புத்தகங்கள்

Pages

Thursday, April 14, 2022

எதுவும் கடந்து போகும் - கவனம் சிதறும் தலைமுறை- விகடன் கட்டுரை

நன்றி விகடன். விகடனில் தொடராக வரும் பகுதியில் இடம்பெற்ற எனது கட்டுரை. 


 "மாப்ள காலேஜ் ரோட்ல புதுசா ஒரு கடை தொறந்திருக்காய்ங்க, ஏசியெல்லாம் உண்டாம். மொத மூனு நாளைக்கு வாரவிங்களுக்கு எல்லாம் பவண்டோ வேற தாராய்ங்க.. போவோமா" என்றான் வீரப்பன் சைக்கிளை விட்டு இறங்காமலேயே.  வேகு வேகென சைக்கிளை மிதித்து வந்ததில் அவனது சட்டையில் வியர்வை ஊறியிருந்தது.  நாங்கள் சுப்பிரமணியபுரம் நான்காவது வீதி திடலில் அடுத்த ஆட்டத்திற்காக அணி பிரித்துக்கொண்டிருந்தோம். சித்திரை உச்சி வெயில் உறைக்காத தடித்த தோல் வாய்த்த பருவம் அது. எங்கெல்லாம் காலி மனை உண்டோ அங்கெல்லாம் கிடைக்கின்ற மூன்று குச்சிகளை ஊன்றி எவராவது விளையாடிக்கொண்டிருப்பார்கள். 

பால்கார ஆச்சி வருவதற்கு முன்னமே காலை கருக்கிருட்டில் வாசலில் வந்து கோவிந்தராஜன் சைக்கிளில் மணியடிப்பான்.  "வந்துட்டான் உன் தோஸ்து. ஸ்கூல் நாள்ல என்னிக்காவது சூரியனை பாத்துருக்கிங்களாடா" வாசல் தெளிக்க வந்த பாட்டி பல்லை கடித்துக்கொண்டு கேட்பாள். "சரியா பாக்கலைன்னு கோச்சுக்குவாருல அவ்வா. அதான் இப்ப நாளெல்லாம் அவரு முன்ன நின்னு எங்கள நல்லா பாத்துக்கன்னு வேண்டிக்கிறோம் " என்பான் கோவிந்து. ஆறு மணிக்கு தொடங்கும் விளையாட்டு ஓன்பது மணி வரை போகும். திரும்ப பதினோரு மணிக்கு தொடங்கும். அந்நாளைய முக்கிய போட்டி என்பது அதுதான். பெரும்பாலும் 'பெட்' மேட்சுகள் நடக்கும். 'பெட்டு' என்பது பெரும்பாலும் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டுபத்துரூபாய்க்கு வாங்கிய, பயன்படுத்தாத புத்தம் புதிய பெப்சி ரப்பர் பந்துதான். இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்றால் மாலை நான்கு மணி தொடங்கி 'நல்ல கண்ணு' நாகேஷ்வரன் கேட்சை கப்பைவிடும் அளவிற்கு இருட்டும் வரை நீடிக்கும். 

"எப்படியாவது இருவந்தஞ்சு ரூவா தேத்திடு மாப்ள..எங்கிட்ட இருவத்தஞ்சு இருக்கு" என்றான் வீரப்பன். அவன் கடை என சொன்னது 'பிரவுசிங் செண்டரை'.  அன்று நாங்கள் வேறொரு யுகத்தில் காலடி வைக்கவிருக்கிறோம் எனும் பிரக்ஞை ஏதும் எங்களுக்கில்லை. கணினி என்பது அதற்கு முன்பு வரை மெட்றாசுக்கும், போக்கற்ற பணக்காரர்களின் வீட்டிற்கும், பள்ளியில் பாதுகாப்பாக பூட்டியே கிடக்கும் கணினி ஆய்வு கூடத்திற்கும் உரியதாகவே இருந்தது. தந்த நிற கொண்டையும், சாம்பல் நிற திரையும் உள்ள ஓரு தொலைகாட்சி என்பதாகவே மனப்பதிவு.‌ காரைக்குடியின் வரலாற்றில் அந்த சனிக்கிழமைக்கு ஒரு இடமுண்டு. அன்று தொடங்கி, பிறகு படிப்படியாக விளையாட மதியம் ஆட்கள் வருவது குறைந்து, அடுத்த கோடை விடுமுறைக்கு மாலைக்கு மட்டுமாக  விளையாட்டு சுருங்கியது.‌ 

எந்த தொழில்நுட்பமும் புதிதாக அறிமுகமானதும் அதன் ஆக 'அவசியமற்ற' தேவை என்னவோ அதைத்தான் முதலில் நிறைவேற்றும் போல. இணையத்தை எப்படி 'நல்ல விதமாக' கூட பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வதற்குள் ஆயிரம் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரவுசிங் செண்டருக்கு அழுதாகிகிவிட்டது. 'மொகரைய பாத்தாலே தெரியுது' என இளவட்டங்கள் மையத்திற்குள் நுழைந்துவிட்டால் பரீட்சைக்கு ரோந்து வரும் ஆய்வாளர் போல இருண்ட செவ்வக கட்டங்களுக்குள் அறிவிப்பின்றி திடுமென்று வந்து நிற்பார்கள் பிரவுசிங் செண்டர் அண்ணன்மார்கள். எப்போதும் ஒரு செவி வெளியே கவனித்தபடியே இருக்கும். ஒருமுறை உணர்ச்சிவசப்பட்ட  நண்பன்  ஒருவன் கணினித் திரைக்கு முத்தம் கொடுக்க முயன்ற போது கையும்களவுமாக மாட்டிய சம்பவம் இன்று வரை எங்கள் நட்பு வட்டத்தில் அடிக்கடி நினைவுகூரப்படும் நிகழ்வு. எங்கள் ஊரின் முதல் பிரவுசிங் செண்டரின் வருகை பல புதிய கதவுகளை திறந்துவிட்டது. அதி வேக இணையத் தொடர்பு என்பது அன்று வெறும் முப்பது எம்.பி.பி.எஸ்! கோடை விடுமுறைகளில் கணினி வகுப்புக்கு செல்வது ஒரு சாங்கியமாகிப்போனது. உருப்படியாக எதையும் கற்று கொண்டதை விட அங்கே சென்று டேவும், பிரின்ஸ் ஆஃப் பெர்ஸியாவும் விளையாடியதுதான் அதிகம். 

என் பள்ளிகாலம் என்பது இந்தியா தன்னை திறந்துவைத்துக்கொண்ட காலத்திற்கு பின்பானது. எல்லாவற்றையும் தொட்டு ருசியறிய முயன்ற தலைமுறையின் காலம். சன் டிவியின் தமிழ் மாலையும், கார்டூன் நெட்வொர்க்கின் டெக்ஸ்டரும், ஸ்வாட் கேட்ஸும் மெல்ல எங்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிய நாட்கள் அவை. பகல் நேர வெளி விளையாட்டுக்கள் அருகி அதற்கு மாற்றாக  வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய தொலைக்காட்சியில் இணைக்கத்தக்க வீடியோ கேம்களும் அதற்கேயுரிய கேசட்டுகளும் புகழடையத் தொடங்கின.  மேரியோவும் காண்ட்ராவும்  எங்கள் விளையாட்டு தோழர்களானார்கள். 

பிலாக்கனமாகவோ, பீடத்தில் அமர்ந்து அறிவுரை வழங்குவதோ என் நோக்கமல்ல. எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் 'ஜங்க்' என்ற கதை 'ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன்பு கடந்து போன தலைமுறையை விட தான் புத்திசாலித்தனமானதாகவும் அடுத்து வரும் தலைமுறையை விடவும் அறிவானதாகவும் கற்பனை செய்து கொள்கிறது' எனும் ஜார்ஜ் ஆர்வெலின் மேற்கோளோடு தொடங்கும். ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்கே உரிய கட்டுக்கதைகளும், நாயகர்களும், வெகுளித்தனங்களும் இருக்கும். சுடலை மாடனை நம்பாத தலைமுறைதான் அண்டர்டேக்கருக்கு பதினோரு உயிர் என்றபோது நம்பியது. முந்தைய தலைமுறைக்கு சக்திமான் நாயகன் எனில் இப்போது பப்ஜி மதன் சிலருக்கு நாயகன். கட்டுக்கதைகளே அற்ற முற்றிலும் அறிவார்ந்த தலைமுறை என ஓன்று உருவாக சாத்தியமில்லை. கட்டுக்கதைகளில் மேலானவை கீழானவை என எவையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளும் அதே நேரத்தில் அவற்றில் ஆபத்தானவை ஆபத்தற்றவை எனும் பகுப்பு நிச்சயம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் இளமைகால நினைவுகளுக்கு அளிக்கும் புனிதத்தை இப்போதைய தலைமுறையினரும் நாளை அளிப்பார்கள் என்பதை நாம் உணர்வதில்லை. 'நாங்கல்லாம் சின்ன வயசுல' என தொடங்கினாலே எதிரே இருப்பவர் 'அய்ய பூமர் கேசு' என முடிவுக்கு வந்துவிடுவார்கள். நமது உன்னதங்கள் அவர்களுக்கு அற்பத்தனமாகவும் அவர்களின் உன்னதங்கள் நமக்கு உள்ளீடற்றதாகவும் தோன்றுவதும் இயல்பே. இத்தகைய முன்தீர்மானங்களுடன் அவசர அவசரமாக தீர்ப்பெழுத தேவையில்லை. மாற்றத்தை வெளியிலிருந்து அல்ல, அதன் தொடக்க நுனியை அறிந்தவன் எனும் முறையில், அதன் ஒரு பகுதியாக உள்ளிருந்து நோக்கும் தலைமுறையின் பிரதிநிதியாக என்னை நிறுத்திக்கொண்டே பேச முயற்சிக்கிறேன்.

எத்தனையெத்தனை தொழில்கள் இந்த இருபதாண்டுகளில் காணாமல் போயிருக்கின்றன! கல்லூரியில் எங்கள் சீனியர் அண்ணன் ஒருவர் ஆயிரம் சிடிக்கள் சேர்த்த அபூர்வ சிகாமணியாக வலம் வந்தார். ஒவ்வொரு வாரமும் பர்மா பஜாருக்கு சென்று சிடிக்களை வாங்கி வருவார். இன்று அந்த தொழில்நுட்பமே காலாவதியாகிவிட்டது. காதல் வளர்த்த எஸ்.டி.டி பூத்துகள் காணாமல் போயின. தெருவுக்கு தெரு இருந்த இண்டர்நெட் கஃபேக்கள் இருந்த சுவடு தெரியவில்லை‌. முளைத்த வேகத்தில் பல பொறியியல் கல்லூரிகள்  கருகிவிட்டன. எப்படியோ எதையோ பற்றிக்கொண்டு நாம் வாழ்ந்தபடிதான் இருக்கிறோம். 

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஒருபோதும் பழிக்க கூடாது. அவற்றை பழிப்பவர்கள் காலத்தை பின்னுக்கு இழுப்பவர்கள். அதன் வழி அவர்களுக்கு வாகாக இருந்த அதிகாரவட்டத்திற்குள் மட்டும் உலகை முடக்க கனா காண்பவர்கள். ஆனால் அதேநேரம் கண்மூடித்தனமாக வழிபடுவது நாம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை அடையாளம் காணவும், தீர்வை நோக்கி பயணிக்கவும் தடையாய் இருக்கும். புத்தாயிரமாண்டில் ஒரு சமூகமாக நாம் அடைய வேண்டிய முதன்மை லட்சிய விழுமியமாக சாமர்த்தியத்தைதான் முன்வைக்கிறோம். அறிவாளியாக அல்ல, கொடையாளியாக அல்ல, உழைப்பாளியாக அல்ல சாமார்த்தியசாலியாக நம் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம்.  நம்முள் உள்ள மனிதத் தன்மையை, சக உயிர்களின் மீதான கரிசனத்தை பலியளித்துதான் இதை அடைய வேண்டியிருக்கிறது. இந்த இருபது வருடங்களில்  நாம் முன்னெப்போதையும் விட பன்மடங்கு விரைவாக ஓடியிருக்கிறோம். எல்லா காலத்திலும் மாற்றங்கள் நிகழும்தான். ஈடுகொடுக்க முடியாதவர்கள் மையத்திலிருந்து சுழற்றி வெளியே வீசப்படுவார்கள்தான். ஆனால் மீண்டு எழுவதற்கும் நிலைப்பதற்கும் போதிய கால அவகாசம் கிடைக்கும். இப்போது நமக்கு அது இல்லை என்பதே சிக்கல். ஆகவே சாமார்த்தியத்திற்கு இத்தனை அழுத்தம் கொடுப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சிக்கல் யாதெனில், சாமார்த்தியம் கருணையின் இடத்தை அல்லவா பெயர்த்துவிட்டு அமர்ந்திருக்கிறது.   

நமது பண்பாடும், ரசனையும் பல தளங்களில் உருமாறியுள்ளது. இருபது வருடங்களுக்கு முன் சாத்தியமே அற்ற பல வாய்ப்புகள் இப்போது திறந்திருக்கின்றன. ஆக்க ஆற்றல்களுக்கு நிகராக, அல்லது சற்று கூடுதலாக மனிதர்களுக்கு தங்களை அழித்து கொள்ளும் விழைவும் உட்பொதிந்திருப்பதாக எனக்கு ஒரு ஐயமுண்டு.‌ நம் முன் இத்தனை சாத்தியங்களும் தம்மை திறந்து வைத்துக்கொண்ட பிறகு நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பதில் உள்ளது வேடிக்கை. இந்த முடிவெடுக்க முடியாமையின் அடிப்படை காரணம் நம் தலைமுறையில் பெரும் வலுவோடு புழங்கும் கவனமின்மைதான். ஆறு நிமிடங்களுக்கு மேல் நம்மால் ஒன்றில் ஆழ்ந்திருக்க முடிகிறதா? நம்மால் கேளிக்கையில் கூட முழுதாக கவனத்தை குவிக்க முடியவில்லை என்பதே இன்றைய நிதர்சனம். நம்முன் இத்தனை அறிதலின் வாயில்கள் திறந்திருப்பதாலேயே எதைத் தேர்வதென்பதில் நமக்கு குழப்பம். எந்த ஒன்றும் அரிதாக இருக்கும் போது நாம் அதற்கு ஏங்கினோம். இன்னும் இன்னும் என வேண்டினோம். இப்போது மடை திறந்து வெள்ளம் பாய்கிறது. அப்போது அரியவையாக இருந்தவை இப்போது நம் கைக்கெட்டும் தொலைவில், பார்வைபடும் தூரத்தில் மலிந்து கிடப்பதாலேயே மேலும் மேலுமென அரிதாக மாறிவருவதை வியப்போடு காண்கிறேன். ஆக நமக்கு இப்போது வேண்டியது கிடைப்பதல்ல சிக்கல். உண்மையில் அது நமக்கு வேண்டியதுதானா என்பதுதான். 'ஜங்க்' கதை இந்த வரியுடன் முடிகிறது. 'எனக்கு என்ன தேவையில்லை என்பதை பிரபஞ்சத்தில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.' ஆம் அதுவும் நாம் அறிவதற்கு முன்னரே. 

 யோசித்து பார்த்தால் நமது தனியடையாளங்களும், தனித்துவங்களும், தனித் திறன்களும் மறைந்து இன்று நம் அனைவருக்கும் நுகர்வோர் எனும் ஒரு பொது அடையாளம் மட்டுமே எஞ்சி உள்ளதாக அல்லது அத்திசை நோக்கி அழுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.  நமக்கு இந்த தொழில்நுட்ப வெடிப்பை கையாளத்தெரியவில்லை என்பதுதான் இதன் அடிப்படை காரணம். ஒரு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக முழுமையாக பயன்படுத்த நாம் பழகிக்கொள்வதற்குள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது.‌  

நண்பரும் எழுத்தாளருமான விஷால் ராஜா ஒரு உரையாடலின் போது நம் வாழ்க்கை இப்போது முழுக்க நிகழ்த்துக்கலையாக ( perfomance) மாறிவிட்டது என்றார். எதிர்பார்ப்புகள் பொய்த்து துரோகங்களும் நம்பிக்கையின்மையும் மலிந்த முந்தைய தலைமுறையினரால் வளர்க்கப்பட்டவர்கள் நாம். நமக்காக வாழ வேண்டும், வேறெதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டோம். விளையாட்டு மைதானங்களாக இருந்த காலி மனைகள் இப்போது எவர் வீட்டு குப்பைகளையோ சுமக்கும் பிளாஸ்டிக் வயல் வெளிகளாக மாறிவிட்டதென்பது இந்த அக மாற்றத்தை நமக்கு துலக்கமாக்கும் கண்ணாடி. நமக்காக வாழ்வது இன்று போதாது, அதை பொதுவெளியில் நிகழ்த்தி, நிறுவி காட்ட வேண்டிய நிர்பந்தம் நம்மை இயக்குகிறது. முன்னரும் வாழ்க்கையை நிகழ்த்துவது நமக்கு வழக்கம்தான். 'நாலு பேரு என்ன நினைப்பாங்களோ?' என ஒரு குறுகிய எல்லையில், வாழ்வை நேரடியாக பாதிக்கக்கூடிய ஓரு வட்டத்திற்காக நிகழ்த்திக்கொண்டிருந்தோம் எனில் இப்போது நாலாயிரம் பேருக்கு முன்னும் கண்ணுக்கு தெரியாத பல்லாயிரம் பேருக்கு முன்னும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். நம் ஆற்றல் முழுவதையும் செலுத்தி நமக்கான கட் அவுட்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். நமது அசல் சுயம் அதன் பின் எங்கோ மூலையில் ஒடுங்கிக்கொள்கிறது. அல்லது அசல் சுயம் என ஒன்று உண்டா எனும் கேள்வியின் நெருக்கடியையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கேலிப்பொருளாகி விடக்கூடாது எனும் அதீத கவனத்தில் பொதுபோக்குக்கு வெளியே உள்ள எதன்மீதும் நம்பிக்கையையோ பற்றையோ வெளிப்படுத்த தயங்குகிறோம். ஆகவே நாம் கேலிக்குள்ளாகுவதற்கு முன்னரே பிறவற்றை கேலிக்குள்ளாக்குகிறோம். நம் நகைச்சுவை உணர்வையல்ல, நம் பாதுகாப்பின்மையைதான் இது காட்டுகிறது என ஐயப்படுகிறேன். நாம் உணர்ச்சிகரமானவர்கள் என்பதை பெருமையாகவும் அடையாளமாகவும் கருதிய காலகட்டம் அல்ல இது. உணர்ச்சிகரத்தை நாம் கைவிடவில்லை ஆனால் அப்படி அடையாளப்படுத்துவதை உள்ளுர ஏற்காத தலைமுறையினர் நாம்.     

காலம் அவசியமானதை சாரம்சப்படுத்தி தக்கவைத்துக்கொண்டு அடுத்தடுத்து கடத்தும் எனும் நம்பிக்கை இங்கு பரவலாக உண்டு. ஆனால் அப்படியொரு கட்டாயமும் அதற்கு இல்லை. நம் முன் உள்ள முதன்மை கேள்வி நவீன வாழ்க்கையின் அத்தனை தொழில்நுட்ப சாத்தியங்களையும் உள்ளடக்கியபடி வாழ்க்கையை பொருள் பொதிந்ததாக ஆக்குவதெப்படி என்பதுதான். பொருள் பொதிந்ததாக ஆக்கிக்கொள்வதெப்படி என்பதை நமக்கு சொல்வதற்கு முந்தைய தலைமுறையினரிடம் சில யோசனைகள் இருக்கக்கூடும். பின்பற்ற வேண்டும் என்பது கூட இல்லை. குறைந்தபட்சம் செவிமடுக்காவது செய்யலாம். தலைமுறைகள் இடைவெளிகளால் உருவாவதில்லை தொடர்ச்சிகளால் உருவாவதென்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். 



No comments:

Post a Comment