Monday, May 6, 2024

ஆயுர்வேதம் உள்ளவரை அவரும் இருப்பார்- டாக்டர். இல. மகாதேவனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு



மே காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை.  நான் இட்டிருந்த தலைப்பு 'மகாதேவன் எனும் எரிநட்சத்திரம்'. 




 "ஆயுர்வேத மருந்துகளுக்கும் பின்விளைவு உண்டு, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும், கல்லீரல் பாதிப்பு நேர வாய்ப்பு உண்டு என ஏழு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவன் எனும் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். ஆயுர்வேதம் புனிதமானது, பின்விளைவற்றது, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள். எல்லாமே இறைத்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொழுது நவீன மருத்துவத்தில் இறைத் தன்மை இல்லையா? போலியோ குணமாக்கப்பட்டதே? சின்னம்மை குணமாக்கப்பட்டதே? அப்பொழுது ரிஷிகளும் சித்தர்களும் எங்கு இருந்தார்கள்? என்ன செய்தது ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும்? ஆதலால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், மனிதனை மதித்தல், நோயாளி குணமாக வேண்டும் என்பதற்கு முன்னுரிமைக் கொடுத்தல், நான் என்ற அகங்காரத்தைத் தள்ளி வைத்தல், இறப்பின் உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்தல்- இவையே இந்த சிக்கலை கடக்க நம்முன் உள்ள தீர்மானமான வழியாகும். மனிதன் மாற வேண்டும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தை நாம் மாற்ற இயலாது. ஆனால் நாம் மாறலாம், நம் பார்வையை மாற்றிக் கொள்ளலாம். நெளிவுசுளிவுடன் நடக்க பழகலாம்." - டாக்டர். இல. மகாதேவன், 'முதற்கால்' நூலிலிருந்து 


பாரதியை பற்றி எண்ணும்போதெல்லாம் அவனொரு எரி நட்சத்திரம் என தோன்றும். கூடவே பாரதியை எளிதாக ‘அவன்’ என உரிமைகொண்டாட முடிவதற்கு என்ன காரணம் எனும் கேள்வியும் எழும். புதுமைப்பித்தனையும் இப்படி அழைக்க முடியும். ஆனால் மௌனியையோ சுந்தரராமசாமியையோ நகுலனையோ அப்படி  ஏக வசனத்தில் அழைக்க முடிவதில்லை. முதன்மை காரணம் பாரதியும் புதுமைப்பித்தனும் இளமையான உருவத்துடனே நம் மனதில் பதிந்துவிட்டார்கள். சுராவையோ நகுலனையோ மௌனியையோ எண்ணுமாபோது அவர்களுடைய முதிர்ந்த தோற்றமே மனதில் உதிக்கும். எரிநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தின் அரிய நிகழ்வு. சில நொடிகளே தென்படும். ஆனால் கண்டவருக்கு அது வாழ்நாள் அனுபவம். தனது முழு ஆற்றலையும் எரிபொருளாக்கி எரிந்து அழியும். இதற்கு நேரெதிரானது அகல்விளக்கு. நின்று நிதானமாக எரியும். நெருங்கி வருபவற்றுக்கு ஒளிவழங்கும். மானுட அறிவு செயல்பாடு இவ்விரு சரடுகளால் ஆனது. இரண்டுக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ளது. எரிநட்சத்திரம் கனவுகளின், இலட்சியங்களின் பிரதிநிதி. அகல்விளக்கு தற்கணத்திகற்கானது. பயன்மதிப்பு கொண்டது. அகல்விளக்கின் தன்மையும் பொருந்தும் என்றாலும் எனது ஆசிரியர் ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனை எரிநட்சத்திரம் என்றே வகைப்படுத்துவேன். ஆயுர்வேதத்திற்காக தனது ஊனையும் உயிரையும் அளித்தவர்.  கலைஞர்களுக்குரிய தத்தளிப்பும் கொந்தளிப்பும் கொண்ட ஆளுமை அவர்.  இலக்கியவாதியாக இருந்திருந்தால் பித்தும் படைப்பூக்கமும் கொண்ட பாரதி புதுமைப்பித்தன் பிரமிள் வரிசையில் இயல்பாக பொருந்தி போயிருப்பார் என தோன்றியதுண்டு. அறிஞர்களுக்குரிய அறிவு பரப்பும் கலைஞர்களுக்குரிய படைப்பூக்கமும் ஒருசேர அமைந்த அரிய ெஆளுமை. 



டாக்டர் இல. மகாதேவன், லக்ஷ்மண சர்மாவிற்கும் சந்த்ராவிற்கும் ஜனவரி 19, 1969 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவி சாரதா. ஒரே மகள் சந்த்ரா இப்போது இளநிலை ஆயுர்வேதம் பயின்று வருகிறார். இவருடைய தாத்தா ஒய். மகாதேவ ஐயர் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற மருத்துவர். நாகர்கோவில் அருகேயுள்ள தெரிசனம்கோப்பு எனும் ஊரில் உள்ள டாக்டர். ஒய். மகாதேவ ஐயரின் ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் முதன்மை மருத்துவராக இருந்தார். சென்னை வெங்கட்ரமணா கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத பட்டப்படிப்பை 1992 ஆம் ஆண்டு முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரியில் காய சிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார். கேரளாவில் உள்ள பங்கஜ கஸ்தூரி கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.  தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறந்த அறிவியல் எழுத்துக்கான தேசிய விருதை ஆயுஷ் துறை மத்திய அமைச்சர் ஸ்ரீ பாத் யஷோ நாயக்கிடமிருந்து பெற்றுள்ளார். தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார். அவருடைய ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ தமிழக அரசின் சிறந்த புத்தக பரிசை வென்றுள்ளது. காலச்சுவடு வெளியீடாக வந்த 'உணவே மருந்து' நூலுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்தாண்டு ஆயுர்வேத மருத்துவர்களுக்கான உச்ச விருதான ‘தன்வந்தரி’ விருது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. சாரதா ஆயுர்வேத மருத்துவமனை இளம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான பயிற்சி களமாகவும் திகழ்கிறது.  ஆயிரக்கணக்கான ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ மாணவர்களும் இளம் மருத்துவர்களும் மகாதேவனிடம் பயின்றுள்ளனர். தமிழகம் கேரளம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட அவரிடம் பயின்றுள்ளனர். ஆறுமாதம் வரை தெரிசனங்கோப்பில் இலவசமாக தங்கி பயிலலாம். அதற்கு பிறகு தொடர விரும்புபவர்களுக்கு மாதச்சம்பளம் உண்டு. இணையத்திலும் பல்வேறு தேசிய சர்வதேசிய கருத்தரங்குகளிலும் பங்கேற்று செறிவான உரைகள் ஆற்றியுள்ளார். சர்வதேச அளவில் ஆயுர்வேதத்தின் முகங்களில் ஒருவர் என சொல்லலாம். ஏப்ரல் எட்டாம் தேதி இரவு இருதய நோய் காரணமாக மரணமடைந்தார். ஃபிப்ரவரி மாத இறுதியில் அடுத்தடுத்து அவரது தந்தையையும் தாயையும் இழந்திருந்தார். மகாதேவனின் மரணம் அவரை அறிந்த அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது. தனிப்பட்ட முறையில் என்னால் அவரது மரணத்தை செரித்துக்கொள்ள இயலவில்லை. அந்த வாரத்தில் அவரை சந்திப்பதாக இருந்தேன். சரக சம்ஹிதையின் மெய்யியல் பகுதி சார்ந்த நூல் ஒன்றும் சித்த மருத்துவர் கு. சிவராமனுக்கும் மகாதேவனுக்குமிடையிலான உரையாடல் நூலொன்றும் என அவருடன் சேர்ந்து இரு நூல்களை எழுதும் திட்டமிருந்தது. அவரது தாத்தா ஒய். மகாதேவ ஐயரின் மரணத்தை பற்றி சொல்லும்போது "உடலைப் பொருட்படுத்தாமல், வெறி பிடித்த மாதிரி உழைத்ததினால் வந்த நிலை என்று சொல்லலாம்" என குறிப்பிடுகிறார். மேற்சொன்ன காரணம் மகாதேவனின் மரணத்திற்கும் பொருந்தும். அவரை நேர்காணல் செய்வதற்காக நாகர்கோயிலில் இறங்கி 5 மணிக்கு தெரிசனம்கோப்பு சென்று சேர்ந்த போது வாசல் பகுதியில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் எட்டு மணி வரை வாசிப்பது அவரது வழக்கம். தனது வாசிப்பு முறையைப் பற்றி கூறும்போது “இப்போது ஒரு புது நோயாளி வருகிறார், புது பரிசோதனை முறை வருகிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்கிறேன். எல்லா பெரிய கருத்தரங்குகளிலும் உரையாற்ற அழைக்கிறார்கள், அதை புதியமுறையில் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தொடர் வாசிப்பு தேவை. ஆயுர்வேத பட்ட மேற்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியுள்ளதால் அதற்காகவும் வாசிக்கிறேன். இதற்கு பிறகு இந்த நோய்க்கு சித்தமருத்துவத்தில் என்ன மருந்து?  பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்படாத சில நாட்டு மருத்துவ முறைகள்  உள்ளன. அதில் என்ன சிகிச்சை கூறப்பட்டுள்ளது? இப்படி நான் பலவற்றுடன் ஒப்பிட்டுப் படிக்கும் போது தான் அறிதல் முழுமையடைகிறது. இதில் பட்ட மேற்படிப்புக்கு மட்டும் தான் பாடம் வருகிறது. 70 % நடைமுறைக்கு பயனளிக்க கூடியதைத் தான் படிக்கிறோம். இது மருத்துவம் சார்ந்த படிப்பு. இப்போது 50 % சித்த மருத்துவம் தான் வாசிக்கிறேன். 15 % நாட்டு மருந்து சார்ந்த புத்தகங்கள், குமரி மாவட்ட மருத்துவப் புத்தகங்கள், 10% ஆயுர்வேதம், 20% ஆங்கில மருத்துவப் புத்தகங்கள், தொடக்கக் காலங்களில் நிறைய ஆயுர்வேதப் புத்தகங்கள் படித்ததினால் அதை குறைத்து கொண்டேன்.” என கூறுகிறார்.‌   ஆயுர்வேதம், சித்த மருத்துவம், குமரி மாவட்ட நாட்டு மருத்துவ முறைகள், நவீன மருத்துவம், இலக்கியம் என பலதரப்பட்ட வாசிப்பு அவருக்கு உண்டு. கருத்தரங்குகள், வகுப்புகள் என தொடர் பயணங்கள். மருத்துவ ஆலோசனைக்கு அமர்ந்தாரெனில் எப்படியும் நாளைக்கு நூறு புற நோயாளிகளை காண்பார். உள்நோயாளிகளை நாளுக்கொருமுறையோ இருமுறையோ பார்ப்பார். இத்தனைக்குமிடையே சுமார் 16000 பக்கங்கள் ஆயுர்வேதம் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.  


நான் மகாதேவனின் முதன்மை மாணவர்கள் போன்று அவருடன் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ உடனிருந்து பயின்றவனில்லை. ஆனால் எப்போதும் அவரையே எனது ஆயுர்வேத ஆசிரியராக கருதிவந்துள்ளேன். அவ்வளவாக பரிச்சயமில்லாத ஏதேனும் ஒரு புதிய நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் மகாதேவனின் நூல்களே முதன்மை புகலிடம். சமாளிக்க சிரமப்பட்டால் அவரிடம் அனுப்பி வைப்பேன். என் முடியும் முடியாது முயன்று பார்க்கலாம் என தெளிவாக சொல்லிவிடக்கூடிய மருத்துவர் அவர். தனது எல்லைகளை அறிந்தவரே அறிஞராக இருக்க முடியும். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள் அவரை தங்களது ஆசிரியராக கருதுதிறார்கள். எனது தனிப்பட்ட துயரத்திற்கு பெரிய பொருளேதும் இல்லை. மகாதேவனின்  எத்தகைய ஆளுமை, அவரது பங்களிப்பு என்ன? ஆகிய கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியே இந்த கட்டுரை. 

ஆயுர்வேத உலகில் அவர் அறிமுகமான புதிதில் ஒரு கலகக்காரராகவே அறிமுகமானார். சமஸ்கிருத பாடமுறையை அடிப்படையாக கொண்டது ஆயுர்வேதம். மகாதேவன் நடைமுறை பயன்பாடை கருத்தில் கொள்ளாத பண்டித மரபை கடுமையாக விமர்சித்தார். “ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருத நாட்டம் அவசியமானதுதான். ஆனால் சமஸ்கிருதத்திற்குள் ஆழ்ந்து மூழ்கி தம்மை இழந்துவிட்டால் சிகிச்சையில் நாட்டம் குறைந்து பின்தங்கி விடுவார்கள். அவர்களுக்கு புத்தக அறிவு அளிக்கும் ருசியே போதையாகிவிடும். மருந்து செய்பவர்களின் வலி, மருந்து கிடைக்காததன் வலி, நோய் குணமாகவில்லை என்பதால் வரும் ஏக்கம் என இவை எதையும் அவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் அவர்களின் பாண்டித்தியத்திற்கு கல்லூரியில் நல்ல வேலை கிடைத்து விடுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவார்கள். சமஸ்கிருத அறிவு ஆயுர்வேதத்திற்கு நடைமுறை பயன்பொருட்டே முக்கியமானது என்பதை மறந்துவிடுவார்கள். பதார்த்த விஞ்ஞானம் போன்ற அடிப்படை பாடங்களை நூலறிவை கொண்டு எளிதாக நடத்தியே காலம்கடத்திவிடுவார்கள். மருத்துவத்தை தொழிலாக கொண்ட நாம் அப்படி இருக்க முடியாதே.  இரவு இரண்டு மணிக்கு, நன்கு உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,  எழுப்பி, இரத்தம் கசிகிறது, என்ன செய்வது என கேட்பார்கள்.” மிக தெளிவாக ஆயுர்வேத கோட்பாட்டுவாதிகளுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் இடையேயான வேறுபாடை முன்வைக்கிறார். இவ்வகையான விமர்சனங்கள் தொடக்க காலத்தில் ஆயுர்வேத தூய்மைவாத தரப்பினால் அவர் தீவிரமாக எதிர்க்கப்பட காரணமானது. மேடையுரைகளில் அவர்களை கிண்டல் செய்தார். தீவிரமாக விமர்சித்தார். நேர்காணலிலிருந்து ஒரு உதாரணத்தை சுட்டுவதாக இருந்தால், இந்த பதிலை எடுத்துக்கொள்ளலாம் “சில வேதப் பாரம்பரிய பிராமணர்கள் வினோதமான சில கருத்துக்களை சொல்வார்கள். எனக்கு அவற்றில் நம்பிக்கை கிடையாது. அமெரிக்கா போய் கர்மா செய்தால், அந்த கர்மாவிற்கு பலன் கிடையாது. பஞ்சகச்சம் கட்டவில்லையென்றால் அந்த ஆற்றல் பூமிக்குப் போய்விடும். இப்படி பல கதைகள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் போய்க் கடுக்காய் கொடுத்தால் எந்த நாட்டு நோயாளிக்கும்  பேதி போகும். நேர்வாளம் கொடுத்தால் பேதி போகத் தான் செய்யும். மதனபலம் (மலங்காரைக்காய்) கொடுத்தால் வாந்தி வரத் தான் செய்யும்.” மகாதேவன் என பெயர் குறிப்பிடாமல் எங்கள் வகுப்புக்களில் அவருக்கான மறுப்புகள் சில வேளைகளில் கிசுகிசுப்பாகவும் சில வேளைகளில் வெளிப்படையான எரிச்சலுடனும் சொல்லப்பட்டன. சாத்திரத்தின் மீதான நம்பிக்கையின்மையே அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்றார்கள். நவீன மருத்துவ நோக்கை ஆயுர்வேதத்திற்குள் பொருத்தி பார்ப்பது பெரும் பிழை, தேவையில்லாத குழப்பத்தையே விளைவிக்கும் என்றார்கள். மாணவர்கள் அவரை நெருங்கினால் வழிமாறி சென்றுவிடுவார்கள் என அஞ்சினார்கள். ஆனால் இவை எங்களுக்குள் மகாதேவன் மீதான ஈர்ப்பை பெருக்கியதே அன்றி குறைக்கவில்லை. நவீன‌‌ மருத்துவம் குறித்து அவர் கொண்டுள்ள பார்வை பிற ஆயுர்வேத பட்டதாரிகளிடமிருந்து வேறானது.‌  “ஆயுர்வேதத்தை முழுமையாக, நன்றாகப் படித்த, குண சித்தாந்தங்களை புரிந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்ட பிறகு தான் நான் நவீன மருத்துவத்தை ஊன்றி அறியத்தொடங்கினேன். நான் நேரடியாக நவீன மருத்துவத்தை கற்க தொடங்கி இருந்தால் குழம்பிப் போய் இருப்பேன். சமூகத்திற்குப் பெரிய தீங்கு விளைவிப்பவனாக மாறி இருப்பேன். இப்பொழுது ஸ்டேட்டின் (Statin) சாப்பிட்டால்  கல்லீரலில் சுரக்கும் நொதிகள் கூடி கெண்டைக்கால் வலி ஏற்படுகிறது. கால்சியம் சேனல் தடுப்பான்களை (calcium channel blockers) சாப்பிட்டால் கால் வீக்கம் வருகிறது. அம்லோடிஃபினோ (amlodipine), நிஃபிடிஃபினோ (Nifedipine) (உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்)  சாப்பிட்டு காலில் வீக்கத்துடன் ஒருவர் வருகிறார் என்றால் ஆயுர்வேத மருத்துவருக்கு இது பற்றி தெரிவதில்லை. சோபம் (வீக்கத்தை முதன்மை குறியாக கொண்ட நோய்)  என்று நினைத்து புனர்னவாதி கஷாயத்தில் சந்திரபிரபா சேர்த்து கொடுத்து, இரவு இரண்டு ஸ்பூன் தசமூல ஹரிதகி சாப்பிடுங்கள் என்கிறார். அவர் எழுதியது சரி; தவறல்ல; ஆனால் நோய் காரணம் ஆங்கில மருந்தில் வருவது என்று அவருக்குத் தெரியவில்லை. மருந்தை மாற்றி விட்டு வேறு ஒரு நவீன மருந்தை பரிசீலனை செய்து இருந்தால் நோயாளி குணமாகி இருப்பார். இந்த மாதிரி தவறுகள் நவீன மருத்துவமும்  படித்தவர்களுக்கு வராது” என்கிறார். ஆயுர்வேதத்தை தர்க்கப்பூர்வமான மருத்துவமுறையாக மட்டும் காணும் குறைத்தல்வாத நோக்கையும் அவர் ஏற்கவில்லை என்பதே அவரை மேலும் முக்கியமானவராக ஆக்குகிறது. “ஆயுர்வேதம் என்பது நம்முடைய மெய்யறிவு சார்ந்த ஒரு சாத்திரம். அபர வித்யையில் இருந்து பர வித்யைக்கு (பர வித்யை என்பது பிரம்மத்தை அறிவதற்கான கல்வி. அபர வித்யை என்பது உலகியல் தளத்தில் உள்ள பிற அறிவுத்துறைகள்) கொண்டு போகக் கூடிய சாத்திரம் அதாவது உலக அறிவில் இருந்து மெய்யறிவுக்கு தயாராக்கும் வகையில்  நம்  ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சீராக்குகிறது” என தெளிவாக ஆயுர்வேதத்தை வீடுபேறுக்கான மார்க்கத்தின் ஒரு பகுதியாக சுட்டுகிறார்.  முழுமையான ஆயுர்வேத வைத்தியனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு “சிவ வாக்கியர்,  தாயுமானவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் குயில்பாட்டு, வசன கவிதைகள், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றை ஏற்கனவே ஆழ்ந்நு படித்துள்ளேன். முன்பு வாசித்ததை தான் இப்பொழுது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புராணங்களைம், ஸ்மிருதிகளைம் வாசிப்பதை  நிறுத்தி விட்டேன். ஆனால் இப்போதும் பட்டினத்து பிள்ளையார் திரட்டு, மெய்ஞான திரட்டு போன்றவை எல்லாம் வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு சரகம், சுஸுருதம், வாக்பட்டமும் மட்டும் தான் ஆயுர்வேதம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. முழுமையை எய்த முடியாது” என கூறுகிறார்.  

தர்க்கப்பூர்வ மருத்துவமுறை - வீடுபேறு அடைவதற்கான சாதனை மார்க்கத்தின் ஒரு பகுதி, ஆகிய இவ்விரு துருவங்களுக்கு இடைப்பட்ட பாதையை தேர்கிறார். 



கவிஞர் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த அஞ்சலி குறிப்பில் மகாதேவனை இராமானுஜருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அந்த ஒப்பீடு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதப்பட்டதாக தொனிக்கலாம். ஆனால் அதில் நியாயமில்லாமல் இல்லை. சர்வநிச்சயமாக மகாதேவனை ஆயுர்வேதத்தின் வீச்சை அதிகரித்து எல்லைகளை விஸ்தரித்த சீர்திருத்தவாதியாக காண இடமுண்டு. குருகுல கல்வியில் நவீன ஜனநாயக தன்மை இருக்காது. சாதி, மதம் பாலினம் என பல்வேறு தடைகள் உண்டு. இன்று ஆயுர்வேத கல்லூரிகளில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் பயில்கிறார்கள். குருகுல கல்வியில் இது சாத்தியமாயிருக்காது. ஆனால் ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவு துறைகள் நவீன கல்விமுறையால் முழுமையாக கடத்தமுடியாது. இந்த இடைவெளியை மகாதேவன் நிரப்பினார். தெரிசனங்கோப்பு சாரதா மருத்துவமனை குருகுலத்தன்மையுடையது தான் ஆனால் அங்கு சாதி, மத, இன, தேசிய, பாலின பாகுபாடு என எதுவும் கிடையாது. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே ஒரே வரையறை. குருகுலங்களின் மரபு மருத்துவமுறைகளில் உள்ள இன்னோரு முக்கியமான சிக்கல் அதில் பேணப்படும் இரகசியம். ஒருவித மூடுண்டத்தன்மை உண்டு. மருந்துகளுக்கு குழுவுக்குறி பெயர்கள், செய்முறைகளுக்கு தெளிவில்லாத விளக்கங்கள் என பல தடைகள். மகாதேவனிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அனுபவம் வழி அவரடைந்த அத்தனை புரிதல்களையும் நேரிலும் புத்தகங்களிலும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அவரது கருத்தரங்கு உரைகளும் வகுப்புகளும் மிகுந்த தனித்தன்மையுடையது “காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தால் எப்படி சொக்கிப் போய்விடுவார்களோ, அப்படி  மதியம் 2.30 மணிக்கு வகுப்பு என்றால் கூட அப்படியே நன்கு விழித்துக்கொண்டு மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வெறும் பேச்சல்ல, அவர்களுக்குப் புரியும் போது தான் அதனுடைய ஆழமும், நுட்பமும் தெரியும். ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று திருமூலர் சொன்னது போல படித்ததைப் பகிரும் போது அனுபவம் மேலும் பெருகத் தானே செய்யும்” என குறிப்பிடுகிறார். அவரது வகுப்புக்களில் இந்த லயிப்பை உளமார உணர்ந்திருக்கிறேன். 


“இளம் மருத்துவர்களுக்கு நான் கூறும் மிக முக்கியமான ஆலோசனை ஒன்றுண்டு. ஆர்வம் மேலிட சாஸ்திரத்தை நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது” என கூறுகிறார். அப்படி நிறுவ முற்படுவது ஒருவகையில் அபத்தம். பண்டித மரபு நூல்களில் உள்ளவற்றை மாறா சொல் என கருதுகிறது. நிரூபனத்துக்கு அப்பாலானது என்று முன்வைக்கிறது. ஒருவர் ஏன் மருத்துவம் புரிய வேண்டும்? சாஸ்திரத்தை உண்மை என்று நிறுவுவதற்கா இல்லை நோயாளியின் நோயை தீர்ப்பதற்கா? நவீன மருத்துவத்தில் இந்த கேள்வியே எழாது. ஏனெனில் அவை சான்றை உருவாக்கிய பின்னரே நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் மரபு மருத்துவமுறைகள் களப் பயன்பாட்டிலிருந்து சான்றுகளை தொகுத்து கொள்பவை. ஆகவே மீண்டும் மீண்டும் இந்த முரண்பாடு எழும். மகாதேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான தொடக்கக்கால பாடமென்பது “நான் ஆயுர்வேதத்தை காப்பதற்காக ஆயுர்வேதத்தை பின்பற்றவில்லை. நோயாளியை காப்பதற்காகவே ஆயுர்வேதத்தை பின்பற்றுகிறேன்.” நோயாளி மைய நோக்கை மகாதேவன் எப்படி அடைந்தார் என்பதை அவரே நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். “இது நடந்ததும் வைத்யநாதன் சாருடன் இருந்தபோது தான். ஒரு  22 வயது இளைஞன், கடும் அசதி, உடல் எடை சரசரவென குறைகிறது என  சொல்லிக்கொண்டு வந்தான். வைத்யநாதன் சார், அவனுடைய நோயை க்ஷயம் (தேகம் வற்றி போதல்) என்று கண்டறிந்து, அக்னி தீபனம் (பசியைத் தூண்டுதல்), ஸ்ரோதோ சோதனம் (நாள சுத்தி), ப்ரும்ஹணம் (உடலை தேற்றுதல்), லேசான விரேசனம் (பேதிக்கு) என சிகிச்சை அளித்தார்  சியவன பிராசம், கூஷ்மாண்டம் (வெண்பூசனி)  என ரசாயனமாக (ஆயுராவேதத்தில் ரசாயனம் என்பது ஆங்கிலத்தில் கெமிக்கல் எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. காயகல்பம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஆயுர்வேத ரீதியாக அப்பழுக்கற்ற சிகிச்சை அது. ஒவ்வொன்றையும் சரியாக செய்தார். ஆனால் ஒருநாள் மயங்கி விழுந்தான். நவீன மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சர்க்கரையின் அளவு 680 சர்க்கரை நோயின் முற்றிய நிலை (diabetic ketoacidosis- இன்சுலின் இல்லாத நிலையில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கீட்டோன்களை உடல் அதிகம் உற்பத்தி செய்து ரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கும் ஆபத்தான நிலை) இருந்தது இவர் கொடுத்த லேகியம் அனைத்தும் வீணாகப் போயிற்று. எவ்வளவு பெரிய மனிதர்? அவர் சிகிச்சையிலேயே தவறு நிகழ்ந்து விட்டதே. அது அவர் தவறில்லை அவருக்கு இது கற்றுக் கொடுக்கப்பட வில்லை.ஆகவே அவர் கணக்கில் கொள்ளவில்லை தவறிபோனது.  இப்படிப்பட்ட சூழல்களில் நவீன மருத்துவம் கற்றால் தான் இந்த தவறுகள் குறையும். நான் அப்போதே டேவிட்சன் பாட புத்தகத்தை  வாங்கிவிட்டேன்.” வைத்தியநாதன் அவரது ஆசிரியர். தனது குரு என செல்லுமிடத்திலெல்லாம் அவரை முன்னிறுத்துவார். குருவின் முறைமைகளின் எல்லையை கண்ணுற்று அங்கிருந்து தனக்கான தனிப்பாதையை வகுத்துக்கொள்வதற்கு அபார மனத்திண்மை வேண்டும். அப்படியான தனிப்பாதை பயணத்தை ஆசிரியரின் மீதான அவமரியாதையாகவோ வெற்றியாகவோ கருதிக்கொள்பவரும் இல்லை.   



நேர்காணலில் நோயாளி மையப் பார்வை முழுமையாக துலங்கி வரும் பகுதி என இதைச் சொல்வேன். “சரக சம்ஹிதை சூத்ர ஸ்தானம் ‘மகாசதுஸ்பாதம்’ அத்தியாயத்திலேயே இந்த கேள்வி வருகிறது. இதில் மைத்ரேயர் என்பவர் ஆத்ரேயரைப் பார்த்து “பதினாறு குணங்களும் நிரம்பிய பிஷக்,(மருத்துவன்) திரவ்யம், (மருந்து) உபஸ்தா,(செவிலி) ரோகி (நோயாளி) இருந்தும், ஒழுங்காக கற்று சரியாக மருந்து கொடுக்கிறேன் ஆனால் பலனில்லை. ஒரு போலி அளிக்கும் மருந்து பலனளித்து எழுந்து நடந்துவிட்டானே? முறைப்படி நான் கற்றதற்கும் சிகிச்சை செய்ததற்கும் என்ன மதிப்பு?"   என்று கேட்கிறார். இது 20-வது அத்தியாயத்தில் வருகிறது, “மித்யாஹாதி மைத்ரேய” (குழம்பிய புரிதல் கொண்ட மைத்ரேயா) என்று பதில் சொல்லத் தொடங்குகிறார் ஆத்ரேயர். மிக பிரமாதமான பதில் அது. “ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான். அவனைத் தாண்டி செல்கிறாய். கையை கொடுக்கிறாய். அவன் எழுந்திருக்க வேண்டும் என்று தலைவிதி இருந்தால் எழுந்திருப்பான். இல்லையென்றால் அப்படியே கிடப்பான். நீ கை கொடுக்க வேண்டியது உன் கடமை. கை கொடுக்காமல் சென்றால்  அது உன் தவறு. கை கொடுப்பதுதான் சுதர்மம். 'யாவத் கண்டகதா ப்ராணா தாவத்காரியம் சிகிட்சிதம்.' பிராணன் கண்டத்தில் சென்று கொண்டிருக்கும் வரையில் சிகிச்சையை செய்ய வேண்டும் என்கிறார். வேறெந்த   மருத்துவத்தில் இப்படி சொல்லப்பட்டு  இருக்கிறது? சரகரைத் தவிர வேறு யார் இதைப் பற்றி பேசுகிறார்கள்? நீ முயற்சி செய்துக் கொண்டே இரு. இறக்கும் வரை மருந்து கொடுத்துக் கொண்டே இரு. நோய் குணமாகுகிறதோ, இல்லை குணமாகவில்லையோ அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ மருந்தை கொடு. அது தானே உன்னுடைய சுதர்மம். ஒரு மருந்தை கொடு அது கேட்கவில்லையா? அடுத்ததைக் கொடு, அதுவும் கேட்கவில்லையா? அதற்கு அடுத்ததைக் கொடு. இந்த வழிகாட்டலை முழுமையாக  கடைப்பிடிக்கிறேனா, என்று சொல்ல முடியாது. 70% வரை கடைப்பிடிக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் முழுவதுமாக கடைபிடிப்பது சவாலானது. ஆனால் அடைய வேண்டிய நிலை அவர்கள் கோடிட்டு காட்டும் அந்த லட்சியம் தான். ஒரு நாள் அந்த லட்சியத்தை உறுதியாக அடைவோம். புற தேவைகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு அந்த லட்சியத்தை மட்டுமே இலக்காக கொள்ளும்போது நிச்சயம் சாத்தியமாகும்.” மகாதேவனிடம் கற்றவர்கள் இணையவழியில் அவருக்கு நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். கேரளத்தில் ஆயுர்வேந பேராசிரியராக உள்ள ஒருவர் அவரது கல்லூரி பருவத்து நினைவை பகிர்ந்துகொண்டார். மகாதேவன் அன்று மருத்துவமனைக்கு வரவில்லை. உள்ளூர் வாசியான ஒரு குடும்பம் அவரை பார்த்தே ஆக வேண்டும் என காய்ச்சலில் துவண்டு கிடக்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இல்லத்திற்கு வரச்சொல்கிறார். மலம் வெளியேறவில்லை காய்ச்சல் அடிக்கிறது. நாடி நோக்கிவிட்டு உடனடியாக வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவரை காண பரிந்துரைக்கிறார். அருகிலிருந்த பேராசிரியருக்கு குழப்பம். வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுத்து பார்க்கும் சுதர்சன மாத்திரை அம்ருதாரிஷ்டம் என கொடுத்து பார்த்திருக்கலாமே என கேட்கிறார். அநேகமாக குடலில் பொத்தல் (Intestinal perforation) விழுந்துள்ளது. உடனடியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என பதில் சொல்கிறார். அவரது அனுமானம் சரி. நெடுநாளாக குடலில் டி.பி பாதிப்பு இருந்து குடல் பொத்தல் ஏற்பட்டுள்ளது. இரவு புற நோயாளிகளை பார்த்துவிட்டு நவீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த குழந்தையை பார்த்து அவர்களது பெற்றோருக்கு நிலையை விளக்கிச்சொல்கிறார். மகாதேவன் எனும் மிகச்சிறந்த மனிதர் வெளிப்பட்ட தருணங்களில் ஒன்று. நோய் கண்டறிதலில் அல்லது சிகிச்சையில் ஏதும் பிழை ஏற்பட்டால் அவரால் அன்று உறங்க முடியாது. தனிப்பட்ட துயராக, தோல்வியாக வரிந்துகொள்வார். பல சமயங்களில் இதுவே மன அழுத்தத்தின் எல்லைவரை அவரை கொண்டு செல்லும். உள்ளுணர்வு என்பது மனச்சாய்வாக இல்லாமலிருக்க பெரும் அறிதலும் பயிற்சியும் வேண்டும். நோய் கண்டறிதலில், அதிலும் குறிப்பாக அரிய நோய்களை கண்டறிவதில் மகாதேவனுக்கு இணையான இன்னோரு ஆயுர்வேத மருத்துவரை நான் கண்டதில்லை. 

சில உள்ளூர் நண்பர்கள் மகாதேவனை விட சாரதா வைத்தியசாலையில் உள்ள மற்றொரு முத்த மருத்துவரான சிதம்பரம் அவர்களை காண்பதையே விரும்புவதாக என்னிடம் சொன்னதுண்டு.‌ தொடக்கத்தில் எனக்கிது ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களது பார்வையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மகாதேவன் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து கைவிடப்பட்ட அரிய நோயாளிகளையே பார்த்து அவற்றில் நிபுனத்துவம் பெற்றுவிட்டதால் அவரால் எளிய சளி இருமலைக்கூட அதன் உச்ச சாத்தியத்திலிருந்தே சிந்திக்க முடியும். 


நோயாளி மைய நோக்கைப் போன்றே ஆயுர்வேதம் பயிலவரும் சாமானிய  மாணவர்கள் குறித்து அதிகம் சிந்தித்ததும் அவரே. குறிப்பாக தமிழக மாணவர்கள் குறித்து நிறைய கவலைப்பட்டார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் வருகைக்கு முன் பின் என தமிழக ஆயுர்வேத கல்வியை இரண்டாக பிரிக்கலாம். தமிழ்வழியில் பயின்றவர்கள் அரசு கல்லூரியின் வருகைக்கு பிறகு அதிகம் ஆயுர்வேதம் பயின்றனர். “நான் படித்த  காலத்தில் இரண்டு பேர் தமிழ் மாணவர்கள். மற்றவர்கள்  எல்லோரும் மலையாள மாணவர்கள்.  தமிழ் மாணவர்கள் எப்போதும் வருடா வருடம் தேர்வில் தோற்றுப் போய்விடுவார்கள். காரணம் சமஸ்கிருத அறிவு குறைவு என்பதே. அவர்களுக்கு நான் பாடம் எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் நான் தான் குறிப்புகள் எழுதி சொல்லிக் கொடுத்தேன்; அவர்களை தேர்ச்சியடைய வைத்தேன்.  தமிழ் மொழியில் தான் நான் படித்தேன், எனக்கு வடமொழி ஆற்றல் குறைவு என முன்னரே சொன்ல்லியிருந்தேன். தமிழில் படித்து தான் நான் தேர்ச்சியடைந்தேன். தமிழ் மேல் எனக்கு தீராத பற்று உண்டு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆரோக்ய ரக்ஷா கல்பத்ருமம், ஸஹஸ்ரயோகம் போன்ற புத்தகங்கள் பரிச்சயம் இல்லை. மலையாளம் தெரியாதவர்கள் படிக்கட்டுமே என்று எழுதினேன். பழைய கையெழுத்து பிரதிகளை வெளியில் கொண்டு வந்தேன். எனது தமிழ் படைப்புகளில் முக்கியமானது திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம். ஆயுர்வேதத்தின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது. தமிழில் புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை என்றாலும் ஆங்கில புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்க தயங்குகிறார்கள். அதுவும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்க நினைக்கிறார்கள். மூன்றுக்கு ஒன்று இலவசமாக வேறு  கேட்கிறார்கள். இதுதான் நிலை.” ஆயுர்வேத அடிப்படைகள் குறித்து தமிழில் அவர் எழுதிய நூல்கள் அத்தனையும் முக்கியமானவை. ஆயுர்வேத நூல்களில் முப்பெரு நூல்கள் என சரகர், சுசுருதர், வாக்பட்டர் இயற்றிய நூல்களை குறிப்பிடுவது வழக்கம். இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை. உண்மையில் மகாதேவனின் ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ சமகாலத்து சம்ஹிதை நூல் என துணிந்து சொல்ல முடியும். சித்த மருத்துவத்தின் மருந்துகளை முக்குற்றங்களின் பார்வையில் அணுகி பார்க்கும் நூலும் மிக முக்கியமானது. தமிழ் மருத்துவ சூழலுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியது.


மகாதேவனால் நவீன மருத்துவர்களுடனும்  ஆக்கப்பூர்வமாக உரையாட முடிந்தது. எந்த அறிகுறிக்கு என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்தவர். அலோபதி மருத்துவர்களின் நன்மதிப்பை பெற்றதுடன் நல்லுறவையும் பேணினார். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என இடப்பட்ட அரசாணை குறித்து அவருக்கிருந்த பார்வை இது :- “குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என கிளம்பினால், அது ஆங்கில மருத்துவர்கள் மனதைப் புண்படுத்தும், நட்பை கெடுக்கும். இது சரி என்றால்,  ஆங்கில மருத்துவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அவர்களும் பச்சிலை மருந்தை கொடுக்கட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஒப்புக்கொள்வோமா?” மனதை புண்படுத்தும் நட்பை கெடுக்கும் என்பதையே முதன்மையான காரணமாக குறிப்பிடுகிறார். தமிழக சூழலில் சித்த மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்குமிடையே ஒருவிதமான இறுக்கம் எப்போதும் உண்டு. மகாதேவன் சித்த மருத்துவத்தை ஆழ்ந்து கற்றார். உள்ளார்ந்த மதிப்புடன் அணுகினார். இவ்விரு முறைகளுக்கிடையே முக்கியமான பாலமாக திகழ்ந்தார். இரண்டையும் இரு கண்கள் என பிரகடனம் செய்தார். சித்த மருந்துகள் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் அவருடைய மிக முக்கியமான பங்களிப்பு என்பது ஆசனவாய் வழி மருந்து செலுத்தும் வஸ்தி சிகிச்சை முறையை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் சில முக்கியமான பங்களிப்பை செய்துள்ளார். எத்தகைய ஆய்வுகள் தேவை எனும் கேள்விக்கு “ஆயுர்வேதத்தினுடைய ஆராய்ச்சி என்பது நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையை ஆவணப்படுத்துவதுதான். நோயாளிகளின் நோய் நிலையை சிகிச்சையின் வழி ஆவணப்படுத்துவது மிக முக்கியம்.  ஒவ்வொரு நோயாளிக்கும் நோய் எப்படி குணமானது என களத்தில் மேற்கொண்ட கருத்தினையும், கருதுகோளையும், செய்முறையையும், படிப்பினைகளையும் உள்ளடக்கியது ஆகும்” என பதிலளிக்கிறார். 


மகாதேவனின் தொடக்க கால மேடையுரைகளிலும் வகுப்புகளிலும் ஒருவித அவசரம் தொனிக்கும். இதோ இப்போது ஏதேனும் செய்தாக வேண்டும் எனும் அவசரம் கேட்பவரைத் தொற்றிக்கொள்ளும். அவரது பல்வேறு கருத்துக்கள் வலுவாக ஒலித்ததாலேயே சர்ச்சைக்குள்ளாகின. நாடி பார்த்து நோயறிதல், வர்ம சிகிச்சை போன்றவற்றை எல்லாம் முழுமையாக நிராகரித்தார். அவற்றை புறவயமாக அனுக இடமில்லை என்பதே அவரது வாதம். ஆனால் காலப்போக்கில் இவற்றில் அவரது பார்வை மாற்றமடைந்ததை காண முடிகிறது. “வைத்யநாதன் சார் இறப்பதற்கு முன்னால் என்னிடம் ‘ஐயாயிரம் நோயாளிகளுக்குத் தனியாகச் சிகிச்சை அளிக்காத வரைக்கும் அடுத்தவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காதே’ என கூறினார். இந்த தகுதி மிக முக்கியமானதல்லவா? 97-லிருந்து 2007 வரைக்கும் நான் ஆற்றிய உரைகள், எழுதியவற்றில் எல்லாம் நிறைய பிழைகள் உள்ளன. ஒரு அமைதி ஏற்படாமல், முழு சிகிச்சை அனுபவம் ஏற்படாமல், சாத்திரத்தை மட்டும் படித்து, மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்று விட்டோம் என்ற அகங்காரத்தில் பேசிய பேச்சு தான் பெரும்பாலும்.  இப்போது அப்படி இல்லை. பேச்சில் நிதானம் கூடியிருக்கிறது. முடியும், முடியாது என்ற ஹித  அஹித விசேஷ (நன்மை தீமை பகுத்தறிவு) ஞானம் உள்ளது. என்னாலேயே என்னை நோக்க முடிகிறது. அதனால் நான் பழைய பதிவுகளை (ரெக்கார்டிங்கை) எல்லாம் அழித்துவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அமெரிக்காவில் ஆற்றிய உரைகள் எல்லாம் முழுவதுமே பாட புத்தகத்தில் உள்ளவை தான். இப்பொழுது மூன்று ஆண்டுகளாகப் பேசிய உரைகள் தான் உண்மை. இனிமேல் நான் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் ஆறரை லட்சம், ஏழு லட்சம் நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை சொல்கிறோம் என்றால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.” என்கிறார். தர்க்கப்பூர்வ முறைகளை மட்டுமே கறாராக நம்பியவர் நாடி வர்மம் போன்ற முறைகளை ஏற்றுக்கொண்டார். “இன்று இம்மரபை பேணுபவர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால்  எல்லா நோய்களும் குணமாகிவிடும் என்று அதீத நம்பிக்கையுடன் பேசுவது தான். தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அடுத்தவர்களை இகழ்ந்து பேசுவதும், நம்மைத் தவிர மீதி எல்லாருமே அறிவிலிகள் என்று நம்புவதும், தெரியவில்லை என்று நாம் போய்க் கேட்டால் கேலி செய்வதும் என இன்று அம்மருத்துவமுறையை பின்பற்றுபவர்களின் மனப்போக்கே முதன்மை சிக்கல்.” என்றே வர்மம் குறித்து எண்ணுகிறார். இந்திய மருத்துவத்தில் பாலியல் சிக்கல்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவர்களைப் பற்றியும் அவருக்கு பெரிதாக அபிப்ராயமில்லை.  சிட்டுககுருவி லேகியத்தின் மகிமையைப் பற்றி கேட்கும்போது “லேகியத்தால் ஒன்றும் பெரிய பலன் இல்லை, வேண்டுமானால் வெளியில் இருக்கும் அட்டைப்படத்தினால் ஏதாவது பலன் என சொல்லிக்கொள்ளலாம்.” என தனக்கேயுரிய கிண்டலுடன் சொன்னார். தொடக்க காலத்தில் உடலில் இருந்து மலத்தை வெளியேற்றி சுத்திகரிக்கும் சிகிச்சை முறைகள் மீது பெரும் ஈடுபாடிருந்தது. வாந்தி எடுக்க வைக்கும் சிகிச்சை போன்றவற்றை எல்லாம் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் இத்தகைய கடினமான சிகிச்சை முறைகளை குறைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு உகந்த முறைகளுக்கு மாறினார். பஞ்சகர்ம சோதனை சிகிச்சைகள் இல்லாமல் உள் மருந்துகள் கொடுக்கும்போதும் அதே விளைவை ஏற்படுத்தமுடியும் எனும் இடத்தை வந்தடைந்தார். ஆயுர்வேத சாத்திரங்களின் மீது நன்மதிப்பும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து மதிப்பிட்டார். எவை பலனளிக்கிறது எவை பலனளிக்கவில்லை என்பதை வெளிப்படையாக பேசினார். 

மகாதேவன் தனது ஆசிரியரும் தாத்தாவும் ஆயுர்வேதத்தை முழுக்க நம்பினார்கள் என்கிறார். இறுதிவரை நவீன மருத்துவத்தை நோக்கி செல்லவே இல்லை என்பதாலேயே அவர்களுடைய வெற்றி சதவிகிதம் அதிகம் என்கிறார். உள்ளார்ந்து அவர்கள் அளவிற்கு தனக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.  ஒருவகையில் இந்த ஐயமும் தீர்மானமின்மையும்தான் மகாதேவனின் தனித்தன்மை என்று கூட சொல்லலாம். ஆயுர்வேதம் கற்க விரும்புகிறவருக்கு என்ன சொல்வீர்கள் எனும் கேள்விக்கு இப்படியான ஒரு பதிலை தருவித்தது. “ஆயுர்வேதம் படிக்காதே என்று சொல்வேன். ஆயுர்வேதத்தை கல்லூரியில் நன்றாக சொல்லிக்கொடுக்கக்கூடும், ஆனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை. ஒரு சில மருத்துவமனைகளே வெற்றிகரமாக நடக்கின்றன. பல கல்லூரிகளில் ஈ ஓட்டுகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் கற்பதில்லை, விதியே என கடனுக்கு கல்லூரி வந்து செல்வார்கள். மூலிகைச் செடிகளை அடையாளம் காணும் அறிவு கிட்டுவதில்லை, மருந்து செய்யும் கலை வளர்வதில்லை. பத்து மாணவர்களில் இருவர் தான் வெற்றியடைகிறார்கள். மீதி எட்டு பேருக்கும் தோல்விதான். இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே வேறு ஏதாவது நல்லப் படிப்பு படி என்று தான் சொல்வேன். குடும்பப் பாரம்பரியம் உள்ளது, அதை தொடர வேண்டும் என்றால் படி என்று சொல்வேன். அபரிமிதமான உற்சாகம், ஞானம், உழைப்பு உள்ளவர் வந்தால் படி என்று சொல்வேன். ஆயுர்வேதம் படிக்கவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது, படித்தால் ஒரு சில நன்மைகள் விளையும், இன்றைய காலகட்டத்தில் இது கண்டிப்பாக, இன்றியமையாத ஒரு மருத்துவ சாஸ்திரம் என்று சொல்வதற்கில்லை. நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான்.” நேர்காணலின் இறுதி கேள்வி இது. ஏதேனும் ஒரு உச்ச புள்ளியில் நிறைவு செய்வார் எனும் நோக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் எதிர்பார்க்காத வேறொரு பதிலை கூறினார். ஆயுர்வேதத்தின் கோணத்திலிருந்து சிந்திக்காமல் சாமானிய மாணவரின் கோணத்திலிருந்து  மெய்யான கரிசனத்துடன்  சொல்லப்பட்ட பதில். அந்த பதிலில் சுடரும் அறிவார்ந்த நேர்மை காரணமாகவே அது நம்மை சுடுகிறது. 



 அவரது ஆன்மிக வாழ்வு குறித்து நேர்காணலின் போது பேசக்கிடைத்தது ஒரு அரிய வாய்ப்பு. முற்றிலும் வேறு சில திறப்புகளை அளித்தன. பரமஹம்ஸ யோகானந்தரின் மரபில் கொஞ்சகாலம் இணைந்திருந்தார். யோகானந்தரின் சுயசரிதை நூலை அவர் படித்த கதையே சுவாரசியமானது “1987 ல் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ வரைக்கும் தினமும்  நடப்பேன். அப்பொழுது அந்த வழியில் உள்ள புத்தகக்கடை அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின்  அட்டையில்  உள்ள அவரது முகம்  என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றும். தினமும் அவரைப் பார்ப்பதற்காகவே, நடக்கத் தொடங்கினேன். தினமும் பார்க்கப் பார்க்க முகம் பெரியதாகிக் கொண்டே இருப்பது போல் தோன்றும். என்னடா இது! என்று குறுகுறுப்பு. ஒருநாள், இவர் யார்? என்ன புத்தகம்? என அப்புத்தகக் கடைக்காரரிடம் கேட்டேன், அவரும் “அது ஒரு சாமியுடைய வாழ்க்கை வரலாறு” என்று சொல்ல, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.” யோகானந்தரின் நேரடி சீடரான ராய் யூஜின் டேவிஸின் நூலை மொழியாக்கம் செய்தார். ஆனால் தனக்கென நிலையான ஒரு வழியையோ குருவையோ அவர் கண்டுகொண்டாரா என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. “ஸ்ரீவித்யா மார்க்கத்தில் இருந்தேன்; யோக மார்க்கத்தில் பயணித்தேன்; பூஜைகளை செய்தேன். கோவில் கோவிலாக அலைந்திருக்கிறேன். தான தர்மங்கள் செய்தேன். ஆனால் இவை எதிலுமே நிறைவை உணர இயலவில்லை. கர்மாக்கள் சேர்ந்து இருக்கக்கூடும். அது நமக்குத் தெரியவில்லை. குருவினுடைய திருவடியைத் தவிர வேறு மோட்சமே இல்லை.” என தனது அலைச்சலைப் பற்றி எழுதுகிறார். நான் அவருடன் உரையாடியபோது காலஞ்சென்ற திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்த சுவாமிகளை குருவாக‌ கண்டுகொண்டதாக குறிப்பிட்டார். “இன்னொரு இடத்தில் எதையும் படிக்காதே, எதையும் செய்யாதே, நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேள், ஏற்கனவே நான் எல்லாம் படித்துவிட்டேன், கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன், கூடவே வா என்கிறார். மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது, நம்பிக்கை அளிக்கிறது.  மிகவும் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த போதெல்லாம் அவருடைய அருளை உணர முடிந்தது. அனுக்கிரகம் என்பது அத்ரவியம் (புலனறிதலுக்கு அப்பாலானது) ஆயிற்றே? அதை நான் எப்படி சொல்ல முடியும்? உணர்வுகளை எப்படிச் சொல்ல முடியும்? உருவம் கொடுக்க முடியுமா? இனிப்பு, இனிப்பு என்று தான் சொல்ல முடியும். நான் ஒழுக்கமாக வாழத் தொடங்கி, சரணாகதி பாவம் கைவரும் தோறும் எனக்கு அதுவரை நிகழாதது எல்லாம் நிகழத்தொடங்கியது. வெளியில் இதைச் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. என்னைப் பொறுத்தவரை உண்மை. நீங்கள் அதனை உண்மை என்று உணர்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எவ்விதத்திலும் நடக்கச் சாத்தியமில்லாததெல்லாம் நடந்தது இது உண்மை சத்தியம்.”  என்கிறார். ஆயுர்வேதத்தின் தர்க்கவழி மருத்துவம் எனும் எல்லையை கடந்த சில அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நாட்பட்ட தீரா நோய்களைப் பற்றி குறிப்பிடும்போது “சிகிச்சையளிக்கலாம் தான். அச்சிகிச்சை அளிப்பவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய் தீர்க்க முயல வேண்டும். டாக்டர் ஆகலாம், ஆனால் ஹீலராகி  குணப்படுத்த முடியுமா? குணப்படுத்துதல் என்பது வேறு. குணமாக்குதல் என்பதொரு வேள்வி.  முழு ஈடுபாடு வேண்டும். அதை எல்லாருக்கும் என்னால் செய்ய இயல்வதில்லை. நூறில் நான்கு பேருக்கு சாத்தியமாகிறது. பாக்கி 96 பேருக்கு நான் கற்ற பாடத்தை அடிப்படையாக கொண்ட சிகிச்சை தான் அளிக்க முடியும். சிலருக்குக் கேட்கும், சிலருக்குக் கேட்காது. சங்கல்பம் (உறுதி ஏற்றல்) செய்து கொண்டு மருந்து கொடுத்தால் பொதுவாகக் கேட்கும்.” என குறிப்பிடுகிறார். இத்தகைய அனுபவங்களை பேசும் பெரும்பாலோனோர் தர்க்கரீதியான சிகிச்சை முறைகளை கைவிட்டு முழுவதுமாக குணப்படுத்துதல் நோக்கி நகர்ந்து அதையே பிராச்சாரம் செய்வார்கள். இவை அரிய நிகழ்வு. அறிவியலின் “விளைவை மீளுருவாக்குதல்” ( repeatability of results) கோட்பாட்டுக்கு பொருந்தாதது. இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பெற்றாலும் அதை அவர் பெரிதாக முன்வைக்கவில்லை. மறைக்கவும் இல்லை. “பிரார்த்தனை செய்வது நல்லது. பிரார்த்தனையினால் ஒரு சில நோய்கள் எளிதாக குணமாகும். ஆனால் அதுவும் ஒரு சிலருக்கே நடக்கும். எல்லோருக்கும் பலனளிக்கும் என சொல்லிவிட முடியாது. ஆகவே இதை விளம்பரப்படுத்துவது தவறானது.” என இவ்வகை நம்பிக்கை சார்ந்த முறைகளின் எல்லையை வரையறை செய்கிறார். 


தொழில்முறை மருத்துவராக மகாதேவன் மருத்துவ அறங்களைப் பின்பற்றுவதில் ஒரு முன்மாதிரி. “அறத்தால் வருவதே இன்பம்- கமிஷன் வாங்க கூடாது, பரிசுப் பொருள் வாங்கக் கூடாது. கொரோனாக் காலத்தில் கொள்ளையடிக்கக் கூடாது. போடுகின்ற பில்லை முதல் நாளே சொல்லிவிட வேண்டும். ஏழைகளுக்கு இரங்க வேண்டும். அறத்தினாலேயே இன்பம் வரும், அறத்தை கைவிட்டுவிட்டு பூஜைகளை செய்து என்ன பயன்? இறைவனை வணங்குவதினால் பலன் இல்லை.” மேற்சொன்னவற்றை அவர் இறுதிவரை பின்பற்றினார். பின்பற்றுதலே எங்களுக்கு போதனை. 


‘முதற்கால்’ எனும் எங்கள் நேர்காணல் நூலை அடிப்படையாகக்கொண்டு இந்த கட்டுரையை எழுதினேன். தனிப்பட்ட நினைவுகள் பல முட்டி மோதுகின்றன. அவரது சின்ன சின்ன உடலசைவுகள் காட்சிகளாக மனக் கண்ணில் தோன்றுகின்றன. மகாதேவன் சமகால பாரம்பரிய மருத்துவ உலகின் பேராளுமை. இன்னும் இருபதாண்டுகள் இருந்திருந்தால் அவர் பல எல்லைகளை கடந்திருப்பார். எப்படி மரணமடைந்தார் என்பதற்கு தர்க்கப்பூர்வமான பதில்கள் உள்ளன ஆனால் ஏன் இறந்தார் எனும் கேள்விக்கு எந்த பதிலும் சமாதானத்தை அளிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் மாணவர்களுடன் மகாதேவன் உரையாடிய ஒரு சிறிய பகுதி அவருடைய மரணத்தையொட்டி அதிகமாக பரப்பப்பட்டது. அதில் “மகாதேவன் எனும் இந்த வடிவத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள். பிரிவு துயரத்தை அளிக்கும்” என்கிறார். 55 வயதில் எது அவரை இப்படி சொல்ல வைத்தது என தெரியவில்லை. ஆயுர்வேதம் இந்த மண்ணில் இன்னும் சில ஆண்டுகள் உயிர்ப்புடனிருந்தால், அல்லது எப்போது வரை உயிர்ப்புடன் உள்ளதோ அப்போது வரை மகாதேவனும் எங்களுடன் இருப்பார். ஆசிரியருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். 







 




1 comment:

  1. எழுத்தாளர் டாக்டர் சுனில் கிருஷ்ணனுக்கு வணக்கம்.
    நமது ஆசிரியர் டாக்டர் மஹாதேவன் பற்றிய இக்கட்டுரை அவரது பன்முகத்தன்மையை அருமையாக பதிவு செய்துள்ளது. தங்களுக்கு மிக்க நன்றி.

    அவரது குருகுலத்தில் தங்கி, அவரது அண்மையில் பயின்ற என்னை போன்ற பல மாணவர்களின் மன ஓட்டத்தை, தங்களின் மொழி புலமையால் சிறப்பாக படம்பிடித்து காட்டி உள்ளீர்கள்.

    ஆயுர்வேத இளங்கலை பட்டம் பெற்ற பின்பும், கண்களையும், கைகளையும், இறுகக் கட்டி, அடர்காட்டில் விட்டது போன்ற மனநிலையில் இருந்த, ஆயுர்வேத பாரம்பரியம் இல்லாத, என்னை போன்ற பல மாணவர்களை, அவர் அரவணைத்து, பாடமும் சொல்லித்தந்து, அறத்தையும் சொல்லித்தந்து ஆசிரியருக்கும் மேலாக, தாயுமானாவராகவே இருந்தார் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து விளங்கும்.

    நவீன மருத்துவ கண்ணோட்டத்தையும், ஆயுர்வேதத்தையும், தனது சிகிச்சை முறையில் இணைத்து, மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லித்தருவதில் அவருக்கிணை யாருமில்லை.
    நோயாளியின் துயரைத்தையும், தவிப்பையும், குறைப்பது அன்றி, ஒரு மருத்துவனுக்கு வேறொன்றும் முக்கியமில்லை, என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்தார். அதற்காக, நவீன மருத்துவ நோய்கண்டறிதல் முறைகளை எங்களுக்கு சொல்லித்தந்து, வைத்திய தர்மத்தை செய்ய வைத்தார்.

    கருத்தரங்குகளில், அவரது நகைச்சுவை நிரம்பிய பேச்சுக்களிலும், புதிய மருத்துவ கண்ணோட்டத்தை கண்முன்னே நிறுத்தும் திறமையான ஒருங்கிணைப்புகளிலும், அறிவை பறிகொடுக்காதவர்களே இல்லை எனலாம். கேட்பவர்களின் சிந்தனையிலிருந்து இரண்டு மூன்று நாட்கள் அவரது பேச்சும், கருத்தும் விட்டகலாது.

    அவை அனைத்தையும் புத்தகங்களாக அவர் உருமாற்றிய விதம் செயற்கரியது. காலத்திற்கும் அவரது புத்தகங்கள் ஆயுர்வேத உலகிற்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
    இனி இது போன்ற ஒரு சிந்தனையாளர் ஆயுர்வேதத்திற்கு கிடைப்பது அரிது.

    ஆழி சூழ்ந்த இந்த உலகில் ஆயுர்வேதம் உள்ளவரை நமது ஆசிரியர் மகாதேவனும் இருப்பார் என்ற தங்களின் கூற்று நூறு சதவீதம் சத்தியமானது.

    என்றும் தீரா நன்றிக்கடனுடன்,
    மரு. கோ. ஹரிணிரம்யா.

    ReplyDelete