(ஆம்னிபஸ் பதிவு)
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவருடைய ‘இந்திய சுதந்திர போர்’ எனும் நூலில் காந்தியின் தண்டி யாத்திரை குறித்து இவ்வாறு எழுதுகிறார்
“நெப்போலியன் எல்பாவிலிருந்து திரும்பியவுடன், பாரிஸ் நகர் நோக்கி நடந்து சென்ற காட்சியுடனோ , அல்லது முசோலினி இத்தாலியில் அரசியல் ஆதிக்கத்தை கைப்பற்றுவதற்காக ரோம் நோக்கிச் சென்ற காட்சியுடனோதான் மகாத்மாவின் தண்டி யாத்திரையை ஒப்பிட வேண்டும்”.
ஏப்ரல் 6 , 1930. தொடுவானம் வரை பரந்து விரியும் ஆழ்கடல் முகட்டில் காந்தி, அங்கு குழுமியிருக்கும் பெரும் மக்கள் திரளை நோக்கி நிற்கிறார். அவரது உள்ளத்தில் ஆழ்கடலின் அமைதி, குழுமியிருக்கும் மக்களின் அலையோசையை ஒத்த ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே மூடிய தன் கைவிரல்களைத் திறந்து அந்த வெள்ளை நிற உப்பை உயர்த்திக் காட்டுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தின் மகத்தான மற்றுமொரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
1930 ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்ரகத்தின் பவள விழாவை (75 ஆண்டுகள் நிறைவடைவதை) முன்னிட்டு நவ இந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூல், "தண்டி யாத்திரை". ஏ.கோபண்ணா அவர்களால் எழுதப்பட்ட 61 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய நூல் தண்டியாத்திரையை பற்றிய முக்கியமான தகவல்களையும் அந்த போராட்டத்தின் பின்புலத்தையும் எளிமையாக நமக்கு அறிமுகம் செய்கிறது. தண்டி யாத்திரை மட்டுமின்றி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் மற்றும் சென்னை உப்பு சத்தியாகிரகம் பற்றிய பல புதிய தகவல்களையும் நமக்கு எளிமையாக தொகுத்து அளிக்கிறது இந்த நூல்.
இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு. அதே சமயம் சாதாரண மக்கள்கூட இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியும் எனும் அளவிற்கு இதன் போராட்ட வடிவம் எளிமையானது. யங் இந்தியாவில் தொடர்ந்து உப்பு வரியை பற்றியும் அதை மீறுவதை பற்றியும் எழுதுகிறார். இந்த அடாவடியான வரி திரும்பப் பெறப்படவில்லை என்றால் இன்னும் ஒன்பது நாட்களில் மெய்யான சத்தியாகிரக போராட்டம் தொடங்கும் என்று அன்றைய வைஸ்ராயை பகிரங்கமாக எச்சரிக்கிறார்.
ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. இவரை கைது செய்தாலும் பிரச்சனை, கைது செய்யவில்லை என்றாலும் பிரச்சனை எனும் சூழலில். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தது. மார்ச் 11 ல் அகமதாபாதில் தொடங்கி ஏப்ரல் 6 ல் தண்டியில் முடிவடைந்த இந்த 24 நாட்கள் நீண்ட யாத்திரையில் மொத்தம் 241 கிலோமீட்டர்களை காந்தியும் அவரது எண்பது தொண்டர்களும் நடந்தே கடந்தார்கள். காந்தி நினைத்திருந்தால் ரயிலிலோ மோட்டாரிலோ பயணித்து, ஏதோ ஒரு கடற்கரையை அடைந்து இந்தச் சட்டத்தை மீறியிருக்கலாம் ஆனால் அதை ஒரு நெடிய பயணமாக, ஒரு விரதமாக மாற்றி தேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். மிகப்பெரிய மக்கள் எழுச்சியை உருவாக்கினார். இந்த பயணத்தின்போது காந்தியின் அறைகூவலுக்கு செவி மடுத்து ஆங்கிலேய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பணிகளைத் துறந்து போராட்டக் களத்தில் ஐக்கியமாகினர் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார் கோபண்ணா.
கோபண்ணா அவருடைய இந்த நூலில் பல புதிய தகவல்களை அளிக்கிறார். காந்தியுடன் சத்தியாகிரகத்தில் பங்குகொண்டவர்களில் இரண்டு இஸ்லாமியர்களும் ஒரு கிறித்தவரும் அடங்குவர். நேபாளத்தில் இருந்து வந்த கரக் பகதூர் சிங் கொலை குற்றத்திற்காக சிறை சென்றவர். அவரும் இந்த குழுவில் இணைந்து நடந்தார். அதற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தபோது ‘ எந்த மன்னிப்பை பகதூர் சிங் சமூகத்திடம் எதிர்பார்க்கிராரோ அதை சமூகம் அவருக்கு அளிக்க வேண்டும்’ என்றார் காந்தி, அவரது மகன் மனி லால், பேரன் காந்தி லால் உட்பட காந்தியின் குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கு பெரும் சத்தியாகிரகிகள் கடுமையான உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். ஆனால் சென்ற இடங்களில் எல்லாம் உணவும் உபசாரமும் பலமாகவே இருந்தன. புரோச் எனும் இடத்தை வந்தடைந்தபோது மஜூம்தாரும் டாக்டர்.சந்துலால் தேசாயும் சத்தியாகிரகிகளுக்கு ஐஸ் க்ரீம் வழங்கிய விஷயத்தை அறிந்த காந்தி அவர்களைக் கடித்து கொண்டார். அதற்கு பிராயச்சித்தமாக யாத்திரை முடியும்வரை எலுமிச்சம் சாரும் பேரீச்சம் பழங்களும், ஆட்டுப்பாலும்யும் மட்டுமே உணவாக உட்கொள்வது என்று காந்தி முடிவெடுத்தார் எனும் செய்தியைப் பதிவு செய்கிறார் கோபண்ணா.
61 வயதான காந்தியின் மூட்டுக்கள் கடுமையாக வலித்த காரணத்தால் பயணத்தைத் தொடர முடியாமல் போனால் என்னாவது என்பதற்காக, எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குதிரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் யாத்திரை தொடங்கிய இரண்டாவது நாளிலேயே திருப்பி அனுப்பிவிட்டார் காந்தி.. இரவு கடைசியாக உறங்கி விடியலில் முதல் ஆளாகத் தயாராகி நின்றார் அவர். மூட்டு வலியின் காரணமாக காலை யாத்திரை தொடங்கியவுடன் சிறிது தூரம் இரு சத்தியாகிரகிகளின் தோள்களில் சாய்ந்தபடியே கடந்து வருவார். அதன் பின்னர் தன் தடியைத் துணையாக கொண்டு மீதி தூரத்தை நடந்தே கடப்பார்.
இப்படியே 241 கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்து தண்டியை வந்தடைந்த காந்தி “ நாளை உப்புடன் திரும்பி வருவேன், அல்லது என்னுடல் கடலில் பிணமாக மிதக்கும்” என உணர்ச்சி பொங்க உரையாற்றினார். தண்டியில் காந்தி பற்ற வைத்த அந்த உணர்வு அனலாக இந்தியா முழுவதும் கனன்று எரிந்தது.
தமிழகத்தில் வேதாரண்யத்திலும் சென்னையிலும் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றிய குறிப்புகளையும் அளிக்கிறார் கோபண்ணா. 76 வயதான நாவிதர் வயிரப்பன் தியாகிகளுக்கும் தேசியவாதிகளுக்கு மட்டுமே சவரம் செய்வது என்றும் ஆங்கிலேயர்களுக்கும், போலீசாருக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் இந்தியர்களுக்கும் சவரம் செய்வதில்லை எனும் கொள்கையை உறுதியாக கடைபிடித்தார். ஒருமுறை வரிசையில் வந்தமர்ந்த காவலருக்கு சவரம் செய்யத் தொடங்கிய பின்னர் அவர் ஒரு போலீஸ்காரர் எனும் தகவல் வயிரப்பனுக்குத் தெரியவருகிறது. போலீசாரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் தன் சவரக் கத்தியை அப்படியே போட்டுவிட்டு சவரத்தைப் பாதியில் விட்டுச் செல்கிறார். போலீசார் அவரை அழைத்து விசாரிக்கும்போது. ‘என் கையை வெட்டினாலும் போலீசாருக்கு வேலை செய்யமாட்டேன்’ என வயிரப்பன் உறுதியுடன் தன் எதிர்ப்பை வெளிபடுத்தியதன் விளைவாக, ராஜாஜி, வேதரத்தினம் பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உப்புசத்தியாகிரக போராட்ட காலத்தில் ஆறு மாத கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கும் பேறு வயிரப்பனுக்கும் வாய்க்கிறது.
காவலர் வரும் வரை காத்திருந்து கைதான ராஜாஜி, தன் சுமையைப் பிறர் சுமந்து வந்ததைக் கடித்து கொண்ட காந்தி, என பல புதிய தகவல்களை தன் போக்கில் சொல்லி செல்கிறது இந்தப் புத்தகம். அளவில் சிறியது என்றாலும் இந்நூல் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான சகாப்தத்தின் வரலாற்றை எளிமையாக நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த நூலை வாசிக்கும் போது லூயி பிஷர் அவருடைய நூலில் காந்தியின் இந்த தண்டி உப்பு சத்தியாகிரகத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது:
“ஒரு பிடி உப்பைக் கொண்டு வல்லமை மிக்க ஒரு அரசாங்கத்தை எதிர்க்க ஒரு கலைஞனுடைய திறமையும் கண்ணியமும் கற்பனைத் திறமும் காந்திக்கு இருந்திருக்க வேண்டும்”\
ஆம் அப்படியின்றி வேறெப்படி இருக்க முடியும்?
தண்டி யாத்திரை
ஏ.கோபண்ணா
உள்ளடக்கம்- வரலாறு, அபுனைவு
நவ இந்தியா பதிப்பகம்
9, 2 வது பிரதான சாலை,
வெங்கீஸ்வரர் நகர்
வட பழனி
சென்னை- 26