Wednesday, June 26, 2024

நீலகண்டம் - சியாம்

 

நன்றி - அகழ்

“இந்நாவல் ‘ஆட்டிசம்’ பற்றிய நாவல் அல்ல. ‘ஆட்டிச’ வாழ்வை ஆவணப்படுத்துவது இதன் முதன்மை நோக்கம் அல்ல. ‘ஆட்டிசம்’ ஒரு பின்புலம் மட்டுமே.” என்று முன்னுரையிலேயே எழுத்தாளர் கூறிவிடுகிறார். நாவலில் வரும் செந்தில் தனக்கு குழந்தை பிறக்காத பொழுதும், தானே தேர்தெடுத்த ஒரு குழந்தை பின்னாளில் ஆட்டிச நிலைபாடு கொண்ட பெண்ணாக மாறும் பொழுதும் தன் வாழ்வில்  தற்செயலை சந்திக்கிறான். அந்த தற்செயலுக்கு அவன் எதிர்வினையாற்றுவதே இந்நாவல் என்று ஒருவகையில் சொல்லலாம். செந்தில் தற்செயலை எதிர்கொள்கையில் அவன் தான் மட்டுமின்றி தன்னை உருவாக்கிய மரபையும் சமூகத்தையும் சேர்த்தே அறம் என்பதற்குள் பொருத்திப் பார்க்கிறான். அவன் சென்றடையும் இடம் அவர்களது மனநிலையை, செயலை, அவர்கள் நம்பும் அறத்தை பரிசீலிக்க செய்கிறது. ஒரு கோணத்தில், தன் அனுபவத்தைக் கொண்டு வரலாற்றை பிளந்து செல்லுதல். அது, தலையில் தேக்கிச் சென்ற மதிப்பீடுகளுடன் முட்டிக்கொள்ளுதல். தத்து எடுத்தல் சாதாரணமாக உள்ள நாட்டுப்புறத்தார் பின்புலம் கொண்ட செந்தில் வேறொருவரின் விந்தணு கொண்டு பிள்ளைப் பெறுதலை மறுப்பதையும், தான் பிராமண குடும்பம் தத்து எடுத்த ஒரு குஜராத்தி பெண் என்று அறிந்தும் ரம்யாவின்(செந்திலின் மனைவி) அம்மா வரலக்ஷ்மி ரம்யாவின் திருமணத்தை எதிர்ப்பதையும் இணையாக பார்க்க முடிகிறது. 


நாவலில் வருவது போல நாம் சதுரங்களை உருவாக்கி அதற்குள் நாம் பத்திரமாக இருக்கும் பொருட்டு சிலவற்றை வெளி நிறுத்துகிறோம். நாம் அச்சதுரத்திற்குள் நின்று வெளி விலக்குபவை ஒரு நொடி பொழுது நீங்காமல் நம்மேல் கனக்கின்றன. காலந்தோறும் அச்சதுரம் மீள் வரையரை செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் எவ்வளவு முயன்றாலும் நாம் ஏதோ ஒன்றை விலக்க வேண்டியுள்ளது, சிலவற்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு நாம் தேர்தெடுக்காதவற்றால் பீடிக்கப்படுகிறது நமது வாழ்வு. நாவலில், தந்தையால் கைவிடப்பட்ட சீராளனும், தன் மகளை காப்பாற்றப் பிற குழந்தைகளை கொன்ற ரயில் ஓட்டியும் அதற்கு பின் தாங்கள் தேர்தெடுக்காதவற்றால் துரத்தப் படுகிறார்கள். இந்நாவலில் வரும் விக்ரமாதித்யன் மேல் தொற்றிக்கொள்ளும் வேதாளம் அவனுக்கு தான் விலக்கப்போகிறவற்றின் கனத்தை சுட்டிக்காட்டுகிறது. அதை முதுகில் சுமந்தலையும் விக்கிரமாதித்யன் ரணப்பட்டுக்கொண்டே அதற்கு செவிசாய்க்க வேண்டியுள்ளது. சதுரங்களை மறு உருவாக்கம் செய்யவேண்டியதைப் பற்றி இந்நாவல் பேசுவதைவிட, அதற்குள் மாட்டிக்கொண்டு ரணமாகும் விக்கிரமாதித்யன் செந்தில் போன்றோர்களை பற்றியே பேசுவதாக தோன்றுகிறது. விக்கிரமாதித்யனுக்கு வேதாளத்தின் கனத்தை விட அது சொல்லும் கதைகளில் உள்ள விலக்கப்படுபவர்களின் கனமே தாங்கமுடியாததாக இருக்கிறது. நாவலில், செந்தில் தன் இளவயதில் பார்த்த சமூகம் விலக்கிய இயல்பு நிலை தவறியர்கள் முதல் தன் மூதாதை அண்ணாமலை விலக்கிய நாகம்மை வரை அவன் மேல் தொற்றிக்கொள்கின்றனர். தன் மூதாதை அண்ணாமலை புறக்கணித்த பச்சை பாவாடை அணிந்த நாகம்மை, தற்போது பச்சை பிராக் அணிந்த வர்ஷினியாக செந்திலிடம் திரும்பிவந்துள்ளாள். நாவலில், ஓரிடத்தில் செந்தில் தனது மரபையும், அது தந்த மதிப்பீடுகளையும் தீராப் பசியுடன் உண்ணும் சிதல் என வருகிறான். அப்பகுதி பின்பு தனிச் சிறுகதையாக வளர்ந்துள்ளது. நாவலுள் நாடக வடிவில் சுடலைக்கும் மெடியாவிற்குமான உரையாடல் வருகிறது. தங்களது ஆணவத்திற்காக பிள்ளைகளை பலி கொடுத்த அவர்களையும், பிறருக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சமூக அந்தஸ்துக்காக வர்ஷினியை தத்து எடுத்த இரம்யாவையும், வேறொருவரின் விந்தணு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை மனதிற்குள் வைத்து அல்லற்பட்டு வர்ஷினியை தத்து எடுத்த செந்திலையும் ஒன்றாக பார்க்க முடிகிறது. 


தேவர் அசுரராவதும், அசுரர் தேவராவதும், மூத்தோள் அமங்கலை ஆவதும், நஞ்சை விழுங்குவதும் உமிழ்வதும் தேர்வுகள் தான். தேர்வுகளை காட்டிலும் கைவிடப்பட்டவையே நம்மை கனவுகளில் வேட்டையாடுகின்றன. கைவிடப்பட்டவை நம் கண்டத்திலேயே உறைந்து விடுகின்றன, நம்மால் வெளிக்கொட்டவும் செரிக்கவும் முடியாத நஞ்சென உறைகின்றன. அந்நஞ்சை வெளிக்கொட்டவும் செரிக்கவும் முடியாது தத்தளிப்பவர்களே சதுரங்களை மீள்வரையறை செய்கிறார்கள். இறுதியாக நாவல், “விக்கிரமா! ஒரு நிமிடம், நோக்கமற்ற கிறுக்குத்தனத்தை ஊழ் என்றும் கதையென்றும், கலையென்றும் எப்படியும் அழைக்கலாம். ஆகவே எதிர்கொள்க, நிலைகொள்க, அமைதியுறுக. ” என்ற கட்டத்தை அடைகிறது.  


நாவலில் கையாளப்பட்டுள்ள புனைவுக்குள் புனைவு, பல கதைசொல்லிகள், பல கோணங்களில் ஒன்றை புனைவது, நேர்கோட்டில் நிகழ்வுகள் இல்லாதது பின் நவீனத்துவ கூறுகளாக இருந்தாலும், அவற்றுக்கு நமது காவிய, நாட்டார் மரபுகளிலும் இடம் உண்டு என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இந்த விதமான கதைக்கூறல் முறையே ஒரு புனைவுக்கும் மற்றொரு புனைவுக்கும், ஒருவரின் கோணத்திற்கும் மற்றொருவரின் கோணத்திற்கும், ஒரு கதாபாத்திரத்திற்கும் மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையில் உள்ள எல்லைக்கோடுகளை அழிக்கிறது. சிறுத்தொண்ட நாயனார் கதை பண்பாட்டு தலைகீழாக்கமாக மட்டுமே இல்லாமல் நாவலின் ஓட்டத்துடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலின் இறுதி பக்கத்தில் மொத்த நாவலுமே வர்ஷினி எழுதியது என்று சொல்லப்படுகிறது. நாவலுக்கிடையில் வர்ஷினியின் பார்வையில் வரும் சோட்டா பீம், நீமோ, நீல யானை பொம்மை போன்ற அத்தியாயங்களை இது நியாயப்படுத்துகிறது(அது நியாயப்படுத்தப்பட வேண்டுமா என்பதும் கேள்வியே), ஆனால் இது நாவலை மேலும் விஸ்தரிக்கிறதா வேறு தளம் நோக்கி நகர்த்துகிறதா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாவலில் வரும் ஹரி, நந்தகோபால் கதாபாத்திரங்கள் அவை நாவலுள் வந்துவிட்டன என்ற காரணத்தினாலேயே அவற்றுக்கு ஒரு கதை அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் யோசிக்கவேண்டும். ‘ஒரு புனைவில் எழுப்பப்படும் எல்லா எதிர்பார்ப்புகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த படைப்பில் திருப்தி செய்யப்பட வேண்டும்’ என்பதற்காக அவற்றின் கதைகள் எழுதப்பட்டுள்ளனவா என்பதும் கேள்விக்குரியதே. 


இரண்டு வாசிப்புகளுக்கு பிறகு மிகவும் அணுக்கமாக உணர்ந்த நாவல் நீலகண்டம். “The last temptation of Christ’ நாவலில், ஜூடாஸ் இயேசுவை கொல்ல கத்தியுடன் நிற்க இயேசு அவரது கழுத்தை அவன் முன் காட்டுவார். ஜூடாஸ் அவரைக் கண்டு அருவருத்து, “இப்படிப்பட்ட ஒருவரை எப்படி ஒரு மனிதன் துன்புறுத்துவான்? ” என்பான். அதற்கு இயேசு, “ஆம், மனிதனால் முடிவதில்லை. ஆனால் கடவுளால் முடிகிறது.” என்பார். உலகில் இத்தனை வல்லமை வாய்ந்த மலைகளும், கடல்களும், காடுகளும், உயிரினங்களும் இருக்கையில் மனிதன் மட்டுமே வேதாளத்தை சுமக்க விதிக்கப்பட்டவன்.


யாவரும் பதிப்பக வெளியீடு


– சியாம்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.