புத்தகங்கள்

Pages

Saturday, February 6, 2021

விஷக் கிணறு & பிற கதைகள்- சரவணன் மாணிக்கவாசகம் வாசிப்பு

விஷக் கிணறு & பிற கதைகள் வாங்க

ஆசிரியர் குறிப்பு:
புனைவு, விமர்சனம், காந்திய எழுத்து, ஆயுர்வேதக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து இயங்கிவரும் இவர் ஒரு தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். காரைக்குடியில் வசிக்கிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு அம்புப்படுக்கைக்கு, யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. Gandhitoday.in இணைதளத்தின் ஆசிரியர். நீலகண்டம் என்ற இவரது ஒரே நாவல் நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல்.இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
லித்தியத்தில் ஐந்து பாகம், ஐந்து கதை சொல்லிகள். லித்தியம் முதிர்ந்த மனப்பிறழ்வுக்கு மட்டுமல்ல இன்னொரு உபயோகமும் உண்டு என்பதற்காக கதை சொல்லப்படவில்லை. இரண்டு நல்லவரும் கூட இணையாது போகும் தண்டவாளங்கள் என இந்தியத் திருமணங்கள்.
சிதல் போன்ற முழுமையான Dystopian storyஐ தமிழில் இதற்குமுன் நான் படிக்கவில்லை. பயத்தை ஏற்படுத்தும் கதை. கரையான்கள் கெட்டகுடியே கெடும் என்ற பழமொழியை மெய்ப்பிக்க வருகின்றன.  செந்தி வந்திருக்காவிட்டால் இப்போதும் சாவித்துளை வழி கரையான் வந்திருக்காது.
களி என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்தக்கதை. இறகுப்பந்து விளையாட்டு போல அகவயமான விளையாட்டு கதையில் நடந்து கொண்டே இருக்கிறது. விளையாட்டு என்றால் தோற்றவர் ஒருவர் ஜெயித்தவர் ஒருவர் உண்டுதானே.
இந்திரமதம் ஆயுர்வேதக் கல்லூரி மாஸ்டரின் கதை. முழுக்க ஆயுர்வேத மருத்துவ நுட்பத்தைச் சொல்லாமல் ஒரு Egoistன் கதையையும் சொல்கிறது.
இயல்வாகை தலைப்பே ஒரு Metaphor. பழைய வைத்திய முறைக்கும் புதிய முறைக்கும் இடையே நடக்கும் போட்டி என்று நினைக்கையில் கதை பாதிவழியில் குறுக்குச்சாலையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. மறதி என்னும் மாமருந்து எத்தனை நிம்மதி தருவது! கருப்பு வெள்ளை மட்டுமே நிறங்கள் என்று அறிந்திருந்த மனம் மஞ்சள் நிறத்தின் குழைவில் மனமாற்றம் அடைகிறது. இவருக்குத் தெரியும் என்பது அல்லிக்குத் தெரியும்.
விஷக்கிணறு மலேசியாவில் ஆரம்பிக்கும் கதை, பின் ஆதியுகம் காலத்தில் ஒரு தொன்மக் கதைக்குச் சென்று, மீண்டும் மலேசியா வந்து பின் லாஸ் அலமோஸில் முடியும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கதை.
முதல் பகுதியில் உண்ணா ஆச்சியின் மரணத்தில் மர்மம். ஒரு வாரம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதும் வாக்குமூலம் தரவில்லை. அப்பச்சிக்கு சிறுவயதில் இருந்து பார்த்த எல்லாக் கிணறுகளும் நினைவுக்கு வருகின்றன. எல்லாமே உயிரைக் காவு வாங்கிய கிணறுகள். செய்த குற்றத்தின் நிழல் அருகில் யாரோ வாளை ஓங்கிக் கொண்டு வெட்ட வருவது போல.
இரண்டாவது பகுதி தொன்மம். இறையின் அலகிலாவிளையாட்டு. மீண்டும் பாவக்கிணறு. குழந்தமையைத் தொலைத்து, சண்டையும் சச்சரவும், சித்திரவதை செய்து ரசிப்பவர்களாய்........
மூன்றாவது பகுதி மாயயதார்த்தம் கலந்தது. கவிஞன் அப்பச்சியின் கதையை எழுதும் கருவி ஆகிறான்.
நான்காவது பகுதி லாஸ் அலமோஸ். இங்கே தான் இரண்டாம் உலகப்போரின் நியுக்ளியர் குண்டுகளுக்கான ஆலோசனை,  வெள்ளோட்டம் நிகழ்ந்தது. ஹிரோஷிமா, நாகசாகியில் லட்சக்கணக்கான அப்பாவிகள் இறந்தனர். பல தலைமுறைகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டன. லாஸ் அலமோஸ் விஷக்கிணறு. தொன்மத்தில் வந்த அதே கிணறு.
சுனில் கிருஷ்ணன் ஒரு கதாபாத்திரம் வாயிலாக இரண்டு Mutually exclusive worldஐ அழிவு என்ற ஒரு சங்கிலியால் இணைத்துத் தொடர்பு ஏற்படுத்துகிறார். பகவத் கீதையே அழிப்பதற்கு முன் சொல்லப்பட்டது தான். ஹெர்பர்ட்டின் கவிதைகள் ஆன்மாவின் அலைக்கழிப்பு.
வசுதைவக குடும்பகம் எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டதோ ஆனால் கொரோனா வைரஸ் உலகத்தை ஒரு குடும்பம் ஆக்கிவிட்டது.
ஐந்து சிறிய கதைகளில் எப்போதும் முடிவிலே இன்பம் தனித்துத் தெரிவதற்கு, அதன் பத்துபக்க நீளம் கூட காரணமாயிருக்கும்.
ஒரு குறுநாவல், ஐந்து சிறுகதைகள், ஐந்து சிறிய கதைகள் அடங்கிய தொகுப்பு. இதிலுள்ள சிறிய கதைகள் சுனில் கிருஷ்ணன் என்ற இலக்கிய ஆளுமைக்கு நிச்சயம் பொருந்தக் கூடியவை அல்ல. பரிட்சார்த்த முயற்சியாகச் செய்திருக்கக்கூடும். ஆனால் குறுநாவலும் ஐந்து சிறுகதைகளும் Simply brilliant.
அம்புப்படுக்கையில் இருந்து நீலகண்டம் அடுத்த படி.  நீலகண்டத்தில் இருந்து விஷக்கிணறு இரண்டு படிகள் உயரத்தில். முதல் படைப்பில் சட்டியில் இருந்த எல்லாவற்றையும் தட்டில் கொட்டிவிட்டு, இரண்டாவது படைப்புக்கு மீந்தவற்றை கையால் வழித்து சமாளித்து, அடுத்து மீண்டும் மீண்டும் சட்டியில் தண்ணீர்விட்டு தட்டில் ஊற்றிக்கொள்வது போல பல எழுத்தாளர்கள் இயங்கிவருகையில் இருந்தபடியில் இருந்து உயரத்தில் ஏறுவது அதிக உழைப்பைக்கோருவது.
மொழிநடை, குறிப்பாக லித்தியம் சிறுகதையில் சிறகுகள் இணைத்து நடக்கத் தெரியாது பறக்கிறது. கதைகளின் உள்ளடக்கங்களும் மிக நுட்பமானது. வாசிப்பனுபவத்தை சிதைக்கக்கூடாது என்று கைகளை கட்டி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு கதையையும் பற்றி குறைந்தது இரண்டு பக்கங்களேனும் எழுத வேண்டும். Again a Not to be missed category book from Sunil Krishnan.
பிரதிக்கு:
யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு ஜனவரி 2021
விலை ரூ 200.

நன்றி - சரவணன் மாணிக்கவாசகம் ஃபேஸ்புக் பக்கம். 

No comments:

Post a Comment