புத்தகங்கள்

Pages

Saturday, July 31, 2021

தத்தளிப்புகளின் கலைவடிவம் - புரவி நேர்காணல்


புரவி ஜுலை 2021 இதழில் என் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. வாசகசாலை நண்பர்களுக்கும் நேர்கண்ட எழுத்தாளர் கமலதேவிக்கும் நன்றி. 
வாசகசாலை 'புரவியை' நடத்துவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக அதன் அமைப்பாளர் தெரிவித்தார். 

இது அவர் அனுப்பிய செய்தி.

ஒவ்வொரு மாதமும் இதழ் அச்சுக்குப் போவதற்கு முன் வருகிற அதே பிரச்சனைதான். பண நெருக்கடிகளைத் தாண்டி ஒவ்வொரு இதழையும் அதே தரத்துடன் கொண்டு வருவதென்பது பெரிய போராட்டமாக உள்ளது. முடிந்தவரை நமக்குத் தெரிந்த வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து சந்தா குறித்து வலியுறுத்திதான் வருகிறோம். ஒவ்வொரு மாதமும் சந்தாதாரர்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் மட்டுமே இதழை எந்த நெருக்கடிகளுமின்றி கொண்டு வர இயலும். எனவே இயன்ற வாசகர்கள் தயவுசெய்து சந்தா செலுத்தி உதவவும். மாதம் தவறாமல் இதழ் உங்கள் வீடு வந்து சேரும் 💚

என்றென்றும் அன்புடன் 
புரவி 💜
வாசகசாலை 🖤

தொடர்புக்கு : 

கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979

புரவி இதழ் வேண்டுபவர்கள் தொடர்புகொள்ளவும். 

----

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான, ’அம்புப் படுக்கை’ மற்றும் முதல் நாவலான, ’நீலகண்டம்’ நாவலை மையப்படுத்தி இந்நேர்க்காணல் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் என்பதையும் தாண்டி இவர்  மொழிபெயர்ப்பாளர், ’பதாகை’ இணைய இதழின் ஆசிரியர், காந்தியவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளரை எழுதச் செய்யும் விசைகள், எழுத்தின் ஆழத்தில் நின்றிருக்கும் கேள்விகள் மற்றும் அவரது அன்றாடம் இம்மூன்றையும் பற்றிய மிக அடிப்படையான கேள்விகள் முக்கியமானவை. அவற்றை இந்நேர்காணலில் முயன்றிருக்கிறோம். அலைநீரில் விழுந்த ஆலிழையின் தத்தளிப்புகளைக் கொண்ட மனித மனத்தின் ஆழத்தை இயக்கும் அகவிசைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சுனில் கிருஷ்ணன்.
மருத்துவரான அவர் இத்தகைய நெருக்கடியானதொரு காலகட்டத்திலும் நமக்காக பொழுதொதுக்கியமைக்கு முதலில் அன்பும் நன்றியும்.

1.உங்களது அன்றாட நாளில் வாசிப்பு மற்றும் எழுத்திற்கான நேரத்தை எப்படி அடைகிறீர்கள்?

நான் ஒரு தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும்  நாட்பட்ட நோய்களைச் சுமப்பவர்கள்தான். ஆகவே ஒப்பு நோக்கில் நவீன மருத்துவர் போல் உயிர்காக்கும் உடனடிப் பரபரப்பு ஏதுமற்ற நிதானமான வாழ்க்கை முறைதான். மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் அடுத்த நோயாளிக்கும் இடையில் உள்ள நேரத்தில்  கூட  வாசிப்பேன்‌. கணினி திறந்தே இருக்கும். எழுதவும் செய்வேன். இப்போது கைப்பேசியில் எழுதப் பழகிவிட்டதால் இன்னும் கூடுதல் வசதியை உணர்கிறேன். எழுதவும் வாசிக்கவும் அறுபடாத நேரம் கிடைப்பது பெரும் சவால். எனினும் அதை குறையாக நான் உணர்வதில்லை. 
கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையை வீட்டுக்கே மாற்றிவிட்டோம்.  கொரோனா இரண்டாம் அலை மரபு மருத்துவமுறைகளை அவசர நிலைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு  உள்ளாக்கியது. கடந்த ஒன்றரை மாதம் முழு நேர ஆயுர்வேத மருத்துவராக வாசிக்கவோ எழுதவோ நேரமின்றி, நவீன மருத்துவரின் பரபரப்புடன்  கடந்தேன். ஐந்து வயது மகன் இப்போது பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதால் அவனையும் இரண்டு வயது மகளையும் நாள் முழுக்க நானும் மனைவியும் அம்மாவும் மாறி மாறிப் பார்த்துக்கொள்கிறோம். இணைய வகுப்புகளில் அவனுடன் அமர வேண்டியுள்ளது. உண்மையில் இந்த கொரோனா காலகட்டத்தில் வாசிக்கவும் எழுதவும் எனக்கான நேரத்தை மீட்பது முன்பை விடவும் சவாலாகத்தான் உள்ளது. ஆனால் குழந்தைகளுடன் விளையாடித் திளைப்பதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் எழுத்து அளவிற்கே படைப்பூக்க மனநிலையை தக்கவைத்து கொள்ள முடியும் என்பதைக் கண்டுகொண்டேன். கொரோனா காலத்திற்கு முன்பிருந்த எழுத்து, வாசிப்பு அன்றாடத்தை இன்னும் நான் மீட்டுவிடவில்லை. இப்போதைக்கு கிடைக்கும் நேரத்தை கவனச்சிதைவின்றி வாசிக்கவும் எழுதவும் பயன்படுத்த முயல்கிறேன். 


2.எழுதும்போது நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? உதாரணமாக ஒருகருவை கதையாகாமல் செய்பவைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?  மனநிலை,காரணமில்லாது இடையில் தடைபடுதல், எழுதும்பொழுதே கருவிற்கு எதிர்த் திசையில் கதை சென்றுவிடுதல், தமிழ் வழியில் கல்லாத நிலையில் சிந்தனையில் ஓடும் மொழியை எப்படி கையாள்கிறீர்கள்?


ஒரு கதை என்னுள்ளிருந்து தன்னையே உந்தித் தள்ளிக்கொண்டு வரவேண்டும் எனக் காத்திருப்பதே என் வழக்கம். என் அனுபவத்தில் எழுதத் தொடங்கி மூன்று நாட்களுக்குள் ஒரு கதையின் முதல் வரைவு வந்துவிடவில்லை என்றால் கதை இன்னும் முதிரவில்லை என்றே பொருள். அந்தக் கதையை எப்படியாவது முடித்தாக வேண்டும் என முயலும்போதெல்லாம்  நிறைவற்ற அனுபவமே எஞ்சும். தொடர் அமர்வுகளில் தடைபடாத ஓட்டத்துடன் முடிக்கும் கதைகளே சிறந்த கதைகளாக வந்துள்ளன என்பது என் அனுபவம். 'இந்திரமதம்', 'களி' போன்ற கதைகளை அடுத்தடுத்த நாட்களில் எழுதினேன். 'ஆரோகணம்' கதையை எழுதி கைவிட்டு பின்பு ஒரு வருடங்கழித்து சட்டென ஒரே அமர்வில் எழுதி முடித்தேன். கதைகள் முதிர்ந்து உருவம்பெறக் காத்திருப்பதே எழுத்தின் பெரும் சவால். இதழ்கள் கேட்கும்போது கதை அளிக்க இயலாமல் ஆகலாம். அல்லது ஒப்புக்கொண்டதற்காக முழுவதும் உருகொள்ளாத கதையை அளிக்க வேண்டி இருக்கலாம். ஒரு கதையைக் கைவிடவும் ஒத்திவைக்கவும் மனத்திண்மை வேண்டும். அது எல்லா சமயங்களிலும் வாய்ப்பதில்லை. அதே சமயம் பிரசுர நிர்பந்தம் இல்லையென்றால் கதையோ கட்டுரையோ தன்னிச்சையாக எழுத அமர்வதில்லை என்பது மற்றொரு சிக்கல். எவ்வித புறத்தூண்டலும் அழுத்தமும் இல்லாமல் தன்னிச்சையாக தொடர்ந்து எழுதும் நிலையை அடைய வேண்டும் என்பதே லட்சியம். ஒரு கேள்வி அல்லது ஒரு படிமம் இவையிரண்டில் ஏதோ ஒன்றுதான் என்னை கதை எழுதத் தூண்டுபவை. அவற்றைத் தொடர்ந்து செல்பவன் என்பதினால் கதையாகாமல் போகும் சிக்கலில்லை. அதேபோல் இவற்றை மட்டுமே கருத்தில் கொள்வதால் கதை ஒரு தொலைதூரத்துப் புள்ளியாகவே துலங்கும்.‌ பெரும் திட்டமிடல் என ஏதுமில்லை. எழுதி முடித்த பின்னர் சில புள்ளிகளை செறிவாக்குவதுண்டு. திறந்ததன்மையுடன் கதைகளை எழுத அமர்வது சில கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதாகவே உணர்கிறேன். மிக முக்கியமான சிக்கல் என்பது கதை எழுதப் போதுமான மன அமைப்பை அடைவதுதான்‌. மொழியாக்கம், விமர்சனக் கட்டுரைகள் எனத் தொடர்ந்து இயங்குவதில் உள்ள சிக்கல் பெரும்பாலும் நம் வாசிப்பு நம் தேர்வாக இருக்காது என்பதே. நம் நேரம் நம் கையில் இல்லாத உணர்வை அது அளிக்கும். கூட்டங்களில் பேசுவதும் மிகுந்த உழைப்பைக் கோருவது. மனம் அடுத்தடுத்து ஏதோ ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் அங்கே கதை வந்தமர முடியாது. மனதை ஒழித்து ஓரளவாவது காலியாக்க வேண்டும்.  என்னால் அத்தனை எளிதில் எதற்கும் மறுப்பு சொல்ல முடியாது என்பது மற்றுமொரு பலவீனம். இவற்றுக்கு இடையே ஒரு சமநிலையைக் கொணர முயற்சிக்கிறேன். 
 தமிழை ஒரு மொழியாக பள்ளியில் கற்கவில்லை என்பது எனக்கு எழுத எப்போதும் தடையாக இருந்ததில்லை. ஏனெனில் என் எழுத்து முழுக்க நவீன தமிழ் இலக்கிய வாசிப்பினால் உருவானது. சில எழுத்துப் பிழைகள் வருவதுண்டு. அவை பிரசுரமாவதற்கு முன்னர் பெரும்பாலும் நண்பர்களின் உதவியால் களையப்பட்டுவிடும். ஆனால் பொருள் பிழையோ வாக்கிய அமைப்பில் பிழையோ அரிதினும் அரிது. கதைகள், கட்டுரைகள் எழுதும் முன்னரே மொழியாக்கங்கள் செய்ததினால் அடைந்த தேர்ச்சி என சொல்லலாம். ஆனால் வாசகராக எனக்கு இது ஒரு எல்லையை அளிக்கிறது. மரபிலக்கியங்களை முழு ஈடுபாட்டுடன் வாசித்துப் பொருள்கொள்ள முடிவதில்லை. எனினும் அதையும் கடந்துதான் ஆக வேண்டும். நாஞ்சில் நாடனின், 'பாடுக பாட்டே', 'கம்பனின் அம்பறாத்தூணி', ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள்' போன்ற நூல்கள் என்னைப் போன்றவர்களுக்கு மரபிலக்கியத்தின் ருசியை அறிமுகம் செய்கின்றன. 

3. பாற்கடல் படிமத்தை இதுவரை எழுதிய உங்கள் புனைவுகளின் அடிநாதமாக எடுத்துக்கொள்ளலாமா?  பேசும்பூனை குறுநாவல் மற்றும் வாசுதேவன் சிறுகதை, நீலகண்டம் நாவல் என்று இந்த மூன்றுவடிவங்களிலும் அந்த தத்தளிப்பை விசாரிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நம்மை ஊசல் போல நிலையற்றவர்களாக காலமெல்லாம் அலைகழிக்கும் ஒன்றை எழுத்தில் காட்டிவிட எத்தனிக்கிறீர்களா? இல்லை இயல்பாகவே சகமனிதரின் இந்த தத்தளிப்புகள்தான் உங்களை எழுதவைக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பாற்கடல் எனும் படிமம் பற்றிய உங்கள் அவதானிப்பு எனக்குமே புதிதாக இருந்தது. நல்ல அவதானிப்பை, ’உம்’கொட்டி உடனடியாக ஏற்றுக்கொள்ள மனம் அவசரப்படுகிறது. அப்படி ஒரு படிமமாக எழுத்தாளரை தொகுத்துக்கொள்வது அவரை சுருக்குவதாகத் தோன்றினாலும் ஒரு நல்ல முறை என்றே தோன்றுகிறது. நாம் தொடரும் அத்தனை எழுத்தாளர்களும் இப்படி ஏதோ ஒன்றாக உருமாறித்தானே நமக்குள் அமர்ந்திருக்கிறார்கள்? பாற்கடல் பேரமைதியை உருவமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கடியில் பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நன்மை, தீமை எனும் இருமைக்கு அப்பால் யாவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. பேரசைவுகளின் அசைவின்மைதான் பாற்கடல். யாவற்றையும் பிறப்பித்து யாவற்றையும் அரவணைத்து அமிழ்த்திக்கொள்ளும் சலனமற்ற பாற்கடல். வாசுதேவன், பேசும் பூனை, நீலகண்டம் ஆகிய மூன்றுமே ஒரே கேள்வியின் வெவ்வேறு பரிமாணம்தான். ஆனால் அவை அடைந்த விடைகளில் இயல்பாக ஒரு பரிணாமம் உள்ளதாக உணர்கிறேன். இவை இலக்கியத்தில் புதிய கேள்விகள் அல்ல. ஆனால் கதைகள் ஆத்மார்த்தமாக அவற்றைத் தொடர்கின்றன என்றே நம்புகிறேன்.  

4.விரிவான நாவல்கள் எழுதப்படும் காலத்தில் செதுக்கி எடுக்கும் வடிவத்தை நீலகண்டத்திற்கு தேர்ந்தெடுக்க சிறப்பான காரணம் உண்டா?

நீலகண்டம் இயல்பாக பலகுரல் தன்மை கொண்ட கூறுமுறையை வெளிப்படுத்துகிறது. ஒரு  முன்வடிவம் என அசோகமித்திரனின், 'கரைந்த நிழல்கள்' மற்றும் 'ஒற்றனை' சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்குரிய கூர்மை கொண்டவை. சயந்தனின், 'ஆறாவடுவும் இத்தகைய தன்மை உடைய படைப்பே. ஆனால் மேற்சொன்ன கூறுமுறையின் இறுக்கம் நீலகண்டத்தில் இருக்காது. ததும்பும் அலைபாயும் தன்மை அதற்கு உண்டு. விரிவான புற உலகைச் சித்தரிக்க வேண்டிய நாவல்கள் பெருநாவல்களாக ஆகின்றன. வெவ்வேறு காலகட்டம், தொன்மங்கள் எனப் பயணித்தாலும், 'நீலகண்டம்' அதிகமும் அக உலகையே சித்தரிக்கிறது. ஆகவே அதற்கு பெருநாவல் வடிவம் தேவைப்படவில்லை. நாவலின் வடிவத்தை நாம் சுமத்த முடியாது/ கூடாது. இயல்பாக அதன் பேசுபொருள், தன்மை சார்ந்து தேர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். 

 5.ஹரியின் இன்ஸ்பிரேசன் என்று யாராவது உண்டா?

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பின் கதைமாந்தர்களின் சாயல் ஹரிக்கு உண்டு. சுரேஷ் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை முன்கூட்டியே அறியும் அளவுக்கு அவருடன் தொடர் உரையாடலும் நட்பும் உண்டு. அவருடைய கருத்துலகத்துடன் எனக்கு ஏற்பும் மறுப்பும் கொண்ட உறவே இப்போது வரையில். மறுக்கும்போது கூட அதில் அசவுகரியமான உண்மை ஒன்று இருக்கும். சுரேஷின், 'பதினோரு அறைகள்' கதையில் வேர் கொண்டு ஹரியின் பாத்திரம் வளர்ந்ததை நாவல் முடித்த பின் ஒரு வாசகனாக என்னால் கவனிக்க முடிந்தது. 

6. ‘வரு’ என்ற குழந்தையின் மனப்போக்கை எழுதுவதற்கு உங்கள் கல்வியும் தொழிலும் உதவினவா? அல்லது அது போன்ற குழந்தைகளுடன் பழகியிருந்தீர்களா? உங்கள் அனுமானமா? இந்த சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்?

கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவின. அவர்களுடைய உடல்மொழியை பொதுவான நடத்தைகளை அறிவதற்கு நேரடி அனுபவம் உதவின.  குறைபாட்டின் மருத்துவப் பின்புலத்தைப் புரிந்துகொள்ள மருத்துவ அறிவு  உதவியது. ஆனால் அவர்களின் அக உலகை சித்தரிப்பதுதான் பெரும் சவால். ஆட்டிச நிலையிலிருந்த நவோகி ஹிகாஷிடா எனும் பதின்ம வயது ஜப்பானிய சிறுவன் எழுதிய, 'நான் ஏன் குதிக்கிறேன்?( The reason i jump)' ஆட்டிச நிலையினுள் இருந்து வந்த மிக‌ முக்கியமான குரல். அந்த நூலும் டெம்பிள் கிராண்டின் நூல்களும் அவர்களின் அக உலகை எனக்கு ஓரளவு பரிச்சயப்படுத்தின. நீலகண்டம் ஆட்டிசம் பற்றிய நாவலில்லை. அதை பின்புலத்தில் நிறுத்தி வாழ்வின் பயன்மதிப்பு என்ன எனும் ஆதாரக் கேள்வியை விசாரணை செய்கிறது. அறிந்ததைக் கொண்டு அறியாததை  கற்பனையில் உருவாக்கி, அதன் வழி புதிய அறிதலை உருவாக்குவதுதானே எழுத்தின் பயன்மதிப்பு. 

7.நீலகண்டம் நாவலில் உங்களை மீறி எழுந்த இடங்களாக நீங்கள் உணர்ந்தவற்றுள் முக்கியமான ஒன்றை கூறமுடியுமா? 

பல இடங்களைச் சொல்லலாம். சுடலை மாடன் மெடீயா அபத்த நாடகம் திட்டமிடப்படாத அத்தியாயம். பச்சைப்பாவடையில் செந்திலை சிறுமி துரத்திவரும் இடம், அமுத பர்வம், நஞ்சு பர்வம், சீராளன் கதை,  உச்சமாக ஒன்று மற்றொன்றாக மாறும் பாற்கடல் கடையும் சித்தரிப்பு. ஆழ்ந்த பிலத்துக்குள் இறங்கி தனது விடுதலையை செந்தில் கண்டடையுமிடம். செந்தில் ரம்யா உறவுச் சிக்கல்களும் சிறார் பகுதிகளும் மட்டுமே ஓரளவு என் திட்டத்திற்குட்பட்டது என சொல்லலாம். 

8.’கூண்டு’ போன்ற உருவகக்கதைகளை எழுதுவதற்கு உங்களை தூண்டுவது எது?


முன்னரே சொன்னது போல, எனக்கு ஒரு கதை கேள்வியாகவோ அல்லது படிமமாகவோதான் முதலில் உருக்கொள்ளும். காளிங்க நர்த்தனம், ஆரோகனம் போன்றவை கனவுக் காட்சிகள். அவற்றைப் பொருள்படுத்திக்கொள்ள அக்காட்சிகளைச் சுற்றி கதை உருவானது‌. விஷக்கிணறு, கூண்டு போன்றவை உருவகக் கதைகள். நீலகண்டமும் கூட அப்படித்தான். ஒரு ஆற்றல்மிக்க படிமத்தின் மீட்டல். அல்லது ஒரு படிமத்தை மீட்டி மீட்டி அதன் ஆற்றலைப் பெருக்குவது. கூண்டு பண மதிப்பு நீக்கத்திற்கு எதிர்வினையாக உருவான கதை என சொன்னால் நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கலாம். கூண்டு எனும் உருவகம் வழியாக பண மதிப்பு நீக்கம் எனும் தற்கால நிகழ்வின் ஆதார சிக்கலை/ மனப்போக்கை காலமின்மைக்கு கொண்டு செல்ல முடிகிறது. பண மதிப்பு நீக்கத்தை அதன் துயரங்களை ஆவணப்படுத்தும் கதைகள் வேண்டியதில்லையா என்றால் அவற்றை செய்திக் கட்டுரைகளே செய்துவிடுமே... நேரடி அரசியல் கதைகள் எழுதப்படுவதிலோ விவாதிக்கப்படுவதிலோ எந்தத் தவறும் இல்லை. என்னளவில் எழுத்து காலமின்மையை தீண்டும் முயற்சி. ஒரு நிகழ்வின் தீவிரம் வடிந்த பிறகும் முக்கியமானதாக உள்ளதா என்பதே கேள்வி. கூண்டு கொரோனாவிற்கும் பொருந்தும். நாளை வேறொன்றுக்கும் பொருந்தும். நூறாண்டுகளுக்குப் பின் வேறொன்றுக்கு பொருந்தக்கூடும். உருவகக் கதைகளின் பலம் அதுவே. கூண்டு ஒரு குழந்தைக் கதை அல்லது தேவதைக் கதை போல் சொல்லப்படத்தக்கதும் கூட. 

9.உங்கள் புனைவுகளில் பெரும்பாலும் குற்றவுணர்வின் முள் உறுத்திக்கொண்டிருக்கிறது? அது அன்பிலிருந்து எழுந்து வரும் கூர்மழுங்காத முனையாக இருப்பதால் அதை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் பின்வாங்கவோ கடக்கவோ இயலாமல் அங்கேயே நின்று தகிக்கிறார்கள். ‘அன்பின் குற்றவுணர்வு அறத்தைக் காக்கும் கருவி’ என்று நீங்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


குற்றவுணர்வே இன்னும் நீதியின் சாட்சியாக நீடிக்கிறது‌. அறத்தைக் காக்கிறது‌. குற்றவுணர்வு குற்றத்தை நியாயப்படுத்தவும் செய்கிறது. அதை இயல்பாக்கம் செய்யவும் முயல்கிறது. ஆகவே அதை முழுக்க நம்பமுடியுமா எனத் தெரியவில்லை‌. குற்றவுணர்வின் முள் என சொல்ல முடியுமா என யோசிக்கிறேன். தங்களைப் பற்றி கொண்டிருந்த பிம்பங்கள் நொறுங்குவதை பதைப்புடன் கண்ணுறுகிறார்கள், அவர்களைப் பற்றிய ஏமாற்றங்கள், அவர்களுக்கு அவர்களே செய்துகொண்ட துரோகங்கள் அவர்களை வதைக்கின்றன என சொல்லிக்கொள்ளலாம்.  பொறுப்பிலிருந்து வழுவுகிறார்கள். தங்கள் கையறு நிலையையும் சிறுமையையும் எண்ணிக் குமைகிறார்கள். இது ஒரு ஆன்மீகமான சிக்கல். இதை காந்தியிடமிருந்து நான் பெற்றுக்கொண்டிருக்கக் கூடும். லட்சிய சுயம் எனும் கற்பிதத்தைத் தொட முயன்று புனிதமான தோல்வியை மீண்டும் மீண்டும் தழுவி தன்னைத் தூய்மை செய்து கொள்பவர். அது குற்றவுணர்விலிருந்து வேறுபட்ட வேறொன்று எனத் தோன்றுகிறது. 


10.’காளிங்க நர்த்தனம்’ எனக்கு அந்த மாபெரும் யோகியைக் காட்டியது. அதுதான் நம் மரபு சொல்லும் பெருநிலை என்று நினைக்கிறீர்களா?


பெருநிலை எதுவெனத் தீர்மானமாக சொல்லும் அளவிற்கு அறிதல்  எனக்கில்லை. இங்கே எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மார்க்கங்களும் இலக்குகளும் உண்டு. எனினும் எனது நம்பிக்கையையும் புரிதலையும் இன்றைய நிலையிலிருந்தபடி சொல்லலாம். பெருநிலை என்பது களிப்பெரும் நடனமாகத்தான் இருக்க முடியும் என நம்புகிறேன்‌. மவுனத்தில் ஆழ்ந்து தன்னைக் கரைத்துகொள்வதுதான் வாழ்வின் நோக்கம் என்றால் எதற்கு பிறந்து உழன்று மரிக்க வேண்டும் எனும் கேள்வியை அரவிந்தர் எழுப்புகிறார். எனக்கது சரியான கேள்வியாகவே படுகிறது‌. விண்ணின் நடனத்தை மண்ணில் நிகழ்த்த வேண்டியல்லவா பிறக்கிறோம்.


11.வருங்கால எழுத்துமுயற்சிகள் பற்றி…

இந்த ஆண்டு இரு அபுனைவு நூல்கள் வெளிவர உள்ளன. ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். எல். மகாதேவனின் நீண்ட நேர்காணல் ஒரு தனி நூலாக காலச்சுவடு வெளியீடாக வரவுள்ளது. காந்தி பற்றி ஒரு சிறிய சுவாரசியமான அறிமுக நூலை தொகுத்துள்ளேன். விரைவில் வெளிவரக்கூடும். தடைப்பட்டிருந்த உரையுடன் கூடிய சத்திய சோதனை திருத்தப்பட்ட செம்பதிப்பின் மொழியாக்கத்தைத் தொடர்கிறேன். இந்தாண்டுக்குள் அதுவும் வெளிவரும். மிக முக்கியமான நூலாக இருக்கும். மொழியாக்கங்களை இத்துடன் நிறுத்திகொள்வதாக உள்ளேன். ஒரு புதிய நாவலைத் தொடங்கியிருக்கிறேன். சற்றே சிறிய நாவல் 150-200 பக்கங்கள் வரக்கூடும். அரவிந்தரைப் பற்றி ஒரு புனைவெழுத வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரு நாவல்களுக்கான திட்டங்கள் சில உண்டு. விமர்சனக் கட்டுரைகளையும் ஆயுர்வேதக் கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கலாம் எனும் எண்ணமும் உள்ளது. பழுவேட்டையர் கதைகள் ஓரளவு சேர்ந்தால் அவற்றையும் ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் எண்ணம் உண்டு. பார்ப்போம். வேறு சில முக்கியமான தொகை நூல்களுக்கான பணியிலும் ஈடுபட்டுள்ளேன் அவை வெளிவரும்போது பார்க்கலாம். 

12.வளரிளம்பருவத்தில் உங்களை பாதித்து உங்கள் மனப்போக்கை மாற்றிய அல்லது வடிவமைத்துக்கொள்ள உதவிய ஆளுமைகள் என்று யாராவது இருக்கிறார்களா?

 வளரிளம்பருவத்தில்  பொதுவாக வீடு பள்ளி புற உலகம் என மூன்று தளங்களில் தாக்கம் ஏற்படும்‌. வீட்டைப் பொறுத்தவரை அம்மா சின்ன வயதிலிருந்தே தனி ஒரு பெண்ணாக பல்வேறு சிக்கல்களைக் கடந்து என்னை வளர்த்தார்.  பள்ளியைப் பொறுத்தவரை கணக்கு ஆசிரியர் பழனிக்குமார் உயிரியல் ஆசிரியர் மணிமொழி ஆகியோரை  சொல்லலாம். ஒருவர் கண்டிப்புக்கு பெயர் போனவர், மற்றவர் அன்புக்குரியவர். பனிரெண்டாம் வகுப்பில் நிகழ்ந்த நண்பனின் தற்கொலை ஒரு பெரும் தொந்தரவாக மனதை ஆக்கிரமித்தது. புற உலகில் அன்று பொதுவாக எல்லோருக்கும் இருந்த நாயகர்களே எனக்கும். சினிமாவில் ரஜினி, கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளே, மல்யுத்தத்தில் அண்டர்டேகர் என ஒரு விநோதமான கலவை. ஹாரி பாட்டரில் வரும் ஆல்பஸ் டம்பிள்டோர், பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், குறிஞ்சி மலர் அரவிந்தன் என சாகச புனைவு பாத்திரங்கள் மீது நாட்டம்.‌ என்னை அவர்களாக கற்பனை செய்துகொண்டு விதவிதமான பகற்கனவுகளில் உலகைக் காத்திருக்கிறேன். வளரிளம்பருவத்தில் தாக்கம் செலுத்திய இரண்டு நூல்களை சொல்லலாம் என்றால் ரிச்சர்ட் பாக்கின், ’ஜோனாதோன் லிவிங்ஸ்டன் தி சீ கல்’ மற்றும் பாலோ கொய்லோவின் ’ரசவாதி’. பதின்மத்தில் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியவை. கனவுகளை அளித்தவை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு அடுத்தடுத்து இவ்விரு நூல்களை வாசித்தேன். 

13.சமகால சிறுகதையின் சாதக அம்சங்களாக நீங்கள் காண்பவை…

சிறுகதையின் களமும் பேசுபொருளும் வெகுவாகப் பரந்து விரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் மொத்த தமிழ் இலக்கியத்திலும் எழுதப்பட்டிருந்த அறிவியல் புனைவுகளின் எண்ணிக்கையை விட அதிகமான கதைகள் சமீப ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. டிஸ்டோபிய கதைகள், வரவாற்றுப் புனைவுகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.  ஜப்பான், ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா, வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா என தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வெளியே பல புதிய களங்களில் கதையெழுதுகிறார்கள். இயல்பாக இந்த வாழ்க்கை பல புதிய சிக்கல்களைக் கொண்டுவருகின்றது. இந்த சாத்தியங்கள் முந்தைய காலத்து தமிழ் சிறுகதைகளில் இருந்து சமகாலக் கதைகள் அடைந்த பரிணாமத்தை அடையாளம் காட்டுகின்றன. 

14.பெயராய் மனதில் விழுந்த காந்தி உங்களில் ஆளுமையாய் மாறிய, ’கண்டடைதல்’ கணத்தை புறவயமாகக் கூற முடியுமா?

காந்தி மீது விருப்பு வெறுப்பற்ற ஒரு விலக்கமே எல்லோரையும் போல் எனக்கும் இருந்தது. ஜெயமோகனின், 'இன்றைய காந்தி' முதன்முறையாக ஒரு உடைப்பை நிகழ்த்தி அவரைப் பற்றிய பார்வையை மாற்றியது. தொடர் வாசிப்பு வழியாக காந்தியை உட்செரித்து எனக்குள் ஒரு பகுதியாக்கிக்கொண்டேன். ஆஷிஷ் நந்தி இவ்வகையான அகவயப்படுத்துல் பற்றிக் குறிப்பிடுகிறார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் காந்தியும் கோட்சேயும் உள்ளார்கள். காந்தி என்பது ஒரு மனிதர், வரலாற்று ஆளுமை என்பதைக் கடந்து அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள ஒரு சாத்தியம், ஒரு நிலை என்கிறார் நந்தி. இது எனக்கு பெரும் திறப்பை அளித்தது. காந்தியை அகவயப்படுத்திக்கொள்வது எவ்வகையிலும் நிம்மதியான முரண்களற்ற வாழ்வைத் தராது. நம் மீதே எப்போதும் ஐயங்களை எழுப்பிக்கொண்டிருக்கும்‌. துணிவுள்ளவர்களுக்கு சவாலான வாழ்க்கையை அளிக்கும். வசதி வட்டத்தை உடைத்துக்கொண்டு அசவுகரியத்திற்கு இழுத்துச் செல்லும். அந்த வாழ்க்கையே அதற்கான பலனும் கூட. வெற்றி தோல்விகள் என வகுக்க முடியாது. தொடர் போராட்டங்களின் ஊடாகப் பயணிக்கிறது வாழ்க்கை. 

No comments:

Post a Comment