Sunday, December 25, 2022

காயா கோப்பியுடன் சில கதைகள் - சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2022 – சில நினைவுகள்


(நண்பர் சிவானந்தம் நீலகண்டன் கேட்டுக்கொண்டதன் பேரில் சிராங்கூன் டயம்ஸ் இதழில் எழுதிய குறிப்பு. இந்த பயணத்தை இனிமையாக்கிய நண்பர்கள் சரவணன், சித்துராஜ், சத்யா, ராம், சுஜா, ஷானவாஸ், லதா, இன்பா, சித்ரா, அயிலிஷா, லோஷினி, சிவானந்தம், மகேஷ் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கிருத்திகா, பொன். சுந்தரராசு, மணிமாலா மதியழகன் ஆகிய படைப்பாளிகளை சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. ) 

With Haneefa, Celine Chow, William Phuan of Singapore book council 



இது எனது மூன்றாவது சிங்கப்பூர்ப் பயணம்.  முதலிரண்டு முறை இருந்த ஊர்சுற்றும் பரபரப்பும், ஊருக்கு ஏதேனும் வாங்கிச்செல்ல வேண்டிய ஆர்வமும் இம்முறை வடிந்துவிட்டன. அனைத்துலக  இலக்கிய விழாவான ‘சிங்கப்பூர் எழுத்தாளர் விழா’ நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கேற்று அனுபவத்தைச் செறிவாக்கிக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் நான் அழைக்கப்பட்டிருந்தாலும் அது என் ஒருவனுக்கான தனிப்பட்ட அழைப்பு அல்ல. ஒரு மொழியின், நவீனத் தமிழ் இலக்கிய மரபின் பிரதிநிதிக்கான அழைப்பு. 


நவம்பர் 4 தொடங்கி 21 வரை நீடித்த 25-ஆவது சிங்கப்பூர் விழாவிற்கு ஆசிய படைப்பூக்க எழுத்து செயல்திட்டத்தின் மூலமாக அழைக்கப்பட்டேன். எழுத்தாளர் எம்.டி. முத்துக்குமாரசாமி, ஓவியர் மருது ஆகியோர் நான் செல்வதற்கு முந்தைய வாரம் அழைக்கப்பட்டிருந்தனர். விழா நடக்கும் ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்திற்கு அருகிலேயே எனக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நண்பர் சரவணன்  எனக்காக விடுதியில் காத்திருந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் எண் 420. "நம்பரே சரியில்லையே" என சிரித்துக்கொண்டோம். 


நானும் சரவணனும் விடுதியிலிருந்து ‘மிண்ட்’ (Moment of Imagination and Nostalgia with Toys) அருங்காட்சியகத்திற்கு சென்றோம். விடுதி அருகிலேயே என்பதால் நடந்தே சென்றோம். ஐந்து தளங்கள் கொண்ட அருங்காட்சியகம். தொல்காலத்திலிருந்து பொம்மைகள் அடைந்துள்ள பரிணாமத்தைக் குறித்து ஒரு சித்திரம் கிட்டியது. பொம்மைகளின் உருவாக்கத்தில் பொதிந்துள்ள வணிகம், அரசியல் என மிக சுவாரசியமான தகவல்கள். இரண்டாம் உலகப்போர்ப் பின்புலத்தில் உருவான ராணுவ வீரர்கள், சீனக் கலாச்சாரப் புரட்சியைக் குறிக்கும் பொம்மைகள், விண்கலங்கள், வேற்றுகிரக வாசிகள், ‘பார்பி’க்கள், ‘பாப்பாய் தி செய்லர்’ என ஒவ்வொன்றுக்கும் பின்னுள்ள வரலாறு காட்டப்பட்டிருந்தது. 


மைக்கேல் லீ எனும் பொம்மை வடிவமைப்பாளரை அறிந்துகொண்டேன். ஹாங்காங் அகதிகளை மையமாகக் கொண்டு கையாலேயே பொம்மைகள் செய்தவர். புனைவுக்குரிய வாழ்க்கை. பொம்மைகளின் வடிவமைப்பும் இடுபொருட்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலபரப்பில் எப்படி மாறிவந்திருக்கின்றன எனப் பறவைக் கோணத்தில் பார்க்கமுடிந்தது. இன்று அத்தகைய பண்பாட்டுத் தனித்துவங்கள் பொம்மைகளில் இல்லை என்றே தோன்றுகிறது. மி யிங் யீ எனும் தைவான் எழுத்தாளரின் 'ஸ்டோலன் பைசைக்கிள்' நாவலில் சைக்கிள் வடிவங்களின் பரிணாமம் வழியாகவே ஒரு வரலாறு சொல்லப்படும். இப்படி நாம் புழங்கும் எந்த ஒன்றையும் வரலாற்று நோக்கில் பார்த்தால் அதிலிருந்து கதையாக ஆக்க முடியும் எனத் தோன்றியது. 

With Pattukottai Prabakaran, Chitra 


மாலையில், விழா நடக்கும் ஆர்ட்ஸ் ஹவுஸ் வளாகத்திலிருந்த, தற்காலிகப் புத்தகக்கடையில் என் புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பினேன். இரவு விளக்கில் சிங்கப்பூர் நதியையொட்டிய நகர்ப்பகுதியைக் காண்பது ஒரு தனி அனுபவம். 


அடுத்தநாள், முற்பகலில் எனக்கான அரங்கு ஆசிய நாகரிக அருங்காட்சியகத்தில் இருந்தது. எழுத்தாளர்கள் அகில் சர்மா, போயெ கிம் செங், கிளாரா சோ, சோபியா மரியா மா ஆகியோருடன் நானும் பங்கேற்ற ஆங்கில அமர்வு அது. எங்கள் அமர்வின் தலைப்பு ‘Glocalized Identity’. தோராயமாகத் தமிழில் ‘உலகவுள்ளூர் அடையாளம்’ எனலாம். ஆங்கிலம் அன்றாடம் புழங்கும் சூழலில் நான் இல்லை என்பதால் நாக்கு புரண்டு சிந்திப்பது சரியாக வெளியே வரவேண்டுமே என்ற பதட்டம் எனக்கிருந்தது. மற்ற அனைவருமே நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள். கிளாரா சோ சீனத்திலும் எழுதுகிறார். 


கிளாரா சோவின் 'Bare bones' கதை எனக்குப் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் டைனோசர் எலும்பு கண்டடையப்பட்ட பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. நுகர்வுப் பண்பாட்டை நுண்மையாக விமர்சிக்கிறது. சோபியா மரியா மா இளம் எழுத்தாளர். இரண்டோ மூன்றோதான் கதைகள் எழுதியுள்ளார். பருவநிலை மாற்றம் பற்றிய சுவாரசியமான புனைவு. போயெ ஒரு கவிஞர். ஏழெட்டுக் கவிதைகளை வாசித்த அளவிலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனார். அமையமுடியாமை, அமைதிக்கான ஏக்கம் ஆகியவற்றை அவரது கவிதைகளில் உணர்ந்தேன். நகரத்திற்குள் இருந்தபடி அங்கிருந்து சதா தப்பித்துப் போக நினைப்பவர், தப்பிக்கும் கனவுகளைக் கொண்டவர். அகில் சர்மா இந்திய வம்சாவளி அமெரிக்க எழுத்தாளர். அவரது An Obedient Father நாவல், தந்தை மகள் பிறழ் உறவை மையமாகக் கொண்டது. அதை அவர் எழுதியிருந்தவிதம் உண்மையில் பெரும் வியப்பை  அளித்தது. கதை நாயகனின் மீது நமக்கு ஏற்படும் அசூயையே அவரது நாவலின் வெற்றி. 

With Inba


“உங்கள் எல்லோரையும் படித்து என் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டுதான் வந்தேன். ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டாது. ஏனெனில் எனது எந்தக் கதையும் ஆங்கிலத்தில் இல்லை” எனத் தொடங்கினேன். உண்மையில் நான் என் நிலத்தின் உலகளாவிய குரலா? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பிக்கொண்டபோது சற்றுப் பொருத்தமற்றவனாக உணர்ந்தேன். ஆனால் அவர்களுடையதைவிட சற்றும் என் எழுத்தைக் குறைவாக உணரவில்லை.  


அறிவியல் புனைவு எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டேன். எத்தனை அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியிருக்கிறேன் எனக் கேட்கப்பட்டபோது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பிலும் இரண்டு கதைகள் எனச் சொன்னதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள். மேற்கைப்போலத் தனித்த வகைமைகளாக (genres) அல்லாமல் தமிழில் ஒரேதொகுப்பில் பல்வேறுவகைக் கதைகள் அமைவதை விளக்கினேன். என்னுடைய 'இமாம் பசந்த்' கதையிலிருந்து ஒரு பகுதியை  நண்பர் நம்பி மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருந்தார். அதை வாசித்தேன். ஒரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. 


சில கேள்விகளுக்கு உருப்படியாக பதில் சொன்னேன் என்றே நினைவு. “நான் உலகத்தை நோக்கிப் பேசவேண்டும் என்பதில்லை, எனது கதையில் லேய்ஸ் சிப்ஸோ, சாம்ஸங் கைபேசியோ வருகிறது எனில் உலகம் என்னை நோக்கி என் கதைக்குள் வந்துவிட்டது எனப் பொருள். படைப்பூக்கம் உலகளாவியப் பொதுத்தன்மையுடையது. சிவன் தலை கங்கையைப் போல், மண்ணுக்கு இறங்கி நிலப் பரப்புக்கு ஏற்ப மாறி வருகிறது. பண்பாடும் சூழலும் உலகளாவியப் பொதுத்தன்மைகளுக்குச் சில திசைவழிகளை உருவாக்குகிறது” என்றேன். 



அமெரிக்கவாசிகளுக்காக இந்தியர்களின் வாழ்வை எழுதுகிறேன் என்றார் அகில். ஆகவே அந்த பிரக்ஞை கதையின் பேசுபொருள், விவரிப்பு என எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றார். நல்ல வேளையாக நமக்கு அத்தகைய இக்கட்டு ஏதுமில்லை. தமிழில் நாம் வருங்கால வாசகர்களுக்காக அல்லவா எழுதுகிறோம்! ஏனோ அந்த அமர்வு எடுத்துக்கொண்ட பேசுபொருளை சரியாக விவாதிக்கவில்லை எனும் எண்ணம் ஏற்பட்டது. சம்பந்தமில்லாத கேள்விகளால் அகில் சற்றுக் கடுப்பானார். 


அவ்வமர்வு முடிந்ததும் நானும் நண்பர் சத்யாவும் கணினி விளையாட்டுக்கு எழுதுவது பற்றிய அமர்வுக்குச் சென்று அமர்ந்தோம். பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் கூடியிருந்தார்கள். விளையாட்டு எழுதுதல், விளையாட்டுக் கதையாடல் வடிவாக்கம் (Game writing, Narrative design) என இரண்டு தளங்கள் உள்ளன. கதையாடல் வடிவாக்கம் செய்பவர் ஏறத்தாழ ஒரு திரைக்கதை ஆசிரியர்தான். ஒரு திரைக்கதையாசிரியர் தான் உத்தேசிக்கும் அதே உணர்வைப் பார்வையாளருக்குக் கடத்திவிட்டால் போதும். ஆனால் விளையாட்டுக் கதையாடல் வடிவமைப்பாளரின் நிலை சிக்கலானது. இதில் பார்வையாளரைப் போலன்றி விளையாடுபவர் கதைக்குள்ளேயே உள்ளவர். அவருக்குக் கதைக்குள் சில தேர்வுகள் சாத்தியம். மிக நல்ல அமர்வு. வழக்கமான இலக்கிய விழாக்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாத்தியமில்லை.  


அன்று பிற்பகல் 4 மணிக்கு எழுத்தாளர் ஷாநவாஸ், முகமது அலி, வசுந்தரா ஆகியோர் பங்குபெற்ற உணவுக்கும் இலக்கியத்திற்குமான உறவைப்பற்றிய உரையாடல் அரங்கு ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து இருபது பார்வையாளர்கள் இருந்திருக்கலாம். ஷாநவாஸ் அருமையான உரையாடல்காரர். சிங்கையில் லோட்டா நிரம்பக் காபி குடித்துப் பழகியவர்கள் சென்னையில் தக்குனூண்டு டம்ப்ளரில் குடிக்க நேரும்போது ஒரு ஆளுக்கு நாலு காபி ஆர்டர் செய்யும் வழக்கத்தைப் பற்றி ஷாநவாஸ் வேடிக்கையாகச் சொன்னார். அவர் பேசுவதைக் கேட்டே நாம் சில கதைகளை எழுதிவிடலாம். முதல்முறை சிங்கப்பூர் வந்தபோது நாளைக்கு மூன்றுமுறை மைலோ குடித்து தலைசுற்றிய அனுபவத்தை நினைத்துக்கொண்டேன்‌. வசுந்தரா தகவல்களுடன் செறிவாகப் பேசினார். சிங்கப்பூர் உணவென்பது எப்படி வெவ்வேறு பண்பாடுகளின் கலவையில் உருவானது என்பதைக் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. உரையாடல் செறிவாக இல்லாமல் அலைபாய்ந்ததாக ஓர் உணர்வு எனக்கு. 


அந்த அமர்வு முடிந்தவுடனேயே எனது அமர்வு தொடங்கியது. கவிஞர் இன்பா நெறியாள்கை செய்தார். ஒன்றரை மணிநேரம் காந்தி குறித்துப் பேசினோம். அதிகம் பேர் கலந்துகொள்ளவில்லை எனினும் நான் எழுத்தாளர், பேச்சாளர் அல்ல. பேச்சாளர்கள் கூட்டத்திலிருந்து தங்கள் ஆற்றலைப் பெற்றுக்கொள்பவர்கள். எழுத்தாளருக்கு அப்படி ஏதுமில்லை. ஒருவர் இருந்தாலும் ஆயிரம்பேர் இருந்தாலும் என் உரைக்கு பாதிப்பு ஏற்படாது. எனது சிறந்த உரைகளுள் ஒன்றாக நான் கருதுவது தென்காசி புத்தகத்திருவிழாவில் ஆயிரம் காலி இருக்கைகளும் பத்துப் பதினைந்து மனிதர்களும் இருந்த சபையில் ஆற்றியதுதான். 


அடுத்தநாள், எழுத்தாளர் விழாவின் இயக்குனர் பூஜா நான்சியுடன் காலையுணவுக்கு அழைப்பு வந்திருந்தது. ‘காயா டோஸ்ட்’ உண்டோம். அவர்‌ எல்லோருடனும் ஓரிரு நிமிடங்கள் பேசியாக வேண்டும். என்னருகே அமர்ந்த இருவருடன் பேசினேன். ஒருவர் இஸ் யுனியாத்தோ (Is Yuniarto). இந்தோனேசிய வரைகதை (காமிக்ஸ்) கலைஞர். The Grand Legend of Ramayana என்ற ஒரு வரைகதைத் தொடரை ஜப்பானிய ‘மாங்கா’ பாணியில் உருவாக்கியுள்ளார். இராமனும் இலட்சுமணனும் கோட்டு சூட்டுடன் இருந்தார்கள். சீதையின் கற்பெல்லாம் அங்கு சிக்கல் இல்லை. அவளிடம் இருக்கும் அபூர்வ ஆற்றலைக் கவர முயல்கிறான் இராவணன். தான் வரைந்திருந்த சில ‘பேனல்’களைக் காட்டினார். படைப்பூக்கம் மிகுந்திருந்தது.  


இஸ் யுனியாத்தோ, 'கருடாயன' என்று இன்னொரு வரைகதைத் தொடரும் செய்துள்ளார். கடோத்கஜன்தான் அதில் நாயகன். இந்தோனேசியாவில் கடோத்கஜன் பெரும் ஆளுமை என்றார். குட்டி கருடனை பாண்டவர்களும் கடோத்கஜனும் அசுர சக்திகளிடமிருந்து காப்பதே கதை. அது ஒரு விளையாட்டாகவும் பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஆய்வாளார் அ.கா. பெருமாளின் இராமாயண, மகாபாரதக் கதைகள் சிலவற்றை அவருக்குச் சொன்னேன். 


ஜெஸ்ஸிகா வில்கின்சன் எனும் ஆஸ்திரேலியக் கவிஞரை சந்தித்தேன். அவர் வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளை எழுதுபவர். ஆஸ்திரேலியாவின் ஒரு நடிகை, ஓர் இசைக்கலைஞர், ஓர் ஓவியர் என மூவரின் வாழ்க்கை வரலாறுகளையும் கவிதையில் எழுதியுள்ளார். நம்மூரில் மரபிலக்கியத்தில் இந்தவகை உண்டு. காந்திக்கு அசலாம்பிகை, அரங்க சீனிவாசன் போன்றோர் அப்படியான காவியங்கள் எழுதியுள்ளனர். சிங்கப்பூரிலும் லீ குவான் இயூவிற்கு அ.கி. வரதராசன் ஒரு பிள்ளைத்தமிழ் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நவீன கவிதையில் கணிதமேதை இராமானுஜம் பற்றி சபரி எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஆனால் முழுநூலாக ஆக்குவதற்கு நாம் யோசித்ததில்லை. கவிஞர் பெருந்தேவியிடம் இதைச் சொன்னபோது புதுமைப்பித்தனும் ஆத்மாநாமும் அப்படி எழுதப்பட வேண்டியவர்கள் என்றார். 


சிங்கையில் கலாச்சார விருதாளர் படைப்புகள் வாசிக்கப்பட்ட அரங்கிற்குச் சென்றோம். சீன எழுத்தாளர் ஒருவரின் கவிதை வாசிக்கப்பட்டது. மலாய் எழுத்தாளர் ஒருவரும் வந்திருந்தார். தமிழ்க் கவிஞர் இக்பால் தன்னுடைய கால்களுக்கு நன்றி சொல்லுதல் பற்றிய கவிதையை வாசித்தபோது சட்டென உணர்ச்சிவசப்பட்டார். இத்தனை நாளாக என்னைச் சுமந்து சென்ற கால்களே, நன்றிக்கடனாக உன்னை என்றேனும் என் நண்பர்கள் தங்கள் தோள்களில் சுமந்துசெல்வார்கள் என்பதாகச் செல்லும் மரணத்தைப்பற்றிய நேரடியான கவிதை. அவர் வயதும், அவர் வாசித்த விதமும் சேர்ந்து அவரது உணர்ச்சி எனக்கும் தொற்றிக்கொண்டது. மலாய், சீனம், தமிழ் என மூன்று தரப்பினருமே ஆங்கிலம் தங்கள் இடத்தை எடுத்துக்கொள்கிறது எனக் கவலை தெரிவித்தார்கள். இது ஓர் உலகளாவிய சிக்கல்தான். 


இந்த விழாவிற்கு டெட் சியாங் (Ted Chiang) வருகிறார் என்பதை அறிந்தேன். அவருடைய Story of Life and Others, Exhalation தொகுப்புகளைப் பெரும் பரவசத்துடன் வாசித்திருக்கிறேன். அறிவியல் புனைவின் முகத்தையே மாற்றியவர் என அவரைச்சொல்வேன். ஆசிய ஆன்மீக மரபு, குறிப்பாக பவுத்தத்தின் ஊடுருவல் அறிவியல் புனைவுகளில் அவர் வழியாகவே நிகழ்ந்தது. சிக்சின் லியு, கென் லியு, சார்லஸ் யூ எனப் பலரும் தொடர்கிறார்கள். எனது அமர்வு மூன்று மணிக்கு. பாதியில் எழுந்து வருவதாக இருந்தால் அதில் பங்கேற்கலாம் என்றார்கள். 


மிகச்சரியாக 2 மணிக்கு உரையைத் தொடங்கினார் டெட் சியாங். ‘காலயந்திரமும் மனிதனின் தன்விருப்பும்’ என்பது தலைப்பு. காலப் பயணத்தில் கடந்தகாலத்தை அறிவியல் ரீதியாக மாற்ற இயலாது என்றாலும் மனிதன் தன் தன்விருப்பைப் பயன்படுத்தி மாற்ற முடியும் என்பது எத்தனை வலுவான கற்பனை! எதற்காகக் கால இயந்திரம் வரும்வரை காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். பல்வேறு உதாரணங்களுடன் 40 நிமிடம் நீண்டது அவ்வுரை. கலந்துரையாடலுக்கு என்னால் இருக்கவியலாத சூழல். டெட் சியாங் அரங்கில் பாதியில் எழுந்து வந்தவன் நான் ஒருவன் மட்டும்தான். டெட் சியாங் அரங்கில்கூட காணொளிப் பதிவு செய்யப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. பெரும் எழுத்தாளுமைகளின் அமர்வைப் பதிவுசெய்து இணையத்தில் ஏற்ற வேண்டுகோள் விடுக்கிறேன். 


பட்டுக்கோட்டை பிரபாகருடன்  3 மணிக்கு  தீவிர இலக்கியம், பரப்பிலக்கியம் பற்றி விவாதிக்கும் ஒரு அரங்கு. சித்ரா ரமேஷ் நெறியாள்கை செய்தார். எனக்கு இந்த அமர்வில் பங்குகொள்ள முதலில் தயக்கமிருந்தது. பரப்பிலக்கியம் முக்கியமில்லாதது என நான் கருதவில்லை. ஆனால் ஒரு விவாதமாக கசப்பின்றி இது முடியுமா என்ற சந்தேக உணர்வு இருந்தது. ஆகவே இயன்றவரை கவனமாக விவாதிக்க எண்ணினேன்.  நல்லவேளையாக விவாதம் நன்றாகத்தான் போனது. பரப்பிலக்கியம், தீவிர இலக்கியம் என்று எப்படி வகைப்படுத்துவது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டுமா எனப் பல்வேறு அடிப்படைக் கேள்விகளில் தொடங்கி, தீவிர இலக்கியம் யாருக்காக எழுதப்படுகிறது, எழுத்தாளரின் தேர்வு, வாசகரின் ரசனையும் தேர்வும் என விரிந்து சென்றது. 


சிங்கையின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான அருண் மகிழ்நனை அன்றுமாலையில் சந்தித்து சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழலைப்பற்றிப் பேசினோம். தமிழகச் சூழலில் இருந்து சிங்கை வேறுபடும் புள்ளிகள் குறித்து ஒரு சித்திரம் கிடைத்தது. இவ்வாண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான நடுவராகச் செயல்பட்டிருந்ததால் சிங்கப்பூர் புத்தக மன்றத்துக்கு ஒரு சம்பிரதாயமற்ற சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். வில்லியம், செலின், ஹனீஸ் ஆகியோரை ஒரு கஃபேயில் சந்தித்து உரையாடினேன். புத்தக மன்றத்தின் பணிகள் குறித்து தெரிந்து கொண்டேன். சிங்கையின் பிறமொழி இலக்கியச் சூழல் குறித்த பரிச்சயம் எற்பட்டது. சிங்கையில் இலக்கியம் சார்ந்த ஒவ்வொன்றுக்குமே பணம் கொடுத்து மக்கள் பங்குபெற வேண்டும். தமிழகத்தில் அத்தகைய பண்பாடே இல்லை. ஜெயமோகனின் கட்டண உரைகள் அந்தத் திசையில் ஒரு முன்னோடி முயற்சி. 


சிங்கப்பூர்ப் பயணத்தில் மிக முக்கியமான சந்திப்பு என ‘எபிக்ராம்’ பதிப்பக உரிமையாளர் எட்மண்ட் வீயுடனான சந்திப்பை சொல்லலாம். எபிக்ராம் சிங்கப்பூரின் மிக முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம். மொழியாக்கம், வரைகலை நாவல்கள், வரைகதைகள், குழந்தைக் கதைகள் எனப் பல தளங்களில் புத்தகங்களை வெளியிடுகிறது. குறிப்பாக சிங்கப்பூர் இலக்கியத்தை முன்வைத்துச் செயல்படுகிறது. பத்தாயிரம் சிங்கப்பூர் வெள்ளிப் பரிசுக்கு வருடாவருடம் நாவல் போட்டி நடத்துகிறது. இந்தாண்டு எழுபது நாவல்கள் வந்துள்ளதாகச் சொன்னார்! படைப்பாளர் சுதந்திரம், இலக்கியத்தின் சிக்கல் என சுமார் இரண்டுமணி நேரம் அவருடன் உரையாடினேன். அவர் பதிப்பித்த / பரிந்துரைத்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். சிங்கப்பூரின் லட்சுமண ரேகைகள் குறித்துச் சில தெளிவுகளைப் பெற்றேன்.


வெள்ளிக்கிழமை காலையில் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியது முதல் திங்கட்கிழமை மீண்டும் திரும்பியதுவரை உறங்கும் நேரம் தவிர்த்துப் பிற சமயங்களில் எல்லாம் எவருடனோ உரையாடியபடியேதான் இருந்தேன். நம் மரபின் அத்தனை படைப்பாளிகளின் தோள்களின்மீதும் ஏறிநின்றுதான் நான் சிங்கப்பூர் சென்றேன் எனும் தன்னுணர்வு எனக்கு உண்டு. ஆகவே அப்பெரும் தொடர்ச்சியின் ஆகச்சிறந்த அம்சங்களை முன்வைக்க வேண்டிய கடமை எனக்கிருந்தது. மேலும், இங்கிருந்து அளிக்கவேண்டியதை அளித்து அங்கிருந்து பெறவேண்டியதைப் பெற்றுவர வேண்டியதும் என் நோக்கமாக இருந்தது. நிறைய சந்திப்புகள், உரையாடல்கள் வழியாக அந்நோக்கம் ஓரளவு ஈடேறியது என்றே சொல்லவேண்டும்.




No comments:

Post a Comment