Monday, February 3, 2025

எல்லாம் செயல் கூடும்

Dr Satya, Dr Bhumi, Thirunavukarasu, Chitran, Suneel, Manasa Bottom row- Prabahakaran Krishnammal Sabarmathi Sudhir Chandran 
 சிபியின் நடைபயண நாட்குறிப்புகளை வாசித்தபோது இதுவரை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை சந்திக்காதது  பெரும் பிழை எனும் உணர்வு வலுபட்டது. இன்ன காரணம் என்றில்லை. சுணக்கம், அல்லது முனைப்பின்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட்டமிடல் ஏதுமின்றி பிப்ரவரி 2 ஆம் தேதி அவரை நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்து கொண்டேன். குக்கூ சிவராஜிடம் கிருஷ்ணம்மாள் அங்கு இருப்பார்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு ஞாயிறு மதியம் புறப்பட்டோம். மனைவி மக்களுடன் சென்றேன். உடன் எழுத்தாளர்கள் சித்ரனும் பிரபாகரனும் வந்தார்கள். குழந்தைகளுக்கு இந்த நூறு வயது பாட்டியை காண்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். காந்தியை கண்ட விழிகளை அவர்களும் காண வேண்டும். காந்தியை கண்ட விழிகள் இந்த தளிர்களையும் காண வேண்டும். எத்தனை பெரிய காலமாற்றத்தில் சாட்சியாக அவர் நம்முன் வாழ்கிறார். இங்க தான் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் இரண்டு வாரம் தங்கினார் என்றொரு அறையை கைகாட்டினார். காமராஜர் இங்கயே தான் இருப்பார். எங்க வீட்டுக்காரர் இருந்தா வெளிலயே இருக்கிறதை எல்லாம் ஊதி முடிச்சுட்டு உள்ளே வருவார் என்று சொன்னார். வயதுக்குரிய உடல் மாற்றங்கள். மதியம் குட்டி தூக்கத்திற்கு பின் எங்களை காண வந்தார். 


Sunday, February 2, 2025

ஒரு காந்திய பயணம்

 

ஈரோடு- திருப்பூர்  அறக்கல்வி மாணவர்கள் வாக்குக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி கோவை போத்தனுர் காந்தி ஆசிரமத்திலிருந்து வேதாரண்யம் சத்தியாகிரக நினைவிடம் வரையில் 400 கிலோமீட்டர்கள் நடந்து தங்கள் யாத்திரையை  ஜனவரி 28 ஆம் தேதி நிறைவு செய்தார்கள்.  யாத்திரை எனும் சொல்லை குறித்து யோசித்து கொண்டிருந்தேன். தண்டி பயணம் என சொல்லவில்லை, யாத்திரை என்றே சொல்லியிருக்கிறார்கள். இயல்பாக பயணம் எனும் சொல்லுக்கு இருக்கும் உலகியல் வரையறைக்கு அப்பால் யாத்திரை எனும் சொல்லுக்கு ஒரு ஆன்மீக பொருள் சேர்கிறது. பயனத்திற்கொரு புனித நோக்கு சேரும்போது அது யாத்திரையாக ஆகிறது.