புத்தகங்கள்

Pages

Monday, December 21, 2020

பேய்ச்சி தடை



நண்பரும் மலேசிய எழுத்தாளருமான ம. நவீனின் 'பேய்ச்சி' நாவல் மலேசியாவில் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. தமிழர்களை இழிவு படுத்துகிறது, ஆபாசமாக உள்ளது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறது என மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு நாவல் வெளிவந்த முதல் நன்கு கவனம் பெற்று வருகிறது. என் வாசிப்பின் எல்லையில் நின்று உறுதியாக சொல்ல முடியும் 'பேய்ச்சி; கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்று, மலேசிய இலக்கியத்தில் வெளி வந்த முன்னோடி ஆக்கம்.  நவீனுடன் அரண் செய் யூ ட்யூப் ஊடகத்திற்காக ஒரு நேர்காணல் செய்தேன். 




நாவல் தடை செய்யப்பட்டது வருத்ததிற்குரிய விஷயம். அதுவும் இதற்கு காரணமாக இருந்தவர் மலேசியாவில் இருக்கும் இன்னொரு எழுத்தாளர். நோக்கம்- நவீன் விமர்சன ரீதியாக நிராகரிக்கிறார் என்பதே. பசவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஹெச். எஸ். சிவப்பிரகாஷின் மகாசைத்ரா நாடகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லிங்காயத்துகளில் ஒரு சாரார் ஒரு மடாதிபதி தலைமையில் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்நிகழ்வை விஷ்ணுபுர விழாவில் நினைவுகூர்ந்தவர் மடாதிபதியின் முன் இழுத்து செல்லப்பட்டபோதும் தனக்கு அவர்கள் மீது வருத்தமில்லை என்றார். அவர்களின் நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது என்பதற்கு எழுத்தாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றார். பெருமாள் முருகன் விஷத்தில் மாதொருபாகனின் சில பகுதிகள் வாட்சப் வழி பொது சமூகத்தின் பார்வைக்கு பரவியது. நாவலும் பகிரப்பட்டது‌. இந்த இரு விவகாரங்களில் உள்ள ஒற்றுமை என்பது நவீன இலக்கிய வாசிப்பு பயிற்சியில்லாத ஒரு சிலரிடம் தற்செயலாக புனைவு எதிர்பட்டு அது பெரும் விளைவை ஏற்படுத்தியது. சாம்ராஜின் ஒரு கவிதை சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்தபோது பல கண்டனங்கள் எழுந்தன. ஜெயமோகனின் தொப்பி திலகம் விகடனில் விவாதிக்கப்பட்டு சர்ச்சையாக்கப்பட்டது. ஒருவகையில் அந்த சர்ச்சைக்கு நான் நன்றியுடையவனாவேன். யார்ரா இந்த ஜெயமோகன் எம்ஜியார் சிவாஜியவே நக்கல் செய்றான் என்றே அவரை தேடி வாசிக்கத்தொடங்கினேன்.  சிற்றிதழ் சூழலில் நவீன இலக்கியம் குழுஉக்குறி போல் ஒரு சாராரிடம் உரையாடிக்கொண்டிருந்தது. சமூக ஊடகம் ஊடகத்தை மக்கள்மயப்படுத்தியபின் வெவ்வேறு விசைகளாக தனித்து இயங்கிக்கொண்டிருந்த எழுத்துப்போக்குகள் தெறித்து ஒன்று கலக்கின்றன. நவீன இலக்கியத்தின் பரப்பு அதிகரித்தபோது இயல்பாக அதன் சிக்கல்களும் அதிகரித்தன. இணைய பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பகடியை பொதுவெளியில் நவீன இலக்கிய போக்குக்கு பழக்கப்படாத வாசகரின் முன் நிறுத்துவதன் வழியாக எழுத்தாளரை சிறுமை செய்வது அல்லது கணக்கை நேர்செய்வது என்பதை விகடன் தொப்பி திலகம் வழியாக தொடங்கிவைத்தது. விகடனில் இருந்தவர்களுக்கு வாசிப்பு பரிச்சயம் உண்டு. இலக்கியம் செயல்படுவது எப்படி என்பதும் தெரியும். அந்த செயல் நிச்சயம் உள்நோக்கம் கொண்டதுதான். நாஞ்சில்நாடனின் புத்தக கண்காட்சி உரையை அம்பேத்கர் எதிர்ப்பாக திரித்த தமிழ் தி இந்து கட்டுரையும் இந்தவகைதான். ஆனால் ஒருவகையில் இந்த செயல்பாடு தவிர்க்கமுடியாதது. கூட்டுச்சமூகத்தின் இறுக்கங்கள் புனிதங்கள் தயக்கங்கள் மீது இருக்கும் பற்று குறையும். தொட்டா சிணுங்கித்தனம் குறையும். சமூகமாக நாம் அகமுதிர்வுகொள்ள இது ஒரு வாய்ப்பு. மலேசியாவில் மதியழகன் பேய்ச்சிக்கு செய்ததும் இதேதான். ஆபாசம் என்றும் சாதியவசை என்றும் பொதுவெளியில் ஒன்றை சுட்டிக்காட்டி நவீனின் மீது அந்த வெறுப்பை திருப்பப்பார்க்கிறார். பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட சிதறிய சமூகமாக இருக்கும் புலம்பெயர் சமூகம் தம்மை ஒருங்கிணைத்துக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக காணும். எத்தனை சுமாராக எழுதினாலும் கூட மதியழகனும் ஒரு எழுத்தாளர்தான் அவர் செய்தது அவருக்கு எதிராக திரும்புவதற்கு வெகுகாலம் ஆகாது. கும்பலின் ஆற்றலை தனிமனிதனாக இருக்கும் எழுத்தாளர் மீது ஏவிவிட்டு அவரை வழிக்கு கொண்டுவரும் முயற்சி. ஆனால் ஏவிவிடுபவர்களுக்கு கும்பலின் ஆற்றல் தெரியாது. அது அவர்கள் கட்டுக்குள் இருப்பதில்லை. சிங்கப்பூரிலும் இலக்கிய விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாமல் அரசின் பக்கம் நின்று எழுத்தாளரை வழிக்கு கொண்டுவரும் உத்தி பின்பற்றப்படுகிறது. இலக்கியம் என்பதே தன்னளவில் கலகம்தான். அரசின் போஷாக்கில் அதன் கரங்களை எதிர்நோக்குவதுவரை அது குறித்த அச்சமும் பாதுகாப்பின்மையும் நிலவும். அதை மீறி ஆக்கப்பூர்வ எதிர்சக்தியாக கலையும் இலக்கியமும் நிலைகொள்ளும்போதே ஒரு மண்ணில் இலக்கியம் பெருகும். அரசியல் சரிநிலைகளுக்காகவும் அதிகார காழ்ப்புக்காகவும் கலை பலியிடப்பட்டால் இழப்பு அந்த சமூகத்திற்கே. கலையும் இலக்கியமும் அரிசியும் பருப்பையும் போல் மக்களின் வாழ்வை செழுமைப்படுத்தாது ஆனால் ஏன் ஒருவன் அரிசியையும் பருப்பையும் விளைவிக்க வேண்டும் எனும் அடிப்படை கேள்விக்கு விடையளிக்கும். விளைபொருள் கொண்டு கலையை மதிப்பிடமுடியாது. கலையின் இன்மையைக்கொண்டே அதன் பயன்மதிப்பை உய்த்துணர இயலும். ஆர்வெல்லின் 1984 ல் நாவல் இயந்திரங்களை கற்பனை செய்திருப்பார். கலையின்மை எந்தமாதிரியான உலகை உருவாக்கும் என்பதற்கான கொடிய கற்பனை.  'பேய்ச்சி' நாவலை அதன் முதல் வரைவிலிருந்து இறுதி வரைவுவரை மூன்றுமுறை வாசித்திருக்கிறேன். என் வாசிப்பின் எல்லையிலிருந்துகொண்டு சொல்கிறேன் மலேசிய இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. கடந்த ஆண்டு வந்த தமிழ் நாவல்களில் பேய்ச்சி மிக முக்கியமான ஆக்கம். புலம்பெயரும் முதல் தலைமுறை தொடங்கி அங்கே நிலைகொண்டு மக்கள் தங்களது தெய்வங்களையும் நட்டு வளர்த்து வேர் பிடித்து தழைக்கும் பெரும்சித்திரத்தை நாவல் காட்டுகிறது. வரலாற்று ரீதியாக ரப்பரிலிருந்து செம்பனைக்கு மலேசியா மாறும் காலகட்டத்தை சித்தரிக்கிறது. ஆக்கும் அன்னை அழிக்கும் அன்னை எனும் தொன்மையான தாய்தெய்வ உருவகத்தை வளர்த்தெடுக்கிறது. சாமான்ய தமிழர்கள் குறித்து மிகுந்த பரிவுடனும் நேசத்துடனும் எழுதப்பட்ட ஆக்கம். நாஞ்சில் நாடன் ஒரு நேர்காணலில் சொல்கிறார் என்று சாலையில் செல்லும் ஒருவன் பாலியல் தொழிலாளி மகனே என்று திட்டுகிறானோ அன்று நானும் கதையில் எழுதுகிறேன் அதுவரை ஒரு கதைமாந்தர் தேவடியா மகனே என்றுதான் திட்டும். மக்களின் புழங்குமொழியை புனைவுக்கு பயன்படுத்துவது இயல்பானது. எல்லா இலக்கியங்களையும் குழுந்தைகளை முன்வைத்து சிந்திக்க வேண்டியதில்லை. கிளர்ச்சியூட்டும் விதமாக காமத்தை எழுதுகிறார் என்பதை இலக்கிய விமர்சனமாக சொல்லலாம். அது கவனத்தை தக்கவைப்பதற்கான ஒரு உத்தி, வாசகரை இன்புறச்செய்ய ஏமாற்ற கைக்கொள்ளும் முறை போன்ற விமர்சனங்கள் ஒரு படைப்பின் மீது வைக்கப்படலாம். ஆனால் அப்படி எழுதவேக்கூடாது என சொல்வதற்கில்லை. பேய்ச்சியை பொறுத்தவரை சின்னிக்கும் மணியத்திற்கும் இடையிலான உறவு அதில் சின்னி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் கதைக்கு தகுந்தது. அதை உணர்வுப்பூர்வமாக சித்தரித்துள்ளார் நவீன். அந்த சித்தரிப்பை மிகை என ஒருவர் வாசிப்பின் ஊடாக சுட்டிக் காட்ட இடமுண்டு. ஒன்றை ஆபாசம் என சொல்வதில் சொல்லும் நம் மனதின் ஆபாசமே வெளிப்படுகிறது. 

நவீன் இதை துணிவுடன் எதிர்கொள்கிறார். இந்த தருணத்தில் நண்பராகவும் சகபடைப்பாளியாகவும் அவருடன் இருக்கிறேன். இந்த சர்ச்சைகளுக்கு அப்பால் பேய்ச்சி மலேசிய இலக்கிய வரலாறில் முக்கியமான முன்நகர்வு என்பது உணர்ந்துக்கொள்ளப்படும். https://youtu.be/KkRylkdA4q8

No comments:

Post a Comment