சொல்வனம் வங்காள இலக்கிய சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை.
மைத்ரேயர் அவருடைய குரு ஆத்ரேயரிடம் தனது மறுப்பைச் சொன்னார். உகந்த மருந்துகள், உரிய செவிலியர், மற்றும் திறன் வாய்ந்த மருத்துவர்கள் இருந்து நல்ல சுயகட்டுக்கோப்பும் உள்ள நோயாளி விரைவில் நோயிலிருந்து மீள்கிறார். ஆனால் இவை எல்லாம் இருந்தும் சிலர் மரிக்கிறார்கள். இது ஏன்? அப்படியானால் சிகிச்சைக்கு எந்த மதிப்பும் இல்லைதானே. சேற்றுக் குட்டையில் கொஞ்சம் நன்னீர் அள்ளி ஊற்றுவது போல அல்லது ஓடும் நதியில் கையளவு நீரை விடுவது போல அல்லது குப்பைமேட்டில் ஒரு கைப்பிடி குப்பையை அள்ளிப்போடுவது போல, பயனற்றது. நேரெதிராக உரிய மருந்தோ, செவிலியரோ, நல்ல வைத்தியரோ அமையாத, சுயக்கட்டுபாடும் இல்லாத நோயாளியும் கூட நோயிலிருந்து மீள்கிறார். அதே நிலையில் இருக்கும் சிலர் மரிக்கவும் செய்கிறார்கள். ஆக மொத்தம்- சிகிச்சை செய்து பிழைக்கிறார், சிகிச்சை செய்தும் மரிக்கிறார், சிகிச்சையின்றியும் பிழைக்கிறார், சிகிச்சையின்றியும் மரிக்கிறார். ஆக சிகிச்சை அளிப்பதாலோ அளிக்காததாலோ எந்த மாற்றமும் இல்லை.
பதிலுரைத்து ஆத்ரேயர் சொன்னார் – இந்த பிழையான சிந்தனைக்கு என்ன காரணம் மைத்ரேயா? குணமாகக்கூடிய நோய் சிகிச்சையின் நான்கு பாதங்களின் பதினாறு இயல்புகளுடன் இருக்கையில் நோயாளி மரித்துவிட்டார் என்பது நிகழ சாத்தியமில்லாதது. ஆரோக்கியமானவர் கீழே விழுந்தால் அவரே உறுதியாக எழுந்து விடுவார் எனினும் எவரேனுமா கைத்தூக்கிவிட்டு உதவினால் அவராக எழுவதைக்காட்டிலும் விரைவாக எழுவார். அப்படித்தான் குணப்படுத்தப்படக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை பயன்படுகிறது. குணமாகக்கூடிய நோய்கள் குணமாவதற்கு சிகிச்சை முக்கியம். குணமாகாத நோய்களுக்கு ஆகத்திறன் வாய்ந்த மருத்துவர் முயன்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஞானமுடைய, தினமும் பயின்ற வில்லாளன் எப்படி குறி தவறாதவனாக திகழ்கிறானோ அப்படி சரியாக சோதித்தறிந்த வைத்தியன் தன் இலக்கை துல்லியமாக எய்துவான். ஆகவே சிகிச்சைக்கும் சிகிச்சையின்மைக்கும் வேறுபாடில்லை என சொல்வது பிழையாகும்.
சரக சம்ஹிதை சூத்திர ஸ்தானம் மஹா சதுஷ்பாத அத்தியாயம்
ஆரோக்கிய நிகேதனம் வங்காள மொழியில் 1953 ல் வெளியானது. 1956 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. த.நா. குமாரஸ்வாமி மொழியாக்கத்தில் 1972-இல் தமிழுக்கு அறிமுகமானது. 1930-களில் த.நா குமாரஸ்வாமி வங்காளத்தை நேரடியாக கற்று ரவீந்திரநாத் தாகூரின் அனுமதி பெற்று அவருடைய ஆக்கங்களை மொழியாக்கம் செய்ததாக அவரைப் பற்றிய குறிப்பு சொல்கிறது. ஒரு மொழியை நேரடியாக கற்று அதிலிருந்து அற்புதமான இலக்கிய ஆக்கங்களை தம் மொழிக்கு கொணர்ந்து வளமை சேர்க்க ஒரு தன்னலமற்ற முனைப்பு வேண்டும். சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா. குமாரஸ்வாமி போன்ற இணையற்ற அர்ப்பணிப்பு கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழ் இலக்கியம் என்றும் நன்றியுடனிருக்கும். தமிழ் சூழலில் இந்த நாவலை அறிமுகப்படுத்தி அதன் மீது கவனத்தை ஏற்படுத்தியதில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ கட்டுரைத்தொகுப்புக்கு பெரும் பங்கு உண்டு. எனக்கும் அக்கட்டுரை வழியாகவே இந்நாவல் அறிமுகம்.
ஆரோக்கிய நிகேதனம் வங்கத்தில் நவாக்ராம் பகுதியில் அருகே உள்ள தேவிபுரய் எனும் கிராமத்தில் இந்திய விடுதலைக்கு பின்பான காலகட்டத்தில் நிகழும் கதை. நாவலின் மையப்பாத்திரமான ஜீவன் மஷாய் அவருடைய தந்தை ஜகத்பந்து மஷாய் மற்றும் ஜீவனின் மகன் வனவிஹாரி என முன்னும் பின்னுமாக மூன்று தலைமுறையினரின் கதையைப் பின்னிச் சொல்கிறது. நோயாளி பிழைப்பானா மாட்டானா என சூது விளையாடி அதில் அடையும் வெற்றி தோல்வியைப் பொறுத்து முடிவுக்கு வரும் சுவாரசியமான ஆளுமை ஜீவன் மஷாய். அவர் பேயை நேரில் கண்டவர். ஜீவனின் தாத்தா தீன பந்து மஷாய் ஆரோக்கிய நிகேதனத்தின் தொடக்கப் புள்ளி. நவாக்ராமத்து ஜமீன்தாரான ராய் சௌத்ரியின் பள்ளியில் ஆசிரியராகவும் அவருடைய கணக்குவழக்குகளையும் கவனிப்பவராகவும் இருந்தவர். ஜமீன்தாரின் மகனுக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டபோது அவரைக்காண வந்த வைத்தியகுலத் திலகரான கிருஷ்ணராஜ் ஸேன் நோயாளியை கவனிக்க அயராத மனம் கொண்ட பரிசாரகர் தேவை என்றதும் தீனபந்து மனமுவந்து அப்பணிக்கு தன்னை ஈந்தார். அவருடைய அயராத ஈடுபாட்டுக்கு பலனாக கிருஷ்ணராஜர் வைத்தியத்தையும் நாடி விஞ்ஞானத்தையும் அவருக்கு அளித்தார். ஆரோக்கிய நிகேதனம் என பெயர் வரக்காரணமான நிகழ்வு தீன பந்துவின் மகன் ஜகத் பந்துவின் காலத்தில் நிகழ்கிறது. ‘லாபானாம் ஷ்ரேஷ்டம் ஆரோக்கியம்’ (தோராயமாக health is wealth) எனும் மகாபாரத மேற்கோளை நோயிலிருந்து மீண்டவர் எழுதிச்செல்கிறார். அதுவே ஜீவன் மஷாய் காலத்தில் ஆரோக்கிய நிகேதனம் எனும் பெயர்ப் பலகையாக பரிணாமம் கொள்கிறது. தீனபந்து காலத்திலிருந்து மெல்ல ஏறி ஜகத்பந்து காலத்தில் உச்சம் பெற்று ஜீவன் மஷாயின் காலத்தில் இறங்கி அவருடைய மகன் வனவிஹாரியின் மரணத்தின் வழியாக ஆரோக்கிய நிகேதனத்தின் சிதைவின் கதையைச் சொல்கிறார். நாவல் தொடங்கும்போதிருக்கும் விவரனைகள் வழியாக இந்த சிதைவின் சித்திரம் துலங்கி வருகிறது. இந்த சிதைவு ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட சிதைவு என்பதை விட ஒரு மருத்துவமுறையின், ஒரு பண்பாட்டின் சிதைவு என்பதே நாவலின் மையம். ஆனால் நாவல் முடியும்போது மீண்டும் ஒரு எழுச்சியைக் காட்டி தொடர்ச்சியைச் சுட்டி செவ்விலக்கியத்தன்மையுடன் நிறைவடைகிறது.
நாவல் இரண்டு தளங்களைக் கொண்டது. ஒன்று மரணம் பற்றிய எப்போதைக்குமான கேள்விகளை மருத்துவனின் கோணத்திலிருந்து ஆராய்கிறது. இரண்டாவதாக ஒரு வரலாற்று காலகட்டத்தில் இரு பண்பாடுகளின் மோதலையும், ஊடுபாவையும், அவற்றின் சிக்கல்களையும், எல்லைகளையும் நுட்பமாக பதிவு செய்கிறது. தான் சந்திக்கும் நோயாளிகள் மற்றும் பிற மருத்துவர்களுடான ஊடாட்டங்களையும் அதையொட்டிய தனது மனவோட்டங்களையும் பதிவு செய்து வாழ்க்கையின் சாரத்தைத் தேடும் ஒரு வைத்தியனின் நாட்குறிப்பு என்று கூட இந்நாவலை சொல்லலாம். நாவலில் நோயாளிகள் மருத்துவர்கள் என இரண்டே விதமான கதைமாந்தர்கள் தான்.
நாவல் முழுக்க விதவிதமான மரணங்கள் விரவிக்கிடக்கின்றன. பச்சிளம் குழந்தை கொதிக்கும் பால் விழுந்து மரிக்கிறது. மரணிக்க வேண்டிய வயதிலும் உயிரிச்சையை கைவிடாது அவதிக்குள்ளாகும் மதியின் பாட்டி. கட்டுடல் கொண்ட ரானா பாடாக் யக்ஷ்ம ரோகத்திலும் திட சித்தத்துடன் மரிக்கிறான். அவனுடைய கிளைக்கதை தனி நாவலுக்குரிய காவியத்தன்மை கொண்டது. கலவரத்தில் மாட்டிக்கொண்ட அனாதைப்பெண்ணுக்கு வாழ்வளித்து நோயை பெற்று கொண்டு, அவர்களின் பெண் குழந்தையை நவக்ராமத்து லட்சியவாதத்தின் முகமான கிஷோரிடம் ஒப்படைத்துவதட்டு, அவளும் மரித்து அவனும் மரிக்கிறான். ஒடியோடி உழைத்த ரத்தன் பாபுவின் மகன் விபின் விடாப்பிடியாக உயிரை பற்றிக்கொள்கிறான் ஆனால் அவனும் மரிக்கிறான். மரிப்பதற்கு முன் தந்தையை தவிக்கவிட்டு மரிப்பதற்காக குற்ற உணர்வு கொள்கிறான். ‘ஒரு விரோதி உங்கள் மகனாக பிறந்துவிட்டேன்’ என வருந்துகிறான். விரோதி மகனாக பிறப்பது பற்றிய ஒரு சிறு விளக்கத்தை தாராசங்கர் அளிக்கிறார். “இந்த நாட்டில் ஒரு பழைய நம்பிக்கை உண்டு: முற்பிறவியின் கொடிய பகைவன் மறுபிறவியில் பிள்ளையாகப் பிறப்பான். பெரியவனாவான், பெற்றோர் மனத்தில் என்ன ஆசையெல்லாமோ எழுப்புவான், அப்புறம் திடுமென அவர்கள் பேரதிர்ச்சி அடைய இறந்து போவான்.” இந்த வரி பல தளங்களை திறந்துவிட்டன. தந்தையிருக்க மகன் அகாலத்தில் மரிக்கும் துயரத்தை வேறெப்படி வகுக்க முடியும்? எனக்கு என் ‘வாசுதேவன்’ கதை நாயகனும் இன்னும் பலரும் கண்முன் வந்து சென்றார்கள். அவன் மரணத்திற்கு அவனுடைய ராஜசிக இயல்பே காரணமாகிறது. மதியின் ஆரோக்கியமான மூத்த மகன் மலேரியாவில் சட்டென மரிக்கிறான். பண்ணிரண்டு வயதில் இரு குழந்தைகளுக்குத் தாயான நிஷி டாகரூனின் மருமகள் மரிக்கிறாள். தனது நோய்க்கான காரணத்தை நன்கறிந்தும் அதை தவிர்க்க முடியாமல் பலியாகிறான் தாந்து. அவனால் எத்தனை முயன்றும் அவனை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஜீவன் மரணத்தை மனிதனின் நெருங்கிய சகாவாக காண்கிறார். “பிறந்தவுடனேயே சாவும் நட்பு கொண்டு தொடர்கிறது. நாளுக்கு நாள் இந்த இணக்கம் அதிகரிக்கிறது.” மரணம் எப்போதும் உடன் வருவது. நண்பனே எதிரியாவான் என்பதைப்போல் நமது பிடிப்பே மரணத்தைக் கொணர்வது என்கிறார். மரணம் நெருங்கி வரும்போது எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேவி அழுகிறான் ஜீவனின் மகன் வனவிஹாரி. நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான பகுதி என்பது வனவிஹாரியின் வாழ்வும் மரணமும் விவரிக்கப்படும் பகுதி. சொந்த மகனின் நலிவை உணர்ந்து அவன் மரணத்தை மூன்று மாதங்களுக்கு முன்னரே ஜீவன் முன் உணர்கிறார். வனவிஹாரி பல வகையிலும் எனக்கு காந்தியின் மூத்த மகன் ஹரிலாலை நினைவுபடுத்தியது. மஷாய் வம்சத்து சிகிச்சை அறிவு கொஞ்சமும் இல்லாதவன். சீரழியும் பழக்கங்களில் சிக்கி அழிகிறான். ஜீவனுக்கு லாகிரி வஸ்துக்கள் பழக்கமில்லை. “நோயைத் தீர்ப்பதொன்றே அவர் கொண்ட போதை. நோயாளியைக் காப்பாற்றுவதொன்றே அவரது குறிக்கோள்.” என வாழ்ந்தவர். ஜீவனின் இளமைக்காலம் போலவே வனவிஹாரியும் கட்டற்றவனாக இருந்தான். ஆனால் அவர் மீண்டு நிலைநின்றதைப்போல அவனால் நிலைபெற முடியவில்லை. தன்னை அழித்து மரணத்தைத் தருவித்துக்கொண்டவன். நாடி நோக்கி சசாங்கனின் மரணத்தை முன் உணர்ந்து அவனுடைய மனைவி அபயாவை அழைத்து பரிவுடன் அன்னமிட முயல்கிறார. ஆனால் அபயா உங்கள் மருமகளுக்கும் இப்படித்தான் செய்வீர்களா என சாபமிடுகிறாள். வனவிஹாரியின் மரணத்துக்கு அந்த சாபம் ஒரு காரணமோ எனும் உறுத்தல் அவருக்கு இருக்கிறது. ஆனால் விதவையாக உடல்நலம் குன்றிய அவளை ஜீவ தத்தரே காக்கிறார். வனவிஹாரி உடல்நிலை நலிவுற்றதாக அறிந்தபோது காளியிடம் நேர்ந்து கொண்டதாக சொல்கிறாள். அவள் வீட்டு சாவித்திரி விரதத்திற்கு செல்ல அவருக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த கனிவே அவருடைய மரணத்தை தருவிக்கும் பலவீனமான திறவுகோளாகிறது.
முதிய கணவனைச் சகிக்காமல் எப்போதும் நோயிலேயே இருப்பதாக பாவிக்கும் பரான் கானின் இளம் மனைவி அரளி விதைகளை உண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அப்போது ஜீவன் ‘இந்தப் பெண்ணைப்போல் தாமும் விஷம் தின்றால், அப்போது பிழைத்திருக்க முடியுமா? இதை நாடியின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியாதே!’ என எண்ணுகிறார். மரணத்தின் பூடகம், தர்க்கமின்மை, வரம்பின்மை அறைகிறது. நாவலுக்குள் மரண தேவதை பற்றிய தொன்மக்கதை சொல்லப்படுகிறது. செம்பட்டை தலைமயிர் கொண்ட கோர முகத்தவளுக்கு கண் தெரியாது, காது கேட்காது. நோய்கள் எல்லாம் அவளுடைய பிள்ளைகள். காலத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவள் அவள். ஜீவன் மரணத்திற்குள் அவளை நேருக்கு நேராக சந்தித்து ஒவ்வொரு புலனிலும் உணர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். நாடியில் அவளுடைய காலடியோசையை அணுகி வருவதும் விலகிச் செல்வதுமாக அவரால் கேட்க முடிந்தது. ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள யக்ஷ்மன் சார்ந்த தேய்பிறை சந்திரன், ஈசனின் கோபத்தால் தோன்றும் காய்ச்சல் போன்ற தொன்மங்களை நாவல் ஆங்காங்கு பயன்படுத்துகிறது. உரிய நேரத்தில் மரணத்தை முழுதாக ஏற்கும் சண்டீதலா கோயில் மஹாந்து மரணத்தருவாயில் அபிமன்யூ மேடை நாடகத்தில் அழுவதைப்பற்றி கேள்வி கேட்கிறார். திட மனதுடன் மரணத்தை எதிர்கொள்கிறார். நாவலில் மரணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொள்கிறார்கள். இறுதியாக ஜீவனும் அவர் விரும்பியபடி தெளிந்த மனதுடன் மரணத்தைச் சந்திக்கிறார். குடுகுடு கிழவியாக மஞ்சரியை மீண்டும் சந்தித்து, ஈர்ப்பும் மாயையும் குலைந்து, அவள் நாடியைக்கண்டு மரண செய்தியை அறிந்த பிறகே அவர் மரணமடைகிறார். ஒட்டுமொத்தமாக நாவலில் மரணத்தைக் கண்டு அஞ்சி அரற்றுபவர்கள், மரணத்தை துணிவுடன் எதிர்கொண்டவர்கள் என இரண்டுவிதமான கதை மாந்தர்களை வகுத்துக்கொள்ள முடியும். இவை இரண்டும் இல்லாமல் நாவலில் வரும் அகால மரணங்கள் மனதை வருத்துபவை. தனது மூத்த மகளின் சாயலில் உள்ள சிறுமியின் சடலத்தைக் கூரு போட தயங்கி விலகுகிறார் ஜீவன். உடல் நலிந்து மரணிப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் அதற்குப் பொறுப்பாகிறார்கள். மரணத்தை அவர்களே அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் எந்த பிழையும் புரியாத இவர்களின் மரணங்கள் மன ஓர்மையை பாதிப்பவை. மரணிப்பவர்கள் அளவுக்கே பிழைப்பவர்களும் உள்ளார்கள். அதஸியின் சிறு வயது பாலகன் மறலியின் பிடியிலிருந்து வழுவுவது பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது. பிரத்யோத் டாக்டரின் மனைவி மஞ்சு, சசாங்கனின் மனைவி அபயா, மரணப்படுக்கையில் இருந்த ராம் ஹரி என சிலரை நோயிலிருந்து மீண்டவர்கள் என சொல்ல முடியும்.
ஜகத்பந்து முழுக்க கவிராஜர் மரபில் தனது தந்தையிடம் ஆயுர்வேதம் பயின்றவர். ஜீவனுக்கு கல்லூரியில் சேர்ந்து டாக்டராக பாஸ் செய்ய வேண்டும் எனும் அவா இருந்தது. ‘என்ன வயசானாலும் அனுபவம் இராது போனாலும் ‘டிகிரி’ இருந்தது. இந்த ‘டிகிரி’ மீதுதான் அவர்களுடைய செல்வாக்கும் புகழும் நின்றன.’ என்பதை ஜீவன் அறிந்திருந்தார். ஆனால் அந்த கல்வி தடைபட்டுப் போகிறது. நவீன மருத்துவத்தை தன்னிச்சையாகப் பயின்று ஒரு யோகியைப்போல் திகழ்ந்த ரங்லால் டாக்டரிடம் நவீன மருத்துவத்தை பயில்கிறார். ஆற்றோரம் போகும் பிணங்களை அறுத்து உடற்கூறு கற்கிறார் ரங்லால் டாக்டர். இது சுசுருத சம்ஹிதையில் ஆய்வுக்கு பிணங்களை பதப்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பகுதி. ரங்லால் ஒரு கட்டத்திற்கு மேல் வைத்தியத்தை கைவிடுகிறார். அதேபோலத்தான் சக்ரதாரி மருத்துவரும். நவீன மருத்துவத்தைப் பயின்றவர்களும் ஒரு வகையில் பண்டையகாலத்து வைத்தியர்களின் வழிமுறையையொட்டியே வாழ்கிறார்கள். ஆயுர்வேதியான ஜகத்பந்து மற்றும் சுயமாக நவீன மருத்துவத்தைக் கற்ற ரங்லால் டாக்டர் என இருவரின் கூறுகளும் ஜீவனிடம் உண்டு. இருவருக்கும் இடையேயான வேறுபாடைச் சொல்லும்போது ” ஜகத் மஷாயின் போதனையில் அடிக்கடி ‘அதிர்ஷ்டம்’, ‘ஊழ்வினை’ (நியதி), ‘கடவுள்’ இவை வரும். ரோக விஞ்ஞானத்தைப் பற்றிய விஷயத்தோடு அத்யாத்மிக பாவம் நிரம்பிய வியாக்கியானமாகவும் இருக்கும். அவருடைய விளக்கத்தில் பொருளை மீறிய ஒரு பாவம் இருக்கும். ரங்லால் டாக்டரின் விளக்கத்தில் ‘கடவுள்’ வரமாட்டார்; ‘அதிர்ஷ்டம்’ வராது; வெறும் வறட்டு விஷயம் போல் இருக்கும். புத்திக்கே புலனாகக்கூடியது. அதில் பாவமோ உணர்ச்சியின் வேகமோ துளியாகிலும் இருக்காது.” என ஒப்பிட்டு நோக்குகிறார் ஜீவன். ரங்கலால் டாக்டர் நோயாளியின் முன் மரணத்தை நினைவுபடுத்தக்கூடிய எந்தப் பேச்சையுமே பேசமாட்டார். ‘Medicine can cure disease but cannot prevent death’ (மருந்து நோயைப் போக்கும் – ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது) என்றதும் நீளக்கால் வைத்து நோயாளியின் வீட்டிலிருந்து போய்விடுவார். ஜகத் பந்துவோ ஜீவன் மஷாயோ அப்படியல்ல. வயதானவர்கள் என்றால் மரணத்தை அறிவித்துவிடுவார்கள். இளையவர்கள் என்றால் நாசூக்காக உணர்த்திவிடுவார்கள். ரங்லால் டாக்டரும் ஜகத் பந்துவும் நாவல் முழுக்க மேற்கோள்கள் வழியாக இருபெரும் ஆளுமைகளாக துலங்கி வருகிறார்கள். ரங்லாலுக்கு கடவுள் நம்பிக்கை சிக்கலில்லை ஆனால் அந்த அனுபவத்தில் ஆழாமல் பக்தியை ஒரு பேரமாக காண்பதைத்தான் ஏற்க மறுக்கிறார். ‘ஹரி நாமம் சொல்லியே தொற்று நோயை துரத்துபவன் தானே நீ ‘ என ஜீவனை கேலி செய்வார்.
ஜீவன் மஷாயின் காலத்தில் ஒன்றிரண்டாக நவீன மருத்துவத்தில் பாஸ் செய்த மருத்துவர்கள் வரத்தொடங்குகிறார்கள். சாரு பாபு, ஹரேன் டாக்டர் மற்றும் பிரத்யோத் டாக்டர் ஆகிய மூவரும் இளம் மருத்துவர்கள். ஹரேன் அதே ஊரிலேயே பிறந்து வளர்ந்து மருத்துவம் பயின்றவர். இளமையில் ஜீவனின் மருத்துவத்தால் பயனடைந்தவர் என்பதால் பிற இருவருக்கும் ஜீவனிடம் இருக்கும் எதிர்மறை கோணம் அவருக்கு கிடையாது. ஜீவன் மஷாயின் எதிர் புள்ளி என பிரத்யோத் டாக்டரைச் சொல்லலாம். எதிர்புள்ளி என்பதைவிட ஜீவன் அடைய முயன்ற லட்சிய வடிவம். ஜீவன் கடந்தகாலம் என்றால் பிரத்யோத் வருங்காலம். தான் மருத்துவம் பாஸ் செய்யவில்லை எனும் வருத்தம் பிரத்யோத்தை பற்றி எண்ணும்போது அவருக்கு ஏற்படுகிறது. ஜீவன் மஷாய்க்கும் அவருடைய மனைவி ஆர்த்தர் பௌக்கும் இடையேயான உறவு, ஜீவன் அவளை மரணத்தின் உருவமாக காணும் அளவிற்கு, உரசல்கள் நிரம்பியது. பிரத்யோதும் அவருடைய மனைவி மஞ்சுவும் இணக்கமாக ஆதர்ச தம்பதிகளாக வாழ்பவர்கள். அதுவும் அவர் காதலித்த மஞ்சரியின் பேத்தி மஞ்சுவை மணந்ததன் வழியாக ஜீவனின் இளமையான லட்சிய வடிவம் என பிரத்யோத்தைக் கொள்ள முடியும். பிரத்யோத் ஜீவனை போன்றே நோய்களுக்கு எதிராக முழுத்திறமையும் கொண்டு போராடக்கூடிய திறமையும் துணிவும் மிக்கவர். ஜீவன் மஷாய்க்கு அவர் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு ஆனால் பிரத்யோத்துக்கு மஷாய் ஒரு க்வாக். நாடியில் மரணத்தை முன்னறிவிக்கும் நாகரீகமற்றவர். தனிப்பட்ட காழ்ப்போ பகையோ இல்லை. அவருடைய வைத்திய முறையையே நிராகரிக்கிறார் என்பதே அவரை வருத்துகிறது. ஜீவன் மஷாய் சசிக்கு அறிவுரை சொல்கிறார் “நோயுற்றவர் இளமையானவரா. வயதானவரா? வயதானால் ஒருவிதமாகத் தீர்த்துவிடேன் – நீ செய்யும் இந்தச் சிகிச்சைக் குற்றத்தைவிட அவர் இன்னும் உயிர் வைத்திருப்பது பெரிய குற்றமாகுமே!…” என. பிரத்யோத்தால் ஒருபோதும் இந்த நிலையை எட்ட முடியாது. ஜகத்பந்து ஜீவனிடம் “உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு என்று சொல்வது வெறும் பேச்சுப் புரட்டல்ல. அதற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதன்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங் கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான்.” என நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பையும் முரண்பாடையும் சுட்டிக்காட்டுகிறார். பிரத்யோத்தின் நம்பிக்கை ஆயுட்காலத்தை நீட்டிப்பதே முக்கிய நோக்கம் என நம்புவதாகும்.
பிரத்யோத்துக்கு ஜீவன் ‘க்வாக்’, ஜீவனுக்கு அவரிடம் கம்பவுண்டராக இருந்த சசி டாக்டர் ‘க்வாக்’. சசி அதிரடியாக சிகிச்சை செய்பவன். கெரோசினை களிம்புடன் சேர்த்து நெஞ்சில் தடவி சளியை அகற்றுபவன். இந்த வரிசைமுறையை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் இந்த வரிசை அப்படியே உள்ளது.
ரானா பாடக் பிடிவாதமாக ஆயுர்வேதத்தை தேர்வு செய்யும் காரணமாக நவீன மருத்துவர்கள் மீது வைக்கும் விமர்சனமும் பொருந்தி வருவதுதான். “அந்த டாக்டர்களின் மருந்து சாப்பிட மிகக் கசப்பாகவே இருக்கும். அத்துடன் மஷாய், அவர்கள் கடாங்மடாங்கென்று பேசுபவர்கள் சிடுமூஞ்சிகள்; எங்களையெல்லாம் மனிதர்களாகவே நினைக்காதவர்கள். அவர்களுக்குக் கண்ணெல்லாம் பணத்தின் மீதுதான். ஏராளமாகப் ‘பீஸ்’ வாங்குகிறார்கள். நோயாளிக்கு அனுசரணையாக நீங்கள் பேசிப் பழகுவது போல் இருக்கமாட்டார்கள்.” சார்லஸ் லெஸ்லி ‘Asian medical systems- a comparitive study’ முன்னுரையில் ‘குடியானவர்களும் பழங்குடிகளும், நகர வாசிகளும் காஸ்மோபாலிடன் மருத்துவத்தின் தொழில்நுட்பத்தை மதிக்கிறார்கள், அதன் புதிய மருந்துகளுக்கு பழகிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரம் நாட்டுப்புறத்தவர்களையும் அடித்தட்டு மக்களையும் மரியாதை குறைவாக நடத்தும் பெரும்பாலான மருத்துவர்களையும் மருத்துவ ஊழியர்களையும் வெறுக்கிறார்கள். இத்தகைய நிபுணர்கள் அப்பிரதேசத்திற்கு அந்நியர்களாக இருக்கும்போது அது வர்க்க போரட்டமாகவே மாறி விடுகிறது.’ என எழுதுகிறார்.
ஆனால் ஒற்றைப்படையாக நவீன அறிவியலையும் மருத்துவத்தையும் நிராகரிக்கவில்லை என்பதே இந்நாவலின் தனித்துவம். ஜீவனிடம் ரங்லால் அன்றைய பெரும்பான்மை நாட்டு வைத்தியர்கள் பற்றி சொல்லும் குற்றச்சாட்டு இன்றும் அப்படியே பொருந்துகிறது. “ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டு வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர்த்துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?” காலரா, மலேரியா, காலா அசார் போன்ற தொற்று நோய்களில் முந்தைய மருத்துவ முறையைக்காட்டிலும் புதிய மருந்துகள் கண்கூடாக பலனளிப்பதை நாவல் பதிவு செய்கிறது. ரங்லால் டாக்டர் கூற்றாக வரும் இவ்வரிகள் இன்றளவும் பொருந்தக்கூடியவை. “கவிராஜி (ஆயுர்வேத) வைத்தியத்தில் நான் எதுவுமே இல்லையென்று கூற வரவில்லை. ஆனால் நம் ஜாதியினர் பின்தங்குவது போல், நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடை போடவில்லையே! இந்தச் சாஸ்திரங்களைப் படைத்த காலத்தில் கெமிஸ்ட்ரி (ரசாயனம்) இன்று இருப்பதுபோல் முன்னேற்றமடையவில்லை. அத்துடன், இன்னும் எத்தனையோ கண்டுபிடிக்க வேண்டுவன உள்ளன. இப்போது பாரேன், இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்துவிடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன. இதைத் தவிர ஆயுர்வேதம் ‘ஆகந்துஜ வியாதி’ என்று எங்கே நின்றுவிடுகிறதோ அங்கே ஐரோப்பிய சிகிச்சை முறை ‘மைக்ராஸ்கோப்’பின் உதவியால், ஜீவாணுக்களைக் கண்டுபிடித்து இந்த ‘அனுமானம்’, ‘உபசர்க்கம்’ இவற்றின் எல்லையைத் தாண்டி எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கிறது!” நவீன மருத்துவம் தவறவிடக்கூடிய நாட்பட்ட நோய்களை ஜீவன் சிகிச்சையளித்து மீட்கிறார். அவற்றை பழைய ரோகங்கள் என சொல்கிறார். ரங்லாலிடமிருந்து அவர் பெற்ற அறிவுதான் ஜீவன் மஷாயை தம் மனத்துள் இப்படி எண்ண வைத்தது. “மரணத்துடன் மனிதனின் ஆற்றலுக்கும் சேர்ந்து தம் வணக்கத்தைச் செலுத்தினார். மரணத்தை வென்று வரவே முடியாது; ஆனால், மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும்! புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைப் புகழத்தான் வேண்டும்! அவை வாழ்க! ஐரோப்பிய மாபெரும் விஞ்ஞானிகளுக்குத் தம் சிரத்தைத் தாழ்த்தினார். “இன்று வேதத்தின் ரகசியத்தைக் கண்டவர் நீங்களே” என்றே சொல்லுவார்.” ஜீவனையும் அவருடைய முறைகளையும் ஏற்காத பிரத்யோத் மதியின் பாட்டியை அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வைத்து வாழ்நாளை நீட்டித்ததை தவறு என உணர்கிறான். தன் மனைவி மஞ்சுவின் உடல்நிலையை அறிய அவருடைய உதவியை நாடுகிறான். நாவலின் இறுதியில் பிரத்யோத் ஜீவனிடம் தனக்கு நாடி விஞ்ஞானம் கற்றுக்கொள்ள ஆவல் என வெளிப்படுத்துகிறான். கடந்த காலத்து பாரம்பரிய மருத்துவ அறிவின் சாரமான பகுதிகள் எதிர்காலத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பே தாராசங்கர் கண்ட கனவு, இந்நாவலின் தரிசனம். இந்த ஒருங்கிணைப்பே இன்று பி எம் ஹெக்டேயும், எம்.எஸ். வலியாத்தானும், இல. மகாதேவனும், கு. சிவராமனும் திருநாராயணனும் கனவு காண்பது. ஆனால் இன்றுவரை நிகழவில்லை…
கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள மேற்கோளின் ஒரு பகுதியை எனது ஆசிரியர் டாக்டர் இல. மகாதேவன் அவருடைய திரிதோஷ மெய்ஞான விளக்கம் நூலின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பார். காலங்காலமாக வைத்தியனுக்கு இருக்கும் அறக்குழப்பம். வைத்தியன் வேறு எவரைக்காட்டிலும் மரணத்தை நெருங்கி அறிந்தவன். எந்த மருத்துவரும் அவர் எதிர்கொண்ட முதல் மருத்துவ மரணத்தை மறக்க மாட்டார். ‘வைத்தியன் குணமாக சாத்தியமுள்ள நோயாளியின் மீது கருணையுடன் இருக்க வேண்டும். உறுதியாக மரிப்பவனிடமிருந்து மனதளவில் விலகியிருக்க வேண்டும்.’ இந்த அறிவுரையின் பொருளை புரிந்துகொள்ள மரணங்களை கண்ணுற்று அலைகழியும் மனம் வேண்டும்.
முதன்மையாக மருத்துவனின்/ மருத்துவத்தின் எல்லை என்ன? அவன் எங்கு பங்காற்ற முடியும் எங்கு விலகி நிற்க வேண்டும்? எந்த அளவுக்கு அவன் உயிர்களுக்கு பொறுப்பு? போன்ற கேள்விகளை எழுப்பும் ஆக்கம். அவ்வகையில் எனக்கு மிக அணுக்கமான படைப்பும் கூட. கனிந்த மருத்துவ மெய்ஞானியான ஜீவனின் தந்தை ஜகத்பந்து மஷாய் இளம் ஜீவனுக்கு சொல்லும் அறிவுரை இது. “அப்பனே, எந்த வைத்தியன் நாடி பார்ப்பதில் கைதேர்ந்தவனாகின்றானோ. அவனுடன் மரண தேவதைகூடச் சமாதானம் செய்துகொள்ளும். மரணத்துக்கு எந்த இடத்தில் செயலாற்றப் பூரண உரிமையோ அங்கு அது, ‘எனக்குக் குறுக்கிடாதே – வழி விட்டு நில்! இது என் அதிகாரத்துக்குள் வந்துவிட்ட விஷயம்’ என்று சொல்லும். ஆனால் எங்கு அதற்கு உள்ளே புக உரிமை இல்லையோ, அங்கு தப்பித்தவறி அது தலையை நீட்டினால், ‘தேவி, இன்னும் நீ வரவேண்டிய காலம் இதுவல்ல; நீ திரும்பிப் போகலாம்’ என்று சொல்லக்கூடியவன் உண்மை வைத்தியன்.’
இந்திய புராண கதைகளை கவனித்து வாசிக்கும் போது ஒரு சுவாரசியமான கண்டடைதல் எனக்குக் கிட்டியது. அசுரர்கள் எப்போதும் அறப்பிறழ்வுக்காக இறைவனால் கொல்லப்பட்டார்கள். அறம் என்பதோர் ஒழுங்கு. அறநெறி பிறழாத மகாபலியும் கூட கொல்லப்பட்டார். புத்தரை திருமாலின் அவதாரமாக முன்வைக்கும்போது அசுர அரசன் அறம் பிறழாமல் இருந்ததால் அவனுக்கு நாத்திக பிரச்சாரம் மூலம் அறம் பிறழச்செய்து அழிக்கவே புத்தனாக அவதரித்தார் என்றொரு கதையும் உண்டு. இந்திரனின் கதைகளை கேட்கும்போது இயல்பாக தோன்றும் அவனைவிடவா அசுரர்கள் நெறி பிறந்தவர்கள் என. அப்படியானால் அசுரர்கள் பிறழ்ந்த அறம் எது. அவர்கள் மரணம் எனும் உயர்குலத்து இயல்பை பிறழ்ந்தார்கள். தூலமான உடலோடு அழிவற்றவர்களாக ஆக முனைந்தார்கள். மரணமின்மையை நாடுவதே அவர்களின் அறப்பிறழ்வு. அது பிரபஞ்சமளாவிய பேரொழுங்கை குலைப்பதாகும். நாம் நோய் கிருமிகளுக்கு எதிராக போராடினோம், நோய்கள் அதன் காரணிகளைத் தொடர்ந்து உய்த்து டி என் ஏ வரை சென்றுவிட்டோம். இனியும் மறைக்க ஓன்றுமில்லை நாம் முழு மூச்சோடு அமரத்தன்மையை எய்தவே விழைகிறோம். நம் தலைமுறையில் சாத்தியமில்லாமல் போகலாம் ஆனால் நம் வருங்காலம் அதை நோக்கிய பயணம் தான். இந்த புத்தொளி காலகட்டத்திலிருந்து நாம் மெல்ல மெல்ல ஓட்டைகளை அடைத்தபடி பயணிக்கிறோம். ஒரு வகையில் நம் நவீன அறிவியல் அசுரத்தன்மை உடையதுதான். ஜீவன் மஷாயின் குரு ரங்லால் சொல்லும் வரி நாவலில் ஒன்றுண்டு. ‘மனிதன் எப்போதும் உதவியை எதிர்நோக்கும் பிராணி.’ அவன் எப்போதும் மரணத்தை அஞ்சுபவன். மரணத்தை வெல்ல அசுரரின் வழி வரம்கோரி திறன் பெற்று வாழ்வாங்கு வாழ்வது என்றால் அது வெகு சிலருக்கே சாத்தியமாகக்கூடிய வழி. அதற்கு மாற்றாக சற்றே எளிய, அனைவருக்கும் சாத்தியமான வழியே வேதாந்தம். அழிவற்ற அங்கீகரிக்கப்பட்ட பாதை. வேதாந்தத்தில் உடலின் அழிவை ஏற்று சாரமான ஆன்மாவின் அழிவின்மையை அனுபவமாக உணர வேண்டும். ஜீவன் எண்ணுகிறார் ‘மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆகவேண்டும் என்ற பேருண்மைமிக்க) இப்புவியில் இப்படி அதை நினைத்து வருந்தியோ, சஞ்சலப்பட்டோ என்ன பயன்?’ எனும் ஏற்பு நிலை அடையப்பெற வேண்டிய பேறு. ‘யாவத் கண்டகதாம் பிராணாம் கச்சதி தாவத் கிரியாம் குர்வத்’ என்கிறார் சரகர். அதாவது கழுத்திலிருந்து பிராணன் விடைபெறும் இறுதி கணம் வரை சிகிச்சை செய் என்பதே வைத்தியனுக்கு ஆயுர்வேதம் அளிக்கும் அறிவுரை. ஆரோக்கிய நிகேதனத்தின் மரணம் பற்றிய பார்வை ஆயுர்வேதத்தின் பார்வையாக கொண்டுவிட முடியுமா என சொல்வதற்கில்லை. சாங்கிய தரிசனமே ஆயுர்வேதத்தின் மீது பெரும் தாக்கத்தை கோட்பாட்டளவில் நிகழ்த்தியுள்ளது. வேதாந்தம் அல்ல. ஆரோக்கிய நிகேதனம் அவ்வகையில் வேதாந்த தரிசனத்தை ஆயுர்வேதத்தோடு இணைத்து நோக்குகிறது. மரணத்தை எதிர்கொள்ளும் திண்மையை அடையும் தயாரிப்பே ஆன்மீகதளத்தின் நோக்கம் என ஒரு கோணத்தில் வரையறை செய்ய முடியும். மறுபிறப்பு எனும் நம்பிக்கை வழியாக மரண அச்சத்தை கடந்து, மரணமின்மையை இந்திய ஆன்மீகம் முன்வைக்கிறது. நவீன மருத்துவத்தில் மறுபிறப்புக்கு இடமில்லை. ஆகவே மரணமற்ற வாழ்வை இலக்காக கொள்கிறது. நாவலில் ரங்லால் டாக்டர் ஜீவனிடம் “மனிதன் இறந்துவிட்டால் நாம் வேறு எந்தத் திசையும் திரும்புவதில்லை. புரிகிறதா? இந்தத் தேகக் கூட்டிலிருந்து வெளியேறும் அந்த உயிர்ப்புள் எப்படி இறகுகளைச் சடசடத்து வெளியேறி எங்குச் செல்கிறது என்று நாம் ஆராய முயல்வதில்லை.” இடையிடையே சிரித்து, இந்தப் பிராணன் மட்டும் உண்மையில் பறந்து போகும் ஒரு புள்ளானால், அதைத் துப்பாக்கிக் கொண்டு சுட்டு வீழ்த்த ஆள் வந்துவிடுவான். அந்த மாமிசத்தையும் புசிப்பானே. அப்படி நிகழுமாயின் மறுபிறவி முதலியனவெல்லாம் இல்லாமல் போய்விடுமே!” என சொல்கிறார். புலனனுபவம் என்பதையே ஒரே அறிதல் முறையாக நவீன மருத்துவம் கொண்டிருக்கிறது.
யாக்கை நிலையாமை என்பதொன்றும் புதிய சிக்கலில்லை. வகுத்துக்கொள்ள முடியாதவற்றின், தர்க்கமின்மையின் மீது எப்போதும் நாம் அச்சத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். ஆன்மீகமும் அறிவியலும் மரணத்தை தமக்கே உரிய வழியில் தர்க்கப்படுத்த முயல்கின்றன அதன் வழியாக அச்சத்தை கடக்க முயல்கின்றன. மரபான யாக்கை நிலையாமைக்கும் நவீனத்துவ – இருத்தலியல் யாக்கை நிலையாமைக்கும் ஒரு தொடர்ச்சியும் தனித்தன்மையும் உண்டு. மரபில் முன் சொன்னது போல் மரணத்தை இயல்பாக காணச்சொல்கிறது. நவீனத்துவமே இந்த இயல்பான ஏற்பிற்கு எதிராக மனித குலம் பிடிக்கும் முரண்டு என சொல்லலாம். இந்த கோணத்திலிருந்து ஆரோக்கிய நிகேதனத்தை அணுகும் போது சரியாக மரபான மனத்திற்கும் நவீன மனதிற்கும் இடையிலான சங்கமப் புள்ளியைத் தொட்டெழுப்ப முயன்ற முக்கியமான ஆக்கம் என சொல்லலாம். கவிஞர் சபரிநாதன் பாரதியைப் பற்றி எழுதிய கட்டுரையில் பாரதி புலவர்/ கவிராயர் மரபில் நின்னு நவீனத்தை நோக்கியவர் எனச்சொல்கிறார். அதே போன்ற ஒரு வரையறையை இந்நாவலுக்கும் அளிக்க முடியும். மரணமின்மை எனும் நவீன மனிதனின் ரகசிய விழைவை உய்த்துணர்ந்து எச்சரிக்கும் மரபின் குரல் இந்நாவல் என சொல்ல முடியும். மருத்துவத்தின் முதல் சிகிச்சை ஏன் சிகிச்சை அளிக்க வேண்டும் எனும் பதிலில் இருந்து தொடங்குகிறது. ஒருவர் ஏன் வாழ வேண்டும்? ஆயுர்வேதம் தெளிவாக அறம் பொருள் இன்பம் வீடுபேறு என ஒரு வரிசையை முன்வைக்கிறது. இறுதி இலக்கான வீடுபேறை அடைய ஆரோக்கியம் முக்கியம். இந்த இணைப்பே மரணத்தை ஆயுர்வேதம் காணும் நோக்கை தீர்மானிக்கிறது. இறுதி இலக்கான வீடுபேறை அடைய இவ்வுடல் தடையாக இருக்கும் போது உடலை விட்டு வேறொரு உடலில் தொடர்வதே அந்த இறுதி இலக்கிற்கு அருகே கொண்டு செல்லும் எனும் நம்பிக்கை மரணத்தை விடிவாகக் காண அனுமதிக்கிறது. நவீன மருத்துவத்திற்கு இத்தகைய இலக்கு ஏதுமில்லை. ஏன் வாழ வேண்டும் என்றொரு கேள்விக்கு மரணிக்க அச்சம் என்பதைத்தவிர எந்த பதிலையும் அளிக்க முடியாது.
“இந்த வாழ்வில் மரணத்தை விரும்பவே வேண்டியதில்லை. அதற்குப் பயந்து சம்சாரத்தைக் கடித்துக்கொண்டும் இருக்கவேண்டியதில்லை. இரண்டுமே பாபம்.” என்கிறார் ஜீவன். மரணம் ஒரு இயல்பான நிகழ்வாக இருக்கவேண்டுமே தவிர இயக்குவிசையாக அல்ல. ஆரோக்கிய நிகேதனம் ஒரு இந்திய செவ்வியல் ஆக்கம். வாழ்நாள் எல்லாம் பிணக்குகள் இருந்த ஆத்தர் பௌ, மஞ்சரி, பிரத்யோத் என எவருடனும் எந்த பிணக்கும் இல்லாமல் அமைதியுடனும் திடத்துடனும் மரணத்தை எதிர்கொண்டு முழுமையடைகிறார்.
ரங்லால் டாக்டர் மனித குலத்தின் வருங்காலம் குறித்து கண்ட கனவுடன் இந்த கட்டுரையை நிறைவு செய்ய விழைகிறேன். இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் மரணத்தை வெகு அருகில் உணர்ந்தோம். நம்மில் பலருக்கும் அதன் காலடியோசை கேட்டது. மரணத்தை ஏற்று ஆரோக்கியத்தை அடைவது எனும் புள்ளியில் ஜகத் பந்துவும் ரங்லாலும் ஒன்றாகிறார்கள். நவீன மருத்துவத்தின் இலக்கும் ஆயுர்வேதத்தின் குறிக்கோளும் ஒன்றிணைகிறது. “புதுப்புதுக் கருவிகளை உண்டாக்கினான், கண்டுபிடிக்கிறான். அவனுடைய இந்த முயற்சிக்கு ஒரு முடிவில்லை. மரணத்தைத் தடுக்கவே முடியாது; மரணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ரோகத்திலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சகர்களுக்கோ டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைப்போல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை போதும். ஓய்வு வேண்டும். நான் தூங்க வேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ்”