Thursday, December 1, 2022

உடலின் தாண்டவம்- எம்.வி.வி குறுநாவல்கள்.

 

மொழி வெளிப்பாடு மற்றும் நிகழ்வுகளின் முரண் என இரண்டு கூறுகளை பொதுவாக இலக்கிய ஆக்கங்களின் இரு அடிப்படை கட்டமைப்புகளாக காண முடியும். ஒரு பிரதி  முதன்மையாக எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது? மொழி வெளிப்பாடு தான் நோக்கம் எனில் மொழி ஒரு திறவுகோலாக புறத்தை அகத்துக்கு திறந்து வைக்கிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல மொழியால் அள்ளப்படுவது யாவும் மொழிக்கு சிக்காத அக ஓட்டத்தின் தடையங்களைக் குறிக்கின்றன. புறத்தில் உள்ள ஒவ்வொன்றும் அகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கின்றன. மொழியை முதன்மை ஊடகமாக கொள்பவர்களை இலக்கியவாதி என சொல்லலாம். இலக்கியவாதியின் கதை வாசிக்க உகந்தது சொல்வதற்குகந்தது அல்ல. மொழியின் வலுவில் நிற்பது. 


நிகழ்வுகளின் முரணை பேசுபவை கதைசொல்லிகளால் எழுதப்படுபவை. வாய்மொழியாக சொல்வதற்கு உகந்தவை.  இவ்விரு போக்குகளும் ஒருங்கமைந்த எழுத்துகளும் அரிதாக அமைவதுண்டு. எழுத்து மரபு வாய்மொழி மரபு என பொதுவாக வகைப்படுத்தலாம். வாய்மொழி மரபு நெடுங்கால வரலாறுடையது. எழுத்து மரபுக்கு முந்தையது. நவீன உரைநடை உருவாகிவந்த போது அது வாய்மொழி மரபின் நீட்சியாகவே திகழ்ந்தது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பு என்பது வாய்மொழி மரபுக்கு மாற்றாக எழுத்து மரபை வலுவாக முன்னெடுத்தது என்பதே. விளைவாக கதைசொல்லல் சற்றே குறைவானது எனும் கருத்து வலுப்பெற்றது. எழுத்து மரபு நிகழ்வுகளை விட அக வெளிப்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தது. கதையிலிருந்து நம்மால் பொருள் செறிந்த மேற்கோள்களை தனித்து எடுத்துக்காட்ட முடிந்தால் அது எழுத்து மரபின் ஆக்கம் என சொல்லலாம். நவீன இலக்கியத்தின் பெரும்போக்கு நம்பிக்கை இத்திசையில் இருந்தாலும் இதன் எல்லையை உணர்ந்து அதை விரிவுபடுத்தி கதைசொல்லலையும் அனுமதிக்கும் பாணிக்கான தேடலும் தொடங்கியது. புதுமைப்பித்தன் வெற்றிகரமாக இந்த இரண்டு போக்குகளையும் ஒருங்கிணைத்தார். ஆனாலும் அது பொது போக்காக மாறவில்லை.   பின்நவீனத்துவத்தின் அறிமுகம் நவீனத்துவத்தின் மதிப்பீடுகளை கேள்விக்குள்ளாக்கியது. கதைசொல்லல், வாசிப்பின்பம், சரளம் போன்றவை எல்லாம் வெகுமக்கள் இலக்கியத்துக்கு உரியது ஆகவே  நவீன இலக்கியத்துக்கு எதிரானது எனும் நம்பிக்கை மறு பரிசீலனைக்கு உள்ளானது. 


இந்த பின்புலத்திலிருந்து எம்.வி.வியுடைய படைப்புலகத்தை அணுகும் போது அவர் எழுத்து மரபை உள்வாங்கிக்கொண்ட ஒரு கதைசொல்லி எனும் எண்ணமே ஏற்பட்டது. ஒப்பு நோக்க 'குற்றமும் தண்டனையும்' மற்றும் 'உயிரின் யாத்திரை' கதைகளில் மட்டுமே சில மேற்கோள்களை தனித்து பிரித்து எடுக்க முடியும். என் வாசிப்பின் எல்லைக்குள், இதுவரை நான் வாசித்த எம்.வி.வியின் ஆக்கங்கள் ஒன்று கூட

 வாசிப்பதற்கு அயர்ச்சியாக இல்லை என்பதையே அவருடைய முதன்மை கலைவெற்றியாக கருதுகிறேன். 'வாசிப்பின்பத்தை' அளவுகோலாக முன்வைப்பதில் உள்ள சிக்கல் யாதெனில் வெகுமக்கள் இலக்கியத்திற்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடையேயான வேறுபாடை அழிப்பதாகும். அகவயமான அளவுகோலை மட்டும் முன்வைப்பதின் சிக்கலும் சேர்ந்துகொள்ளும். ஆனால் இலக்கிய மதிப்பீடு ஒரு எல்லைக்கு அப்பால் அகவயமானதாகவே இருக்க இயலும். எம்.வி.வியின் 'குற்றமும் தண்டனையும்', 'அம்மையே! அப்பா' போன்ற குறுநாவல்கள் சற்று பிறழ்ந்தாலும் வெகுமக்கள் கதையாக புரிந்துகொள்ளப்பட்டிருக்க கூடும். ஒரு கதை வெகு மக்கள் பிரதியா தீவிர இலக்கியப் பிரதியா என்பதை பேசு பொருளோ, அதன் எழுத்து மொழியோ  முடிவு செய்வதில்லை. அது தேய்வழக்கா என்பதுதான் முதன்மை அளவுகோல். தேய் வழக்கு என்பது முதன்மையாக கூறுமுறை சார்ந்ததே. 'உயிரின் யாத்திரை' குறுநாவலைத் தவிர்த்து பிற ஆறு குறுநாவல்களுமே வலுவான கதையமைப்பு கொண்டவை. 'அம்மையே அப்பா' ஒரு குடும்பஸ்தன் திடீரென்று முருகன் அருளால் கொஞ்ச காலத்துக்கு பெண்ணாக மாறிவிட்டு மீண்டும் ஆணாகிறான். பெண்ணாக இருக்கும்போது பிறக்கும் குழந்தையை என்ன செய்வது என குழப்பமாக இருக்கிறது. பல்வேறு புனைவு சாத்தியங்கள் விரிகின்றன. 'குற்றமும் தண்டனையும்' மனோகரன் எனும் ஒரு மணிதனின் மூன்று கட்ட வாழ்வை சொல்வது. பெரும் பணக்காரனாக பிறந்து சொத்துக்காக சகோதரனை கொன்று விபத்தில் தன்னை இழக்கிறான். நினைவுகளை இழந்தவன் வேறொரு குடும்பத்தில் தன்னை பொருத்திக்கொள்கிறான். மீண்டும் ஒரு விபத்தில் முந்தைய நினைவுகளை மீட்கிறான். அப்போது எழும் அறச்சிக்கலே கதை. மனோகரன் நமக்கு பொய்த்தேவு சோமு முதலியையும் பசித்த மானுடம் கனேசனையும் நினைவுறுத்தக்கூடும்.  'அப்பாவும் பிள்ளையும்' சற்று வெள்ளந்தியான கடன்கார தந்தைக்கும் சாமார்த்தியசாலியான சுயமையம் கொண்ட மகனுக்குமான‌‌ உறவை சித்தரிக்கும் கதை. ஜப்தி ஆணை வாங்கிக்கொண்டு வரு தந்தையின் கடன்காரனை எப்படிச் சமாளிக்ககறான் என்பதை  சுவாரசியமாக சொல்கிறது. 'மாய்ஃபாப்' தத்தெடுத்துக்கொண்ட பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே உறவில் உள்ள கண்ணாடி சாளரத்தை சுட்டிக்காட்டுகிறது. 'பெட்கி' ஒரு வயதடைதல் கதை. சற்றே அதிக வயதுடைய உறவினர் பெண்ணுடன் உள்ள உறவுச் சிடுக்கை பேசுகிறது. 'நானும் உன்னோடு' மணமாகி சென்ற வீட்டில் பெண் எதிர்கொள்ளும் அக வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கும் கதை. சொல்லால் சுடும் மாமியார் நழுவிச்செல்லும் கணவன் என அழுத்தங்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது பிறந்த வீட்டுக்கு பிரசவத்திற்கு சென்று இளைப்பார எண்ணுகிறாள். சரியாக அதை தகர்க்க மாமியார் திட்டமிடும்போது தன் முடிவை நிலைநாட்ட எந்த எல்லைவரை செல்கிறாள் என்பதே கதைதான். நன்கு அறிந்த கதையாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மை மற்றும் தொனி காரணமாகவும், கதைமாந்தரோடு நமக்கு ஏறபடும் தொடர்புறுத்தல் காரணமாகவும் அதன் வலுவில் கதை நிற்கிறது. இந்த ஆறு கதைகளுமே வலுவான கதை முடிச்சுகளை கொண்டது. நிகழ்வுகளின் முரண்கள் வழியாக கதையை இறுக்கி செறிவாக்குகிறார். சில கதைகளில் இந்த முரணை சரியாக எதிர்கொள்ளாமல் வழுவிடவும் செய்கிறார். உதாரணமாக பெண்ணாக மாறிய வெங்கட்ராமனுக்கு பிறக்கும் குழந்தையை மீண்டும் ஆணாக மாறிய பின் என்ன செய்வது, குடும்பத்திற்கு அவரை எப்படி அறிமுகம் செய்வது போன்றவை மிக முக்கியமான முரணாக உருவாகும்போது குழுந்தை சட்டென ஓரிரு நாள் சீக்கில் இறந்துவிடுகிறது. இந்த மரணம் ஒரு தப்பிப்பும் கூட. 


எம்.வி.வியின் கதைகளில் தானொரு எழுத்தாளர் எனும் தன் உணர்வு வலுவாக வெளிப்படுகிறது. 'உயிரின் யாத்திரையில்' கனவின் முக்கியத்துவம் பற்றி ஒரு எழுத்தாளராக தனக்கு தெரியாதா என கதைசொல்லி வினவிக்கொள்கிறான். 'அம்மையே! அப்பா' கதை தொடங்குவதே ஒரு கதைக்கான அலைக்கழிப்பில் தான். 'மாஃப்பாப்' மற்றும் 'பெட்கி' ஆகிய கதைகளில் வடூவுர் துரைசாமி ஐயங்கார் பாதிப்பில் கதைகளை எழுதித்தள்ளும் பதின்ம வயது எழுத்தாளரே கதைசொல்லி. 'அப்பாவும் பிள்ளையும்' கதையில் எம்.வி.வி ஒரு கதைமாந்தராக வருகிறார். எழுத்தாளர் என்பதற்காக கதைசொல்லியிடம் வசையும் வாங்கிக்கட்டிக்கொள்கிறார். 'குற்றமும் தண்டனையும்' மற்றும் 'நானும் உன்னோடு' ஆகிய கதைகள் ஓரளவு பெண் மைய கதைகள் என்பதாலேயோ என்னவோ எழுத்தாளர் எம்விவி கதைக்குள் பாத்திரமாகவில்லை. 


கதைகளின் மற்றொரு பொதுத்தன்மை என்பது 'குற்றமும் தண்டனையும்' தவிர பிற அனைத்து கதைகளுமே சவுராஷ்டிர பட்டுநூல் நெசவாளர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்டவைதான். கதைக்களமும் கும்பகோணமும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்தான். மிகச்சரளமாக சவுராஷ்டிர மொழியை உரையாடல்களிலும் கதைகளின் தலைப்புகளிலும் பயன்படுத்தியுள்ளார். கும்பகோண சவுராஷ்டிரர்களுக்கும் மதுரைக்காரர்களுக்கும் இடையேயான புடவை கச்சத்தில் உள்ள வேறுபாடு தொடங்கி புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் ஒரு வருடம் வரை நான்கு வேளை விருந்திடவேண்டும் எனும் பழக்கம் வரை பல சுவாரசியமான தகவல்களை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் எம்விவி. 


'மாய்ஃபாப்' மற்றும் 'பெட்கி' ஆகிய இரண்டு கதைகளுமே பள்ளி பருவத்து நினைவுகளை அடிப்படையாக கொண்டவை. இரண்டிலும் வெங்கட்ராம் சொன்னா எனும் பதின்ம வயது பையனாக வருகிறான். வளர்ப்பு தாய், தந்தையர் விதவையான அத்தை லட்சுமி பாய் ஆகியோரின் சித்தரிப்பு மற்றும் கதை களத்தின் சித்தரிப்பு  ஓன்றே.  தன்வரலாற்றுத்தன்மை கொண்டவை. சவுராஷ்டிர சொற்களை தலைப்பாக கொண்டவை. 'மாய்ஃபாப்' கதை சிடுக்கென்பது எம்.வி.வியின் சொற்களில் சொல்வதானால் 'நான் அவர்கள் பெற்ற பிள்ளை அல்ல, வளர்ப்புப் பிள்ளை.' என்பதுதான். ஐந்து வயதுவரை மாமா மாமி என்று அழைத்தவர்களை அப்பா அம்மா என்றழைக்க மனம் பழகவில்லை. அப்பா அம்மா என மனமார கருதினாலும் கூட கூச்சமும், கூச்சத்துடன் பிடிவாதமும் சேர்ந்து கொண்டது. சற்றே எள்ளல் கலந்த தொனியில் பதின்ம அனுபவத்தை நினைவுகூரும் வடிவத்தில் கதை நகர்கிறது. வளர்ப்பு பெற்றோரின் குழுந்தைகள் பிறந்திறந்து போகும் சித்தினத்தை ஒரு பத்தியில் அளித்திருப்பார். ஆனாலும் அது மனதை தொந்திரவு செய்வதுதான். அம்மா அப்பாவென அவனை அழைக்கவைக்க அவர்கள் மேற்கொள்ளும் சில விபரீதமான நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளன. குளித்து முடித்துவிட்டு ஆடையை பெற தூணில் ஒளிந்துகொண்டு உடைகளை எடுக்க அலமாரி சாவியை கேட்கும்போது அப்பாவென கூப்பிடு என்கிறார். பிறகு சாவியை அம்மாவிடம் வீசிவிட்டு அங்கும் இதே கதைதான். வளர்த்தவர்கள் திட்டியதும் நேராக அவன் கால்கள் அசல் பெற்றோரின் வீட்டை நோக்கிச் செல்கிறது‌. அவனே இயல்புக்கு திரும்பிவிட்டாலும் அவ்வுறவில் உள்ள 'எளிதாக உடையும்' தன்மை புலப்படுகிறது. எப்போதும் நிரூபணம் கோரும் உறவு நிலையானதாக இருக்க முடியாது. தற்கொலை முயற்சி என எண்ணி மாமாங்க குளத்திற்கு ஆளனுப்பி தேடிக்கொண்டிருக்கும்போது சொன்னா கூச்சத்துடன் வீடு திரும்புகிறான். லகுவான மொழியில் நுட்பமான உணர்வுகளை பேசும் கதை. 'பெட்கி' ஒரு பதின்ம வயது உறவுக்கார அக்காவுடனான பாலியல் அனுபவத்தைப் பற்றி பேசும் கதை. பெட்கியின் வாழ்க்கைச் சித்தரிப்பு கூர்மையானதாக வந்துள்ளது. பொதுவாக எம்.வி.வி கதைகளில் பெண்கள் வேட்கை கொண்டவர்களாக, துணிந்தவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். 'உயிரின் யாத்திரை' லீலா, 'குற்றமும் தண்டனையும்' நீலா, 'அம்மையே அப்பாவில்' பெண்ணாக தோற்றமெடுக்கும் ராணி என இவர்களின் உச்ச வடிவம்தான் 'காதுகள்' நாவலில் மாலியின் மீது பாயும் நாசகாளி. வேட்கையுள்ள சவுந்தர்யத்தின் மறுபுறம் மாபெரும் கோரம் உள்ளது எனும் சித்தரிப்பை தொடர்ச்சியாக காணமுடிகிறது. ஏறத்தாழ உருமாறும் சூணியக்கார கிழவி எனும் தொல்படிமம். அழகு ஆபத்தானது என எச்சரிக்கைக்கொள்ளும் மனதின் பதிவு. மறு எல்லையில் நிறைவான குடும்ப வாழ்க்கை வாழும் பெண்களும் சித்தரிக்கப்படுகிறார்கள். 


எம்.வி.வி அடிப்படையில் ஒரு மறைஞான எழுத்தாளர். அவருடைய ஆகப்பெரும் கேள்வி என்பது செறிவான ஆன்மீக வாழ்க்கைக்கும் மறைஞான அனுபவத்திற்கும் குறுக்கே உள்ள சதையுடலின் காம வேட்கையை என்னச் செய்வது என்பதுதான். 'அப்பாவும் பிள்ளையும்' சாமி தொடங்கி, 'அம்மையே அப்பா' ராணி, 'குற்றமும் தண்டனையும்' நீலா என அனைவரும் கண்ணாடி முன் தங்களை ரசிப்பவர்களாகவே இருக்கிறார்கள். நீலா உடலை வழிபடுபவள். சாமி தன் தோற்றத்தை முதலீடாக கொண்டவன். 'அம்மையே அப்பாவில்' முருகக் கடவுளுடன் எழுத்தாளர் வெங்கட்ராமனுக்கு ஒரு சுவாரசியமான உரையாடல் நிகழ்கிறது. முருகன் கேட்கிறார் 'உடலாசை இப்படி உன்னைப் பேச வைக்கிறது. உடலை ஒழிப்பதென்றால் உனக்கு அச்சமாக இருக்கிறது. உன் கதைகளில் உடல்தானே தாண்டவமாடுகிறது! இல்லையா?' என. கிட்டத்தட்ட இது எம்விவி தன் படைப்புலகைப் பற்றி அவரே வைக்கும் அவதானிப்பு. முருகன் ஒரு வரமளிக்க முன்வரும்போது, ஆணாகவும் பெண்ணாகவும் ஏழு பிறவிகள் எடுத்து இடையீடற்ற இன்பத்தை நுகர வேண்டும் என வரம் வேண்டுகிறார். அதற்கு மாற்றாக பதினெட்டு மாதங்கள் பெண்ணாக வாழ்ந்து இன்பத்தை துய்ந்தபின் மீளும் வரம் ஒன்றை அளிக்கிறார் முருகன். பெண்ணாக தன் உருவின் மீதே பிரேமை கொள்கிறான். அவனுக்குள் உள்ள ஆண் மனம் 'இந்தப் பெண்மையைத் தானே நுகர முடியாதே என்கிற தாபம் சற்று நிழலாடிவிட்டு மறைந்தது.' என மருகுகிறது. 



கதைகளின் ஊடாக அவருடைய கேள்வியுடன் அவர் ஃபிராய்டை எதிர்கொள்கிறார். அவருடைய படைப்பில் நிகழ்ந்த முக்கியமான இடையீடு என இதைச்சொல்வேன். ஒரு மரபான மனம் ஃபிராய்டை எதிர்கொள்ளும் போது நேரும் உராய்வும் அதனூடாக அவருக்கு ஏற்படும் அறிதலும் கவனிக்கத்தக்கது. உடல் வேட்கையை புரிந்து கொள்ள ஃபிராய்டை அணுகுகிறார். 'உயிரின் யாத்திரை' மற்றும் 'அம்மையே அப்பா' ஆகிய இருகதைகளிலும் பிரம்மச்சாரிகள் காமத்தில் வீழும் ஏமாற்றுக்காரர்களாக வருகிறார்கள் என்பதும் கூட ஒரு ஃப்ராய்டிய கோணம்தான். 'குற்றமும் தண்டனையும்' கதை கணவனின் வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் மனைவி ஹரிணி ஃபிராய்டை வாசித்தும் அது குறித்து சிந்தித்தும் கழிக்கும் சித்திரத்துடன் தொடங்குகிறது. எல்லா செயல்களுக்கும் அடியில் பாலுணர்வு தொழிற்படுகிறது எனும் ஃபிராய்டிய சிந்தனையைப் பற்றி ஹரிணி 'வக்கிரமாகவும் விபரீதமாகவும் ஏதாவது சொல்வதுதான் அறிவாளியின் லட்சணம் போலும்' என எண்ணுகிறாள். ஆனால் அதை தவறென சொல்லிவிட இயலுமா என குழம்புகிறாள். 'கணவனைத் தவிர யாரையும் மனதான நினைத்ததில்லை- இந்த மன நலன் உடைய பெண்மணியைத்தான் பதிவிரதை என்கிறோம் இல்லையா? ஆனால் இந்தப் பெருமைக்கு அடிப்படை உடலின்பம் என்பது கொடுமையாகத் தோன்றலாம், அதற்காக, வேறு காரணங்களை கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் அவளுடைய உடலோடு புத்தியும் மனமும் கணவனிடம் அடைக்கலம் ஆவதற்கு இதுதான் அதிகாரணம்' என ஒரு முடிவுக்கு வருகிறாள். 

 

மேலும் இயற்கையை வெல்வதே மனிதனுடைய வெற்றி என்றால் பிறவி முதல் தொடரும் பாலுணர்வை வென்றடக்கும் முறையாக இந்து மதம் வகுத்த பதிவிரதா தர்மத்தை காண முடியும் என எண்ணுகிறாள் ஹரிணி. இத்தகைய 'தர்ம விசாரம்' கூட  பாலுணர்வை சுற்றியே சுழல்வதை உணர்கிறாள். கணவன் காணாமல் போய் சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி வரும் காலகட்டத்திற்குள் அவளிடம் சில மாறுதல்கள் ஏறபடுகிறது. அப்போது அவள் 'ஃபிராய்டு போன்ற அறிஞர்களின் நூல்களை அணுகி பாலுணர்ச்சியின் ஆதியை ஆராய்வதில்லை. பாலுணர்ச்சியை மட்டும் அல்ல; எல்லா உணர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துவது எப்படி என்று விளக்கும் இந்நாட்டு நூல்களோடு பழகலானாள். மனிதப் பிறவி எடுப்பவர்கள் தங்கள் வாழ்க்கை விதியை வகுத்துக்கொண்டு பிறக்கிறார்கள். வாழும் முறையால் விதியை வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய உணர்ச்சிகளும் இயல்புகளும் அவர்கள் வகுத்துக்கொண்ட விதிக்கு ஏற்பத்தான் அமைகின்றன; ஃபிராய்டு போன்ற அறிவாளிகளின் அளவுகோலுக்கு எந்த உணர்ச்சியும் இயல்பும் அடங்காது என்று அவள் தெளிவு செய்துகொண்டாள்.' என அவள் மனநிலை விவரிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இந்திய குடும்ப அமைப்பை ஃபிராய்டிய நோக்கில் மறு பரிசீலனை செய்கிறது அவரது கதை. 'உடலுறவும் மனவுறவும் ஆத்மீக அடிப்படையில் வைப்பதால் இந்துக்களின் மணவினை பல்லாயிரம் ஆண்டுகளாய் ஒழுங்காக ஓடுகிறது.' என மனோகர் நீலாவுக்கு இடையேயான உறவைக்குறித்து விவரிக்கும்போது எழுதுகிறார்.  'பெட்கி' கதையில் இரவு முழுவதும் பெட்கி அளிக்கும் பாலியல் அழைப்புக்கு தன்னை ஒப்புகொடுக்காமல் கட்டுப்படுத்திக்கொள்வதையொட்டி 'தீனி தந்துதான் காமத்தை அடக்க வேண்டும் என்ற அவருடைய (ஃபிராய்டிய) சித்தாந்தம் தவறானது என்பதை அன்றிரவு நான் நிலைநாட்டிவிட்டேன் என்று அப்போது எனக்குத் தெரியாது.' என எழுதுகிறார். கட்டற்று இன்பத்தை நுகர்தலுக்கும் கட்டுப்பாடுக்கும் இடையிலான தேர்வு சார்ந்து ஒரு ஊசலை அவர் கதைகளில் காண முடிகிறது. மனோகர் ஹரிணியிடம் தனது வாதத்தை வைக்கிறான் 'வரையறுக்கப்பட்ட எந்த சுகமும் சுகமாய்த் தோன்றவில்லை. 

தன்னை மறக்கும் போதுதான் ஒருவனால் இன்பத்தை முழுமையாக நுகர முடிகிறது.' மேலும் பாவத்திற்கு அஞ்சுவது கோழைத்தனம் என கருதுகிறான் 'பாவம் என்பது என்ன? ஒரு வெறும் கருத்துதானே? கருத்துக்கள்தான் உலகத்தை அழிக்கின்றன.' விபத்துக்கு பின் நீலாவின் கணவனாக முந்தைய நினைவுகள் அழிந்தபின் இதற்கு நேரெதிரான நிலைப்பாடிற்குச் செல்கிறான். முன்பு கோழைத்தனத்தை இழிவாக கருதியவன்   அப்போது அதை மனிதத்தன்மையின் லட்சணமென கருதினான். கதை நாயகர்கள் மீண்டும் காமத்தை எதிர்கொள்கிறார்கள். அதற்கு ஆட்படாமல் தப்புகிறார்கள். 'காதுகள்' மற்றும் 'உயிரின் யாத்திரை' ஆகிய இரண்டு கதைகளிலும் காமத்தை கிளர்த்தும் பெண் உரு விடுதலையை மறைக்கும் மாயையின் உருவமாக மேல்நிலையாக்கம் அடைகிறதது. நவீனத்துவ எழுத்துலகை கட்டமைத்ததில் ஃபிராய்டுக்கு மிக முக்கிய பங்களிப்பு உண்டு. எம்விவி எழுதிய காலகட்டம் நவீனத்துவம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஃபிராய்டிய பகுப்பாய்வு எனும் புதிய கருவியை இந்திய எழுத்தாளர்கள் ஊக்கத்துடன் அனைத்து தளங்களிலும் பயன்படுத்தி உலகையும் வாழ்க்கையும் புரிந்துகொள்ள முற்பட்டிருக்க வேண்டும். எம்விவி இந்திய மெய்யியலில் காலூன்றியபடி ஃபிராய்டை எதிர்கொள்கிறார். ஃபிராய்டை முழுமையாக ஏற்கும்போது அவர் நம்பிய, அனுபவப்பூர்வமாக உணர்ந்த இந்திய ஆன்மீகத்திற்கு அங்கு இடமில்லை. ஆகவே அவர் அதை அதற்குரிய மதிப்பை அளித்துவிட்டு மறுத்தும் கடந்தும் செல்கிறார். 



சவுந்தர்யத்தின் மறு எல்லை கோரம் என்பது போலவே காமத்தின் மறு எல்லை இறையனுபவம் என்பதை எம்விவி உணர்த்துகிறார். 'அம்மையே அப்பாவில்' 'ஆணுக்காயினும் பெண்ணுக்காயினும் இன்பம் வலிக்கத்தான் செய்கிறது. வலியில் பல சாயல்கள் இருக்கின்றன, இந்தச் சாயல்களில் தான் மனிதன் இன்பம் தேடிக்காண்கிறான் என்கிற உண்மை அவனுக்கு தெளிவாக புரிந்தது.ஆனால் இன்பம் தேடும் ஆர்வம் என்னவோ புரிந்து பின்னும் குன்றிவிடவில்லை.' என எழுதுகிறார். இன்பமும் வலியும் தவிர்க்க முடியாத இருமை எனும் தரிசனத்தை முன்வைக்கிறார்.  

 இறையனுபவத்திற்கும் காமத்திற்கும் இன்றியமையாத உறவிருப்பதை கண்டுகொள்கிறார். காமத்திலிருந்து கடவுளுக்கு என்பது இந்திய பண்பாட்டில் தொன்றுதொட்டு வழங்கப்படும் வழிமுறை. எம்.வி.வி முதன்மையாக ஒரு மறைஞான எழுத்தாளர் என குறிப்பிட்டிருந்தேன்.  காதுகளை அத்வைத வேதாந்த நாவலாக வாசிக்க இடமுண்டு. 'உயிரின் யாத்திரையையும்' அந்த வகையில்தான் வாசிக்க வேண்டும். அவருடைய அறிதல் புலத்திலிருந்து அரிய அனுபவங்கறளையும் கற்பனைகளையும் கதையாக்க அவர் தயங்குவதில்லை. பகுத்தறிவுக்கு அது உவப்பானதா பிழையாக புரிந்துகொள்ளப்படுமா, பிரச்சாரம் என கருதப்படுமா என்று தயங்குவதில்லை. உயிரின் யாத்திரை கதையில் வரும் சதாசிவம் இரண்டைக் கடந்தவன் என்கிறார். இரண்டை கடந்த தன்னை வெளிப்படுத்தாத முழு மனிதனை சித்தரிக்க முயல்கிறார். மோகமுள் நாவலில் பாபுவின் தந்தைக்கு குருவான ராஜூவின் சித்தரிப்பின் சாயலை காண முடியும். 'உயிரின் யாத்திரை' கதைசொல்லி ராஜாவால் தன்னிலையில் சொல்லப்படுகிறது. மணமாகி சில ஆண்டுகளே ஆன பிரியத்துற்குரிய மனைவியின் மரணப்படுக்கையை சித்தரிப்பதில் தொடங்குகிறது கதை. கிட்டத்தட்ட தெய்வத்தை பழித்து பிலாக்கணம் வைக்கிறான் ராஜா. 'மரணத்தை வரவேற்பதற்கு மனிதர் கூறும் முகமன் மௌனம் போலும்.' என படுக்கையில் படுத்துக்கிடக்கும் மனைவியை சுற்றி நிலவும் அமைதியைப்பற்றி எண்ணுகிறான். ஆடாது அசையாது எரியும் தழல் போலிருக்கும் சதாசிவம் அருமருந்தை அளிக்கிறார். ராணியின் மரணத்தை நெருங்கி அனுபவம் நவீனத் தமிழ் இலக்கியத்தில்  எனக்கு தெரிந்து முதன்முதலாக பதிவான மரணத்தை அணுகும் அனுபவம் (Near death experience) என்று ஊகிக்கிறேன். மரணத்தருவாயில் இருந்து பிழைத்து வந்தவள் வெள்ளமாய் ஓடும் ஆற்றுள் மூழ்குவது போலும் பிறகு எவரோ பிடித்து மேலே இழுத்து வருவதை போலவும் உணர்ந்ததாகச் சொல்கிறாள். ஆனால் அந்த சமயத்தில் அவள் துளி கூட அச்சத்தை உணரவில்லை. அவளால் எதிர்வினையாற்ற முடியவில்லை என்றாலும் தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தையும் முழு பிரக்ஞையுடன் காண்கிறாள். 

 சதாசிவத்துக்கும் ராஜாவுக்கும் இடையேயான முற்பிறவி உறவு ராஜாவுக்கு கனவெனும் ஊடகம் வழியாக துலங்குகிறது. 


'கனவுதானே, அர்த்தம் இருந்துதான் ஆக வேண்டுமா என்று லேசாக அதைத் தள்ளிவிட முடியவில்லை என்னால் வாழ்க்கை ஒரு கனவு என்கிறார்கள்; கனவுக்குள் இக்கனவு. வாழ்க்கை என்னும் கனவு காரணகாரியச் சுழலுக்குக் கட்டுப்பட்டது என்றால், கனவில் கண்ட கனவும் அதற்கு உள்பட்டதுதானே?' என கர்ம கோட்பாடையும் அத்வைத வேதாந்த விசாரனையும் மேற்கொள்கிறார்.‌ 

 மறைஞான அனுபவத்தை   சொல்லாக்கி கடத்துவது மிகச்சவாலான விஷயம். சற்று தப்பினாலும் கேலியாகிவிடும். இந்திரா சவுந்தரராஜன் இத்தகைய கருவில் பலகதைகளை எழுதியருக்கிறார்.  ஒன்பதாவது அத்தியாயமான 'உயிரின் விழிப்பில்' வரும் விவரனையின் வெம்மையே இக்கதையை பிற வெகுமக்கள் படைப்புகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. 'காதுகளில்' நாசகாளியின் பேருருவிற்கு இணையான பகுதி லீலாவின் மாயைத்தோற்றம். சதாசிவத்தை காண விடாமல் மரித்து நிற்கிறாள். முதலில் மயக்கவும் பின்னன் அச்சுறுத்தவும் செய்கிறாள். திண்ணமான ஒரு உட்குரல் அப்போது அவனை வழிநடத்துகிறது. 'காதுகள்' இத்தகைய வழிநடத்தும் குரல்களால் ஆனதே. 'குற்றமும் தண்டனையும்' கதையில்  மனோகர் நீலாவை கொல்லும்போதும் துல்லியமான குரல் அவனை வழிநடத்துகிறது. அதன் பின் அவனுக்கு வினோதமான அனுபவம் ஏற்படுகிது. 'என் தலையுச்சியில் யாரோ ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டாற் போல் டப் என்றோர் ஓசை உண்டாகிறது.' உடல் முழுவதும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவனே அவனுக்கு சாட்சியாகிறான்.

அச்சுறுத்தும் பேயுரு கொண்ட பயங்கரியிடம் 'அண்டங்களையும் அகிலாண்டங்களையும் ப்ரமாண்டங்களையும் உண்டாக்கி உண்டு உமிழும் சதாசிவம் நான். ஞானவாளுருவி எறிவேன்.' என திடமோடு அவன் பேசுவதை அவனே கேட்கிறான். போர்ஹேஸின் 'அலெஃப்' பற்றி நாம் பேசுகிறோம். அவ்வனுபவத்துடன் இணைத்து பார்க்க வேண்டிய கதை இது. 


கடந்த ஆண்டு முதன்முறையாக அவருடைய 'காதுகள்' நாவலை வாசித்தபோது, இப்படி ஒரு நாவலை எழுத அபார மன திண்மையும் தன்னுணர்வும் வேண்டும் எனத்தோன்றியது. எம்.வி.வியே குறிப்பிடுவது போல் இது ஒரு தன்வரலாற்று நாவல். மெல்லிய புகைச் சங்கிலிக்கு அப்பால் நின்று தனது பித்து நிலையை சாடசியாக  நோக்குவது, அதுவும் பல வருடங்கள் தொடர்ச்சியாக உள்ளுக்குள் பித்துநிலை நுரைத்து கொண்டிருந்தாலும், வெளியே இயல்பு வாழ்க்கை வாழ்ந்து புத்தகங்களும் கதைகளும் எழுதி பிள்ளைகளை வளர்த்தபடி இருப்பது என்பதை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. எம்.வி.வி பெரும் வீரர்தான். 


இந்திய மெய்யியல் மொழியில் சொல்வது என்றால் தனது கனவு நிலையை விழிப்பு நிலையை சாட்சியாக கொண்டு காண்பதும் அதை சொல்லாக வடிப்பதும் அரிய சாதனை. கவிதைகளின் இத்தெறிப்புகளை அவ்வப்போது காண முடியும். எல்லா பெருங்கவிகளும் ஓரிரு கவிதைகளிலாவது இப்படி வெளிப்படுவார்கள். பிரமிளின் கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. உரைநடை இலக்கியத்தில் இத்தகைய பித்து வெளிப்படுவது வெகு அரிது என்றே எண்ணுகிறேன். புயலிலே ஒரு தோனியில் வரும் மதுக்கூட உரையாடல், ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் இறுதியில் வரும் அபத்த நாடகம்,   ஆகியவை இவ்வகையான எழுத்து தன்மையை கொண்டவை என சட்டென நினைவில் எழுகின்றன.  


நவீன உளவியல் கோணத்தில் நோக்கினால் உளச் சிதைவு எனும் ஸ்கீசோப்ரினியாவின் இலக்கியப் பதிவு என சொல்லலாம். தாந்த்ரீகத்தில் பரிச்சயம் உள்ளவர்கள் இது ஒரு குண்டலினி கோளாறின் முதன்மை பதிவு என சொல்லக்கூடும். இத்தகைய கணமான அனுபவத்தை எழுதும்போதும் அதை தலைகீழாக்கும், கேலி செய்யும் பகடியை அவர் கைவிடாதிருப்பது பெரும் வியப்புதான். இதே போன்று இறையருளைப் பேசு பொருளாக கொண்ட கதை 'அம்மையே! அப்பா!' பழனியாண்டவர் சட்டென ஓரிரவு வெங்கட்ராமனுக்கு முன் தோன்றி பெண்ணாக மாறும் வரத்தை அளிக்கிறார். பெண்ணாக மாறியதும் முருகனையே மணக்க விரும்புவதாக சொல்லும் இடமும் குறத்தி திட்டுவாள் என முருகன் மறுக்கும் இடமும் புன்னகைக்க வைப்பவை. கதையிறுதியில் பதினெட்டு மாத பெண் அனுபவம் போதவில்லை என்பதால் அடுத்து ஒரு பிறவி மட்டும் பெண்ணாக பிறந்து சுகம் அனுபவிக்க முருகனிடம் அருள் கோருகிறார்.  'காதுகள்' நாவலில் பல இடங்கள் தன்னிச்சையாக கூர்மையான பகடி வெளிப்படுகிறது. அதுவும் இருண்ட நகைச்சுவை பகுதிகள். உதாரணமாக மாலியின் மகள் இறந்துவிட்டதாக குழப்பும் பிரமை நிலையில் ஒப்பாரி பாடல்கள் ஒலிக்கின்றன. மாலி நடுங்கிக் கொண்டிருக்கிறான். அதன் முடிவில் ஒரு குரல் சொல்கிறது. 'பாட்டு அருமை எல்லாரும் கைத்தட்டுங்க'. என்று. கந்தர் அனுபூதியை சொல்லிக்கொண்டே பிரமையை கடக்க முற்படுகிறான். அப்போது ஒரு குரல் 'இலக்கண பிழைகள் மலிந்த நூல். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இருபத்தியாறு பிழைகள் புலப்பட்டுள்ளன. மேலும் ஆய்வு செய்து..' என சொல்கிறது. இத்தகைய இரண்ட நகைச்சுவைக்கு தமிழில் எம்.விவிக்கு ஒரு தொடர்ச்சி உண்டு என்றால் அது இரா. முருகனின் 'அரசூர் வம்ச' நாவல் வரிசையில் தான். இதேபோல் சட்டென புன்னகைக்க வைக்கும் சில தருணங்களையும் விவரணைகளையும் சுட்டிக்காட்ட முடியும். உதாரணமாக 'மாய்பாஃப்' கதையில் வரும் ஒரு பகுதி‌ 'என்ன அறியா வயசு? கலியாணம் பண்ணினா ரெண்டு பிள்ளை பெறுகிற வயசாச்சு…'

சத்தியமாய்ச் சொல்கிறேன், எனக்கு அப்போது அந்தப் பாவம் தெரியாது. கலியாணம் செய்திருந்தால் ஒரு குழந்தையை கூட எனக்கு பெறத் தெரியாது. ஆனால் அப்பாவே குற்றம் சாட்டும்போது நான் எப்படி மறுக்க முடியும்.' அதேகதையில் எலிவால் எனும் பாத்திரம் பற்றிய விவரனை இது 'சட்டைக்குள் கைவிட்டுத் தேடினால்தான் அவன் உடம்பு கையில் கிடைக்கும்.' அப்பாவும் பிள்ளையும் கதையில் வரும் வக்கீல் குமாஸ்தா  ஆராவமுதுவின் இயல்பை நிறுத்த இந்த ஒரு விவரனை போதும். 'எதுகை மோனை பிசகாமல் சம்பிரதாயப் பூர்வமாக சாப்பிட்டார்‌.'



எம்.வி.வியின் கதைகளில் கவனித்த மற்றொன்று அவர் உருவாக்கும் தந்தை மகன் உறவு. 'தந்தையர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள்.' என ஒரு கதையில் எழுதுகிறார். தாய் தந்தையரை குறைசொல்லக்கூடாதுதான் ஆனால் அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என அங்கலாய்க்கிறார். 'மாய்ஃபாப்' மற்றும் 'அப்பாவும் பிள்ளையும்' ஆகிய கதைகள் இரண்டுமே தந்தை மகன் உறவை பேசுபவை. 'குற்றமும் தண்டனை' ராமநாதன் இரும்பு மனிதராக வருகிறார். இழப்புகள் வழியாக வாழ்க்கை பாடத்தை கற்கிறார். உயிரின் யாத்திரை சதாசிவம் முற்பிறவியில் தந்தையாக இருந்தவர். அப்போது ஈட்டிய கர்மக் கடனை கழிக்க இவர்களுக்கு உதவுகிறார். 'அப்பாவும் பிள்ளையும்' ஒரு சீரழிந்த குடும்பத்தை காட்டுகிறது. தாயும் தந்தையும் பேசிக்கொள்ளாமலேயே பல ஆண்டுகள் கடந்தவர்கள். தந்தை சாமார்த்தியமின்மையால் பூர்வீக சொத்தை இழந்தவர். மகன் அந்த பொறுப்பின்மையின் சுமையை சுமக்க வேண்டியிருந்தது. மகன் தந்தையின் பாத்திரத்தை ஏற்கிறான். தந்தையிடம் தன்னை நிறுவும் உந்துதலும் அவரை மட்டம் தட்டும் விழைவும் அவனை இயக்குகிறது. அவருடைய கடனை ஏற்க மறுக்கிறான். ஜப்தி வரை வந்தபின்னரும் அதை தவிர்க்க முயல்கிறான். சிக்கலில் இருந்து தற்காலிகமாக மீண்ட பின்னர் தந்தையை கைவிடுகிறான். 



எழுத்தாளருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவரை வாசிப்பதுதான். வாசிக்கப்படும்வரை எழுத்தாளர் உயிர்த்திருக்கிறார். இந்த தருணத்தில் எம்.வி.வெங்கட்ராமின் முழுத்தொகுதி பெரும் உழைப்பில் நேர்த்தியுடன் வெளிவந்திருப்பது மிக முக்கியமான விஷயம். தொகுப்பாசிரியர்கள் ரவி சுப்பிரமணியம் மற்றும் கல்யாணராமனுக்கும் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நன்றி. எம்.விவி மீண்டும் வாசிக்க இது ஓரு முகாந்தரம். மறுவாசிப்பில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவே எம்விவி எழுந்துவருகிறார். 


சுனில் கிருஷ்ணன் 




 






No comments:

Post a Comment