புத்தகங்கள்

Pages

Thursday, August 10, 2023

போபால் பயணக்குறிப்பு - உஜ்ஜயினி

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் சாகித்ய அகாதமி சர்வதேச இலக்கிய விழாவை சிம்லாவில் ஒருங்கமைத்தது. முதல் முயற்சிக்கே உரிய சிற்சில தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட அது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. பல மூத்த எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. வேறு மொழிகளில் எழுதும் சில நண்பர்களை கண்டடைய முடிந்தது. உறவுகளை பேணுவதற்கு என்று மெனக்கெடுவது இல்லை என்பது வேறொரு விஷயம். சிம்லாவில் நான் வெளியே எங்கும் செல்லாமல் அமர்வுகளில் பங்கெடுத்தேன். இம்முறை இரண்டாவது சர்வதேச இலக்கிய விழா 'உன்மேஷம்' மத்திய பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறையும் பங்குக்கொள்ளுமாறு அழைப்பு வந்தது. 

இம்முறை ஆகஸ்ட் 3 முதல் 6 ஆம் தேதி வரை என நான்கு நாட்களுக்கு விரிவாக்கப்பட்டிருந்தது. ஒன்றாம் தேதியே மதுரையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லி சென்று அங்கிருந்து இன்னொரு விமானம் வழியாக இரவு போபால் விமான நிலையம் சென்று சேர்ந்தேன். மதுரையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. விமானம் ஏறுவதற்கு முன் ஒருமுறை பைகளை சோதனையிடுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் என்பதாலா அல்லது புதிய வழக்கமா என தெரியவில்லை. சென்னையிலிருந்து கூட போபாலுக்கு நேரடி விமான சேவை இல்லை. ஏன் எனத் தெரியவில்லை. அவல் உப்புமாவின் ஒரு வகையை போஹா என சொல்கிறார்கள். ஏதோ ஒரு விமான பயணத்தின்போது தான் முதல்முறையாக உண்டேன். அதன்பின்னர் ஒவ்வொரு விமான பயணத்திலும் அதையே உண்கிறேன். வயிறை படுத்தாத, ருசியான, லகுவான உணவு.  இப்போது உள்ளூர் விமானங்களில் கூட இருக்கைகளுக்கு தனியாக வசூல் செய்கிறார்கள். இலவச இருக்கையாக எனக்கு கிடைத்தது கடைசி வரிசையின் மத்திய இருக்கை. வேறுவழியில்லை. 

டெல்லியிலிருந்து போபால் செல்லும் விமானத்தில் எதிர் வரிசையில் வடகிழக்கிலிருந்து இரு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவர் சோர்ந்து சுருண்டு படுத்திருந்தார். பின்னர் விமானத்தின் கழிப்பறைக்கு அருகே கீழே அமர்ந்து கொண்டார். மருந்து ஏதேனும் வேண்டுமா என கேட்டேன். தேவையில்லை இது அவரது முதல் பயணம் என்பதால் சற்று பீதியுற்று இருக்கிறாள் என்றார் அவர் தோழி. 

 போபால் விமான நிலையம் சற்றே சிறியது. மதுரை அல்லது திருச்சி விமான நிலையத்தை போல என சொல்லலாம். நான் சென்று இறங்கியபோது மழை தூறிக்கொண்டிருந்தது. நிலையத்தின் உள்ளேயே இருந்த வாடகை வண்டி முனையத்தில் வண்டிக்கு பதிவு செய்துகொன்டேன்.  வெளியே உபர் ஓலா கிடைக்கிறது. ஒப்புநோக்க அவை மலிவு எனும் ஞானத்தை பின்னர் தான் அடைந்தேன். விமான நிலையம் இருக்கும் பகுதி புறநகர் பகுதி. விரிந்த தூய்மையான சாலைகள் மெல்ல மெல்ல போபாலில் பழைய நகருக்குள் குறுகி சென்றது. சிறு சிறு கடைகள், நெரிசல் என பழைய போபால் நம் சென்னையின் சில பகுதிகளை நினைவுபடுத்தியது. தொன்மையான பெருநகரங்கள் எப்போதும் இப்படித்தான். அதன் மையம் நெரிசலும் தொன்மையும் வாய்ந்தவை. அவை ஆழி வட்டங்கள் போல விரிந்து விரிந்து நூதனமாகி பெருகுபவை. போபால் ரயில் நிலையம் விஸ்தாரமானது. இரவு நான் அங்கு சென்று சேர்ந்தபோது பெருங்கூட்டம் நடைமேடைகளில் அமர்ந்தும் உறங்கியும் கிடந்தது. அத்தனைபெரிய திரளை கணக்கில் கொண்டால் ரயில்நிலையம் சுத்தமாகவே இருந்தது என சொல்ல வேண்டும். எங்கிருந்து எங்கு செல்வது என குழப்பம் எனக்கு. படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தேன். போபாலில் இருந்து இந்தூர் செல்லும் வண்டி. 

இரவு 11.10 க்கு புறப்பட்டு விடிகாலை (அல்லது நள்ளிரவின் கடைசி ) 2.50 மணிக்கு உஜ்ஜைன் செல்ல வேண்டும். 2.45 க்கு அலாரமை நிர்ணயித்திருந்திருந்தேன். மழை ஓய்ந்த இரவு.  நிலவு தென்பட்டது. ரயில் நிலையத்தில் பிள்ளைகுட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளை வைத்துக்கொண்டு இத்தனை ஜனம் அமர்ந்திருப்பதை பார்த்தபோது மனதில் இனம் புரியாத கிளர்ச்சி எழுந்தது. எவ்வித அசூயையும் இல்லை. உண்டு மீதியிருந்த குப்பையை என்னுடன் பயணித்தவர் கொடுங்கள் என வாங்கிகிச்சென்று குப்பை தொட்டியில் சேர்த்தார். புரத குறைபாடை காட்டும் செம்பட்டை தலைமயிர்கள். வர்ணங்கள் வாரியிறைக்கப்பட்ட ஆடைகள்.

புதிய இடங்களுக்கு பொது போக்குவரத்தில் செல்லும்போது மனம் அசாதாரண கூர்மையும் விழிப்பும் கூர்மையும் கொள்ளும். ஓய்வுக்கு வழியில்லை. கண் மூடிப்படுத்தாலும் கூட இரவில் சுழலும் அச்சு இயந்திரம் போல் மனம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருமணிக்கு பிறகு கண் அயர்ந்திருக்க வேண்டும்.  ஏதோ ஒரு இடத்தில் நிற்பது போல உணர்வு தட்ட உறக்கத்திலிருந்து விழித்து மணியை நோக்கினேன். 2.25. எந்த நிறுத்தம் என நோக்கினால் உஜ்ஜயினி! 25 நிமிடங்கள் முன்னதாகவே  ரயில் வந்து சேர்ந்துள்ளது. வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன். 

நீலோத்பல் எனும் இந்தி கவிஞர் உஜ்ஜையினில் உள்ளார். சென்றமுறை சிம்லா சென்றபோது  .அறிமுகம் ஆனவர். அரைகுறை இந்தியைக் கொண்டு எப்படியோ சமாளித்து அவரோடு உரையாடியிருக்கிறேன். அவருக்கு நெரூதா மிகவும் பிடித்த கவி. தாமஸ் ட்ரான்ஸ்டோமர், மிரஸ்லோவ் ஹோலுப் என பலரையும் இந்தியில் வாசித்திருக்கிறார். அவசியம் உஜ்ஜையினிக்கு வரவும் என சொல்லியிருந்தார் (ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பார் பாவம். அடுத்த ஆண்டே போபாலில் உன்மேஷா நடக்கும், அதற்கு மீண்டும் என்னை அழைப்பார்கள் என்றெல்லாம் அவர் எண்ணியிருக்க வாய்ப்பில்லை). ரயில் நிலையத்திலிருந்து எந்த பக்கமாக வெளியே வர  வேண்டும்,எங்கிருந்து ஆட்டோ பிடிக்க வேண்டும், எந்த இடத்தை அடையாளமாக சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் விலாவரியாக தெரியப்படுத்தியிருந்தார். அதேபோல் அதிகாலை 3 மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தேன். மாடியில் தனி பகுதி கட்டியிருக்கிறேன், நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். நீலோத்பல் (ஆண் கவிதான்) என்னைவிட குறைந்தது பத்து வயது மூத்தவர். பார்த்தால் தெரியாது. மூன்று கவிதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். அலோபதி மருந்துகளின் மொத்த வியாபாரம் செய்கிறார். வீடுதான் அலுவலகமும். அட்டை பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. கவிகளுக்கே உரிய விட்டேந்தி தன்மை உள்ளவர். "மஹாகாலேஸ்வரரை பார்க்க பல ஆண்டுகளாக செல்வதில்லை." என்றார். குளியல் அறையில் சமையல் எரிவாயுவை வாட்டர் ஹீட்டருடன்  இணைத்திருந்தார். வெந்நீர் குழாயை திறந்தால் ஹீட்டருக்குள் நெருப்பு பற்றிக்கொள்கிறது. குழாயை மூடினால் அணைந்து விடுகிறது. மின்சார ஹீட்டரை விட சிக்கனமானது என்றார். சற்று நேரம் உறங்கி எழுந்தேன். நீலோத்பலின் வீடு இருக்கும் இடம் சந்தடியற்ற பகுதி. மழை சன்னமாக தூறிக்கொண்டே இருந்தது. 

இப்போது ஆலயத்திற்கு எந்த வழியில் செல்ல வேண்டும், எப்படி சீக்கிரமாக செல்வது என்று நீலோத்பல் தனக்கு தெரிந்த ஒவ்வொரு நண்பருக்கும் பேசி  பார்த்தார். 9 மணிக்கு வீட்டிலிருந்து அவரது வண்டியில் புறப்பட்டோம். சாலையோர கடையொன்றில் போஹா சாப்பிட நிறுத்தினோம். "விமானங்களில் சாப்பிட்டதே உங்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறந்து என்றால் இங்கே இந்தோரி போஹா சாப்பிட்டு பாருங்கள். போஹா பல்வேறு சுவைகளில் கிடைக்கும், ஆனால் இந்த கடையில்  உள்ள ருசி வேறெங்கும் கிடையாது” என்றார். செய்தி தாள் நறுக்கில் இரண்டு கரண்டி போஹாவை சுடசுட அடுப்பிலிருந்து இட்டு, மேலே கொஞ்சம் ஓமப்பொடியை தூவி கொடுத்தார். தொட்டுக்கொள்ள தோக்லாவும் சூடான  ஜிலேபியும்.  தோக்லா குஜராத்தி உணவுதான் என்றாலும் மத்திய பிரதேசத்து உணவு வழக்கத்திற்குள் சேர்ந்துவிட்டது. . இப்போது இதை எழுதும்போது இவற்றின் சுவையை நாநுனி நினைவுகூர்கிறது. 

கட்காளிகா ஆலய வளாகத்தில் உள்ளவை 




அங்கிருந்து நாங்கள் முதலில் சென்றது கட்காளிகா ஆலயத்திற்கு. சிறிய ஆலயம் தான். சக்தி பீடங்களில் ஒன்று என கருதப்படுகிறது. அதைவிட இவளை சென்று காண எனக்கு முக்கியமான நோக்கம் உண்டு. இவளே கவி காளிதாசனின் நாவில் எழுதி சொல் அருளியவள். ஞானக்கூத்தன் ஒரு கட்டுரையில் ஏதோ ஒரு ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திண்ணையில் படுத்துறங்கியபோது நாவில் காளி எழுதியதாக கனவு கண்ட அனுபவத்தை பற்றி எழுதி இருக்கிறார். ஏதோ லேசாக நமக்கும் எழுதி இருக்கிறாள்தான், இன்னும் கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக எழுதிவிடு என அம்மையிடம்  கேட்கும் உரிமை நமக்கும் உண்டுதானே. சிவகங்கையில் கூட உச்சிமாகாளி/ உச்சினிமாகாளி ஆலயம் உண்டு. மதுரை, நெல்லை என தென் தமிழகத்தில் பல இடங்களில் கோவில் கொண்டவள். விக்கிரமாதித்தன் வணங்கிய காளி. தமிழகத்து உச்சினிமாகாளிக்கு என தனி கதை உண்டு. தாந்த்ரீக- சாக்த மரபின் வழியாக இந்த வழிபாடு இங்கு பரவியிருக்க வேண்டும் என்பது என் ஊகம். உஜ்ஜயினியில் உள்ள மற்றொரு காளியான ஹர்சித்தி மாதா தான் விக்கிரமாதித்தன் வணங்கிய காளி, அதுவே தமிழகத்தின் உச்சினிமாகாளி என சொல்பவர்களும் உண்டு.     


 ஒற்றை விமானமும் சிறிய சுற்று சுவரும் கொண்ட சிறிய கோவில் தான். எடுத்து கட்டப்பட்ட ஆலயம். பிரகாரத்தில் இரண்டு விளக்கு தூண் வடிவிலான கொடிமரங்களை கண்டேன். அவை சற்று புராதனமானவை. வெளி பிரகாரத்தில் மூன்று சிவலிங்கங்களுக்கு சன்னதிகள் உள்ளன. ஏறத்தாழ நம்மூர் சாத்தாவை நினைவுபடுத்தும் சில பின்னமடைந்த சிலைகளை வெளியே கண்டேன். செந்தூர நிறத்தில் இருந்தவள் சிவந்த நா நீட்டி சிறிய வெள்ளி கிரீடம் தரித்திருந்தாள். உள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தார்கள். பெரிய நெருக்கடி இல்லை. சொல்லையும், கவிதையையும், மனத்திண்மையையும் வேண்டி மனமார பிரார்த்தித்தேன். மனதிற்கு அணுக்கமான சில தமிழ் கவிகளுக்காகவும் எழுத்தாளர்களுக்காகவும் படைப்பூக்கம் வற்றாமல் இருக்க வேண்டினேன். மொழியறியாத ஊரில் இயல்பாகவே மவுனம் நம்முள் குவிகிறது. நாக்கில் அழுத்தி எழுதினாளா  எனத்தேறியவில்லை. ஆனாலும் இதுவரை அளித்தவைக்கு நன்றியுடையவனாகிறேன். எப்போதும். 

கால பைரவர் ஆலயம் முகப்பு 


குற்றால சாரலை போல தூறிக்கொண்டே இருந்தது. உஜ்ஜயினி மொத்தமும் கார்மேகம் சூழ இருந்தது. க்ஷிப்ரா நதியை கடந்து கால பைரவரை காண சென்றோம்.  அப்பகுதி முழுவதும் சோயா பீன்ஸ் பயிரிடப்பட்டிருந்தது என நீலோத்பல் காண்பித்தார். விந்திய மலை தொடர் குன்று போல ஆங்காங்கு தென்படுகிறது. நீலோத்பல் எந்த ஆலயத்திற்குள்ளும் வரவில்லை. வண்டியை வைத்துக்கொண்டு மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி வெளியேவே இருந்தார். காலபைரவர் ஆலயத்தில் சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றேன். காவல்துறையினரின் தடுப்பு வேலிகள்  வரிசைக்காக  பயன்படுத்தப்பட்டிருந்தன.விதவிதமான வர்ணங்களுடைய கயிறுகள் அந்த தடுப்பு வேலிகள் முழுக்க கட்டப்பட்டிருந்தன. பலவண்ண சடாதாரியை போல காட்சியளித்தது. நம்மூர் சிறு தெய்வங்கள் சிலவற்றுக்கு படைப்பது போல காலபைரவருக்கு  சீமை சாராயம் படைக்கும் வழக்கமும் உண்டு. கோவில் அருகேயே மதுபான கடை உள்ளது. கூட்டம் அலைமோதுகிறது. கருங்கல் முகப்பு காண்பதற்கு பழைய பிரிட்டிஷ் பாணியிலான கட்டிடம் போல தோற்றம் அளிக்கிறது. இங்குள்ள பூசகர்கள் மேற்சட்டை அணிந்து கொள்கிறார்கள். காளியை போன்ற உருவம் தான். அலங்காரத்தில் தான் வேறுபாடு. வெளியே வந்து க்ஷிப்ரா நதியை சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றோம். பேச்சு துணைக்கு எவரும் இல்லை எனும்போது நம்முள் அபூர்வமான ஒரு அமைதி குடிகொண்டு விடுகிறது. மனம் கூர்மை அடைந்து எல்லாவற்றையும் கவனிக்க தொடங்குகிறது. இந்த மத்திய பிரதேச பயணத்தில் அவ்வகையில் உஜ்ஜயினி பயணமே மனதிற்கு  நெருக்கமானதாக உணர்கிறேன். 

அங்கிருந்து சந்து சந்தாக வாகன நெரிசலில் ஊடாக மஹாகாலை காண அழைத்து சென்றார். நெற்றியில் சந்தனம் மெழுகி சிந்தூரத்தை மையாக கொண்டு நெற்றியில் ஓம் மஹாகால் என எழுதுவது ஒரு வழக்கமாக உள்ளது.  பலரும் உஜ்ஜயினி முழுவதும் இந்த கோலத்தில் திரிகிறார்கள். தலையெழுத்தை மஹாகாலின் எழுத்து மாற்றும் என நம்புகிறார்களா என தெரியவில்லை. 250 ரூபாய் விரைவு தரிசன சீட்டு பெற்றுக்கொண்டு 20 நிமிடங்களில் மஹாகாலேஸ்வரரை காண சென்றேன். ஜெய் மஹாகால எனும் கோஷம் பக்தர்களின் மத்தியே ஒலித்துக்கொண்டே இருந்தது. மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் ஓம் மஹாகால என எழுதப்பட்ட ஜிப்பாக்களை பலரும் அணிந்திருந்தார்கள். மஹாகால சுயம்பு லிங்கம். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று. சாவன் மாதம் அதாவது ஆடி மாதத்தில் அவரை வழிபடுவது சிறப்பு என நம்புகிறார்கள். ஒப்புநோக்க மஹாகால ஆலயம் பெரியது, மையத்தில் குளம் உள்ளது. சுற்றி நிறைய சிறு சிறு கோட்டங்கள் உள்ளன. மாலை மூன்று மணிக்கு போபாலுக்கு ரயில் இருந்தபடியால் சற்று அவசரமாக நீலோத்பல் வீட்டிற்கு திரும்பினேன். இங்கு ஈ ரிஃஷாக்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன.நீலோத்பலின் மனைவியும் மகள் கணு ப்ரியாவும் சேர்ந்து எங்களுக்காக பராத்தா தால் காலி பிளவர் சப்ஜி செய்து வைத்திருந்தார்கள். கணு பிரியா பொறியியல் பட்டதாரி, இப்போது  தகவல் தொழில்நுட்ப துறையில் பணியில் சேர முயன்று வருகிறார். அவர்களது மகன் அனாகத் பத்தாவது படிக்கிறான். இருவருமே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினார்கள். ரஜினி, பிரபாஸ், அல்லு அர்ஜுன், யாஷ்  ஆகியோர் வெவ்வேறு மாநிலத்தவர்கள் என்பதை அவர்களுக்கு விளக்கி சொல்ல முயன்றேன். 
மஹாகால் ஆலயம் 


நீலோத்பல் கவிதை என்பதே எதிர்ப்பின் வடிவம் என்றார். வால்மீகியின் கதையிலிருந்து இந்த மரபை அடையாளம் காண முடியும் என்றார். மத்திய பிரதேச தேர்தல் வரவுள்ளது, இந்நிலையில் உன்மேஷாவில் பங்குகொள்ளத்தான் வேண்டுமா என தயங்குவதாக சொன்னார். நமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பதிவு செய்வதற்கும் கூட இது ஒரு வாய்ப்பு ஆகவே தவறவிட வேண்டாம் என கூறினேன். கவிதையின் உயர் லட்சிய தளத்தில் நீடிக்கவே விரும்புவதாகவும் அரசியல் நிகழ்வுகள் நுண்ணுணர்வை வெகுவாக பாதிப்பதாகவும், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்க இயலுவதில்லை என்றும் நீலோத்பல் சொல்லிக்கொண்டிருந்தார். இது படைப்பு மனம் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று. சூழும் நோய்மை அத்தனையும் நுண்ணறிவு கொண்ட மனத்தையே தாக்கும். படைப்பாளியாக இதை எதிர்கொண்டு கடக்க வேண்டும். பலரும் செயலின்றி சிக்கி கொள்கிறார்கள் அல்லது பாவனைகளுக்குள் வீழ்ந்து விடுவார்கள். நம்மிடம் ஒரு மகத்தான இயந்திரம் உள்ளது, அதைக்கொண்டு நம்மை நாம் அழித்துக்கொள்ளாமல் இருக்க பழக வேண்டும். அதை கையாள பழக வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டேன். செட்டிநாட்டு பலகாரங்கள் சிலவற்றை அவர்களுக்காக வாங்கிக்கொண்டு போயிருந்தேன். உண்டார்களா எனத் தெரியவில்லை. 

மூன்று மணிக்கு உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். அவருக்கு மூன்றாம் தேதி கவிதை  அமர்வு இருந்தது. காலையில் வந்தே பாரத் ரயிலில் வருவதாக சொன்னார். போபாலில் புறநகர் ரயில் நிலையமான சந்த் ஹிருதயராம் நகர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இரவு வண்டியில் படுக்க வாய்த்தது போல இம்முறை முன்பதிவு செய்த பெட்டியில் வாய்க்கவில்லை. பலரும் ஏறிக்கொண்டார்கள். எனது இருக்கையை இன்னொருவர்  பகிர்ந்துகொண்டார். முதலில் அமர்ந்தார், பின்னர் மெல்ல கால் நீட்டினார், படுத்தே விட்டார். அவருக்காக அவர் குடும்பத்தினர் நாணினர். அவரை எழுப்ப முயன்றனர். "உறங்கட்டும்" என விட்டுவிட்டு எழுந்து சென்றேன். வரும்போதும் சரி போகும்போதும் சரி பயணசீட்டு பரிசோதகரை நான் காணவே இல்லை. உஜ்ஜயினியில் இருந்து போபால் வருபவர்களுக்கு ரயிலில் ஒருவர் பயணசீட்டு வழங்கிக்கொண்டிருந்தார். சற்று அனுசரித்து அமர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். எங்கள் ரயில் இந்தூரிலிருந்து பட்னா செல்வது. நான் எழுந்து கதவினோரம் நின்று வேடிக்கை பார்த்தபடி வந்தேன். இரண்டரைமணிநேர பிரயாணம் தான் என்பதால் அலுப்பு தெரியவில்லை. 
க்ஷிப்ரா நதி பாலத்தில் நீலோத்பலுடன் 


நான் இறங்கிய ரயில் நிலையம் போபால் நகரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. இரண்டு நடைமேடைகள் கொண்ட சிறிய நிலையம்தான். அதன் முந்தைய பெயர் பைராகர். ரயில் புறப்படுவதற்கு முன் அவசர அவசரமாக இறங்கிய ஒருவர் "இது பைராகர் என்பதே என் நினைவில் இல்லை, இப்போது சந்த் ஹிருதரராம் என என்னவோ பெயர் மாற்றியுள்ளார்கள். ரயில்வே பலகையில் பெயரை மாற்றினால் போதுமா?" என புலம்பிக்கொண்டே சென்றார். அங்கிருந்து எம்.பி நகர் பகுதியிலிருந்த ஹோட்டல் அதிஷய்க்கு சென்று சேர்ந்தபோது இரவு ஏழுமணி. ஒரிய எழுத்தாளர் சந்திரசேகர ஹோத்தா நான் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி இருந்தார். சென்ற முறை நாங்கள் சிம்லாவில் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். ஹோத்தா ஒரிய மொழியில் செயல்படும் விமர்சகர்.காவல்துறை துணை கண்காணிப்பாளரும் கூட. "உங்கள் விமர்சனத்தை எதிர்த்து ஒரு சிறிய முனகல்கூட இருக்காதே" என கேலி செய்துகொண்டிருந்தேன். இரவுணவின்போது தாரோ சிந்திக் எனும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்தி கவியை சந்தித்தேன். என் வயது இருக்கலாம். அருணாச்சலில் இந்தி பேராசிரியராக இருக்கிறார். தாவர உணவு பிரியர்களுக்கு ஹோட்டல் அதிசயை தாராளமாக பரிந்துரைப்பேன். காலையும் இரவும் என வகைவகையாக உண்டோம். பனீர் திகட்டும் அளவிற்கு உண்டாகிவிட்டது. எங்கள் விடுதியில் அகாதமி பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இருந்தார். சிறிய செவ்வந்தி மாலையை அணிவித்து வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அன்றைய நாளின் மொத்த அயர்வும் உடலில் எற படுத்ததும் உறங்கிவிட்டேன். 

No comments:

Post a Comment