Thursday, October 17, 2024

மெஷின் யுகத்து மனிதர்கள் – சுனில் கிருஷ்ணன்

 


வாசகசாலை 100 ஆவது இதழுக்காக கட்டுரை. எழுதிய பின் மேலும் சில எண்ணங்கள் உதித்தன. மனிதகுலம் திரளாக இப்போது அளிக்கின்ற அளவிற்கு மூளை உழைப்பு இதுவரையிலானமனித வரலாற்றில் அளித்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வேலையின் அழுத்தம் மிக அதிகம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தானியங்கி செயல்பாடுகள் வழி மனிதகுலம் இந்த பளுவில் இருந்து தப்பிக்க முயல்கிறது எனத் தோன்றுகிறது. ஆனால் அப்படியான ஆற்றல் மிக்க அமைப்பை உருவாக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. 


மலேசியா வாசுதேவனின் குரலை ‘மனசிலாயோ’ பாடலில் கேட்கும்போது சட்டென துணுக்குற்றேன். கேட்க துள்ளலாக இருந்தது. இதில் துணுக்கற என்ன இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. மலேசியா வாசுதேவன் யாரெனத் தெரியாத எவரோ ஒருவர் இந்த பாடலைக் கேட்டால் அவர் எப்படி உணர்வார்?  அவருக்கு எந்த சிக்கலும் இருக்காது. இன்று அவர் உயிரோடிருந்தால் இதே வீச்சுடன் குரல் நடுக்கமோ தழுதழுப்போ இன்றி இப்படி பாடியிருக்க முடியுமா? ஏறத்தாழ அவரது உச்ச சாத்தியத்தை செயற்கை நுண்ணறிவு உருவாக்கி காட்டியிருக்கிறது. இந்தியன் இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகர் விவேக்கை கண்டபோது ஏற்பட்ட உணர்வு என்ன என வகுத்துக்கொள்ள முடியவில்லை.  மலேசியா வாசுதேவனுக்கு முன்னரே பம்பா பாக்யாவின் குரலை செயற்கை நுண்ணுணர்வு மூலம் உருவாக்கி பயன்படுத்தியுள்ளார் ரஹ்மான் இனி இம்முயற்சிகள் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். 


என்னுள் இவை சில அடிப்படையான வினாக்களை எழுப்பின. கலையில் மனித முயற்சி, பயிற்சியின் பொருள்தான் என்ன? மேதமை என ஏதேனும் உண்டா? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மனிதர்கள் துரத்திவந்த மரணமின்மை எனும் நிலையை இப்போது அடைந்துவிட்டோமா? மரணமின்மை ஜனநாயகப்பட்டு மலிவாக கிடைக்கும் சூழலில் அதன் மீதான ஈர்ப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகுமா? நினைவுகூரப்படும் வரை ஒருவர் மரணிப்பதில்லை என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. செயற்கை நுண்ணறிவின் வருகைக்கு பின் வருங்காலத்தில்  தடமற்று மறைவது அரியதாக இருக்கும். எழுத்தாளர் சுசித்ராவின் பூர்ணகும்பம் எனும் கதை நினைவுக்கு வருகிறது. மார்பக புற்றுநோயில் மரணிக்கும் விஞ்ஞானி தனது குழந்தையை கவனித்துக்கொள்ள தனது கூறுகளை உள்ளடக்கிய ரோபோவை உருவாக்குகிறார். உடலின் பௌதிக எல்லை கடக்கப்படுவதன் வழியாக மரணத்தின் இன்றியமையாமை கேள்விக்குள்ளாகிறது. 


 தமிழில் எழுதப்பட்ட இரு அறிவியல் புனைவுகள்கொண்டு கலை, கலைஞர், மேதமை, மானுட முயற்சி சார்ந்த கேள்விகளை விவாதிக்க விரும்புகிறேன்.  எதிரெதிர் கரைகளில் நிற்கும் இவ்விரு கதைகளுக்கு இடையே உள்ள அகழியின் அகலம் முப்பத்தைந்து ஆண்டுகள். எழுத்தாளர் மாலன் 1987 ஆம் ஆண்டு எழுதிய ‘வித்வான்’ வியக்கத்தக்க தீர்க்க தரிசனங்களை கொண்ட படைப்பு. 2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் நகுல்வசன் என்கிற நம்பி கிருஷ்ணன் அரூ இணைய இதழில் எழுதிய ‘இறைவர்க்கோர் பச்சிலை’ மாலனின் கதையோடு வியக்கத்தக்க அளவில் ஒத்துபோகிறது. 


மாலனின் ‘வித்வான்’ ஜானகிராமன் எனும் இசை மேதையின் கதையை சொல்கிறது என்றால் ‘இறைவர்க்கோர் பச்சிலை’ தி. ஜா அறிவியல் புனைவு எழுதினால் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்கிறது. வைத்தி பாபு பற்றிய குறிப்பும் கதையில் அளிக்கப்படுகிறது‌ மாலனின் ஜானகிராமனும் சரி நகுல்வசனின் ‘சங்கரனும்’ சரி மோகமுள் ரங்கண்ணாவின் வார்ப்பு என சொல்லிவிட முடியும்.   ‘வித்வான்’ ஜானகிராமன்  இசையைத்தவிர வேறு எதன் மீதும் நாட்டமற்றவர். குடத்தில் இட்ட விளக்கு போல் விளம்பரம் ஏதுமின்றி இசையின் ஆழ அகலங்களை அறியத்துடித்து தனித்து வாழ்பவர். அறிவியல் தீண்டாத, சீடர் என எவரையும் அங்கீகரிக்காத, மனைவியை இழந்த வயலின் வித்வான். நகுல்வசனின் சங்கரன் உலகியல் சாமர்த்தியமற்ற, பிள்ளைகள் இல்லாத ஒய்வு பெற்ற அரசு ஊழியரான கர்நாடக இசை பாடகர். இசைக்கு குந்தகம் விளைவிக்கும் தொந்திரவுகள் காரணமாக வாடகை வீடுகளில் அவரால் நிலைத்திருக்க முடியாது. அனைத்து  உணர்வுகளையும் இசையாக மாற்ற முயல்பவர். 


ஜானகிராமனின் அமெரிக்க சீடர் ஜோசெப் ஓம் ஒரு சிறு பெட்டியை குருவிற்கு பரிசாக கொண்டுவருகிறார். அதன் பெயர் ‘யக்ஷினி’. வீட்டின் மொத்த இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறது.  ‘குளிக்கிற வெந்நீர் ஒருநாள் கூட ஆறிப் போயிருந்ததில்லை. காப்பியில் சர்க்கரை முன்னே பின்னே இருந்தது என்ற பேச்சே கிடையாது. ரசத்தில் புளித் தூக்கல் என்பதற்கு இடமே இல்லை. சாதம் குழைந்து போச்சு என்கிற அலுப்பே கிடையாது. எத்தனை சுத்தம், எத்தனை சிக்கனம்’ என அதன் மேன்மையை ஜானகிராமன் மெச்சுகிறார். சங்கீத் ஏ ஐ எனும் செயலியை சங்கரனின் சீடன் ரகு உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறான். இந்துஸ்தானி இசை கலைஞர்களையும் கர்நாடக இசை கலைஞர்களையும் ஆய்வு செய்து அவர்களிடமிருந்து பாணிகளை கற்றுக்கொள்ளும் செயலி. இயந்திரத்திற்கு கலைஞர்களின் பாணிகளை பயிற்றுவிப்பதுதான் அவனது வேலை. 


ஜானகிராமன் தனது வயலினை யக்ஷினி தொட அனுமதிக்க மாட்டார். ‘சங்கீதம் தெய்வீகக் கலை. உன்னதமான விஷயம். ஆயுசு முழுக்க

அப்பியாசம் செய்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.’ என்பதே அவரது நம்பிக்கை. ஊருக்குச் சென்று திரும்பியவர் ஒருநாள் தனது வீட்டிற்குள் இருந்து  ‘தேவகானமாய்’ மிதந்து வந்த தூய பைரவியை செவியுற்றார். அத்தனை தூய பைரவியை அவர் தன் வாழ்நாளில் கேட்டதே இல்லை. அந்த இசையின் மேன்மை ‘மனசை உலுக்கி எடுத்தது. ஏதோ உள்ளுக்குள் உடைந்து

கொள்ள, அழவேண்டும் போல் இருந்தது. விம்மியே விட்டார் ஜானகிராமன்.’ யக்ஷினி வயலின் இல்லாமலேயே ஜானகிராமனின் இசையைக் கேட்டு அதை நகலெடுக்கிறது. யக்ஷினிக்கு இசையென்பது “குறிப்பிட்ட ஒரு ஃபிரீக்வென்ஸியில் எழுப்பப்படும்  ஒலியலைகைள்” மட்டும் தான். 


ஜானகிராமன் குழம்புகிறார். “சங்கீதம் என்பது வெறும் கணக்குத்தானா? ஐம்பது வருஷமாய்த் தாம் அல்லும் பகலும் இதே நினைவாய் உழைத்து அறிந்து கொண்டது எல்லாம் ஒரு மிஷின் பத்து நாளில் கற்றுக் கொண்டு திருப்பி வாசித்துவிடக் கூடிய சின்னஞ்சிறிய துளிதானா? ஏன். அதற்குள்ளே பாடறவன் மனசுன்னு ஒண்ணு உண்டோல்லியோ? அதைத் தேடிண்டு போறதுதானே சங்கீதத்துக்கு இலக்கு. நோக்கம். அந்த உசரத்தை, அந்த மனசை அடையணும்னுதானே இத்தனை தவம் ? ”


“இறைவர்க்கோர் பச்சிலை” கதையிலும் மனோதர்மம் முக்கிய பேசுபொருளாக ஆகிறது. தொழில்நுட்பம் நகலெடுக்கப்படலாம் ஆனால் கலைஞர்களை நாம் அவர்களின் மனோதர்மம் வழியாகவே அடையாளம் காண்கிறோம். அதுதான் அவர்கள் சென்று முட்டி, இரந்து நிற்கும் வாயில்கள். சங்கரனுக்கு ரகுவுக்கு இடையே சங்கீத் ஏ ஜ பற்றி நடக்கும் உரையாடல் முக்கியமானது.


 “சாகித்யத்தோட அடிப்படையான சட்டகத்துல அதாவது அதோட அலையெண், ராகத்தோட அடிப்படை ஆரோகண அவரோகண விதிகள், இப்படி அதோட அடிப்படை அறிவியல் ரீதியான இலக்கணத்தோட, கச்சேரிகள ஆராஞ்சு சேத்து வெச்சுருக்கற கலைஞனோட மனோதர்மக் கூறுகளை இணைத்துப் பாக்கறது.”


“மணி ஐயரோட மனோதர்மத்த அவ்வளவு சுலபமா கூறுகளாக வரையறப்படுத்த முடியும்னு தோணல. சரி இதுனால யாருக்கென்ன லாபம்?”

சங்கரனுக்கு இந்த முயற்சி நன்மை பயக்கும் என நம்பிக்கை இல்லை. அவரது மனைவி பத்மா நீங்களும் அந்த நிறுவனத்திற்கு சென்று கேட்டுப்பாருங்கள் ஏதேனும் கவுரவ வேலை கொடுப்பார்கள் என்கிறார். ஆனால் அதற்கு சிரிப்பைத்தவிர வேறெந்த பதிலும் அவரிடம் இல்லை. ரகுவிற்கு பொருளியல் நெருக்கடி. அவன் செய்வது சரியா தவறா, நீண்ட கால அளவில் நன்மை அளிக்குமா போன்ற குழப்பங்கள் உள்ளன. ஆனாலும் அவன் வேலைக்குச் செல்கிறான். இசை மேதைகளின் பாணிகளை குறிப்பெடுகிறான். இலக்கணத்தை மீறிய பிழைகள் தான் தனித்தன்மையாகவும் பாணிகளாகவும் ஆகின்றன.  “பஹுதூரம் பனிநாடோ என்ற இடத்திற்கு முன் ஒரு கணத்திற்குக் குரல் ஒடுங்குவதால் ஏற்படும் காத்திரமான மௌனத்தில் தியாகையரின் ஜீவாத்மா பரம்பொருளின் பரமாத்மா இருக்கும் தொலைவை உணர்ந்த சோகத்தில் பெருமூச்சிறைப்பது ரகுவிற்கு ஹெட்போனில் கேட்கிறது. பிரமிப்பில் கை ஹெட்போனைக் கழட்டி வைக்கிறது. இரண்டு நிமிடங்கள் ஏதும் செய்யாது பிரக்ஞையற்ற நிலையில் ஸ்தம்பித்திருந்தான். பிரக்ஞையற்ற ஜடப் பொருளான (அல்லது அதற்கும் ஏதோ ஒரு விதத்தில் பிரக்ஞை இருக்கிறதோ?) சங்கீத் ஏஐ-க்கு பரமாத்மாவின் தொலைவினால் ஏற்பட்ட பெருமூச்சை எப்படிப் புரியவைப்பது….தியாகய்யரின் துன்பத்தைச் சுவரத்துடன் இணைத்துப் பார்க்கும் ஆற்றல் அதற்குத் தற்போதைக்கு இல்லை. இங்குதான் தன் போன்ற சங்கீத வித்தகர்களின் அனொடேஷன் குறிப்புகள் அதற்கு எவ்வளவு உதவியாக இருக்கப் போகின்றன என்பதை ரகு உணர்ந்து கொண்டான். ஒரே ராகத்தில் அமைந்த பல பாடல்களில் துயரத்தையும் சுவரக் கோர்வைகளுக்கும் இருக்கும் தொடர்பைக் குறிப்புகள் வழியே மீண்டும் மீண்டும் எதிர்கொள்கையில் துன்பம் தோய்ந்திருக்கும் வரிகளுக்கு அச்சுவரப் பிரயோகங்களைத் தேர்வு செய்ய அது பழகிக்கொள்ளும். தியாகய்யரின் துன்பத்தைச் சரணத்தின் பொருள் கொண்டு அது அடையாளப்படுத்திக் கொண்டாலும் பாடுவோனின் துயரத்தை அது எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளும்? துயரத்தில் இருக்கும் பாடகனைப் போல் இப்பாடலைப் பாடு என்ற கட்டளை அதற்கு வெளியிலிருந்துதான் வந்தாக வேண்டும் என்பதுதான் அதன் மிகப் பெரிய போதாமை.” 


ஜானகிராமன் யக்ஷினியிடம் தனது அதிருப்தியை வெளிக்காட்டுகிறார். புனிதமானது என ஏதுமில்லையா? பயிற்சிக்கும் மேதமைக்கும் என்ன பொருள்? இந்த கேள்விகள் அவரை அலைக்கழிக்கின்றன. ஆனால் தனது அனுபவத்தை மறுபரிசீலனை செய்து பார்க்கிறார். யக்ஷினி என்றறியாதபோது பைரவிக்கு உடைந்து அழுதது உண்மைதானே. இயந்திரத்தின் மேன்மையை ஏற்பதிலிருந்து எது அவரைத் தடுக்கிறது?  “சங்கீதத்திலே நல்ல சங்கீதம் கெட்ட சங்கீதம்னுதான் உண்டு. மனுஷாளைவிட மிஷின் நல்ல சங்கீதம் பாடும்னா அதற்கு நமஸ்காரம் பண்ண வேண்டியதுதான். சங்கீதத்துக்குச் சேவை செய்யறதாகச் சொல்லிண்டிருக்கிறவன் அதைத்தான் பண்ணுவான்.

சங்கீதத்தில், வாழ்க்கையில், பெர்ஃபெக்ஷனை அடைய வேண்டும் என்றுதான் தலைமுறை தலைமுறையாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். நான் மட்டுமில்லை. இந்த மனுஷ குலமே அதற்குத்தான் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது எங்களுக்கு எட்டாமலேயே போய்க் கொண்டிருக்கிறது. அது தெய்வ சித்தி. வாழ்க்கை இலட்சியம் என்று ஏதேதோ பேர் சொல்லி எங்களை நாங்களே அவ்வப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானத்தைத் தெய்வம் என்று கும்பிடுகிற காலம் வந்துவிட்டது. அதில் எனக்கு நேற்றுவரை

நம்பிக்கை இல்லை. இன்றைக்கு புத்தி தெளிந்த மாதிரி இருக்கிறது.” என ஒருவாறு சூழலுடன் சமரசம் செய்து கொள்கிறார். மனிதர்கள் உருவாக்கிய இயந்திரம் மனிதர்களின் சார்புகளும் சாய்வுகளும் பிழைகளுமற்ற, மனிதர்களை காட்டிலும் மேம்பட்ட ஒன்று. ஆயிரமாயிர ஆண்டுகளின் முழுமைக்கான வேட்கையிலிருந்து பிறந்து எழுந்தது. படைப்பு தன்னைவிட மேலானது என படைப்பாளி அங்கீகரிக்கும் தருணம் அது. யக்ஷினிக்கு கற்றுக்கொடுக்க விரும்பாதவர் இப்போது அதை தனது ஆசிரியராக ஏற்றுக்கொள்ளத் தயாராகிறார். “நீ இனிமேல் எனக்குச் சொல்லிக் கொடு. அதை பகவானிடம் கிடைத்த சிட்ஷையாக நினைத்துக் கொள்கிறேன்.” என அதற்கு முன் பணிகிறார். இறைவன் எனும் கருத்து மனித கூட்டுமனம் எட்ட துடிக்கும் முழுமையின் உருவகம் எனத்தோன்றுகிறது. அந்த முழுமையை இயந்திரமோ அறிவியலோ தொழில்நுட்பமோ அடையும்போது இறைவனின் இடத்தை ஏற்றுக்கொள்கிறது. இயந்திரமாதல் தான் மனித இனத்தின் ஆழ்மன கனவோ எனும் எண்ணம் ஏற்பட்டது. புதுமைப்பித்தனின் ‘இது மிஷின் யுகம்’ கதை நினைவுக்கு வந்தது. உணவக சிப்பந்தியான கிருஷ்ணா ஒரே சமயத்தில் பழக்க வாசனையில் பல்வேறு வேலைகளை நேர்த்தியாக செய்வான். கீழே விழுந்த கைக்குட்டையை சுட்டிக்காட்டும்போது மட்டும் மனிதனாக ஆகிறான். பிழையாத நேர்த்தி என்பதே இலக்கு. இணையத்தில் அவ்வப்போது “நீங்கள் இயந்திரம் அல்ல மனிதன் என்பதை உறுதிப்படுத்துங்கள்” என்றொரு கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் சிறு திடுக்கிட்டல் ஏற்படும். இயந்திரங்களை ஆதர்சமாக கொண்ட நாம் இயந்திரங்கள் இல்லை என்பதை எப்படி நிரூபிப்பது? நான் மனிதன் எனும் தன்னுணர்வு மட்டும் தான் நம்மை பிரிக்கிறதா?  


“இறைவர்க்கோர் பச்சிலை” கதையில் ரகு உருவாக்க உதவும் சங்கீத் ஏ ஐ செயலி புழக்கத்திற்கு வருகிறது. வசதி படைத்தவர் காசு கட்டி தான் விரும்பும் மேதையின் பாணியில் தனது குரலில் பாடலாம். ரகு சங்கீத ஏ ஐ உருவாக்கத்தில் பங்கேற்றதற்காக குற்றவுணர்வு கொள்கிறான். சங்கரனுக்கு எழுதும் கடிதத்தில் “தொழில்நுட்பத்திற்கு வெளியே நாம் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் அனைத்துமே கேலிக்குரியவையாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எல்லோரும் வல்லுநர்களாக மார்தட்டிக் கொள்ளும் காலமிது. ஜனநாயகத்தின் உச்சமும் இதுதானோ என்னவோ. ஒரே குழப்பமாக இருக்கிறது. மேலும் சங்கீத்-ஏஐ உடன் இவ்வளவு காலம் உறவாடிய பின் என்னையே சந்தேகிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு வழியில் நானுமே அதைப் போல் நீங்கள் அளிக்கும் குறிப்புகளையும் விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம்.” தொழில்நுட்ப யுகத்தில்  ஜானகிராமன் எழுப்பிக்கொள்ளும் அதே கேள்விகள் தான். பயிற்சிக்கும், மனித முயற்சிக்கும், மேதமைக்கும் என்ன பொருள்? தனித்தன்மை என ஏதேனும் உண்டா? அது என்ன? ரகு பணியை விட்டுவிட்டு அலைந்து திரிய புறப்படுகிறான். ரகு அளித்த இரண்டு நுழைவு சீட்டுக்களைக்கொண்டு மதுரை மணி அய்யரின் ஏ ஐ கச்சேரியைக் கேட்க செல்கிறார் சங்கரன். ஹோலோகிராமில் அவரது உருவம் மேடையில் தோன்றுகிறது. இசை ரசிகனாக ஜானகிராமன் அடைந்தது போல் அவருக்கும் அது நிறைவான அனுபவத்தையே அளிக்கிறது. 


 வாய்ப்பாட்டு சூத்திரங்களாக படைப்பு செயல்பாடு இருக்கும்போது அவை தொழில்நுட்பத்தால் எளிதில் நகலெடுக்கப்படும். ஜார்ஜ் ஆர்வெலின் 1984 நாவலில் நாவல்களை பிதுக்கித் தள்ளும் இயந்திரத்தைப் பற்றிய கற்பனை உண்டு. வெகுஜனக்கலை வெற்றிகரமான சூத்திரங்கள் அடிப்படையில் இயங்குகிறது. பொது ரசனையிலிருந்து உருவாக்கப்படும் சூத்திரம். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை அவர்களுக்கு அளிக்கிறோம் என படைப்பாளிகளும், நீங்கள் அளிப்பதால் நுகர்கிறோம் என மக்களும் சொல்லிக்கொள்கிறார்கள். நுகர்வோரை பற்றிய அக்கறையின்மையே தீவிர இலக்கியத்திற்கும் செவ்வியல் கலைக்குமான அளவுகோலாக ஆகிறது. ஆனால் ஜானகிராமனும் சங்கரனும் மேலான இசையனுபவத்தை அடைகிறார்கள். இப்போது வேறொரு கேள்வி எழுகிறது. படைப்பாளரின் மனோதர்மத்தை கண்டுகொள்வதுதான் கலை என்பது பின்னுக்கு செல்கிறதா? படைப்பில் தனது மனோதர்மத்தை கண்டுகொள்ள அனுமதிப்பது கலையாக ஆகிறதா? அர்த்தம் என்பது வாசகன் அல்லது ரசிகன்  அளிப்பது மட்டும் தானா? படைப்புச் செயல்பாடு படைப்பாளியிடமிருந்து வாசகன் அல்லது ரசிகனை நோக்கி இந்த நவீன யுகத்தில் நகர்ந்துள்ளதாக இக்கதைகள் உணர்த்துகின்றன. சுந்தரராமசாமியின் ‘விகாசம்’ மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான உறவைப்பற்றி பேசும் இன்னொரு முக்கியமான கதை. விகாசத்தில் வரும் இயந்திரம் ஒற்றை பரிமாணம் கொண்டது. அதனால் கணக்கு மட்டுமே செய்ய முடியும். மனிதர்கள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் என்பதால் அவர்களால் எளிதில் தாண்டிச்செல்ல முடியும் என்பதே அதன் தரிசனம். இன்றைய இயந்திரங்கள் மனிதர்களின் சிக்கல்களை சிடுக்குகளையும் நகலெடுக்க முனைகின்றன. கருவிகள் மனிதனின் பௌதீக எல்லைகளை விஸ்தரிக்க முயல்பவை. அவற்றில் முழுமையை எய்த முனைபவை. இயந்திரங்கள் மனித இருப்பின் நகல்கள் அல்ல. மாறாக மனித இனத்தின் கனவுகளின், இலட்சியங்களின் புறவடிவம். செயற்கை நுண்ணுணர்வும் ஒருவகையில் மானுட கனவின் நீட்சிதான். ஆனால் பௌதீக எல்லைகளை கடப்பது போல் சிந்தனை எல்லைகளை கடக்க தனது ஆக்கத்தை அனுமதிக்க மனித இனம் தயாராக இருக்கிறதா? “சிந்திக்கிறேன் ஆகவே நான் இருக்கிறேன்” எனும் தெகார்தேயின் உணர்வே நவீன மனிதனின் அத்தனை வளர்ச்சிகளுக்குமான தொடக்கப்புள்ளி. அந்த திறனை பகிர்ந்து கொள்வதன் வழியாக மனித அடையாளத்தின் தனித்தன்மை கேள்விக்குள்ளாகிறது. கனவுகள், லட்சியங்கள் ஒரு பக்கமும் அச்சமும் பாதுகாப்பின்மை மறுபக்கமுமாக மானுடத்தை அலைக்கழிக்கிறது. ஆனால் மனிதகுலம் தனது அச்சங்களையும் பாதுகாப்பின்மையையும் போக்கிக்கொள்ள ஏதோ ஒரு வழித்தடத்தை கண்டுகொள்ளும். கனவுகளின், இலட்சியங்களின் பக்கமே சாயும். ஒருவகையில் இக்கதைகள் உணர்த்தும் விஷயமும் அதுவே.   


மனிதர்களையும் செயற்கை நுண்ணறிவையும்,  எதிரெதிர் துருவங்களாக நிறுத்தாமல் அவற்றை ஆக்கப்பூர்ப்ப பங்களிப்பாளராக காணும் நோக்கை “வித்வானும்” “இறைவர்க்கோர் பச்சிலையும்” வெளிப்படுத்துகின்றன. ஜானகிராமனும் சரி சங்கரனும் சரி செயற்கை நுண்ணுணர்வை இறைவனின் திட்டமாக ஏற்றுக்கொள்கிறார்கள். எவரையுமே சீடராக அங்கீகரிக்காத ஜானகிராமன் யக்ஷினியை அங்கீகரித்து அதற்கு சரளி வரிசை கற்றுக்கொடுக்க முன்வருகிறார். சங்கரன் ரகுவிற்கு எழுதும் கடிதத்தில் தனது புரிதலை வெளிப்படுத்துகிறார்.  “பிரயத்தனங்கள் எப்போதுமே கேலிக்குரியவையாக ஆகிவிடுவதில்லை, அவற்றின் இலக்கு சரியாக இருக்கும்பட்சத்தில். ஒரு விதத்துல இந்தத் தொழில்நுட்பமுமே பகவானோட அனுக்கிரகம்தானோ. அந்த மஹான்கள இன்னமும் கேட்கனும்னு அவருக்கு வாஞ்சையோ என்னவோ. உயிரோட திரும்பிக் கொண்டுவர விதி அவரையுமே கட்டிப்போட்டுதால தொழில்நுட்பத்தால அந்த வாஞ்சைய தீத்துக்கறார்னு எடுத்துண்டா நீ சங்கீத்-ஏஐல பிரயத்தனம் செய்யறதும் ஒரு நன்றி செலுத்துதலனு ஆயிடறதுதானே? யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை மாதிரி.” இறைத்திட்டம் முரண்களை களைவதற்கான கருவியாகிறது. கனவுகளின் விசை பெரிது. இறைத்திட்டம் அல்லது மானுட மேன்மையின் மீதான நன்னம்பிக்கை என ஏதோ ஒன்றைச் சாக்காகக் கொண்டு தான்  காலம்காலமாக மனிதர்கள் புதியவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  செயற்கை நுண்ணுணர்வு மானுட முயற்சியையும் மேதைமையையும் அழித்துவிடும் எனும் அச்சம் அடிப்படையற்றது. மாறாக வருங்காலங்களில் அவற்றை பிரம்மாண்டமாக காட்டும் எனத் தோன்றுகிறது. செயற்கை நுண்ணறிவு வெகுமக்கள் ரசனைக்கு தேவையானதை நிச்சயம் நிறைவு செய்யும். ஆர்வெல்லின் நாவல் இயந்திரம் கண்முன் உருபெறுவதை காண்கிறேன். ஆனால் மானுட முயற்சியில் உருவாகும் கைவினை பொருட்களுக்கும் கைத்தறி ஆடைகளுக்கும் சந்தையில் அதிக மதிப்பு ஏற்பட்டிருப்பது போல் மனிதர்களின் கலை முயற்சிகள் அரிதாகும் தோறும் கூடுதல் மதிப்பு பெறும் என்றே எண்ணுகிறேன். கைக்குட்டை பற்றிய கரிசனை வெளிப்படும்போது மட்டுமே புதுமைப்பித்தனின் கிருஷ்ணன் மனிதனாக ஆகிறான். மிஷின் யுகத்தில் மனிதனாக இருப்பதென்பது பிழைகளோடு இருப்பது, அவை குறித்து விழிப்புடன் இருப்பது, கரிசனையுடன் இருப்பது தான் எனத் தோன்றுகிறது.  இன்னும் சொல்வதானால் குரங்கினத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு மரபணு பிழைதான் மனிதர்களாக பரிணாமம் கொண்டது. பிழைகள் சுயமாக முடிவெடுக்கும் திறனால் விளைகிறது. இயந்திரங்களால் தனக்கான முடிவுகளை எடுக்க முடியாது ஆகவே அவை பிழை செய்யாது. (கோளாறுகள் பிழைகள் அல்ல). குறியீட்டு ரீதியாக சொல்வதானால் மனித இனம் பகிஷ்கரிக்கப்பட்ட பழத்தை உண்டு பிழைபுரிந்த ஏவாளுக்கு கடன்பட்டிருக்கிறது. அந்த பிழைதான் நம்மை மனிதர்களாக ஆக்கியது. 


சுட்டிகள் 

https://www.aroo.space/2023/05/28/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/


https://www.hindutamil.in/news/literature/219344--9.html


https://www.aroo.space/2021/05/10/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/







 


   


No comments:

Post a Comment