ஈரோடு- திருப்பூர் அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள். யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது.
சிபி, அனுஸ்ரீ, சௌமியா ஸ்ரீ, கௌதம், லைலா பானு, அர்ச்சனா ஆகியோர் தான் மொத்த பயணத்தை நிறைவு செய்த அறுவர். கொடைக்கானல் சபரீஷ் இவர்களுடன் ஏறத்தாழ ஒரு வாரம் நடந்திருப்பார். சரண்யாவும் நான்கைந்து நாட்கள் நடந்தார் என்று எண்ணுகிறேன். சந்தானிகா, ஸ்ரீவித்யா, மோகன் ராஜ் ஆகிய மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் நடந்திருப்பார்கள். கண்டனூர் நாராயணனும் அவரது பனிரெண்டு வயது மகன் ராம் சிதம்பரமும் இரண்டு நாட்கள் நடந்தார்கள். இந்த பயண நோக்கத்தை பற்றி நிறைய பேசலாம், ஆனால் 18 நாட்கள் நீண்ட நடை பயணம் என்பதே நடந்தவர்களுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருக்கும். உணவிற்கோ தங்குமிடத்திற்கோ பெரிய திட்டமிடல் இல்லாமல் மக்களை நம்பி நடந்தார்கள். சிறு இடர்களுக்கு அப்பால் நான்கு பெண்கள் கொண்ட குழுவிற்கு எந்த தொந்தரவும் இல்லை.
புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும்போது குடும்பத்துடன் சென்று சந்தித்து வந்தோம். நடந்து நடந்து கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தது. அனைவரும் பிளாஸ்திரிகள் ஒட்டியிருந்தார்கள். வாடை காற்றிலும் மழையிலும் நடந்ததால் லேசான உடல்நலமின்மை சிலருக்கு. பிறகு வேதாரண்யத்தில் நிகழ்ந்த நிறைவு நாள் விழாவிலும் பங்கு கொண்டேன். மணப்பாறை- புதுக்கோட்டை வழியில் சித்தூர் எனும் கிராமத்தில் இருந்த கருப்பர் கோவில் வாசலில் மதிய ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது சென்று சேர்ந்தோம். அன்று மனைவியின் பிறந்தநாள் என்பதால் மதிய உணவு எடுத்து வருவதாக திட்டம். ஆனால் நாராயணன் கொண்டு வந்த காலையுணவை மதியம்தான் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டார்கள். முந்தைய நாள் தங்கிய இடத்தில அந்த அளவு கவனிப்பு. நடந்து நடந்து இளைப்பீர்கள் என்று பார்த்தால் ஒரு சுற்று பெருத்ததாக தெரிகிறதே என கேலி செய்து கொண்டிருந்தோம். அதுவரையிலான பயணத்தில் அவர்கள் ஆகப்பெரிய சவாலாக உணர்ந்த விஷயத்தை பற்றி பேசினோம். மலைகளுக்கு இடையே இருளில் நடக்கும்போது தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக திட்டமிட்ட ஊரை அடைவதற்கு முன்பே வேறொரு ஊரில் தங்குமிடம் தேடும் நெருக்கடி ஏற்பட்டதை பற்றி அனுஸ்ரீ கூறினார். தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக சொன்னார். சாலைகளில் துரத்தி வந்த குடிகாரர்கள், அனுமதி அளிக்காத தந்தை, உடல் ஒத்துழைக்குமா எனும் ஐயம் என வேறு வேறு விஷயங்களை சொன்னார்கள். தெரு நாய்களை எப்படி சமாளித்தீர்கள் என்றால் கண்டுகொள்ளாமல் திடமாக நடந்து வந்தால் விட்டுவிடும் என்றார்கள். பயணத்தின் ஊடாக சில நுட்பங்களை கண்டடைந்துள்ளார்கள். ஆண்கள் இருக்கும் வீட்டில் கழிவறை உபயோகிக்க கோரினால் அனுமதிப்பார்கள் என்பது அப்படியான ஒரு கண்டுபிடிப்பு. மாவட்டங்கள் தோறும் தங்களது பிரச்சாரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பு சார்ந்தும் சில விஷயங்களை சொன்னார்கள். பொதுவாக மனிதர்களின் நல்லதன்மை மீது நன்னம்பிக்கை ஏற்பட்டதாகவே சொன்னார்கள். பிளாஸ்டிக் பேட் பால் கொண்டு சுதீருடன் சிபியும் கௌதமும் விளையாடினார்கள். நாராயணன் ஏற்பாட்டில் இட்டிலி, இடியாப்பம், கவுனி பாயாசம் ஆகியவற்றை மதிய உணவாக உண்டோம். எங்களுடன் வந்த சிங்கப்பூர் கணேஷ் பை நிறைய நார்த்தம் பழத்தை கொண்டு வந்தார். உண்டு முடிக்கும் சமயத்தில் திண்டுக்கல்லில் இருந்து உமையாள் தேனப்பன் தம்பதியினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மாணவர்களின் உடைகளை துவைத்து காயப்போட்டு கொண்டு வந்திருந்தார்கள். முதல்முறையாக அவர்களை சந்தித்தேன். தேனப்பன் கட்டுமான பொறியாளராக உள்ளார். உமையாள் ‘வேதாத்திரி மகரிஷி’ வாழ்க வளமுடன் யோக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாலை நான்கு மணிக்கு மீண்டும் நடக்க தொடங்கிய போது சுதீரும் அவர்களுடன் நடந்து வருவதாக பிடிவாதம் பிடித்தான். கொஞ்ச தூரம் நடந்தபிறகு நிறைவுநாளில் அவர்களுடன் நடக்கலாம் என்று உறுதியளித்து அழைத்து கொண்டேன்.
நிறைவு நாள் அன்று மதியம் அம்மாவும் என்னுடன் வந்தார். சுதீர், நாராயணன், அவரது மகன் ராம் சிதம்பரம், சிங்கப்பூர் கணேஷ் என எல்லோரும் புறப்பட்டோம். ரோட்டரி சங்கம் ஆங்காங்கு மாணவர்களுக்கு வரவேற்பு அளித்து வந்தது. இறுதி நான்கு கிலோமீட்டர் இருக்கும் போது வந்து சேர்ந்தோம். சுதீர், ராம், நாராயணன், கணேஷ் என எல்லோரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அறப்போர் ஜெயராமன், கிருஷ்ணன், குக்கூ நண்பர்கள் என ஒரு திரள் நடந்து வந்தது. நானும் அம்மாவும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்தோம். அரசு சித்த மருத்துவர் ரமேஷ் குமார் வேதாரண்யத்தில் தான் பணிபுரிகிறார். எனது கல்லூரி இளவல். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. சத்தியாகிரக நினைவிடத்தில் கூட்டம் நடந்தது. ரோட்டரி சங்க கூட்டம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. நிறைய உரைகள். மாணவர்கள் தங்களது அனுபவங்களை செறிவாக பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அறப்போர் ஜெயராமன், பேராசிரியர் பழனித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாரிசுகளான இருவரை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அறக்கல்வி ஆசிரியர்களான அனீஸ் நாயரும், லோகமாதேவி அவர்களும் நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கையெழுத்திட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கிருஷ்ணன் மாணவர்கள் மீது விழுந்திருக்கும் பொறுப்பு சுமையை பற்றி பேசினார். காந்தியிடம் இந்த சிக்கல் உண்டு. காந்திக்கு எல்லாவற்றிலும் தான் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனும் சிக்கல் உண்டு. காலப்போக்கில் அது தான் மட்டும் என்பதாக இல்லாமல், மனைவி பிள்ளைகள், சீடர்கள் என தன்னை சார்ந்த எல்லோருமே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இது ஒரு நெருக்கடி. ஹரிலால் இந்த நெருக்கடியில் தாக்குபிடிக்காமல் உதிர்ந்தவன். உள்ளத்திண்மையை சோதிக்கும் சோதனைகள் இனிதான் வரக்கூடும். அப்போது அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
கரியப்பட்டணம் எனும் ஊரில் விஜயலக்ஷ்மி எனும் வாசகர் வீட்டில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடை பயணம் முடித்த மாணவர்கள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. கௌதம் ஒரு மூலையில் தனியே அமர்ந்திருந்தான். சௌமியா ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள். சுமார் இருபது நாட்கள் ஒன்றாக செய்த பயணம். திரும்ப முடியாத காலத்துளிகளால் நிறைந்தது தான் வாழ்க்கை. இந்நினைவுகள் வாழ்நாள் சேகரம். பெரும் யாத்திரைகள் எந்த அளவிற்கு புறத்தில் நிகழ்கிறதோ அதே அளவிற்கு அகத்திற்குள்ளும் நிகழும்.
விஜயலஷ்மியின் இல்லம் அழகாகவும் விசாலமாகவும் இருந்தது. இரவு நெடுநேரம் பாட்டு, பேச்சு, கொண்டாட்டம் என சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. நிரம்பி ததும்பும் நீர் நிலைகள். வயல் வெளிகள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிராதப ராமபுரம் எனும் ஊரில் ஊராட்சி தலைவராக உள்ளவரை சந்தித்தோம். முழு மூச்சுடன் முன்மாதிரி ஊராட்சியாக கொண்டுவர முனைகிறார். அவரது முயற்சிகள், இலட்சியங்கள் குறித்து பேச முடிந்தது. தன்னலமற்ற செயல் ஒத்த மனமுடையவர்களை ஒன்றிணைக்கும்.
காலை எழுந்து உணவு உண்டுவிட்டு கோடியக்கரை சென்றோம். தை அம்மாவாசையை என்பதால் கடற்கரையில் கூட்டம். குரங்குகளுக்கு உணவிட வேண்டாம் என வனக்காவலர்கள் அறிவுறுத்தினார்கள். கடலில் குளிக்க வேண்டும் எனும் திட்டத்தை நீரை பார்த்ததும் மாற்றி கொண்டேன். நான்கைந்து வண்டிகளில் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சென்றோம். வெளி மான், காட்டு பன்றி, கீரி, கலைமான் ஆகியவற்றை பார்த்தோம். நாராயணனும் ராம் சிதம்பரமும் எங்களுக்கு விதவிதமான பறவைகளை சுட்டி காட்டினார்கள். உபயம் பறவை பார்த்தல் வகுப்பு, வெள்ளிமலை. ராஜராஜன் எழுப்பியதாக நம்பப்படும் பொன்னியின் செல்வன் புகழ் கலங்கரை விளக்கத்தை கண்டுவிட்டு திரும்பினோம். திரும்பும் வழியில் இரண்டு நரிகளை கண்டோம். (நாங்கள் மட்டுமே கண்டோம் என்பதில் சற்று கூடுதல் பெருமை).
400 கிலோமீட்டர் வாக்குக்கு பணம் பெறாதீர்கள் எனும் செய்தியை தாங்கி ஆறு மாணவர்கள் நடந்து வருகிறார்கள். இது இந்த ஊர்களில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? இன்றைய அரசியல் சூழலில் இவர்களின் சன்னமான ஆனால் திடமான குரல் எடுபடுமா? எல்லா அறமின்மைகளும் இயல்பாக்கம் அடையும் காலகட்டம் இது. தேர்தலுக்கு நாளிருக்கிறது. இவர்களிடம் வாங்க மாட்டேன் என உறுதி அளித்தவர்கள் அந்த சொல்லை காப்பாற்றுவார்களா? எந்த கேள்விக்கும் துலக்கமான விடை என ஏதுமில்லை. உடலை மெய் என்று குறிக்கிறது தமிழ் மொழி. உடலை வருத்துதல் என்பது மெய் வருத்தம். உடலே நமக்கு முன் இருக்கும் தூலமான மெய். உடலை காப்பதே நம் அடிப்படை விசை. அதன் எல்லைகளை நகர்த்தி, அதையே பணைய பொருளாக வைக்கும் போது நாம் நம்பும் விஷயத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறோம். அதற்கொரு ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். சிறிய அளவிலாவது மாற்றங்கள் நிகழும். விதிமுறைகள் நாமே வகுத்து கொண்டவை. நமக்குள்ளாக ஏற்படுத்தி கொண்ட பொது ஒப்பந்தம். வாக்களிப்பது நம் கடமை. வாக்குகள் சந்தை சரக்குகளாக மாறும் போது நம் நலத்திற்காக நாம் ஏற்படுத்திய அமைப்புகளையும், விதிகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறோம். பொது அமைப்புகள், பொது விதிகள் சுயநல தேவைகளுக்காக அலட்சியப்படுத்தப்படும் தோறும் பலவீனமடையும். காந்தியம் தனிமனிதனை மாற்றத்தின் அலகாக கொள்கிறது. இந்த பயணத்தின் ஊடே வெகு சில தனியர்கள் மாறினாலும் கூட சரிதான். முனை மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment