புத்தகங்கள்

Pages

Tuesday, October 25, 2022

பேழை- சிறுகதை

(தினகரன் தீபாவளி மலர் 2022 ல் வெளியான எனது சிறுகதை. நன்றி தினகரன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்)



1

"அப்பா… சும்மா பாதைய மறிச்சுகிட்டு நின்டுக்கிட்டே இருக்காதிக, காலு கடுக்குதுன்ன அப்புடி திண்ணையில செத்த சாஞ்சுகிடுங்க" என்று உள்ளே நுழையும்போதே சொன்னான்  சிதம்பரம். முட்டிவரைக்குமான பூ போட்ட காற்சட்டைக்கு கீழே இருந்த ரோமத்தை காணவில்லை. மழித்திருக்க வேண்டும்.  அவன் பின்னாடியே வால் பிடித்து வந்த குமரப்பன் வெள்ளை வேட்டிச்சட்டையில் கைச்செயின், கழுத்துச்சங்கிலிகளும் மோதிரங்களும் ஜொலிக்க இருந்தான். தேக்கு பீரோலை சுமந்துக்கொண்டு வந்த வேலையாட்களிடம் "பைய்ய தூக்குங்கப்பா..மூனு நாலு லட்ச ரூவாய்க்கு போவுற உருப்படி" என்றான்.. 


சிலரை முதன்முதலில் கண்டவுடனேயே, இன்ன காரணம் என ஏதுமின்றியே  உள்ளுக்குள் இருக்கும் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்ளும். அவரை நெருங்கவிடக்கூடாது என எச்சரிக்கைக்கொள்ளும். குமரப்பன் அத்தகையவன்தான். சிதம்பரம் நான்கு மாதங்களுக்கு முன் அவனை அழைத்துக்கொண்டு வந்தான். 


"அப்பா வீட்டை ரிசார்டுக்கு விடலாம்னு இருக்கேன். இவரு குமரப்பன்.. மாத்தூர் கோயில்காரரு, நெற்குப்பைல இருக்கார். எல்லாத்தையும் பாத்துக்கிடுவாரு" 


"வணக்கம். தம்பி எல்லாத்தையும் சொன்னுச்சு. நல்லபடியா முடிச்சுபுடுவோம் அய்யா, கவலைப்படாதீங்க." எனச்சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். பின் கட்டுக்கு சென்று பின் வாசலைத் திறந்தான்.  "முன் வாச ஒரு தெருவுலயும் பின் வாச இன்னோரு தெருவுலயும் உள்ள மூனு கட்டு வீடு. நம்ம ராசாவூட்டு அரண்மன கணக்கா பெருசாத்தான் இருக்கு. ஒரு 35 சென்ட் இடம் இருக்குமா அப்பச்சி?" என்றான்.


"தெரியலை. பத்தரத்த பாக்கனும்"


"நூறு வருஷம் மேல இருக்கும் போலயே"


"எங்க அய்யா காலத்துல கட்டுனது..120 வருஷமிருக்கும்"


"அம்புட்டும் பர்மா தேக்கு. பர்மால இருந்தீகளோ?"


"அய்யா அங்கதான். அப்பச்சி கொஞ்ச காலம் இருந்தாக."


"சொவரெல்லாம் முட்ட பூச்சு பெயராம வழுவழுன்னு இருக்கு.. நல்லது, மரத்தூணுக்கு மட்டும் வார்னிஷ் போடனும்.‌ கறையான் மருந்து அடிச்சிகளா? உத்தரக் கட்டையெல்லாம் பத்தரமா இருக்குதானே.. நல்லா நெடுக்க ஓடுது ஒவ்வொரு கட்டையும் இன்னிக்கு தேதிக்கு ரெண்டு லட்சம் போகும்"


"மருந்தெல்லாம் அடிச்சிருக்கு"


"இந்தாருக்கே மச்சுக்கு போற சுருள்படி, இது வெளிநாட்டுக்காரவுகளுக்கு ரொம்ப புடிக்கும். எத்தன அற மொத்தம்?"


"மேல ஆறு.. கீழ ஆறு.."


"நாள் வாடகை ஒரு அறைக்கு 6000 ரூவான்னு வச்சிக்கிடுங்க. நாளைக்கு 72000 சம்பாதிச்சு கொடுக்கும் சீதேவி  இந்த வீடு."


சிதம்பரம் முகத்தில் பூரிப்பைக்கண்டதும் எனக்குள் எரிச்சல் மூண்டது. நான் முற்றத்தில் அமர்ந்துகொண்டேன். முற்றத்தில் வெயில் மெல்ல மெல்ல நிழலை கைப்பற்றிக்கொண்டிருந்தது. 


"கதவு எல்லாம் நயம் தேக்கு, ஆனா தச்சு வேலைப்பாடு எதுவும் இல்லாம மொட்டையாருக்கு. அவசரத்துல கட்டிப்புட்டாய்ங்க போல..சொக்கநாதபுரம் சாவன்னா வீட்டுல லட்சுமி பொறிச்ச கதவு ஒன்னு உண்டு. கதவு மட்டும் பத்து லட்சத்துக்கு போச்சு" எனச்சொல்லிக்கொண்டே போனான். 


எழுந்து பின்கட்டு முற்றத்திற்குச் சென்றேன். 555 சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கிணறை பார்த்தபடி கிடந்த உரல் மீது அமர்ந்து ஆழ இழுத்தேன். நான் வேறொரு காலத்திற்குள் புகுந்துக்கொண்டது போல இருந்தது. பால்யத்தில் பிரம்மாண்டங்களை காலம் மெல்ல மெல்ல கரைத்து விடும் என்பதே பொதுவழக்கு ஆனால் நான் சிறுவனாக இருந்த போது விளையாட போதாமலிருந்த வீடு இப்போது ஆட்கள நீங்கிச்செல்லச்செல்ல மேலும் மேலும் என பெருத்தும் விலகியும் சென்றுக்கொண்டே இருக்கிறது. இப்போதெல்லாம் இரண்டு இரவுகளுக்கு மேல் தனித்து தங்க முடிவதில்லை. இந்த‌ வீடே  ரகசியங்கள் நிறைந்த புதிர்பாதை என மாறிவிட்டது. ஆனால் திரும்பத்திரும்ப வந்துகொண்டேயிருக்கிறேன். 


வாயிலின் இருபுறமும் நீளும் மூன்றடி உயர திண்ணையில் பதிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை கற்கள் பிரம்மாண்ட சதுரங்க பலகையைப்போல் தோன்றியது. அனைத்து காய்களும் வெட்டப்பட்டு நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கும் போதும் ஆட்டம் தொடர்கிறது.‌ எழுந்து நடக்கத்தொடங்கினேன். சட்டென ஒரு வரி அமர்ந்துகொண்டது. நான் விளையாடுவது காலத்துடன். ஆம்,  அதுதான். ஓங்கரித்தது. பாதி புகைந்த சிகரெட்டை நசுக்கிவிட்டு முன் கட்டுக்கு சென்றேன். "மாதங்கள் மாதங்களில் கரையட்டும், வருடங்கள் வருடங்களில் மூச்சு விடட்டும்."  எமிலியின் கவிதையில் வரும் ஒரு வரி. என்னால் அங்கு இருக்க முடியவில்லை.   


"""

அன்றிரவு சிதம்பரம் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த க்ளென்ஃபிதுக் பாட்டிலைத் திறந்து இருவருக்குமாக ஊற்றினான். இருவரும் மவுனமாக மிடறுகளை ருசித்தோம். அப்படியே முற்றத்தில் படுத்துக்கொண்டான். நான் அப்பச்சியின் அறைக்கு எதிரே இருந்த கல்தூணில் சாய்ந்து கொண்டேன். முற்றத்து அழியின் வழியாக நிலவு வழிந்து கொண்டிருந்தது. எனக்கு அவனது யோசனை பிடிக்கவில்லை என்றேன். 


"வீட்ட நாசாமக்கிருவாய்ங்கடா தம்பு.. எனக்கு பொறுக்காது. எங்காலம் வர இப்படியே கிடக்கட்டும்..பொறவு உன் இஷ்டப்பிரகாரஞ்செய்." 


மெதுவாக கையூன்றி எழுந்தமர்ந்தான். 


"நான் வருஷத்துக்கு ரெண்டுவாட்டி கல்யாணத்துக்கு, படப்புக்குன்னு வாரேன். நீங்க மாசாமாசம் வருவீகளா? வந்தோமா போனோமான்னு இருக்க முடியுதா? பொம்பளயில்லாத வீடு. ஒவ்வொருதாட்டியும் மூனு நாள் முன்னாடியே வந்து பெருக்கி மொழுகி, சுத்தம் செய்யனும். திரும்பவும் எல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தனும். எதையோ தேடித்திரியுறீக. உங்கபபச்சி உங்களுக்கு என்ன பொதையலா வச்சுட்டு போயிருக்கார்? என்ன எளவுன்னும் சொல்ல மாட்டுறீக. நீங்க ஒண்டியாள இங்கன இருக்க முடியாது. களவானிங்க வேற முத்தத்துல இறங்கி மரத்த பேக்குறாய்ங்க. இம்புட்டு பெருசா என்ன மயித்துக்கு கட்டுனாய்ங்கன்னே தெரியலை. யானைக்கி தீனி வச்சாப்புலதான். ரிசார்ட் காரய்ங்க கொடுக்குற லீசு பணத்த வச்சு காரக்குடில ஒரு அப்பார்ட்மென்ட வாங்கி போடுவோம். வர போக தங்கிக்க கைக்கடக்கமா ஒரு இடமாயிரும்." 


"உனக்கு கல்யாணம் காட்சி ஆச்சன்ன புழங்குவோமே தம்பு."


" அய்யா சாமி! அந்தப்பேச்ச விடுங்க. எனக்கு அது தோதுப்படாது."


"தம்பு இப்படிச்சொன்னா என்னடா செய்ய. எவளயாவது மனசுல நினைச்சேன்ன சொல்லு, எந்த சாதியாருந்தாலும் பேசுவோம்டா."


" உங்களுக்கு நான் சொல்றது விளங்காது. அந்தப் பேச்ச விட்டுருங்க" என சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்துக்கொண்ட வேகத்தில் உறங்கிப் போனான். 


என்னால் உறங்க முடியவில்லை. இன்னோரு சுற்று அருந்திய பிறகு மெல்ல வெளித்திண்ணையில் வந்து அமர்ந்தேன். அய்யா இந்த வீட்டை ஏன் இத்தனைப் பெரிதாக கட்டினார்? தெரியவில்லை. ஏதோ ஒரு பெருங்கனவு கண்டிருப்பார். அப்படிப்பட்ட கனவுகளோடு  தானே இங்குள்ள அத்தனை வீடுகளும் கட்டப்பட்டிருக்கும். கட்டி முடித்து இந்த வீட்டில் அய்யா நூறு நாட்கள் கூட இருந்திருக்க மாட்டார். 


நான் இந்த வீட்டில் எதைத்தேடுகிறேன்? பெரும் புதிரின் இறுதித் துண்டை. என்னை ஆட்கொண்ட கேள்வியை, என் அப்பச்சியை, "நான் விட்டுச்சென்ற வாழ்வை." இதுவும் எமிலியின் வரிதான். அப்பச்சியிடமிருந்து நான் எனக்கென எடுத்துக்கொண்டது, அல்லது அவர் எனக்கென விட்டுச்சென்றது எமிலி டிக்கின்சனை மட்டும்தான். 


***

சிதம்பரம் ஊருக்கு புறப்பட்டுச்சென்ற மறுநாள் குமரப்பன் வந்தான். "நீஙக குழப்பத்துல இருக்கீகன்னு தம்பி சொன்னுச்சு. செத்த வெளிய போய்ட்டு வருவோம்" என்றழைத்தான். விடுதிகளாக மாறிய வீடுகளைச் சுற்றிக் காண்பித்தான். பிரம்பு நாற்களிகளில் அமர்ந்து வெளிநாட்டவர்கள் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்கள். புடவையும் வேட்டிச்சட்டையும் தான் பணியாட்களுக்கு சீருடை. முற்றத்தில் மாலை வேளையமர்ந்து இன்னிசையை கேட்டபடி ஸ்காட்ச் அருந்திக்கொண்டிருந்தார்கள். ரெட்டைமாட்டு கூண்டு வண்டியில் கிராமத்து சிறார்களுக்கு கையசைத்தபடி உலா வந்தார்கள். எல்லாமே அபத்தமாக தெரிந்தது. குமரப்பனிடம் பேச எனக்கு ஏதுமில்லை. அவன் பேச முற்பட்டபோதும் அதைத் தவிர்த்தேன். என் முடிவில் தீர்க்கமாக இருந்தேன். 


திரும்ப வரும்போது வண்டியை ஒரு புதர் அருகே நிறுத்தச்சொன்னான். கவிந்திருந்து முழு இருளை சிள்வண்டுகளின் ரீங்காரம் மேலும் அடர்த்தியாக்கியது. "ஒண்டுக்கு இருந்துட்டு வாரேன். நீங்களும் இறங்கி வாரீகளா அப்பச்சி?" எனக்கேட்டான். வேலையை முடித்துவிட்டு வந்தவன் "அப்பச்சி ஒரு சிகரெட் கொடுங்க" என்றான். இருவரும் புகைக்கத்தொடங்கினோம். இருளுக்கு விழி மெல்ல பழகியது.  நாங்கள் சிறுநீர் கழித்த இடத்தைச் சுட்டிக் காட்டினான். ஒரு வீட்டு முகப்பு வளைவு துலங்கியது.  புதர் மண்டிக்கிடந்தது. ஆலிலை குப்பைகள் சரசரத்தன. கைப்பேசி வெளிச்சத்தில்  வளைவுக்கு மத்தியில் முண்டமாக கால் மாற்றி நின்றிருந்த கண்ணனைக் காண்பித்தான். உடல் சன்னமாக ஆடத் தொடங்கியது. பசுவின் தலையை பிளந்துகொண்டு ஒரு செடி முளைத்திருந்தது. மானிட்டர் குப்பிகள் கிடந்தன. என்னால் அங்கு நிற்க இயலவில்லை. காருக்குள் சென்று அமர்ந்து கொண்டேன். "அப்பச்சி இந்த நெலம நம்ம வீட்டுக்கு வராம பாத்துக்கிடுறது உங்க கையில இருக்கு.. அப்புறம் சொத்து நம்மூட்டுதான். 30 வருஷம் லீசுக்குத்தான் விடுறோம்.  நல்ல முடிவாச் சொல்லுங்க."  எனச்சொல்லி வீட்டில் இறக்கிவிட்டான். 



2


"முகப்புல உள்ள புல்லாங்குழல் கண்ணன் சொதை வேலை இருக்குல்ல.. அம்புட்டையும் ஊதி கொண்டு போயிருவான்னு ஒரு பயம் அவுகளுக்கு. அத எடுத்தாலும் எடுப்பாக. அங்கன கெஜ லட்சுமியோ மகாலட்சுமியோ வருவா." என சிதம்பரத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான் குமரப்பன். 


பணியாட்கள் சாமான்களை அகற்றிக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் மழை நீர் சேமிக்க வைக்கப்பட்ட தேக்சாக்கள், பின்கட்டிலிருந்த ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை, தேங்காய் துருவிகள், அருவாமனைகள் என  ஒவ்வொன்றாக தூக்கி வந்தார்கள். 

 

"இதையெல்லாம் சாப்பாட்டு கூடத்துக்கு கொண்டு போங்க. அத அவுக மூசியமா மாத்துராக." என ஏவிவிட்டான் குமரப்பன். 


இரண்டாம் கட்டின் கூடத்தின் இரண்டு எல்லைகளிலும் இருந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகளைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். 


"இதை ஏன்டா கொண்டாந்தீங்க? அங்கனயே சாய்ச்சு வைங்கடா." என பொறிந்தான் குமரப்பன்.


அறைகளை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். "அப்பா இப்படி திண்ணையிலேயே உக்காந்துக்கிட்டு இவிங்கள மேப்பார்வ பாருங்க. வேண்டியது வேண்டாததெல்லாம் நானும் குமரப்பனும் பாத்துகிடுறோம்."


வீடு மனிதர்கள் வாழ்ந்த தடத்தை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தது. மொத்த சாமான்களையும் நான்காக பிரித்தார்கள். ஓட்டை ஒடைசல் ஒருபுறம், விலைக்கு கொடுப்பவை இன்னோரு பக்கம், இங்கேயே போட்டு வைக்க வேண்டியவை மறுபக்கம், காரைக்குடி அடுக்குமாடி குடியிருப்புக்கு வேண்டியவைத் தனியே. முந்தைய இரண்டும் மளமளவென பெருகுவதைப் பார்த்தேன். சக்கரம் உடைந்த நடைவண்டிகள், பொத்தல் விழுந்த திவான் நாற்காலி, அழுக்கு துணிகளில் சுற்றப்பட்ட பொதிகள். அழுக்கு வேட்டியில் கட்டப்பட்ட சிறிய பொதியை கண்டதும் மனம் விழித்துக்கொண்டது. சட்டென எழுந்து அதனருகில் சென்றேன்.‌ அந்த பொதியை கையில் எடுத்ததுமே உணர்ந்துகொண்டேன். அதன் விளிம்புகளைத் தடவி பார்த்தேன். தலை சுற்றுவது போலிருந்தது. மெதுவாக அதை தூக்கிக்கொண்டு முற்றத்து கல்தூணில் சாய்ந்து கொண்டேன். பழுப்பேறிய அழுக்கு வேட்டியின் முடிச்சுகளை அகற்றியபோது  அதனுள் இருந்ந தந்த பேழை படிப்படியாக வெளிப்பட்டது. வியர்வை ஊற்றெடுத்தது. செவிப்பறையில் இதயத்துடிப்பு அறைந்தது. காதுமடல்கள் சூடேறின. 


"என்ன அப்பச்சி சட்டை நனையிற அளவுக்கு வேர்த்து ஊத்துது? ஒடம்புக்கு ஒன்னுமில்லையே?" என்றான் குமரப்பன். 


பொதி என் கையில் இருப்பதை கண்டான். "அப்பச்சி அது ஏதோ நகப்பெட்டி போல தெரியுதே? தந்தமா? இருபது முப்பது ரூபாய்க்கு போகும் போலயே" என்றான். சிதம்பரமும் வந்து நின்றான். 


"அதெல்லாம் ஒன்னுமில்ல..சும்மா ராமேஸ்வரத்துல வாங்கினது" எனச்சொல்லி பெட்டியை பொதிக்குள் தள்ளினேன். குமரப்பன் மட்டும் சற்று நேரம் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான். அவன் எதையும் லேசில் விடுபவனில்லை. நான் பொதியைக்கொண்டு போய் காரில் வைத்துவிட்டு வந்தேன். இப்போது, இங்கே அதைப்பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. இத்தனை ஆண்டு காத்திருந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலம்தான். மனம் கற்பனையில் மிதக்கத் தொடங்கியது. அதில் அரிய வைரம் இருக்கும், இரும்புக்கை மாயாவி படக்கதைப் புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும், அல்லது அப்பச்சசி எனக்காக எழுதிய கடிதம், அல்லது அம்மாவுக்கோ அப்பத்தாவுக்கோ எழுதிய கடிதங்கள், எனக்காக எழுதிய கவிதைகள், கிழிக்கப்பட்டிருந்த எமிலி டின்னின்சன் கவிதைத்தொகுதியின் பக்கங்கள் அல்லது அப்பச்சியின் நாட்குறிப்பு, அல்லது விளக்கப்படங்களுடன் கூடிய கொக்கோக உரை. புன்னகைத்தேன். சிகரெட்டை நாடியது மனம். புகை மெல்ல என்னை ஆற்றுப்படுத்தியது. 


இந்தப் பேழை என் அப்பச்சியுடையது. பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்தது.   நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு முறை பார்த்திருக்கிறேன். தும்பிக்கை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள் இரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கும். நடுவே ஒரு மலர். மேல் மூடியில் இரண்டு அண்ணங்கள் மூக்குடன் மூக்கு உரசி நிற்கும். இரண்டு முறையும் ஆத்தா புழக்கடையில் இதை கையில் வைத்துக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்தது ஒரு ஓவியம் போல மனதில் கணநேரம் துலங்கி அமிழ்ந்தது. அவள் அழுவதற்கு இந்தப் பேழைதான் காரணம் என தோன்றி, பலநாட்கள் அதைத்தேடி இருக்கிறேன். எப்படியாவது அதைக் கண்டுபிடித்து காணாமலாக்கிவிட்டால் ஆத்தாளை நிரந்தரமாக போர்த்தியிருக்கும் துக்கம் பறந்துவிடும் என கனவு கண்டேன். அவளிடம் அந்த பேழையைக் காட்டு என கொஞ்சி, கெஞ்சி, அழுது, அரற்றி என எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். அழுத்தமான மவுனத்தைத் தவிர அவளிடமிருந்து வேறெந்த பதிலும் எனக்கு கிடைத்ததில்லை. ஒருமுறை முற்றத்தில் சுற்றிச்சுற்றி ஓடி பைத்தியம் போல் அழுதேன். அப்பத்தா, பெரியப்பச்சி, பெரியம்மா  என எல்லோரும் கூடிவிட்டார்கள். ஆத்தா சட்டென விசும்பியபடி மச்சுக்குள் புகுந்துக்கொண்டாள். அப்பத்தா "இப்ப எதுக்காண்டி இம்புட்டு அழுது அழிச்சாட்டியம் செய்றான்" என்றதும் "நீ போ ஆத்தா, சின்னப்புள்ள, அவென் அப்பச்சி நாபகம் வந்துருக்கும்" என மெல்ல என் தலையை வருடிக்கொடுத்தார் பெரியப்பச்சி. என்னை அவரது ராஜ்தூத்தில் ஏற்றிக்கொண்டு சொக்கட்டான் கோயில் குளத்தின் படித்துறைக்கு கூட்டிவந்தார். "அண்ணாமலை, ஆத்தாளை நீயும் கஷ்டப்படுத்தக்கூடாது, நிறைய சிரமப்பட்டுட்டா" என எங்கேயோ பார்த்தபடி சொன்னார். நான் அதன் பின் ஆத்தாவிடம் பேழை வேண்டுமென கேட்கவில்லை. ஆனால்  தேடுவதையும்  நிறுத்தவில்லை. எப்போதும் என் கண்கள் பேழைக்காக துழாவியபடியே தான் இருந்தன. விடுதியை விட்டு வீடு திரும்பும் கல்லூரி நாட்களிலும், பின்னர் வங்கியில் பெரியப்பச்சி வேலை ஏற்பாடு செய்து கொடுத்து ஊர் ஊராக வாழ்ந்து, விசேஷ நாட்களுக்கு மட்டும் ஊர் திரும்பும் போதும், திருமண சமயத்தில் பெண் அழைப்பிற்காக வீட்டில் சுண்ணாம்படித்த போதும், திருமணத்திற்கு பின்பான நாட்களிலும்  என பல ஆண்டுகளாக தேடியபடிதான் இருக்கிறேன். 


பத்து வருடங்களுக்கு முன் ஆத்தா வாதம் வந்து படுக்கையில் கிடந்து கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் போது குழறிக்குழறி, ஓசைகளுக்கும் மவுனங்களுக்கும் இடையே "ப்பெட்டி" என கையால் கட்டம் போட்டுக்காண்பித்தாள். கூடியிருந்த பங்காளிகள் பணப்பெட்டி, ஓலைப்பெட்டி, வெற்றிலைப்பெட்டி என ஒவ்வொன்றாக கொண்டுவந்தார்கள். அவளுடைய கண்களில் எரிச்சலும் சலிப்பும் தோன்றின.  அவள் விழிகள் சுற்றியிருப்போர் மத்தியில் என்னைத் துழாவின. ஏனோ  கணக்கை நேர் செய்ய வேண்டும் எனும் விசை அப்போது என்னை ஆட்கொண்டது. அவள் பார்வைபடாத இடத்திற்கு ஒதுங்கினேன். தவிப்பு அடங்கி சலிப்பு கண்களில் குடிகொள்வதைப் பார்த்தேன். பின்னர் அதுவும் மாறி, உறக்கத்தில் புன்னகைக்கும் பால்குடி குழந்தையின் களங்கமற்ற சிரிப்பை அவள் முகம் சூடிக்கொண்டதை  என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளை உலுக்கினேன். "பெட்டிய தேடி எடுத்தாரேன்..போயிராத ஆத்தா" என அரற்றினேன். என் கண்கள் அவள் அறையில் மேலும் கீழும் துழாவின. அவள் அத்தனை ஆண்டுகளாக என்னிடமிருந்து காத்து வந்த ரகசிய இடத்தை என்னால் எப்படி இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்?  இரண்டே நெடுமூச்சு.‌ மீளா ஆழத்திற்குள் சென்றிருந்தாள். அதன்பின்னர் அவள் புழங்குமிடத்தில் எல்லாம் இன்னும் தீவிரமாக தேடினேன். அண்மைய காலங்களில் அப்படியொரு பெட்டியை நான் கண்டேனா அல்லது வெறும் கற்பனையா எனும் குழப்பம் என்னை அலைக்கழித்தது 

 

கடைசித்துண்டை சிதம்பரம் வாங்கி இழுத்தான். "உங்க முகமே சரியில்ல. எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாதீங்க." என்றான். "படங்களை எல்லாம் கழட்டுறாங்க சாமி படங்க எல்லாம் ஏற்கனவே இருக்கு. இதுல முக்கியமானது இருந்தா பாத்து எடுத்து வைங்க. வீட்ல மாட்டுவோம்." 


3

 முற்றத்தையொட்டி அறைகளுக்கு இடையே வரிசையாக புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தூசடர்ந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை துடைத்தபோது அதன் மேல்  படிந்த காலமெல்லாம் மறைவது போல ஒரு பிரமை. அய்யா சட்டை போடாமல் சிவப்பழமாக அப்பத்தாவுடன் காட்சியளிக்கும் படத்தை எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டான் குமரப்பன். "வெள்ளக்காரனுக யாரு கட்டுனா யாரு நொட்டுனான்னு கேப்பாய்ங்க. இருக்கட்டும்." என்றான். 


பெரியப்பச்சி முறுக்கு மீசையுடன் வெற்றிலை வாய் தெரிய சிரிக்கும் படத்தில் சந்தனப் பொட்டின் தேசல் புலப்பட்டது. பெரியப்பச்சி திருமண புகைப்படத்தில் கூட முரட்டு மீசையும் இறங்கிய கிருதாவுடனும் தானிருந்தார். பெரியம்மா முகத்தில் வெட்கம். அப்பத்தா நாற்காலியில் அமர்ந்திருக்க ஆத்தாவின் சீலைக்குள் நான் ஒளிந்திருந்தேன். பெரியப்பச்சியின் மடியில் நான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம், இந்த படத்தில் மட்டுமே என் முகத்தில் சிரிப்பிருக்கிறது. அப்பச்சியின் ஒரு புகைப்படம் கூட கூடத்தில் மாட்டப்பட்டதில்லை. அப்பத்தா இருந்தவரை மாட்ட அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால் அவள் காலத்திற்கு பின்னும் ஏன் மாட்டவில்லை? 


"இதெல்லாம் மேலயிருக்குற நடு ரூம்புல கிடந்துச்சு.. அண்ணே உங்கட்ட கொடுக்கச் சொன்னாரு" என நான்கைந்து புகைப்படங்களை கொண்டுவந்து போட்டான். அது என் அறைதான். வியப்பாக இருந்தது. அவை எப்படி, எப்போது, என் அறையை வந்தடைந்திருக்கும்? தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக நான் இவற்றை கவனித்ததே இல்லை. வீட்டை அங்குலம் அங்குலமாக தேடிவிட்டேன் என எண்ணியிருந்தேன். 



அப்பத்தா மட்டும் அமர்ந்திருக்க கிராப்பு தலையுடன் இரண்டு விடலைகளாக அப்பச்சியும் பெரியப்பச்சியும் நின்றிருந்தார்கள். மீசையற்ற வழுவழு முகமும் சுருள் முடியும் கொண்ட அப்பச்சியின் இளமைக்கால புகைப்படம் ஒன்று. ரங்கூன், 6.4. 1941 என புகைப்படத்தின் கீழே இருந்த அட்டையில் மையால் எழுதப்பட்டிருந்தது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னோரு புகைப்படம். அப்பச்சியின் தோள்மீது கைப்போட்டு ஒருவர் நின்றார். அவர் முகம் கிழிபட்டிருந்தது. அந்தப் படத்தில் அவரை மட்டும் ஆங்காங்கு கூர்முனையால் குத்தியதற்கான அடையாளங்கள் இருந்தன. நிற்கும் தோரனையும் தெரிகின்ற பாகத்தையும் கொண்டு அவர் ஒரு ஆங்கிலேயராக இருக்க வேண்டும் என தோன்றியது. 


பட்டுவேட்டி தலைப்பாகையுடன் அப்பச்சியும் கழுத்திருவும், கருகமணியும் பட்டுப்புடவையும் அணிந்த ஆத்தாவும் கையெடுத்து வணங்கும் கோலத்தில் இருக்கும் திருமண புகைப்படம். அப்பச்சியின் முகத்தில் துடிப்பில்லை. புகைப்படத்தின் கீழே மெட்ராஸ் ஸ்டூடியோ 25.1.1947 என அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அப்பச்சியின் கண்ணங்கள் ஒட்டி இருந்தன. கண்களில் சுரத்தேயில்லை. ஆத்தாவின் முகத்தில் ஒருவித பூரிப்பும் பெருமிதமும் ததும்பியது. சட்டென ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது. அப்பச்சி எனக்கு எட்டு வயதாகும்வரை உடனிருந்தவர்தான் ஆனால் அவர் அசல் முகத்தை என்னால் நினைவில் மீட்கவே முடியவில்லை. 


அப்பச்சியின் ரங்கூன் படத்துக்கும் திருமண படத்துக்கும் இடையேதான் எத்தனை மாறுதல்! அப்பச்சி இரண்டாம் உலகப்போர் காலத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் ஊர் வந்து சேர்ந்தார் என பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஊருக்கு கிளம்பிய எவருடனும் அவர் ஊர் திரும்பவில்லையாம். எவரழைத்தாலும் "சண்டயெல்லாம் இப்ப முடிஞ்சுரும். இங்கிலீஷ்காரன்ன என்ன சும்மாவா. போட்டத போட்டபடி எல்லாம் வரமுடியாது" என்றே பதில் சொன்னாராம். அப்பச்சியைப்போலவே இன்னும் சில இளவட்டங்கள் இப்படியே சவடால் பேசித்திரிய, பெருசுகள் தப்பிப்பிழைத்தால் போதுமென ஊர் திரும்பினார்கள். திருமணத்துக்கு வாழ்த்த வந்த ஒரு பெரியவர் "அடேய் சிதம்பரம் மவனே, உங்கப்பங்காரன் நல்ல பயதான் ஆனா என்னத்த சொல்ல சகவாசக்கேடு.  நாசமாயிட்டான். நீயாவது குடும்பப் பேரு விளங்க வாழனும்" என சொல்லிச்சென்றது என் மனதை அருவியது. அப்பச்சியைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் தவித்திருந்த காலத்தில் லேனா மேனா வீட்டுத்திண்ணையில் ஈ மொய்க்க படுத்திருந்தவரை அப்பச்சி என கண்டுபிடுத்து தகவல் சொன்னார்களாம். மதுரைக்கு கூட்டிச்சென்று எப்படியோ பிழைக்க வைத்தார்கள். 


அப்பச்சியைப் பற்றி யாரும் என்னிடம் பேசக்கூடாது என்பது அப்பத்தாவின் ஆணை. பதின்ம வயதில் அதுவே அவரைப்பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. இல்லாத தந்தையின் மீது எனக்கிருந்த விருப்ப கற்பனைகள் அனைத்தையும் ஏற்றியபோது அவருக்காக ஏங்கினேன். சகாக்கள் அவரவர் அப்பாக்களை வெறுக்கும் பருவத்தை எட்டியபோது வெறுக்கக்கூட நமக்கொரு அப்பன் இல்லையே எனும் ஏக்கத்திலிருந்தே அவர் மீதான வெறுப்பு பிறந்தது. "உங்கொப்பன் ஊருக்கு வந்ததுலேந்து நிதமும் குடிதான். உங்காத்தா மவராசிக்கு சீதன்னு சும்மா பேரு வைக்கல. அம்புட்டையும்  எப்படியோ சகிச்சுக்கிட்டா" என்றாள் சமைக்க வந்த தங்கம்மா பாட்டி "செதம்பரத்த மாதிரி கொணத்துல தங்கம் எவனுமில்ல" என்றார் அப்பச்சியின் பர்மா கூட்டுக்காரர் சொக்கலிங்கம். "மோகினிப் பிசாசு அடிச்ச மாதிரி பித்து பிடிச்சே திரிவான்" என்றார் சாமியாடி வேலப்பன். எல்லாமே சிறு சிறு தனித்துண்டுகள். ஒன்றோடொன்று பொருத்த முடியாத அளவிற்கு முரண் கொண்டவை. அவரது எமிலி டிக்கின்ஸன் கவிதைத்தொகுப்பை அப்போதுதான் வாசிக்கத்தொடங்கினேன். புரிந்து கொண்டேனா என சொல்வதற்கில்லை. ஆனால் எனக்கு அது ஏனோ அப்பச்சியின் நாட்குறிப்பு எனும் எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. ஏதோ ஒன்றை துப்பறியும் வேகத்தில் கவிதைகளையும் அப்பச்சியின் பென்சில் குறிப்புகளையும் மீள மீள வாசித்தேன். அப்பச்சியைப் பற்றி தெரிந்து கொண்டேனா என தெரியவில்லை ஆனால் கவிதைகள் என்னைத் தொற்றிக்கொண்டன. 



அப்பச்சியின் பெயரைத்தான் என் மகனுக்கு வைத்தேன்.  என் மகன் பிறந்தபோது உயிரோடிருந்த அப்பத்தா கொள்ளு பேரனுக்கு தன் இளைய மகனுடைய பெயரை வைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தாள். "ஒன்னும் ஓராயிரமா இருக்கனும். குடும்பம் செய்ய லாயக்கில்லாத அந்த தறுதலை பேரை போய் வைக்கிறேங்கிர." என்று கறுவினாள். அவளுக்கு அப்பச்சியை நினைத்தாலே ஆங்காரம் பொங்கும். அப்பச்சி வயிறுவீங்கி ஆசுபத்திரியில் கிடந்த கடைசி நாட்களில் கூட அவரைப் பார்க்க வரவில்லை என்பதை பெரியம்மா ஒவ்வொரு சண்டையின் உச்சகட்டத்தின் போதும் "புள்ளைய முழுங்குன கருநாகம் தான.. கிளவி நீ" என சொல்லிக்காட்டுவாள். எத்தனைப்பெரிய சண்டையாக இருந்தாலும் அப்பத்தா அதற்கு பிறகு பேசமாட்டாள். அப்பச்சியின் அத்தனை சாமான்களையும் வருவோர் போவருக்கெல்லாம் கொடுத்து அப்புறப்படுத்தினாள்.  அப்பச்சி செத்து ஒரு மாதத்திற்கு பிறகு  அப்பச்சி சேகரித்து வைத்திருந்த  சாமான்களையெல்லாம் அப்பத்தா தூக்கிப்போட்டு சல்லிசல்லியாக நொறுக்கி சாமியாடிக்கொண்டிருந்தாள். புத்தகங்களையெல்லாம் தெருவில் வீசி எறிந்தாள். எல்லோரும் மவுனமாக சுற்றி நின்றுக்கொண்டிருந்தனர்.  தோளிலும் இடுப்பிலும் லாவகமாக அணைத்தபடி இருக்கும் கிரேக்கச்சாயல் கொண்ட மங்கு பொம்மைகள் மட்டும் முப்பதோ நாற்பதோ அவரிடமிருந்தன. அத்தனையையும் அப்பத்தா தூள்தூளாக ஆக்கினாள். அந்த பொம்மை வேண்டும் என அடம்பிடித்து அழுதபோது முதுகு பழுக்க ஒன்று கொடுத்தாள்.  பெரியப்பச்சி தான் அழும் என்னை சமாதானப்படுத்த தெருவில் கிடந்த எமிலி டிக்கின்ஸன் புத்தகத்தை கொண்டு வந்து கையில் கொடுத்தார். 'உன் அப்பச்சி எப்பவும் இதத்தான் வச்சிக்கிட்டே திரிவான். யாரு கண்ணுலயும் காட்டாம வச்சுக்க.' என்றார்.  


*"*

"அப்பா.. பாத்துட்டிங்களா?"


"இந்த அஞ்சு மட்டும் போதும்"


"அப்பச்சரி… நீங்க வீட்டுக்கு போங்க. மிச்சத்தை நான் பாத்துட்டு ராத்திரி வரேன்."


4




அப்பார்ட்மென்ட் கூடத்திலும் சிதம்பரத்தின் அறையிலும் சாமான்களாக விரவிக் கிடந்தன. மூன்று நாட்களில் வேலையை முடித்துக்கொண்டு சிதம்பரம் நேற்றிரவு சிங்கப்பூருக்கு கிளம்பிச்சென்றான். அவன் வாங்கி வந்த 'ப்ளூ லேபில்' மேசையில் இருந்தது. ஒரு கோப்பையில் ஊற்றி, கொஞ்சம் சோடாவை சேர்த்துக்கொண்டு ஒரு மிடறு அருந்தினேன். ஏசியை இயக்கினேன். 555 சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தேன். புகையும் மதுவும் உள்ளே கொந்தளித்து ஆர்ப்பரித்த கடலை அமைதிப்படுத்தின. ஏதோ ஒன்றுக்கு என்னைத்தயார் படுத்திக்கொள்வதைப்போல இருந்தன இந்தச் சடங்குகள். 


மனம் தன்னியல்பாக எமிலியை நாடியது. புத்தக அடுக்கில் கெட்டி அட்டைகொண்ட கருப்பு புத்தகத்தை கண்கள் தேடின. அதன் பழுப்பேறிய பக்கங்கள் காட்டிக்கொடுத்தன.  எமிலிமின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட ஆங்கில தொகுப்பு.   அப்பச்சி சில பக்கங்களில் கைப்பட  எழுதியிருப்பார். அடிக்கோடிட்டிருப்பார். சில கவிதைகளை மொழிபெயர்த்து கவிதைக்கு பக்கத்திலேயே எழுதியிருப்பார். சில கவிதைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. 'என்னால் மரணத்தை நிறுத்த முடியாததால்'  எனத் தொடங்கும் கவிதைக்கு கீழ் பென்சிலில் 'சீதாவுக்கு.. மன்னிப்பு வேண்டி'  என எழுதப்பட்டிருந்தது. அருகிலேயே கூப்பிய கரங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. அந்த கவிதை தொகுப்பில் இருபக்கங்கள் மட்டும் கிழிபட்டிருந்தன. அப்பச்சி எனக்கு ஏதும் செய்தி விட்டுச்செல்லவில்லை. ஆனால் ஏனோ அந்த கிழிப்பட்ட பக்கங்கள் எனக்கானவை என நான் ஆழமாக நம்பினேன். மறு உலகத்திலிருந்து எனக்கு அவர் கடத்த விரும்பிய செய்தி அதுதான் என கற்பனை செய்தேன். ஆனால் அவ்விரு பக்கங்களும் கிடைக்கவில்லை. ஒரு கவிதையை மொழியாக்கம் செய்து அன்புடன் ஜானுக்கு என எழுதியிருந்தார். 


'இதயமே நாம் அவனை மறப்போம்!

நீயும் நானுமாய், இன்றிரவே!

அவனளித்த வெம்மையை நீ மறப்பாய்,

நான் ஓளியை மறப்பேன்.


நீ முடித்துக்கொண்டதும், தயவுகூர்ந்து என்னிடம் சொல்

அப்போது எனது எண்ணங்கள் மங்கும்;

விரைக! நீ தாமதித்து பின்தங்கும் நேரத்திற்குள்,

நான் அவனை நினைத்திடுவேன்!


இத்தனை ஆண்டுகளில் பலமுறை இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் ஆனால் இப்போதுதான் அந்த பெயரை கவனித்தேன். சட்டென்று போதையிறங்கி அகம் தெளிந்தது. ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொண்டது. கண்களில் நீர் பொங்கியது. இன்னோரு சுற்று அருந்தினேன். ஏனோ அப்போது சிதம்பரத்தின் அருகாமையை மனம் வேண்டியது.  


அழுக்கு வேட்டி பொதியை எடுத்தேன். மெல்ல அதை அகற்றியபோது வேலைப்பாடுகள் மிக்க தந்தப்பேழை என் கையில் அமர்ந்தது. அதை மெல்ல வருடினேன். செதுக்குகளில் தூசு படிந்திருந்தது. கண்ணாடித் துடைக்கும் மெல்லிய துணியைக்கொண்டு துடைத்தேன். பேழையை உற்று நோக்கினேன். அப்பச்சியின் இளமை முகம் கருவிழிக்குள் கலங்கியமைந்தது. உடலெங்கும் நடுக்கம் ஒரு அலைபோல பரவுவதை உணர்ந்தேன். வெறுமே அந்தப்பேழையை வெறித்தபடி எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன் எனத்தெரியவில்லை. மீண்டும் பேழையை அழுக்கு வேட்டியில் பொதிந்து கட்டினேன். சிதம்பரத்தின் அறையில் இருந்த அலமாரியில் மறைவாக உள்ள ஓரிடத்தில் வைத்தேன். 


மறுநாள் உறக்கம் விட்டெழும்போது பதினோரு மணி. தலை கனத்து வலித்தது.  எலுமிச்சை தேநீரை ஒரு கோப்பை சுடச்சுட அருந்தினேன். சிதம்பரம் நான்கு முறை அழைத்திருந்தான்.‌ அப்பச்சியின் புகைப்படத்தை எங்கே மாட்டச்சொல்லலாம் என சுவரை நோட்டம் விட்டேன். பேழையில் என்ன இருக்கக்கூடும் என ஒரு கேள்வி தன்னிச்சையாக கிளர்ந்தது. கண்களை மூடிக்கொண்டு, என்னவாக இருக்கும் என கற்பனைச்செய்யத் தொடங்கினேன்.