Wednesday, March 19, 2025

அத்தைக்கு மரணமில்லை - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு




அத்தைக்கு மரணமில்லை ஒரு இந்தியத்தன்மை கொண்ட வங்காள குறு நாவல். மறுபிறப்பை இயல்பாக சொல்லிச்செல்கிறது என்பதையே இந்தியத்தன்மை என்று குறிப்பிட காரணம். மூன்று தலைமுறை பெண்களின் வாழ்வை பேசும் குறுநாவல். ராமன் வனவாசம் போன வழி படித்ததும் சீர்ஷேந்து மனதிற்கு அணுக்கமான எழுத்தாளராக தோன்றினார். அவருடைய சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். அலட்டலோ அலங்காரமோ போலித்தனமோ இல்லாத மொழி. 


ரஷோமாயி 12 வயதில் விதவையாகி போனவர். குடும்பத்தில் எல்லோருக்கும்   அத்தையம்மா. சீரழிந்து கொண்டிருக்கும் ஜமீனை கட்டி ஆள்பவள். எல்லோரிடமும் சிடுசிடுப்பவள். வீட்டின் இரண்டாம் தளத்தை விட்டு வெளியே வராதவள். இளம் மருமகளாக அங்கு வந்து சேரும் ஏழை குடும்ப பெண் லதா. மூழ்கும் கப்பலை மீட்கும் மாலுமி. லதாவிற்கு உறுதுணையாக அவளது மாமியார் இருக்கிறார். தொடக்கத்தில் எதிரியாக பாவிக்கும் ஓரகத்தியும் கூட அவளை இயல்பாக ஏற்றுக் கொள்கிறாள்.  குடும்பத்தின் ஒரே வாரிசு, லதாவின் மகள் வசந்தா. ஒரு அறையில் ஒடுங்கிக்கொண்டு வாழ்வை இழந்த அத்தையம்மா, விடுதலையை ஓரளவாவது நுகரும் இன்னொரு தலைமுறையின் வசந்தாவாக மறுபிறப்பு எடுக்கிறாள். அத்தையம்மாவிற்கு எல்லாமுமாக இருந்த நகைப்பெட்டியை பேயாக ஆன பிறகும் பாதுகாக்கிறாள். வசந்தாவிற்கு அந்த நகைகள் ஒரு பொருட்டே அல்ல எனும்போது குறுநாவல் முழுமை அடைகிறது. இந்திய பெண்களின் பொருளியல் தன்னிறைவை நோக்கிய பயணம் சமூக சுதந்திரத்துடன் எப்படி பிணைந்திருக்கிறது என்பதை எளிமையாக உணர்த்துகிறது இந்த குறுநாவல். 


எனக்கு இந்த நாவலின் நாயகி என்றால் அது லதா தான். ஒடுக்கப்பட்ட அத்தையம்மாவின் தலைமுறைக்கும் தன் வாழ்வின் செல்திசையை தீர்மானிக்கும் வசந்தாவிற்கும் இடையே இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியது லதா. லதாவும் லதாவின் தலைமுறை பெண்களும். நான் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். தான் மட்டும் வளமாக வாழ்ந்துவிட முடியாது எனும் புரிதல் உள்ளவள். சூழ இருப்பவர்கள் துயரில் தவிக்கும்போது தன்னால் மட்டும் மார்கிஸ்ச்சியுடன் வாழ முடியாது என்று நம்புபவள்.    பொறுப்புணர்வுக்கும் சுதந்திரத்திற்கும் இடையேயான உறவை காட்டுபவள். ஆவியாகி அத்தையம்மா அவளை சுதந்திரத்தின் கனியை ருசிக்க சொல்லி தூண்டுகிறாள். ஊசலாட்டங்களை மனதிடத்துடன் கடக்கிறாள். வீட்டிலிருந்து வெளியே காலடி வைத்து குடும்பத்தை நிமிர்த்துபவள். வீட்டைவிட்டு வெளியே வேலைக்கு வந்த நடுத்தர வர்க்கத்து முதல் தலைமுறை பெண்களை இந்த சமூகம் ஒழுக்கத்தை காட்டி சிறுமை செய்தது. ஒழுக்கமல்ல அங்கே சிக்கல். மாறாக மாறிவரும் அதிகார சமநிலைக்கு எதிரான முரண்டுதான் அது.  லதாவினுடைய உழைப்பின் கனியைத்தான் வசந்தா இயல்பாக ருசிக்கிறாள். 


அத்தையம்மாவிற்கு வாழ்வு வெறும் கசப்பு. அவள் இருக்கும்போதும் இறந்த பிறகும் எல்லோரையும் கரித்து கொட்டிக்கொண்டே இருக்கிறாள். சாவு, சாவு, சாவு என்று திட்டிக்கொண்டே இருக்கிறாள். வாழ்வின் மீது அவளுக்கு தீராத கோபம்.  வாழ்பவர்கள் மீதும், வாழ்க்கையை துய்ப்பர்வகள் மீதும் அவளுக்கு ஓயாத எரிச்சல். சமைத்து சாப்பிடுகிறார்க என்றால் அதை எப்படியாவது குலைத்துவிடுவாள். வசந்தாவாக மறுபிறப்பெடுக்கும் அத்தையம்மா அறிமுகம் ஆவதே கல்லூரி சுற்றுலாவில் பெரிய நிலவை காணும் தருணத்தில்தான். அத்தையம்மாவை முடக்கி வைத்த இரண்டாம் மாடி அறைகள் அவளுக்கு விசாலமாக இருக்கிறது. வசந்தாவிற்கென ஒரு காதல் காத்திருக்கிறது.  


சமகாலத்தில் நம்பி வாசிக்கும் மொழிபெயர்பாளர்கள் எனும் எனது சிறிய பட்டியலில் தி.அ. ஸ்ரீனிவாசனுக்கு இடமுண்டு. மொழியாக்கமும் சரி, மொழியாக்க தேர்வுகளும் சரி தொடர்ந்து சிறப்பாக உள்ளன.        





No comments:

Post a Comment