க. நா.சு மொழியாக்கம் செய்த 41 ஜென் கவிதைகள், ஜென் பற்றி அவர் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம், அவதூதர் நாவலின் தொடக்கத்தில் ஜென் குரு ஹகுயின் பற்றி வரும் ‘அப்படியா’ எனும் பிரபல ஜென்கதை ஆகியவை கொண்ட சிறிய நூலை அழிசி ஸ்ரீனிவாசன் பதிப்பித்துள்ளார். க. நா. சு எழுதிய ஜப்பானிய ஹைக்கூ எனும் சிறிய முன்னுரையும் இடம்பெற்றுள்ளது. கவிதைகளுக்கு நடுவே அழகிய ஓவியங்கள் என அழகிய பதிப்பு.
சிறிய முன்னுரையில் திருக்குறளுடன் ஜென் கவிதைகள் வேறுபடும் புள்ளியை விவரிக்கிறார். திருக்குறள் கடுகை துளைத்து ஏழ்கடலை புகட்டுகிறது. ஜென்னுக்கு ஏழ்கடல் முக்கியமல்ல, கடுகு தான் முக்கியம் என்கிறார். பாரி மொழியாக்கம் செய்துள்ள கட்டுரையில் ஜென் குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். சிந்தனை நீக்கம், சிந்திப்பதை நிறுத்துவது, மறு சிந்தனை ஆகியவை ஜென்னின் மூன்று படிநிலைகள் என கிறிஸ்மஸ் ஹம்பரீஸை மேற்கோள் காட்டுகிறார். “புத்தமனம் என்பதோ மகிழ்ச்சியிலும் முடிவிலா திளைப்பிலும் ஆழ்ந்திருப்பது . இருமைகள் அற்ற அந்நிலையில் மகிழ்ச்சிக்கு எதிரீடாக வலியோ துன்பமோ இருப்பதில்லை. உள்ளுணர்வின் வழியாக இங்குள்ள அனைத்துடனும் ஒருமையை உணர்வதன் மூலம் உங்களுக்கு மரணம் இல்லாமல் ஆகிறது” என்று எழுதுகிறார்.
“சிந்தனைகள் அனைத்தும் ஞான விடுதலையின் பாதையில் தடைகளே . சிந்தனைக்கு மாற்றாக உள்ளுணர்வை கொள்ள வேண்டும்” எனும் ஹம்பரீஸின் கூற்றை அறிவுறுத்துகிறார். நல்ல தயாரிப்புடன் மெனக்கெடலுடன் வெளியிட்டிருக்கும் அழிசி ஸ்ரீனிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். நாம் நம் முன்னோடிகளை அவர்களின் ஓரிரு பங்களிப்பை கொண்டு ஒற்றை பரிமாணம் கொண்டவர்களாக சாராம்சப்படுத்திக் கொள்கிறோம். நெருங்கி அறியும் தோறும் அவர்கள் ஆகிருதி விரிந்தபடி இருக்கிறது. சமயங்களில் நமக்கு அப்போது முக்கியமாக தெரிந்ததை விட இப்போது வேறு தளங்கள் திறந்து கொள்ளும். அவை முக்கியமாக ஆகும். முன்முடிவுகள் அற்று நெருங்கி முழுமையாக அறிய வேண்டும். ஸ்ரீனி க.நா.சுவின் வெவ்வேறு முகங்களை பங்களிப்புகளை நமக்கு அறிமுகப்படுத்திய படி இருக்கிறார்.
தொகுப்பில் எனக்கு பிடித்த சில ஜென் கவிதைகள்
என் வீடு பற்றி எரிந்து போய்விட்டது
வானத்துச் சந்திரனை என்னிடமிருந்து மறைக்க
இப்போது எதுவும் இல்லை
மஸாஹிடே
கோடை சந்திரன் மிக அழகாக இருக்கிறது
நல்ல வேளையாக மேகங்கள் வந்து
என் கழுத்துக்கு சற்று ஓய்வு தருகின்றன
ஸர்யூ
கிழட்டுத்தனம்
வருகிறது என்று
தெரியும்போது
வீட்டுக் கதவைச்
சாத்திவிட்டு
வேலைக்காரனை கொண்டு
“யஜமான் வீட்டிலில்லை”
என்று சொல்லித்
திருப்பியடிக்க
இயலுமானால்
எவ்வளவு
நன்றாக இருக்கும்?
கோகின்ஷு கவிதைத் திரட்டு
பண்டைக் காலத்திலிருந்தே
இவ்வுலகம் இவ்வளவு
சோகம் நிறைந்தா உளது
…அல்லது எனக்காக மட்டுமே
இத்துயர வேஷம்
தரித்துள்ளதா?
கோகின்ஷு கவிதைத் திரட்டு
என்ன ஆனந்தம்!
நூறு நாட்கள்
வியர்த்தமாக
வார்ததைகளை
முறுக்கி எடுத்து
கொட்டி அளந்து
ஓயந்துபோன சமயத்தில்
ஒரு கவிதை
அமைந்துவிட்டது
டச்சிபானா அகேமி
மாரி காலத்துக் கடல் நாரைகள்
-வாழ அவற்றிற்கு வீடில்லை
-சாக அவற்றிற்கு கல்லறை இல்லை
காடோ ஷூஸோன்
சிறப்பான அறிமுகம் சுனில் 👍
ReplyDelete