புத்தகங்கள்

Pages

Saturday, February 19, 2022

நீலகண்டம்: அமுதென்றும் நஞ்சென்றுமான பிரபஞ்சங்களின் சந்திப்பு- விக்னேஷ் ஹரிஹரன்


(நீலகண்டம் குறித்து விக்னேஷ் எழுதிய கட்டுரை) 

இந்திய சிந்தனை மரபில் உள்ள அடிப்படை தொன்மங்களில் ஒன்று நாம் வாழும் உலகம் பல்வேறு உலகங்களுக்கு மத்தியில் இயங்கும் மற்றொரு உலகம் மட்டுமே எனும் தொன்மம். நம் தொன்மங்களில் பூமிக்கு மேல் 7 மேலுலகங்களும் நமக்கு கீழ் 7 கீழுலகங்களுமாக மொத்தம் 14 உலகங்களாக அவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவை முழுவதுமாக பிரிக்கப்பட்ட தனி உலகங்களாக இன்றி ஒன்றுடனொன்று கலந்தே இருக்கின்றன. ஒரு உலகத்தின் நிகழ்வுகள் மற்ற உலகங்களில் எதிர்வினைகளையும் உண்டாக்குகின்றன. ஒரு விதத்தில் நவீன இயற்பியலின் மல்டிவர்ஸ் தியரியின் ஒரு பாகமான பிரேன் காஸ்மாலஜிக்கு அணுக்கமான ஒரு தொன்மமாகவே நாம் இதை புரிந்துகொள்ளலாம். புராணக் கதைகளில் தொடங்கி நவீன இயற்பியல் வரையிலான இச்சிந்தனைகள் அனைத்தின் பின்புலத்திலும் அமைவது நாம் காணும் பிரபஞ்சத்தின் சித்திரம் முழுமையானது அல்ல என்ற புரிதலே. 

நாம் காணும் இவ்வுலகம் நம் தற்போதைய மூளையின் நரம்பியல் அமைப்பாலும், நம்மைச் சுற்றி அமைந்த புறக்காரணிகளாலும் கட்டமைக்கப்படுவதே. அதைக்கொண்டு இப்பிரபஞ்சத்தின் அத்தனை செயல்பாடுகளையும் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியாது. நம் அறிதலின் எல்லைக்கு உட்பட்டவற்றை அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட அளவிலேயே நாம் அறிகிறோம். பிரபஞ்சமோ நம் அறிதல்களுக்கும் அப்பால் விரிந்து கிடக்கிறது. நம் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு செயல்பாடுகளின் விளைவே நாம் அறியும் உலகம்.  அச்செயல்பாடுகளால் அமையும் காரண-காரிய உறவுகளை புரிந்துகொள்ள முடியாமலேயே நாம் தத்தளிக்கிறோம். அத்தகைய காலாதீதமான தத்தளிப்புகளை நவீன வாழ்வின் மிக முக்கியமான சிக்கல்களான குழந்தையின்மை, ஆட்டிசம் ஆகியவற்றின் பின்புலத்தில் அணுகுகிறது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்.

நம் வாழ்வில் துயரங்களையும், அவலங்களையும் சந்திக்கும்தோறும் நம் மனதில் எழும் அடிப்படையான கேள்வி "இது ஏன் எனக்கு நடக்கிறது?" (Why Me?) என்பதுதான். இந்த கேள்வியின் வழியே நம் அனுபவத்திற்கான அர்த்தத்தையே நாம் கண்டடைய முற்படுகிறோம். உலகின் அத்தனை மதங்களும் அதற்கான விடையை வெவ்வேறு சொற்களில் சொல்லிவிட முயல்கின்றன. பெரும்பாலும் அவ்விடைகள் ஒரு அளவில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. இது மதங்களின் குறைபாடன்றி நம் உலகத்தின் காரண-காரிய உறவுகள் தர்க்கத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதற்கான சான்றுகளே. அதன் சிடுக்குகளை முழுவதுமாக பிரித்து அறிந்துவிட முடியாததனாலேயே நவீன பகுத்தறிவுவாதம் இவ்வுலகத்தை அர்த்தமற்ற, காரண-காரிய உறவென்று ஒன்றுமில்லாத தற்செயல்களின் பெருந்தொகுப்பாக புரிந்துகொள்ள முற்பட்டது. ஆனால் மனித மனமோ இந்த வாதத்தை ஏற்க மறுக்கிறது. துயரங்களில் மனம் அதற்கான காரணத்தையே தேடுகிறது. அப்படி ஒன்றை கண்டுபிடித்துவிட்டால் அந்த துயரை வெல்ல முடியும், அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்று நம்புகிறது. அதனாலேயே அத்தகைய காரணங்கள் தர்க்கத்துக்கு அப்பால் இருந்தாலும் மனம் அதை ஏற்கிறது. நாவலில் செந்திலும், ரம்யாவும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். குடும்பத்தை எதிர்த்து செய்துகொண்ட காதல் திருமணத்தில் வென்று காட்டுவதற்கான போராட்டம், குழந்தையின்மை, அதன் காரணமாக ஏற்படும் சமூக அழுத்தம், உளவியல் சிக்கல்கள், உறவுச்சிக்கல்கள் என்று தொடங்கி வரூவின் ஆட்டிசம், அதனால் ஏற்படும் சிக்கல்கள், போராட்டங்கள் என்று தொடர்ந்து அலைக்கழிக்கும் வாழ்வின் சூழல்களில் இருந்து, மேலெழுவதற்கான ஒரு பிடிப்பையே இருவரும் தேடுகிறார்கள். செந்தில் "இது ஏன் எனக்கு நடக்கிறது?" என்ற கேள்வியையும் ரம்யா "இதிலிருந்து எப்படி மீள்வது?" என்ற கேள்வியையுமே அவர்களுக்கான பிடிப்பாக கொள்கிறார்கள்.

செந்தில் முதல் கேள்வியை சுமந்துகொண்டு அலைகிறான். அவன் வழியே நாவல் தர்க்கத்திலிருந்து தர்க்கத்திற்கு அப்பால் உள்ள காரண-காரிய உறவை நோக்கி எழுகிறது. வரூ ஏன் தன் வாழ்வில் வந்தாள்? என்ற கேள்வியே அவனை அலைக்கழிக்கிறது. வரூவுக்கு பதிலாக தன்னால் வேறு ஒரு குழந்தையை தன் வாழ்வுக்குள் கொண்டுவந்திருக்க முடியுமா? என்று தவிக்கிறான். தன் சிக்கலுக்கான காரணத்தை ஜோசியம், ஆன்மீகம், குடும்ப வரலாறு என்று அனைத்திலும் தேடி அலைகிறான். தன் குடும்ப வரலாற்றில் தான் அறிந்திராத நாகம்மையின் இருண்ட பக்கங்களை கண்டடைகிறான். தன் பூர்வீகத்தையே தன் சிக்கல்களுக்கான காரணமாக காண்கிறான். தன் துயர்களின் ஊற்றுக்கண்ணாக இருந்தாலும் அதை சரிசெய்ய முயல்கிறான். கரையான்களால் முழுவதுமாக உள்ளிருந்து அரித்துப்போன தன் பூர்வீக வீட்டின் வெளித்தோற்றத்தை புனரமைக்க முற்படும் செந்திலின் சித்திரமே அவனது ஒட்டுமொத்த சித்திரமாக நாவலில் நிலைபெறுகிறது.

செந்திலுக்கு நேர் எதிராக ரம்யாவோ தன்னை இச்சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? என்பதை நோக்கி செலுத்திக்கொள்கிறாள். ரம்யாவின் வழியே நாம் குழந்தையின்மையின், ஆட்டிசத்தின் உலகியல் சிக்கல்களை காண்கிறோம். காதல் திருமணத்தில் வென்று காட்டுவதற்கான போராட்டம், குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல்கள், வரூவின் மீதான பொறுப்புணர்வு, பயம், கசப்பு, சாகரின் மீதான அன்பு, ஏக்கம் என்று ரம்யா தன்னை உலகியலில் முற்றிலுமாக கரைத்துக்கொள்கிறாள். ரம்யாவின் குடும்பத்தின் பின்புலத்தில் அவர்களின் துயருக்கான தர்க்கத்தை மீறிய சில காரணங்களை கண்டடைவதற்கான சாத்தியங்கள் நாவலில் இருப்பினும் ரம்யா அவற்றை புறந்தள்ளி தன் சிக்கல்களை முழுக்க உலகியலிலேயே எதிர்கொள்ள முற்படுகிறாள். தன் பூர்வீக வீட்டை புனரமைக்க செந்தில் பணம் திரட்டும்பொழுது அந்த பணம் வரூவின் கல்விக்கும் சிகிச்சைக்கும் பயன்படும் என்று வாதிடுகிறாள். தன் குடும்பத்தை எதிர்த்து வாழவேண்டும் என்ற வைராக்கியத்திற்கும் தன் தாயின் அரவணைப்பிற்கான ஏக்கத்திற்கும் இடையே ஊசலாடுகிறாள். தன் தாயின் முன் வரூவை மறைத்து வைக்க முயலும் ரம்யாவின் சித்திரம் நுட்பமானது. நாவலில் செந்திலின் பார்வையில் நாம் காணும் ரம்யாவின் சித்தரிப்பு செந்திலின் மனப்போக்கை பிரதிபலிக்கிறது. அதிலிருந்து ரம்யாவின் சித்திரத்தை பிரித்து அறிகையிலேயே அக்கதாப்பாத்திரம் அடையும் வலியும் வெறுமையும் நமக்கு புலப்படுகின்றன.

இவ்விருவருக்கும் அப்பால் நாவலின் உயிராக அமர்ந்திருப்பவள் வரூ. அவளது பார்வையில் முன்வைக்கப்படும் அத்தியாயங்களே நாவலின் எல்லைகளை மறுவரையரை செய்கின்றன. நாம் வாழும் உலகிற்குள் பின்னியிருக்கும் பிற உலகங்களை நமக்கு காட்டுபவள் வரூ. அவளே காரணமாகவும், காரியமாகவும் ஆனவள். அவளது பார்வையில் உலகம் வேறொன்றாக மாறிவிடுகிறது. அவளை சாபமாகவும், பாரமாகவும், தன் இயலாமையின் வெளிப்பாடாகவும், வணிகப்பொருளாகவும் பார்க்கும் உலகத்திற்கு மத்தியில் அவள் சோட்டா பீமுடனும், நீமோவுடனும், பேக் மேனுடனும் விளையாடிக்கொண்டிருக்கிறாள். நம் அறிதல்கள், கட்டமைப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் நிராகரிக்கிறாள். அவள் மீது நிகழ்த்தப்படும் அத்தனை வன்முறைகளுக்கும் அதுவே காரணமாகிறது. அவளது உலகத்திற்கும் நமது உலகத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு இடைவெளியே (communication gap) நாவலின் அத்தனை துயர்களுக்கும் காரணமாகிறது. நாவலின் முடிவில் வரூ தன் உலகத்திற்கும் அப்பால் இருக்கும் நாகம்மையை சந்திக்கையில் நாவல் தன் உச்சத்தை அடைகிறது.

ஆலகால விஷமும் அமுதும் ஒரு நாணயத்தின் இரு முகங்களே. எந்த நொடியிலும் அமுது திரிந்து விஷமாகவும். விஷம் திரிந்து அமுதாகவும் மாறக்கூடும். அவ்விருமைகளின் முடிவற்ற விளையாட்டை உணர்ந்து அதை தங்கள் கழுத்தில் நிலைநிறுத்தக்கூடிய நீலகண்டர்களாலேயே இவ்வுலகம் நிலைநிறுத்தப்படுகிறது. அவ்வகையில் நீலகண்டமும் செய்ய முற்படுவது அதையே. 14 உலகங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு உயிரும் பிறவிகள்தோறும் இந்த உலகங்களின் வழியே தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஏறியும் இறங்கியும் ஆடும் இந்த பரமபத விளையாட்டில் ஒரு உயிர் மோட்சத்தை அடைய தேவையான அடிப்படைகளில் ஒன்றாக முன்வைக்கப்படுபவர்கள் குழந்தைகள். அத்தனை உலகங்களையும் பூமியோடு இணைக்கும் கண்ணிகள் அவர்கள். நாம் வாழும் உலகிற்குள் பிணைந்திருக்கும் பிற உலகங்களை காணும் ஆற்றல் படைத்தவர்கள். உயிர்களுக்கு அமரத்துவத்தை அளிக்கும் அமுது அவர்களே. அத்தகைய குழந்தைகளையும், குழந்தைமையையும் பற்றிய காலாதீதமான அறச்சிக்கல்களை நவீன வாழ்வின் குழந்தையின்மை, ஆட்டிசத்தின் பின்புலத்தில் கிரேக்க நாயகி மெடிசா முதல் சுடலைமாடன் வரை, குழந்தைகள் கார்ட்டூன் முதல் தொன்மக்கதைகள் வரை அனைத்து தளங்களிலும் நீலகண்டம் கையாள்கிறது. நம் உலகம் அதனுள் பிணைந்திருக்கும் பிற உலகங்களை சந்திக்கும் தருணங்கள் மகத்தானவை. அமுதும் நஞ்சும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளிகள் அவை. அத்தகைய சந்திப்புகளில் உலகத்தின் தர்க்கமும், அத்தர்க்கத்திற்கு உட்பட்ட காரண-காரிய உறவும் அர்த்தமற்றுப் போகின்றன. அத்தகைய உலகங்களின் சந்திப்புகளில் நாம் நம் அறிதலின் எல்லைகளை கண்டடைந்து கடக்கும் தருணங்களின் தொகுப்பே நீலகண்டம்.      

No comments:

Post a Comment