Wednesday, February 26, 2025

ராமன் வனவாசம் போன வழி - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு

 


வோல்டேரின் மைக்ரோமெகாஸ் கதையில் மைக்ரோமேகாசும் அவனது நண்பனும் வேற்று கிரக வாசிகள். மைக்ரோமெகாசின் கணுக்காலை நனைக்கும் ஆழம் தான்  பசிபிக் பெருங்கடல். திமிங்கிலங்கள் ஏதோ சிறு புழுக்கள் போல நீரில் நெளியும். மனிதர்கள் அவனோடு உரையாடுவார்கள். உலகின் அற்பத்தனங்களை, மனிதர்களின் மலினங்களை சித்தரிக்க அவனை காட்டிலும் பன்மடங்கு ஆற்றல்மிக்க கற்பனையும் லட்சியமும் உரைகல்லாக கொண்டு வந்து ஒப்பிடுகிறோம். கால- வெளி தொலைவு எல்லாவற்றையும் அற்பமாக காட்டுகிறது. 


சீர்ஷேந்து முகோபாத்யாய் ராமன் வனவாசம் சென்ற தடத்தை பின்தொடர்ந்து பயணிக்க முடிவெடுக்கிறார். புராண காலத்து ராமனை அளவுகோலாக கொண்டு நிகழ்கால இந்தியாவை மதிப்பிடுகிறார். நவீன அறிவுஜீவிக்கு புண்ணிய தலங்கள் ஒரே சமயத்தில் மதிப்பிற்குரியதாகவும் ஒவ்வாமை அளிப்பதாகவும் இருக்கிறது. காந்தி வாரணாசிக்கு சென்ற போது அதன் சீர்கேட்டால் சீண்டப்பட்டார். சீர்ஷேந்து 1981 ல் அயோத்தியும் பிரயாக்கும் சென்றிருக்க வேண்டும். நான் 2010 ல் காசிக்கு சென்றிருக்கிறேன். நம் புனித தலங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்றொரு கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. நூலில் அயோத்தியை விக்கிரமாதித்தன் கண்டடைந்த கதையை சுருக்கமாக சொல்கிறார். கருப்பு குதிரையில் ஆற்றில் இறங்கும் ஒருவன் மறுகரையில் ஏறும்போது வெள்ளை குதிரையாக ஆவதை அரசன் நோக்குகிறான். அவன் பிரயாக்ராஜன். பிரயாகையின் கடவுள். பாவங்களை கழுவ வரும் மக்களின் பாவங்களை ஏற்று அவன் உடல் கறுத்துவிடும். அவற்றை நீக்க சரயுவில் முங்கி எழுவதாக சொல்கிறான். காசியையும் கங்கையையும் காண தூய்மை அழுக்கு என்பதையெல்லாம் கடந்த வேறொரு கண் நமக்கு வேண்டும். ’அது அப்படித்தான் இருக்கும். நமக்கு தெரிந்த  ஒரே பதில். ஒரே சமாதானம். ராமன் வனவாசம் போன பாதையில் போகப்போக நான் ராமனின் மாபெரும் தோல்வி‌யையும் ராட்சதர்களின் வெற்றியையும்தான் கண்டேன்’என்கிறார். கணேஷ் தேவியின் மகாபாரத நூலில் சாந்தமே அதன் முக்கிய ரசம் என சொன்னதை பொருத்திக்கொள்கிறேன். நாம் எல்லாவற்றையும் ஏற்கவும் அனுசரிக்கவும் பழகியுள்ளோம். சித்திரகூடத்தில் குரங்குகளும் பிச்சைகாரர்களும் தொல்லை செய்கிறார்கள்.   குரங்குகள் சேட்டை செய்வதால் அவற்றை தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் விஷயம் அப்படியில்லை,  ‘முதலாவது அவர்கள் மனிதர்கள். இரண்டாவது அவர்கள் நடத்தையில் பார்த்து மகிழ எதுவுமில்லை’ என்கிறார். ராமனிடம் உன் தேசம் என்னவாக மாறியிருக்கிறது பார் என முறையிடுகிறார். ‘சாவிலும் துக்கத்திலும் வேதனையிலும் கஷ்டத்திலும் பஞ்சத்திலும் பெருவெள்ளத்திலும் இவர்கள் பக்கம் இருப்பதெல்லாம் ராமரோ அல்லது திருப்பதி வேங்கடாசலபதியோ அல்லது காளியோ அல்லது துர்க்கையோதான். பகுத்தறிவு இவர்களுக்கு கட்டுப்படியாகாது. அது இவர்களுக்கு பொறுப்பற்ற ஆடம்பரம்’ என்பது அவரது சொற்கள். 

   

பாபரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பான அயோத்தியையும், எண்பதுகளின் பிரயாகையும், சித்திரகூடத்தையும் சித்தரிக்கிறார். வால்மீகி     தனது கவிதையில் சிருஷ்டித்த மரங்கள் அடர்த்த செறிவான காடு அங்கில்லை, வெறும் மொட்டை பாறைகள் சூழ இருக்கும் அரை பாலை தான்   எஞ்சியுள்ளது.  துளசிதாசரின் ராமாயணம், இந்தியின் நடைமுறை பயன் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வால்மீகி சம்பல் கொள்ளைக்காரன் என்பதால் அவனுக்கு பாதை  எல்லாம் நன்றாக தெரியும் என்கிறார். பெரும்பாலான கடவுள்கள் மக்களிடமிருந்து தோன்றியவர்கள். ஆனால்  ராமன் புத்தர் இருவரும் இளவரசர்கள். ஆகவே அவர்கள் மக்களை அறிய வேண்டும் என்பதற்காக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது என்பது முக்கியமான அவதானிப்பு. ‘உண்மையில் நாம் எல்லோருமே அன்னியர்கள்தான். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த ஞான திருஷ்டிக் கைவரப் பெற்றதால்தான் அறவுணர்வு இப்போது தலை தூக்குவதே இல்லை’ என்று எழுதுகிறார். திரளில் இருந்து தன்னை அந்நியமாக உணர்கிறார். இந்த அந்நியத்தன்மை கரையாமல், திரளோடு திரளாக ஆகாமல் இந்தியாவின் ஆன்மாவை உணர முடியாது.  தன்னிலும் தாழ்வான நிலையில் இருக்கும் ரிக்ஷாக்காரரிடமும் குடிசையில் உணவு  வழங்குபவரிடமும் அற சீற்றத்துடன் நடந்துகொள்கிறார். காசு  கூட கேட்கும் ரிக்ஷா காரரிடம் மனித ரத்தம் பருகுபவர்கள் என்று சொல்லி அவரை அழவைக்கிறார். சீர்ஷேந்து அவரை தேற்ற வேண்டியிருக்கிறது. நமது அற சீற்றம் கூட மிகுந்த கவனத்துடன் வெளிப்படுகிறது. ராமராஜ்ஜியம் எனும் கனவுக்கும் நவீன இந்தியா எனும்  நிதர்சனத்திற்கும் இடையே அல்லலுறும் ஒரு ஆன்மாதான் சீர்ஷேந்து. ‘உத்தரபிரதேசத்து மக்கள் சாகவில்லை அவ்வளவுதான்’ என அவர்களின் நிலை கண்டு கொந்தளிக்கிறா்ர். ‘மனித குலத்தின் மீது எனது நேசம் அதிகரிக்கும் தோறும் தனித்த மனிதன் மீதான என் நேசம் குறைந்தபடி இருக்கிறது’ எனும் தாஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றை நினைத்து கொண்டேன். கூடவே “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது” எனும் காந்தியின் சொற்களும் நினைவில் எழுந்தன. 


No comments:

Post a Comment