‘மயிர்’ மின்னிதழில் வெளிவந்தது.
எழுத்தாளரின் படைப்பூக்கத்தை வெளிப்படுத்தும் காரணி எது என படைப்புகளின் வழி கண்டடைவது எனக்கு முக்கியம். அதன் வழிதான் அவர் எந்த கேள்வியை பின் தொடர்கிறார், எதனுடன் முட்டி மோதுகிறார் என்பதை கவனிக்க இயலும். தனித்தனி கதைகளாக சில கதைகள் உருபெறாமல் போயிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது அந்த சலனத்தை கண்டுகொள்ள இயலும். எழுத்தாளர் முட்டிக்கொள்ளும் வினா எத்தகையது, எத்தனை விடாப்பிடியாக, தீவிரமாக, கலாப்பூர்வமாக அந்த வினாவை தொடர்கிறார் என்பதே இன்று எனக்கு எழுத்தாளரை மதிப்பிட முக்கிய கருவியாக உள்ளது. என் நோக்கில் ஜாகிர் இரண்டு முக்கியமான கேள்விகளை தொடர்கிறார். அமைப்புக்கும் தனிமனிதனுக்குமான உறவு சார்ந்தது முதன்மை கேள்வியெனில், நுண்னுணர்வு கொண்ட கலை மனத்திற்கு நிலையாமையும் அலைக்கழிப்பும் அருளப்பட்டது ஏன் எனும் கேள்வி இரண்டாவது. ஜாகிரின் எழுத்தில் கதைசொல்லி- இலக்கியவாதி என இருவரும் தொழில்படுவதை கவனிக்க முடிகிறது. முதல் கேள்வியை கதைசொல்லியாகவும் இரண்டாம் கேள்வியை இலக்கியவாதியாகவும் எதிர்கொள்கிறார்.