Showing posts with label அபி. Show all posts
Showing posts with label அபி. Show all posts

Thursday, April 14, 2022

இன்மையின் இருப்பு - அபியின் கவிதைகள்

நன்றி தமிழினி. அபி 80 க்காக எழுதிய கட்டுரை.  



அந்தி விளையாட்டு

முடிகிறது

வாசற்படிகளில் பிள்ளைகள்

வந்து தளைப்படுகின்றனர்

பேச்சும் சிறு சிரிப்புகளும்

விசிறி மஞ்சளாய்க் கனல்கிறது மாலை

கதை மனிதர்கள் 

ஆழங்களிலிருந்து மின்னிக்கொண்டு 

வருவதும் போவதுமாயிருப்பர்

ஏதேதோ அடுக்குகளிலிருந்து 

ஏதேதோ அரூபங்கள் 

பறந்து படிந்து மறையும்

காலத்துள் நிகழ்ந்திராத 

காலம் தகதகத்து

பிள்ளைகளின் கண்களில் இறங்கும் 

கதைகள் சற்றே வண்ணம் கலங்கி, எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில் 

உயிர் சேகரித்துக்கொண்டு

பழைய இருப்பிலேயே 

புதிது புதிதாகும்

எல்லாவற்றுடனும் இழைந்து

இருத்தலே 

காத்திருத்தலாக

நான்

மாலை- கதை, அபி


கவிதையைப் பற்றி  எழுதுவதென்பது பிடித்த கவிதைகளை இதை வாசித்துப்பாருங்கள் என பரிந்துரைப்பதற்காகவும், நமக்கு பூடகமாக விளங்கிய ஏதோ ஒன்றை சக வாசகர்களுக்கு கடத்த முயல்வதற்காகவும், அம்முயற்சியில் கவிதையை நாம் மேலும் நெருங்குவதற்காகவும்தான். எனக்கு பிடித்த அபியின் கவிதையோடே இக்கட்டுரையை தொடங்கியுள்ளேன். 'கவிதைகளில் சூசக இடைவெளிகளைக் காண்பதோடு நிறுத்திக் கொள்வதே நல்லது; அவற்றுக்கு அர்த்தம் தேடும் முயற்சி இடைவெளிகளை பழுதாக்கிவிடும்.' என கவிதையை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான நம் அதீத மெனக்கெடல் குறித்த அவரது எச்சரிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்.



அபியின் கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள  கவிதைப் பற்றிய அவரது பார்வை பெரும் உதவியாக இருக்கக்கூடும்.  'கவிதை நம் அனுபவங்களைத் தூண்டும் ஒரு தூண்டல் மட்டுமே. அனுபவம் அவரவரிடம் இருப்பது. ஒருவருடையது இன்னொருவருக்கு போகாது.' என எழுதுகிறார. மற்றொரு தருணத்தில் கவிதை, கவிஞன், வாசகன், அனுபவம் இலற்றுக்கு இடையேயான உறவை பேசும்போது கவிதை உருவாவது மற்றும் பொருள்கொள்ளப்படுவது சார்ந்த புரிதலை அளிக்கிறார். 'அழுத்தமான சுய பிரக்ஞை கொண்ட கலைஞனுடைய அனுபவம் ஒரு பொது ஊடகத்தின் வழியாக வாசகனிடம் சேர்ந்து அவனுக்கென்று தனித்த தொனியுடைய சுயப் பிரக்ஞை உருவாகத் தூண்டுகிறது. தனி அனுபவம் > பொது அனுபவம் > மீண்டும் வேறொரு தனி அனுபவம்.' அபியின் அத்தனை கவிதைகளும் என்னால் உள்வாங்க முடிந்தது என நிச்சயம் கூற முடியாது. ஆனால் மேற்சொன்ன வகையில் வாசகனாக எனது தனி அனுபவத்துடன் தொடர்பு கொண்ட கவிதைகளின் மீதான அகவயமான வாசிப்பையே இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன். 

 


அபியின் கவிதைகளை முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் வாசிக்கத் தொடங்கியபோது சற்று திணறித்தான் போனேன். மொழியின் காரணமாகவோ பேசு பொருளின் காரணமாகவோ கவிதை வசப்படாதது ஒரு சிக்கல் என்றால் வசப்பட்ட ஒன்றிரண்டு கவிதைகளும் கடும் அமைதியின்மையை ஏற்படுத்தியது. அமைதியின்மைக்கான‌ காரணத்தை என்னால் அப்போது விளக்கிக்கொள்ள முடியவில்லை. தீய நிகழ்வை முன் உணரும்போது ஏற்படும் மனத்தொந்தரவை ஒத்திருந்தது. 

என்ற ஒன்று 


சூன்யம் இருந்தவரை 

எல்லாம் சரியாயிருந்தது 


இதன் இல்லாமையையும் 

சூன்யத்தில் அடக்கிச் 

சமாதானப்பட முடிந்தது 


ஏழுகடல் எழுதீவு எழுவானம் கதைக்கேட்கும் 

குழந்தைகளுக்கு 

இறுதியில் கிடைத்தேவிடும் சூன்யம் 

என்ற 

குறுகுறுப்பு இருந்தது 


நாமும் 

நீ நான் என்ற 

அடையாளச் சிக்களைப் 

புறமொதுக்கிவிட்டு 

நிம்மதியாயிருக்க முடிந்தது 


கேள்விகள் வந்து 

கொத்தித்த தின்ன நின்றால் 

நம்மைக் கொடுத்துவிட முடிந்தது 

இல்லாமலாவது இருப்போமல்லவா 

என்று 


எதிர்மறைகளின் 

இரைச்சலை 

அமைதியாய் 

ரசிக்க முடிந்தது 


பூமியைத் தொடும் அடிவானத்திடம் 

அலட்சியம் காட்ட முடிந்தது 


தைரியமாக 

விஷயங்களைப் 

பகைத்துக் கொள்ள முடிந்தது 

எப்படி இருப்பினும் 

இவை போகமுடியாத இடம் 

நாம் போக இருக்கிறது என்ற 

நம்பிக்கையில் 


சூன்யம் என்ற ஒன்று 

இருந்தவரை

எல்லாம் சரியாயிருந்தது

சாரத்திற்கும் சூன்யத்திற்குமான முரண்கள் நூற்றாண்டுகளாக இருந்துவரும் விவாதம். சூன்யவாதிகள் இன்மையை அஞ்சியே சாரத்தை கற்பிதமாக உருவகிக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்கள். அறிவியலும் பகுத்தறிவும் சாரவாதத்திலிருந்து நம்மை படிப்படியாக சூன்யவாதத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. தாஸ்தாவெஸ்கி சாரமிழப்பின் அச்சுறுத்தலையே அதிகமும் பேசினார். வாழ்வின் பொருளையும் அறவுணர்வையும் சூன்யவாதம் எப்படி பதிலீடு செய்யும் என்ற கேள்வி அவரை ஆட்கொண்டது. ஆனால் இந்த நூற்றாண்டில் நாம் சூன்யத்திற்கு மெல்ல பழகியுள்ளோம். அதுவே நமக்கு ஆசுவாசம் அளிப்பதாகவும் உள்ளது. பொறுப்பிலிருந்து நமக்கு பெரும் விடுதலையை அளிக்கிறது. அபியின் மேற்சொன்ன கவிதை சூன்யத்தை மறுதலிக்கிறது. அப்படியானால் சாரமுள்ளது என சொல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சூன்யமே நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகிப்போன தலைகீழ் நிலையில் அதையும் துணிக்கிறார். அவரே சொல்வது போல் 'வாழ்க்கையின் இருண்மை கவிதையை எளிதில் தொற்றிக் கொள்கிறது.' இருமைகளை கட்டமைக்காத இருண்மை தான் அபியின் கவிதையில் உணரும் அமைதியின்மைக்கான காரணம். ஏனெனில் நமக்கு இது பழக்கமில்லை. இன்மையின் இன்மை இருப்பல்ல என உணரும்போது ஏற்படும் திடுக்கிடல். 

'படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியாவை. மௌனத்தைத் தொட முயல்பவை.' என படிமங்கள் குறித்து அபி குறிப்பிடுகிறார். மிகத்தீவிரமான படிமங்கள் கவிதையில் எழுந்து வரும்போதும் மனம் படபடப்பை உணர்கிறது. 

எலும்புகளின் நூலகம்


பாழடைந்த சிற்றூர் அது விளையாட்டாய் 

ஒரு கல்லைப் பெயர்க்க 

அடியில் ஊர்ந்தன 

நூறு வயது

விஷப்பூச்சிகள்

வெறும்

முள்செடி விரிப்பின் மீது 

வெயில் கிழிந்து கொண்டிருந்தது

எரிந்த குழந்தைகளின் 

உடல் விறைப்பைப் 

பார்த்துக் கொண்டிருந்தன 

கரிந்த சுவர்கள்

மொழிகளை மறந்துவிட்ட மனசுக்குள் 

தூரதூர தேசங்களின் 

ரத்தம் வந்து 

பாய்ந்து கொண்டிருந்தது

விளையாட்டாய்

வீதிகளைப் புரட்டியபோது

அடியில்

நரபலி தேவதைகளின்

நடன மண்டபம்

நீச்சல் குளம்

ஆமைமுதுகுபோல் சாலை

எலும்புகளின்

மிகப்பெரிய நூலகம்...

'எலும்புகளின் நூலகம்' 'நரபலி தேவதைகளின் நடன மண்டபம்' போன்ற இரண்மை நிறைந்த படிமங்கள் அடர்த்தியை கூட்டுகிறது. 


அபியின் சில கவிதைகளில் தலைகீழாக்கம் நிகழ்கிறது. இரவின் இருளை போக்க கதிரொளி பாய்ச்சும் ஆதவன் என்பது ஒரு பொது உருவகம். இங்கே அது தலைகீழாகிறது. 

காலம்- கறுப்புச் சூரியன் 

இந்த 

ஒளியின் பயங்கரத்தில் 

வழிகண்டு போக 

கண் மறைத்துப் போக 

ஒரு கறுப்புச் சூரியன் 

உண்டு 

ஒவ்வொருவரிடமும் 


தெளிவு எனும் கவிதையில் இப்படியான ஓரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. சிந்தையிலும் செயலிலும் தெளிவென்பது நாம் விரும்பத்தக்க, வளர்த்தெடுக்க வேண்டிய நல்லியல்பாக காண்கிறோம். அதற்காக அயராது முயல்கிறோம். 'தெளிவு என்பது பொய்/ என அறியாது/  தெளிவைத் தேடிப்  பிடிவாதம் ஏறிப்/  பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த/  பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்'. தெளிவு பொய்யாகிறது, அதற்கான விழைவு பாமரத்தனமான அறியாமையின் வெளிப்பாடாகிறது.  


கால்பந்து இருத்தலியல் சிக்கலை சார்ந்து மிக முக்கியமான படிமமாக பயன்படுத்தப்படுகிறது. விதி மற்றும் தன்னை மீறிய ஆற்றல்கள், நியதிகளுக்கும் சுயேச்சைத்தன்மைக்கும் இடையேயான முரணை சித்தரிக்க கால்பந்து எனும் படிமம் பயன்படுத்தப்படுவது வழக்கம். அபியின் கால்பந்தும் இதே உரையாடலை கவிதையில் நிகழ்த்துகிறார். 

கால்பந்து


வெற்றியும் தோல்வியும் 

எல்லாம் விளையாட்டு 

அடிபடும் பத்துக்கோ 

அத்தனையும் வினை


குதிக்கட்டும். 

காற்றிருக்கும் வரை; 

குதித்துக் குதித்து 

வானை உரசத் தாவி மண்ணிலேயே விழுந்து 

குரலிட்டுக் 

குதிக்கட்டும்


வெளிக்காற்றினலைகள் 

எதிலும் அடைபடாத ஜீவன்கள் இன்னும் பிறக்காதவை. 

இதை அலைத்து இழுத்து உயர்த்திச் சரிக்கையில்


உள்ளிருப்பது.

அடைபட்டதற்கு ஏங்கித் 

தன் தோல்சிறையை 

உருட்டி உருட்டிப் பார்க்கும்...


ஏதேதோ புழுதிக் கால்கள் அத்தனையும்

ஒருகாலின் 

இடம் வேறுபடும் சாயைகள்

எட்டி எட்டி உதைக்க

இது

தப்பி ஓடும்; இன்றேல்

எதிர்த்துப் பாயும்.


முடிவில்

கால் கொடுத்த

கண்ணைக் கொண்டு

கால் காட்டிய திசைநோக்கி

அழுதழுது ஓடும்


காலன்றி வேறறியாமல்

காலின் கடும்உதைகொண்டோ 

காலின் மெல்லணைப்புக் கொண்டோ

காலுக்குரிய முகத்தைக் 

கற்பனை செய்து கொள்ளும் நிமிஷத்துக்கு நிமிஷம்


அதுவே ஜெயிக்க

அதுவே தோற்க, 

பந்துக்கு என்ன கிடைக்கிறது?


பந்தும் ஆடும்

காலும் ஆடும்

யாரை யார் ஆட்டுவிப்பது?

இக்கவிதையின் இறுதி வரிகளில் அபி எழுப்பும் கேள்வியின் வழியாக கவிதை மற்றொரு பரிமாணத்தை அடைகிறது. தலைகீழாக்கம் என்பது நேர்மறையில் தொடங்கி எதிர்மறையில் முடிவது மட்டுமல்ல, எதிர்மறை நேர்மறையாக உருமாறுவதும் தான். அபியின் 'தோல்வி' அத்தகைய ஒரு முயற்சி. 

தோல்வி


தோல்விக்குப்பின் வந்த நாட்கள் கலவரப்படாமல் கடக்கின்றன


அலையடங்கிய நீர்ப்பெருக்கின்

மேலாக

மெல்ல நடந்து செல்வதில் சுகம்


பழக்கமில்லாத தாவரங்களுடன்

ஜீவராசிகளுடன் 

வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன் 

தனியே விடப்பட்டிருப்பதில் ஆறுதல்


வாசனை எதுவும் இல்லை

சுவாசம் சிணுங்காமல் போய்வருகிறது 


சாம்பல் நிறம் மட்டும்

மெருகேறியிருக்கிறது

வேறு நிறங்கள் இல்லை 


பார்ப்பவைகளுடன்

பார்க்க முடியாதவைகள் பிரித்துணர முடியாதவை ஆகிவிட்டன

மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது

இந்தத் தருணங்களின் விளிம்பிலிருந்து 

எட்டிப் பார்க்கையில் 

செய்தி ஒன்றும் தெரிவிக்காத அமைதிப் பள்ளத்தாக்கு

அபி இக்கவிதைகளில் நவீனத்துவ, இருத்தலியல் போக்குகளை வெளிப்படுத்துகிறார். சித்திரக் கூடம் கவிதையில் வரும் இவ்வரிகள் நவீனத்துவத்தின் சிறந்த உருவகம் 'பூரணத்துவத்தைத்/ தோண்டியெடுக்க/ வெட்டிய பள்ளங்கள்/  எங்கும்.'  செயலில் இருக்கும்போது ஓய்விற்கு செயலின்மைக்கும், ஓய்விலிருக்கும்போது இயக்கத்திற்குமான ஏக்கம் மாறி மாறி அலைக்கழிக்கிறது ஒய்வு எனும் கவிதையில்.  'சாயைகளைத் தின்கிறாய்'  நிழலை நோக்கி பேசும் கவிதை. நவீனத்துவத்தில் நிழல் மிக முக்கியமான பேசு பொருளாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' எனும் மௌனியின் கேள்வி நினைவுக்கு வருகிறது. 





இருண்மை இல்லாத சில அபாரமான கவிதைகளும் அபி எழுதியுள்ளார். 

இவ்வளவு மின்னல்களும் 

மேய்ந்துதானோ

என் வானம்

இவ்வளவு சுத்தமாயிருக்கிறது? 

எனும் வரிகளில் நிறைந்துள்ள கற்பனை அபார மன எழுச்சியை அளித்தது. 'இடைவெளிகள்' பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தன் கற்பனையின் ஆற்றலுடன் சித்தரிக்கிறது. 


இடைவெளிகள் 

யாரும் கவனியாதிருந்தபோது 

இடைவெளிகள் 

விழித்துக்கொண்டு 

விரிவடைந்தது 

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் 

அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும் 

உனக்கும் உனக்கும் 

வினாடிக்கு வினாடிக்கு 

இடைவெளிக்கு இடைவெளிக்கு 

என்று 

இடைவெளிகள் விரிவடைந்தது 

வெறியூறி வியாபித்தன 

வியாபகத்தின் உச்சத்தில் 

மற்றெல்லாம் சுருங்கிப்போயின 

ஆங்காங்கிருந்து 

இடைவெளிகள் ஒருங்கு திரண்டு 

அண்டவட்டமாயின 

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும் 

சிற்றெறும்புகளாய் 

வாழ்க்கைத் துகள் 

வட்டத்தின் சுழற்சியில் 

நடுவே தோன்றி வளர்ந்தது 

பேரொளி 

அதற்குப் பேச்சு வரவில்லை

சைகைகளும் இல்லை 

எனினும் அதனிடம் 

அடக்கமாய் வீற்றிருந்தது 

நோக்கமற்ற ஒரு 

மகத்துவம் 

பேரொளியாக அமர்ந்திருக்கும் ஒரு 'நோக்கமற்ற மகத்துவம்' எனும் சொல் பயன்பாடு மனதை சிறகடிக்கவைத்த சொற்றொடர். 

மாலை -- காலியிடம்

உண்மை

தன் பழைய இடத்துக்குத்

திரும்பி வந்து விட்டது

எப்போதும் காலியாயிருக்கும் இடம்


அது இல்லாத இடம் எது

என்பது பெரியோர் வாதம்.

வாதம் தெரியாமல்

எவர் பேச்சையும் கவனிக்காமல்

இதையே கவனித்திருக்க நேர்கிறது,

திரும்புவதை, திரும்புவதை மட்டும்.


புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்

இடைச்சிறுவர்கள்

பசியின் பார்வையில் எரியும் விறகு

கடைசி மஞ்சள் கிரணத்தின்

தயங்கிய மூச்சு

--எதுவாயினும்

என்மீது பட்டவுடன்

விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.


இடம் இல்லாதிருந்ததில்

இடம் பரவிக்கொண்டது,

காலியிடம்


வாசலில் தொடங்கி

வானம் அடங்கி

தான் இன்றி இருண்டு கிடக்கும்

மனசின் வெளிவரை

எங்கும்

காலியிடம் காலியிடம்

அன்றாடங்களில் இருந்து சத்தியத்தை அறிவதையும் அதை கவிதைகளில் வெளிப்படுத்துவதைப்பற்றியும் அபி இப்படிச்சொல்கிறார். 'அவனைச் சுற்றி இருக்கும் எந்த பொருளிலும் அவனுக்கு தரிசனம் கிட்டலாம். எந்தச்  சாதாரணச் சிறு பொருளையும் பற்றித் தொற்றிக்கொண்டு சத்தியம் பளீரெனத் தோன்றிவிடலாம்.' காலியிடம் காலியிடம் என ஒரு உச்சாடனம் போல் முடியும் இக்கவிதை இன்னதென்று விளக்க முடியாத மன எழுச்சியை அளித்தது. விரி மணல் பொட்டல் வெளியை வான் கூரைக்கு அடியில் நின்று நோக்கும் போது ஏற்படும் நிச்சலனம்.  



இருப்பும் இன்மையும் அபியின் கவிதைகளில் தொடர்ந்து பேசப்படுகிறது. 

அதுதான் சரி 


எல்லாம் தெரிவதும் 

ஏதும் அறியாததும் 

ஒன்றேதானென்று 

தெருவிலொரு பேச்சு 

காதில் விழுந்தது 


ஏதும் அறியாமல் 

இருப்பதுவே சரி 

என்று தோன்றிற்று 


இருந்தால் 

இருப்பதை அறியாமல் 

இருப்பது 

எப்படி 


அதனால் இல்லாதிருப்பதே 

சரியென்று பட்டது 


இல்லாதிருந்தல் 

ஒருவசதி 

தெருப்பக்கம் 

போகவேண்டியதில்லை 

இல்லாதிருப்பதும் 

இருப்பதும் ஒன்றே 

என்றொரு பேச்சைக் 

கேட்டு குழம்பும் 

குழப்பம் இல்லை


இருப்பு- இன்மை சார்ந்த கவிதைகளில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் தென்படுவதாக தோன்றியது. இருத்தல் எனும் கவிதையில் 'பின் இருத்தல் என்னதான்?/ இல்லாதிருத்தலே/ இருத்தல்' என கேள்வியை எழுப்பி பதிலையும் சொல்கிறது. நெருங்குவது என்றொரு கவிதையில் இருப்பை கைவிடாமல் நெருங்க முடியாது, இருப்பை விட்டுவிட்டால் நெருக்கத்திற்கும் விலக்கத்திற்கும் பொருளேது எனும் கேள்வியை எழுப்புகிறது. 

நெருங்காதிருப்பதன் விளைவு 

நெருங்கியிருக்கிறோம் என்று 

நினைப்பது 


ஓரொரு சமயம் 

பின்வாசல் வழி 

கற்பனை வந்து 

உண்மையைச் சொல்லிப் போகும் 


நாம் நெருங்கியதில்லை 


அவரவர் இருப்பில் 

அவரவர் இருக்க 

நெருங்குவதெப்படி 


இருப்பை நீத்து நெருங்குவதென்றால் 

அவரவர் என்பதில்லாமல் 

யார் யார் நெருங்கியது 

நெருங்கியவர் இல்லாது 

நெருக்கம் என்ன 


நாம் நெருங்கியதில்லை

மனிதனின் தனியிருப்பை அபி கவிதைகளின் ஊடாக கேள்விக்குள்ளாக்குகிறார். 'ஏற்பாடு' கவிதையில் 'பாவனைகளில் மிக மூத்த நான் என்ற பாவனை' என சொல்கிறார்.  மாற்றல் எனும் கவிதையில், பின்னணிகளை, இடைப் பொழுதுகளை, பின்னணித் தளங்களை, அதன் நடமாட்டங்களை, சூழலை, சாயைகளை என ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்வதன் உச்சமாக 'மாற்றல் நிரந்தரப்  படுகிறதா/ உடனே/ மாற்றிக்கொள்வோம்/ மாற்றல்களை' என எழுதுகிறார். பவுத்தத்தின் மகாதர்மம் போல தனியடையாளம் அற்ற பேரியக்கத்தை சொல்கிறது அவரது கவிதைகள். 'பொதுமை' எனும் கவிதையில் 'நான் சொல்ல துடிப்பது/  ஏன் அலைக்கழிகிறாய்/  உனது இருப்பின்/  அசைவற்ற பொதுமையை/  ஏன் கலைக்கப் பார்க்கிறாய்?' தனித்துவத்தின் மீதான விழைவு அலைகழிப்பாகிறது. தனித்தன்மைகளை இழந்து ஒற்றையாக ஆகும் கணங்களை கவிதைகளில் தொடர்ந்து காண முடிகிறது. 'உருவினுள் மறைந்து உருவிழந்த மாலையை' 'ஊர் மேடிட்டுக் கொள்கிறது/  யாதும் ஊர் ஆகிறது.' ஒரு பறவை பார்த்திருக்க இன்னொரு பறவை உண்கிறது எனும் உபநிட வரியை நினைவுறுத்துகிறது 'இதயத்தில் நித்திய கருவாக வளரும் இன்னொரு நான்' எனும் வரி.  ‘புகைமூட்டத்தை புணர்ந்து கருத்தரிக்கத் தைரியம் கொள்கிறான் கவிஞன்.’  கவிதையும் கூட உருவற்று திகழ்கிறது.  




இந்திய தத்துவ மரபுகளில் ஆறு தரிசனங்கள் முதன்மையானவையாக குறிக்கப்படுகின்றன. ''வைசேடிகம்' அவற்றுள் ஒன்று. வைசேடிகம் ஒருவிதமான அணு கொள்கையை முன்வைக்கிறது. அபியின் கவிதைகள் வைசேடிக தரிசனத்துடன் சேர்த்து காணத்தக்கவை எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வைசேடிகம் 'அபாவம்' எனும் இன்மையையும் ஒரு இருப்பாக கணக்கில் கொள்கிறது. மேலும் உருவும் அரூவமும் அணுக்களால் ஆனவை என கருதுகிறது. இவ்விரு கூறுகளையும் அபியின் கவிதைகளில் காண முடிகிறது. இன்மையையே ஒரு இருப்பாக அவரது கவிதைகள் மீள மீள காட்டுகின்றன. அந்தர நடை கவிதையில் 'உன் சூழல் அணுக்களோ/ உருக்காட்டுமுன்/  உருமாறும்/ ஓயாமாறிகள்' என எழுதுகிறார். ஓயாமறியாக உருமாறிக்கொண்டே உள்ளன சூழல் அணுக்கள். புள்ளியைப்பற்றி எழுதும்போது அதில் அனந்தகோடி அணுக்கள் என எழுதுகிறார். அபியின் தனித்தன்மை என்பது அரூபத்தின் இருப்பை ரூபத்தின் இருப்பை போல் உணர்த்துவது என சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதை என்பது 'விடைகள்' எனும் கவிதை‌. விடைகளின் முக்கியத்துவம் தலைகீழாக்கப்படுகிறது.

விடைகள் 

விடைகள் 

மிகவும் மெலிந்தவை 

ஏதோ சுமந்து வருவன போல 

முக்கி முனகி வியர்வை துளித்து 

நம் முகத்தில் 

திருப்தி தேடுபவை 


தரையில் கால்பாவாது 

நடக்கவும் 

நீரில் நனையாமல் 

நீந்தவும் 

அறிந்தவை 


முந்தாநாள் 

ஒரு விடையை 

எதிர்ப்பட்டேன் 


என்னைப்  பார்த்தவுடன் 

அது 

உடையணிந்து 

உருவுகொண்டது 


தன்னை ஒருமுறை 

சரிபார்த்துக் கொண்டதும் 

எங்களை சுற்றி 

ஒரு அசட்டுமணம்  பரப்பிவிட்டு 

என்னை நேர்கொண்டது

நான் 

ஒன்றும் சொல்லவில்லை 

நெளிந்தது 

கலைந்து மங்கும்தன்   

உருவை 

ஒருமித்துக் கொள்ளக் 

கவலையோடு முயன்றது 

சுற்றிலும் பார்த்துவிட்டு 

ஒருமுறை 

என்னைத் தொட முயன்றது 

நான் 

எதுவுமறியாத 

பாவனை காட்டியதில் 

ஆறுதலுற்றுக் 

கொஞ்சம் நிமிர்ந்தது 

எதிர்பாராது வீசிய காற்றில் 

இருவரும் 

வேறுவேறு திசைகளில் 

வீசப்பட்டோம் 

திரும்பப்போய்த் 

தேடிப்பார்த்த போது 

சாமந்திப்பூ இதழ்கள் போல் 

பிய்ந்து கிடந்தன 

சில 

சாகசங்கள் மட்டும் 

 உளவாளிகள் எனும் கவிதையில் 'இயக்கங்கள் விலகி நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக் கிடக்கும் என் உருவங்களை' என்றொரு வரி வருகிறது. 'வயது' எனும் கவிதையில் 'நீ நீத்துவந்த வயதுகள்/  வினாடிகள் மொய்த்து/  விட்ட இடத்தில்தான் மிதக்கும்/  போய்க் கூடிக்கொள்.'  நிமிடங்கள், விநாடிகள் போன்றவை ஈக்களை போல கொசுக்களை மொய்க்கின்றன.  வியர்த்தம் கவிதையில் 'நம் முயற்சிகளின்/  உள்  ஆவி/  கெஞ்சிக் கூடவே வந்து/  வியர்த்து விளிம்புவரை/  புலம்பிப் பார்த்து/ முணுமுணுத்துப்/  பின்தங்கிப்/  புள்ளியாய் மறையும்' முயற்சி எனும் வினைக்கு உள் ஆவி உள்ளது, வியர்க்கிறது, முணுமுணுக்கிறது. 

வினை 

விதைத்த வினை 

விளைந்தது 


விளைத்தவை உதிர்ந்து 

மீண்டும் பெருகின 

மீண்டும் பெருகின 

மீண்டும்...


வினை அறுப்போர் 

எவருமில்லை 

எங்கும் எங்கும் வினைமயம் 


உலகெங்கும் நிறைந்தன 

யுகங்களில் நிரம்பி வழிந்தன 

அண்டம் தன்  

தையல் பிரித்து 

அவதியுற்றது 


இந்தப் பிரளயத்தில் 

மிதந்தவர்களைப் பற்றி ஒரு 

நிச்சயம் பிறந்தது 


மூழ்கிக் 

காணாமல் போனவர்கள் 

கண்டுபிடிப்பார்கள் 

என்றும் 

வதந்தி பிறந்தது

இங்கே 'வினை' என்பது ஒரு பொருளாகி உலகை நிறைக்கிறது. 'அசதி'க்கும் மனித வடிவம் அளிக்கப்படுகிறது இவ்வரிகளில். 'காலையில்/ இவ்வழியே போனவர்கள்/  திரும்பி வருகிறார்கள்/  தோற்றமின்றி/ வெறும் அசதியாக.' 'எஞ்சிய பகுதி' எனும் கவிதையில் துர்கனவுக்கு உரு துலங்குகிறது. 

எஞ்சிய பகுதி

அந்தக் கொடூரக் கனவின் 

ஒரு பகுதியின் மிச்சம்

இன்று பகல் சுண்ணயர்வில் தலையாட்டிப் போனது

இருள் கவ்வியிருந்த 

அதன் ஓரங்கள் பற்றிய நினைவுகூட்டல் 

தோல்வியில் முடிந்து 

அசதி தந்தது

அதன் கூரிய துகள்கள் சில 

மாலை உலாவின் போது செருப்பினுள் நுழைந்திருந்தன

அதன் கொலைநிழல் 

மங்கி மயங்கி 

என்னைச் சூழ்ந்து வந்துகொண்டேயிருந்தது

போக்குவரத்து அடர்த்தியின் நடுவே 

கூடிநின்ற கூட்டத்திற்குள்

எட்டிப் பார்த்தபோது 

கனவின் 

விலாப்பகுதி நைந்து 

ரத்த வெள்ளத்தில் குடல்சரிந்து கிடந்தது

கனவில் வந்தறியாத அதன்

எஞ்சிய பகுதி

இப்படிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது

 

அபி தனது கவிதையின் மொழியைப்பற்றி குறிப்பிடும்போது 'ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியின் சர்வாதிகாரத்தை ஏற்கனவே உதறியிருந்தன என் கவிதைகள்.' என எழுதுகிறார். அவரைப் பொருத்தவரை கவிதை என்பது மொழியல்ல. 'மனிதனால் படைக்கப்பட்டது மொழி: ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப்  படைப்பது கவிதை. மொழி, கருவி, கவிதையே படைப்பாளி.' கவிதை எனும் அரூபம் கவிஞன் எனும் உருவை பிரசவிக்கிறது. படைத்தலுக்கும், படைப்பாளிக்கும், படைப்புக்கும் இடையேயான உறவை பற்றி எழுதும்போது 'பாவனையில் ஆழ்த்திப் படைப்பாளிகளைப்  படைக்கிறது படைத்தல். படைப்பாளி படைக்கப்படுவதில் இருக்குமளவு பூரணமும் எழிலும் அவனுடைய படைப்பு படைக்கப் படுவதில் இல்லை.' என குறிப்பிடுகிறார்.‌ 


நானும் இந்தக் கவிதையும்


நானும் இந்தக் கவிதையும் நண்பர்களே அல்ல 

அப்படித் தோன்றக் கூடும்.


சேர்ந்திருப்பதும் 

ஒரே மூச்சைப் 

பகிர்ந்து சுவாசிப்பதும் விஷயங்களிலிருந்து 

வெளியேறி வெளியேறிக் கலைவதும் காரணமாக 

அப்படித் தோன்றலாம்


இந்தக் கவிதை

ரொம்பவும் எளிமையானது ஒன்றும் சொல்லாதிருக்கிற ஒன்றும் இல்லாதிருக்கிற

 எளிமை


எனது எளிமையோ

இல்லாமையின் இருப்பை, சொல்லாமையின் சொல்லைச்

சுமந்து திரிவது


எனக்கு

நுழையவும் வெளியேறவும் வாசல்கள் இருக்கின்றன


இந்தக் கவிதைக்கு மட்டும் 

எல்லாச் சுவர்களும்

திறந்து மூடித் தருவன


எனது தோழர்கள்

என் சூழலின் விளம்புகளைத்

தொற்றி ஏறி

விரைகிறார்கள் 

எனது பிரதேசப் பகல் நிலங்களின் ஊடாக


இதன் தோழர்கள் 

பிரயாணமற்ற இதனை 

விட்டுப் போனவர்களுமில்லை சுற்றிக் கிடப்பவர்களுமில்லை


நானும் இந்தக் கவிதையும் நண்பர்களே அல்ல 

அப்படித் தோன்றக் கூடும்


பொதுவாக கவிதைகள் குறித்தும், குறிப்பாக தனது கவிதைகள் குறித்தும் அவருக்கு மிகத்தெளிவான புரிதலிருந்தது. "ஓவியமும் இசையும் மௌனத்தில் வேர்பாய்ச்சி நிற்பவை. சொல்லையும் பொருளையும் விட்டு வெளியேறியவை. கவிதையையும் இந்த மௌன நிலைக்கு கொண்டுவர கவிஞன் தீவிர படுகிறான்." என கவிதையின் இலக்கை குறித்து எழுதுகிறார். மேலும் "ஓசை, எழுத்து, சொல், வாக்கியம் என்ற மொழியின் அடையாளங்களில் நின்று கொண்டே மொழியை எதிர்க்கும் கலகமாக அமைவது கவிதை. மொழியின் சொல்லைக்கொண்டே மொழியின் அர்த்தத்தை மீறுகிறது கவிதை" என கவிதையின் இயல்பு குறித்து எழுதுகிறார். கவிதையின் இலக்கு சொல்லின்மை என்பது புதிய பார்வை அல்ல. ந. பிச்சமூர்த்தி அவரது நேர்காணலிலும் இதைக் குறிப்பிடுகிறார். 'என் வார்த்தைகள்' என்றொரு கவிதையில் மொழிக்கும் கவிஞனுக்கும், கவிதைக்குமான உறவு பேசப்படுகிறது.  'என் வார்த்தைகளை நான்/ இழந்து விட்டதாகச்/  சொன்னார் அவர்/  என் ஆசை அது ஆனால்/  உண்மையில்லை ...அர்த்த மாயையில்/ சிக்கிக் கொண்ட என் வார்த்தைகளைத்/  தப்பிப்போக முயன்ற முயற்சிகள்/  வீணாகின/  மனசின் சங்கீதம் புரிந்து/  தவிதவித்துத் தொடர்கின்றன/  வார்த்தைகள்'


‘பிரபஞ்சத்தை அளாவிச் செல்லுகிற பேராறு கவிதை, அதன் கரையில் ஏதோ ஒரு புள்ளியிலியிலிருந்து குதித்து சில அலைகளை எழுப்புகிறேன்.’ என்கிறார் அபி. அபியின் கவிதைகள் சொற்களிலிருந்து பொருளை வளைத்து, சொல்லின்மைக்கு பயணிக்க முயல்கிறது, அவ்வகையில் இயற்கையின் மொழியுடன், பிரபஞ்சத்தின் மொழியுடன் இயைய முயல்கிறது. 

சுனில் கிருஷ்ணன்