ஜெயமோகன் நடத்தும் இலக்கிய முகாம்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து சென்றுவருகிறேன். இணையம் வழி உரையாடும் நண்பர்களை நேரில் சந்தித்து உரையாடுவது நல்ல அனுபவம். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வழக்கமாக நடைபெறும் ஊட்டியில் இல்லாமல் ஏற்காடில் நடைபெற்றது. கம்பன், வில்லி பாரதம் மட்டுமின்றி சிறுகதை விவாத அரங்கும் கவிதை விவாத அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்கால இந்திய மாற்றுமொழி சிறுகதைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உரையாற்ற வேண்டும் என எனக்கு என் பங்கு பணி பிரித்து கொடுக்கப்பட்டது. மாற்றுமொழி சிறுகதைகளை தொடர்ந்து அதிகம் வாசிப்பவன் இல்லை நான். மே மாத இறுதியில் திருமணம் வேறு, ஆனாலும் இது ஒரு பெரிய வாய்ப்பு என்பதால் விட்டுகொடுக்க மனம் ஒப்பவில்லை. நண்பர் நட்பாசிடம் சொல்லி ஏதேனும் புத்தகங்களை சென்னையிலிருந்து வாங்கி அனுப்புங்கள் என கேட்டுக்கொண்டேன். என்னிடம் இருந்த மகாஸ்வேதா தேவி சிறுகதை தொகுப்பில் எனக்கு எதையும் தேர்வு செய்ய பிடிக்கவில்லை. வம்சி வெளியீட்டில் வெளிவந்த இரு மொழியாக்க தொகுப்புக்களை அனுப்பினார், அவற்றில் பால் சக்காரியாவின் தொகுப்பும் ஒன்று. மற்றொன்று சூர்ப்பனகை எனும் தொகுப்பு. அவற்றில் பால் சக்காரியாவின் தொகுப்பை தேர்வு செய்தேன். அத்தொகுப்பில் இரு கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எனினும் இக்கதை அகத்திற்கு நெருக்கமாக இருந்தது. ஆகவே இக்கதையை தேர்வு செய்தேன். இது ஒரு சிறுகதையே அல்ல என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இக்கட்டுரை பலரையும் சென்று சேர்ந்தது என்றே எண்ணுகிறேன். ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை.