Tuesday, February 2, 2021

பசித்திரு தனித்திரு விழித்திரு- சிறுகதை

(வல்லினம் ஜனவரி 2021 இதழில் வெளியான சிறுகதை)

வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய சட்டகத்தில் வெள்ளுடை தரித்த, ஒளி வட்டம் மிளிர்ந்த, கனிந்த விழிகளுடன் அருள் கரந்து கொண்டிருந்த வள்ளலார்  படம் மாட்டப்பட்டிருந்தது. படத்தின் கீழே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’வை மனதிற்குள்ளாக வாசித்துக்கொண்டான்.


ஒவ்வொருநாளும் வருபவன் தான் என்றாலும், சம்பிரதாயமான வரவேற்பு சொற்களுக்கு அப்பால் எதையும் கனகதுர்கா பேசியதில்லை. பிற ஆர்டிவோக்களின் இல்லாள்கள் போல தன்னை காய்கறிகளுக்கோ கடச்சாமான்களுக்கோ ஏவியதில்லை என்பதால் அவனுக்கு இயல்பாகவே ஒரு மரியாதை உண்டு. சோகையான அவள் விழிகளில் காவியத் துயர் படிந்திருப்பதாக எப்போதும் தோன்றும். அதற்கான காரணத்தை தீரா நோயாக, கொடுமையான இல்வாழ்வாக, கனவுகளை இழந்து சிறைப்பட்ட இளவரசியாக என விதவிதமான கதைகளாக சமைப்பான். அத்தனை கதைகளிலும் அவனே துயர் துடைக்கும் மீட்பன். அப்படியான ஒரு கனவில் திளைத்துக்கொண்டிருந்த போது சமயலறையுள்ளிருந்து ‘ஒன்ப்ளஸ் ஒன் டூ மாமா’ எனும் வரி மவுனத்தை கீறிபிளந்துக்கொண்டு ஒலித்தது. காபியை வைத்துவிட்டு சமையலறைக்குள் கனகதுர்கா தன்னை புதைத்துகொண்டு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டன என்பது உறைத்தது. சட்டென நாற்காலி இழுபடும் ஓசை கேட்டது.  கைபேசியுடன் சமயலறையை விட்டு  வெளியே வந்தாள்.  வருகையை எதிர்பார்த்திருந்தது போல மாரிமுத்துவும் நிமிர்ந்து நேராக  அவளை நோக்கி புன்னகைத்தான். 


“காபி ஆறிடுச்சே” என்றாள்.


 “பரவால்ல இருக்கட்டும்மா.. சார் வந்திரட்டும்னு பாத்தேன்..வெளிய போயிருக்காரா?” 


“இங்கதான்…இப்ப வந்துடுவார்..நீங்ககுடிங்க”


 ஒரு அறையிலிருந்து பள்ளிச் சீருடையில் காதில் ஹெட்ஃபோனுடன் கையில் கைபேசியை வைத்துக்கொண்டு விடுவிடுவென வெளியே வந்தான் சுந்தர். நேராக அடுக்களைக்கு சென்றவன் வாயில் எதையோ அதக்கிக்கொண்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டான். “தம்பி பத்தாவது தான? நல்லா படிக்கிறானா? ‘ஆன்லைன் கிளாஸா?’‘ம்’” எனச் சொல்லிவிட்டு காபி குடித்த லோட்டாவை எடுத்துக் கொண்டு மீண்டும் சமயலறையில் புதைந்துகொண்டாள். குலைந்த பகல் கனவை மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர  மனம் குவியவில்லை. அது ஒரு இரண்டு  படுக்கையறை கொண்ட சிறிய வாடகை வீடு. பத்துக்கு பதினைந்து தான் கூடம். உறுத்தாத நிறங்கள் அடிக்கப்பட்ட சுத்தமான சுவர்கள். சு. பாண்டியன், ஆர்.டி.ஓ எனும் பெயர்பலகை நீலநிற தகட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியன் என்றதும் பெரிய மீசை கட்டுத்திட்டான உடல், கரிய திருமேனியை எல்லோரும் கற்பனை செய்வது போல் மாரிமுத்துவும் கற்பனை செய்திருந்தான். ஆனால் முழுக்க மழித்த முகத்துடன், கட்டை குட்டையாக மாநிறத்தில் வந்திறங்கிய ஆசாமியைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது. 


மொத்த வீடே அறுநூறு சதுரடி இருக்கலாம்.  ஒரு வருடத்திற்கு முன் பெரம்பலூரிலிருந்து மாற்றலாகி   வந்த போது அவனுக்காக வசதியான வீடுகளை பார்த்து வைத்திருந்தும், எதையும் பார்க்கக்கூட இல்லை. ‘பெருமாள் கோவில் எங்க இருக்கு?’ என கேட்டு அதற்கு அருகேயிருந்த சன்மார்க்க சங்கத்தின் வள்ளலார் ஆலயத்திற்கு முதல் வேலையாக சென்று வந்தான். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள இந்த சிறிய வீட்டுக்கு குடிவந்தான். வீட்டில் அந்த வள்ளலார் படம் தவிர வேறெந்த படமும் கிடையாது. சிறிய கண்ணாடி பேழைக்குள் விளக்கு ஏற்றப்படும். எப்போதும் வெள்ளை கதர் சட்டையில் தான் அலுவலகம் வருவான். ‘தாயொளி ..ரூல்ஸ் மயிர பேசி நம்ம தாலிய அறுக்க போறான் போலயே‌.. நேர்மை புடுங்கியாட்டம் தெரியிறான்’ என ஆற்றமையுடன் திலகவதி ரோடுவேஸ் சித்தனாதன் போதையில் அரற்றினான். ஆனால் முதல் சந்திப்பிலேயே தனது தேவைகளை ‘சந்தை நடைமுறைக்கு’ உகந்தபடி சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறிவிட்டதும் எல்லோருக்கும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஓட்டுனர் பயிற்சிபள்ளிக்கும் மாதாந்திர படியளப்பிற்கு தேதி குறித்து அட்டவனைபோட்டு அளித்திருந்தான். மொத்த பரிவர்த்தனையும் மாரிமுத்து வழிதான். பேராசைக்காரன் இல்லை. ஆனால் கணக்குவழக்கில் கறார் என்று பெயரெடுத்தான். மாற்றலாகி வந்த புதிதில்  எம்.எஸ்.எல் பஸ் காரர் ‘மரியாதை நிமித்தம்’ ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் அன்பளிப்பாக கொடுத்தனுப்பியபோது அதை வேண்டாம் என மறுத்து திருப்பியனுப்பினான். ஆனால் கதை அதுவல்ல. அதன் விலையை விசாரித்து பணமாககேட்டு பெற்றுக்கொண்டதுதான். 


 பாண்டியனுக்கு ‘ழகரம்’ கொஞ்சம் தகராறு. ஒருகூட்டத்தில் ‘அலுவலக களிப்பறை சீரமைப்புக்கு 13000 நிதி வளங்கப்பட்டது’ என அறிக்கையை வாசித்தபோது அலுவலகமே பொத்திக்கொண்டு சிரித்தது. ‘ஆபிஸ் டாய்லெட்ல நீ என்ன வேலை பாத்து வச்சன்னு கண்டு பிடிச்சிட்டாப்புல அதான் ‘கும்பீபாகம்’  களிப்பறைன்னு கரெக்டா சொல்லிருச்சு’ என வட்டமாக அமர்ந்து சோத்து மூட்டையை பிரிக்கும் மதிய உணவிடைவேளையின் போது மாரிமுத்துவை நக்கல் செய்தான் செந்தில். அலுவலகப் பெண்கள் இருவரும் அமுக்கமாகசிரித்தார்கள். ‘அது யாரு, ஆகஸ்டா, அக்டோபரா? எவளோ ஒரு அட்டுபட  நடிகை  நாண்டுகிட்டு செத்ததுக்கு ஒன்ற நாள் ஒப்பாரி வெச்ச ஒரே ஆள் நீ தான்டா’ என மேற்கொண்டு கிண்டினான் செந்தில். மாரிமுத்துவின் முகம் கருத்தது.  


அன்று மாலை ‘சாருக்கு சாத்தான்குளமா?’ என மாரி கேட்டதும் எப்படி தெரியும் என்பதுபோல் நிமிர்ந்து நோக்கினான். ‘பேச்சு வழக்கு வெச்சு செந்தில்சார் சொன்னார்’ என்றான்.  “கதவு கம்பி விட்டு போச்சு வெல்டிங் செய்ய ஆளு வேணும்னு கேட்டு நாலு நாள் ஆச்சு”  என துளைக்கும் குரலில் கேட்டதும் “இந்தா கூட்டிட்டுவாரேன் சார்” என சொல்லி அகன்றான்.. எனினும் அதுதான் பாண்டியனின் ஊர் என கிட்டத்தட்ட ஊகித்திருந்தான். கருகமணி தாலியும் கனகதுர்கா எனும் பெயரும் தான் ‘என்ன ஆளுங்க’ என அறுதியாக அறிய விடாமல் மாரிமுத்துவை சற்று குழப்பியது. ஆகட்டும் வீட்டில் ஏதேனும் நாள் கிழமை வராமலா போய்விடும். எப்படியும் கூப்பிடுவான் அப்போது உறுதி செய்துக்கொள்ளலாம் என்பது அவன் கணக்கு. 


வாங்கும் பணத்தை எல்லாம் என்ன செய்கிறான் என்பது எல்லோருக்கும் புரியாத புதிர். ‘சாமிக்கே ஆக்டிவாதானாம், பூசாரிக்கு புல்லட்டாம்’ என மாரிமுத்துவை  வம்பிழுப்பார்கள். மாரிமுத்துவுக்கு தெரிந்தவரை பாண்டியனின் ஒரே பலவீனம் தீனிதான். அதுவும் கூட சில மாதங்களாகத்தான். மேசை இழுப்பறையில் எப்போதும் திறந்து கிடக்கும் பொட்டலம் ஒன்று இருக்கும். நெய் முந்திரி வறுவல், ஃப்ரூட் ரோல், கமலா ஆரஞ்சு, மிளகு சேவு இப்படி எதோ ஒன்று அலுவலக நேரம் முழுக்க கொறித்தபடி இருப்பான். இவற்றை வாங்கிவர  எவரையும் ஏவுவதில்லை. தானே சென்று வாங்கி வருவான். அறைக்குள் எவராவது வந்தால் மேசையை  தடக்கென  மூடிவிடுவான். இதன் காரணமாகத்தான் அவனுக்கு ‘கும்பீபாகம்’ என பெயர் சூட்டியிருந்தான் செந்தில். 


 ஊதியவயிருடன், வெற்றுடம்பின் மீது துண்டு போர்த்திக்கொண்டு கைலியை செருகியபடி கழிப்பறையிலிருந்து வெளியே வந்தான் பாண்டியன். முகம் களைத்திருந்தது.  வாசலிலேயே விழி வைத்திருந்த மாரிமுத்துவிற்கு சற்றே வியப்பு. மூலக்கடுப்பு எதாவது இருக்கும்போல என எண்ணிக்கொண்டான் மாரி. பணிவாக எழுந்துநின்று பையிலிருந்து ஒரு கவரை நீட்டி ‘தண்டாயுதபாணி ட்ரைவிங் ஸ்கூல்’ என்றான். ‘அருட்பெருஞ்சோதியை’ கண்ணை மூடி முணுமுணுத்துவிட்டு பெற்றுக்கொண்டான். கனகதுர்கா ஒரு நோட்டை கொண்டுவந்து நீட்டியதும், இடுப்பில் சொருகியிருந்த கைபேசியை கையில் எடுத்துக்கொண்டு கணக்கை ஒப்பிட்டு சரிபார்த்தான். சரி என்பதுபோல் தலையசைத்தான். வள்ளலார் படத்தின் காலடியில் கவரைவைத்துவிட்டு கனகதுர்காவிடம் நீட்டியபோதும் கூட அவளை முகம்கொண்டு காணவில்லை. 


2


கனகதுர்காவின் கண்களை அணைக்கட்டியிருந்த கருவளையங்கள் மேலும் அடர்ந்து சுருங்கியது‌. உடல் சட்டென அனல் கிளப்பியது. வயிற்றுக்குள் மூட்டிய கரியை கட்டிக்கொண்டதுபோல் ஒரு தகிப்பு. வியர்வை ஒரு அலையாக பொங்கி குளிர்ந்தது. மின்னல் வெட்டியது  போல் வெடுக்கென  ஒரு இழுப்பு. மார்புகனத்தது. லேசாக மூச்சிளைத்தது. குளிர்சாதனப்பெட்டியின் கதவுகளை திறந்து அதன் ஜில்லிப்பில் நின்றாள். பாண்டியன் காலையில் அலுவலகத்திற்கு சென்றுவந்த அதே உடையுடன் கிளம்பி வந்தான். இரும்பு கிராதி கதவின் ஓசையை கேட்டதும் கனகதுர்கா சட்டென வெளியே வந்து “எதாவது குடிச்சிட்டு போங்க” என்றாள். “வந்து பாத்துக்குறேன்” என வாசலை பார்த்தபடி சொல்லிவிட்டு சட்டைப்பையில் கைபேசி இருக்கிறதா என தடவிப்பார்த்தான். இல்லையென்றதும், புல்லட்டில் அமர்ந்திருந்த மாரிமுத்துவை நோக்கி “போங்க, நா வரேன்” என சொல்லிவிட்டு கனகதுர்காவை முந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே சென்ற சில நொடிகளில் குளிர்சாதனப் பெட்டியின் கதவு ஓங்கி  சாத்தப்படும் ஓசை கேட்டதும் தான் கதவை திறந்து  போட்டுவிட்டு வந்தது அவளுக்கு உறைத்தது. கைபேசியை எடுத்துக்கொண்டு அவளைத் தவிர்த்துவிட்டு வெளியேறினான். அவனுடைய ‘ஆக்டிவாவின்’ சத்தம் நீங்கியதும் கதவை மூடிவிட்டுவந்து தலையணையை குளிர்ந்த தரையில் போட்டு படுத்துக்கொண்டாள். உடல்தகிப்பு குறையவில்லை. எழுந்து  அரைகுப்பி குளிர்ந்த நீரை ஒரே மடக்கில் குடித்தாள். காத்திருந்தது போல் சுந்தர் கைபேசியை நோண்டியபடி வெளியே வந்தான். குனிந்த தலையுடன் இரண்டு கைகளினாலும் கைபேசியில் எதையோ அழுத்தியபடி அவனுக்குள்ளாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். குனிந்த தலை நிமிராமல்’ ‘நிர்மல் வீட்டுக்கு போயிட்டு வரேன்மா’  என்றான்.  ‘கிளாஸ்முடிஞ்சிருச்சா?’ எனக்கேட்டு இருபது நொடிகளுக்கு பின் ‘முடிஞ்சிடுச்சு’ என்றான்.‌. ‘ கிளாஸுக்கு மட்டும் தான் ஃபோன். அத வச்சிட்டு போ..’ என சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரும்பு வெளிக் கதவை திறந்துக் கொண்டு  வெளியே செல்லும் ஓசை கேட்டது. 


தரையில் படுத்தபடி தொலைக்காட்சி சேனல்களில் உலவினாள். உள்ளம் எதையோ தேடித்தேடி சலித்தது. ஒரு சேனலில் சவமாக கிடந்த ராதிகாவின் தலைமாட்டில் கோட்டுசூட்டு போட்ட ரஜினி கையில் வாங்கிவந்த மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு கண்கலங்கும் காட்சியை பார்த்ததும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது. அப்போது தன்னை செத்துக்கிடக்கும் ராதிகாவாக கற்பனை செய்துக்கொண்டாள். அலுவலகத்தை விட்டுவரும் பாண்டியன் கையில் பூவுடன் கல்யாண வரவேற்புக்கு அணிந்த கோட்டுடன், உந்தி பிதுக்கமோ முன்மண்டை வழுக்கையோ இல்லாமல் வருகிறான். பிணமாக கிடக்கும் அவளுக்கு பூவைச்சூடிவிட்டு கதறி அழுகிறான். பிறகு அவனே அவர்களின் தேனிலவுக்கு சென்றபோது  அணிந்திருந்த சிகப்பு உள்கழுத்து டிஷர்ட்டில் வருகிறான். பின்னர்  இருபது வருடங்களுக்கு முன் தைத்த சபாரி சூட்டில் வந்தான். ஆனால் அவள் எல்லாமுறையும் இப்போதுள்ள கோலத்திலேயே பிணமாக கிடந்தாள். பாண்டியனுக்கு பதிலாக வேறொரு உருவம் துலக்கம்பெற்று அவளை நோக்கி வரத்தொடங்கியதும் திடுக்கிட்டு கண் திறந்தாள். 


மாலை ஆறு மணி. பாண்டியன் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவான். எழுந்து முடிந்திருந்த தலையை கண்ணாடி முன் நின்று சீப்பால் வாரி பின்னிக்கொண்டாள். வெண் நிற தோலில் சுருக்கங்கள் தென்படத்தொடங்கின. மெலிதாக அரும்பத் தொடங்கியிருக்கும் மீசையை வருடி பார்த்தாள். மயிர்காலை பிடித்து இழுத்து ஒவ்வொன்றாக  பிடுங்க வேண்டும் எனும் ஆவேசம் குமைந்தது. 


வெளியே சென்றிருந்த சுந்தர் நல்லபிள்ளையாக உடைமாற்றி, கைபேசியை பாண்டியன் அறைக்குள் உள்ள அலமாறியில் வைத்துவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச்சென்றான். பாண்டியன் வீட்டுக்குள் நுழையும்போது நேராக அவன் கண்கள் மொட்டைமாடிக்குத்தான் செல்லும். மாடியில் சுந்தர் நடமாடிக் கொண்டே படிப்பதை உறுதி செய்துகொண்டுதான் உள்ளே  நுழைவான். ‌. 


பாண்டியனின் ‘ஆக்டிவாவின்’ ஓசை கேட்டது. இரும்புகிராதி கதவின் கொக்கியை நீக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். உள்ளே நுழைந்தவனின் மீசையில் சிறிய பொன்னிற துணுக்கு ஒட்டியிருந்தது. அவசர அவசரமாக விண்டுவந்த பப்ஸாக இருக்கும் என ஊகித்தாள். உள்ளுக்குள் சிரித்தாள். உள்ளே வந்தவன் உடனடியாக காற்சட்டையிலிருந்து வேட்டிக்கு மாறினான். வெள்ளைவேட்டி சட்டையில் வள்ளலார் கோவிலுக்கு தினமும் சென்றுவிட்டு இரவு எட்டு மணிக்கு தான் திரும்புவான்.  


ஐந்து ஆண்டுகள் இருக்கலாம், திடீரென ஒருநாள் இந்த வள்ளலார் படத்தை கொண்டு வந்து மாட்டினான். இனி நம் வீட்டில் அசைவம் இல்லை என்றான். மார்க்கத்தில் அறிவுறுத்தபட்ட வகையில் கலவி வாரமிருமுறையிலிருந்து மாதமிருமுறையானது. தொடக்க நாட்களில் அவன் தவிப்பதைக் காண பரிதாபமாக இருக்கும்.. இந்த வைராக்கியம் எத்தனை நாட்களுக்கு தொடர்கிறது என காத்திருந்தாள். ஒரு நன்னாளில் ‘இனி பூண்டு வெங்காயம் வாங்காத’ என்றான். மாதமிருமுறை என்றானதும் அந்நாட்களை இருவரும் உள்ளூர எதிர்பார்த்திருந்தனர். சின்ன சின்ன செயல்களில் குறிப்புணர்த்தியபடி இருப்பான். அந்த நாளை காலப்போக்கில் அஞ்சத் தொடங்கினாள். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தலைவலி, இடுப்பு வலி என சுருண்டு கொள்வாள். ஆனால் அவனை மறுத்ததில்லை. ஆனால் இந்த ஆறு மாதங்களில் எல்லாம் மாறிவிட்டது. 


இரவுணவுக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தபோது பாண்டியனின் கைபேசி ஒலித்தது. பொதுவாக இரண்டு சிணுங்கலுக்குமேல் விடமாட்டான். மூன்று முறை ஒலித்ததும் எட்டிப்பார்த்தாள். பாண்டியனை காணவில்லை. அடுப்பு வெம்மையை குறைத்துவிட்டு எடுக்கப்போனாள். பாண்டியன் கிட்டத்தட்ட ஓடிவந்து அவளுக்கு முன்னாக எடுத்தான். ஆறுமாதமாக இப்படித்தான் அவனுடைய கைபேசியை தொடவிடுவதில்லை‌. ஏதோ ஒரு நெருடல் என உணர்ந்தவள் தொடக்கத்தில் இருமுறை அலுவலகத்திற்கு யதார்த்தமாகச் செல்வதுபோல் சென்று வந்தாள். உடன் பணிபுரியும் இரு பெண்கள் மீது மெல்லிய சந்தேகம் அவளுக்கு. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று முதல்  நானும் உங்களுடன் நடக்கிறேன் என ஒருவாரம் வந்தாள். முன்பெல்லாம் ‘அம்பலத்தரசே அருமருந்தே’ ‘பச்சை மயில் வாகனனே’ என  பாடல்களை உரக்க ஒலிக்க விட்டு மைதானத்தை ஒன்றரை மணிநேரம் சுற்றி வருவான். ஆனால் அவள் நடந்த சமயம், விடுவிடுவென ஒருசுற்று சுற்றிவிட்டு பெஞ்சில் சோர்ந்து அமர்ந்து கொண்டான். 


தொடக்கத்தில் இருந்த திகைப்பும் மர்மமும் படிப்படியாக குறைந்தது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவில் கழிப்பறைக்குள் நெடுநேரம் கழிப்பது என்பது வாடிக்கையானது. அந்நாட்களில் பாயை விரித்து கீழே உறங்க தொடங்கினான். காலை எழுந்து கழிவறைக்கு செல்லும்போது பினாயில் வாடை மூக்கைத்துளைக்கும். ஒரிரவு பெண்னின் முயக்க முனகலை கழிவறையிலிருந்து கேட்டதும் அதுவரை ஊகமாக இருந்தது, திட்டவட்டமாகத் தெரிந்தது. தொடக்கத்தில் பொங்கிய எரிச்சல், அருவெறுப்பு, ஆற்றாமையை கடந்து தொலையட்டும் எனும் நிலையை அடைந்தபோது அதுவரையில் அவள் அறிந்திடாத விடுதலையுணர்வை அடைந்தாள். ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அவனுக்கு எவ்வகையிலும் அவள் தேவையில்லாதவளாக ஆனாள். அதுவே அவளுக்கு மெல்லிய பதட்டட்தை அளித்தது. பினாயில் வாடையின் மீது அவளுக்கு கடும் ஒவ்வாமை எழுந்தது. பினாயிலை ஊற்றும் தர்க்கம் மட்டும் அவளுக்கு விளங்கவில்லை. வாரம் இருமுறை இருந்த வழக்கம் ஒவ்வொரு இரவும் என ஆனது. இப்போது சில நாட்களாக  மதிய உணவு  இடைவெளிகளில் தொடர்ந்தது. எல்லா நாட்களிலும் பாயை விரித்து கீழே  உறக்கம் என்பது இயல்பானது. சில நாட்கள் நடு இரவில் அவனாக கட்டிலுக்கு ஏறி வரும்போது கனகதுர்கா முடங்கி மறுபக்கம் திரும்பிக்கொள்வாள்.  அவன் இறங்கி சென்றதும், அப்படி சுருண்டுக் கிடந்ததற்காக இரவெல்லாம் அழுவாள். 



இரண்டு நிமிடம் பேசிவிட்டு “உன் தம்பிதான்” என போனை கொடுத்தான். அவனிடம் பேசி முடிக்கும்வரை அருகிலேயே நின்றான். இணைப்பு துண்டித்ததும் உடனே கைபேசியை அவளிடமிருந்து மீட்டுக்கொண்டான். மூவருமாக தட்டில் சப்பாத்தியை போட்டுக்கொண்டு தொலைக்காட்சியில்  ‘பாரதி கண்ணம்மா’ பார்த்தார்கள். ஒன்பதரைக்கெல்லாம் படுத்தாள். பாண்டியன் கூடத்தில் கைபேசியில் மும்முரமாக இருந்தான். சுந்தர் அன்றைய அசைன்மென்டுகளை வலையேற்றிக்கொண்டிருந்தான். கைபேசியை பிடுங்கி  வீசி எறிந்து பாண்டியன் நெஞ்சில் ஓங்கி குத்தவேண்டும் என உள்ளே ஒரு ஆங்காரம் எழுந்தது. தலைமாட்டில் இருந்த கைபேசியை மெத்தையிலேயே சற்று தள்ளி வீசினாள். 


பாயை விரித்து பாண்டியன் கீழே படுத்தபோது இரவு பதினொன்றரை.  ஒற்றையாளாக இருவர் படுக்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அறை உள்கூரையின் மீது ஓட்டப்பட்டிருந்த ரேடியம் நட்சத்திரங்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. பத்து நிமிடங்களில் பாண்டியனின் குறட்டையொலி கேட்டது. அவளுடைய இதயத்துடிப்பு லயம்கெட்டு தெறித்து கொண்டிருந்தது. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பிறகு மீண்டும் படுத்தாள். பனிரெண்டு இருக்கும். அப்போது அறைக்கு வெளியே கால்தடத்தின் மெல்லிய அரவத்தைக் கேட்க முடிந்தது. ஓசையின்றி அறைகதவைத் திறந்துகொண்டு வந்தவனின் வடிவம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சத்தில் துலங்கியது. சுந்தர் அறையின் அலமாரியின் அருகே நின்று கொண்டிருந்தான். சட்டென எழுந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் பாண்டியன் முரட்டுத்தனமாக ஏதெனும் செய்துவிடக்கூடும் என அஞ்சினாள். கைபேசியை எடுத்துக்கொண்டு வந்தவழியே பூனை நடையில் திரும்பச் சென்றான். இத்தனைக்கும் பாண்டியன் அவ்வப்போது அவன் கைபேசியை சோதிப்பதுண்டு.  கைபேசிபயன்பாட்டை குறைத்துக்கொள் என சொன்னால், ‘நானாகேட்டேன்? நீங்க தான வாங்கிகொடுத்தீங்க.. நாள் முழுக்க படிக்கத்தானே யூஸ் பன்றேன்.. கொஞ்ச நேரம் கேம் கூட வெளாட விட மாட்றீங்க’ என கத்துவான். அவனிடம் காலையில் நிதானமாக பேசிப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.  மீண்டும் எழுந்து அமர்ந்தவள் பின்மதியத்தின் மரண கற்பனையை மீளவும்  மீட்டிப்பார்க்க முயன்றாள். கண்ணை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் அவள் கற்பனைக்கு மாறாக பிணமாக பெருந்தொந்தியும் வழுக்கையும் கொண்ட பாண்டியன் கிடந்ததும் உடல் சிலிர்த்தது. உடலை பார்த்து அழும் தான் தனது திருமண ரிசப்ஷன் புடவையில் இருப்பதை கவனித்தாள். பொட்டழிக்கும் வளையல் உடைக்கும் தாலி அறுக்கும் சடங்குகள் என அவள் பார்த்த சினிமாக்களிலிருந்து காட்சிகள் மனக்குளத்தில் சரசரவென நிரம்பின.  உடல் முறுக்கியது. இளம் விதவையாக மெல்லிய திருநீறு கீற்றுடன் வெள்ளைப்புடவையில், அவிழ்ந்த கூந்தலுடன் தனித்திருக்கும்போது நெடுங்காலம் தன்மனம் அறியாத உற்சாகம் உடல் முழுக்க படர்வதை உணர்ந்துக்கொண்டாள். 


3


பாண்டியனுக்கு மழையானாலும் வெயிலானாலும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது வழக்கம். அதிகாலையில் செய்வதற்கு என சில பயிற்சிகளை பழகியிருந்தான். உறங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப வேண்டும் எனும் நோக்கதுடன் அல்லது நான் எழுந்துவிட்டேன் நீ இன்னும் உறங்குகிறாய் என்பதை உணர்த்தும் வகையில் கால்களை தேய்த்து தேய்த்து நடப்பான். கதவை ஓங்கி அறைவான். அன்று கையை தேய்த்து ‘அருட்பெருஞ்சோதி’ கூறி  கண் விழித்தபோது பீரோவில் பதிந்த ஆளுயர கண்ணாடிக்கு முன்  நின்று மெல்லிய புலர் வெளிச்சத்தில் நீண்ட கூந்தலை பக்கவாட்டில் படரவிட்டு சீவிக்கொண்டிருந்தாள். உடலில் நடுக்கம் தொற்றிக்கொண்டது. படுத்தபடி அவளை நோட்டம் விடத் தொடங்கினான். நெடுநேரம் சீவியவள், அலமாரியில் நைட்டியையும் துண்டையும் எடுத்துக்கொண்டு கழிப்பறை+ குளியலறைக்குள் நுழைந்தாள். உள்ளே  பத்து நிமிடங்கள் வரையும் எந்த சந்தடியும் இல்லை. கதவைத்தட்ட இருமுறை எழுந்தவன், தட்டவில்லை. உடல் பரபரத்தது‌. படுக்கையில் கிடந்த அவளுடைய கைபேசியை எடுத்தான். ஆனால் திரை பூட்டப்பட்டிருந்தது. படுக்கை அறைக் கதவை ஓங்கி அடித்து மூடினான். உள்ளே நீர் புழங்கும் ஓசை கேட்டது. ஓரிரு நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு இயல்பாக வெளியே வந்தாள். பாண்டியனின் நெற்றிப்பொட்டு விண்விண் என தெறித்தது. முகம் கருத்து இருண்டிருந்தது‌. வெளியே வந்தவள் பாண்டியனை நோக்காமல் சுற்றிய புடவையுடன் அடுக்களைக்குச் சென்றாள். அவள் முகத்தில் அப்போது அவன் கண்ட பூரிப்பு அவனை இம்சித்தது. அவசர அவசரமாக குளியலறைக்குள் சென்று ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என ஆராய்ந்தான். பிரஷ், குழாய், சோப்பு, குவளை என காண்பவை எல்லாம் அவளுக்கு பயன்பட்டிருக்கும் என சந்தேகித்தான். அவளை நுணுக்கமாக பின் தொடர்ந்தான். ஆனால் அவனை அவள் எவ்வகையிலும் பொருட்படுத்தவே இல்லை. 


அன்று முகம் மழிக்கும் போது கண்ணாடியில் இளகி தொய்ந்த மார்பை, விம்மிப் புடைத்த வயிறை, வழுக்கையை முதன்முறையாக காண்பதுபோல் திகைத்து நின்றான். மாரை அறுத்து வீசிவிட வேண்டும் எனும் ஆவேசம் பொங்கியது. அன்றிலிருந்து வீட்டில் இரவு உறங்கும்போது கூட சட்டை அணியத் தொடங்கினான். அவளுடனான பேச்சு மேலும் மேலும் என அருகியது. தன்னை மூடிக் கொள்ளும் தோறும் அவள் ஒளி பெருகுவதாக தோன்றியது. மனம் புழுங்கியது. ‘மனுஷன் திம்பானா’ என பரிமாறப்பட்ட உணவை பாதியில் போட்டுவிட்டு எழுந்தான். சில நாட்களாக தட்டை வீசி எறியும் வழக்கமும் சேர்ந்துக்கொண்டது. வேண்டுமென்றெ சன்னமான குரலில் அவளுக்கு கேட்காத வகையில் அழைப்பான். ‘உன்ன கூப்பிட்டு கூப்பிட்டே நா நெஞ்சு வெடிச்சு சாகப் போறேன்’ என எரிந்து விழுந்தான். ஆனால் இது எதுவும் அவளை சீண்டவில்லை. கனவுலக வாசியைப் போல் எங்கோ என விரிந்த  விழிகளுடன் நடமாடினாள். ஒவ்வொரு நாளும் அவன் காலையில் எழும் போது கண்ணாடிக்கு முன் அமர்ந்து தலை சீவினாள். குளிக்க சென்றாலும் கழிக்க சென்றாலும் அறையை விட்டு வெளிவர நெடுநேரம் ஆனது. அவனைப் போல் சோர்ந்துவிடாமல் ஒளி மிளிர திகழ்ந்தாள். முக்கியமாக அவளுக்கு கைபேசி தேவைப்படவில்லை என்பதை அவனால் செறிக்க இயலவில்லை. எப்போதும் கைபேசியில் இனிமையான பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தாள். அவை அவனை மூர்க்கமாக்கின ‘ஒரு நாள் ஃபோன ஒடச்சி வீசப் போறேன் பாரு’ என சீறிக்கொண்டிருந்தான். அலுவலக நேரத்தில் கூட திடுமென வீட்டுக்கு வந்து நின்றான். அவள் அருகில் இல்லாதபோது கைபேசியை நோண்டினான். “ஒரு நாள் எப்புடியும் மாட்டுவ” என கறுவிக் கொண்டான். வண்டியைத்  தெரு முனையில் நிறுத்திவிட்டு நடந்து வருவான். ஒரு நிமிடம் கூட கால் தரிக்காது. உடனே திரும்புவான். ஒரு கட்டத்தில் மதிய இடைவேளைகளில் வீட்டில் ஓய்வெடுப்பதை நிறுத்திக்கொண்டான். உண்டுவிட்டு உடனே சென்றான். அலுவலகத்திலேயே ஒரு சிறிய ஓய்வறையை ஏற்படுத்திக் கொண்டான். இரவு உறக்கம் வர நேரம் பிடிக்கலானது. காலை நடை நின்று போனது. பயிற்சிகளில் மனம் ஊன்றவில்லை. சுந்தர் அறைக்குள் திடும்திடுமென நுழைந்தான். தொடர்பற்ற கேள்விகளை கேட்டு வசை பொழிந்தான். இரவுகளில் பாயைக் கூடத்தில் விரித்துக் கொண்டான். நள்ளிரவு கடந்து ஓரிரு முறை அறையை விட்டு வெளியே வந்தபோது விழித்திருக்கும் தந்தையை கண்டு சமயல் அறைக்கு சென்று நீர் அருந்திவிட்டு படுப்பான். “உள்ள தான் பாட்டில் இருக்குல? எதுக்கு வெளிய சும்மா சும்மா வர?” என்றொரு நாள் கடிந்து கொண்டான். சுந்தர் அயர்ச்சி அடைந்து காலையில் நெடுநேரம் உறங்கினான். ஒருவாரமாக  மதிய  உணவை மாரிமுத்து பதினோரு மணிவாக்கில் கனகதுர்காவிடம் வந்து பெற்று சென்றான்.   


அன்று மதிய உணவு இடைவேளையின் போது கனகதுர்கா அலுவலகத்திற்கு வந்தாள். வங்கிக்கு சென்றுவிட்டு வந்ததாக மாரிமுத்துவிடம் சொன்னாள். ஓய்வறையில் இல்லாததால் கழிப்பறை கதவைத் தட்டி ‘அம்மா வந்திருக்காங்க’ என்றான். ‘ம்’ என்றொரு பதில் குரல் மட்டும் வந்தது. வெளியே வந்தவன் ‘அஞ்சு நிமிஷம் ஆச்சு.. சொல்லிட்டேன்..; இப்ப வந்துடுவார் இருங்கம்மா’ என்றான். கண்களில் நீரில் ததும்பின. பாண்டியன் கழிப்பறை கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தபோது எழுந்த பினாயில் நெடியை உணர்ந்ததும் அவனை நோக்காமல் வழியும் கண்ணீருடன் அறையை விட்டும் அலுவலகத்தை விட்டும் விடுவிடுவென வெளியேறினாள். நில் நில் என அறை வாசல் வரை பின் தொடர்ந்தவனை பொருட்படுத்தவில்லை. பாண்டியனின் கைபேசி அழைப்பையும் அவள் ஏற்கவில்லை..சோர்ந்து நாற்காலியில் புதைந்து கொண்டான். மாரிமுத்து மெதுவாக ‘சார் மூலத்துக்கு கருணைக் கிழங்கு லேவியம் நல்லது’ என்றான் பணிவாக. சட்டென நிமிர்ந்தவன் ‘என்ன வேல செய்றீங்க? நேத்துமட்டும் மூனு தப்பு லைசென்ஸ்ல, எல்லாரையும் கூப்புடு’ என கத்தினான். “எப்பவையும் விட ரெண்டு கம்மி தானேசார்” என முனகியபடி சென்றான்.


அலுவலகம் விட்டு நேராக வள்ளலார் ஆலயத்திற்கு சென்றவன் உள்ளே செல்லாமல் அங்கிருந்து சிவன் கோவிலுக்கு சென்றான். நெடுநேரம் மீனாட்சிசுந்தரேசர்  சந்நிதியில் அமர்ந்திருந்தான்.  இவை எல்லாம் எப்போது தொடங்கியது? மனம் நன்கறிந்த ஒன்றை எதிர்கொள்ளாமல் மறுகியபடியிருந்தது. பசி பற்றி  உடலெங்கும் படர்ந்தது. சன்மார்க்கத்தில் சேர்ந்த புதிதில் கடைப்பிடித்த உணவு கட்டுப்பாடுகளெல்லாம் கடந்தகாலத்து கனவுபோலிருந்தது அவனுக்கு. பையிலிருந்த வறுத்த முந்திரிகளை கொறித்தான். அன்றிரவு  என்ன ஆனாலும் சரி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உறுதி கொண்டான். எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தபோதே கனகதுர்கா உறங்கிக் கொண்டிருந்தாள். அதுவரை இளகியிருந்த மனம் அவள் நிம்மதியாக உறங்குவதை பார்த்ததும் மீண்டும் மரம் ஏறியது. அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அவள் அருகே அமர்ந்து உறங்குபவளை வெறித்துக் கொண்டிருந்தான். தலையணையை முகத்தில் அழுத்தி விடலாம் என மனம் பரபரத்தது. கண்ணீர் பெருகியது.  மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கோரினான். கைபேசியை அணைத்து அலமாரியில் வைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்தான். முழு இருளில் மட்டும் துலங்கும் ரேடியம் நட்சத்திரங்களையும் சந்திரனையும் அதை ஆராய கிளம்பிய கவசங்கள் அணிந்த விண்வெளி வீரனையும் படுத்தபடி வெறித்துக் கொண்டிருந்தான். கனகதுர்காவுடனான சம்போக காட்சிகளை நினைவில் மீட்டிக்கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே அவை திரிந்தன. முகம் மட்டும் இளமையின் மிளிர்வுடைய கனகதுர்காவினுடையது. அவள் இடையும் முலையும் நொடிக்கொருதரம் அவன் கண்ட நீலப்படங்களிலிருந்து பொருத்திக் கொண்டு உருமாறியபடி இருந்தது. அவனும் கட்டுடலும் பேராண்மையும் கொண்டவனாக உருமாறியபடி இருந்தான். அவனால் எத்தனை முயன்றும் அவளுடைய நிர்வாணத்தை நினைவில் கொணர முடியவில்லை. மூச்சுத்திணற திணற சேற்றில் அமிழ்வது போலிருந்தது. அவனுடைய முகம் மறைந்து மாரி முத்துவின் முகம் துலங்கியதும் திடுக்கிட்டு கண்னைத் திறந்துக் கொண்டான்.  


அறை கதவை ஓசையின்றி திறந்து உள் நுழைந்தான் சுந்தர். அசையாமல் உறங்கும் பாவனையில் அவனை கவனித்தான். அலமாரியில் தனது கைபேசியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினான். அவன் அறைக்கதவு மூடும் ஓசையைக் கேட்டதும் ஓசையின்றி எழுந்த பாண்டியன் சுந்தரின் அறைக்குள்ளே நுழைந்தான். ‘அரிப்பெடுத்த திருட்டு நாயே’ என கத்திக்கொண்டு அவனுடைய கைபேசியை தூக்கி ஏறிந்துவிட்டு ஓங்கி அறைந்தான். சத்தம் கேட்டு ஓடிவந்த கனகதுர்காவின் கன்னத்திலும்


‘என்னடி புள்ள வளக்குற நாயே’ என ஓங்கி ஒரு அறை விட்டு அவர்களுடைய அறைக்குள் நுழைந்து அவளுடைய கைபேசியையும் எடுத்து தரையில் ஆவேசமாக வீசி “திருட்டு தேவிடியா முண்ட” எனக் கத்தி கைபேசியின் மீது ஏறி குதித்தான். ‘படிச்சு கிளிச்சது போதும் மயிரான்’ என விசும்பிக் கொண்டிருந்த சுந்தரை சமயலறைக்கு இழுத்து சென்றான்.  அவனுடைய இடக்கையில் பழுக்க காய்ச்சிய தோசைத் திருப்பியின் கைப்பிடியால் துடிக்கத்துடிக்க பாண்டியன் சூடிழுத்து கொண்டிருந்தபோது பாண்டியனின் கைபேசி சுவற்றில் மோதி அக்கு அக்காக தெறிப்பதை மூச்சு வாங்க பார்த்துக்கொண்டிருந்தாள் கனகதுர்கா.  அவன் இழுத்த அந்தச் சூடு  சூடிழுத்த பாண்டியனின் மீதும், சந்நதம் கொண்ட கனகதுர்காவின் மீதும், மாரிமுத்துவின் மீதும், பாண்டியனுக்கு அவன் அறிமுகப்படுதிய, அற்பாயுசில் மரித்துப்போன ஆகஸ்ட் அமீஸ் மீதும், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வள்ளலார் மீதும், அவருடைய தனிப்பெரும்கருணை மீதும், ஊரடங்கின் மீதும், சபிக்கப்பட்ட காலத்தின் மீதும், வயோதிகத்தின் மீதும், இளமையின் மீதும், பசியின் மீதும், அடிவயிற்றில் அவியாதிருந்த அனலின் மீதும், அண்டசராட்சரத்தின் கோடானகோடி ஜீவராசிகளின் இன்பவிழைவின் மீதும், எந்த மனிதனாலும் விலக்க முடியாத தனிமையின் மீதும்  இழுபட்டபடியிருந்தது.

No comments:

Post a Comment