புத்தகங்கள்

Pages

Tuesday, November 3, 2020

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

(வல்லினம் இதழில் சுளுந்தீ குறித்து வெளியான கட்டுரை

ஜெயமோகன் இந்த கட்டுரை குறித்தும், நாவல் குறித்தும் சிறு குறிப்பை அவருடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவலைப் பற்றி சுனீல் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு புனைவுப்பாவனை உண்டு. சுளுந்தீ தன்னை ஒரு மாற்றுவரலாறாக, நாட்டாரியல் ஆவணமாக உருவகித்துக்கொண்டு பேசுகிறது. அவ்வகையில் முன்னோடியான படைப்பு கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம். அவ்வரிசையில் அதிகமாக இங்கே எழுதப்படவில்லை.



கிராமிய யதார்த்தவாதத்திற்கும் இதற்கும் வேறுபாடுண்டு. கிராமத்தை ஒரு முற்போக்கு யதார்த்தவாத நோக்கில் பார்த்து எழுதப்பட்ட நாவல்களில் முன்னோடியானது ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டிசுட்டது’. அதன்பின் ஹெப்ஸிபா ஜேசுதாசனின்  ‘புத்தம்வீடு‘ முதல் தோப்பில் முகமதுமீரானின் ‘ஒரு கடலோரக்கிராமத்தின் கதை’, ஜோ டி குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ வரை பல நாவல்கள் உள்ளன. அவற்றிலுள்ள வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றின் நீட்சி. மாறாக கி.ராவில் தொடங்கும் நாட்டாரியல் யதார்த்தவாதம் இன்னொரு வரலாற்றைச் சொல்ல முற்படுகிறது. இணைவரலாறு, மாற்றுவரலாறு


பக்கம் பக்கமாக அறியப்படாத செய்திகளுடன் ஓர் ஆவணத்தொகையெனவே அமைக்கப்பட்டுள்ள முத்துநாகுவின் சுளுந்தீ அவ்வகையில் கி.ரா உருவாக்கிய அழகியலில் ஒரு முன்னோக்கிய நகர்வு. இச்செய்திகளில் பெரும்பாலானவை நாட்டாரியலில் இருந்து பெறப்பட்டவை. நாட்டாரியலில் செய்திகள் தொன்மத்துக்கும் நம்பிக்கைக்கும் தரவுகளுக்கும் நடுவே ஊசலாடுபவை. நாட்டுமருத்துவம், மந்திரவாதம், குலக்கதைகள், சிறுதெய்வக்கதைகள் என அவை விரிந்து கிடக்கின்றன. சுளுந்தீ அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து ஓர் இணைவரலாற்றுப் படலமாக நெய்கிறது. நன்றி ஜெ.)

----

வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும் நன்கு கவனம் பெற்ற இரா. முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ வரலாற்று இடைவெளிகளைச் சாமானியரின் கோணத்திலிருந்து அணுகுகிறது. இதுவரை தமிழகத்தில் பதிவாகாத வரலாற்றுக் கோணங்களை இன வரைவியல் நோக்கில் ஆவணப்படுத்துகிறது.


நாவலின் முதன்மை பாத்திரங்கள் என அரண்மனை நாவிதன் எனும் நிலையிலிருந்து மாபண்டுவனாக நிலைபெறும் இராமப் பண்டுவன் மற்றும் அவனுடைய மகனான செங்குளத்து மாடனையும் சொல்லலாம். நாவல் இன்று கொடைக்கானல் என்றறியப்படும் ‘பன்றி மலையை’ உள்ளடக்கிய கன்னிவாடியைக் களமாகக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லை சுற்றிய குன்னுவரயான்கோட்டை போன்ற இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருச்சி, மதுரை, செஞ்சி, ராமேஸ்வரம் என தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நாவல் விரிந்து செல்கிறது. நாயக்கர் ஆட்சியில் சொக்கநாத நாயக்கர் (1662-1682) மதுரை மன்னராக இருந்த காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. நாவலில் வரும் பாதிரியார் ஆல்வரஸ், பன்றிமலை சித்தர், கொன்றிமாயன்- வங்காரகன், அரண்மனையார் சின்ன கதிரியப்ப நாயக்கர் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள் என்று குறிப்பிடும் எழுத்தாளர் தரவுகள் வழியாக அவர்களைத் தேடி ஆவணப் படுத்தியுள்ளார். முத்துநாகு அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரும் கூட. ‘தமிழகத்தில் நிலவும் பெரும்பாலான மரபுகள், அரசியல், சமூகப் பழக்கங்கள், பாதிப்புகள் யாரால் எப்போது வந்தன? என்பதற்கான பதிலைப் பன்நெடுங்காலமாக மக்களிடம் தேடினேன். எனக்குக் கிடைத்த தரவுகளே ‘சுளுந்தீ’ என்ற பெயரில் வரலாற்றுக் கதைக்களத்தைத் தந்தது.’ என நாவலின் மைய பேசுபொருள் குறித்து எழுதுகிறார் முத்துநாகு. மேற்சொன்ன கேள்விகளை நாவித சமூகத்தின் வரலாற்றுடன் இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். தரவுகளை வெளிப்படுத்த கதைகளத்தைத் தேர்ந்ததாக முத்துநாகு குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.


நாவிதர்களின் சமூக நிலை எப்படியிருந்தது? அவர்களின் நிலை ஏன் கீழே இறங்கியது? எனும் கேள்வியைப் புனைவினூடாக எழுப்புகிறார். நாவிதர்களிடம் இருந்த பண்டுவம் எனும் மரபு மருத்துவம் அவர்களை விட்டுச் சென்றது குறித்தான கேள்வியையும் எதிர்கொள்கிறார். தனிப்பட்ட முறையில் ஆயுர்வேத மருத்துவனாக இந்த வரலாற்றுக் கோணம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆயுர்வேதத்தில் இருபெரும் நூல்களான சரக சம்ஹிதையும் சுசுருத சம்ஹித்தையும் முறையே பொது மருத்துவத்தையும் அறுவை சிகிச்சையையும் பேசுகின்றன. ஆனால் காலபோக்கில் அறுவை சிகிச்சை ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் இழந்தது. இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மயக்க மருத்துவம் இல்லாததால் அறுவை சிகிச்சை பெரும் வலி ஏற்படுத்தும் அனுபவமாக இருந்தது. பவுத்த சமண மதங்களின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானது என்பது ஒன்று. உடலைத் தொடுவது தீண்டுவது சார்ந்து உருவாகி வந்த இறுக்கங்கள் மற்றொன்று. பண்டுவம் என சொல்லப்படும் ரச சாத்திர மருத்துவம் மெல்ல மைய மருத்துவ போக்குடன் பனிரெண்டாம் – பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இணைந்து கொண்டது. திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயர்களுக்காக மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த கொவ்சாஜி என்பவருக்குப் போரில் மூக்கு அறுபட்டது. அதை ஒரு குயவர் சீர் செய்தது பிளாஸ்டிக் சர்ஜரியின் தொடக்கம் என கருதப்படுகிறது. இரு ஆங்கிலேய மருத்துவர்கள் விரிவாக இந்த reconstructive rhinoplasty முறையை ஆவணப்படுத்தி உள்ளார்கள். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, சுமார் ஆயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு முன் சுசுருத சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முறை பதினெட்டாம் நூற்றாண்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதே. வழக்கொழிந்த செல்வாக்கிழந்த மருத்துவமுறை என நம்பப்பட்ட ஒன்று மக்கள் மருத்துவத்தில் ஒரு பகுதியாகப் புழங்கி வந்துள்ளது என்பதற்கான மிக முக்கியமான சாட்சியம். கத்தி பயன்பாடு கொண்ட நாவித சமூகமும் இயல்பாக அறுவை சிகிச்சையில் நிபுணர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் பொது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. தமிழக பின்புலத்தில், இத்தனை செல்வாக்குடன் மருத்துவத்தைப் பேணி வந்தவர்களிடமிருந்து அறிவு தொடர்ச்சி இற்றுப்போனதற்கு அரசியல் அதிகார காரணிகளை முத்து நாகு சுட்டுகிறார்.


சுளுந்தீ எந்த அளவிற்கு வரலாற்றுப் பிரதியோ அதேயளவிற்கு ஒரு அரசியல் பிரதியும் கூட. ஒடுக்குமுறை அரசிற்கு எதிராக மக்களின் விதவிதமான கிளர்ச்சிகளை ஆவணப் படுத்துகிறது. பஞ்சத்தில் வரி கொடுக்க இயலாமல் குலவிலக்கம் செய்துகொண்டு ஆடு மாடுகளை ‘நாசமா போ’ என அவிழ்த்துவிட்டு இரவோடு இரவாக, வாழ்ந்த வீட்டையும் மண்ணையும் விட்டுச் செல்கிறார்கள் மக்கள். வழி தப்பாமல் இருக்க ஊணாங்கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு ‘தாம்பில புனைந்த மாடுபோல காட்டுக்குள்ள புகுந்து’ செல்கிறார்கள். இப்படி வெளியேறிச் செல்லும் திரள் அரண்மனை மீதுள்ள எதிர்ப்பைக் காட்டும்விதமாகக் கண்மாயில் இருக்கும் சொற்ப நீரில் கச்சமுட்டிக் காய், எட்டிக்காய், அரளி விதையை அரைச்சு கலக்கி நஞ்சாக்குகிறார்கள். அதை குடிப்பவர்களுக்கு வயிற்ரோட்டம், வாந்தி பேதி ஏற்பட்டுப் பண்டுவம் இல்லாமல் பலரும் மடிகிறார்கள். மண்ணை நக்கி வெயிலில் அலைந்து திரிந்த ஆடு, மாடுகள் குளத்து நீரைக் குடித்துக் கழிச்சல் கண்டு மடிகின்றன. தரிசாக உள்ள நிலத்தில் நாய்க்கடுகு விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். மக்கள் திரளிடம் இயல்பாக இருந்த அரசின்மைவாத கூறுகளையும் மக்களை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விரிவாக ஆவணப் படுத்துகிறது. பண்டுவ மருந்துகள் வெடி மருந்துகளாகவும் பயன்படுத்தப்பட்டன. அவற்றைக் கொண்டு ஆளும் அரசை அச்சுறுத்த முடியும் என கருதியதால் அவற்றின் பயன்பாடு தடைசெய்யப்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்குப் பண்டுவர்கள் வெடி மருந்தைக் கொடுத்து உதவி இருப்பார்கள் என சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர், குலநீக்கம் செய்யப்பட்டனர்.


வெவ்வேறு பகுதிகளில் பண்டுவர்களைக் குடிப்படையினர் அடையாளம் காட்டுகிறார்கள். மன்னரின் படை ஊர் மந்தையில் அவர்களைக் கட்டி  புளியம் விளாரால் அடித்து, கொடுவாளால் கழுத்து அறுத்து வீசியெறிகிறார்கள். ‘பழனியில் மட்டும் இருபத்தி மூணு பண்டுவன், மூணு சித்தர்கள் பொணம் தெருவில் கெடக்குது. பொணத்த பார்த்த சனங்கள் அரண்மன, பெரியதனம், நாட்டாம, குடிப்படைகளுக்கு இந்திரியம் வேல செய்ய மட்டும் மருந்து கொடுபானங்க இவனுங்க. குடியானவன் கையறுத்தக் காயத்துக்குப் பழைய சுண்ணாம்பு கேட்டாக்கூட தரமாட்டானுங்க. சாகட்டும் இந்த நாய்க.’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள் என எழுதுகிறார். பண்டுவர்களுக்கும் மக்களுக்குமிடையே இருந்த உறவு- விலகல் சார்ந்து ஒரு முக்கியமான மாற்றுப்பார்வையும் கூட. மரபாகக் கற்ற பண்டுவத்தை நாவிதர்கள் கைவிட நேர்ந்தது. உயிரச்சத்தின் காரணமாகப் பண்டுவ ஏடுகளைப் பிராமணர்களிடம் ஒப்படைக்க நேர்ந்தது. அவர்களிடமிருந்து பண்டுவம் ‘வைத்தியமாக’ ஆனது என்பதே முத்துநாகு அளிக்கும் சித்திரம். ஆனால் முன்னுரையில் குறிப்பிடப்படும் இம்மாற்றம் நாவலில் ஒரேயொரு வரியில் வாய்மொழியாகக் கடந்து செல்லப்படுகிறது.


அயோத்திதாசரும் பறையர்களிடமிருந்து பிராமணர்களுக்கு மருத்துவம் சென்றது எனும் கூற்றை முன்மொழிகிறார். இது ஒரு வரலாற்றுக் கோணம். சமஸ்கிருத ரச சாத்திர நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. விஜய நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இடம்பெயரும் குடிகளைக் குடியமர்த்த பூர்வக்குடிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டு குலநீக்கம் செய்யப்படுகிறார்கள். குடும்ப பகை, சொத்து மீதான ஆசை என பல காரணங்களுக்காகக் குடிநீக்கம் செய்யப்படுகிறார்கள். குடிகளுக்கு இடையேயான உட்பூசல் அரசிற்கு எதிரான கிளர்ச்சியை மட்டுப்படுத்தும் என்பதே அரசின் கணக்கு. அப்படிச் செய்யப்பட்டவர்களுடன் இருந்த கொண்டு – கொடுத்த உறவையும் நுட்பமாகப் பதிவாக்குகிறார். இப்படி விலகியவர்கள் அரசிற்கு எதிராகக் கலகம் புரிய முயல்கின்றனர். ஆல்வரஸ் பாதிரியார் பாத்திரம் வழியாக அரசிற்கு எதிரான கொந்தளிப்பு மடைமாற்றப்படுகிறது. அரசிற்கும் மத நிறுவனத்திற்கும் இடையே அதிகாரத்தை நிலைநிறுத்த எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இயற்கையின் ஆற்றல்கள் மீது அரசு தன் ஆளுகையைச்  செலுத்துவதன் மூலம் அதிகாரத்தைத் தக்கவைக்கிறது. கலகத்தைத் தடுக்க நெருப்புப் பயன்பாட்டை மொத்தமாக அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. தீகொளுத்தி என்றொரு பதவி உருவாக்கப் படுகிறது. இதே அரசுதான் பஞ்சத்தில் பாசனமின்றி தவிக்கும் மக்களுக்குக் கிணற்றுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்துகிறது. பாளையங்களுக்கு இடையேயான உறவும் பூசலும், அதிகாரப் போட்டியும், அவை எதிர்கொள்ளப்பட்டு வெல்லப்பட்ட அரசியல் சதிராட்டமும், அதில் நாவிதர்களின் பங்களிப்பும், அதனால் ஏற்பட்ட விளைவும் நாவலில் பேசப்படுகிறது. இந்த அரசியல் ஆட்டங்களும் அதிகாரப் போட்டியும் சாமானியர்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகளை மாடனின் பாத்திரம் வழியாக சித்தரிக்கிறது.


தந்தை இராமப் பண்டுவன் பெரும் திறமை இருந்தும் அரசிடம் பணிவும் பக்தியும் கொண்டவனாக இருக்கிறான். அரண்மனையாரின் கமுக்கங்களைப் பேணுகிறான். அவர்களுக்காகப் பகைகளை முடித்து வைக்கிறான். பலமுறை தளபதி அவனை அழிக்க முயற்சித்தும் அரண்மனையாரின் நம்பிக்கைக்குரியவனாக வாழ்கிறான். மரணத்திற்குப் பிறகு அரண்மனையாரே அவனுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார். மகன் மாடன் ராமனுக்கு நேரெதிரானவன். துடுக்கும் மீறலும் நிறைந்தவன். அவனுடைய மனப்பாங்கை எடுத்துக்காட்ட முத்துநாகு சித்தரிக்கும் ஒரேயொரு காட்சியைச் சுட்டலாம். எந்த ஊரிலும் எவரும் அவனிடம் சவரம் செய்துகொள்ள முன்வராதபோது ஒரேயொரு கிழவருக்குக் குதிரையில் அமர்ந்தபடியே சிரைத்து விடுகிறான். மாடனின் பாத்திரம் உண்மையில் ‘ஒரு கோபக்கார இளைஞனின்’ வார்ப்புடையது. முந்தைய தலைமுறையிலிருந்து விலகி கலகம் ஏற்படுத்த முனைவது. சித்தருக்குக் காணிக்கையாக அளிக்கப்படும் அரபுக் குதிரையை அவருடைய சீடனான ராமனுக்கு அளித்துவிடுகிறார். ராமன் ஊருக்குள் வரும்போது நேராக அரண்மனையாரை சந்தித்துக் குதிரையை  அரண்மனைக்கு அளிக்க முன்வருகிறான். அவனுடைய பண்பைப் பாராட்டி குதிரையை அவனே வைத்திருக்க அனுமதிக்கிறார். ராமன் நாவிதன் நிலையிலிருந்து பண்டுவனாக சித்தரின் வாரிசாகத் தன்னிடத்தை நிறுவிக் கொள்கிறான். மனைவி வல்லத்தாரையை குன்னுவராயன்கோட்டைக்கு அழைத்துச் செல்லும்போது அவளைக் குதிரையில் அழைத்துச் செல்கிறான். குடிப்படைகள், அரண்மனையார் யாரும் இல்லாதபோதே வல்லத்தாரை குதிரையில் ஏறுகிறாள். ராமன் குதிரையில் வரும்போது உறுத்தாதது அல்லது சன்னமான உறுத்தலாக இருந்தது மாடன் குதிரையில் வரும்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்துகிறது. மாடனைப் படைவீரனாக்க வேண்டும் எனும் ராமனின் கனவு பொய்த்துப் போகிறது. அவனுடைய பிறப்பு விதித்தப் பணியை சமூகம் மீறுவதற்கு அனுமதிக்கவில்லை. இணக்கமும் மதிப்பும் எந்த எல்லைவரை எனும் கேள்வியை இந்தப் பாத்திர வார்ப்புகள் எழுப்புகின்றன. கலகம் ஏற்படுத்தாத வரையில், எதையும் பெரிதாகக் குலைக்காத வரையில் விதிவிலக்குகளை சமூகம் அனுமதிக்கிறது.


ராமன் – மாடன் பாத்திர வார்ப்பு மிகுந்த சமகாலத்தன்மை உடையது. தலித் அடையாளத்துடன் பொருந்திப் போகக் கூடியதும் கூட. ‘மரங்க விளைஞ்ச பின்னாலதான் வைரம் பாயும். ஆனா சுளுந்தீ மரம் மட்டும் பூமிய விட்டு முளைச்சு வெளியேறி தழைக்கும் போதே வைரமா வெளியேறும். சுளுந்தீ மரம் கெண்டைக் காலளவுக்கு மேல் பெருக்காது. மலை அடிவாரமும் உச்சியும் இல்லாத இடைப்பட்ட இடத்தில், காக்காபின் தாது மண் வாகுள்ள நிலத்தில மட்டும் முளைக்கும். வருசக் கணக்கா மழையில்லேன்னாலும் கழுமரம் போல உசுர உள்ளே வச்சுக்கிட்டே இருந்து மழ பெஞ்ச ரெண்டாம் நாள் தழைக்கும்.’ எனும் விவரணை ‘சுளுந்தீ’ என்பதையே ஒடுக்கப்பட்ட மக்களின் போரியல்பின்  குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. குலநீக்கம் செய்யப்பட மக்களுடன் தனது வருடக் கூலியைப் பகிர்ந்துகொள்ளும் மாடன் மருதமுத்து ஆசாரியால் சுளுந்தீ என்றே சுட்டப்படுகிறான்.


பன்றிமலை சித்தன், குலகுரு, மருதமுத்து ஆசாரி ஆகியோர் நாவலின் முக்கியமான கதை மாந்தர்கள். மருதமுத்து ஆசாரி ஒரு புரட்சியாளனாக மக்களைத் திரட்டுகிறான். இலக்கற்ற கோபம் கொண்டிருந்த மாடனை அரசிற்கு எதிரான ஆயுதமாகப் பட்டைத் தீட்டுகிறான். குலகுரு மக்களிடம் நெருக்கமான உறவைப் பேணுபவன் சைவ மடாதிபதி. மக்களின் சிக்கல்களை மன்னரிடமும் அரண்மனையாரிடமும் கொண்டு செல்பவர். ஆனால் அவருக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது. மக்களின் சிக்கலை மன்னரிடம் பேசவரும் குலகுருவை அவமதிக்கும்விதமாக இனி குலகுரு சீடர்களைக் கொண்டு பள்ளிகள் நடத்தக்கூடாது, மக்களை சந்திக்கக் கூடாது என அரசாணை இடுகிறார் மன்னர். ‘மன்னருக்குக் குலகுரு ஆசிகள் எப்போதும் உண்டு.’ என்று சொல்லிக் கிளம்பியபடி, ‘வௌவால் வாழும் மான்களில் நூலாம்படைகளும் பூச்சிகளும் எங்களுடன் சேர்ந்து வாழட்டும்.’ என அறம்பாடிச் செல்கிறார். பன்றிமலை சித்தர் அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர். தமிழ், தெலுங்கு, பாரசீக மொழி என எல்லாவற்றிலும் பேசக் கூடியவர். பெரும்பாலும் மவுனத்திலும் தவத்திலும் மூழ்குபவர். வெளியே நிகழும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு எவ்விதத்திலும் உளம் அளிக்காதவர். அவரே கூட திண்டாடும் குடிநீக்கம் செய்யப்பட மக்களுக்கு மனமுவந்து வழிகாட்டுகிறார். சித்தர் ராமனை வாரிசாகத் தேர்வதும், மக்கள் புடைசூழ மறைந்து போவதும் நாவலின் உயிர்ப்பான பகுதிகள்.


தளபதியின் அந்தரங்க ரகசியத்தை அறிந்து கொண்டவன் எனும் முறையில் ராமன் மீது அவருக்குத் தொடக்கம் முதலே வெறுப்பு. தளபதி ஒரு சதிகாரராக சித்தரிக்கப்படுகிறார். இறுதியில் அவருடைய வலைப்பின்னல் அவரையே சாய்க்கிறது. பூர்வகுடிகள் வந்தேறிகள் என இனரீதியான ஒரு கண்ணோட்டத்தை நாவலின் முன்னுரையில் முத்துநாகு கோடிட்டுக் காட்டினாலும் நாவலின் அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர், விருப்பாச்சியார் போன்றோரின் சித்தரிப்புகள் முழுக்க கருப்பு வெளுப்பாக இல்லாமல், கலவையாக உயிர்ப்புடன் திகழ்வதால் நாவல் முழு இனவாத பிரதியாகவில்லை. நாவலில் குறிப்பிடத்தக்க பெண் பாத்திரங்கள் என வல்லத்தாரை மற்றும் அனந்தவல்லியைச் சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு நாவலில் பெரிய பங்கு ஏதுமில்லை. வழமையான வார்ப்புருவில் உருவாகி வந்தவர்கள்.


நவீன இலக்கியத்தின் முதன்மையான விதிகளில் ஒன்று ‘சொல்லாதே காட்டு’ என்பதே. முத்துநாகு இந்த விதியைத் தலைக்கீழாக்கம் செய்திருக்கிறார். ‘காட்டாதே சொல்’ என்பதது. அவரே முன்னுரையில் குறிப்பிடுவது போல் தரவுகளுக்கான வெளிப்பாடாகத்தான் கதைகளத்தைத் தேர்ந்திருக்கிறார்.  இதனால் நாவலின் செய்திறன் சார்ந்து சில குறைகளைக் கண்டுகொள்ள முடிகிறது.  இரண்டு மூன்று உதாரணங்களைச் சொல்லலாம். ‘பொன்மான்துரையில  அம்மன் கோயில்ல எரிந்துகொண்டிருந்த அக்கினி குண்டத்த குடிப்படை தண்ணிய ஊத்தி அணைச்சாங்களாம். இதப் பார்த்த அம்மன் கொண்டாடி மயங்கி விழுந்து அங்கனையே உசுரு பிரிஞ்சுதாம். ஊரிலிருக்கிற அத்தன பேருக்கும் சாமிவந்து ஆடி ஊரே தலைவிரிக் கோலமா கிடந்துச்சாம்.’ இது ஒரு மிகத்தீவிரமான தருணம் ஆனால் இந்த ஒருபத்தியில் சொல்லிக் கடக்கிறார். மற்றொரு இடத்தில், குள்ளப்ப கவுண்டன் சதுர்வேதி மங்கலத்தில் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிர்வினையாக வயோதிகர் சங்கரப் பிள்ளை ‘நாக்க புடுங்க கை அகல துணியும், நாண்டுக்கிட்டுச் சாக நாலுமுழ கயிறும் வச்சு பிழைங்கடா’ என சபித்துவிட்டுக் கட்டியிருந்த வேட்டியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறார். இதுவும் ஒருபத்தியில் ஒற்றர் கூற்றாகச் சொல்லப்படும் தீவிரமான தருணம்தான்.  மூன்றாவதாக ஓர் உதாரணம், அரண்மனை தீக்கொளுத்தி கதிரி வாடனுக்கும் அரண்மனை ஏவலாளி எத்துலாவுலுக்கும் இருக்கும் தனிப்பட்ட பகையின் காரணமாகக் கதிரி வாடன் மகனை வீரப்பூர் படைகளிடம் பிடித்துக் கொடுத்துக் கழுகுகளுக்கு இரையாக்குகிறான். இவையும், இவைத்தவிர இக்கட்டுரையில் சுட்டப்படும் அத்தனை தீவிரமான நிகழ்வுகளும் எவரோ ஒருவரின் கூற்றாகச் சொல்லப்படுகின்றன.


நாவல் முழுக்க பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வரலாற்றுத் தகவல்கள், வெவ்வேறு இனங்களின் வாழ்க்கை முறை பதிவுகள், சொல் ஆராய்ச்சிகள் என கதை மாந்தர்கள் தகவல்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். ஏகாலி துணி வெளுக்க வெள்ளாவியில் அடுக்கும் முறை, சாணார்களின் பிணக்கு, குல நீக்கத்திற்கான காரணிகள், குலத்தில் சேர்த்துக்கொள்ள செய்யப்படும் சடங்குகள், கோவில் காளை எப்படி உருவாகியிருக்கும் என பலவும் உரையாடல் வழியாகச் சொல்லப்படுகின்றன. முனி, பிசாசு போன்றவற்றுக்கு அவர் அளிக்கும் விளக்கம், பூசாரி எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்தே வேண்டுதல்கள் இருக்கும். பாம்பை விரட்ட வயல் ஓரத்தில் தூவப்படும் சாம்பல் போன்ற அசலான அவதானிப்புகள் கண்டடைதல்கள் தெறிப்புகளாக ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. இயற்கை சார்ந்த அவதானிப்புகள் வழியாகப் பருவ மாற்றங்கள் அடையாளம் காணப்படுகின்றன. கூவக சாத்திரம் பகுதியை உதாரணமாகக் காட்டலாம்.    குறைந்த பட்சம் ஒரு மருத்துவ தகவலேனும் இல்லாத பக்கமே நாவலில் இல்லை எனும் அளவிற்கு ஏரளமான மருத்துவத் தகவல்கள், மருந்து செய்முறைகள் கூறப்பட்டுள்ளன. நாவலில் மிக சுவாரசியமான தகவல் என்பது கொடைக்கானலில் புகழ்பெற்ற சுற்றுலாதளமான தற்கொலை முனை எனும் சூசைட் பாயின்ட் குறித்து முத்துநாகு விவரித்திருக்கும் பகுதிதான். ஓர் அமானுட கிளர்ச்சியை அளித்தது. அரண்மனை நீதி கிடைக்காதவர்கள் இந்தக் கரட்டில் ஏறி மனச் சுமையை வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் பெறுவதாக நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் இடம் என்கிறார். கரட்டில் ஏறி சுழிக் காத்தால கால் தடுமாறி கீழே விழுந்து உயிரை விட்டவர்கள் எழுப்பும் பெருமூச்சுதான் இந்தச் சுழிக்காற்று என மக்கள் நம்பினர். முறை மீறிய உறவுகளில் ஈடுபட்டவர்கள், குலவிலக்கான பெண்கள், உடன்கட்டை  ஏற மறுக்கும் அரண்மனை பெண்கள் போன்றோரை உறுமிக் கரட்டிற்கு இழுத்துப் போய் விட்டுவிடுவது அரண்மனைத் தண்டனை. இந்தக் குன்றில் ஏறினால் மரித்தவர்களின் ஆவிகள் ஒன்று கூடி காற்றுடன் சேர்ந்து கரட்டில் எரியவர்களை அழைத்துச் சென்றுவிடும்.  ‘கரட்டில் பொண்ணுக ஏறினா கரட்டின் கீழுள்ள பட்டாளம்மன் கோயில் பூசாரி உறுமிய எடுத்து அடிப்பான். உறுமிச் சத்தம் பன்றிமலையில் சிலாரடித்துக் கரட்டில் ஏறிய பொண்ணுக அடிவயிற்றில ரெட்டிப்பாக்கி பித்தம் கலங்கும். கதி கலங்கியவங்க மூளைக்குள்ள உறுமிச் சத்தத்த தவிர வேறேதும் கேட்காது. கரட்டில ஏறினவங்க தடுமாறி விழுகுற வரைக்கும் உறுமிய அடிச்சிக்கிட்டே இருக்க அரண்மனை உத்தரவு இருக்கு. கரட்டில ஏறின சில உசுருகள் வேகமாக விழுந்து தொலையாது. இதனால நாலைஞ்சு உறுமிக சேந்து அடிச்சு உசுர எடுத்துருவாங்க.’ என ஒரு சன்னதத் தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.


பல்வேறு கிளை கதைகள் நாவலின் ஊடாகச் சொல்லப்படுகின்றன. இந்தக் கதைநாகு தொகையிலிருந்து நாம் சில கதைகளைத் தனித்து விரித்து சிறுகதைகளாகவோ நாவலாகவோ ஆக்க முடியும். சமண முனிவர்கள் மருத்துவம் பரப்பிய கதையும் அவர்களின் நினைவாகக் காது வளர்க்கும் வழக்கம் உருவானதையும் சொல்கிறார், முத்துரங்கன் மாட்டு பஞ்சாயத்து கதை, பட்டிவீரன் கதை, ஆண் கல் பெண் கல் கதை நல்லதொரு காதல் கதையென சொல்லலாம், சடாமுனி கட்டகாமன் – மண்டுகருப்பி கதை தன்னளவில் தீவிரமானது. பெர்சிய அடிமையை குதிரையை அடக்கியதால் கட்டிக்கொண்ட விருப்பாச்சி அரண்மனையார் கதை, குப்பு அய்யர் வளர்க்கும் பட்டாபி காளை மஞ்சுவிரட்டில் அணையப்பட்டதும் அதன் கொம்பை வெட்டி முறித்து அவிழ்த்து விடுகிற கதை, ராவுத்த படைவீரன் கபார்கான் பெண் கேட்டு வரும்போது அரண்மனையிடம் கலந்துகொண்டு சொல்வதாகச் சொல்லிவிட்டு மருதையன் இரவோடு இரவாக மந்தையைக் காலி செய்துக்கொண்டு வேறிடத்திற்குச் செல்வது, கொன்றிமாயனை சடாமுனி ஆசிர்வதித்த கதை, வங்காரகன் கிடாவிடம் முட்டி முட்டி தலையை வலுப்படுத்திய கதை என பல கதைகளும் தன்னளவில் சுவாரசியமானவை.


இந்நாவலின் தனித்தன்மையும் எல்லையும் இதுவே. சித்தரிப்புகளும் தகவல்களும் கதையின் மையத்திற்கு வலு சேர்ப்பவையாக, குறியீட்டு ரீதியாகத் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பது நவீன இலக்கிய வாசகர் / விமர்சகரின் எதிர்பார்ப்பு. இராமப் பண்டுவன் ஒரு பெரும் மருத்துவன், அவனுடைய ஆசிரியர் பன்றி மலைச் சித்தர் மருத்துவ மேதை. ஓரிரு தருணங்களில் இது நிறுவப்பட்டாலே போதும், ஆனால் நாவலில் அவர்களைச் சந்திக்கவரும் அத்தனை பேருக்கும் விதவிதமான உடல் உபாதைகள் உள்ளன. அத்தனை பேருக்கும் மருத்துவம் சொல்கிறார்கள். மருத்துவ தகவல் இல்லாத ஒரு பக்கம் கூட நாவலில் இல்லை என சொல்லிவிடலாம். புனைவின் முதன்மை பணி ஆவணப்படுத்துதல் அல்ல. அது ஒரு கூடுதல் பலம். இந்தத் தகவல் குவிப்பு என்ன செய்கிறது? வாசகரைப் புனைவு ஊடுருவி அந்தரங்கமாகத் தொந்தரவு செய்து, தன்னை விசாரணைக்கு உட்படுத்த விடுவதில்லை. தகவல்களின் விந்தைத்தன்மையில் ஈடுபட்டுக் கொள்கிறது. கதை மாந்தர்களின் சித்தரிப்புகளிலும் துண்டுபடல்களை உணர முடிகிறது. மாடன் தன் தந்தையின் மரணம் ஒரு கொலை சதி என்பதை உணர்கிறான். மருதமுத்து ஆசாரி அவனை அரசிற்கு எதிராகத் திருப்புகிறார். ஆனால் அதன் பின்னரும் கூட அரண்மனையாரை நேரில் சந்தித்தால் எல்லாம் இயல்பாகிவிடும் என நம்புகிறான். சித்தர் குளித்து எழுந்து மறைந்த குளத்தில் ஊரார் முன் முங்கி எழுகிறான் ராமன். அரண்மனையார் அவனை மரியாதையுடன் கன்னிவாடிக்கு அழைக்கிறார். ஆனால் அதன் பின், முந்தைய தருணத்தில் அவன் அடைந்த உயரத்தை அடையவே இல்லை. சித்தர் அடங்கப்போகும் செய்தியை அரண்மனையாரிடம் சொல்ல மறந்துவிடுகிறான் மீண்டும் நினைவுக்குவந்து சொல்கிறான். மாடனுடன் மல்யுத்தம் செய்யத் தயார் என அறிவித்துக்கொண்டு கிளம்பிய சின்ன பூதன் முந்தைய நாள் இரவு புலியடித்து இறக்கிறான். தற்செயல்களும், விபத்துகளும் மறதியும் நிதர்சன வாழ்வில் முக்கியமானவற்றைத் தீர்மானிப்பது உண்மைதான். ஆனால் புனைவில் அவற்றின் பயன்பாடு ஒரு குறையாகவே கருதப்படும். மாடனைத்தவிர நாவலின் வேறு கதை மாந்தர்கள் மனதில் ஊன்றி வளரவில்லை. குலகுரு, ராமன், சித்தர், புலவர் என அனைவரும் ஒரே தொனியில் கதைகளைச் சொல்கிறார்கள்.


வரலாற்று நாவலின் மிக முக்கியமான சவால் என்பது அங்கு நாயகர்களையும் எதிரிகளையும் உருவாக்காமல் இருப்பது என்பதே. வரலாற்று நிகழ்வைத் தரப்புகளாக ஒருபோதும் சுருக்கி எளிமை படுத்திவிடக் கூடாது. நல்ல வரலாற்று எழுத்து என்பது நிகழ்வின் வெவ்வேறு சிடுக்குகளை, பிணைப்புகளை விரித்துக் காட்டும். வரலாறு குருதி சிந்தவைக்கும் கொடுவாளாகக் காலம்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரலாற்றுப் புனைவு பழைய காயங்களை நோண்டுவதற்கு, கணக்குத் தீர்ப்பதற்குப் பயன்படக் கூடாது. Historical fiction should never trivialize the event, but it should complicate the event. இதை ஒரு பொன்விதியாக வரலாற்றுப் புனைவில் போட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே இங்குள்ள வடுகர் தமிழர் ஆதிக்கம் சார்ந்த அரசியலுக்கு சில விவாதக் கருக்களை சுளுந்தீ அளிக்கிறது, முன்னுரையில் முத்துநாகு குறிப்பிடுவதும் அதைத்தான். எனினும் நாவலின் தரவுகளும் தகவல்களும், கதை மாந்தர்களின் மீதான கரிசனம் கூடிய சித்தரிப்புகளும்  சுளுந்தீயை காக்கிறது.


அம்பாரமாகக் குவியும் தகவல்கள் சில சுவாரசியமாகவும் உள்ளன. உதாரணமாக மரணச் சடங்கில் நாவிதர்களின் பங்களிப்புப் பற்றி சொல்லும் இடத்தைச் சொல்லலாம். வரலாற்றுப் புனைவில் வரலாற்று அம்சம் கூடுதலாகவும் புனைவம்சம் குறைவாகவும் உள்ளது. தகவல்களும் தரவுகளும் புனைவாக்கம் (fictionalizing the data) நிகழாமல் இருப்பதால் அரிய, புதிய நிகழ்வுகள் கூட மனதில் வலுப்பெற்று வளராமல் குன்றி விடுகின்றன. முத்துநாகு வரலாற்று ஆய்வாளராக, நாட்டாரியல் அறிஞராக மிளிரும் அளவிற்குப் புனைவாசிரியராக மிளிரவில்லை. ஆனால் அவருடைய புனைவாக்கத் திறன் இந்நாவலில் வெளிப்பட்ட இடங்கள் என சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும். அவை அவருடைய புனைவுத்திறன் சாத்தியத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த நாவலின் ஆகச்சிறந்த பகுதி என நான் கருதுவது, கன்னிவாடி எல்லையில் குலநீக்கம் அடைந்தவர்களை ராமேஸ்வரத்தில் இருந்து செஞ்சிக்கு மீட்டுச் செல்லும் பலராமனின் கதையைச் சொல்லலாம். அதிலும் திருக்கோஷ்டியூர் கோவிலில் முத்துநாகு சித்தரிக்கும் நிகழ்வின் உக்கிரம் அபாரக் காட்சி அனுபவத்தை அளிக்கிறது. மாடன்- வங்காரகன் யுத்தம், பன்றிமலை சித்தர் சமாதியில் அடங்குவது போன்றவையும் மிக நல்ல காட்சி அனுபவத்தை அளித்தன. ஐயமின்றி முத்துநாகு இந்த சித்தரிப்புகளில் புனைவெழுத்தாளராக மிளிர்கிறார். நாவலில் இத்தகைய தருணங்கள் அரிதாகவே உள்ளன என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது. இப்போது இந்தத் தருணங்கள் மனதில் எப்படி ஊடு புகுந்தன என யோசித்தால் இவை ‘சொல்லாதே காட்டு’ விதியை பின்பற்றியவை என்பதினால் எனக் கண்டுகொள்கிறேன்.


‘சுளுந்தீயை’ நவீன இலக்கிய அழகியல் நோக்கில் அணுகுவது சரியா என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டேன். இந்நாவல் மீதும் எழுப்பப்படும் விமர்சனங்கள் அந்த நோக்கிலிருந்தே எழுகின்றன. விரிந்து செல்ல வாய்ப்பிருக்கக்கூடிய பல இடங்கள் வெறுமே உரையாடலில் கடக்கப்படுகின்றன.  ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என்றால் பண்டுவ ஏடுகளைப் பிராமணர்களிடம் ஒப்படைத்து உயிர் பிழைப்பது. ராமன்- மாடன் கதையை மைய சரடாக உருவகித்துக் கொள்வதால், அதனுடன் பிற பகுதிகள் இயைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுகிறது. அப்படி ஒரு மைய சரடை உருவகிக்காமல் சுளுந்தீயை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும் வேறு அளவுகோலைப் பயன்படுத்த முடியுமா எனும் கேள்வியை எழுப்பிக் கொண்டேன். இந்நாவலை ‘நாட்டார் கலைகளஞ்சியத் தன்மை’ (encyclopedic) கொண்ட நாவல் என வகைப்படுத்தலாம். நாட்டார் வரலாற்றுக் கோணத்தில் தமிழில் எழுதப்பட்ட முன்னோடி நாவல் என கி.ராவின் கோபல்ல நாவல்களைக் குறிப்பிடலாம். பூமணி, கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால் உட்பட வெவ்வேறு நிலம் சார்ந்த எழுத்தாளர்கள் நாட்டார் கூறுகளைக் கதையில் கையாண்டுள்ளார்கள். அடிப்படையில் இவர்கள் நவீன இலக்கியவாதிகள்தான். கதைக்குத் தேவையான அளவு அதன் ஆழத்தை அதிகரிக்க நாட்டார் கூறுகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். பூமணியின் ‘அஞ்ஞாடி’ ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியது. நாட்டார் நோக்கில் மகாபாரதத்தை அணுகிய ‘கொம்மை’ அதன் அடுத்தக்கட்ட பரிணாமம் எனச் சொல்லலாம். நவீன இலக்கிய அழகியலுக்கு ஒரு மாற்றாக நாட்டார் அழகியலை உருவாக்கும் முயற்சி. அவ்வரிசையில் முழுக்க முழுக்க நாட்டார் அழகியல் கூறுகள் கொண்ட வரலாற்று நாவல் என்பதே சுளுந்தீயின் முக்கியத்துவம். சடங்குகள், அதன் குறியீட்டு மற்றும் நடைமுறை பொருள், வாழ்க்கை முறை, வாய்மொழியில் உலவும் கிளை கதைகள், சொலவடைகள் போன்றவை நாட்டார் அழகியலின் கூறுகள் என சொல்லலாம். நாட்டார் அழகியலில் வாய்மொழி கதை சொல்லல் என்பது இன்றியமையாத கூறு. முரண்களும் சிதறல்களும் தொடர்ச்சியின்மையும் கூட அதன் பகுதியாகக் கொள்ளமுடியும். இயல்பாக சில பின்நவீனத்துவ கூறுகளையும் நாவல் அடைந்துள்ளது. இந்தக் கோணத்திலிருந்து அணுகும்போது சுளுந்தீ தான் தேர்ந்துகொண்ட பாணிக்கு நேர்மையான வெளிப்பாட்டு முறையைக் கொண்டுள்ளது. ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை இனிதான் கவனிக்க வேண்டும். இவை அனைத்தையும் விட, விமர்சனங்களுக்கு அப்பால், வெகுமக்கள் வரலாறைச் சொல்லும் சுளுந்தீயின் ஆக முக்கியமான பங்களிப்பு என  வெகுமக்களின் நுண்ணறிவை ஆவணம் செய்ததைச் சொல்ல வேண்டும்.  சாமானிய மக்களிடம் புதைந்து கிடக்கும் அன்றாட வாழ்க்கை சார்ந்த நுண்ணறிவை சுளுந்தீ அளவிற்கு ஆர்வத்துடன் கொண்டாடிய வேறு நாவலைத் தமிழில் நான் அண்மையில் வாசிக்கவில்லை.

No comments:

Post a Comment