Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran |
காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே உள்ள ஊழியரகத்தில் தான் அவரை சந்தித்த்தோம். க்ரிஷ்ணாம்மாளின் சகோதரி மகனான இளங்கோ எங்களுக்கு உதவினார். பிள்ளைகள் வெளியே படிப்பதாகவும். அவர் பத்தாண்டுகளாக இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். கென்யா நாட்டை சேர்ந்த இருவர் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்கள். சர்வோதய தினத்திற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நடன வகுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. சபர்மதி அவர்களுடன் சென்று விட்டாள். மலைகள் சூழ அழகிய இடம். உண்டு முடித்து ஓய்வெடுக்கும் நேரம். சற்று நேரம் கூடத்தில் அமர்ந்திருந்தோம். மெல்ல எங்களை நோக்கி நடந்து வந்தார். வயதிற்குரிய நினைவு தடுமாற்றம், குரல் தடுமாற்றத்தை கழித்துவிட்டால் திடமாக உள்ளார். கத்தி பேச வேண்டியிருக்கவில்லை. தொலைவில் நடந்து செல்லும் பெண்களை சரியாக பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பார்வை நன்றாகவே இருந்தது. கூடத்தில் ஜெகந்நாதனின் படம் ஒரு பக்கமும் டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் படம் இன்னொரு பக்கமும் மாட்டப்பட்டு இருந்தது. இன்னும் நிறைய படங்கள் மாட்டப்படுவதற்காக அங்கு இருந்தன. “இந்த இடம் ஊழியரகம்… வேலை செய்யிறவங்க வந்து தங்குறதுக்குன்னு உள்ள இடம். போலீஸ் தேடிக்கிட்டு இருந்த இங்க வந்துருவாங்க” என்று சிரித்தார். கிளம்புவதற்கு முன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு நூலான ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலை வாசித்திருந்தேன். பிரிட்டிஷ் காவலர்கள், சுதந்திர இந்தியாவின் காவலர்கள் என எல்லோரும் அவரை விரட்டி இருக்கிறார்கள். பலமுறை பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறை சென்றிருக்கிறார்கள். அடிப்படை மனிதநேயம் இன்றி நடத்தப்பட்டிருக்கிறார்கள். கொள்கைக்காக சிறை என்பதை பெருமையாக எண்ணிய தலைமுறையின் இறுதி கன்னி. பண்ணையார்கள், கம்யூனிஸ்டுகள், காவலர்கள் என எல்லோருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டுள்ளார்கள். எதிர்ப்பு என்றால் வெறும் கருத்து பூசல் இல்லை. உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம். வினோபா தமிழகம் வருவதற்கு முன் பூதான பயணம் குறித்து ஏற்பாடுகளை செய்வதற்கு பயணிக்கும் போது ஒரு கிராமத்தில் அந்த ஊர் நிலக்கிழார் நன்கு உபசரித்து கைக்குழந்தையுடன் வரும் கிருஷ்ணம்மாளை தங்க வைக்கிறார். அன்றைய தினக்கூலி கேட்டு வரும் வேலையாட்களுக்கு விளக்கு வைத்துவிட்டதால் பணம் கொடுத்தால் லட்சுமி போய்விடும் எனும் காரணத்தை கூறி பண்ணையார் கூலி வழங்க மறுக்கிறார். விருந்தாளியாக சென்ற இடத்தில நமக்கேன் பொல்லாப்பு என ஒதுங்கி நிற்காமல் பண்ணையாரை கண்டிக்கிறார். எங்கள் வீட்டில் இருந்து கொண்டே எங்களை கண்டிப்பீர்களா என்று சொல்லி பெட்டி படுக்கைகளை தூக்கி தெருவில் வீசுகிறார்கள். இரவெல்லாம் கைக்குழந்தையுடன் வெட்டவெளியில் படுத்துறங்கினார். நீதிக்காக பிரச்சாரம் செய்வது சுலபம். நீதிமான்களாக காட்டிக்கொள்வது அதைவிட சுலபம். களத்தில் கண்முன் தெரியும் அநீதிக்கு ஆற அமர எதிர்வினை ஆற்றாமல் உடனடியாக ஆற்றுவதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். மடத்தின் விருந்தாளியாக தங்கியிருந்தபோது சீனாவை போல் மக்களாக வன்முறையில் இறங்கி பிடுங்கிக்கொள்வதற்கு முன் மடத்தின் நிலத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்லப்போக மடத்தினர் கிருஷ்ணம்மாளை வெளியேற சொல்கிறார்கள். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்ததை பற்றி எங்களிடம் சொன்னார். வீட்டிற்கே சென்று நிலமற்ற ஏழை பெண்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். திருவாரூரில் அம்மனுக்கு அவல் பாயாசத்திற்கு என 250 ஏக்கர் எழுதி வைத்துள்ளார்கள். அதை பிரித்து கொடுக்க வேண்டும். அம்மன் அடுப்பில் பாயாசம் வைக்க மாட்டாள். அடுப்பெரிய வேலை பார்க்கும் பெண்களுக்கு அந்த நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். “அரசு எல்லாம் கொடுத்துருச்சு.. நான் இப்ப திருவாரூருக்கு போகணும், கொஞ்சம் வெய்யில் குறையட்டும்னு பாக்குறேன். ஒரு ரெண்டு நாளுல போயி எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்திருவேன்” என்றார். பழைய நினைவுகளை இப்போது சொல்கிறாரா, அல்லது உண்மையிலேயே செல்ல வேண்டும் என சொல்கிறாரா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை.
ஜெகந்நாதன் உழுபவர்களுக்கே நிலம் எனும் நம்பியவர். அதுவே இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகளை தீர்க்கும் என்று ஆழமாக நம்பினார். வினோபாவுடன் பூதானத்தில் நெருங்கி வேலை செய்தாலும் அவருடைய வழிமுறைகள் மீது விமர்சனம் இருக்கிறது. சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான முதல் சத்தியாகிரகம் செய்யும்போது காங்கிரஸ் காரர்களே ஜெகந்நாதனை எதிர்க்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சரி, சொந்த அரசுக்கு எதிராகவே சத்தியாகிரகம் செய்வதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் தவறென்று இருந்தால் சத்தியாகிரகத்தை கைக்கொள்வேன் என்கிறார். வெவ்வேறு அமைப்புகளுடன் இயைந்து செயல்படுகிறார்கள், அமைப்புகளை தோற்றுவிக்கிறார்கள். அமைப்புகள் முக்கியமானவை, ஆனால் அவற்றுக்கு சில வரையறைகள் உள்ளன. தாங்கள் அறம் என்று நம்புவதற்கு இடையூறாக தாங்கள் உருவாக்கிய/ பங்கெடுத்த அமைப்புகள் வந்தால் அவற்றை உதறி முன்னகரும் திண்மை பெரும்பாலானவர்களுக்கு இருக்காது. அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பில் சுருங்கிக்கொள்ள தோன்றும். அமைப்புகளை பாதுகாப்பதை கடமையென கொள்வார்கள். அமைப்புகளின் நோக்கமே முக்கியம். காந்தியின் வழிமுறையும் அதுதான். ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலில் குமரப்பா வினோபாவுடன் பிணக்கு கொள்ளும் இடம் அபாரமான சிறுகதைக்குரிய பகுதி. காந்தியும் அய்யன்காளியும் உரையாடும் மெல்லிய நூல் போன்ற ஒரு பகுதி. குமரப்பா வினோபாவின் உன்னத இலட்சியத்தை புரிந்து கொண்டார். ஆனால் வினோபா நடைமுறைவாதியாக இல்லை எனும் வருத்தம் அவருக்கு உண்டு. பூதானத்தில் தானமாக அளிக்கப்பட பெரும்பகுதி நிலம் தரிசு தான். வினோபாவை பொறுத்தவரை இந்த அளவிற்காவது இந்த மாற்றம் நடக்கிறதே, இப்போது தரிசை கொடுத்தாலும் நாளை நல்ல நிலத்தை கொடுப்பார்கள் என்று நம்புகிறார். குமரப்பாவோ கையெழுத்து இட்டு சேகரியுங்கள், உடனடியாக பகிர்ந்து கொடுங்கள், பாசன வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என்கிறார். வினோபா அவை இப்போதைய தமது பணியல்ல என நம்புகிறார். விவசாய நிலத்தில் அறுவடைக்கு பிறகு தீ வைக்கப்படுவதை காட்டி குமரப்பாவிடம் சொல்கிறார். “அவர்கள் பழைய நிலத்திற்கு தீ வைக்கிறார்கள். நான் பழைய சமூகத்திற்கு தீ வைக்கிறேன். பழைய சமுதாயத்தின் நடைமுறைக்கு தீ வைக்கிறேன். அடுத்த தலைமுறை வரும் உழத்தொடங்கும். புதிய விதைகளை விதைக்கும். என் பணி தீ வைப்பது தான்.” குமரப்பாவிற்கு இந்த பதில் நிறைவளிக்கவில்லை. நடைமுறையை கணக்கில் கொள்ளாத பதில் என்கிறார். விருந்துக்கு வாருங்கள் என அழைத்து இலையில் உப்பை மட்டும் பரிமாறுவது போல உள்ளது . இன்று முதலில் உப்பை சாப்பிடுங்கள், நாளைக்கு சாப்பாடு போடுவேன், அடுத்தநாள் சாம்பார் ஊற்றுவேன் என்பதை போல் உள்ளது உங்கள் பேச்சு என விமர்சிக்கிறார். தினமும் காலை (காலை என்று சொல்லலாமா என தெரியவில்லை) 2.30 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டிருந்தவர் என்றார் கிருஷ்ணம்மாள். ஆதி சங்கரரின் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது அவர் வழக்கம். பஜ கோவிந்தம் என சொல்லும்போது அரிக்கேன் விளக்கை தூக்கிக்கொண்டு கிருஷ்ணம்மாள் முன்னே நடக்க தொடங்குவார். விடிவெள்ளியை பார்த்து நிற்கும் வினோபா சொல்கிறார். விடிவெள்ளி வந்துவிட்டது சூரியன் விரைவில் உதித்துவிடும் தானே. குமரப்பா கிளம்பும் செய்தி அறிந்து குடிலுக்கு செல்கிறார். அங்கே எல்லா பொருட்களும் அங்கும் இங்குமாக சிதறி கிடக்கின்றன. வினோபா அவற்றை ஒழுங்காக பெட்டியில் அடுக்கி தருகிறார். ஒரேயொரு விவசாயி கலப்பையுடன் சென்று கொண்டிருக்கிறான். வினோபாவும் குழுவும் நடக்கும்போது எதிர்திசையில் நடக்கும் விவசாயியின் திசையில் குமரப்பா நடக்கிறார். காந்தியம் என்பது வெறும் ஆன்மிகம் அல்ல. வறட்டு லட்சியவாதம் அல்ல. நடைமுறை பயனை எப்போதும் கணக்கில் கொள்வது. உடனடி விஷயங்களை காலாதீதமான விழுமியங்களை கொண்டு எதிர்கொள்ள முற்படுவது. வினோபா காந்தியை காட்டிலும் மேலான ஆன்மீக வாதியாக இருக்கலாம் ஆனால் அவரால் காந்தியாக ஆக முடியாது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒருவகையில் காந்தியை சாராம்சமாக உள்வாங்கியவர்கள். காந்தி எதை செய்திருப்பாரோ அதையே இவர்களும் பல சமயங்களில் செய்தார்கள்.
நூலிலும் நேர்பேச்சிலும் வினோபாவை பற்றிய பல சுவாரசியமான சித்திரங்கள் வருகின்றன. வினோபா நாளுக்கு பதினெட்டு முறை தயிர்சாதமும் தேனும் உண்பார். ஒவ்வொரு முறையும் பகவத் கீதையின் முழு அத்தியாயத்தையும் பாராயணம் செய்துவிட்டு ஒரு கவளத்தை உண்பார். வினோபாவிற்கு உடலநிலை சரியில்லாமல் பீகாரில் இருந்தபோது இந்தியா முழுக்க தலையில் சோற்றையும் பருப்பையும் சுமந்தபடி சர்வோதய ஊழியர்கள் அவரை காண வருகிறார்கள். பிள்ளையை விட்டுவிட்டு வா என்றாலும் பூமி கையை இறுக பற்றிக்கொண்டதால் முதல் சில ஆண்டுகள் இவர்களுடனேயே திரிகிறார். மாணிக்கவாசகரின் அச்சோ பத்திலிருந்து முத்தி நெறி பாடலை வினோபா பாடுவாராம். அப்போது அவருக்கு ஓய்வெடுக்க வேண்டும் என பொருள் என்றார். பேசும்போதெல்லாம் குரலில் தெரிந்த நடுக்கம் பாடும்போது இல்லை. வள்ளலாரின் ‘எல்லாம் செயல் கூடும்’ பாடலை கொஞ்சமும் பிசிறின்றி பாடினார்.
துறவியாக செல்ல இருந்தவரை பிடித்து கிருஷ்ணம்மாளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். கதர் துண்டை தலையில் அணிவிப்பது தான் திருமணம். ஜெகந்நாதனும் கிறிஸ்து குல ஆசிரமத்தில் சிலர் தங்களது உடல் தேவைகளை முறையற்ற வழியில் தீர்த்துக் கொள்வதை பார்த்து சமூக வாழ்விற்கு நல்ல இல்வாழ்வு தேவை எனும் முடிவுக்கு வருகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை பற்றி சொல்லும்போதெல்லாம், அவர் என்றோ எங்க வீட்டுக்காரர் என்றோ தான் சொல்கிறார். திருமணமான தொடக்கத்தில் தன்னை தனியாக விட்டுவிட்டு அவர் அலைந்தது பற்றிய குறை இப்போதும் கூட இருப்பதாக பட்டது. கீழே சிமெண்டு தரையை காண்பித்து இது அவரே தன் கையால போட்டது இன்ன வரை இருக்குது என்றார். ஜெகந்நாதன் போன்ற கணக்கற்ற தொண்டர்கள் தன்னலமற்று உழைத்த நிலத்தில் தான் நாம் எல்லோரும் இன்று நிற்கிறோம். ஜெகந்நாதன் மண் பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். போட்டதை போட்டபடி விட்டுவிட்டு அடுத்தடுத்து பயணிக்க அதுவே எதுவாக இருக்கும். இந்தியா முழுக்க கால்நடையாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் நடந்தே சென்றிருக்கிறார்கள்.
ராலே கெய்தான் பற்றி சொல்லி கொண்டிருந்தார். கெய்தான் அமெரிக்க மிஷனரி. இந்திய விடுதலை பற்றி பேசியதால் மிஷனரியில் இருந்து நீக்க பெறுகிறார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நெருங்கிய சகாக்களில் ஒருவர். கெய்தான் எல்லாருக்கும் வேலைகளை பிரித்து கொடுப்பாராம். மதியம் வரிசையாக எல்லோர் கைகளையும் சோதிப்பாராம். உடல் உழைப்பிற்கான தடயம் தென்பட்டால் தான் சோறு. மீண்டும் மாலையும் இதே சோதனை நடக்கும். அப்போது உழைத்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு சர்க்கரை வள்ளி கிழங்கு கொடுப்பார் என்றார்.
‘சுதந்திரத்தின் நிறம்’ இறால் பண்ணைக்கு எதிரான போராட்டம் நிறைவு பெறாத காலத்தில் எழுதிய வாழ்க்கை சரிதை. சரியாக சொல்வதானால் நீண்ட நேர்காணல், கூடவே லாரா கோப்பாவின் இந்தியா குறித்த அவதானிப்புகள் நிறைந்த நூல். கிருஷ்ணம்மாள் அவர்களின் மகன் டாக்டர் பூமியிடம் ஒரு முழுமையான வரலாறை எழுத வேண்டியதன் அவசியத்தை கூறினேன். வாக்கரசியலுக்கு வெளியே இயங்கும் மகத்தான மனிதர்களை நாம் கண்டுகொள்வதில்லை. முதுகுளத்தூர் கலவரத்தின் போது அமைதியை உருவாக்க ஊர் ஊராக செல்கிறார்கள். கீழ்வெண்மணி கொடுமையின் போது முதல் மனிதர்களாக சென்று சேர்கிறார்கள். காந்தி, வினோபா, ஜெ.பி என மகத்தான மனிதர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள். சமகால அரசியல் விவாதங்களில் அவர்கள் இடம்பெறாமல் போகலாம். வாக்கரசியலே உரையாடலை தீர்மானிக்கும் ஆற்றலாக உள்ளது. ஏதோ ஒரு கட்சியின் ஓட்டு வங்கிக்கு உதவாத ஆளுமைகளை இங்கே நினைவில் நிறுத்துவது கடினம். மக்கள் நினைவுகளில் இவர்கள் என்றென்றும் நீடித்திருப்பார்கள். எத்தனை மகத்தான பெருவாழ்வு! சொற்களில் உழன்று கொண்டிருப்பவனாக மட்டும் இருப்பதற்காக வெட்கினேன். தன் கையால் குழந்தைகளுக்கு ரொட்டி கொடுத்தார். பூமி அவர்களுடனும், சத்யா அவர்களுடனும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
கிளம்பும் முன் அவர்களிடம் ‘தமிழகம் உங்களுக்கு ரொம்பவே கடன் பட்டிருக்கு’ என்று சொல்லி வணங்கினேன். ‘கடன் என்ன..கடமையை செய்யிறோம். அவ்வளவுதான்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல். ஆதர்ச எழுத்தாளரான யுவன் சந்திரசேகருடன் அவருடைய நாவல்கள் பற்றி உரையாடும்போது துறவு அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறுவது என்பது அவரது கதைகளில் தொடர்ந்து தொழிற்படுவதை பற்றி கேட்டேன். “வெளியேறி எங்க போறான்? குடும்பம்ங்கிற சின்ன வட்டத்தை விட்டு வெளியேறி போறவன் உலகமே தனது குடும்பங்கிற பெரிய வட்டத்திற்குள்ள போறான்னு பாக்கலாம் இல்லையா” என்றார். ஜெகந்நாதன் துறவியாக வேண்டும் என்று விழைந்து இல்லறத்தில் ஈடுபட்டவர். அவரை துறவி என்பதா இல்லறத்தார் என்பதா. எல்லா துறவிகளும் இல்லறத்தார் தான். புவி முழுமையும் அவர்களது குடும்பம். தன்னலமற்று நோற்கப்படும் யாவையும் நோன்பே. நான் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து உள்ளூர அனத்தல் பெருகியது. இந்த அனத்தல் நல்லதற்கே. உள்ளூர ஒலிக்கும் சன்னமான ஆனால் திடமான குரல் செவியில் விழக்கூடும்.
No comments:
Post a Comment