புத்தகங்கள்

Pages

Saturday, December 31, 2022

2022 நினைவுப்பாதை

 

                                                            


வழக்கம் போல் வருடக் கடைசியில் கொஞ்சம் நினைவுகளை ஓட்டிப்பார்க்கும் நேரம். பெரிதாக ஏதும் கதைகள் எழுதவில்லை, புதிய புத்தகங்கள் எதையும் வாசிக்கவில்லை. இது  பயணங்களின் ஆண்டு. ஜெயமோகனின் அறுபதாம் ஆண்டு நிறைவு, அதையொட்டி சியமந்தகம் வெளியீடு. தமிழ் விக்கி என தொடர் செயல்பாடுகளின் காலம். 2022 எனது இதுவரையிலான வாழ்வில் முக்கியமான ஆண்டு என கருதுகிறேன்.மூன்று பெரிய பயணங்கள் செய்து வந்தேன். மூன்று பெரும் ஆளுமைகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த ஆண்டு. ஜூனில் சிம்லா இலக்கிய விழாவில் இந்திய இலக்கிய முன்னோடிகளின் ஒருவரான எஸ். எல். பைரப்பாவை சந்தித்தேன், நவம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் எனது ஆதர்சங்களில் ஒருவரான டெட் சியாங்கின் உரையை நேரில்  கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பரில் தரம்சாலாவிற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்ததை இப்பிறவி பேறாக கருதுகிறேன். அவருடன் இருந்த இருபது நிமிடங்களை என் வாழ்வின் ஆக சிறந்த தருணமாக கருதுகிறேன். இலக்கியத்தில் இனி எனக்கு எந்த விருது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், இதில் இயங்கியதற்காக பயன்மதிப்பை அடைந்துவிட்டேன். 


Shyam Pakhre, Ramesh Oza, Jegadeesh Lkkani, Dalai Lama, Shodang Rinpoche

காந்திக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்னை தலாய் லாமாவரை கொண்டுவந்து விட்டார். இதை இப்போது எழுதும்போது கூட அவரது  தொடுகையின் சிலிர்ப்பை, அவரது உரத்த சிரிப்பை நினைவுகூர்கிறேன். அவருடைய ஆசிகளுக்கு நான் தகுதியுடையவனா என தெரியவில்லை. ஆனால் அதை ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுவே எஞ்சிய வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும்.  சிம்லா பயணத்தைப் பற்றி அங்கு சந்தித்த பிற மொழி எழுத்தாளர்களை பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். நேரம் வாய்க்கவில்லை. தலாய் லாமாவிடம் ஆசிபெற்றதைப்பற்றி என்னால் எழுத முடியுமா எனத்தெரியவில்லை. சொற்களாகாத பகுதியிலேயே அது சேகரமாகட்டும்.  



இந்த ஆண்டு ஒண்ணெயோன்னு கண்ணே கண்ணு என ஒரேயொரு சிறுகதைதான் எழுதினேன். அதுவும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தீபாவளி மலருக்காக கேட்டதனால். நெடுநாட்களுக்கு பின் எழுதினாலும் கதையெழுதும் ஆற்றல் நம்மை கைவிடவில்லை எனும் நிறைவை தக்கவைத்துக்கொண்டேன். 



 முதலில், நாமெல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த நற்செய்தியை (நற்செய்தியா- தெரியவில்லை, ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா என்ன- சும்மா சொல்லிப்பார்ப்பதுதான்) இயம்பி- ஆம் நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.  நிதானமாக நகர்கிறது, எத்தனை அத்தியாயங்கள், எத்தனை பக்கங்கள் என ஏதும் தெரியவில்லை.  விஷ்ணுபுரம் விழாவில் ஜெயமோகனிடம் 'புனைவு எழுத வருமா என்றே எனக்கு ஐயம் வந்துவிட்டது. அதைத் தவிர்க்க அடுத்தடுத்து ஏதோ செய்துகொண்டே இருக்கிறேன். இப்போது நான் என்ன செய்ய?' என கேட்டேன். அவர் என்ன சொல்வார் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவரிடமிருந்து அந்த சொல்லை பெறுவது நல்லது. பிடிவாதமாக எழுதவும் என்பதே ஜெ எனக்கு சொன்ன ஆலோசனை. விடாமல் பத்துநாட்கள் எழுதவும், தானாக சரியாக வரும் என்றார். விழா முடித்து மறுநாள் எழுத தொடங்கினேன். 

Kanishka Gupta, Mamang Dai, Jey, Ramkumar, Senthil


இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய நீள்கதையை நாவலாக மாற்ற முடியும் என தோன்றியது. அந்தக் கதையை ஜெ பலிக்கல் எழுதுவதற்கு முன்னரே எழுதியிருந்தேன்.  நிறைய ஒற்றுமைகள். கதையை கைவிட மனமில்லை. வேறொரு புள்ளியிலிருந்து வேறொரு கேள்வியுடன் அணுக முடியுமா என பார்க்கிறேன்.  ஆகவே எழுத தொடங்கியுள்ளேன். முதல் சில நாட்கள் ஏனோதானோவென சில வரிகள் எழுதினேன். பழகிய தடங்களில் , வசதி வட்டத்திற்குள் மனம் உழன்றபடி இருந்தது. 

Siyamanthakam release. first moment


நாவல் எழுதுவது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். ஒரேமனநிலையில் நீண்டகாலம் திளைத்திருப்பது.  புதிதாக ஏதோ ஒன்றை கண்டறிவது. நாம் நன்கறிந்த பொருளையே புதிய ஒளியில் காண்பது. மொழியும் போதமும் கூராகும். சிலவகையான இசை, சில வகையான புத்தகங்கள் மட்டுமே வாசிப்பது என அந்த மனநிலையிலேயே நீடிப்பது ஒரு போதை. பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்கள் எல்லாம் நாவலின் ஒரு பகுதியா இல்லையா எனும் அளவையைக் கொண்டே அளக்கப்படும். கடந்த திங்கள்கிழமை இதுதான் நாவலின் முதல் அத்தியாயம் என கருதத்தக்க ஒரு புள்ளி அகப்பட்டது. அதுவரை இருளில் துழாவிக்கொண்டுதான் இருந்தேன். இந்த தூரத்து வெளிச்சம் போதும். நாவலை எழுதிவிட இயலும் எனும் நம்பிக்கையை எனக்களிக்கிறது. தொன்மத்தில் இருந்து வரலாற்றுக்கு என்னை இட்டுச் சென்றுள்ளது. தொடர்பான வாசிப்புகளையும் தேடல்களையும் நிகழ்த்தி வருகிறேன். எப்படி வருகிறது என பார்ப்போம். 

S. Suresh, S.L.Bhyrappa at Simla


கடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் ஐந்து நூல்கள் வெளியாகின (நண்பர் பழுவேட்டையரையும் சேர்த்து). பழுவேட்டையர் அவருக்கென ரகசிய வாசிப்பு வட்டத்தை அடைந்துள்ளார். அவரிடம் கூறியபோது "சந்தோஷப்பட முடியல தம்பி" என கண்ணாடியை கழட்டிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டார். "நம்ம கதைங்களுக்கு ஏற்பு இருக்குதுன்னா இந்த இலக்கிய சூழல் எம்புட்டு ஆபத்தான நிலைமையில இருக்குன்னு கவனிக்கணும்." என்றார். "எல்லாம் சேர்ந்தது தான் இலக்கிய சூழல்" என ஆறுதல் படுத்திவிட்டு வந்தேன். 

Joe D Cruz, Kalyana Raman


இந்த வருடம் உருப்படியாக செய்தவற்றில் ஒன்று கம்பராமாயண கற்றல். நேற்றோடு ஆரண்யகாண்டம் முடித்தோம். இம்பர்வாரி குழுமத்தில் வாரம் மூன்று நாட்கள் சேர்ந்து கம்பனை வாசிக்கிறோம். பிரபு, பார்கவி, சுந்தரவடிவேலனோடு சேர்ந்து கம்பனுக்கு உரிய மாசிமாத அஸ்த திருநாள் அன்று நாட்டரசன்கோட்டை கம்பர் சமாதிக்கு சென்றோம். உள்ளேயே அமர்ந்து சில பாடல்களை பாடினோம்.  பரவசமான அனுபவம். மீண்டும் போகனை அங்கே அழைத்துச் சென்றேன். சத்திய சோதனை வேலையில் பலநாள் இடையில் கம்பன் அமர்வுகளில் பங்குபெறாமல் இருந்தேன். இப்போது ஓரளவு தொடர்ச்சியாக பங்குபெறுகிறேன். ஸ்ரீனிவாசனும் பார்கவியும் அலுப்பில்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஐநூறு, ஆயிரம், காண்டம் நிறைவு என முற்றோதல்கள் செய்கிறோம். முற்றோதல்கள் பெரும் கொண்டாட்டமானவை. விதவிதமான மெட்டுக்கள், என ஒருவாரம் முன்பிருந்தே தயாராவோம். ரம்யா தாடகைக்காக பிரத்யேக மேக்கப் எல்லாம் செய்து வந்தார். கூனிக்கு என தனிக்குரல் கொடுத்தார் பார்க்கவி. ஜமீலாவும் பார்க்கவியும் அபாரமான பாடகர்கள். கம்பனை கற்பதில் நான் இன்னும் கொஞ்சம் உழைப்பு போட வேண்டும் என எண்ணிக்கொண்டேன். 



காந்தியர்களைப் பற்றிய 'ஆயிரம் காந்திகள்' நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பதிப்பு முடிந்ததாக அறிகிறேன். நீலகண்டம், அன்புள்ள புல்புல், அம்புப்படுக்கை ஆகியவை புதிய பதிப்பை கண்டதாக ஜீவ கரிகாலன் சொன்னார். 'நீலகண்டம்' 'அம்புப்படுக்கை' ஆகியவற்றுக்கு புதிய வாசிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. 'அம்புப்படுக்கை' விருது பெற்ற நூல் என்பதால் கவனிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. நீலகண்டம் வெளியான காலத்தில் கலவையான ஏற்பையே பெற்றிருந்தது. நாம் ஏதும் செய்வதற்கு இல்லை என்றாலும், இப்போது கூடுதல்  ஏற்பை பெறுவது மகிழ்வளிப்பதாக உள்ளது. பரிசல் வெளியிட்ட 'காந்தியை  சுமப்பவர்கள்' தொகை நூலும் ஓரளவு கவனம் பெற்றது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். இல. மகாதேவனுடனான நேர்காணல் நூலான 'முதற்கால்' பற்றி பெரிய எதிர்வினை ஏதும் வரவில்லை. 





இந்த ஆண்டு எனது நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட பணி 'சத்தியத்துடனான எனது சோதனைகளின் கதை' (சத்திய சோதனைக்கு உள்ள அசல் தலைப்பு) மொழியாக்கம் தான்.  அடிக்குறிப்புகளுடன் ஆயிரம் பக்கங்கள் வரும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்த வேலை. இந்த ஆண்டு முடித்தே ஆகவேண்டும் எனும் முனைப்புடன் ஈடுபட்டேன். அக்டொபர் மாதம்தான் மொழியாக்கம் நிறைவானது. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதாக அறிகிறேன். வரும் ஆண்டில் 'காலச்சுவடு'  வெளியீடாக வெளிவரும் என நம்புகிறேன். 

Prabhu, Sundara Vadivelan Bharkavi


இந்த நூலின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நூலை முடித்த கையோடு 'இனி மொழியாக்கம் செய்வதில்லை' எனும் முடிவுக்கு வந்துள்ளேன். எப்போதாவது எனது தேர்வின் பேரில் நானே ஏதேனும் செய்தால் உண்டு. புனைவற்ற எழுத்துக்களை மொழியாக்கம் செய்வதில்லை என்பதே தீர்மானம். மொழியாக்கம் தேவையில்லை என்றோ அல்லது இழிவானது என்றோ கருதவில்லை. எனது ஆற்றலை அதிகமும் அதற்கு அளிக்க விரும்பவில்லை. அதேப்போல் மற்றொரு தீர்மானமும் உண்டு. கடந்த ஆண்டு உள்ளூர் வெளியூர் என எக்கச்சக்க மேடையுரைகள். என்னால் அத்தனை எளிதில் 'மறுப்பு' சொல்ல முடியாது எனும் பலவீனத்தினால் விளைந்தது. இனி கொஞ்ச நாட்களுக்கு மேடையுரைகள் நிகழ்த்தக்கூடாது என முடிவெடுத்த நேரத்திலேயே. அஜியின் மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில் பேச ஒப்புக்கொண்டுள்ளேன். கொல்கத்தாவில் சாஹித்ய அகாதமி ஏற்பாடு செய்யும் இளம் எழுத்தாளர் கூடுகையில் பங்குபெற ஒப்புக்கொண்டுள்ளேன். சமூக ஊடகங்களிலும் நான் இல்லை என்பதால் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்த்தால் முற்றிலும் இப்படியான ஒரு ஆள் இருப்பதையே தமிழில் மறந்துவிடுவார்களோ எனும் குழப்பமும் உண்டு. மறந்தால் என்னவாம்? எனும் பதில் கேள்விக்கு என்னிடம் விடையில்லை. மேடையுரைகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை. வண்ணநிலவன் படைப்புலகம்  குறித்தோ அழகிரிசாமி கதைகள்  குறித்தோ உரையாற்ற வேண்டும் என்றால் எனக்கு ஒரு மாதம் ஆகும். மொத்தமாக வாசித்து, குறிப்பெடுத்து, கட்டுரையாக்கி, மேடைக்கு தகுந்த வடிவில் சுருக்கி. ஆனால் இந்த வகை முயற்சிகள் பலனளிப்பவையும் கூட. ஏனெனில் இப்படியான ஒரு நிர்பந்தம் இல்லையென்றால் அழகிரிசாமியையோ வண்ணநிலவனையோ முழுமையாக வாசிக்க மாட்டேன். பொது தலைப்புகளில், காந்தி உரைகள் ஆற்றும்போது முடிந்தவரை திரும்ப சொல்வதை தவிர்க்க விரும்புகிறேன். மூன்று நாட்களாவது ஆகும். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டால் அங்கே வரும் அத்தனை எழுத்தாளர்களையும்  வாசித்திருக்க வேண்டும் என்பது எனக்கு நானே விதித்துக்கொண்டது. பல சமயங்களில் இதையெல்லாம் ஏன் செய்கிறோம் என தோன்றும். அன்பு,பொருளியல் வரவு,  மரியாதை என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும்.  இந்த ஆண்டு சத்திய சோதனைக்கு இட்ட மற்றொரு பலி மரப்பாச்சி கூடுகைகள். மொத்தமேமூன்றோ நான்கோ தான்  நடத்தினோம். மயிலன் பங்குபெற்ற மார்ச் மாத கூடுகை மிக சிறப்பாக நடந்தது. அதற்கு பின்னர் எழுத்தாளரை அழைத்து நடத்தவே இல்லை. வரும் ஆண்டில் மீண்டும் ஒழுங்காக நடத்த வேண்டும். 

மரப்பாச்சி இலக்கிய வட்ட கூடுகை, மயிலனுடன் 


புத்தக கண்காட்சிக்காக இரண்டு நூல்கள் வெளியாகவுள்ளன. இரண்டுமே யாவரும் பதிப்பக வெளியீடு. 'சமகால சிறுகதைகளின் செல்நெறி & பிற கட்டுரைகள்' சிறுகதைகள் பற்றி எழுதிய விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. விமர்சன கட்டுரைகளில் சில அசலான கண்டுபிடிப்புகளை தொட்டறியும்போது புனைவின் அதே திளைப்பை என்னால்  அடைய முடிகிறது. 'மரணமின்மை எனும் மானுடக்   கனவு' ஆயுர்வேத கட்டுரைகளின் தொகுப்பு. இதற்கு இன்னொரு பகுதி வரும் என எண்ணுகிறேன். 

Thuyan, Mayilan


ஜெ அறுபது நிகழ்வு முடிந்த கையேடு அங்கிருந்தே விமானம் ஏறி அமிர்தசரஸ் சென்று சேர்ந்தேன். விழா அன்று காலையில் பேரூர் சிவன் கோவிலில் ஜெயும் அருணா அக்காவும் மாலை மாற்றிக்கொண்டது மனதை பொங்க செய்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டு வந்த சியமந்தகம் நூலை பார்த்தபோது நிறைவாக உணர்ந்தேன். அழிசி ஸ்ரீனிவாசன் இந்நூல் உருவாக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். நூல்வனம் மணிகண்டன் அற்புதமாக அச்சாக்கி கொடுத்தார். முன்மாதிரியற்ற மணிவிழா மலர். 

With Bogan at Kambar Samadhi


இந்தவருடம் மற்றொரு மிக முக்கியமான தொடக்கம் 'தமிழ் விக்கி'. காளிபிரசாத் ஒருமுறை ஜெயை விஸ்வாமித்ரனோடு ஒப்பிட்டு பேசினான். நீ என்னடா எனக்கு சொர்க்கத்தை கொடுக்கிறது, நானே எனக்கான சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என திரிசங்கை உருவாக்கிய முனி.  'வாயில் காப்பாளர்களை' எரிச்சல்  படுத்தும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு வரம்பற்ற அதிகாரம் உள்ளதாக கற்பிதம் செய்கிறார்கள். ஜெ அவற்றை தகர்க்க மாற்று அமைப்புகளை உருவாக்கியபடி இருக்கிறார். உரியநேரத்தில் நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும் சாகித்திய அகாதமி கொடுக்கப்பட்டிருந்தால் விஷ்ணுபுரம் விருதே தேவைப்பட்டிருக்காது என எண்ணிக்கொள்வேன். பல்வேறு சர்ச்சைகள், எதிர் கருத்துக்கள் என தமிழ் விக்கி நெருப்பாறை நீந்தி நிலைக்கொண்டுவிட்டது. இதில் எனது பங்களிப்பு என்பது 'மக்கள் தொடர்பு அதிகாரி' என்ற அளவில் தான். அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியர் பொறுப்பிற்கு உகந்தபடி வரும் ஆண்டில் மேலும் முனைப்புடன் எழுத வேண்டும். 'நித்ய வனத்தில்' செம்பக மரத்தை நட்டபோது வெகுவாக உணர்ச்சி வயப்பட்டிருந்தேன். 



2019 ஆம் ஆண்டு ' Mahathma Gandhi in Tamil' நூலை தொகுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக குறுகிய காலத்தில் வேண்டும் என கேட்டதால், மூன்று மாதத்தில் தொகுத்துக்கொடுத்தேன். நண்பர் த. கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். 2020 ஆம் ஆண்டில் எங்கள் கைப்பிரதியை ஒப்படைத்துவிட்டோம். கொரோனா காரணங்களால் அது பதிப்பிக்கப்பட்ட தாமதம் ஆனது. இந்த ஆண்டு பாரதிய வித்யா பவன் அந்நூலை நல்லவிதமாக வெளியிட்டது. இந்திய மொழிகளில் இப்படியான ஒரு வரிசையை கொண்டு வரும் முயற்சியில் பாரதிய வித்யா பவன் உள்ளது. 



வங்காளம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழி தொகுதிகளை தரம்சாலாவில் தலாய்லாமா வெளியிட்டார். அங்கு ஷோடங் ரின்போச்சே அவர்களையும் சந்தித்த்தோம். ரமேஷ் ஓசா, ஜெகதீஷ் லக்கானி , ஷியாம் பக்ரே, மற்றும் அவரது கல்லூரி முதல்வர், ஆகியோருடன் நானும் சென்றேன். அம்ரிஸ்தர் தங்கக்கோவிலை பார்த்துவிட்டு அங்கிருந்து சாலைவழி மாலையில் சென்று சேர்ந்தோம். என் வாழ்நாளில் அத்தனை அழகான சூரிய அஸ்தமனத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளர் கணேஷ் தேவிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஷ்யாம் தான் எடிட் செய்த இம்மூன்று தொகுதிகளில் தமிழே முதன்மையானது என சொன்னது மிகுந்த நிறைவை அளித்தது. புத்தகத்தை தலாய்லாமா வெளியிடவுள்ளார் என்பதை தகவலாகத்தான் சொன்னார்கள். நான்தான் இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது என வண்டியில் ஏறிக்கொண்டேன். பலமுறை திட்டமிடப்பட்டு தள்ளி போனது. மொழியாக்கம் செய்த கண்ணன் தண்டபாணியையும் இழுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் நானே வேண்டா விருந்தாளி  என்பதால் கண்ணனுக்காக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஷியாம் இந்த பயணத்தின் ஊடே நல்ல நண்பராக ஆனார். 




இந்த ஆண்டு நிறைய வெளிமாநில/ வெளிநாட்டு எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. சிம்லாவில் சம வயது எழுத்தாளர்களின் நட்பு கிட்டியது. குஜராத்தியில் சம்விதி எனும் அமைப்பை நடத்திவரும் தர்ஷினி தாதாவாலா, வங்காள எழுத்தாளர்களான நபணீதா தாஸ் சென்குப்தா, அமித் ஷங்கர் சஹா, நீலோத்பல், அருணி சவுரப் ஆகிய இந்தி எழுத்தாளர்கள். மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன். சிங்கப்பூரில் சந்தித்த அமெரிக்க இந்திய எழுத்தாளரான அகில் சர்மா. சிங்கப்பூர் எழுத்தாளர்களான கிளாரா சோ, போயே கிம் செங், பதிப்பாளர் எட்மண்ட் வீ என பெரும் பட்டியலை போடலாம். இறுதியாக மமங் தாய் எனும் அருணாச்சல பிரதேச எழுத்தாளரையும் ரைட்டர் சைடு கனிஸ்கா குப்தாவையும் விஷ்ணுபுர விழாவில் சந்தித்தேன். .


                                

வருமாண்டில் எழுதிக்கொண்டிருக்கும் நாவலை நிறைவு செய்ய வேண்டும். கொஞ்சம் குறுங்கதைகள் எழுத வேண்டும். இரண்டோ மூன்றோ மொத்த படைப்புலக கட்டுரைகளை எழுத வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். உருப்படியான பயணங்களில் ஈடுபட வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். ஆயிரம் மணிநேர வாசிப்பு போட்டியை நடத்துகிறோம். அதை நிறைவு செய்ய முயல வேண்டும். படைப்பூக்கம் மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்பது மட்டுமே கனவு. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


No comments:

Post a Comment