புத்தகங்கள்

Pages

Thursday, April 15, 2021

மரணமின்மை எனும் மானுட கனவு- ஆரோக்கிய நிகேதனம் ஒரு வாசிப்பு

சொல்வனம் வங்காள இலக்கிய சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை. 

மைத்ரேயர் அவருடைய குரு ஆத்ரேயரிடம் தனது மறுப்பைச் சொன்னார். உகந்த மருந்துகள், உரிய செவிலியர், மற்றும் திறன் வாய்ந்த மருத்துவர்கள் இருந்து நல்ல சுயகட்டுக்கோப்பும் உள்ள நோயாளி விரைவில் நோயிலிருந்து மீள்கிறார். ஆனால் இவை எல்லாம் இருந்தும் சிலர் மரிக்கிறார்கள். இது ஏன்? அப்படியானால் சிகிச்சைக்கு எந்த மதிப்பும் இல்லைதானே. சேற்றுக் குட்டையில் கொஞ்சம் நன்னீர் அள்ளி ஊற்றுவது போல அல்லது ஓடும் நதியில் கையளவு நீரை விடுவது போல அல்லது குப்பைமேட்டில் ஒரு கைப்பிடி குப்பையை அள்ளிப்போடுவது போல, பயனற்றது. நேரெதிராக உரிய மருந்தோ, செவிலியரோ, நல்ல வைத்தியரோ அமையாத, சுயக்கட்டுபாடும் இல்லாத நோயாளியும் கூட நோயிலிருந்து மீள்கிறார். அதே நிலையில் இருக்கும் சிலர் மரிக்கவும் செய்கிறார்கள். ஆக மொத்தம்- சிகிச்சை செய்து பிழைக்கிறார், சிகிச்சை செய்தும் மரிக்கிறார், சிகிச்சையின்றியும் பிழைக்கிறார், சிகிச்சையின்றியும் மரிக்கிறார். ஆக சிகிச்சை அளிப்பதாலோ அளிக்காததாலோ எந்த மாற்றமும் இல்லை.

பதிலுரைத்து ஆத்ரேயர் சொன்னார் – இந்த பிழையான சிந்தனைக்கு என்ன காரணம் மைத்ரேயா? குணமாகக்கூடிய நோய் சிகிச்சையின் நான்கு பாதங்களின் பதினாறு இயல்புகளுடன் இருக்கையில் நோயாளி மரித்துவிட்டார் என்பது நிகழ சாத்தியமில்லாதது. ஆரோக்கியமானவர் கீழே விழுந்தால் அவரே உறுதியாக எழுந்து விடுவார் எனினும் எவரேனுமா கைத்தூக்கிவிட்டு உதவினால் அவராக எழுவதைக்காட்டிலும் விரைவாக எழுவார். அப்படித்தான் குணப்படுத்தப்படக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை பயன்படுகிறது. குணமாகக்கூடிய நோய்கள் குணமாவதற்கு சிகிச்சை முக்கியம். குணமாகாத நோய்களுக்கு ஆகத்திறன் வாய்ந்த மருத்துவர் முயன்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஞானமுடைய, தினமும் பயின்ற வில்லாளன் எப்படி குறி தவறாதவனாக திகழ்கிறானோ அப்படி சரியாக சோதித்தறிந்த வைத்தியன் தன் இலக்கை துல்லியமாக எய்துவான். ஆகவே சிகிச்சைக்கும் சிகிச்சையின்மைக்கும் வேறுபாடில்லை என சொல்வது பிழையாகும்.

சரக சம்ஹிதை சூத்திர ஸ்தானம் மஹா சதுஷ்பாத அத்தியாயம்

ஆரோக்கிய நிகேதனம் வங்காள மொழியில் 1953 ல் வெளியானது. 1956 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. த.நா. குமாரஸ்வாமி மொழியாக்கத்தில் 1972-இல் தமிழுக்கு அறிமுகமானது. 1930-களில் த.நா குமாரஸ்வாமி வங்காளத்தை நேரடியாக கற்று ரவீந்திரநாத் தாகூரின் அனுமதி பெற்று அவருடைய ஆக்கங்களை மொழியாக்கம் செய்ததாக அவரைப் பற்றிய குறிப்பு சொல்கிறது. ஒரு மொழியை நேரடியாக கற்று அதிலிருந்து அற்புதமான இலக்கிய ஆக்கங்களை தம் மொழிக்கு கொணர்ந்து வளமை சேர்க்க ஒரு தன்னலமற்ற முனைப்பு வேண்டும். சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா. குமாரஸ்வாமி போன்ற இணையற்ற அர்ப்பணிப்பு கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழ் இலக்கியம் என்றும் நன்றியுடனிருக்கும். தமிழ் சூழலில் இந்த நாவலை அறிமுகப்படுத்தி அதன் மீது கவனத்தை ஏற்படுத்தியதில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ கட்டுரைத்தொகுப்புக்கு பெரும் பங்கு உண்டு. எனக்கும் அக்கட்டுரை வழியாகவே இந்நாவல் அறிமுகம். 

ஆரோக்கிய நிகேதனம் வங்கத்தில் நவாக்ராம் பகுதியில் அருகே உள்ள தேவிபுரய் எனும் கிராமத்தில் இந்திய விடுதலைக்கு பின்பான காலகட்டத்தில் நிகழும் கதை.  நாவலின் மையப்பாத்திரமான ஜீவன் மஷாய் அவருடைய தந்தை ஜகத்பந்து மஷாய் மற்றும் ஜீவனின் மகன் வனவிஹாரி என முன்னும் பின்னுமாக மூன்று தலைமுறையினரின் கதையைப் பின்னிச் சொல்கிறது. நோயாளி பிழைப்பானா மாட்டானா என சூது விளையாடி அதில் அடையும் வெற்றி தோல்வியைப் பொறுத்து முடிவுக்கு வரும் சுவாரசியமான ஆளுமை ஜீவன் மஷாய். அவர் பேயை நேரில் கண்டவர். ஜீவனின் தாத்தா தீன பந்து மஷாய் ஆரோக்கிய நிகேதனத்தின் தொடக்கப் புள்ளி. நவாக்ராமத்து ஜமீன்தாரான ராய் சௌத்ரியின் பள்ளியில் ஆசிரியராகவும் அவருடைய கணக்குவழக்குகளையும் கவனிப்பவராகவும் இருந்தவர். ஜமீன்தாரின் மகனுக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டபோது அவரைக்காண வந்த வைத்தியகுலத் திலகரான கிருஷ்ணராஜ் ஸேன் நோயாளியை கவனிக்க அயராத மனம் கொண்ட பரிசாரகர் தேவை என்றதும் தீனபந்து மனமுவந்து அப்பணிக்கு தன்னை ஈந்தார். அவருடைய அயராத ஈடுபாட்டுக்கு பலனாக கிருஷ்ணராஜர் வைத்தியத்தையும் நாடி விஞ்ஞானத்தையும் அவருக்கு அளித்தார். ஆரோக்கிய நிகேதனம் என பெயர் வரக்காரணமான நிகழ்வு தீன பந்துவின் மகன் ஜகத் பந்துவின் காலத்தில் நிகழ்கிறது. ‘லாபானாம் ஷ்ரேஷ்டம் ஆரோக்கியம்’ (தோராயமாக health is wealth) எனும் மகாபாரத மேற்கோளை நோயிலிருந்து மீண்டவர் எழுதிச்செல்கிறார். அதுவே ஜீவன் மஷாய் காலத்தில் ஆரோக்கிய நிகேதனம் எனும் பெயர்ப் பலகையாக பரிணாமம் கொள்கிறது. தீனபந்து காலத்திலிருந்து மெல்ல ஏறி ஜகத்பந்து காலத்தில் உச்சம் பெற்று ஜீவன் மஷாயின் காலத்தில் இறங்கி அவருடைய மகன் வனவிஹாரியின் மரணத்தின் வழியாக ஆரோக்கிய நிகேதனத்தின் சிதைவின் கதையைச் சொல்கிறார். நாவல் தொடங்கும்போதிருக்கும் விவரனைகள் வழியாக இந்த சிதைவின் சித்திரம் துலங்கி வருகிறது. இந்த சிதைவு ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட சிதைவு என்பதை விட ஒரு மருத்துவமுறையின், ஒரு பண்பாட்டின் சிதைவு என்பதே நாவலின் மையம். ஆனால் நாவல் முடியும்போது மீண்டும் ஒரு எழுச்சியைக் காட்டி தொடர்ச்சியைச் சுட்டி செவ்விலக்கியத்தன்மையுடன் நிறைவடைகிறது. 

 நாவல் இரண்டு தளங்களைக் கொண்டது. ஒன்று மரணம் பற்றிய எப்போதைக்குமான கேள்விகளை மருத்துவனின் கோணத்திலிருந்து ஆராய்கிறது. இரண்டாவதாக ஒரு வரலாற்று காலகட்டத்தில் இரு பண்பாடுகளின் மோதலையும், ஊடுபாவையும், அவற்றின் சிக்கல்களையும், எல்லைகளையும் நுட்பமாக பதிவு செய்கிறது. தான் சந்திக்கும் நோயாளிகள் மற்றும் பிற மருத்துவர்களுடான ஊடாட்டங்களையும் அதையொட்டிய தனது மனவோட்டங்களையும் பதிவு செய்து வாழ்க்கையின் சாரத்தைத் தேடும் ஒரு வைத்தியனின் நாட்குறிப்பு என்று கூட இந்நாவலை சொல்லலாம். நாவலில் நோயாளிகள் மருத்துவர்கள் என இரண்டே விதமான கதைமாந்தர்கள் தான். 

 நாவல் முழுக்க விதவிதமான மரணங்கள் விரவிக்கிடக்கின்றன. பச்சிளம் குழந்தை கொதிக்கும் பால் விழுந்து மரிக்கிறது. மரணிக்க வேண்டிய வயதிலும் உயிரிச்சையை கைவிடாது அவதிக்குள்ளாகும் மதியின் பாட்டி. கட்டுடல் கொண்ட ரானா பாடாக் யக்ஷ்ம ரோகத்திலும் திட சித்தத்துடன் மரிக்கிறான். அவனுடைய கிளைக்கதை தனி நாவலுக்குரிய காவியத்தன்மை கொண்டது. கலவரத்தில் மாட்டிக்கொண்ட அனாதைப்பெண்ணுக்கு வாழ்வளித்து நோயை பெற்று கொண்டு, அவர்களின் பெண் குழந்தையை நவக்ராமத்து லட்சியவாதத்தின் முகமான கிஷோரிடம் ஒப்படைத்துவதட்டு, அவளும் மரித்து அவனும் மரிக்கிறான். ஒடியோடி உழைத்த ரத்தன் பாபுவின் மகன் விபின் விடாப்பிடியாக உயிரை பற்றிக்கொள்கிறான் ஆனால் அவனும் மரிக்கிறான். மரிப்பதற்கு முன் தந்தையை தவிக்கவிட்டு மரிப்பதற்காக குற்ற உணர்வு கொள்கிறான். ‘ஒரு விரோதி உங்கள் மகனாக பிறந்துவிட்டேன்’ என வருந்துகிறான். விரோதி மகனாக பிறப்பது பற்றிய ஒரு சிறு விளக்கத்தை தாராசங்கர் அளிக்கிறார். “இந்த நாட்டில் ஒரு பழைய நம்பிக்கை உண்டு: முற்பிறவியின் கொடிய பகைவன் மறுபிறவியில் பிள்ளையாகப் பிறப்பான். பெரியவனாவான், பெற்றோர் மனத்தில் என்ன ஆசையெல்லாமோ எழுப்புவான், அப்புறம் திடுமென அவர்கள் பேரதிர்ச்சி அடைய இறந்து போவான்.” இந்த வரி பல தளங்களை திறந்துவிட்டன. தந்தையிருக்க மகன் அகாலத்தில் மரிக்கும் துயரத்தை வேறெப்படி வகுக்க முடியும்? எனக்கு என் ‘வாசுதேவன்’ கதை நாயகனும் இன்னும் பலரும் கண்முன் வந்து சென்றார்கள். அவன் மரணத்திற்கு அவனுடைய ராஜசிக இயல்பே காரணமாகிறது. மதியின் ஆரோக்கியமான மூத்த மகன் மலேரியாவில் சட்டென மரிக்கிறான்.  பண்ணிரண்டு வயதில் இரு குழந்தைகளுக்குத் தாயான நிஷி டாகரூனின் மருமகள் மரிக்கிறாள். தனது நோய்க்கான காரணத்தை நன்கறிந்தும் அதை தவிர்க்க முடியாமல் பலியாகிறான் தாந்து. அவனால் எத்தனை முயன்றும் அவனை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஜீவன் மரணத்தை மனிதனின் நெருங்கிய சகாவாக காண்கிறார். “பிறந்தவுடனேயே சாவும் நட்பு கொண்டு தொடர்கிறது. நாளுக்கு நாள் இந்த இணக்கம் அதிகரிக்கிறது.” மரணம் எப்போதும் உடன் வருவது. ‌ நண்பனே எதிரியாவான் என்பதைப்போல் நமது பிடிப்பே மரணத்தைக் கொணர்வது என்கிறார். மரணம் நெருங்கி வரும்போது எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேவி அழுகிறான் ஜீவனின் மகன் வனவிஹாரி. நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான பகுதி என்பது வனவிஹாரியின் வாழ்வும் மரணமும் விவரிக்கப்படும் பகுதி. சொந்த மகனின் நலிவை உணர்ந்து அவன் மரணத்தை மூன்று மாதங்களுக்கு முன்னரே ஜீவன் முன் உணர்கிறார். வனவிஹாரி பல வகையிலும் எனக்கு காந்தியின் மூத்த மகன் ஹரிலாலை நினைவுபடுத்தியது. மஷாய் வம்சத்து சிகிச்சை அறிவு கொஞ்சமும் இல்லாதவன். சீரழியும் பழக்கங்களில் சிக்கி அழிகிறான். ஜீவனுக்கு லாகிரி வஸ்துக்கள் பழக்கமில்லை. ‌ “நோயைத் தீர்ப்பதொன்றே அவர் கொண்ட போதை. நோயாளியைக் காப்பாற்றுவதொன்றே அவரது குறிக்கோள்.” என வாழ்ந்தவர். ஜீவனின் இளமைக்காலம் போலவே வனவிஹாரியும் கட்டற்றவனாக இருந்தான். ஆனால் அவர் மீண்டு நிலைநின்றதைப்போல அவனால் நிலைபெற முடியவில்லை. தன்னை அழித்து மரணத்தைத் தருவித்துக்கொண்டவன். நாடி நோக்கி சசாங்கனின் மரணத்தை முன் உணர்ந்து அவனுடைய மனைவி அபயாவை அழைத்து பரிவுடன் அன்னமிட முயல்கிறார.‌ ஆனால் அபயா உங்கள் மருமகளுக்கும் இப்படித்தான் செய்வீர்களா என சாபமிடுகிறாள். வனவிஹாரியின் மரணத்துக்கு அந்த சாபம் ஒரு காரணமோ எனும் உறுத்தல் அவருக்கு இருக்கிறது. ஆனால் விதவையாக உடல்நலம் குன்றிய அவளை ஜீவ தத்தரே காக்கிறார். வனவிஹாரி உடல்நிலை நலிவுற்றதாக அறிந்தபோது காளியிடம் நேர்ந்து கொண்டதாக சொல்கிறாள். அவள் வீட்டு சாவித்திரி விரதத்திற்கு செல்ல அவருக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த கனிவே அவருடைய மரணத்தை தருவிக்கும் பலவீனமான திறவுகோளாகிறது. 

முதிய கணவனைச் சகிக்காமல் எப்போதும் நோயிலேயே இருப்பதாக பாவிக்கும் பரான் கானின் இளம் மனைவி அரளி விதைகளை உண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அப்போது ஜீவன் ‘இந்தப் பெண்ணைப்போல் தாமும் விஷம் தின்றால், அப்போது பிழைத்திருக்க முடியுமா? இதை நாடியின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியாதே!’ என எண்ணுகிறார். மரணத்தின் பூடகம், தர்க்கமின்மை, வரம்பின்மை அறைகிறது. நாவலுக்குள் மரண தேவதை பற்றிய தொன்மக்கதை சொல்லப்படுகிறது. செம்பட்டை தலைமயிர் கொண்ட கோர முகத்தவளுக்கு கண் தெரியாது, காது கேட்காது. நோய்கள் எல்லாம் அவளுடைய பிள்ளைகள். காலத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவள் அவள். ஜீவன் மரணத்திற்குள் அவளை நேருக்கு நேராக சந்தித்து ஒவ்வொரு புலனிலும் உணர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். நாடியில் அவளுடைய காலடியோசையை அணுகி வருவதும் விலகிச் செல்வதுமாக அவரால் கேட்க முடிந்தது. ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள யக்ஷ்மன் சார்ந்த தேய்பிறை சந்திரன், ஈசனின் கோபத்தால் தோன்றும் காய்ச்சல் போன்ற தொன்மங்களை நாவல் ஆங்காங்கு பயன்படுத்துகிறது. உரிய நேரத்தில் மரணத்தை முழுதாக ஏற்கும் சண்டீதலா கோயில் மஹாந்து மரணத்தருவாயில் அபிமன்யூ மேடை நாடகத்தில் அழுவதைப்பற்றி கேள்வி கேட்கிறார். திட மனதுடன் மரணத்தை எதிர்கொள்கிறார். நாவலில் மரணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொள்கிறார்கள். இறுதியாக ஜீவனும் அவர் விரும்பியபடி தெளிந்த மனதுடன் மரணத்தைச் சந்திக்கிறார். குடுகுடு கிழவியாக மஞ்சரியை மீண்டும் சந்தித்து, ஈர்ப்பும் மாயையும் குலைந்து, அவள் நாடியைக்கண்டு மரண செய்தியை அறிந்த பிறகே அவர் மரணமடைகிறார். ஒட்டுமொத்தமாக நாவலில் மரணத்தைக் கண்டு அஞ்சி அரற்றுபவர்கள், மரணத்தை துணிவுடன் எதிர்கொண்டவர்கள் என இரண்டுவிதமான கதை மாந்தர்களை வகுத்துக்கொள்ள முடியும். இவை இரண்டும் இல்லாமல் நாவலில் வரும் அகால மரணங்கள் மனதை வருத்துபவை. தனது மூத்த மகளின் சாயலில் உள்ள சிறுமியின் சடலத்தைக் கூரு போட தயங்கி விலகுகிறார் ஜீவன். உடல் நலிந்து மரணிப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் அதற்குப் பொறுப்பாகிறார்கள். மரணத்தை அவர்களே அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் எந்த பிழையும் புரியாத இவர்களின் மரணங்கள் மன ஓர்மையை பாதிப்பவை. மரணிப்பவர்கள் அளவுக்கே பிழைப்பவர்களும் உள்ளார்கள். அதஸியின் சிறு வயது பாலகன் மறலியின் பிடியிலிருந்து வழுவுவது பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது. பிரத்யோத் டாக்டரின் மனைவி மஞ்சு, சசாங்கனின் மனைவி அபயா, மரணப்படுக்கையில் இருந்த ராம் ஹரி என சிலரை நோயிலிருந்து மீண்டவர்கள் என சொல்ல முடியும். 

ஜகத்பந்து முழுக்க கவிராஜர் மரபில் தனது தந்தையிடம் ஆயுர்வேதம் பயின்றவர். ஜீவனுக்கு கல்லூரியில் சேர்ந்து டாக்டராக பாஸ் செய்ய வேண்டும் எனும் அவா இருந்தது. ‘என்ன வயசானாலும் அனுபவம் இராது போனாலும் ‘டிகிரி’ இருந்தது. இந்த ‘டிகிரி’ மீதுதான் அவர்களுடைய செல்வாக்கும் புகழும் நின்றன.’ என்பதை ஜீவன் அறிந்திருந்தார். ஆனால் அந்த கல்வி தடைபட்டுப் போகிறது. நவீன மருத்துவத்தை தன்னிச்சையாகப் பயின்று ஒரு யோகியைப்போல் திகழ்ந்த ரங்லால் டாக்டரிடம் நவீன மருத்துவத்தை பயில்கிறார். ஆற்றோரம் போகும் பிணங்களை அறுத்து உடற்கூறு கற்கிறார் ரங்லால் டாக்டர். இது சுசுருத சம்ஹிதையில் ஆய்வுக்கு பிணங்களை பதப்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பகுதி. ரங்லால் ஒரு கட்டத்திற்கு மேல் வைத்தியத்தை கைவிடுகிறார். அதேபோலத்தான் சக்ரதாரி மருத்துவரும். ‌ நவீன மருத்துவத்தைப் பயின்றவர்களும் ஒரு வகையில் பண்டையகாலத்து வைத்தியர்களின் வழிமுறையையொட்டியே வாழ்கிறார்கள். ஆயுர்வேதியான ஜகத்பந்து மற்றும் சுயமாக நவீன மருத்துவத்தைக் கற்ற ரங்லால் டாக்டர் என இருவரின் கூறுகளும் ஜீவனிடம் உண்டு. இருவருக்கும் இடையேயான வேறுபாடைச் சொல்லும்போது ” ஜகத் மஷாயின் போதனையில் அடிக்கடி ‘அதிர்ஷ்டம்’, ‘ஊழ்வினை’ (நியதி), ‘கடவுள்’ இவை வரும். ரோக விஞ்ஞானத்தைப் பற்றிய விஷயத்தோடு அத்யாத்மிக பாவம் நிரம்பிய வியாக்கியானமாகவும் இருக்கும். அவருடைய விளக்கத்தில் பொருளை மீறிய ஒரு பாவம் இருக்கும். ரங்லால் டாக்டரின் விளக்கத்தில் ‘கடவுள்’ வரமாட்டார்; ‘அதிர்ஷ்டம்’ வராது; வெறும் வறட்டு விஷயம் போல் இருக்கும். புத்திக்கே புலனாகக்கூடியது. அதில் பாவமோ உணர்ச்சியின் வேகமோ துளியாகிலும் இருக்காது.” என ஒப்பிட்டு நோக்குகிறார் ஜீவன்.  ரங்கலால் டாக்டர் நோயாளியின் முன் மரணத்தை நினைவுபடுத்தக்கூடிய எந்தப் பேச்சையுமே பேசமாட்டார்.  ‘Medicine can cure disease but cannot prevent death’ (மருந்து நோயைப் போக்கும் – ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது) என்றதும் நீளக்கால் வைத்து நோயாளியின் வீட்டிலிருந்து போய்விடுவார். ஜகத் பந்துவோ ஜீவன் மஷாயோ அப்படியல்ல. வயதானவர்கள் என்றால் மரணத்தை அறிவித்துவிடுவார்கள். இளையவர்கள் என்றால் நாசூக்காக உணர்த்திவிடுவார்கள். ரங்லால் டாக்டரும் ஜகத் பந்துவும் நாவல் முழுக்க மேற்கோள்கள் வழியாக இருபெரும் ஆளுமைகளாக துலங்கி வருகிறார்கள். ரங்லாலுக்கு கடவுள் நம்பிக்கை சிக்கலில்லை ஆனால் அந்த அனுபவத்தில் ஆழாமல் பக்தியை ஒரு பேரமாக காண்பதைத்தான் ஏற்க மறுக்கிறார். ‘ஹரி நாமம் சொல்லியே தொற்று நோயை துரத்துபவன் தானே நீ ‘ என ஜீவனை கேலி செய்வார். 

ஜீவன் மஷாயின் காலத்தில் ஒன்றிரண்டாக நவீன மருத்துவத்தில் பாஸ் செய்த மருத்துவர்கள் வரத்தொடங்குகிறார்கள்‌. சாரு பாபு, ஹரேன் டாக்டர் மற்றும் பிரத்யோத் டாக்டர் ஆகிய மூவரும் இளம் மருத்துவர்கள். ஹரேன் அதே ஊரிலேயே பிறந்து வளர்ந்து மருத்துவம் பயின்றவர். இளமையில் ஜீவனின் மருத்துவத்தால் பயனடைந்தவர் என்பதால் பிற இருவருக்கும் ஜீவனிடம் இருக்கும் எதிர்மறை கோணம் அவருக்கு கிடையாது. ஜீவன் மஷாயின் எதிர் புள்ளி என பிரத்யோத் டாக்டரைச் சொல்லலாம். எதிர்புள்ளி என்பதைவிட ஜீவன் அடைய முயன்ற லட்சிய வடிவம். ஜீவன் கடந்தகாலம் என்றால் பிரத்யோத் வருங்காலம். தான் மருத்துவம் பாஸ் செய்யவில்லை எனும் வருத்தம் பிரத்யோத்தை பற்றி எண்ணும்போது அவருக்கு ஏற்படுகிறது. ‌ ஜீவன் மஷாய்க்கும் அவருடைய மனைவி ஆர்த்தர் பௌக்கும் இடையேயான உறவு, ஜீவன் அவளை மரணத்தின் உருவமாக காணும் அளவிற்கு, உரசல்கள் நிரம்பியது. பிரத்யோதும் அவருடைய மனைவி மஞ்சுவும் இணக்கமாக ஆதர்ச தம்பதிகளாக வாழ்பவர்கள். அதுவும் அவர் காதலித்த மஞ்சரியின் பேத்தி மஞ்சுவை மணந்ததன் வழியாக ஜீவனின் இளமையான லட்சிய வடிவம் என பிரத்யோத்தைக் கொள்ள முடியும். பிரத்யோத் ஜீவனை போன்றே நோய்களுக்கு எதிராக முழுத்திறமையும் கொண்டு போராடக்கூடிய திறமையும் துணிவும் மிக்கவர். ஜீவன் மஷாய்க்கு அவர் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு ஆனால் பிரத்யோத்துக்கு மஷாய் ஒரு க்வாக். நாடியில் மரணத்தை முன்னறிவிக்கும் நாகரீகமற்றவர். தனிப்பட்ட காழ்ப்போ பகையோ இல்லை. அவருடைய வைத்திய முறையையே நிராகரிக்கிறார் என்பதே அவரை வருத்துகிறது. ஜீவன் மஷாய் சசிக்கு அறிவுரை சொல்கிறார் “நோயுற்றவர் இளமையானவரா. வயதானவரா? வயதானால் ஒருவிதமாகத் தீர்த்துவிடேன் – நீ செய்யும் இந்தச் சிகிச்சைக் குற்றத்தைவிட அவர் இன்னும் உயிர் வைத்திருப்பது பெரிய குற்றமாகுமே!…” என. பிரத்யோத்தால் ஒருபோதும் இந்த நிலையை எட்ட முடியாது. ஜகத்பந்து ஜீவனிடம் “உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு என்று சொல்வது வெறும் பேச்சுப் புரட்டல்ல. அதற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதன்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங் கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான்.” என நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பையும் முரண்பாடையும் சுட்டிக்காட்டுகிறார். பிரத்யோத்தின் நம்பிக்கை ஆயுட்காலத்தை நீட்டிப்பதே முக்கிய நோக்கம் என நம்புவதாகும்.  

பிரத்யோத்துக்கு ஜீவன் ‘க்வாக்’, ஜீவனுக்கு அவரிடம் கம்பவுண்டராக இருந்த சசி டாக்டர் ‘க்வாக்’. சசி அதிரடியாக சிகிச்சை செய்பவன்‌. கெரோசினை களிம்புடன் சேர்த்து நெஞ்சில் தடவி சளியை அகற்றுபவன். இந்த வரிசைமுறையை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் இந்த வரிசை அப்படியே உள்ளது. 

ரானா பாடக் பிடிவாதமாக ஆயுர்வேதத்தை தேர்வு செய்யும் காரணமாக நவீன மருத்துவர்கள் மீது வைக்கும் விமர்சனமும் பொருந்தி வருவதுதான். “அந்த டாக்டர்களின் மருந்து சாப்பிட மிகக் கசப்பாகவே இருக்கும். அத்துடன் மஷாய், அவர்கள் கடாங்மடாங்கென்று பேசுபவர்கள் சிடுமூஞ்சிகள்; எங்களையெல்லாம் மனிதர்களாகவே நினைக்காதவர்கள். அவர்களுக்குக் கண்ணெல்லாம் பணத்தின் மீதுதான். ஏராளமாகப் ‘பீஸ்’ வாங்குகிறார்கள். நோயாளிக்கு அனுசரணையாக நீங்கள் பேசிப் பழகுவது போல் இருக்கமாட்டார்கள்.” சார்லஸ் லெஸ்லி ‘Asian medical systems- a comparitive study’ முன்னுரையில் ‘குடியானவர்களும் பழங்குடிகளும், நகர வாசிகளும் காஸ்மோபாலிடன் மருத்துவத்தின் தொழில்நுட்பத்தை மதிக்கிறார்கள், அதன் புதிய மருந்துகளுக்கு பழகிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரம் நாட்டுப்புறத்தவர்களையும் அடித்தட்டு மக்களையும் மரியாதை குறைவாக நடத்தும் பெரும்பாலான மருத்துவர்களையும் மருத்துவ ஊழியர்களையும் வெறுக்கிறார்கள். இத்தகைய நிபுணர்கள் அப்பிரதேசத்திற்கு அந்நியர்களாக இருக்கும்போது அது வர்க்க போரட்டமாகவே மாறி விடுகிறது.’ என எழுதுகிறார்.

ஆனால் ஒற்றைப்படையாக நவீன அறிவியலையும் மருத்துவத்தையும் நிராகரிக்கவில்லை என்பதே இந்நாவலின் தனித்துவம். ஜீவனிடம் ரங்லால் அன்றைய பெரும்பான்மை நாட்டு வைத்தியர்கள் பற்றி சொல்லும் குற்றச்சாட்டு இன்றும் அப்படியே பொருந்துகிறது. “ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டு வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர்த்துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?” காலரா, மலேரியா, காலா அசார் போன்ற தொற்று நோய்களில் முந்தைய மருத்துவ முறையைக்காட்டிலும் புதிய மருந்துகள் கண்கூடாக பலனளிப்பதை நாவல் பதிவு செய்கிறது. ரங்லால் டாக்டர் கூற்றாக வரும் இவ்வரிகள் இன்றளவும் பொருந்தக்கூடியவை.  “கவிராஜி (ஆயுர்வேத) வைத்தியத்தில் நான் எதுவுமே இல்லையென்று கூற வரவில்லை. ஆனால் நம் ஜாதியினர் பின்தங்குவது போல், நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடை போடவில்லையே! இந்தச் சாஸ்திரங்களைப் படைத்த காலத்தில் கெமிஸ்ட்ரி (ரசாயனம்) இன்று இருப்பதுபோல் முன்னேற்றமடையவில்லை. அத்துடன், இன்னும் எத்தனையோ கண்டுபிடிக்க வேண்டுவன உள்ளன. இப்போது பாரேன், இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்துவிடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன. இதைத் தவிர ஆயுர்வேதம் ‘ஆகந்துஜ வியாதி’ என்று எங்கே நின்றுவிடுகிறதோ அங்கே ஐரோப்பிய சிகிச்சை முறை ‘மைக்ராஸ்கோப்’பின் உதவியால், ஜீவாணுக்களைக் கண்டுபிடித்து இந்த ‘அனுமானம்’, ‘உபசர்க்கம்’ இவற்றின் எல்லையைத் தாண்டி எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கிறது!” நவீன மருத்துவம் தவறவிடக்கூடிய நாட்பட்ட நோய்களை ஜீவன் சிகிச்சையளித்து மீட்கிறார். அவற்றை பழைய ரோகங்கள் என சொல்கிறார். ரங்லாலிடமிருந்து அவர் பெற்ற அறிவுதான் ஜீவன் மஷாயை தம் மனத்துள் இப்படி எண்ண வைத்தது. “மரணத்துடன் மனிதனின் ஆற்றலுக்கும் சேர்ந்து தம் வணக்கத்தைச் செலுத்தினார். மரணத்தை வென்று வரவே முடியாது; ஆனால், மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும்! புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைப் புகழத்தான் வேண்டும்! அவை வாழ்க! ஐரோப்பிய மாபெரும் விஞ்ஞானிகளுக்குத் தம் சிரத்தைத் தாழ்த்தினார். “இன்று வேதத்தின் ரகசியத்தைக் கண்டவர் நீங்களே” என்றே சொல்லுவார்.” ஜீவனையும் அவருடைய முறைகளையும் ஏற்காத பிரத்யோத் மதியின் பாட்டியை அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வைத்து வாழ்நாளை நீட்டித்ததை தவறு என உணர்கிறான். தன் மனைவி மஞ்சுவின் உடல்நிலையை அறிய அவருடைய உதவியை நாடுகிறான். நாவலின் இறுதியில் பிரத்யோத் ஜீவனிடம் தனக்கு நாடி விஞ்ஞானம் கற்றுக்கொள்ள ஆவல் என வெளிப்படுத்துகிறான். கடந்த காலத்து பாரம்பரிய மருத்துவ அறிவின் சாரமான பகுதிகள் எதிர்காலத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பே தாராசங்கர் கண்ட கனவு, இந்நாவலின் தரிசனம். இந்த ஒருங்கிணைப்பே இன்று பி எம் ஹெக்டேயும், எம்.எஸ். வலியாத்தானும், இல. மகாதேவனும், கு. சிவராமனும் திருநாராயணனும் கனவு காண்பது. ஆனால் இன்றுவரை நிகழவில்லை…

கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள மேற்கோளின் ஒரு பகுதியை எனது ஆசிரியர் டாக்டர் இல. மகாதேவன் அவருடைய திரிதோஷ மெய்ஞான விளக்கம் நூலின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பார். காலங்காலமாக வைத்தியனுக்கு இருக்கும் அறக்குழப்பம். வைத்தியன் வேறு எவரைக்காட்டிலும் மரணத்தை நெருங்கி அறிந்தவன். எந்த மருத்துவரும் அவர் எதிர்கொண்ட முதல் மருத்துவ மரணத்தை மறக்க மாட்டார். ‘வைத்தியன் குணமாக சாத்தியமுள்ள நோயாளியின் மீது கருணையுடன் இருக்க வேண்டும்.‌ உறுதியாக மரிப்பவனிடமிருந்து மனதளவில் விலகியிருக்க வேண்டும்.’ இந்த அறிவுரையின் பொருளை புரிந்துகொள்ள மரணங்களை கண்ணுற்று அலைகழியும் மனம் வேண்டும். 

முதன்மையாக மருத்துவனின்/ மருத்துவத்தின் எல்லை என்ன? அவன் எங்கு பங்காற்ற முடியும் எங்கு விலகி நிற்க வேண்டும்? எந்த அளவுக்கு அவன் உயிர்களுக்கு பொறுப்பு? போன்ற கேள்விகளை எழுப்பும் ஆக்கம். அவ்வகையில் எனக்கு மிக அணுக்கமான படைப்பும் கூட. கனிந்த மருத்துவ மெய்ஞானியான ஜீவனின் தந்தை ஜகத்பந்து மஷாய் இளம் ஜீவனுக்கு சொல்லும் அறிவுரை இது.  “அப்பனே, எந்த வைத்தியன் நாடி பார்ப்பதில் கைதேர்ந்தவனாகின்றானோ. அவனுடன் மரண தேவதைகூடச் சமாதானம் செய்துகொள்ளும். மரணத்துக்கு எந்த இடத்தில் செயலாற்றப் பூரண உரிமையோ அங்கு அது, ‘எனக்குக் குறுக்கிடாதே – வழி விட்டு நில்! இது என் அதிகாரத்துக்குள் வந்துவிட்ட விஷயம்’ என்று சொல்லும். ஆனால் எங்கு அதற்கு உள்ளே புக உரிமை இல்லையோ, அங்கு தப்பித்தவறி அது தலையை நீட்டினால், ‘தேவி, இன்னும் நீ வரவேண்டிய காலம் இதுவல்ல; நீ திரும்பிப் போகலாம்’ என்று சொல்லக்கூடியவன் உண்மை வைத்தியன்.’ 

இந்திய புராண கதைகளை கவனித்து வாசிக்கும் போது ஒரு சுவாரசியமான கண்டடைதல் எனக்குக் கிட்டியது. அசுரர்கள் எப்போதும் அறப்பிறழ்வுக்காக இறைவனால் கொல்லப்பட்டார்கள். அறம் என்பதோர் ஒழுங்கு. அறநெறி பிறழாத மகாபலியும் கூட கொல்லப்பட்டார். புத்தரை திருமாலின் அவதாரமாக முன்வைக்கும்போது அசுர அரசன் அறம் பிறழாமல் இருந்ததால் அவனுக்கு நாத்திக பிரச்சாரம் மூலம் அறம் பிறழச்செய்து அழிக்கவே புத்தனாக அவதரித்தார் என்றொரு கதையும் உண்டு. இந்திரனின் கதைகளை கேட்கும்போது இயல்பாக தோன்றும் அவனைவிடவா அசுரர்கள் நெறி பிறந்தவர்கள் என. அப்படியானால் அசுரர்கள் பிறழ்ந்த அறம் எது. அவர்கள் மரணம் எனும் உயர்குலத்து இயல்பை பிறழ்ந்தார்கள். தூலமான உடலோடு அழிவற்றவர்களாக ஆக முனைந்தார்கள். மரணமின்மையை நாடுவதே அவர்களின் அறப்பிறழ்வு. அது பிரபஞ்சமளாவிய பேரொழுங்கை குலைப்பதாகும். நாம் நோய் கிருமிகளுக்கு எதிராக போராடினோம், நோய்கள் அதன் காரணிகளைத் தொடர்ந்து உய்த்து டி என் ஏ வரை சென்றுவிட்டோம்‌. இனியும் மறைக்க ஓன்றுமில்லை நாம் முழு மூச்சோடு அமரத்தன்மையை எய்தவே விழைகிறோம். நம் தலைமுறையில் சாத்தியமில்லாமல் போகலாம் ஆனால் நம் வருங்காலம் அதை நோக்கிய பயணம் தான். இந்த புத்தொளி காலகட்டத்திலிருந்து நாம் மெல்ல மெல்ல ஓட்டைகளை அடைத்தபடி பயணிக்கிறோம். ஒரு வகையில் நம் நவீன அறிவியல் அசுரத்தன்மை உடையதுதான். ஜீவன் மஷாயின் குரு ரங்லால் சொல்லும் வரி நாவலில் ஒன்றுண்டு. ‘மனிதன் எப்போதும் உதவியை எதிர்நோக்கும் பிராணி.’ அவன் எப்போதும் மரணத்தை அஞ்சுபவன். மரணத்தை வெல்ல அசுரரின் வழி வரம்கோரி திறன் பெற்று வாழ்வாங்கு வாழ்வது என்றால் அது வெகு சிலருக்கே சாத்தியமாகக்கூடிய வழி. அதற்கு மாற்றாக சற்றே எளிய, அனைவருக்கும் சாத்தியமான வழியே வேதாந்தம். அழிவற்ற அங்கீகரிக்கப்பட்ட பாதை. வேதாந்தத்தில் உடலின் அழிவை ஏற்று சாரமான ஆன்மாவின் அழிவின்மையை அனுபவமாக உணர வேண்டும். ஜீவன் எண்ணுகிறார் ‘மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆகவேண்டும் என்ற பேருண்மைமிக்க) இப்புவியில் இப்படி‌ அதை நினைத்து வருந்தியோ, சஞ்சலப்பட்டோ என்ன பயன்?’ எனும் ஏற்பு நிலை அடையப்பெற வேண்டிய பேறு. ‘யாவத் கண்டகதாம் பிராணாம் கச்சதி தாவத் கிரியாம் குர்வத்’ என்கிறார் சரகர். அதாவது கழுத்திலிருந்து பிராணன் விடைபெறும் இறுதி கணம் வரை சிகிச்சை செய் என்பதே வைத்தியனுக்கு ஆயுர்வேதம் அளிக்கும் அறிவுரை. ஆரோக்கிய நிகேதனத்தின் மரணம் பற்றிய பார்வை ஆயுர்வேதத்தின் பார்வையாக கொண்டுவிட முடியுமா என சொல்வதற்கில்லை. சாங்கிய தரிசனமே ஆயுர்வேதத்தின் மீது பெரும் தாக்கத்தை கோட்பாட்டளவில் நிகழ்த்தியுள்ளது. வேதாந்தம் அல்ல.  ஆரோக்கிய நிகேதனம் அவ்வகையில் வேதாந்த தரிசனத்தை ஆயுர்வேதத்தோடு இணைத்து நோக்குகிறது. மரணத்தை எதிர்கொள்ளும் திண்மையை அடையும் தயாரிப்பே ஆன்மீகதளத்தின் நோக்கம் என ஒரு கோணத்தில் வரையறை செய்ய முடியும். மறுபிறப்பு எனும் நம்பிக்கை வழியாக மரண அச்சத்தை கடந்து, மரணமின்மையை இந்திய ஆன்மீகம் முன்வைக்கிறது.  நவீன மருத்துவத்தில் மறுபிறப்புக்கு இடமில்லை. ஆகவே மரணமற்ற வாழ்வை இலக்காக கொள்கிறது. நாவலில் ரங்லால் டாக்டர் ஜீவனிடம் “மனிதன் இறந்துவிட்டால் நாம் வேறு எந்தத் திசையும் திரும்புவதில்லை. புரிகிறதா? இந்தத் தேகக் கூட்டிலிருந்து வெளியேறும் அந்த உயிர்ப்புள் எப்படி இறகுகளைச் சடசடத்து வெளியேறி எங்குச் செல்கிறது என்று நாம் ஆராய முயல்வதில்லை.” இடையிடையே சிரித்து, இந்தப் பிராணன் மட்டும் உண்மையில் பறந்து போகும் ஒரு புள்ளானால், அதைத் துப்பாக்கிக் கொண்டு சுட்டு வீழ்த்த ஆள் வந்துவிடுவான். அந்த மாமிசத்தையும் புசிப்பானே. அப்படி நிகழுமாயின் மறுபிறவி முதலியனவெல்லாம் இல்லாமல் போய்விடுமே!” என சொல்கிறார். புலனனுபவம் என்பதையே ஒரே அறிதல் முறையாக நவீன மருத்துவம் கொண்டிருக்கிறது. 

யாக்கை நிலையாமை என்பதொன்றும் புதிய சிக்கலில்லை. வகுத்துக்கொள்ள முடியாதவற்றின், தர்க்கமின்மையின் மீது எப்போதும் நாம் அச்சத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். ஆன்மீகமும் அறிவியலும் மரணத்தை தமக்கே உரிய வழியில் தர்க்கப்படுத்த முயல்கின்றன அதன் வழியாக அச்சத்தை கடக்க முயல்கின்றன. மரபான யாக்கை நிலையாமைக்கும் நவீனத்துவ – இருத்தலியல் யாக்கை நிலையாமைக்கும் ஒரு தொடர்ச்சியும் தனித்தன்மையும் உண்டு. மரபில் முன் சொன்னது போல் மரணத்தை இயல்பாக காணச்சொல்கிறது. நவீனத்துவமே இந்த இயல்பான ஏற்பிற்கு எதிராக மனித குலம் பிடிக்கும் முரண்டு என சொல்லலாம். இந்த கோணத்திலிருந்து ஆரோக்கிய நிகேதனத்தை அணுகும் போது சரியாக மரபான மனத்திற்கும் நவீன மனதிற்கும் இடையிலான சங்கமப் புள்ளியைத் தொட்டெழுப்ப முயன்ற முக்கியமான ஆக்கம் என சொல்லலாம். கவிஞர் சபரிநாதன் பாரதியைப் பற்றி எழுதிய கட்டுரையில் பாரதி புலவர்/ கவிராயர் மரபில் நின்னு நவீனத்தை நோக்கியவர் எனச்சொல்கிறார். அதே போன்ற ஒரு வரையறையை இந்நாவலுக்கும் அளிக்க முடியும். மரணமின்மை எனும் நவீன மனிதனின் ரகசிய விழைவை உய்த்துணர்ந்து எச்சரிக்கும் மரபின் குரல் இந்நாவல் என சொல்ல முடியும்.  மருத்துவத்தின் முதல் சிகிச்சை ஏன் சிகிச்சை அளிக்க வேண்டும் எனும் பதிலில் இருந்து தொடங்குகிறது. ஒருவர் ஏன் வாழ வேண்டும்? ஆயுர்வேதம் தெளிவாக அறம் பொருள் இன்பம் வீடுபேறு என ஒரு வரிசையை முன்வைக்கிறது. இறுதி இலக்கான வீடுபேறை அடைய ஆரோக்கியம் முக்கியம். இந்த இணைப்பே மரணத்தை ஆயுர்வேதம் காணும் நோக்கை தீர்மானிக்கிறது. இறுதி இலக்கான வீடுபேறை அடைய இவ்வுடல் தடையாக இருக்கும் போது உடலை விட்டு வேறொரு உடலில் தொடர்வதே அந்த இறுதி இலக்கிற்கு அருகே கொண்டு செல்லும் எனும் நம்பிக்கை மரணத்தை விடிவாகக் காண அனுமதிக்கிறது. நவீன மருத்துவத்திற்கு இத்தகைய இலக்கு ஏதுமில்லை. ஏன் வாழ வேண்டும் என்றொரு கேள்விக்கு மரணிக்க அச்சம் என்பதைத்தவிர எந்த பதிலையும் அளிக்க முடியாது. 

 “இந்த வாழ்வில் மரணத்தை விரும்பவே வேண்டியதில்லை. அதற்குப் பயந்து சம்சாரத்தைக் கடித்துக்கொண்டும் இருக்கவேண்டியதில்லை. இரண்டுமே பாபம்.” என்கிறார் ஜீவன். மரணம் ஒரு இயல்பான நிகழ்வாக இருக்கவேண்டுமே தவிர இயக்குவிசையாக அல்ல. ஆரோக்கிய நிகேதனம் ஒரு இந்திய செவ்வியல் ஆக்கம். வாழ்நாள் எல்லாம் பிணக்குகள் இருந்த ஆத்தர் பௌ, மஞ்சரி, பிரத்யோத் என எவருடனும் எந்த பிணக்கும் இல்லாமல் அமைதியுடனும் திடத்துடனும் மரணத்தை எதிர்கொண்டு முழுமையடைகிறார். 

ரங்லால் டாக்டர் மனித குலத்தின் வருங்காலம் குறித்து கண்ட கனவுடன் இந்த கட்டுரையை நிறைவு செய்ய விழைகிறேன். இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் மரணத்தை வெகு அருகில் உணர்ந்தோம். நம்மில் பலருக்கும் அதன் காலடியோசை கேட்டது. மரணத்தை ஏற்று ஆரோக்கியத்தை அடைவது எனும் புள்ளியில் ஜகத் பந்துவும் ரங்லாலும் ஒன்றாகிறார்கள். நவீன மருத்துவத்தின் இலக்கும் ஆயுர்வேதத்தின் குறிக்கோளும் ஒன்றிணைகிறது. “புதுப்புதுக் கருவிகளை உண்டாக்கினான், கண்டுபிடிக்கிறான். அவனுடைய இந்த முயற்சிக்கு ஒரு முடிவில்லை. மரணத்தைத் தடுக்கவே முடியாது; மரணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ரோகத்திலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சகர்களுக்கோ டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைப்போல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை போதும். ஓய்வு வேண்டும். நான் தூங்க வேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ்”

Sunday, April 11, 2021

இமாம் பசந்த் - அரவிந்தன் கடிதம்


வணக்கம் சார்…நலமா.?

கதை வாசித்த பின்னர் உடனே எதிர்வினையாற்றுவதை விட பல நாட்கள் கழித்து அது நினைவில் தங்கினால் அல்லது ஏதேனும் அது சார்ந்து சொல்ல இருக்கும் என்றால் அது ஒரு நல்ல கதை என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.அப்படிபட்ட கதைக்கு ஒற்றை வரியில் விமர்சனம் தருவது நன்றாக இருக்காது பாருங்கள்.

இமாம் பசந்த் சூழலியல் சார்ந்த கதை என்பது ஒரு புறவகையான அடையாளம் தான்.தங்களின் 'திமிங்கலம்' அறிவியல் புனைகதை என்றாலும் அதில் கூட சூழலியல் சார்ந்த வாசிப்பை தரமுடியும் என்று படுகிறது இப்போது.காந்தியம் நுகர்வு பற்றி அதிகம் பேசுகிறது அது சார்ந்து காந்தி இன்று இதழில் கூட சில  கட்டுரையை வாசித்த நினைவு.அதனால் இதை தங்களின் புதுமுகம் என்று சொல்ல முடியாது.

கதையில் ஆறுமுகம் என்னளவில் முக்கிய பாத்திரம்.உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அறிவியலில் we live in the past என்ற கருத்துண்டு.அது கோட்பாடா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதை கருத்தில் கொள்ள வைத்தது இந்த கதை.அந்த கருத்து-மூலை நடக்கும் சம்பவத்தை சற்று தாமதமாக கிரகிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நிகழ்காலம் என்ற ஒன்றே இல்லை என்றாகிறது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டு மட்டும் தான். கார்மேகத்தின் கருத்து என்பது ஒரு வகையில் ஆறுமுகத்தின் கருத்துதான். ஏனெனில் கார்மேகத்தை பழக்கியது அவர்தான். ஆனால் ஆறுமுகத்தின் கருத்து அவரின் குரலில் அல்லது தொனியில் அமைந்ததற்கு அந்த நிகழ்காலம் என்ற சிந்தனையை மறுப்பது தான் என்று தோன்றுகிறது.
நிகழ்காலத்தை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.


சிவனுக்கு திருப்தி படும்படி பழம் கிட்டிவிட்டது. ஆனால் இந்த சிவன் அதாவது கார்மேகத்திற்கு திருப்தி அடைய வல்ல பழம் கிட்டவில்லை என்பது மற்றொரு இழை. 

ஆறுமுகத்திற்கு ஆறுமுகம் என்று பெயர் வைத்தது மிக கச்சிதம்.தந்தைக்கு உபதேசம் செய்வது வேறு ஒரு இழை என்று தொன்மங்கள் மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.


கடந்த காலம் அல்லது மரபு என்பது அளவுகோல். எதிர்காலம் எப்போதுமே அளவுக்கு உள்ளாக்கப்படுகிறது. அது எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாத ஓர் இடம் ஒன்றுண்டு.

அது எதுவாக இருக்கும்? என்ற கேள்வியே இந்த கதையாக முடிந்ததோ என்னவோ?

அரவிந்தன்
திருகாட்டுப்பள்ளி


அன்புள்ள அரவிந்தன், 

மகனுக்குள் இருக்கும் தந்தையை அவனுடைய கடந்த காலத்தின் முகமாக கொள்ள முடியும். சமஸ்கிருதத்தில் மகன் பிறந்ததும் தந்தையால் சொல்லப்படும் மந்திரம் ஒன்று உண்டு. என் ஒவ்வொரு அங்கத்திலும் உருவான நீ நானே தான் எனும் பொருளை அளிக்கும் மந்திரம். காலத்தால் தடமழிவது ஒருவகையில் மீட்க முடியாதது. கடந்த காலத்தை மீட்க புறவயமாக எடுக்கும் முயற்சிகள் எல்லாமே பெரும் அழிவை கொண்டுவருபவை. கடந்த காலத்தை மீட்க நமக்கு வேறொரு வழி உண்டு. முற்றிலும் அகவயமாக, கற்பனையின் உதவியுடன் அனுபவத்தை மீள நிகழ்த்தி காண்பது. ஆனால் நாம் நினைவு என்றும் கடந்த காலம் என்றும் நம்புபவை உண்மையில் அத்தனை திடமானவையா? படைப்பு என்பதே ஒரு வகையில் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் மாறாத ஒன்றை காலவெள்ளத்திற்கு எதிராக நிறுத்தும் மூடனின் கனவுதான். 

சுனில் 

Thursday, April 8, 2021

இமாம் பசந்த்- சிறுகதை

கனலி சூழலியல் சிறப்பிதழில் வெளியான கதை. 

1

மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானுக்குப் படைத்து கணவன் மாங்கனி கேட்கும் போது சிவனே அளிப்பார். புனிதவதியின் கணவன் என்ன வகையைக் கொடுத்திருப்பான்? தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் அளித்தது இமாம் பசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கார்மேகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. சப்பரம் வரும் சர்ச் வீதியிலும் பாரதியார் வீதியிலும் மாம்பழ நெடி சொக்கியது. கார்மேகம் இளமையை மீட்டியபடி அந்தத் தருணத்தில் முழுமையாகத் திளைத்திருந்தான். மாடிகளில் இருந்து கூடைகூடையாக பழங்கள் கவிழ்க்கப்பட்டன. சிலர் தனித்தனியாக தூக்கி வீசினார்கள். உயரத்திலிருந்து எவர் கையிலும் வசப்படாமல் வீம்பாக குதித்த பழங்கள் கும்பலில் மிதிபட்டு தலை நசுங்கி கொட்டை பிதுங்கி சாறு கக்கி பரிதாபமாக கிடந்தன. கார்மேகத்துக்கு படபடத்தது. இயன்ற வரை எதன் மீதும் கால் வைக்காமல் நடந்தான். கூட்டம் நெட்டித் தள்ளியபோது அவன் கால் தவறுதலாக ஒரு மாங்கனியின் கொழகொழப்பை அறிந்தது. கால் கூசி சட்டென பின்னுக்கு இழுத்துக் கொண்டது. தனக்கு முன் இன்னும் எவர் கால்பட்டும் நசுங்காமல் கீழே கிடந்த மாம்பழத்தை கண்டபோது அவன் முகம் ஒளிர்ந்தது. அதை எடுக்க நகர்ந்தபோது, மாடியிலிருந்து வீசப்பட்ட மாங்கனி ஒன்று அவனுடைய கண்ணாடியை நோக்கி வந்துகொண்டிருந்ததை கவனிக்கவில்லை. கனியைப் பிடிக்கும் முயற்சியில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த நீலச்சட்டைக்காரர் கையைத் தலைக்கு மேலே ஏந்தி தாவி குதித்தார். அவருடைய முழங்கை தாடையில் குத்தியதில் கண்ணாடி பறந்து சென்று விழுந்தது. அவருடைய செருப்புக் காலில் மாங்கனி மிதிபட்டு நசுங்கியபோது உடல் விதிர்த்தது. ‘சாரிங்க’ என இடித்துத் தள்ளிக்கொண்டு பூரிப்புடன் கூட்டத்தில் கரைந்தார். ரேவதி ஊடே புகுந்து கண்ணாடியை மீட்டுக் கொடுத்தாள். ஒரு பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. நசுங்கிய பழத்தைப் பார்த்து ‘இமாம் பசந்த்’ என முனங்கிகொண்டான். 

கையைப் பிடித்து இழுத்து சாலையோரம் இருந்த திட்டில் அமரச் செய்தாள் ரேவதி. ‘சாமி நெல திரும்ப போவுது… மூணு மணி நேரமா உனக்கு ஒரு பழத்தப் புடிக்க துப்பில்ல... என்ன மனுசனோ… இங்கயே கெட இந்தா வாரேன்' என கத்திவிட்டு கூட்டத்திற்குள் புதைந்துபோனாள்.

ஆறு வருடங்களுக்கு முன் விடாது மழை ஊற்றிக்கொண்டிருந்த ஒரு தைமாத முகூர்த்தத்தில்தான் அவனுக்கும் ரேவதிக்கும் சோலையாண்டவர் கோயிலில் திருமணம். பரம்பரையாகவே வெள்ளிப் பட்டறையில் வேலை. அவன் தந்தை ஆறுமுக ஆசாரிக்குப் பற்பம் புடம் என மருத்துவக் கிறுக்கு. செவப்பட்டி வைத்தியருக்கு வெள்ளி பற்பம் செய்து கொடுக்கத் தொடங்கி அப்படியே ஆர்வமடைந்து மொத்தமாக திசைமாறினார். மூலிகை பறிக்க, மருந்து செய்ய என கார்மேகத்தையும் கூட்டிக்கொண்டு அலைவார். திருமண முகூர்த்தம் முடிந்து எவர் வீட்டுக் கல்யாணத்திலோ திருட்டு சாப்பாடு சாப்பிடுவதுபோல கடைசி பந்திக்கு அழுக்கேறிய உடைகளுடன் சாப்பிட வந்தபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்தது. ரேவதி அவனைச் சீண்டவேண்டுமென்றால் 'இப்படியாப்பட்ட மாமனார் உலகத்துலயே வேற எவளுக்கும் இல்ல' என கொளுத்திவிட்டால் போதும். வேறு எல்லாவற்றையும் கடந்து செல்லும் அவன் அப்பன் மீதான வசையை மட்டும் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்கும் நன்கு தெரியும்.

குழந்தைக்காக அலைந்து ஓய்ந்து போதுமென களைத்துப் போன சூழலில்தான் திருமல்ராய பட்டினத்தில் வாக்குப்பட்ட ரேவதியின் அக்கா மாங்கனித் திருநாளுக்கு அவர்களை வரச்சொன்னாள். "இம்புட்டு பழத்தக் கூடையில அள்ளிக் கொட்டுங்க… புறவு வீசி எறியிற பழத்த புடிச்சு வேண்டிக்கிட்டு திண்ணுங்க… தன்னால புழுபூச்சி உண்டாவும்" என்றாள். மேற்கொண்டு இப்படி நேர்த்தி கடன் நிறைவான பலருடைய கதைகளை தன் கூற்றுக்குச் சான்றாக சொன்னாள்.

கார்மேகத்திற்கு திருமணமான அந்த ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டுதான் மாங்கனி திருநாள் பழையபடிக்கு நிகழ்கிறது என்பதால் பெரும் கூட்டம். மாங்கனித் திருநாளுக்கு வர கார்மேகம் ஒப்புக்கொள்ள குழந்தைபேறின் மீதான ஆர்வம் என்பதைக்காட்டிலும் மாம்பழக் கிறுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லலாம். வீட்டிலேயே பாதிரி, பங்கனப்பள்ளி என ஒட்டுகண்ணுகளை நட்டு வளர்த்திருந்தான். திருமணப் பரிசாக அவனுக்கு மிகவும் பிடித்த இமாம் பசந்த் கன்றை ரேவதி திருமணம் முடித்து வீட்டுக்குள் நுழைந்த அன்று அவள் கையால் நடச்சொன்னான். மழை நீரில் கொவர்த்த மண்ணில் புதுப்புடவையில் எரிச்சலுடன் வேறுவழியின்றி கன்றை நட்டுவந்தாள்.

நீலம், ருமானி, கல்லாம, காதர், மல்கோவா என எத்தனை வகைகள் இருந்தாலும் மாம்பழங்களின் சக்கரவர்த்தி இமாம் பசந்த் தான் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ரேவதிக்கு இமாம் பசந்தோ ருமானியோ எதுவானாலும் மாங்காய் அல்லது மாம்பழம் மட்டும் தான்.‌ மதியச் சோறு மாம்பழம் இல்லாமல் அவனுக்கு இறங்கவே இறங்காது. அதுவும் அவனுக்கு மாம்பழத்தை நாகரீகமாக இப்படி வெட்டி துண்டுகளாக்கி உண்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. முழு பழத்தையும் தோலோடு உறிஞ்சி உண்பான். இந்தப் பித்தை ஆறுமுகத்திடமிருந்து தான் அவன் பெற்றுக்கொண்டான். அத்தனை நாட்டு வகைகளையும் தேடித்தேடி உண்பான். 'தோல் தடிச்சிருந்தா சூடு குறைவு உடம்புக்கு நல்லது ஆனா ருசி கம்மியாருக்கும்' 'நார்சத்து கூட இருந்தா வயித்துக்கு நல்லது ஆனா வாய்க்கு உகக்காது' என்று ஒவ்வொரு பழத்தைப் பற்றியும் சொல்வார். தெளிவாக இருந்தவர்தான் ரச மணி செய்கிறேன் பேர்வழி என மூச்சு திணறி மயங்கி விழுந்ததிலிருந்து வீட்டுள் கால் தரிப்பதில்லை.

ரேவதிக்கு தனது மாம்பழ ஞானத்தைப் புகட்டலாம் என கனவுகொண்டிருந்தான். ஆனால் அந்த ஆண்டு மாம்பூ பூத்து மாம் பிஞ்சாகி மாவடுக்களாகவே மரத்திலிருந்து உதிர்ந்தன. மாங்காயாகக் கூட ஆகவில்லை. மருமக வந்த ராசி மாமரம் பட்டுபோச்சு என மாமியார்காரி புலம்பியதைக் கேட்டு அழுதுக்கொண்டிருந்தாள் ரேவதி. அவள் நட்டுவைத்த இமாம் பசந்த் ஆறிலைகளுக்கு மேல் வளரவும் இல்லை குன்றவும் இல்லை. அவனுக்கும் எதையும் விளக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தையில் கூட மாம்பழ வரத்து இல்லை என்பதை கவனித்தான். விசாரித்துப் பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதுவே கதை என்று அறிந்து கொண்டான்.‌ அப்போதிலிருந்து இப்போது வரை எல்லா மாம்பழப் பருவங்களும் இப்படியேதான் கடந்தன.

சித்திரை வைகாசியில்கூட புயல் அடித்தது. அந்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் வகைதொகையற்று பொழிந்தது.  மாதத்திற்கு இரண்டு புயல்கள் கரையைக் கடந்தன. பிறகு வந்த ஆண்டுகள் கடும் வறட்சி; அனல் கக்கியது. பெரும் பணம் கொடுத்து ஓரிரு கூடைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து திருவிழாவை பெயருக்கு நடத்தினார்கள். பிச்சாடனார் சப்பரத்தில் சவ ஊர்வலத்திற்கு வந்து செல்வதுபோல் சோபையிழந்து சுற்றிவிட்டு நிலை திரும்பினார். கடந்த ஆண்டு மேகங்களைத் திரட்டவும் பருவத்தே மழையைக் கொணரவும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விமானங்கள் செயற்கை மழையைக் கொணர்ந்தன. காலத்தே தருவிக்கப்பட்டது மழை.

இந்த ஆண்டு மாசி தொடங்கி மாங்காய்கள் வழக்கம்போல் பழுக்க தொடங்கின. ஆனி பவுர்ணமிக்கு வழக்கத்தைவிட அதிக மாங்கனிகள். மாங்கனி என்றில்லை பொதுவாகவே அந்தாண்டு நல்ல விளைச்சல். பயிர்கள் தழைத்தன. வழக்கமாக அரிக்கும் இலை பூச்சிகள் அந்தாண்டு வரவேயில்லை. ஒவ்வொரு மாதமும் மூன்று முறை பலூனை பறக்கவிட்டால் மாதம் மும்மாரி பொழிய வைக்கலாமே என யோசித்தான் கார்மேகம்.

ரேவதி கையில் மாம்பழத்துடன் வந்தாள். 'காசாலட்டா? இமாம் பசந்த் இல்லியா?' எனக் கேட்டதும் அவள் முகம் சுருங்கியது. 'இந்த வாயிருக்கே... சாமி பிரசாதத்துலயும் நொட்ட நொள்ள... நீயா போன... நாந்தானே போனேன்… உன்னால முடியலதானே… இதுக்கே பெரும்பாடு' என கூட்டத்தின் எதிர்திசையில் மாம்பழங்கள் கூழாகிக்கிடந்த பாதையைக் கடந்து நடந்தார்கள்.

'சாமிகிட்ட வச்சுட்டு துன்னுறு பூசிக்கிட்டு நல்லா மனசார வேண்டிக்கிட்டு நறுக்கி ஆளுக்குப் பாதியா சாப்புடுங்க' என்றாள் ரேவதியின் அக்கா. கண்ணை மூடி வேண்டிக்கொண்டு நறுக்கி அவனுக்கு அளித்தாள். பழம் உள்ளே சென்ற சில நொடிகளில் தலை கிறுகிறுத்தது.‌ நாக்கு சுர்ரென எரிந்தது.‌ உலகம் சுழன்றது. தரை நெகிழ்ந்தது. கால்கள் புதைந்தன. கார்மேகத்திற்கு அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. எங்கோ வெகு தொலைவில் என தேய்சலாக ரேவதியின் எக்காளச் சிரிப்பு ஒலித்தது. வெகு அருகில் அவனுக்குள்ளே, தலைக்குள்ளே, ஈசான மூலையிலிருந்து ஆறுமுகத்தின் குரல் ஒலித்தது. 'தம்பி நல்லா சாப்புடு'. சுழன்று எங்கோ என பறந்து கொண்டிருந்தான்.

2

கண்கூசும் வெள்ளை வெளிச்சம் சூழ்ந்த விசாரணை அறையில் கார்மேகம் அமர்த்திவைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் ஒரேயோரு கையடக்க கணினி இருந்தது.

எங்கிருந்து ஒலிக்கிறது என அறிய முடியாதபடி அறைக்குள் பெண் குரல் ஒன்று ஒலித்தது.

'காலை வணக்கம் திருவாளர். கார்மேகம் இந்த விசாரணை சட்ட காரணங்களுக்காக காணொளிப் பதிவு செய்யப்படுகிறது,' எனக் கூறிய அக்குரலில் கனிவு ததும்பியது. ஆறுமுகம் 'நீயும் ஒரு காலை வணக்கம் சொல்லுப்பா… நல்லாயிருக்காது தம்பி' என்றார். வாயை இறுக மூடிக்கொண்டான்.

'இன்று என்ன கிழமை'

'வெள்ளிக்கிழமை' என கம்மிய குரலில் சொன்னான். 'நல்லா பெலமா சொல்லுப்பா' என்றார் ஈசானியத்து ஆறுமுகம்.

'காலையில் என்ன உண்டீர்கள்'

'சோறும் மீன் குழம்பும்.' 'எளவு உப்புசப்பில்லாம இருந்துச்சு' என்று பின்பாட்டு பாடினார் ஆறுமுகம்.

'உங்களுக்கு இப்போது எத்தனை வயது'

‘53’

மாம்பழங்கள் தடைசெய்யப்பட்டது தெரியுமா?

‘தெரியும்.’ 'தெரியாது' என்றார் ஆறுமுகம்.

'எத்தனை ஆண்டுகளாகத் தடையுள்ளது என அறிவீர்களா?'

'இருபது ஆண்டுகளாக.' அவன் ஒவ்வொரு பதிலையும் பெரும் போராட்டத்தினூடேதான் சொல்ல முடிந்தது. ஆறுமுகத்தை கவனிக்காமலிருக்க முயன்றான்.

'உங்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ததில் தடைக்குக் காரணமான மாங்கனித் திருநாள் சம்பவத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதானே.'

'ஆமாம்'

'நன்றி. அப்படி இருந்தும் ஏன் தடைசெய்யப்பட்ட கனிகளை வைத்திருந்தீர்கள்?'

தலைகவிழ்ந்து மவுனமாக அமர்ந்திருந்தார். 'மாம்பழம்னா இஷ்டம்னு சொல்லுப்பா வாயதொறந்து... அட சும்மா சொல்லு... தப்பா எடுத்துகிட மாட்டாக' என்றார் ஆறுமுகம்.

எரிச்சலில் கையைத் தூக்கி நிறுத்து என சமிக்ஞை செய்தான். 'உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். எப்பவுமே உனக்கு கோவம்தான் சத்ரு. எனக்கென்ன வந்துச்சு' என்று மவுனமானார் ஆறுமுகம். 

'என்ன?'

'கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என சமாளித்தான்.

'விசாரணை முடிந்ததும் அளிக்கப்படும்'

'நன்றி'. 'என்னத்த நன்றி தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதவிங்க அடுத்த செம்மத்துல கெவுலியா பொறப்பானுவ' ஆறுமுகம் சீறினார்.

'இவை ஏன் தடைசெய்யப்பட்டன என தெரியுமா?'

'கொஞ்சம் தெரியும்.‌ அது கஞ்சாவைப்போல் லாகிரி வஸ்துவாக மாறிவிட்டது என்றார்கள்'

'ஓரளவு சரி. முழுவதும் உங்களுக்கு விளக்க வேண்டியது சட்டப்படி எங்கள் கடமை. ஆகவே சொல்கிறேன். மாங்கனிகளில் புதிதாக mangicide எனும் ரசாயனம் உருவானது. எப்படி இந்த மாற்றம் உருவானதென தெரியவில்லை. அது மெஸ்கால் போன்ற காளான் வகையில் கிடைக்கும் போதையை அளிப்பது. ஆகவே மாமரங்கள் அழிக்கப்பட்டன. மாங்கனிகள் தடைசெய்யப்பட்டன.‌ உங்களுக்கு இதில் ஏதேனும் ஐயங்கள் உண்டா?'

'இல்லை'. 'அதென்ன நொப்புடி மாத்தம் கண்டுச்சுன்னு தெரியல... தங்கம் தகரமா மாறும்... தகரம் தங்கமா மாறும் இதெல்லாம் ரசவாத வித்தை… எது எதுவாவேணாலும் மாறும்' ஆறுமுகம் ஆத்திரமாகச் சொன்னார்.

சட்டென எழுந்து நடந்தான் கார்மேகம். அவனுக்கு அந்தக் குளிர்ந்த அறையில் வியர்க்க தொடங்கியது.

'இந்த கனிகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தன?'

'அது எங்கப்பன் கணேசன் தகப்பன் சிவன்கிட்ட வாங்கின ஞானப்பழம்' என சொல்லி சிரித்தார் ஆறுமுகம். 'சும்மா தமாசு கோச்சுக்கிடாத' என சமாதானம் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

'இதை யாருக்காவது விற்க முயன்றீர்களா?'

'இல்லை. யாருக்காகவும் இல்லை.'

'உங்களுக்கு இதை அளித்தவரை அடையாளம் காட்ட முடியுமா?

‘உங்களுக்கு தண்டனையைக் குறைக்க பரிந்துரைப்போம்.'

'ஆளு கட்ட குட்டையா ஒத்த தந்தத்தோட நீளமான மூக்குக்கையோட இருப்பார். ஆனா இது தமாசு இல்ல. எல்லாமே அந்த கற்பக விநாயகம் கொடுத்தது தானே' என்றார் ஆறுமுகம் நிதானமாக.

'எனக்கு யாரும் எதையும் அளிக்கவில்லை.' என்றான் கார்மேகம்.

'அப்படியானால் நீங்களே இதை உற்பத்தி செய்தீர்களா? மரம் எங்கிருக்கிறது என சொல்லிவிடுங்கள். மாமரம் வளர்ப்பது போதைப் பொருள் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியது என எச்சரிக்க விரும்புகிறேன்.'

மவுனமாக தரையையே வெறித்துக்கொண்டிருந்தான். 'மாங்கா தின்னதுக்கு தூக்கு தண்டனையா?' ஆறுமுகம் புலம்பினார்.

'உங்கள் ஒரு மாத கால நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து எங்களால் மரத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நிச்சயம் அதை அழிக்கவும் செய்வோம். உங்களுக்கு வேறு குற்றப் பின்புலம் ஏதுமில்லை என்பதாலேயே இத்தனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'

'எல்லாம் இந்த அப்பனால்' என மனதிற்குள் சொல்லிக்கொண்டான். 'உன் நன்மைக்கு தானே சொன்னேன். நல்ல மாமரத்த உருவாக்கிட்ட காலத்த திருப்பிடலாம்னு:

'சரி குற்றத்தை ஒப்புகொள்கிறீர்கள் தானே.'

தலையசைத்தான். 'எது குத்தம்? எல்லாம் கலிகாலம். தருமம் ஒத்த கால்ல நடக்குது' என வருந்தினார் ஆறுமுகம்.

குற்றத்தை ஒப்புகொள்வதாக உங்கள் எதிரே உள்ள திரையில் கைசாந்திடவும்.

மறுக்காமல் கைசாந்திட்டார். 'நீ ஒன்னும் கவலப்படாதப்பா. அப்பா நா உங்கூடயே இருப்பேன்'

'இந்நாள் நன்நாள் ஆகட்டும். ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி'

'ஒரு நிமிடம் எனக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டா?'

'சட்டப்படி இல்லை.'

'நன்றி'

'அவங்கட்ட ஒரேயொரு கேள்வி கேளுப்பா… குரலக் கேட்டா சின்ன வயசாட்டாம் இருக்கு… இதுவர உன் வாழ்க்கைல ஒரு துண்டு மாம்பழமாவது சாப்டிருப்பியா நீ? அதோட ருசி என்னன்னு தெரியுமா உனக்கு?'

வேண்டாம் என்பதாக தவையை வேகவேகமாக ஆட்டினான். 'நீ கேக்க போறதே இல்ல... நானே கேக்குறேன்' என்றதும் அதை நிறுத்தும் முயற்சியாக புரிபடாத ஒரு பெரும் ஓலம் கார்மேகத்தின் உள்ளிருந்து எழுந்தது.

3

'காலை வணக்கம். இன்று தண்டனை நாள் 7102/ 7300. ‌உங்கள் பகலவன் நேரம் தொடங்குகிறது,' என வழக்கம் போல் அசரீரிக் குரல் அறிவித்தது.

உயர்ந்த கூரை விலகி ஒளிபுகு திரைக்கு மேலே ஆதவன் ஒளிர்ந்தான். ஒடுங்கிக்கொள்ள ஒரு இருண்ட மூலைகூட இல்லாத வெளிச்சப் பெருவெள்ளம் அவனைக் கூசச் செய்தது.  கால்களுக்கிடையே தலையைப் புதைத்துக்கொண்டான். நொடிநொடியாக எண்ணினான். சரியாக முந்நூறு வந்ததும் கூரை மீண்டும் மூடிக்கொண்டது. ஆசுவாசமடைந்து நிமிர்ந்தான். தோல் எரிந்தது. இனி பத்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த வேதனை. கழிப்பிடத்தில் அமர்ந்தான். துளித் துளியாக மலம் வேதனையுடன் இறங்கிக் கொண்டிருந்தது. 'கருணக்கிழங்கு லேவியம் சாப்பிட்டா மூலக்கடுப்பு குறையும் தம்பி' என்றார் ஆறுமுகம். அவர் குரலைக் கேட்டதும் ஆசுவாசமடைந்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஒவ்வொருநாளும் அந்த அந்தகாரத் தனிமையை அவர் துணையுடன்தான் கடந்தான். 'தங்கம் செய்யிறத ரசவாதம்னு புரிஞ்சு வெச்சுருக்காய்ங்க. அது தப்பு. அது ஒரு அனுபவம். அம்புட்டுக்குள்ளார ஓடுறதும் ஒரே ரசம்தாங்குற அனுபவம். அந்த ரசத்த என்னவா வேணாலும் மாத்தலாம். எது எதுவா வேணாலும் மாறலாம்.' என ரசவாதத்தின் அடிப்படையைச் சொல்வார் ஒருநாள். 'காய்ஞ்ச இலதானப்பா வைரம். அது வீணாக்காம பாத்திக்கு பக்கத்துல லேசா மண்ண பிரட்டி மூடிவிட்டா போதும். நெகுநெகுன்னு காய்க்கும்,' என விவசாயக் குறிப்பளிப்பார். சிறைக்குள் வரும்வரை அவருடன் பேசுவதைத் தவிர்த்தான். இங்கே வந்து சிலநாட்களில் இயல்பாக அவருடன் பேசத் தொடங்கினான். காலையில் எழும்போதுதான் ஆறுமுகத்திற்குள் இருக்கும் கார்மேகமா அல்லது கார்மேகத்திற்குள் இருக்கும் ஆறுமுகமா எனும் குழப்பங்கள் தோன்றி அவனை பீதிக்குள்ளாக்கியது. தினமும் காலையில் எழும்போதும் இரவு உறங்குச்செல்லும் முன்னும் 'நான்‌ கார்மேகம்' 'நான் கார்மேகம்' என செபித்துக் கொள்வான். அவ்வப்போது ரேவதி இப்போது எங்கிருப்பாள் என எண்ணிப்பார்ப்பான். மாங்கனித்திருநாளின் பலமணி நேர போதை தெளிந்த பின் வீடு வந்து சேர்ந்ததும் தன் தந்தை தன்னோடு இருப்பதாக தயங்கித் தயங்கி சொன்னதும் பீதியில் வெளியேறிச் சென்றவள் திரும்பவேயில்லை. அம்மா அவனை மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள். மாத்திரையை போட்டால் ஆறுமுகம் மறைந்துவிடுவார். பிறகு அவருமில்லாத வாழ்க்கை சுவாரசியமற்றதாக இருந்ததால் மாத்திரையை நிறுத்தினான். ஆறுமுகம் சற்று எல்லை மீறும் போதெல்லாம் அவரை வழிக்கு கொண்டுவரும் மிரட்டல் உத்தியாக மாத்திரையைக் கைக்கொண்டான். அப்பன் அதே வயதில் அவனுடனிருக்க அவன் அப்பனைக்கடந்த மூப்படைந்தான். அப்போது 'உன்ன விட எனக்கு இப்ப வயசும் அனுபவமும்கூட' என எதிர்வாதம் புரிந்தான். அவ்வப்போது வாக்குவாதம் வந்து பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் கழித்த காலமும் உண்டு. குறிப்பாக ஒரேயொரு நல்ல மாமரத்தை வளர்த்தால் காலச்சக்கரத்தை திருப்பிவிட முடியும் என அவர் பேச்சு கேட்டதன் விளைவாகத்தான் சிறைக்கு வந்தது என்பதில் அவனுக்குத் தீராத கோபமுண்டு. அத்தனைக்கு பின்னும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை எனும் நன்றிகூட இல்லையே எனக் கத்துவான். காட்டிக்கொடுக்கவில்லை என்றால் என்ன நான் தான் உன்னுடன் சேர்ந்தே சிறையிலிருக்கேனே என்பார் அவர்.

கழிப்பிட சிந்தனைச் சரடை அறுத்துக்கொண்டு ஒரு குரல் கேட்டது. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம். உங்கள் நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்தில் 198 நாட்கள் குறைக்கப்பட்டு நீங்கள் இன்று விடுவிக்கப்படுகிறீர்கள்' என்றது அசரீரி பெண் குரல். சுதாரித்து எழுவதற்குள் சிறைகதவு திறந்துகொண்டது. மினுங்கும் திசைகாட்டி அம்புகுறிகள் வெளியேறும் வழியைக் காண்பித்தது. மிகச் சோர்வாக உணர்ந்தான். ஆனால் ஆறுமுகம் உற்சாகமாகத்தான் இருந்தார். 'விடுதலை விடுதலை' என சீட்டியடித்தார். மெல்ல நடந்து அவ்வழியே சென்றான். ஒரு உடைமாற்றும் அறையில் அவருக்கேன வைக்கப்பட்டிருந்த புதிய உடைகளை அணிந்து கொண்டு நகர்ந்தான். 'நமச்சிவாயம் துன்னூறு இல்லயா' கேட்டார் ஆறுமுகம். சிறை வளாகத்தின் வரவேற்பு பகுதிக்கு சென்றான். அங்கே இருந்த அதிகாரி. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம்' என பூச்செண்டு அளித்தார். ‘இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமா? எனக்கு வெளியே யாரும் இல்லை... எதுவும் தெரியாது... எங்கு செல்வதென்றும் தெளிவில்லை' என்றான் உடைந்த குரலில். 'அப்பன ஜெயில்லியே சாவடிச்சிரலாம்னு நினக்கிறியா நீ' என தழுதழுத்தார் ஆறுமுகம். 

'கவலைகொள்ள வேண்டாம். உங்கள் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இவர்கள் தான் உங்களை வெளிக் கொண்டுவர கோரியவர்கள். அவர்களுடைய நிறுவனத்தில் உங்களுக்கு பணியளிக்க முன்வந்துள்ளனர்.' என வரவேற்பறை நாற்காலிகளில் சீருடையணிந்த நால்வரைச் சுட்டிக்காட்டினான். அவர்கள் எழுந்து கைகுலுக்கி அவரை அழைத்துச் சென்றனர். 'உங்கள மாதிரியான நல்ல உள்ளங்களால் தான் சார் மழ பெய்யிது' என கண்ணை கசக்கினார் ஆறுமுகம்.

4

வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பயணம் தொடங்கியதுமே உறங்கிப்போனான். எழுப்பியபோது மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதியில் இருந்தார். சூரியத்திரை மிதமான தட்பவெப்பத்தை அனுமதித்தது. சற்று சுதாரித்து நோக்கியதும் தான் தானொரு மாந்தோப்பில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எல்லா மாமரங்களும் நான்கடி உயரம் இருந்தன. அவை ஒன்று போலத்தோன்றின. அதில் காய்த்து தொங்கிய மாங்காய்களும் பழங்களும் கச்சிதமாக ஒரே அளவும் ஒரே எடையும் கொண்டதாகத் தென்பட்டன. கனிகள் யாவும் ஒரே மஞ்சள் அடர்வில் இருந்தன.

'நீங்கள் இப்போது இருப்பது பிராகிருதிஸ்தான் முழுமைக்கும் மாம்பழம் உற்பத்தி செய்து அளிக்கும் மாம்பழத் தொழிற்சாலை. வெற்றிகரமாக எங்கள் ஆய்வின் மூலம் போதைத்தன்மை அற்ற மாங்கனிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்கியுள்ளோம்.' என்றான். 'மரத்த ஜெராக்ஸ் எடுத்துருக்கானுவ தம்பி... கார்டூன் மரம் மாதிரி எப்படி வெச்சுருக்கானுவ பாரு… சூதானம் தம்பி' என்று கிசுகிசுத்தார். 

கார்மேகத்திற்குச் சுற்றிக் காண்பித்தான். 'சரியாக 21 நாட்களில் மாம்பழத்தை உருவாக்குவோம்' ஒரு மரத்திற்கு முன் சென்று நின்றவன் அதன் நடுத்தண்டில் பொறிக்கப்பட்ட பார்கோடுகளுக்கு நேராக தனது கைக்கடிகாரத்தை காண்பித்தான். கடிகாரத்திரையில் '144' எனும் எண் மிளிர்ந்தது. 'ஒவ்வொரு மரத்திலும் 144 பழங்கள் ஒரு சமயத்தில் காய்க்கும்'. கடிகாரத்தில் 40லிருந்து எண்ணிக்கை நொடிக்கு நொடி குறைந்தது. மரத்தின் நடுத்தண்டிலிருந்து குடைமாதிரி எல்லா பக்கமும் வலை விரிந்தது. எண்ணிக்கை சரியாக சுழியத்திற்கு வந்தபோது ஒரே சமயத்தில் அனைத்து பழங்களும் காம்பிலிருந்து விடுபட்டு வலைக்குள் விழுந்தன. 'பெரிய வித்தக்காரனுவ தம்பி' என்று வியந்தார் ஆறுமுகம்.

'ஏம்பா இம்புட்டு மரம் வச்சுருக்கானுவ ஆனா தக்குனூண்டு வாசம்கூட இல்லியே… என்னனு கேளுப்பா' என்றார். அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. ஆகவே 'இத்தனை மாங்கனிகள் இருந்தும் ஏன் வாசம் வரவில்லை?' எனக் கேட்டான் கார்மேகம். 'அதற்குதான் உங்கள் உதவி தேவை' என்றபடி அவரை ஒரு அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நிமிடம் என தலையைச் சாய்த்து ஒரு குப்பியிலிருந்து இரண்டு மூக்கிலும் இரண்டு சொட்டுக்களை விட்டான். விர்ரென இருந்தது. உடலும் மனமும் விழித்துக்கொண்டது. 'அஞ்ச வேண்டாம். மூக்கு என்பது மூளையின் வாசல் அல்லவா' என்றான். பிறகு ஒரு துண்டு மாம்பழத்தை நறுக்கி கொடுத்தான். தயக்கத்துடன் அதைக் கையில் எடுத்தான். அவன் கையிலிருந்த திரையில் எதையோ அழுத்தினான். குப்பென மாம்பழ வாசம் கிளர்ந்தது. ருசித்தான். 'காசாலட்டு' அவன் கண்கள் மின்னின. அடுத்த துண்டை அளித்தான் 'நீலம்' அவன் கண்கள் கசிந்தன. 'நீலம் என்றா சொன்னீர்கள்?'. 'ஆம்'. 'அப்போது இதைச் சாப்பிடுங்கள்' என ஒரு துண்டை நீட்டினான். விண்டதும் 'கல்லாம' என்றார் ஆறுமுகம். அதையே கார்மேகமும் சொன்னான். 'உறுதியாகத் தெரியுமா?'. 'பொய்யாச் சொல்றேன்' என ஆறுமுகம் மருகினார். 'ஆம் சந்தேகமே இல்லை' என்றான் கார்மேகம். 'இப்போது எங்கள் தகவல் சேகரிப்பின்படி முதலில் உண்டது கல்லாமை. அடுத்து உண்டதே நீலம்‌.' 'இல்லை எனக்கு உறுதியாக தெரியும்'. 'நன்றி எங்கள் தொழில்நுட்ப குழுவிற்கு உங்கள் மாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன். இங்குதான் எங்களுக்கு உங்களைப் போன்ற துறை நிபுணர்களின் துணை தேவை'. ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு வாசமும் ருசியும் கொண்டதாக இருந்தது.

'இப்போது இங்கே பசி ஒரு சிக்கலில்லை. ஆனால் ருசிக்கான அலைச்சல் ஓயவில்லை. ருசியைக் கைகொள்ளவே அவனுடைய ஆக்கப்பூர்வ நேரமும் உழைப்பும் பெரும்பகுதி செலவாகிறது. ஆகவே இந்தத் திட்டம். உங்கள் மூக்கில் விடப்பட்ட இரண்டு சொட்டுக்கள் மூளையில் உள்ள நரம்பு முடிச்சு தொகைகளுடன் பிணைந்துள்ளது. செயலி வழியே நீங்கள் விரும்பும் ருசியைப் பணம் கட்டி தரவிறக்கிக் கொள்ளலாம். வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ருசிகள் கொண்ட மாம்பழம்கூட உண்டு. முயற்சிக்கிறீர்களா?'

'இல்லை வேண்டாம்'

'எல்லா உணவுவகைகளையும் நாங்கள் இதில் இணைத்துள்ளோம். சாத்தியமான அத்தனை ருசி வேறுபாடுகளையும் கொணர்ந்துள்ளோம். உயர்தர, அரிதான ருசியைத் தேர்ந்தெடுக்கும் தோறும் அதற்கான கட்டணம் அதிகரிக்கும். எல்லா உணவுபொருட்களின் உற்பத்தியும் இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விதமான மதுதான் தயாரிக்கப்படுகிறது. உங்கள் பண வசதிக்கு ஏற்ப அது வோட்காகவும் நூறாண்டு கால ஒயினாகவும் ருசிக்கப்படும்.'

'எங்களால் இருப்பதிலேயே சிறந்த வகையான இமாம்‌ பசந்த் வகை மாம்பழ ருசியை ஆவணப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆவணங்களின்படி நீங்கள் அந்த வகை பழங்களை வைத்திருந்ததால் தான் சிறையில் அடைபட்டதாக அறிந்தோம்.'

இமாம் பசந்த் எனும் பெயரைக் கேட்டதும் கார்மேகத்தின் நாவில் எச்சில் ஊறியது. அதன் ருசியும் மனமும் நினைவில் எழுந்தது. மாம்பழங்களைக் கூடைகூடையாக அடுக்கியிருக்கும் பண்டகசாலை அறை. அதன் நெடி. தயிர்சோற்றில் ஊறிய மாம்பழத்தின் ருசி.‌ உறிஞ்சி உண்ணும்போது எழும் ஓசை. ஊறிய மாவடின் கார்ப்பும் புளிப்பும். பால் மாங்காயின் புளிப்பு.

ருசியற்ற மாம்பழத் துண்டை மென்று படிப்படியாக அதன் இனிப்பை கூட்டச்சொன்னான். 'இது ரொம்ப இனிக்குது', 'இது ரொம்ப கம்மி', 'இனிப்பாவே இருக்கக்கூடாது’, கொஞ்சம் சாக்கட்டி மாதிரி இறங்கனும்', 'ரொம்ப சவசவன்னு இருக்கு', 'காரக்குறிச்சி கச்சேரி மாதிரி மேல் ஸ்தாயிக்கு போயிட்டு அப்புறம் அமைதியா தவழ்ந்து முடியனும்', 'ரவை எலுமிச்ச சேத்த மாதிரி கொஞ்சம் புளிப்பு கூடனும்', 'அக்பரும் அவுரங்கஜீபும் சாப்புட்ட பழம்னா சும்மாவா', 'பல்லுல நார் சிக்கக்கூடாது', 'ஒரேடியா மைய மாவாட்டம் அரச்சிப்புட்டானுக' அவனும் ஆறுமுகத்தின் கூற்றுக்களை ஒத்து மாற்றங்களைச் சொல்லிக்கொண்டே வந்தான். அவனால் துல்லியமாக இமாம் பசந்தின் ருசியைக் கொணர முடியவில்லை. ராப்பகலாக அவர்கள் உழைத்தார்கள். ஆனால் அவனுக்கும் ஆறுமுகத்திற்கும் திருப்தியில்லை. 'மண்ணு மூட்டைகளா இருக்காய்ங்க' எனப் புலம்பினார் ஆறுமுகம். இமாம் பசந்தின் முப்பத்தாறு ருசி பேதங்களை உருவாக்கியிருந்தார்கள். ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு இந்த முப்பத்தாறில் இமாம் பசந்துக்கு ஆக நெருக்கமான ருசியை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு சமயமும் வாயில் இட்டதும் இதுதான் என தோன்றும். ஆனால் ஆறுமுகம் மறுப்பார். உண்மையில் தான் உண்டதும் தன் தந்தை உண்டதும் ஒரே பழம்தானா என அவனுக்குச் சந்தேகம் வந்தது. பற்பசையால் பல் விளக்குபவருக்கும், சாம்பல் உப்பில் விளக்குபவருக்கும், பல்லே விளக்காதபவருக்கும் வேறு வேறு ருசி தென்பட்டிருக்குமா என யோசித்தான்.  ஒரே நேரம் இதுதான் இமாம் பசந்த் என்றும் இது இல்லவே இல்லை என்றும் தோன்றி அவனைக் குழப்பியது. ஆறுமுகத்தின் தீர்மானமின்மை அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் சலித்துவிட்டார்கள். நடைமுறை வழக்கத்திற்காக இதுதான் இமாம் பசந்த் என ஒன்றுக்குச் சான்றளிக்க சொன்னார்கள். 'தம்பி உள்ளதுலயே இது ரொம்ப நல்ல ருசியாக்கும். ஆனா இது இமாம் பசந்த் இல்லய்யா' என்றார் ஆறுமுகம்.‌ அவனுக்கும் அது தீர்மானமாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்ய? ஒப்புதல் கைசாந்து இட்டான். 'நெஞ்சறிய பொய் சொல்லலாமா. உங்கப்பன் ஆறுமுகம் வளத்த வளப்பு இப்படி சிரிச்சுபோச்சே' என விசும்பினார்.

அத்துடன் ஒரு தொகையை அவனிடம் அளித்து 'எங்களுக்காக பணியாற்றியதற்கு நன்றி. இனி நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எங்கும் செல்லலாம்' எனக் கூறி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். 'காரியக்காரனுவ கோவணத்த உருவிடுவானுவன்னு சொன்னனா இல்லியா' என வருத்தப்பட்டார் ஆறுமுகம்.

கார்மேகத்திற்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. முற்றிலுமாக மாறியிருந்த நகரத்தில் அவனுக்கு நடந்து கடப்பது விநோதமாக தென்பட்டது. முதியவர்களுக்கான சலுகைக் கட்டணப் பேருந்து எங்கோ தெற்கே வெகுதொலைவுக்குச் செல்வதாக சொன்னார்கள். ஏறி அமர்ந்தான்.

நிழலற்ற பொடிமணல் பாலையில் தொண்டை வரள நடந்து கொண்டிருந்தான். கால்கள் புதைந்தன. கீழே நோக்கியபோது கால் புதையும் அளவுக்கு மாம்பழங்கள் கிடந்தன. ஆவல் மின்ன கையில் அள்ளியதும் அவை பலூன் வெடிப்பதுபோல் வெறும் மணலாக உடைந்து ஊற்றியது. பித்தேறி எல்லாவற்றையும் வெறும் பொடிமணலாக ஆக்கினான். வியர்த்து கண்விழித்தபோது எங்கோ ஒரு சிற்றூரில் பேருந்து இளைப்பார நின்றிருந்தது. மெல்ல இறங்கி ஒன்றுக்கிருக்க போனவன் குத்துச்செடிகளும் புதரும் மண்டிய வெட்டவெளியைப் பார்த்தான். அடர்நீலத்து கரு ஊமத்தைகள் இதழ்விரித்து மண்டியிருந்தன. முள்படர்ந்த காய்கள். பச்சைநிறத் தோல் வெடித்து உதிரச்சிவப்பும் அந்தியின் பொன்நிறமும் கொண்ட சதைப்பகுதியும் விதைகளும் தென்பட்டன. வெப்பத்தில் தோல் எரிந்தது. கொப்பளங்கள் கிளம்பின. ஆறுமுகம் சலனமின்றி இருப்பதை உணர்ந்ததும் போதும் என முடிவெடுத்தான். சட்டென ஊமத்தை பழத்தை எடுத்து விழுங்கினான். திடுக்கிட்டு விழித்தவர் 'அப்பனக் கொல்லுறியா சண்டாளா' என கதறினார். இறுகிய முகத்துடன் கண்ணை மூடிக்கொண்டான். நாக்கிலிருந்து தொண்டைக்கு இறங்கும் முன் சட்டென விழிவிரிய கண்ணைத் திறந்தான். ஆச்சரியம் தொனிக்க ஊமத்தையைப் பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் 'இமாம் பசந்த்!' என்றார்கள்.



நீலகண்டம்- கவிதா ஒரு கடிதம்


நீலகண்டம் வாங்க

நீலகண்டம் என்ற இந்த நாவல் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அன்னா கரீனினாவின்   புகழ்பெற்ற "மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன "  தொடக்க வாசகம் நினைவுக்கு வந்தது. நாவல் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ப்பு பற்றி பேசினாலும் அதோடு தொன்மங்கள், புராணக்கதைகள், நாட்டாரியல் குழந்தை கதைகள் போன்ற பல வகைமைகளில் ஒன்றுடன் ஒன்று தொடற்புறுத்தி சொல்லப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட வர்ஷினி என்ற வரு வின் இளமைக்காலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

நாவல், செந்தில் ரம்யாவின்  மன நுட்பங்களை விரித்து சொல்வதன் வழியாகவே அவர்களின் காதல், திருமணம், குழந்தை இல்லாதது பற்றிய ஏக்கங்கள், வருவை தத்தெடுத்தது போன்ற கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிடுகிறது.வரமாக வந்த பிள்ளை, நோயோடு அவர்களின் சுமையாக மாறி மன அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் போது, இதென்ன வாழ்க்கை என் இப்படி நடக்கணும் என்ற கேள்வி எழாமலில்லை. மேதைகள் எல்லாம் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்கள் என கண்டறிந்து வருவிடம் மேதமை தனத்தின் சாயலை ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து கடைசியில் நம்பிக்கைகள் பொய்யாகி கரைந்து போவதை காண ரம்யாவுடனும் செந்திலுடனும் நானும் சேர்ந்து திகைத்து நின்றேன். என் குடும்பத்திலும் நெருங்கிய உறவில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ந்து கொண்டிருப்பதை, அதனால் அந்தகுடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை கண் கூடாக பார்த்துக்கொண்டிருப்பதால் ரம்யா செந்திலின் பிரச்சனைகளை என்னால் உள் வாங்கி புரிந்து கொள்ள முடிந்தது.

முக்கியமாக பேச வேண்டிய கதாபாத்திரம் செந்திலின் நண்பன் ஹரி. நீ இப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது பெரிய வன்முறை என்றாலும், ஆழத்தில் மிகவும் விரும்பியதும் ஆம் என்று ஒத்துக்கொள்ளவும் செய்தது. ஹரியும் இயல்பில் எதிலும் தன்னை முற்றிலும் ஒப்படைத்துக்கொள்ளாத  மனிதர்களின், முக்கியமாக குடும்பம் ,காதல் , அன்பு போன்றவற்றின்  சமரசங்களை அதன்  வழியாக மனிதர்கள், அடையும் சௌகர்யங்களையும் அறிந்து அனைத்திலும் விலகியிருப்பவன். அவன் வழியாகவே செந்தில் ஓரளவு தன்னை அறிகிறான் போலும். நந்தகோபாலின் இளமைகாலம் பற்றிய கதை தெரிந்ததும், அவர் வருவிடமோ சாகரிடமோ நெருங்கும்போது சற்று பயமாக இருந்தது.

இடையிடையே வருவின் உலகத்தில் குழந்தை கதைகள் அதில் நம் தோழி வானவன்மாதேவி ஒரு பாத்திரமாக வந்து சக்தி வாய்ந்த மேகங்களை உறிஞ்சிய வாக்குவம் கிளீனரை தன் சக்கரக்கால்களால் கவ்விக்கொண்டு பறந்தது, போன்றவற்றை வாசிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அறம் பற்றிய கேள்விகள், அவை நிகழ்காலத்தில் தங்களின் பெற்றோர் செய்த செயல்களின் விளைவுகளுக்கு எவ்வாறு பொறுப்பாக முடியும் என்ற கேள்விகள், அறத்தினாலும், பக்தியினாலும், பாசத்தினாலும் உண்மையிலேயே பெரும் நன்மைதான் விளையுமா என்ற  கேள்வியை எழுப்பியது.

செந்திலின் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நச்சு பருவம், அமுத பர்வம் என்ற இரு கதையாடல்களாக சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான நாகலட்சுமியின் கதை தொன்மம் இன்றும் நம் குடும்பங்களில் மரபிலிருந்தும் வேர்களிலிருந்தும் உயிர்ப்புடன் நிகழும் கதையாடல்கள்.

வரு காணாமல் போனது தெரிந்த போது செந்திலின் மன நினைப்பு மனிதர்களின் மனதின் கீழ்மைகளை தொட்டுக்காட்டியது. அது ஒன்று எப்போது அமுதென்பது நஞ்சாகிறது எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் என்பதை சொன்னது. நாம் அனைவரும் மரபெனும் நீண்ட சங்கிலியால் பிணைக்கப்பட்ட கண்ணிகளே என செந்தில், ரம்யாஇவர்களின் குடும்பப்பிண்ணனி கதைகள் தொட்டுக்காட்டியது .

குழந்தையின்மை அதன் மூலமாக வரும் சமூக மதிப்பில் ஆண்களின் ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவது அதன் தொடர்ச்சியாக குழந்தை உற்பத்தி முனையம் என ஒரு வணிக கட்டமைப்பு எழுவதை நாவலில் சற்று மிகைப்படுத்தி கூறியிருந்தாலும் இனி இது யதார்த்த உலகில் வேரூன்றி வருவது மறுக்கமுடியாதது .

சுடலை மாடனுக்கும், கிரேக்க துன்பியல் நாடக மைய கதாபாத்திரம் மெடியாவிற்கும் நடந்த உரையாடல் இறுதியில் கவிஞர் கலீல் ஜிப்ரானொடு நடக்கும் உரையாடல் அனைத்தும் நையாண்டியின் உச்சம் ,

நாவல் முழுதுமே வெளிப்படும் உரையாடல்களின் கூர்மை, சூழல் சித்தரிப்பின் துல்லியம் அதன் ஒப்பீடு, வாழ்க்கையின் குரூர பக்கங்கள் நினைவோட்டங்களாக வரும் நிகழ்வுகள் அனைத்தும் படைப்பாளியின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. அந்த வகையில் என் மனதிற்கு நெருக்கமாக நீண்டநாள் பயணிக்கும் நாவலாக சுனிலின் நீலகண்டம் இருக்குமென்பது சந்தேகமில்லை .

வாழ்த்துக்கள் சுநீல் .

ப்ரியமுடன்

கவிதா 


அன்புள்ள கவிதா

நாவல் வெளியாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. இப்போதும் உயிர்ப்புடன் வாசிக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு ஆக்கத்தில் அந்தரங்கமான உண்மையை சுட்டிவிட முடியும்போது, காலகட்டத்தை கடந்து எக்காலகட்டத்திற்கும் உரிய கேள்வியை ஒரு ஆக்கம் தொடும்போது அது தொடர்ந்து வாசிக்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதன் வடிவ சிதைவுகளை மீறி அப்படி சில நரம்புகளை நீலகண்டம் தொடுகிறது என்பதில் நிறைவு கொள்கிறேன். வருங்காலங்களில் மேலும் வாசிக்கப்படக்கூடும். 

நன்றி 

சுனில்