Friday, May 6, 2022

கதைகளின் ஊடாக காந்தி- காந்தியைச் சுமப்பவர்கள் தொகுதியின் முன்னுரை



1

மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா? - காந்தி, அசோகமித்திரன்.

ஒரு புனைவெழுத்தாளராக எனக்கு காந்தியின் மீதான ஈர்ப்புக்கு அவர் மகாத்மா, தேசத்தந்தை, சுதந்திர போராட்ட வீரர் அல்லது சீர்திருத்தவாதி போன்ற அடையாளங்கள் காரணமில்லை. இவையாவும் அவருடைய அடையாளங்கள் அல்ல என்பதல்ல. அவருடைய வரலாற்று பாத்திரமும் பங்களிப்பும் முக்கியமானது. இன்றளவும் நல்லவிதமாகவோ தீயவிதமாகவோ காந்தியின் செயல்களைப்பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். அதன் பொருள் இன்றுவரை அவருடைய செயலுக்கான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறோம் என்பதுதான். காந்தியின் சமகாலத்தைச் சேர்ந்த பல இந்திய மற்றும் உலக தலைவர்கள் விடுதலைக்கும் சீர்திருத்தத்திற்கும் காந்தியைவிடவும் தீவிரமான சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியிருக்கக்கூடும். ஆனால் இன்றைய வாழ்வின் சிடுக்குகளுக்கு அவர்களிடம் எந்த விடையும் இல்லை. மதிப்புமிக்க நினைவுகளுக்கு அப்பால் அவர்களுடன் உரையாடவும் பெற்றுக்கொள்ளவும் எதுவும் இருப்பதில்லை. காந்தி அப்படி இல்லை.  காந்தி தன்னை ஒருவர் மகாத்மா என விளிக்கவில்லை என்று வஞ்சம் கொள்ளமாட்டார். சமதளத்தில் அவருடன் உரையாட முடியும். தந்தைகள் பொதுவாக வழிநடத்துவார்கள், கண்டிப்பார்கள். காந்தி இவற்றுக்கு அப்பால் முரண்படவும், விமர்சிக்கவும், மீறிச்செல்லவும் இயல்பாக இடமளிக்கும் அரிதினும் அரிய தந்தை. இதை எழுதும்போதே காந்தி அவருடைய அணுக்கர்களின் வாழ்வில் இதேயளவு நெகிழ்வுடன் நடந்துகொள்ளவில்லை எனும் முரண்பாடும் நினைவுக்கு வருகிறது. இதுதான் காந்தி. வேறு எவருடைய வாழ்விலும் இத்தனை வெளிப்படையாக தங்கள் வாழ்வின் உள் முரண்பாடுகள் பதிவாகவில்லை. விளைவாக கணக்கற்ற கதைச் சாத்தியங்களை காந்தியின் வாழ்வு எனக்கு அளிக்கிறதே என்பதே அவர் மீது எனக்கிருக்கும் முதன்மை வசீகரம். காந்தி ஒரு துன்பியல் காவியத்தின் நாயகன். இயேசுவைப் போல‌. இயேசு கிறிஸ்து ஒரு மதமாகவும் நிறுவனமாகவும் ஆகிவிட்டப்பின்னரும் கூட கலைஞர்களே அவரை மீட்டனர். தால்ஸ்தாய், தாஸ்தாயெவ்ஸ்கி, கசன்ஜாகிஸ், மிகைல் புல்ககோவ் தொடங்கி பால் சக்காரியா, ஃபிரான்சிஸ் கிருபா, ஜெயமோகன் வரை எழுத்தாளர்கள் கிறிஸ்துவை அமைப்பிலிருந்து மீட்டு அவருடன் உரையாடலை நிகழ்த்தியுள்ளார்கள். இயேசு தேவனாக அல்ல மானுடம் கண்ட மகத்தான துன்பியல் நாடகத்தின் முதன்மை நாயகனாக நிறுவப்படுகிறார். புத்தரை ஹெர்மன் ஹெஸ்ஸி மற்றும் விலாஸ் சாரங் போன்றோர் தங்கள் நாவல்களில் வனைந்தனர். புனித ஒளிவட்டங்களுக்கு அப்பால் மானுட நாடகத்தை எழுத்தாளர்கள் காண்கிறார்கள். இயேசுவும் புத்தரும் ஆழ்படிமங்களாகி விட்டார்கள். மனித பிரக்ஞையின் ஆழ்நிலைகளுக்குள் புகும் எதற்கும் அழிவில்லை. அவை மீண்டும் மீண்டும் கலையாக வெளிப்படும். 

காந்தியின் மரணத்தின் போது இந்தியா முழுக்க வன்முறை வெடிக்கவில்லை, ஆர்பாட்டமாக துக்கம் கொண்டாடவில்லை. அழுத்தமான மவுனம் ஒரு அலைபோல இந்தியா முழுவதும் பரவியது என்கிறார் ஆஷிஷ் நந்தி. எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியைச் சுமப்பவர்கள்' கதையில் காந்தியின் மரணத்துக்கு பின் அவருடைய அஸ்தி கலயத்தை நைல் நதியில் கரைக்கச் செல்கிறார்கள். அப்போது ஆப்பிரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் நிகழும் உரையாடல் இது.

"விசித்திரமாக இருக்கிறது. இந்தியாவின் தந்தையை ஏன் ஒரு இந்தியன் கொல்ல வேண்டும்."

``அது தான் எங்களுக்கும் புரியவில்லை`` என்றார் கித்வானி

``பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவன் கூட அவரைக் கைகூப்பி வணங்கியபிறகே தனது துப்பாக்கியை உயர்த்தினான்``

``கொலைக்காரன் ஏன் அவரை வணங்கினான் ``எனக் குழப்பமான முகத்துடன் கேட்டான் ஒபாடே

``அவனுக்கும் அவர் தந்தை தானே`` என்று தணிவான குரலில் சொன்னார் சுக்லா

தந்தையைக் கொல்வது பெரும்பாவம். அது உங்கள் தேசத்தைச் சும்மாவிடாது

``காந்தியின் உடலை விடவும் அவரது அஸ்தியின் கனம் அதிகமாகயிருக்கும். காரணம் அது கோடான கோடி இந்தியர்களின் கண்ணீரையும் சேர்த்தது தானே ``என்றார் சுக்லா

சமூகமாக இந்தியா மொத்தமும் தந்தை கொலையில் மவுனமாக பங்கேற்றது, கோட்சே அவர்களின் கூட்டு அவாவின் உருவம் மட்டுமே என குற்றம் சாட்ட முடியும். தேவிபாரதியின் 'பிறகொரு இரவு' கதையும் காந்தியின் மரணத்திற்காக காந்தியின் அணுக்கர்கள் கூட காத்திருந்த சித்திரத்தை அளிக்கிறது. ஜி. நாகராஜனின் 'கிழவனின் வருகையில்' கிழவனை கொன்று கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தை சொல்கிறார். காந்தி மரணத்தின் வழியாக இந்தியர்களின் பொதுமனத்தின் ஆழத்திற்குள் சென்றுவிட்டார். காந்தியின் மரணம் காந்தியின் வாழ்வை அசோகமித்திரன் சொல்வது போல் மாபெரும் துன்பியல் காவியமாக ஆக்குகிறது.  'என் வாழ்வே என் செய்தி' என சொன்னவர் காந்தி. காந்திய கதைகளை வாசிக்கும்போது அவருடைய வாழ்வைவிட அவர் மரணமே பெருஞ்செய்தியாக வளர்வதை உணர முடிகிறது. 

இத்தொகுதியில் உள்ள பதினைந்து கதைகளில், 'ஆடல்' 'நான்காம் தோட்டா' 'மரணத்தை கடத்தலும் ஆமோ' 'ஆரோகணம்' 'காந்தியைச் சுமப்பவர்கள்' 'கிழவனின் வருகை' 'பிறகொரு இரவு' என ஏழு கதைகள் நேரடியாகவே காந்தியின் மரணத்தை பேசுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொதுமனத்தின் ஆழத்தில் ஆறாக் காயமாக, சமன்படுத்த இயலாத பள்ளமாக காந்தியின் மரணம் திகழ்கிறது என்பதையே காட்டுகிறது. இது காலப்போக்கில் பெருகவே கூடும்.   

2

காந்தி 150 ஆம் ஆண்டை முன்னிட்டு பாரதிய வித்யா பவன் ஒவ்வொரு இந்திய மொழியிலும் காந்தி குறித்து ஒரு தொகைநூலை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது. தமிழில் அதை தொகுக்கும் பணி எனக்கு கிட்டியது. சிறுகதைகள், நாவல் பகுதிகள், கவிதைகள், கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் மற்றும் அஞ்சலிகள் என பல பகுதிகளை கொண்ட அறுநூற்றைம்பது பக்க தொகுப்பது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது. காந்தி நூற்றாண்டை ஒட்டி கே.எஸ். ஜம்புநாதன் தொகுத்த 'காந்தி சிறுகதைகள்' தொகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆர். சூடாமணி மற்றும் பி.எஸ். ராமையாவின் கதைகளை அங்கிருந்தே எடுத்துக்கொண்டேன். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கதைகளைத்தவிர்த்து எஸ். ராமகிருஷ்ணனின் 'இரண்டு கிழவர்கள்' கலைச்செல்வியின் 'மிலியின் சகோதரன்' 'உதிர்ந்த இலை' 'முகத்துவார நதி' ஆகிய மூன்று கதைகள், ஜெயமோகனின்  'பின்தொடரும் நிழலின் குரல்' நாவலுக்குள் இடம்பெற்றுள்ள 'மெல்லிய நூல்' மற்றும் சுரேஷ் பிரதீப்பின் 'விடைபெறுதல்' ஆகியவை குறிப்பிடத்தக்க விடுபடல்கள் என சொல்லலாம். 

காந்திக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் அவர் வாழ்ந்த காலம் வரையும் பின்னரும் கூட நெருங்கிர தொடர்பு உண்டு. பால சுந்தரம் தில்லையாடி வள்ளியம்மாள் தொடங்கி தம்பி நாயுடு, வின்சென்ட் லாரன்ஸ் வரை பலர் தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு உறுதுணையாக இருந்தவர்கள். காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி ஆசிரமம் அமைக்கையில் அதன் தொடக்க குடியேறிகளில் ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள். காந்தியின் சம்பந்தியும் சகாவுமான ராஜாஜி தொடங்கி டாக்டர். ராஜன், திரு.வி.க, ஏ.கே. செட்டியார் என பலர் காந்தியோடு தொடர்புடைய தமிழர்கள். காந்தி தமிழகத்திற்கு 1890 களிலேயே முதன்முறையாக வந்திருக்கிறார். எனினும் 1934-35 ஹரிஜன் யாத்திரையே காந்தி தமிழகத்தில் முழுமையாக மேற்கொண்ட பயணம். அப்பயணத்தின் சுவடுகளை கதைகளில் காண முடிகிறது. 'புதிய நந்தன்' 'பதச்சோறு' 'மரணத்தை கடத்தலும் ஆமோ' என மூன்று கதைகளில் அப்பயணத்தின் குறிப்புகள் கிடைக்கின்றன. தி.செ.சௌ. ராஜனின் நினைவுக்குறிப்பும் முக்கியமானது. 

காந்தியின் வாழ்க்கை கதை, மரணக்கதை என இத்தொகுதியின் கதைகளை பொதுவாக இரண்டாக வகுக்கலாம். புதிய நந்தன் வரையிலான முதல் எட்டுகதைகள் வாழ்க்கைக்கதைகள். கடைசி ஏழு கதைகள் மரணத்தை பேசுபொருளாக கொண்டவை. 'பதச்சோறு' 'ஆலமரத்தில் ஒரு பறவை' ஆகிய இரண்டும் தூய லட்சியவாத கதைகள் என சொல்லலாம். 'உள்ளும் புறமும்' 'காந்தியுடன் பேசுவேன்' ஆகிய கதைகள் லட்சியவாதத்தின் வீழ்ச்சியில் நின்றபடி காந்திர லட்சியவாதத்தை நோக்கும் கதை என சொல்லலாம். 'புதிய நந்தன்' லட்சியவாதத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில் அதன் பொருளின்மையையும் சுட்டுகிறது. 'பிறகொரு இரவு' காந்தியும் அவரது லட்சியவாதமும் அவர் கண் முன்னே காலாவதியாகும் துயரத்தை பேசுகிறது. 'கிழவனின் வருகை' அப்படி காலாவதியாவது உலக இயல்பு என வரையறை செய்கிறது.  'Ecce homo'( இவன் மனிதன்), 'நீரும் நெருப்பும்' ஆகிய இரண்டு கதைகளும் நேரடியாக காந்தியின் வாழ்க்கை சம்பவங்களில் இருந்து புனைவு தருணத்தை உருவாக்கி கதையாக்கியவை. 'மரணத்தை கடத்தல் ஆமோ' 'ஆடல்' 'கிழவனின் வருகை' 'ஆரோகணம்' 'பிறகொரு இரவு' ஆகிய அனைத்து கதைகளுமே கனவுத்தன்மையும் மிகுபுனைவுத்தன்மையும் கொண்டவை என வகைப்படுத்தலாம். 

பாவண்ணனின் 'ஆலமரத்தில் ஒரு பறவை' கதை ஒரு லட்சியவாதை கதை. காந்தியவாதியான தந்தை விசுவநாதனின் நினைவு குறிப்பை தொகுத்து அவரத மகன் நூலாக்குகிறார். அதில் சில பகுதிகளை சேர்க்கும் விதமாக தந்தையுடன் தொடர்பிலிருந்தவர்களை தேடி அவர்களுள் சிலருடனான உரையாடலை பதிவு செய்கிறார். காந்திய தொண்டரின் வாழ்வின் ஊடாக காந்தியை அவர் எப்படி உள்வாங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. காந்தியுகத்து தொண்டர்கள் காந்தியிடமிருந்து லட்சியவாதத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் மொத்த வாழ்வையும் தகவமைக்கிறார்கள். காந்தி ஒரு 'ஆலமரம்' அங்கிருந்து தங்கள் வாழ்வை வளர்த்தாக்கொண்ட பறவைகள் தான் விஸ்வநாதனும் அவரது நண்பர்களும். காந்தி இக்கதையில் தொண்டர்களின் புகலிடமாக திகழும் ஒரு முன்மாதிரி தலைவராக சித்தரிக்கப்படுகிறார். பென்சிலினை பயன்படுத்த காந்தி மறுத்தபோது விஸ்வநாதன் நேருக்கு நேர் நின்று அதை கேள்வி கேட்கும் பகுதியை கதையின் சுவாரசியமான பகுதி எனச் சொல்லலாம். காந்திக்கும் அவர் தொண்டர்களுக்கும் இடையிலான உறவு இருபக்க உரையாடல்தன்மை கொண்டது.  'பாபுஜி. பென்சிலினோட வருகை மருத்துவ உலகத்துல மிகப்பெரிய புரட்சி. கிட்டத்தட்ட நம்ம அகிம்சைத் தத்துவத்தப்போல. அதை நிராகரிக்கறதுக்கு உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அதுல உங்க பிடிவாதம்தான் வெளிப்படுதே தவிர தெளிவு இல்லைங்கறது என் எண்ணம். அகிம்சைய இன்று நாடெங்கும் நாம் வலியுறுத்தி பேசறோம். அது ஒரு சக்தியாகவே வளர்த்திருக்கோம். ஆனா வன்முறையே எனக்கு வழிமுறைன்னு உறுதியா நிக்கறவங்க யாரயும் நம்மால அணுக முடிஞ்சதில்ல. ராமநாமமே எனக்கு பென்சிலின்னு சொல்லறதுக்கும் வன்முறையே எனக்கு வழிமுறைன்னு சொல்லறதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கறமாதிரி எனக்குத் தெரியலை' எனச் சொல்கிறார் விஸ்வநாதன். தலைவருக்கும் தொண்டருக்கும் இடையே புரிதலும் நன்னம்பிக்கை இருக்கும்போது பாதுகாப்பின்மை இருக்காது. அச்சமற்ற சூழலில்தான் துணிந்து இத்தகைய உரையாடலை நிகழ்ந்த முடியும். காந்தியிடம் அத்தகைய உரையாடல் சாத்தியப்பட்டது. 

மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ். ராமையாவின் 'பதச்சோறும்' ஒரு லட்சியவாத கதை. கதை முடிவும் கற்பனாவாதத்தன்மை கொண்டதுதான். காந்தி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட கதைகள் என புதுமைப்பித்தனின் கதையும் இவரது கதையையும் சொல்லலாம். கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான முரணை தொட்டுக்காட்டி, கொள்கையின் வெற்றியை பறைசாற்றுகிறது. குமுதத்தின் நினைவுகளின் ஊடாக காந்தியுடனான அவளது சந்திப்பு உயிர்பெறுகிறது. ஹரிஜன் யாத்திரைக்கு வரும்போது காந்தியிடம் கையெழுத்து பெறச்சென்று நகைகளே அணிவதில்லை என அவருக்கு உறுதி அளிக்கிறாள் குமுதம். அந்த உறுதியை காப்பதற்காக தன் குடும்பத்தையே இழக்க தயாராக இருக்கிறாள். காந்தியை முதல்முறை, ஒரேயொரு முறை தான் குமுதம் சந்திக்கிறாள்‌. ஆனால் அது அவள் மொத்த வாழ்வையும் மாற்றுகிறது. அசல் வாழ்வில் ஒரே/முதல் சந்திப்பில் காந்தி பலருடைய வாழ்வை தலைக்கீழாக மாற்றிய வரலாறு மீண்டும் மீண்டும் பதிவாகிறது. அத்தருணத்தை படம்பிடித்து காட்டியவகையில் இக்கதை முக்கியமானது. காந்தி காந்தியாக, லட்சியவாதியாக சித்தரிக்கப்படும் கதை‌.    

சூடாமணியின் 'உள்ளும் புறமும்' காந்திக்கு பின்பான காலத்திலிருந்து காந்திய காலத்தை, அதன் லட்சியவாதத்தை ஏக்கத்துடன் அனுகும் லட்சியவாத பிரதி. இயல்பாக கால மாற்றத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் காந்தி வெற்று அடையாளமாக மாறி நிற்கும் நிலையையும் சுட்டுகிறது.  'பதச்சோறு' கதையை விட நுட்பமான தளத்தில் நம்முடன் உரையாடுகிறது. அன்றைய யதார்த்தத்தையும் கொள்ள வேண்டிய லட்சியத்தையும் ஒருசேர நினைவூட்டுகிறது. காந்தி பெயரில் பெரும் கட்டிடங்களை எழுப்பும் ஒரு தொழிலதிபர், காந்தி பெயரில் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர் என இரண்டு நண்பர்கள், தங்களுடன் போராட்டத்தில் பங்குபெற்ற, ஆனால் புகழடையாத மூன்றாவது நண்பரை தேடிச்செல்கிறார்கள்.  நண்பர்கள் இருவரும் தத்தமது மனைவிமார்களை அழைத்துக்கொண்டு சந்திப்புக்கு வருகிறார்கள். அவர்களுடைய உரையாடலின் ஊடாக பரஸ்பரம் இருவரும் தங்களது போலித்தனங்களை அறிந்து, எடைபோடுகிறார்கள். காந்தியுடன் இருந்தவரெல்லாம் காந்தியவாதியா? காந்திய அடையாளங்களை பறைசாற்றுபவர் காந்தியவாதியா? மெய்யான காந்தியவாதி யார்? எனும் கேள்வியை கதை எழுப்புகிறது. காந்தி தனிமனிதர் எனும் நிலையிலிருந்து உள் முரண்களற்ற விழுமியத் தொகையின் பிரதிநிதியாக சாராம்சப்படுத்தப்படுகிறார். 

எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியோடு பேசுவேன்' கதையில்  கதைசொல்லி லட்சுமணனும் அவரது யூத மனைவி ராகேலும்  வார்தாவில் காந்தி வாழ்ந்த குடிலுக்குச் செல்லும் சித்திரத்துடன் தொடங்குகிறது. நினைவுகளின் ஊடாக லட்சுமணனின் தாய் காந்தியை அடைந்த கதையும் அவரது ஆசிரம வாழ்வும் சொல்லப்படுகிறது. லட்சுமணன், அவனது மனைவி ராகேல், அவனது அன்னை ஆகியோரின்  காந்தியை பற்றிய சிந்தனைகளும், நினைவுகளுமே கதையாகிறது. ராகேலின் பாத்திரம் வழி இந்திய பொதுமனம் மீதான அவதானிப்புகளை முன்வைக்கிறார். காந்தியை சுமக்க வேண்டியதில்லை அவருடன் ஆக்கப்பூர்வமாக உரையாட வேண்டும் என்பதே அவள் விடுக்கும் செய்தி. லட்சுமணன், ராகேல், அம்மா என மூவரும் தங்களது காந்தியை கண்டுகொள்கிறார்கள். 

லட்சுமணனின் தாய் காந்தியை காண வீட்டை விட்டு விலகிச் சென்றவர். காந்தியை ஒரு ஆணாக அவர் காண முடியவில்லை. ராகேல் காந்தியையும் புத்தரையும் எளிதில் வீழ்ந்துவிடாத வலுவுடைய பெண்களின் அகம் கொண்ட, தங்களைப் பெண்ணாக உணர்பவர்களாகவே காண்பதாகச் சொல்கிறாள். உண்ணாவிரதம் எனும் போராட்ட வடிவமே பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம்தான் என்கிறாள். காந்தி பெண்களுடைய அகத்துடன் தனியாக ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டுள்ளார். காந்தியின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று பெண்களை அரசியல்மயப்படுத்தியது. ராகேலின் கோணத்தில் காந்தி எப்படி புலப்படுகிறார் என எஸ். ராமகிருஷ்ணன் எழுதுகிறார். 

"இந்திய பெண்கள் காந்தியை சமூகசேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை, பெரும்பான்மை மக்கள் சகலவிதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கி கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு  சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்றே புரிந்து கொண்டிருக்கிறார்கள்."

அசோகமித்திரனின் 'காந்தி' ஒரு நனவோடைக்கதை. 'காந்தி' கதைசொல்லியின் சிந்தனைபெருக்கின் ஒரு பகுதி மட்டுமே. கசப்பை வழக்கமாக விரும்பி அருந்தும் கதைசொல்லிக்கு அன்று ருசிக்க முடியாத அளவிற்கு காபி புதிதாக கசந்தது. அது நண்பனின் மீதான, நட்பின் மீதான கசப்பு. சிம்னி விளக்கொளியில் தூரத்தில் ஓரு கணம் மின்னி மறையும் உன்னத பரிசுத்த கணத்தில் தன்வசமிழந்து கரையும் நண்பனுக்கு காந்தியை ஏன் பிடிக்கவில்லை எனும் கேள்வியே கதைசொல்லியை வாட்டுகிறது. அது கவிதை கணம், கவிஞனால் காந்தியை எப்படி வெறுக்க முடியும்? உறவின் விரிசலுக்கு கூட காந்திதான் காரணமோ என சந்தேகிக்கிறான். மனிதர்களுக்குள் உள்ள உள்முரண்களை பற்றிய விசாரனை இயல்பாக காந்தியை அடைகிறது. கதையில் உள்முரண்களின் உருவமாக காந்தி உருவெடுக்கிறார். நண்பனின் தர்க்கப்பூர்வமான எதிர்வாதங்களுக்கு முழு சித்திரத்தை பார்க்க மறுக்கிறாய் எனும் பலவீனமான, ஆனால் ஆத்மார்த்தமான பதிலைத்தவிர வேறு எதை சொல்லிவிட முடியும். ஏறபுக்கும் இறுகிய நம்பிக்கைகளுக்கும் இடையேயான போராட்டம். கதைசொல்லி தனக்குள் உள்ள முரணை கண்டுகொள்கிறான். தனக்குள் உள்ள முரண்களை உணர்பவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்கு காந்தியை நெருங்கி அறியவும் ஏற்கவும் இயலும்.

முந்தைய கதையான 'காந்தியோடு பேசுவேன்' கதையில் வரும் இவ்வரி காந்தியின் உள் முரண்பாடுகளில் லயித்துக்கிடப்பதின் பயனின்மையை சுட்டுகிறது. 'ஒருவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளுற நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை, காந்தி என்வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல, அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது, நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை.' அசோகமித்திரனின் 'காந்தியும்' காந்தியின் மீதான நன்மதிப்பு ஒருவர் திறந்தமனதுடன் இருக்கும்போது அடையப்படுவது அதை தர்க்கத்தால் நிலைநிறுத்த முடியாது எனும் கண்டடைதலையே  முன்வைக்கிறது.

'சத்திய சோதனையில்' ஐந்தாம் பாகம் 28 ஆவது அத்தியாயமான 'மரணத்தின் வாயிலருகில்' எனும் அத்தியாயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை ஜெயமோகனின் 'நீரும் நெருப்பும்'. காந்தி 1918 ஆம் ஆண்டு ஸ்பேனிஷ் ஃப்ளூ காய்ச்சலில் பீடிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புவரை சென்ற நிகழ்வை அதில் விவரிக்கிறார். கதையில் பைராகியாக உருமாற்றமடையும் கேல்கரை பற்றி காந்தி எழுதுகிறார் 'இவ்விதம் சதா சாவை         எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்தபோது, டாக்டர் தல்வல்கர்,   ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார்.          மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே    அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே  அவர் வந்தார்.' இக்கதையில் வரும் ஒருவரி ‘நான் ஒரு கிறுக்கன் என நினைக்கிறார். ஆகவே என்னைப் பார்க்கவும் என் மருத்துவத்துக்குள் வரவும் திரு. காந்தி உடன்படக்கூடும் என்றார்'.

உண்மை நிகழ்வை தொட்டுக்கொண்டு கதை தன்போக்கில் பிரம்மாண்டமாக விரிகிறது. ஜெயமோகன் நோக்கில் நல்ல சிறுகதை என்பது வளரும் உருவகத்தை தன்னகத்தே கொண்டது. அதன் வழி கவிதைக்கு நெருக்கமாகிறது. நீரையும் நெருப்பையும் உருவகங்களாக வளர்த்தெடுக்கிறார். உடலை நெருப்பு குண்டமாக எழுப்பும் சிகிச்சைமுறையை நம்பும் பைராகி இருளில் தழலென அனலுருவாக அறிமுகமாகிறார். காந்தியின் உடல் விவரிக்கப்படும்போது 'காட்டுத்தீக்குப்பின்னர் வைரம் மட்டும் எஞ்சும் சுள்ளிபோன்றது' என குறிப்பிடப்படுகிறது. பைராகி உயிரை பேண அனலின் வழியை பரிந்துரைக்கிறார். அனல் தான் பெருக பெருக அனைத்தையும் உண்டு செரிப்பது. காந்தி நீரின் வழியை உயிர்த்திருக்க தேர்ந்தெடுக்கிறார். நீர் அரவணைப்பது. தண்மையானது. நீருக்குள்ளும் நெருப்பு உண்டு எனும் தரிசனமே பைராகி வழி காந்தி அடைவது. இந்தியா துருவவாதிகள் மிதவாதிகள் என இரண்டுவிதமான போக்கையே காந்தியின் வருகைக்கு முன் விடுதலைக்கான வழியாக கண்டிருந்தது. காந்தி இவை இரண்டுமல்லாத புதிய பாதையை உருவாக்கினார். அவருடைய வழி நீரின் நெகிழ்வுத்தன்மை, அரவணைக்கும் தன்மை கொண்டது ஆனால் அகத்தே நெருப்பை உணர்ந்தது. காந்தியின் உயிரை பிடித்து வைத்திருந்தது அவருடைய வாழ்விச்சை. இக்கதையில் கனவின் வழி தேச விடுதலை அவருடைய கடமையாக உணர்த்தப்படவில்லை மாறாக கடைநிலை மக்களுக்கு அவர் ஆற்ற வேண்டியதே அவருடைய வாழ்விலக்காக சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த அறிதலின் வழி வாழ்விச்சையை மீட்டுக்கொள்கிறார். புரட்சி எனும் நெருப்பின் பாதையை தவிர்த்து மக்கள் திரள் ஒருங்கிணைப்பு எனும் நீரின் பாதையை தேர்வு செய்யும் கணத்தையே கதையாக்கியுள்ளார் ஜெயமோகன். மானுட குலத்திற்கான காந்தியின் ஆகச்சிறந்த பங்களிப்பு இந்த போராட்டமுறையை கண்டடைந்தது அதை வளர்த்தெடுத்ததே. அந்த தருணத்தை புனைவின் ஊடாக தொட்டு‌ மீள்கிறார் ஜெயமோகன். காந்தி இக்கதையில் 'கட்டுத்தளர்ந்த சுள்ளிக்கட்டுபோல்' உள்ள பலவீனமான நிலையில்தான் அறிமுகமாகிறார். இன்றே இப்போதே என எல்லாவற்றையும் மாற்ற ஓயாமல் உழைப்பவராகவும் ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை எனும் ஞானியர்களுக்கே உள்ள சலிப்பை அடைபவருமாக உழல்கிறார். அவருக்குள் இருக்கும் குழந்தையே அவரை சலிப்படையாமல் வைத்துக்கொண்டது. ஆனால் அவருடைய 'ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்.' காந்தி தொடர் முனைப்பின் வடிவமாக ஜெயமோகன் கதையில் துலக்கமடைகிறார். காந்தி என்பது கொள்கைகளோ இயல்புகளோ அல்ல ஓயாத செயல். 'காந்தியோடு பேசுவேன்' ஆண் பெண் என பால்ரீதியாக என்ன உருவகத்தை கட்டமைத்ததோ அதே இருமையை 'நீரும் நெருப்புமாக' இக்கதை கட்டமைக்கிறது. 

நகுல்வசனின் Ecce homo (இவன் மனிதன்) 'நீரும் நெருப்பும்' போலவே காந்தியின் வாழ்விலிருந்தே புனைவை உருவாக்குகிறது. காந்தி லண்டனுக்கு கப்பல் ஏறுவதில் தொடங்கி மீண்டும் இந்திய கரையை அடையும் வரையிலான காலகட்டத்தை சித்தரிக்கிறது. 'சத்திர சோதனையில்' காந்தியே எழுதிய புனைவுத் தருணங்களை மட்டும் கோர்த்து உருவாக்கப்பட்ட சித்திரம். சத்திய சோதனையின் நம்பகமான மறு ஆக்கம் என்றே சொல்லலாம். நிகழ்வுகளின் தேர்வு மற்றும் அவை கோர்க்கப்பட்ட விதமே இதை புனைவாக ஆக்குகிறது. லட்சியவாதியோ மகாத்மாவோ அல்ல காந்தி நம்மை போல நன்மைக்கும் தீமைக்கும் இடையே சபலத்தில் ஊசலாடிக்கொண்டிருப்பவர் என்பதே இக்கதையின் பார்வை கோணம். தலைப்பும் அதையே வலியுறுத்துகிறது.  மனிதர் காந்தி எதிர்கொண்ட அலைக்கழிப்புகளே கதை. அலைக்கழிப்புகளின் ஊடாகவே காந்தி நமக்கு அணுக்கமாகவும் ஆகிறார். கலைக்கான ஊடகமாகவும் ஆகிறார். 

புதுமைப் பித்தனின் 'புதிய நந்தனை' காந்தி கதை என வகுத்துவிட முடியுமா எனத்தெரியவில்லை‌. ஆனால் காந்தியின் இருப்பை உணர்த்தும் கதை. காந்தியின் வருகை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உரையாடலையும் விவாதிக்கிறது. பொதுவாக புதுமைப்பித்தன் உட்பட நவீன இலக்கியவாதிகளின் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்பது அவர்கள் சமகாலத்தை புனைவுகளில் பதிவு செய்ததில்லை என்பதே. ஆனால் 'புதிய நந்தனில்' காந்தியின் வருகை பதிவாவதோடு மட்டுமில்லாமல் அங்கிருந்து இன்று வரை தீராத சிக்கலை முன் உணர்த்துகிறது. கதையின் தலைப்பிலேயே 'நந்தனார் சரித்திரிம்' சார்ந்த குறிப்பு உள்ளது. கதையும் அதை கோடிட்டு காட்டியபடியேதான் தொடங்குகிறது. நந்தனார் 'திருநாளைப் போவார்' நாயனாராக ஆக நெருப்பில் குளித்து தன் தூய்மையை நிறுவ வேண்டியிருந்தது. காந்தி தோல்வியடைந்த மீட்பர் என சொல்லலாம். கிறிஸ்துவை போல‌. தோல்வியின் ஊடாகவே அவர் மேலும் மேலும் நமக்கு நெருக்கமாகிறார். பேருரு கொள்கிறார். 

பாவாடையாக பிறந்து ஜான் தானியலாக வளர்ந்து தோழர் நரசிங்கமாக உருமாறியவனும் பிராமண குடும்பத்தில் பிறந்து எம்.ஏ படித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட ராமநாதனும் ஒரே உண்மையை இருவேறு பாதையில் வந்தடைகிறார்கள். 'மவாத்துவா' கிழவரை காணவரும்போது, சிவபெருமானின் நெற்றிக்கண் தழலென ஒளிவிட்டு விரைந்து கடக்கும்  ரயில் வண்டியில் விழும் குருட்டு கிழவனான கருப்பனை காக்கும் முயற்சியில் மூவரும் சிதைந்து போகிறார்கள். இவர்களில் யார் நந்தன் என்றொரு கேள்வியை எழுப்புவதோடு கதை முடிகிறது. குறியீட்டு ரீதியாக இக்கதை விரிந்தபடி உள்ளது. நிற்காத ரயில் வண்டி சனாதனம், சாதியவாதம்.

 இந்திய தேசிய விடுதலை என பலவாக விரித்து காண முடியும். சனாதனிகள், தோழர்கள், சாமானியர்கள் என அனைவரும் அவர்களுக்கு மீட்பளிக்கபோகும் அந்த ரயிலுக்காக அவரவர் கணக்குகளுடன் ஆதனூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். எல்லோருக்கும் விடுதலை வேறுவேறாக பொருள்படுகிறது. சிக்கியவர்களுடன் சேர்ந்து மீட்பர்களும்  அவர்களின் உன்னத முயற்சியில் ரயிலால் அடித்து செல்லப்படுகிறார்கள்.‌ சமகாலத்தின் இருவேறு சமூக சீர்திருத்த போக்குகளை ஒரு கலைஞனாக அவதானிக்கிறார் புதுமைப்பித்தன். இரண்டு போக்குகளையும் ஆத்மார்த்தமானதாக அங்கீகரிக்கிறார். ஆனால் எதற்குமே நிற்காத ரயில், மனிதத் தன்மையற்ற இயந்திரமான ரயிலுக்கு முன் இவை இரண்டுமே தோல்வியடையும் எனும் அவநம்பிக்கையே 'புதிய நந்தனாக' ஆகிறது. நகுல்வசனின் கதை காந்தியை லட்சியவாதத்திலிருந்து வெளியேற்றி மனிதனாக நம்முன் நிறுத்துகிறது என்றால் புதுமைப்பித்தன் அதன் மீது ஐயம் கொள்கிறார். அதுவும் காந்தி வாழ்ந்திருந்த காலத்தில் இந்த கதையை எழுதினார் எனும்போது அவரது மனோதர்மத்தையும் கூர்மையையும் வியக்காதிருக்க முடியவில்லை. பெரும் கலைஞர்களால் ஒரு சேர ஆசுவாசத்தையும் தொந்திரவையும் அளிக்க இயலும். 

  


3

காந்தியின் மரணக் கதைகளை வாசிக்கும்போது அவை மீள மீள 'ஏன்?' எனும் கேள்வியை எழுப்பி தத்தமது விடைகளை கண்டடைகின்றன. 'நான்காம் தோட்டா' துப்பறியும் கதையாக தோற்றம் கொண்டாலும் ஏன் எனும் கடினமான கேள்வியை எழுப்புவதுடன் முடிகிறது. 'காந்தியைச் சுமப்பவர்கள்' இந்தியனே காந்தியை கையெடுத்து வணங்கிவிட்டு  கொன்ற வினோதத்தை புரிந்துகொள்ளாமல் திகைக்கிறது. என்றால் 'பிறகொரு இரவு' அதற்கு இந்திய சமூகத்தையே பொறுப்பாக்குகிறது. 'மரணத்தை கடத்தல் ஆமோ' மெய்யியல் தளத்தில் விடை தேடுகிறது. 'ஆரோகணம்' தொன்மத்துடன் இணைவைத்து புரிந்துகொள்ள முயல்கிறது. 'ஆடல்' ஏன் எனும் கேள்வியை எழுப்பவில்லை என்றாலும் அந்த நிகழ்வை செரித்துக்கொள்ள முற்படுகிறது. 'கிழவனின் வருகை' அது இன்றியமையாத ஒரு நிகழ்வு எனும் முடிவுக்கு வருகிறது. நாவல்களில் 'மோகமுள்' '18 ஆவது அட்சக்கோடு' ஆகியவற்றிலும் காந்தியின் மரணம் பதிவாகியுள்ளது. அசோகமித்திரனின் நாவலில் அதன் நாயகன் சந்திரசேகரன் காந்தி காந்தி என கத்திக்கொண்டே ஓடுவது நாவலின் உணர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்று. 

சி. சரவணகார்த்திகேயனின் 'நான்காம் தோட்டா' காந்தி மரணமடைந்த காலத்திலும் நிகழ்காலத்திலுமென இரண்டு காலங்களில் மாறி மாறி நிகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் உண்மையில் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. நான்காவதாக ஒரு தோட்டா காந்தியை துளைத்தது, அதை சுட்டவர் கோட்சே அல்ல என சதி கோட்பாடுகள் கிளம்பின. சரவண கார்த்திகேயன் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு காந்தியின் மரணத்தை விசாரிக்கிறார். சபர்மதி எனும் பத்திரிக்கையாளர் தில்லிக்கு சென்று இவ்வழக்கு தொடர்பாக ஆய்வுசெய்து எழுத முற்படுவது ஒரு பகுதி மறுபகுதி காந்தியின் இறுதிநாள் சித்தரிக்கப்படுகிறது. மரணத்தின் வழி தன் மகாத்மாத்துவத்திற்கு நியாயம் சேர்த்தவராக காந்தி சித்தரிக்கப்படுகிறார். துருவமயமாதலும் மதவாதமும் காந்தியின் உயிரை காவுவாங்கியது என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும் கதை. காந்தியின் மரணம் காந்தியின் வாழ்வைக்காட்டிலும் பெரும் செய்தியாக ஆகிவிட்ட காலகட்டத்தின் எதிரொலிப்பு என இக்கதையை சொல்லலாம். 

எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியைச் சுமப்பவர்கள்' இத்தொகுதியின் தலைப்பிற்குரிய கதை. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது எஸ். ராமகிருஷ்ணன் கதையும் கூட. ஒரு எழுத்தாளரின் ஒரு கதையை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும் என்றொரு திட்டம் இருந்தது ஆனால் எஸ்.ராவிற்காக அதை மீற வேண்டியிருந்தது. காரணம் ஒன்று காந்தியின் மரணத்தை பேசுகிறது இன்னோன்றில் காந்தி ஓரு பாத்திரமாக வருகிறார். இரண்டும் மாறுபட்ட இரண்டு தரிசனங்களை கொண்டது.  காந்தியின் அஸ்தியை இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களுமாக   உகாண்டாவிற்குள் ஓடும்  நைல் நதியில் கரைக்க கொண்டு செல்லும் சித்திரத்துடன் இக்கதை தொடங்குகிறது. அவர்களுக்குள் நிகழும் உரையாடலே கதை. 'காந்தியுடன் பேசுவேன்' கதையில் ராகேல் யூத பண்பாட்டு பின்புலத்திலிருந்து காந்தியை எப்படி புரிந்து கொண்டாரோ அப்படி இதிலும் ஆப்பிரிக்கர் கோணத்திலிருந்து காந்தி உள்வாங்கப்படுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் காந்தியை உலகமயமாக்குகிறார். பண்பாட்டு தேச எல்லைகளுக்கு அப்பால் காந்தி எப்படி சென்று சேர்கிறார் என்பதை கவனிக்கிறார். காந்தி ஒரு ஒளியாக, உலகிற்கு பொதுவானவராக ஆகிறார். கதையின் இறுதிப்பகுதியில் இப்படியொரு உரையாடல் நிகழ்கிறது.

``ஒருமுறை கூட நேரில் காணாத காந்தியை இப்போது சாம்பலாக மடியில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். காந்தியின் எடையை உணருகிறீர்களா ``எனக்கேட்டான் ஒபாடே.,

``காந்தி இப்போது எடையற்றிருக்கிறார் ``என்றார் சுக்லா

``சாம்பலின் கனத்தை நம்மால் மதிப்பிட முடியாது. உயிருள்ள மனிதன் செய்ய முடியாதவற்றைக் கூட இறந்த மனிதனால் செய்து முடித்துவிட முடியும். இறந்தவர்களைப் பற்றி எளிதாக நினைக்க வேண்டாம்`` என்றார் சார்லி.

எஸ். ராமகிருஷ்ணனின் கதையில் ஏன் ஒரு இந்தியர் தன் தந்தையை கொன்றான் என எழுப்பப்படும் கேள்விக்கான பதிலை தேவிபாரதியின் 'பிறகொரு இரவு' கதையில் காணலாம். இது தமிழில் எழுதப்பட்டுள்ள ஆகச்சிறந்த காந்தி கதை என நிச்சயம் சொல்வேன். தேவிபாரதியின் புனைவுலகம் தால்ஸ்தாயும் காஃப்காவும் சந்திக்கும் புள்ளியில் நிகழ்வது. இக்கதையில் காந்தி தால்ஸ்தாயுடன் இணைவைக்கப்படுகிறார். மரணத்திற்கு முன்  பயணிக்க கிளம்புகிறார். காந்தி அமைப்பின் ஆளாக மாற்றப்படும் சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரும் துயரம் அவர் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கியதை கதை பேசுகிறது. காந்தியின் மரணத்திற்கு முன்பே யாருக்கு காந்தி தேவைப்படுகிறாரோ அவர்களிடமிருந்து ஒளித்தும் விலக்கியும் வைக்கப்படுகிறார். காந்தியின் இடத்தை அவருடைய போலிகள் நிறைக்கிறார்கள். ஒன்றின் மதிப்பை அழிப்பற்கு அதை நகலெடுத்தாலே போதும்.  வாழ்விச்சை கொண்ட காந்தி இந்திய சமூகத்தின் விருப்பை உணர்ந்து தன் மரணத்துக்கான நியாயத்தை தானே மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். காவலர்கள், அணுக்கர்கள், காந்தி வேடதாரிகள், முதல் ஒட்டுமொத்த தேசமே காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் மனதை வதைப்பது. தீர்க்க வேண்டிய கணக்குகள் எல்லாம் காந்தியின் தலை மறைவதற்காக காத்திருக்கின்றன. எஸ்.ராவின் புனைவுலகத்தோடு தேவிபாரதியின் கதையை சேர்த்து வாசிக்கும்போது முழுமைச்சித்திரய் கிடைக்கிறது. இந்தியர்களின் பொது விருப்பம் காந்தியை கொன்றாக வேண்டும் எனும் நிலையை ஏன் அடைந்தது? காந்தியோடு பேசுவேன் கதையிலிருந்து ஒரு மேற்கோளை பொருத்திக்கொள்ள இயலும். 'உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது,' காந்தியை கொன்று புனிதமாக்கி கடக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியர்களுக்கு.  ராகேல் சரியாக சுட்டிக்காட்டுகிறாள். 'இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, அவரை கடந்து செல்ல ஒருவழி தானிருக்கிறது, அவரை புனிதமாக்கிவிடுவது, அவரை அதிமனிதாக்கிவிடுவது, அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிருக்கிறீர்கள்,காந்தி இன்று வெறும் பிம்பமாக, சிலையாக மட்டுமே இருக்கிறார்'

கலைச்செல்வியின் 'ஆடல்' காந்தியின் மரணத்திற்கு பின்பான கணத்திலிருந்து தொடங்குகிறது. சடலமாக கிடக்கும் காந்தியின் உடலில் இருந்து பிரிந்து கொண்டிருக்கும் உயிரும் அவர் உடலுக்கு மேல் திரண்ட சிறு வெண் மேகமாக உருக்கொண்ட கஸ்தூர்பாவும் உரையாடத்தொடங்குகிறார்கள். கற்பனையான உரையாடல். இருவரும் தமக்குள் பேசி தீர்க்க வேண்டியவற்றை பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரின் வாழ்வை எடையிடுகிறார்கள். பாவுக்கும் காந்திக்குமான உறவு பல கதைகளில் பேசப்படுகிறது. அணுக்கமும் விலக்கமும் ஒரு சேர அமைந்த உறவு. 'மரணத்தை கடத்தலும் ஆமோ'  'ஆடல்' 'ஆரோகணம்' ஆகிய மூன்று கதைகளுமே இருவருக்குமிடையிலான உறவை இதே கோணத்தில் பரிவுடன் அனுகுகிறது. 

ஜி. நாகராஜனின் கிழவனின் வருகை. பிளக்கும் வெயிலில் நகரத்து நெரிசலுக்குள்  கிழவன் அறிமுகமாகிறார். சாலையோரம் செருப்பு தைப்பவருக்கு நெருக்கமாக தைக்க அறிவுரை அளிக்கிறார். பதிலுக்கு அவரை நோக்கி 'நீ என்ன நம்ப ஆளா?' என கேட்கிறான். அவரும் ஆம் என்கிறார். ஆலயத்துகை தேடிச்சல்லும் வேளையில் தாகத்திற்கு தண்ணி கேட்கும் கிழவனுக்கு சிவப்பு விளக்கு பகுதிக்கு வழி காண்பிக்கப்படுகிறது. சாக்கடையோரம் நீர் அருந்தி தாகத்தை தணித்துகொள்கிறார். பூங்காவுக்குள் ஒரு தொழு நோயாளியைக் கண்டதும் அவனை தழுவ செல்லும் கிழவரை கீழே வீழ்த்தி 'புண்ணியம் தேடிக்க வேற வழி கிடைக்கவில்லையா' என கேலி செய்கிறான். ஃபிராய்டிய ரோகியோ கிழவனின் தலையில் தடியைக்கொண்டு ஒரு போடு போடுகிறான். பழைய சமுதாயத்தின் கருப்பையில் இருந்து புதியதை பிறப்பிக்க இதுதான் மருந்து என்கிறான். நாக்கறுத்தவர்கள் உண்ணும் இடத்திற்கு உணவு வேண்டி செல்லும் இடம் இக்கதையை காப்காத்தனமாக ஆக்குகிறது. வழிகாட்டிய சிறுமி கிழவனிடம் நரமாமிசம் சாப்பிடுகிறாயா என கேட்கிறாள். கைவிடப்பட்டவர்களின் உலகம். கோஷங்கள் தாங்கிய சுவர்கள் புதிர்பாதையைப்போல் உருமாறுகின்றன. மகனைத்தேடி அலைகிறான். வாளும் ஈட்டியும் கையிலேந்தி அனல் கக்கும் மைந்தன். மொழி கற்றுக்கொடுத்த மைந்தன் நினைவுகளை கொன்று வேறு உருவில் நிற்கிறான். கிழவர் தன் மைந்தனிடம் எழுப்பும் கேள்விகளும் அதற்கு அந்த மைந்தனின் பதில்களும். கிழவன் தன் மைந்தனை வன்முறையாளனாக வரையறை செய்கிறார். மகனோ அதை மறுக்கிறான். தந்தை கொலை மீண்டுமொரு முறை நிகழ்கிறது. ஃபிராய்டிய கதை.‌ 

ரா. கிரிதரனின் 'மரணத்தை கடத்தலும் ஆமோ' ஒருவித பூடகத்தன்மை கொண்ட கதை. காந்தி இக்கதையில் தன் மரணத்தை தானே முன் உணர்ந்த, கனவுகளில் மரணத்துடன் உரையாடல் நிகழ்த்தும் மறைஞானியாக வருகிறார். கதையின் காலம் 1934- 35 ஆம் ஆண்டில் காந்தி தமிழகத்தில் நிகழ்த்திய ஹரிஜன் யாத்திரை. காந்தியின் துர்மரணத்தை ஒரு ஜோதிடர் கணிப்பதுடன் கதை தொடங்குகிறது. காந்தியின் தன்னிலையில், படர்கையில், கனவு என மூன்று விதத்தில் கதை சொல்லப்படுகிறது. விதிக்கும் சுயதேர்வுக்கும் இடையேயான முரணை காந்தியின் வாழ்வைக்கொண்டு எழுப்புகிறார் கிரிதரன். காந்தியை மரணமும் வன்முறையும் வாழ்நாள் முழுவதும் நெருங்கியபடியே வருகிறது.‌ மீண்டும் மீண்டும் அதன் மூச்சுக்காற்றை புறங்கழுத்தில் உணர்ந்தபடிதான் இருக்கிறார். காந்தி ஒரு நம்பிக்கையாளராகவும் ராஜாஜி ஒரு தத்துவவாதியாகவும் வருகிறார்கள். வினை, வினைப்பயன் மற்றும் சுயதேர்வு சார்ந்து இருவரும் விவாதிக்கிறார்கள். மரணம் ஒரு செம்புள்ளியாக ஒற்றை விழியாக அவர் கணவுகளில் வருகிறது. கயிற்றின் நீளம் அனுமதிக்கும் எல்லைவரை அதனிடமிருந்து தப்ப அவரால் முடிந்தது. தற்செயலாக ஒரு பூரான் நசுங்கி துடித்து சாகிறது. தற்செயல் என தனக்குள் கத்தினாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.  'சி.ஆர், கயிறின் நீளம் எத்தனை எனும் தத்துவக்கணக்குகள் எத்தனை எத்தனை! வினைப்பயனும், நாமாக எடுக்கக்கூடிய முடிவுகளின் பயனும் எதிர் எதிர் தத்துவங்கள் அல்ல என்பதே இப்போதைக்கு என் எண்ணம். இரண்டும் ஒன்றை ஒன்று இறுக்கும் முடிச்சுகள் கொண்டவை. இந்த முடிச்சுகளை நோக்க நோக்க மனம் பேதலித்துப்போகிறது. அதனால் அதிலிருந்து தப்பிக்கும் வழியே என் தத்துவம். என் வாழ்க்கை.' எனும் வரிகளுடன் கதை முடிகிறது.

சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் கனவுத்தன்மை கொண்ட சிறுகதை. மகாபாரதத்தின் இறுதி பருவமான சுவர்க்க ஆரோகண பருவத்தை காந்தியைக்கொண்டு செய்த மறு ஆக்கம் என சொல்லலாம். காந்தியின் மரணத்திற்கு பின்பான அவரது பயணத்தை பேசுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை துறந்து துறந்து மேலேறுகிறார். தன் மொத்த வாழ்வையும் பயணத்தினூடாக காந்தி மறுபரிசீலனை செய்கிறார். உச்சத்தை சென்றடையும் காந்தி தருமன் தேர்வு செய்ததை தேர்வு செய்யவில்லை. துன்பம் நிறைந்த உலகம் என்பதுதானே மீட்பர்களுக்கான சொர்க்கமாக இருக்க முடியும். 

ஒட்டுமொத்தமாக கதைகள் காந்தியை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகின்றன. 
4

இத்தொகை நூலில் இடம்பெற்றுள்ள கதைகளுக்கு மனமுவந்து அனுமதியளித்த அத்தனை எழுத்தாளர்கள், அவரது குடும்பத்தார் மற்றும் பதிப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாரதிய வித்யா பவன் தொகை நூலை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க முக்கிய காரணம் காலச்சுவடு கண்ணன் அவருக்கு என் நன்றி. அத்தொகுதியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த நண்பர் த. கண்ணன் இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளைக்குறித்து எழுதியிருந்த குறிப்புகளும் உதவியாய் இருந்தன. அவருக்கும் நன்றி. 'கிழவனின் வருகை' மற்றும் 'ஆலமரத்தில் ஒரு பறவை' கதைகளை எனக்கு அடையாளம் காட்டியவர் மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்ப்லான கதைகளை கண்ணடத்தில் மொழியாக்கம் செய்து ஒரு தொகுதியாக கொண்டு வருகிறார். நல்லதம்பி அவர்களுக்கும் என் நன்றி. இத்தொகுதியை வெளியிடும் பரிசல் செந்தில்நாதனுக்கும் புத்தக வடிவமைப்பாளருக்கும் நன்றி. தொகுதிக்கு ஆலோசனைகள் வழங்கிய ஜீவ கரிகாலன், காளி பிரஸாத் மற்றும் எழுத்தில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கும் என் குடும்பத்துக்கும் நன்றிகள். இத்தொகுதியை காந்திய செயல்தளத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நம்காலத்தில் பாலமாக திகழ்ந்த, காலஞ்சென்ற மக்கள் மருத்துவர் ஜீவானந்தம் அவர்களுக்கு அர்ப்பணிப்பதில் நிறைவு கொள்கிறேன். 


காந்தியை செயல்வழி அவரது எழுத்துக்கள் வழி வரலாறு வழி அவரைப்பற்றிய எழுத்துக்கள் வழி என பலவகைகளில் அறிந்துகொள்ளலாம். காந்தியை அறிவதென்பது இந்தியாவை அறிவது இப்பண்பாட்டை அறிவது மனிதர்களை அறிவது, நம்மை நாம் அறிவதும் கூட. மேற்சொன்ன வகைகள் அல்லாமல் காந்தியை புனைவுகள் வழியும் கவிதைகள் வழியும் அறிந்துகொள்ள முடியும். நிறுவனப்படுத்தபடாத காந்தியை சுமப்பவர்கள் எப்போதும் கலைஞர்களாகவே இருக்க முடியும். 

அன்புடன்
சுனில் கிருஷ்ணன் 
காரைக்குடி
நவம்பர் 27 2021

No comments:

Post a Comment