்த்தை தான் முடிவு செய்கிறது . "பிடிச்சிருக்கு .." ஒரு கல்யாணம் .காதல் ஆரம்பித்து காலையில் குடிக்கும் காபி வரை நம் தேர்வுக்கு காரணம் " அது பிடிச்சிருக்கு .." ஏன் பிடிச்சிருக்கு , எது பிடிச்சிருக்கு ? இது முற்றிலும் என் அனுபவங்களை சார்ந்து , நான் புரிந்து கொண்டதை எழுதும் முயற்ச்சி.நமது ரசனைக்கான காரணத்தை அலசும் பதிவு தான் இது ...
மனித மனத்திற்கு எப்பொழுதுமே சாகசம் பிடிக்கும்.சாகசம் என்பது அற்புதம் .அற்புதம் என்பது நமக்கு புரியாதது அல்லது இதுவரை நாம் உணராதது .இன்றும் நம்மால் எளிதில் செய்ய முடியாததை அதே சமயம் செய்ய வேண்டும் என்று எண்ணுவதை வேறு யாரேனும் செய்தால் அதை நாம் ரசிக்கிறோம் .சாமியார், சினிமா, சர்கஸ் எல்லாம் இதில் தான் சேரும்.ஒரு குழந்தையாக நமக்கு இந்த உலக நிகழ்வுகள் அனைத்தும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஒரு குழல் விளக்கு , கிலுகிலுப்பை என்று எல்லாமே நமக்கு அற்புதம் தான் .நமக்கு என்ன பிடிக்கும் என்பது நாம் மட்டும் தீர்மானிப்பது இல்லை .நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே அதற்கு அடித்தளம் அமைகிறது .உதாரணம் அதிகமான மெல்லிசை பாடல்களோ , பக்தி பாடல்களோ இல்லை அதிரடி பாடல்களோ எந்த இசையை தாய் அதிகம் கேட்கிறாளோ அந்த இசை பிற்காலத்தில் குழந்தைக்கு எளிதில் பிடித்துவிடும் , ஏனெனில் இந்த ஒலியுடன் தனக்கு ஏதோ ஒரு வித தொடர்ப்பு உண்டு என்பதை உணர செய்யும் .
எனக்கு எப்பொழுதுமே ஒரு நம்பிக்கை உண்டு .மனிதனை சுற்றி ஒரு மின் காந்த விசை இருக்கும் என்று . இதை ஆரா என்றும் சொல்லலாம் .சில பேரை பார்த்த உடன் இதற்க்கு முன் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் போனாலும் கூட விரும்பவோ, வெறுக்கவோ , நம்பவோ இல்லை சுதாரிப்பாக இருக்கவோ தோன்றும் .இதை அறிவியல் பூர்வமாக விளக்குவது சற்று கடினம் .ஆனால் உணர்வு பூர்வமாக விளக்கலாம் .இது காலம்காலமாக , விலங்கினத்திலிருந்து நாம் கொண்டுள்ள எச்சரிக்கை உணர்வு மற்றும் உள்ளுணர்வு என்றும் கூறலாம் .நாம் வளரும் சூழல் நமது விருப்பங்களை பெரிதும் தீர்மானிக்கிறது .முப்பது வருடங்களுக்கு முன் தான் சாப்பிட்ட பழைய சோறு , சின்ன வெங்காயத்தின் ருசியை இன்றும் மறக்காமல் தேடி உண்ணும் எத்தனையோ கோடீசுவரர்கள் உள்ளனர் .
பொதுவாகவே ஒன்று பிடிப்பதற்கு காரணம் அது ஏதோ ஒரு வகையில் நமது கடந்த கால மகிழ்ச்சியை நினைவூட்டுவதாக இருப்பதால் தான் .எனக்கு சிறு வயதில் நான் பார்த்த படங்களில் நன்றாக நினைவில் உள்ள முதல் படம் ராஜ சின்ன ரோஜா ,அதிலிருந்தோ என்னவோ எனக்கு எல்லா ரஜினி படமும் என்னை குழந்தையாக ஆக்கி தன்னை மறக்க செய்வதால் இன்றும் என்றும் பிடிக்கும் .மனித உள்ளுணர்வுக்கு தனி சிறப்பு உண்டு , உற்று கவனித்தால் அதற்க்கு உண்மையான அன்பை வார்த்தைகள் இன்றி உணர்ந்து கொள்ள முடியும் .அதே போல் வெறுப்பையும் , பொறாமையையும் கூட உணர முடியும் . நம்மீது உளமார்ந்த அன்பை செலுத்தும் அணைத்து ஜீவன்களையும் நமக்கு பிடிக்கும் , அன்பில் உண்மை இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாகவோ அல்லது கோபமாகவோ வெளிவந்தால் கூட நமக்கு பிடிக்கும் .உதாரணம் அன்று திட்டிய ஆசிரியரை இன்றும் நன்றி மறவாமல் எண்ணுவது .
சாகசங்களையும் புதுமையும் விரும்பிய நாம் வளர வளர பழக்கங்களின் கையில் சிக்கி விடுகிறோம் .நாம் பழகிய விஷயம் நமக்கு பிடிக்கும் நமக்கு பிடித்தால் நாம் அதை பழகுவோம் .இங்கிருந்து அமெரிக்கா சென்றும் இட்லி சாம்பார் சாப்பிடுவது கூட ஒரு உதாரணம் தான் .நமக்கு பயத்தை அளிக்கக்கூடிய , நமது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கக்கூடிய எந்த விஷயமும் நமக்கு பிடிப்பதில்லை , எனக்கு இன்று வரை ராட்டினம் என்றால் பயம் சிறு வயதில் ஒரு முறை ராட்டினம் ஏறிவிட்டு வந்து வாந்தி எடுத்தேன், அந்த கசப்பான அனுபவம் இன்று வரை தொடர்கிறது.
இதையெல்லாம் தாண்டி நாம் கல்வியினாலும் , அறிவினாலும் , தேடல்களின் மூலமாகவும் சில விஷயங்களை கண்டடைந்து அதை நேசிக்க தொடங்குவோம் .அடிப்படையில் நம் எல்லோர் மனதினிலும் ஒரு தேடல் இருக்கிறது அந்த தேடல் எது என்பதை தெரிந்துக்கொள்ள நாம் பல விஷயங்களை தேடுகிறோம் , பல விஷயங்களை முயல்கிறோம் .இப்படி தான் வெவ்வேறு வாழ்க்கை சித்தாந்தங்கள் , ஆன்மீகம், தத்துவம் , புத்தகம் , இலக்கியம் என்று நம் வாழ்வில் நுழைகிறது .ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று நமக்கு உதவுகிறது , எனக்கு இலக்கிய பரிட்சயம் தமிழ் நாட்டின் பலரை போல கல்கியில் தான் தொடங்கியது பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் எனது கற்பனைகளை விரிய செய்தது .பின் தேவன் எழுத்துக்கள் , பின் நா பா . ஜெயகாந்தன் , சுஜாதா என்று மாறி மாறி இப்பொழுது ஜெயமோஹனில் நிற்கிறது .இலக்கியம் , சினிமா இவை இரண்டிலும் ஒப்பீடு சர்ச்சை தான் வளர்க்கும் .எனக்கு வெவ்வேறு எழுத்துக்கள் வெவ்வேறு வகையில் உதவி இருக்கின்றன .
இதெல்லாம் இருக்கட்டும் நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணை தேர்வில் என்ன நடக்கிறது ?.நண்பர்கள் பொறுத்த மட்டில் ஒத்த மனம் கொண்டவர்கள் , ரசனை கொண்டவர்கள் எளிதில் நண்பர்களாகிடுவர்.இன்னொரு வகையான நடப்பு உண்டு பெரியாருக்கும் மூதரிஞருக்கும் இருந்தது போல .நேர் எதிர் குணங்கள் கொண்ட மனங்களின் நட்பு .அதிகம் பேசுபவர்களின் நட்பு வட்டத்தில் நிச்சயம் ஓரிரு நண்பர்கள் அதிகம் பேசாதவர்கள் இருப்பார்கள் .தங்களின் குணங்களை கொண்டு நிரப்பி கொள்ளும் முயற்சி எனவும் எண்ணலாம்.எதிர் குணங்கள் மேல் உள்ள ஈர்ப்பு அல்லது அதை அறியும் ஆர்வம் என்றும் எடுத்து கொள்ளலாம் .இப்படி எவ்வளவு சொன்னாலும் நமக்கு உணர்வுப்பூர்வமாக பிடித்ததை அறிவு பூர்வமாக அதன் காரணத்தை கண்டடைவது சற்று கடினம் தான் .உணர்வும் அறிவும் சம நிலைக்கொள்ளும் போது எல்லாரையும் பிடிக்கலாம் அல்லது மொத்தமாக பற்றற்றும் போகலாம் .ஏன் ஒரு விஷயம் பிடித்துள்ளது என்று ஆராய்ந்தால் நாம் நம்மை புரிந்துக்கொள்ள மற்றும் ஒரு அடி வைத்துள்ளோம் என்று பொருள் .சார்பு நிலையின்றி மனசாட்சியின் துணையோடு இதை அணுகினால் நமக்கு நம்மை பற்றி மேலும் தெளிவான சித்திரம் கிட்டும் .முயற்சி செஞ்சு தான் பாப்போமே .
நமது பழக்கம் எனும் சக்கரத்திலிருந்து சற்று வெளியே வந்து கைகளை அகல விரித்தால் மேலும் பல விஷயங்களை பார்த்து சொல்லலாம் " பிடிச்சிருக்கு .." என்று .
ஆண் பெண் தேர்வை பற்றி சொல்லும் ஒரு நல்ல குரும்படம் :)