Tuesday, February 2, 2021

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்- அன்புள்ள புல்புல் குறித்து சிவா கிருஷ்ணமூர்த்தி

 “அன்புள்ள புல்புல்” நூலைக் குறித்து சொல்வனம் இதழில் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை: நன்றி



“தற்சமயம் வட்ட மேஜை மகாநாட்டின் நிலைமை, இருபது வாத்தியக்காரர்கள் வேறு வேறு வாத்தியங்களில், வேறு வேறு ஸ்வரத்தில் வெவ்வேறு பாட்டை ஒரே சமயத்தில் வாசிப்பது போலிருக்கிறது”


1931ல் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகளுடன் லண்டன் சென்ற ஜி.டி.பிர்லா, அந்த மாநாட்டு அனுபவங்களை தொகுத்து எழுதிய “கடல் கடந்த காந்தி” எனும் சிறு நூலில், மேற்சொன்ன குறிப்பு இருக்கிறது.


தலித், சீக்கிய, இஸ்லாமிய, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆங்கிலேயர்களும் கலந்து கொண்ட இழுபறி மாநாட்டின் இந்த நிலை, அன்றைய இடியாப்ப சிக்கலை, காந்தியின் முன், இந்திய சுதந்திர போராட்டத்தின் முன் விஸ்வரூபமாய் விரிந்து நிமிர்ந்து நின்ற மாபெரும் சவாலை, அறைகூவலை ஒரு சிறு அகல் விளக்கின் வெளிச்சத்தில் இக்குறிப்பு காட்டுகிறது.


இன்று நாம் தின அலுவலக/வியாபார வாழ்வில் எதிர் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளோடும் இதனை ஒப்பிட இயலும். ஈடுபட ஆரம்பித்து சில காலத்திலேயே வியர்த்து, நோக்கத்தை நீர்த்துப் போக வைக்க கூடிய மாபெரும் பணி அது.


தனி மனிதனாகவும், சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய மைல்கற்களின் ஒன்றான இந்திய சுதந்திர போராட்டம் எனும் அரும்பணியில் தம்மை கரைத்துகொண்ட ஆத்மாக்களில் ஒருவராகவுமாக காந்தியைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன; மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.


தமிழில் அதில் முக்கியமான ஒன்றாக யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கும் http://www.gandhitoday.in என்ற ஒரு முக்கிய தொகுப்பு களஞ்சியத்தை தயக்கமின்றி கூறுவேன்.



இந்த களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு “அன்புள்ள புல்புல்” எனும் அச்சு நூலாக யாவரும் பதிப்பகம் பதிப்பித்திருக்கிறார்கள்.


இந்த குறிப்பிட்ட கட்டுரைகளை தேர்வு செய்ததற்கான காரணங்களை ஆசிரியர் தன் முன்னுரையில் கூறியிருக்கும் விதமே வாசகனுக்கு நூலை வாசிக்க ஓர் தூண்டுதலாக இருக்கும்.


காந்தி – மகாத்மாவாக நிறுத்தப்பட்ட அளவிற்கே அல்லது அதற்கு மேலாகவே எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டவர். அவரது லட்சியங்கள், அதை அடைய அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகள், சந்தித்த சிக்கல்களை நடைமுறை நோக்கில் புரிந்து கொண்டு எதிர்கொண்ட விதங்கள் என்று பல்வேறு புள்ளிகளில் இன்றைய காலகட்டத்தில் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் முக்கியமாக இன்றைய உலகின் பிரச்சனைகளை “காந்தியப் பார்வையில்” அணுவதற்குமான ஏராளமான வாய்ப்பு கதவுகள் திறந்திருக்கின்றன.


அவற்றின் ஒரு பகுதியாக, கல்வி, மத அடிப்படைவாதம், அஹிம்சை, கம்யுனிசம் என்ற முக்கிய தளங்களில் காந்தியை கொண்டு நிறுத்தி ஆராயும் காத்திரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.


சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு குறிப்பைக் கவனித்தேன். 1997ல் ஓர் இலக்கிய கூட்டத்தில் சி.சு.செல்லப்பா அவர்கள் காந்தியைப் பற்றி, காந்திய பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறார். பேசி முடித்ததும் வந்திருந்த பார்வையாளர்களில் (மொத்தம் நால்வர்) ஓர் இளைஞர் கடுமையான கேள்விகளைக் கேட்கிறார். (“காந்தியம் பேசுன சமூக விடுதலையும் உருப்படியாகலை, கிராமிய பொருளாதாரமும் சிதைக்கப்பட்டாச்சு…பிணத்திற்கு மாலை போட்டு மனையில் உட்கார வைக்கிற மாதிரி, செத்துப்போன காந்தியத்தைப் பற்றி இன்னிக்கு பேசிக்கிட்டு இருக்கிங்க.”)


தொண்ணூறுகளுக்கும் முன்னர் இருந்தே இருந்துகொண்டிருக்கும் கேள்விகள் இவைகள். காந்தியம் என்று சொல்ல ஆரம்பித்தாலே இன்றைக்கும் மிகச் சுலபமாக ஒருவருக்கு தோன்றக்கூடிய, கேட்க முடிகிற கேள்விகள்.


இன்றைய இணைய காலத்தில் இக்கேள்விகளுக்கு பதில்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்பது வரவேற்கப்படவேண்டிய, ஆசுவாசப்படவேண்டிய விஷயம்.

இந்த தொகுப்பிலும் இக்கேள்விக்கான விடையாக ஓர் கட்டுரை (“நிகழ்கண காந்தி”) இருக்கிறது.


மேலும், காந்தியைப் பற்றி அவருடன் இருந்தவர்களின் பார்வைகளில் எழுதப்பட்ட சிறு நூல்களைப் பற்றிய கட்டுரைகள், அந்நூல்களைப் பற்றிய சுவாரசிய அறிமுகத்தையும் நூல்களின் சொல்லப்பட்டிருக்கும் காலகட்டங்களைப் பற்றிய சித்திரங்களையும் வாசகருக்கு அளிக்கின்றன.


வின்சண்ட் ஷூன் (காந்தி சரிதை), மில்லிக் போலாக் (“காந்தி எனும் மனிதர்”), ஜீன் ஷார்ப். ஏ.கோபண்ணா அவர்களின் “தண்டி யாத்திரை” போன்ற நூல்கள் காந்தி, அன்றைய இந்தியா, அதன் அரசியல் ஆன்மீக நிலைப்பாடு எனும் மாபெரும் ஆனால் துண்டு துண்டுகளாக இருக்கும் பகுதிகளை, ஒன்றாக இணைத்து முழு சித்திரமாக புரிந்து கொள்ள, ஆர்வமிருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.


ஜெயராம்தாஸ் எனு கட்டுரையில் ஜெயராம்தாஸ் ஜெயவர்தன எனும் இலங்கை காந்தியவாதியை, அவரது காந்தி ஆசிரம வாழ்க்கையை, அதன் பின் இலங்கை திரும்பி ஆற்றிய தியாக வாழ்க்கையைப் பற்றிய நுண் சித்திரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. 1905 தொடங்கி 1948 வரையிலான காலகட்டத்தில் காந்தி இலங்கையைப் பற்றி பேசி/எழுதிய கருத்துகளின் தொகுப்பான – Gandhi and Lanka நூலை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் வேறு எங்கும் கிடைக்கவில்லை என சுனில் குறிப்பிடுகிறார். ஒருவேளை இவரைப் போன்றவர்கள் பெரும் இயக்கமாக இலங்கையில் பெருகியிருந்தால் பின்னாளில், இந்நாளில் இலங்கையின் அரசியல் பார்வைகள், நிலவரங்களில் வேறு (நற்)பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்குமோ என்ற சிறு ஏக்கமும் உண்டாகிறது.


காந்தி மேல் வைக்கப்படும் கடும் குற்றச்சாட்டுகளை ஆராயும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.


பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிருந்து காப்பாற்ற காந்தி பெரும் முன்னெடுப்பு எடுக்கவில்லை – முக்கியமாகக் காந்தி-இர்வின் பேச்சுவார்த்தைகளில் காந்தி போராட்டக்காரர்களின் விடுதலைக்கான முழு அழுத்தத்தை காந்தி வைக்கவில்லை எனும் வாதத்தை வரலாற்று ஆய்வாளரான சந்திரபால், அவரது ஆய்வுக்கட்டுரையில் ஆராய்ந்ததை இக்கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நாள் வாரியாக, அன்று எழுதப்பட்ட கடிதங்கள் வாயிலாக இக்குற்றச்சாட்டை ஆராய்கிறது இக்கட்டுரை.


இன்னொரு குற்றச்சாட்டு – பாகிஸ்தானுக்கு 55 கோடிகள் கொடுக்க இந்திய அரசாங்கத்தை தனது உண்ணாவிரதத்தை கொண்டு நிர்பந்தித்தார் என்பது.


ஜனவரி 23, 1948ல் பாதுகாப்பு அமைச்சர், சர்தார் பல்தேவ் சிங் மவுண்ட்பேட்டனைச் சந்தித்து கசப்புடன் சொன்ன விஷயம் – “இவரது உண்ணாவிரதத்திற்கு ஒரே நோக்கம்தான் இருக்க முடியும் – அது 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிப்பது.”


1971ம் ஆண்டு, கோபால் கோட்ஸே, “காந்தி 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிக்ககோரி உண்ணாவிரதமிருந்தார்(காந்தி). அதுவே அவரைக் கொலை செய்ய முக்கியத் தூண்டுதலாக அமைந்தது” என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (மகரந்த் பல்தேவ்.)


இன்றுவரை காந்தி மேல் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. இதனை தெளிவாக ஆராய்கிறது “காந்தியும் 55 கோடிகளும்…” கட்டுரை.


கட்டுரையாசிரியர் கூறுவதுபோல், காந்தியை ஓர் அதிமானுடர் சக்தி கொண்டவர் என நம்பும் சித்திரம்தான் காந்தியின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், காந்தி மட்டும் மனம் வைத்திருந்தால் பகத்சிங் மற்றும் தோழர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கும்; இந்தியாவை துண்டாக்காமல் வைத்திருக்க முடியும் என நம்புகிறது.


இக்கட்டுரைகளின் நோக்கமாக நான் கருதுவது, நிதரிசனத்தை, காந்தி தன்னால் இயன்றவரை தன் முழு ஆற்றலைத் திரட்டி போராடினார் -சில விஷயங்களில் வெற்றி பெற்றார், பல விஷயங்களில் கை மீறிசென்றது என்பதை, அவர் ஓர் நடைமுறை வாதி என்பதை கிடைத்த தரவுகளின் வழியாக ஆராய்ந்து தொகுத்து அளிப்பது. இந்த வகையில் தமிழில் இது ஓர் முக்கிய தொகுப்பு நூல்.


நூலின் ஆசிரியர் சுனில் தனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக “அன்புள்ள புல்புல்” குறிப்பிடுகிறார். காந்தியின் நகைச்சுவை உணர்ச்சியைப் பற்றிய கட்டுரை இது!


இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும். இத்தனை அரசியல், ஆன்மீக, குடும்ப வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒருவர் தொடர்ந்து ஈடுபடுவதற்கு, தம் உள்ளத்தை லகுவாக வைத்துக்கொள்வதற்கு நகைச்சுவை உணர்ச்சி பேருதவியதில் ஆச்சரியம் இல்லை.


1928ல் காந்தி பின் வரும் வாக்கியத்தை எழுதியிருக்கிறார் – “எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமலிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்”


இக்கட்டுரையில் காணப்படும், புன்னகைக்கவைக்கும் ஒரு உதாரணம் பின்வருவது.


தி.செ.சவுராஜன் அவர்களின் “தமிழ்நாட்டில் காந்தி” நூலில், அவரைத் திரும்ப பார்த்த காந்தி இவ்வாறு சொல்வதாக குறிப்பிட்டிருக்கிறார் – “திரும்ப வந்து விட்டாயா, செல்லாக்காசைப் போல்!”. இந்த பொருளில் இன்னும் ஆராய நிறைய விஷயங்கள் இருக்கும் என நம்புகிறேன்.


எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆர்வத்தைத் தூண்டி மிக முக்கிய கட்டுரையாக நான் கருதுவது – இந்திய சுதந்திரப்போராட்டத்தைப் பற்றி மட்டும் அல்லாது அதன் பின்ணணியை ஆராயும் “இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள்” எனும் கட்டுரை.

வரலாற்று ஆய்வளாரும் காந்தியருமான தரம்பால் எழுதிய ஓர் நூல் – இந்திய மரபில் ஒத்துழையாமை போராட்டங்கள் – Civil Disobedience In Indian Tradition ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது.


நம் இந்திய ஆழ் மனதில் நம்மைப் பற்றி, என்ன மாதிரியானவர்களாக உணர்கிறோம்? அறிவிலும், பொருளியலிலும், தார்மீகமாகவும், நாமும் நமது மரபும் ஐரோப்பியர்களை விட தாழ்ந்தவர்கள் என்பதே இத்தனை வருட காலனி ஆதிக்கத்தில் நமக்கு புகட்டப்பட்டது.


பல்வேறு வகைகளில் இவை நமக்கு புகட்டப்பட்டது என்பது காலனியாதிக்கத்தின் வெற்றி. தன்னம்பிக்கையற்ற மந்தை சமூகத்தை வழிநடத்திச் செல்ல, பொறுப்புள்ள காலனியர்கள் தேவைபட்டனர். அவர்கள் தம் கடமைகளைச் செவ்வன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உருவாக்கத்தை பல்வேறு ஆண்டுகளாக தக்க வைத்துக்கொண்டிருப்பதது என்பது ஓர் முக்கிய வெற்றிதான்.


ஆங்கிலேய ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்களின் நடத்தைகள் கணக்கில் கொண்டால் அவர்கள் காலம்காலமாக கொடுங்கோல் ஆட்சி புரிவர்களாகவும், மக்கள் அவர்களுக்குச் அஞ்சி அப்படியே தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாகவுமான பிம்பம் கிடைக்கலாம். ஆனால், உண்மையில் ஆள்பவர்களும் மக்களுக்கும் இடையில் எழுதப்படாத விதிகள் இருந்துகொண்டிருந்தன; அறமின்மையின் எல்லையை ஆள்பவர்கள் மீறும் போது மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்; மன்னர்கள் தர்மத்திற்கு கட்டுண்டவர்கள் என்று நம்பியதால் அடக்குமுறையைக்கொண்டு எதிர்கொள்வதற்குப்பதில் பேச்சு வார்த்தைக்கான சாத்தியக் கதவுகளை திறந்து வைத்தனர்.


மன்னர்களின் ஆட்சிகாலம் மறைந்து ஆங்கிலேயர்கள் “பொறுப்பை” எடுத்துக்கொண்டபின், கேள்விகளற்றுக் கீழ்படிதல் எனும் நிலையை மக்கள் அடையும் வரை ஆங்கிலேயர்களின் வன்முறை அடக்குவாதம் நிற்கவில்லை. இதுவே அத்தனை காலங்கள் உயிர்த்திருந்த ஆன்மீக அரசியல் மரபை முடித்து வைத்தது. காந்தியின் நுண்ணுணர்வு இதைச் சரியாகக் கண்டுகொண்டு மீளுருவாக்கம் செய்தது என்று இந்தக் கட்டுரை கூறுகிறது.


தரம்பால் தனது கட்டுரையில் பாட்னா, பனாரஸ், சரூண், முர்ஷிதாபாத், போல்பூர் இடங்களில் 1800களின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கங்களை விவரிக்கிறார்.


“இந்த உலகிற்கு போதிக்க எனக்கு புதிதாக ஏதுமில்லை. சத்தியமும் அகிம்சையும் இந்த மலைகள் அளவிற்கே பழமையானவை. என்னால் முடிந்ததெல்லாம் இவையிரண்டையும் பெரிய அளவில் சோதிக்க முயன்றதுதான்”


“இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள்” எனும் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் மேற்கண்ட வாக்கியங்கள் எத்தனை பொருத்தமானவை, சத்தியமானவை.


சத்தியத்தையும் அஹிம்சையையும் எச்சக்தியிடம் சோதிக்க முயன்றார்? சென்ற நூற்றாண்டின் இணையற்ற பிரித்தானிய சாம்ராஜ்யம் எனும் மாபெரும் சக்திக்கு எதிராக.


பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இம்மாபெரும் பலம், அதன் நிகரில்லா படைகளாலோ, உலகமெங்கும் பரவியிருந்த காலனி நாட்டு சக்திகளினால் மட்டும் உருவாகவில்லை.


பி.டி.பிர்லாவின் நூலில் ஆங்கிலேயர்களைப் பற்றி ஒரு குறிப்பு எழுதுகிறார்.


“ஆங்கிலேயர் காலிலே ஒரு கையும், கழுத்திலே ஒரு கையும் வைத்திருப்பார்களென்று கைலாஸ் பாபு சொல்வது வழக்கம். உங்களுக்கு சக்தியில்லையென்று தெரிந்ததோ, கழுத்தை நெரித்துவிடுவான்: சண்டையில் நீங்கள் ஜெயித்து விடுவீர்களென்று தெரிந்தால், காலைப் பிடித்துக்கொண்டு வேண்டவும் தயங்க மாட்டான். எப்போழுதுமே தான் வணங்கிப் போவதற்குச் சித்தமாயிருந்ததாகச் சொல்லுவான்”


இப்படியாப்பட்ட குயுக்தியான சக்தியைத்தான் ஸத்தியத்தையும் அஹிம்சையையும் கொண்டு எதிர்கொண்டிருக்கிறார்…


சிறுவயதில் கார்த்திகை நாட்களில் வீடுகளில் திருவிளக்குகள் பொறுத்துவது ஓர் உற்சாகமான விஷயம். அம்மா கொடுக்கும் ஒரு அகல் விளக்கைக் கொண்டு குறைந்தது நான்கு அல்லது ஐந்து விளக்குகளாகவாது ஏற்றுவோம். சகோதரர்களுக்குள் யார் அதிக விளக்குகள் ஏற்றுவது குறித்து எங்களுடையே போட்டியே நிலவும்.


இந்த நூல், முன்னுரையில் குறிப்பிட்டபடி, எத்தனையோ மனிதர்களின் உழைப்பில் தரம்பால், ராமச்சந்திர குகா, ஜீன் ஷார்ப், மகரந்த் பரஞ்சபே, ராட்டை ரகு மற்றும் இன்னும் பல்வேறு ஆத்மாக்களின் உழைப்பில், பல்வேறு காலகட்டத்தில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகளைக் கொண்டு காந்தி, இந்திய மரபு, இந்திய சுதந்திர போராட்டம் இவற்றின் மாபெரும் சித்திரங்களை ஆர்வமுள்ளவர்களுக்கு காட்ட முயலும் இன்னொரு விளக்கு.


தமிழில், ஜெயமோகனின் “இன்றைய காந்தி” மற்றும் அவரது தளத்திலிருக்கும் ஏராளமான காந்தியைப் பற்றிய கட்டுரைகள், பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் “இன்றைய காந்திகள்” போன்ற நூல்களுடன் இந்நூல் ஆசிரியர் சுனிலும் தளராமல் தொடர்ந்து விளக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கிறார். இந்த ஒவ்வொரு அகல் விளக்கும் மேன்மேலும் அதிக, அகல் விளக்குகளை ஒளி பெறச்செய்யும். அவ்வொளியில் காந்தியமும், ஸத்தியமும், அஹிம்சையும், இந்திய மரபும் என்றென்றும் பிரகாசிக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.


நூல்: அன்புள்ள புல்புல்


ஆசிரியர்: சுனில் கிருஷ்ணன்


பதிப்பகம்: யாவரும் பதிப்பகம்

No comments:

Post a Comment