புத்தகங்கள்

Pages

Tuesday, July 13, 2021

நஞ்சென்றும் அமுதென்றும் ஆனவள்- நீலகண்டம் ஒரு வாசிப்பு- அனங்கன்

(நீலகண்டம் பற்றி நண்பர் அனங்கன் எழுதியுள்ள குறிப்பு)

தந்தை, தனயன் வேண்டி வேள்வியும் தவமும் செய்யும் மரபுடையவர்கள் நாம், மகனும் மகளும் வெறும் மக்கள் செல்வம் மட்டும் அல்ல, தந்தையராகவும் அன்னையராகவும் தன் அதிகாரத்தின் வீரத்தின் அடுத்த வாரிசாகவும் தம் கெளரவத்தை கட்டி காப்பதற்கானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆணவக் கொலைகளின் பின்னணி மனோபாவம் என்ன என்பதை அறிய நம்முடைய நீண்ட மரபிடம் தான் செல்ல வேண்டும். தந்தைக்கு மகன் எதிரியாவதும் தன் வாழ்நாளின் நஞ்சாக ஆவதும், தன்னுடைய நஞ்சையும் அமுதத்தையும் ஏந்திய கலமாக காண்பதும், நாம் கதைகள் சொல்ல ஆரம்பித்த நாட்களில் இருந்து மீண்டும் மீண்டும் பேசும் கருவாகும், இதன் சாரம் என்றும் தீராத கதை கரு இது.

தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றுவாயான புதுமைப்பித்தனின் கதைகளிலேயே "மாய யதார்த்தவாதம்", "தேவதைக் கதைகள்" என்று சிறுகதையின் அனைத்து வகைமைகளும் நமக்கு கிடைத்து விட்டது. பின் தமிழில் நவீனத்துவம் மேலோங்கிய காலத்தில் யதார்த்தவாதம் மட்டுமே இலக்கியமாக இருந்தது. மீண்டும் கோணங்கி, ஜெயமோகன் தலைமுறையில் பின்நவீனத்துவ காலத்தில் மெல்ல அனைத்துவகை கதைகளும் வரத்துவங்கியது.

 எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் முதல் நாவலான "நீலகண்டம்" தன்னை "மாய யதார்த்தவாதம்" யதார்த்தவாதம் என  இரண்டையும் தனக்கான கூறுமுறைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அகம் "மாய யதார்த்தமாகவும்" புறம் யதார்த்தமாகவும் பிரித்து இந்நாவலை வாசிக்கையில் மேலும் அணுகுவதற்கு நம்மால் முடிகிறது. ஒரு நல்ல நாவல் தனக்கான குறியீட்டை சில பக்கங்களிலேயே கொண்டிருக்கும் என்று ஜெயமோகன் கூறுவதுண்டு, இந்நாவலில் "வரு" பார்வை வழியாகவே நமக்கு அது காட்டப்படுகிறது. செந்தியும் ரம்யாவும் தங்களின் வாழ்வில் ஏறிய நஞ்சாக வரு ஆகிவிட்டதாக நினைத்த  தருணத்திலிருந்து அதன் உச்சம் நோக்கி அவர்கள் சென்றிருந்த கட்டத்தில்  நாவல் ஆரம்பிக்கிறது. மூவரும் ஒருவர் மேல் ஒருவர் நஞ்சை உமிழ்வதிலேயே சற்று ஆசுவாசம் அடைகிறார்கள். செந்திக்கு " வரு" தன் ஆண்மையின் எப்போதைக்குமான பலவீன சின்னம். ரம்யாவிற்கு தன் மன வாழ்க்கையின் தோல்வி சின்னம். ரம்யாவின் தந்தையரின் கதைகளும் செந்தியின் தந்தையரின் கதைகளும் இணையும் புள்ளியாக "வரு" வருகிறாள். "வரு"வின் உலகத்தை நமக்கு 'நிமோ' நீல நிற யானை" சோட்டா பீம் என்று அழகான கதைகளாக விரிகிறது. ஒரு ஆட்டிச குழந்தையின் உலகம் எவ்வளவு வண்ணமயமாக இருக்கிறது என்று ஆசிரியர் வாசகனுக்கு காட்டுகிறார். தொழில் முறை மருத்துவரான ஆசிரியர் மருத்துவம், தத்துவம் பக்கம் நாவலை கொண்டு செல்லவில்லை மாறாக முழுக்க கதாபாத்திரங்களின் மனவோட்டத்துடனேயே எடுத்து செல்கிறார். நாவலின் பலமும் நான் ரசித்ததும் ஆசிரியர் கதை சொல்வதை தான்.

சிறு அத்யாயத்திலும் கதைகள் வந்து செல்வது நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. விக்ரமன் வேதாளம் கதை செந்தியின் மனதை மீதொன்மையாகி நமக்கு அளிக்கிறது. மூவரும் ஒருவரையொருவர்  நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் தங்களின் நஞ்சை தக்க தருணத்தில் வெளிக் கொணர்கிறார்கள். ஈசனின் பெயர் பெற்ற நாவல் ஈசனை தனக்கான குறியீடாக மாற்றிக்கொள்கிறது இங்கு பாலாழியில் கடையும்  நஞ்சு மகள் தோற்றத்தையே கொண்டுள்ளது நஞ்சை கழுத்தில் நிறுத்தத் தெரிந்தவர்களால் நிகழ்கிறது இவ்வுலகு என்கிறது வேதாளம். நாவல் தன்னை நஞ்சாகவும் அமுதாகவும் பிரித்து தான் நமக்கு காட்டுகிறது எதையும் வாசகன் தேர்ந்தெடுக்கலாம்.

1 comment: