Sunday, October 25, 2020

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

(சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை) 

விடுதலைக்கு முன்பான இந்தியாவில், டெல்லியில் ஓர் பனிக்காலத்தில் அந்த ஆயுர்வேத வைத்தியரைக் காண பெருங்கூட்டம் விடிகாலையில் வரிசையில் நிற்கும் விந்தை ஆங்கிலேயர்களுக்கு விளங்கவில்லை. அவ்வைத்தியர் நாடி பிடித்து நோயறிவதில் பெரும் விற்பன்னர் என பெயர் பெற்றவர். அது எப்படி சாத்தியம் என வினவிக்கொண்ட அவர்கள், அவரை சோதிக்க முடிவு செய்தார்கள். எங்களிடம் ஒரு நோயாளி இருக்கிறார்,ஆனால் அவர் எவரையும் காண மாட்டார், அறையை விட்டு வெளியே வா மாட்டார், அவருடைய நோயை நீங்கள் கண்டறிய  வேண்டும் என்றார்கள். வைத்தியர் இச்சவாலை ஒப்புக்கொண்டார். மெல்லிய கம்பியை அந்நோயாளியின் மணிக்கட்டு நரம்பையொட்டி கட்டி மறுமுனையை என்னிடம் அளியுங்கள் என்றார். மூடிய வீட்டின் உள்ளறையில் இருந்து நீண்ட கம்பியை அனைவரும் பார்க்க வாயிலில் அமர்ந்துக்கொண்டு வைத்தியர் அக்கம்பியின் அதிர்வுகளின் ஊடாக நாடியை நோக்கினார். பெரும் கூட்டம் அவருடைய சொற்களுக்காக காத்திருந்தது. நாடியை நோக்கிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் ஒன்றுமில்லை மூன்று வேளை புல் கொடுங்கள், கஞ்சித்தண்ணி வையுங்கள், உங்கள் நோயாளி நலமாகவே உள்ளார் என்று கூறிவிட்டு எழுந்து சென்றார். மூடிய கதவுக்கு அப்பால் ஒரு பசுமாடு நின்றிருந்தது. ஆங்கிலேயர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.


பிரபல ஆயுர்வேத வைத்தியர் ப்ருஹஸ்பதி தேவ திரிகுணாஜி அவர்களைப் பற்றி ஒரு வாய்மொழிக்கதைதான் இது.


தற்காலத்தில் நவீன ஆயுர்வேதம் பல்வேறு பொதுப் போக்குகளை உள்ளிழுத்துக் கொண்டு மாற்றமடைந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் பல சவால்களை அளித்தாலும் அவற்றைச் சாதகமாக்கி கொள்ள முனைகிறது. மானுடவியல் ஆய்வுகள் மற்றும் சுய அவதானிப்புகளைக் கொண்டு தற்கால ஆயுர்வேதத்தின் நிலை மற்றும் அதன் வரலாற்று பரிணாமங்களை சற்றே ஆராய்வது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.


இந்திய மருத்துவம் என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் என்று ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் கூறலாம். இந்த கட்டுரையின் பேசுபொருள் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும். இன்றைய காலகட்டங்களில் மரபான ஆயுர்வேதம், நவீன ஆயுர்வேதம், வணிக ஆயுர்வேதம், தன்னார்வத் தேர்வாக பின்பற்றப்படும் வீட்டு உபயோக ஆயுர்வேதம் என பொதுவாக ஆயுர்வேதம் நான்கு தளங்களில் புழக்கத்தில் உள்ளன என கூறலாம் என்கிறார் மானசி திரோத்கர்.


இவை கறாரான வகைப்பாடுகள் எனச் சொல்ல முடியாது. மரபான வைத்தியர் நவீன நோயறியும் முறைகளை பயன்படுத்தலாம். நவீன ஆயுர்வேத மருத்துவர்களில் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் மருத்துவர்களும் உண்டு, நவீன மருந்துகள் மற்றும் ஆயுர்வேதம் எனக் கலந்து பயன்படுத்தும் மருத்துவர்களும் உண்டு, முறைப்படி ஆயுர்வேத மருத்துவக் கல்வித் தகுதி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்களில் முற்றிலும் நவீன மருத்துவ அமைப்பில் தம்மை கரைத்து கொள்பவர்களும் உண்டு. ஆயுர்வேதத்தை முற்றிலும் வணிகமாக அணுகும் நிறுவனங்கள்கூட தங்களுக்கென்று ஒரு மரபார்ந்த அடையாளத்தை முன்வைக்கவே முயலும்.


மரபு வைத்தியர்கள் பெரும்பாலும் குடும்ப பாரம்பரிய பின்னணி கொண்டவர்கள். முந்தைய தலைமுறை வைத்தியர்கள் பட்டப் படிப்பை அவசியம் என கருதவில்லை. உண்மையில் பட்டப்படிப்பின் மீது அவர்களுக்கு மரியாதையில்லை. ஏளனமாகவே அணுகினர். பெரும்பாலும் இவர்கள் தங்கள் தந்தையர் வழியாக மிக இளம் வயதிலேயே பயிற்றுவிக்கப்பட்டவர்கள். என் தாத்தா பதிமூன்று வயதிலிருந்து தனியாக மருத்துவம் பார்க்கத் துவங்கியதாகச் சொல்வார். மரபு மருத்துவர்களின் அனுபவப் புலம் நிச்சயமாக நவீன மருத்துவர்களின் உலகிலிருந்து வேறானது. மருந்துகள் செய்வதிலும், மூலிகைகளை, மருத்துவ தாவரங்களை  அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. உடை, தோரணை என நவீன மருத்துவர்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டிருப்பார்கள்.



இங்கு சட்டென நினைவுக்கு வருபவர் ஜெயமோகனின் ‘மீட்சி’ கட்டுரையில் வரும் பால வைத்தியர் கங்காதரன் நாயர். மரபு வைத்தியர்களிடம் கிட்டத்தட்ட முட்டாள்தனம் எனத் தோன்றும் அளவிலான தன்னம்பிக்கை வெளிப்படும். பட்டப்படிப்பு பெற்ற நவீன ஆயுர்வேத மருத்துவன் நிச்சயம் கங்காதாரன் நாயர் போல் துணிவுகொண்டு மரபணுச் சிக்கல் என முத்திரை குத்தப்பட்ட நோயை கையில் எடுத்திருக்க மாட்டான்.


மரபு மருத்துவர்களே இன்று எளிதாக நகலெடுக்கப்படுபவர்கள். ஆனால் நானறிந்த வரையில் ஆழ்ந்த புரிதல் கொண்ட மரபு மருத்துவர்களுக்கு தங்கள் எல்லை தெரியும். மரபு வைத்தியர்களின் நகல்களோ அதீத தன்னம்பிக்கையின் காரணமாக உடற்கூறு மற்றும் உடலியியங்கியல் புரிதல் ஏதுமின்றி புற்று நோய் முதல் மரபணுக் குறைப்பாடு வரை எல்லாவற்றையும் தீர்க்க முடியும் என மார்தட்டிக் கொள்கிறார்கள். அரிதான சில சமயங்களில் தற்செயலான வெற்றிகூட கிட்டிவிடுகிறது. அந்த தற்செயல் வெற்றியை ஒவ்வொரு முறையும் ருசிக்க முயன்று தோற்கிறார்கள். உச்சிக் கிளை மாங்கனியை விழச்செய்ய மூட்டை கற்களை தூக்கி வீசுவது போலத்தான். எந்தக் கல் வீழ்த்தியது என வீசியவன் அறிய மாட்டான்.


நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் என பொதுவாக பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்களையே சுட்டுவோம். பள்ளித் தேர்ச்சி வரை ஒருவிதமான கல்வியும் அதன் பின்னர் முற்றிலும் வேறுவிதமான கல்வியும் அவர்களுக்கு வாய்க்கிறது. மரபு அடையாளத்தை ஏற்ற நவீன ஆயுர்வேதிகளும் உண்டு, வணிக அடையாளங்களைச் சூடிய மருத்துவர்களும் உண்டு. நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் மரபு மருத்துவர்களை அவர்களின் மிகை அறைகூவல்களின் காரணமாக போலிகளாக கருதுகிறார்கள். அவர்களை ஒடுக்கி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள். தொழில் போட்டியாளர்களாகவும் எண்ணுகிறார்கள். கேலி செய்யப்பட்டாலும் கூட அவர்களின் வருமானமும் செல்வாக்கும் ஒரு வித மிரட்சியுடனேயே அணுகப்படுகிறது. இச்சிக்கல்களைத் தவிர்க்க, மரபு மருத்துவர்களின் அடுத்த தலைமுறையினர் பட்டப்படிப்பை தேர்கின்றனர். மரபு போலி மருத்துவர்களின் வாரிசுகளும் இதையே தேர்கின்றனர்.


ஆய்வாளர் ஜீன் லாங்ஃபோர்ட் பண்டைய ஆயுர்வேத நூல்களில் அசல் போலி என வைத்தியர்களை வகைபடுத்தவில்லை, மாறாக தரப்படுத்தல் சார்ந்து ஒரு வரிசை முற முன்வைக்கப்படுகின்றது என்கிறார். ‘உயிரை வளர்ப்பவன்’ (பிரானபிசார), ‘நோயை வளர்ப்பவன் ( ரோகாபிசார) என இருவகை வைத்தியர்களின் இயல்புகளைப் பற்றியும் அவர்களைச் சந்தித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் சரக சம்ஹிதை பதிவு செய்கிறது. ஞானமற்ற மருத்துவன் அழிவையும் இறப்பையும் ஏற்படுத்துவான். அவனுடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பதற்கு பற்றி எரிவதே மேல்  என்கிறார் சரகர். ஞானமற்றவன் என்றாலும்கூட அவனை மருத்துவன் என்றே வகைப்படுத்துகிறார், நிராகரிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.


சரகர் காலத்தில் தரமற்ற ஆயுர்வேதமே போலி ஆயுர்வேதமாக கருதப்பட்டது. நவீன காலகட்டத்தில் நகல் செய்வதையே போலியெனக் கருதும் போக்கு நிலவுகிறது. நவீன மருத்துவர்களுக்கு  பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன நோயறியும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களை நகலெடுக்கிறார்கள் எனும் மனக்குறை உண்டு. ஆகவே அவர்கள் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை போலிகள் என நிராகரிக்கிறார்கள். பட்டம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் மரபு மருத்துவர்களை போலிகள் என நிராகரிக்கிறார்கள். நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கத்திய மருத்துவத்தை நகலெடுக்கிறார்கள், தங்கள் மருத்துவ முறை மீது போதுமான நம்பிக்கை இல்லை என குற்றம் சாட்டி மரபு மருத்துவர்கள் நிராகரிக்கிறார்கள்.


இங்கு உண்மையில், நகலெடுப்பது அல்ல பிரச்சனை. ஆனால் எதை என்பதிலேயே சிக்கல். நல்ல வைத்தியர் என்பவர் வேறொரு நல்ல வைத்தியரின் இயல்புகளைப் பிரதி எடுப்பவர் என்பதே ஆயுர்வேதத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்து மருத்துவர்கள் தங்களை அதிகாரபூர்வமான, உண்மையான ஆயுர்வேத மருத்துவர்களாக அறிவித்துக்கொள்ள மரபின் மீது தங்களுக்கு ஆளுகை இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும், அல்லது மருத்துவ அமைப்பின் பிரதிநிதி என்பதை ஆழ நிறுவ வேண்டும்.


ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துவது மட்டுமின்றி ஊசிகள், கிருமிக்கொல்லிகள் போன்ற நவீன மருத்துவ சிகிச்சை முறைகளின் பயன்பாட்டையும் இன்றைய ஆயுர்வேத மருத்துவர்கள் கற்கிறார்கள். இது பலவாறான விவாதங்களை எழுப்புகிறது. முறையான பஞ்சகர்ம சிகிச்சைகள் இன்று வெகுவாக குறைந்து விட்டன. ஆயுர்வேதம் காலப்போக்கில் தனது முரட்டு வைத்திய முறைகளை கைவிட்டு சாத்விகமான அகிம்சை மருத்துவ முறையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, எழுபதுகளில் கிருமிக்கொல்லிகளின் பக்க விளைவுகள் பெரும் விவாதமாக எழுந்த சூழலில் ஆயுர்வேதம் உடலை வதைக்காத மருத்துவமுறையாக நவீன மருத்துவத்திற்கு எதிர்நிலை எடுத்தது. மரபான ஆயுர்வேத வைத்திய முறை நோய்த் தடுப்பிற்கும் சிகிச்சைக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன மருத்துவத்திற்கு எதிர்வினையாக கட்டமைக்கபட்ட நவீன ஆயுர்வேதம் சிகிச்சையுடன் பொதுவாக நிறுத்தி கொள்கிறது. மரபார்ந்த வைத்தியர்கள் பத்தியம் பின்பற்ற வேண்டும் என்பதில் கறாராக இருப்பார்கள். அது நோய்த் தடுப்புடன் தொடர்புடையது. ஆனால் நவீன மருத்துவர்கள் நோய்க்கு உரிய மருந்துகளை மட்டுமே அளிக்கிறார்கள், பத்தியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதே நிதர்சனம். நோயாளிகளை தக்கவைத்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.


மேலும், மருந்துகளை அதன் மரபார்ந்த வடிவிலிருந்து பெயர்த்து வேறு வடிவங்களில் அளிப்பதில் அவர்களுக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை.  உதாரணமாக, ஆயுர்வேத மருந்துகளில் கஷாயங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு, ஆனால் அதன் கடுமையான ருசியின் விளைவாக அதை உட்கொள்ளும் நோயாளி வேண்டா வெறுப்பாகவே அணுகுகிறார். நவீன ஆயுர்வேத மருந்தகங்கள் இச்சிக்கலை எதிர்கொள்ள கஷாயங்களை மாத்திரைகளாக அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். அதன் செயல்திறன் குறித்து எப்போதும் மரபு வைத்தியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றாலும் இதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் வரவேற்பு பெருகி வருகிறது என்பதே நிதர்சனம்.


நவீன ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் பயன்படுத்தும் மூலிகைகளின் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. அதிகபட்சம் ஐம்பது முதல் எழுபது மூலிகைகளின் வெவ்வேறு கூட்டிலேயே நிறுவனங்கள் மருந்துகளை தயாரிக்கின்றன. செவ்வியல் ஆயுர்வேதம் மீது பிடிப்புள்ள மருத்துவருக்கு உள்ள தேர்வுகள் இவர்களுக்கு இல்லை. கல்லீரல் நோய்களுக்கு சந்தையில் மிக வெற்றிகரமான மருந்தாக தன்னை நிறுவிக்கொண்ட Liv-52ன் உள்ளடக்கம் எதுவோ அதை வெட்டியும் ஒட்டியுமே பெரும்பாலான மருந்து நிறுவனங்களின் மருந்துகள் அமைகின்றன. கால்வலி, தோல் நோய், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள், மலட்டுத்தன்மை என சுமார் முப்பது அறிகுறிகள் அல்லது நோய்களுக்கு உகந்த மருந்துகளே செல்வாக்கடைந்து உள்ளன.


மருந்து நிறுவன விற்பனைப் பிரதிநிதிகளை சார்ந்து இயங்கும் தற்கால ஆயுர்வேத மருத்துவர்களை எனது ஆசிரியர் ‘பட்டியல் மருத்துவர்’ (Catalogue doctors) என கிண்டல் செய்வார். பட்டியலுக்கு வெளியே அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதே நிதர்சனம். ஆயுர்வேதத்தில் இருந்து நவீன மருத்துவத்தை வெட்டியெடுக்கும் செயல் என இதைச் சிலர் விமரிசித்தாலும்கூட இதுவே தவிர்க்க முடியாத நிதர்சனம்.


வணிக ஆயுர்வேதம் நோயாளிகளை கணக்கில் கொள்வதே இல்லை. அவர்களைத் தவிர்த்து ஆரோக்கியவான்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை பேணவும் பராமரிக்கவும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் தன்னை நிறுத்திக் கொள்கிறது. இத்தகைய வணிக அமைப்புகளில் கல்வி கற்ற ஆயுர்வேத மருத்துவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை. ஆயுர்வேத உதவியாளர்களை (தெரபிஸ்ட்கள்) கொண்டு அதிக செலவின்றி அவர்களுடைய நிறுவனத்தை நடத்திவிட முடியும் எனும் சூழலில் ஆயுர்வேத மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவது ஒரு அவசியமற்ற, கட்டாயச் செலவு மட்டுமே. சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்டு இவை இயங்குகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உயர்த்தட்டு மக்களை இலக்காக கொண்டு இயங்குகிறது. ஆயுர்வேதத்தின் சர்வதேச அடையாளமாக இவர்களே திகழ்கிறார்கள். இத்தகைய மையங்களில் பணியாற்றும் ஆயுர்வேத உதவியாளர்கள் கொஞ்ச காலம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றிவிட்டு நல்ல சுற்றுலா தலங்களில் அவர்களே சொந்தமாக ஆயுர்வேத நிறுவனங்களை அமைத்துகொள்வதும் நடந்துகொண்டு  தானிருக்கிறது.


ஆயுர்வேத மருத்துவ முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள், மருந்து நிறுவன விற்பனை பிரதிநிதிகள், பாட்டி வைத்தியம் போன்ற அனுபவக் குறிப்புகள், சாமானியர்களுக்கான ஆயுர்வேத நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை மக்களிடம் கொஞ்சம் பிழையாகவும் கொஞ்சம் சரியாகவும் ஆயுர்வேதத்தைப் பற்றிய ஒரு வரைபடத்தை உருவாக்கியிருக்கிறது. புண்ணைப் பழுக்க வைக்க துணி துவைக்கும் சோப்பைக் குழைத்து பூசுவது, வாசலினுடன் மஞ்சள் பொடி சேர்த்து புண்ணுக்கு கட்டுவது, நகச்சுத்திக்கு வடிகொலோன் இடுவது என உடனடியாக பலனளிக்கும் அனுபவ முறைகள் நவீன கால கண்டடைதல்கள். காய்ச்சலின்போது மிளகு ஜீரக சாதம் உண்பது, தொண்டைச்சளிக்கு மஞ்சள் தூளும் மிளகும் சேர்த்த பாலைக் கொடுப்பது போன்ற வழக்கங்களுக்கு ஆயுர்வேத தர்க்கத்தில் இடமுண்டு. கேரள பண்பாட்டில் ஆயுர்வேதம் வெகுவாக காலூன்றியுள்ளதால் தசமுலாரிஷ்டம், நீலி பிருங்காதி போன்ற மருந்துகள் அவர்களுக்கு நன்கு பரிச்சயம். சில நேரங்களில் இந்திய மருத்துவத்தை மருத்துவர்களைக் காட்டிலும், அமைப்புகளைக் காட்டிலும், சாமானிய மக்களின் வழக்கங்களே காத்து வந்திருக்கிறது என்று தோன்றுவதுண்டு. மருத்துவர்களோ அமைப்புகளோ இன்றியும்கூட எப்படியோ இது எஞ்சிப் பிழைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு வலுவாக உண்டு.


அண்மைய ஆண்டுகளில் வெகுஜன ஊடகங்களில் ஆயுர்வேதம் குறித்து அதிகம் எழுதப்படுவதை கவனிக்க முடிகிறது. பொது மக்களுக்கான அறிமுக நூல்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களின் ஆய்வு நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மிகக் குறைவாகவே வருகின்றன. இது ஒரு மிக முக்கியமான சமூகப் போக்கை உணர்த்துகிறது. பொதுமக்களுக்காக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களிலும் இணையதளங்களிலும் உடல் எடை குறைப்பு, யோகா, தியானம், இயற்கை உணவின் மகத்துவம், மாதவிடாய் வலிக்கான தீர்வு போன்றவைகளே மீண்டும் மீண்டும் காணக்கிடைக்கின்றன. ஆயுர்வேத நூல்களில் மருத்துவமாகவும் உணவு முறையாகவும் அசைவ மாமிச வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை வசதியாக பேச வெகுஜன ஊடகங்கள் மறுத்துவிடுகின்றன. பெரும்பாலான இணைய தளங்கள் ‘பஞ்சகர்மா’ எனும் பெயரில் எண்ணெய் தேய்ப்பு முறைகளையும், வியர்வை வரவழைக்கும் சிகிச்சைகளையும் பற்றியே எழுதுகின்றன. உண்மையான பஞ்சகர்ம சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி சிகிச்சை, உதிர சிகிச்சை, நசியம் போன்றவை நுகர்வோரை அச்சுறுத்தக்கூடும் எனும் காரணத்தினால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.


தற்கால இந்திய மருத்துவ அடுக்குகள் பற்றிய ஒரு எளிய வரைபடம் நமக்கு கிடைக்கிறது. இந்திய மருத்துவத்தின் பல்வேறு அடுக்குகள் இன்று நேற்று உருவானவையல்ல. செவ்வியல் ஆயுர்வேத மருத்துவமும் நாட்டு மருத்துவமும் தனித்த மரபாகவும், அதே சமயம் ஒன்றையொன்று சார்ந்தும் பிணைந்திருந்தன. காலனியவாதிகள்கூட இந்த இருவேறு அடுக்குகளைப் பிரித்தறியத் தவறினர் என டி.ஜெ.எஸ். பேட்டர்சன் பதிவு செய்கிறார். அறுவை சிகிச்சையில் நாவிதர்கள் விற்பன்னர்களாகக் கருதப்பட்டனர். இன்றளவும் அவர்களை மருத்துவர்கள் என்றழைக்கும் வழக்கம் உண்டு. ஐரோப்பாவிலும் நாவிதர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களாக நவீன காலம் வரையில் கருதப்பட்டனர் எனும் சித்திரம் உண்மையில் ஆச்சரியத்தை அளிக்கிறது. கூர்முனைக் கருவிகளின் பயன்பாடு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவச்சிகள் ஒரு சரடு. நாவிதர், வண்ணார் வகுப்புக்களைச் சார்ந்த பெண்கள் தாய்-சேய் நல மருத்துவத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். குழந்தைகளுக்கு வரும் இசுகு (வெட்டு), நீர்க்கணை (இழுப்பு), செருகல் போன்ற சிக்கல்களை தீர்ப்பவர்களாகத் திகழ்ந்தனர்.


டாக்டர். ப்ரிஜ்ஜிட் செபாஸ்டியா சாணர்கள் பனை மரங்களில் ஏறும்போது விழுந்து அடிபடுவதைச் சீர் செய்ய உருவாக்கி வளர்த்தெடுத்த சிகிச்சை முறைதான் தென் தமிழகத்துக்கே உரித்தான வர்ம சிகிச்சை எனப் பதிவு செய்கிறார். சரக சம்ஹிதையிலும் சுசுருத சம்ஹிதையிலும் வர்ம புள்ளிகள் பற்றிய விவரணைகள் உள்ளன. அடிபட்டால் நேரும் விளைவுகள்  குறிப்பிடப்பட்டுள்ளன. நுட வைத்தியம் பாரம்பரியமாக சில குடும்பங்களால் இன்று வரை முன்னெடுக்கப்படுகிறது.


தமிழக பேருந்து நிலையங்கள் முழுக்க மூலம், பவுத்திரம் மஞ்சள் சுவரொட்டிகள் வழியாக நாம் அறிந்த மருத்துவர் பிஸ்வாஸ் ஒரு விராட புருஷன் அல்ல. எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிஸ்வாஸ்கள் வங்காளத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். எனினும் அறுவை மருத்துவம் தென்னிந்திய நாவிதர்களிடம் சென்றது. அங்கிருந்து அவர்கள் வங்காளத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் என்றோர் பார்வையை டாக்மர் உஜாஸ்டிக் வைக்கிறார். மூலம் மற்றும் பவுத்திர நோய்களுக்கு இவர்கள் கையாளும் முறை சுசுருத சம்ஹிதையை அடிப்படையாக கொண்டது. க்ஷார சூத்திரம் எனும் அம்முறையில் கனமான நூலில் மருந்தை தடவி பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டி புண்ணை ஆற்றுவார்கள்.


ஜோசப் ஆல்டர் அறுபது – எழுபதுகளில் இந்தியாவெங்கும் பரவலாக இருந்த ஆண்மை பெருக்கி ‘ரகசிய சிகிச்சை’ மையங்களை பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கிறார். காந்தியின் அகிம்சை கொள்கையை ஒரு முக்கியமான காரணியாக வைக்கிறார். எனினும் அது விவாதத்திற்குரியது. இன்றும் இந்திய மருத்துவத்தின்  மிக முக்கியமான சரடுகளில் ஒன்று இந்திய மருத்துவ பாலியல் சிகிச்சை மையங்கள். தாளாத குற்ற உணர்வில் தள்ளி, தாட் (dhat syndrome) சின்ட்ரோம் போன்ற இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான நோய்களை உருவாக்கிய பெருமை இந்த மருத்துவர்களுக்கு உண்டு.


கேரளத்து அஷ்ட வைத்திய குடும்பம் உண்மையில் ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் என கூறப்படுவதுண்டு. விஷ வைத்தியர்கள் இன்றளவும் கேரளத்தில் புகழோடு திகழ்கிறார்கள். சோட்டானிக்கரை, குணசீலம் போன்ற ஆன்மீக தலங்கள் பேயோட்டுதல் போன்ற மனச் சிக்கல்களை எதிர்கொள்ள உருவான மையங்கள்.


பழங்குடி மருத்துவம் மற்றுமொரு சரடு. கேரள காணிகள் பயன்படுத்தும் ஆரோக்கிய பச்சையின் (Trichopus zeylanicus) மருத்துவப் பயன் எண்பதுகளில் ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.  மருத்துவ தாவரங்களை அடையாளம் காண்பதில் கால்நடை மேய்ப்பர்களுக்கும் வனவாசிகளுக்கும் நல்ல தேர்ச்சி உண்டு என்பதை சரகர் பதிவு செய்கிறார் (சரக சம்ஹிதை, சூத்திர ஸ்தானம், அ 1, 120, 121). மருத்துவன் அடையாளம் காண்பதோடு நின்றுவிடக் கூடாது அதன் மருத்துவ பயன்களை அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். பழங்குடிகளிடம் இருந்து அறிவுப் பரிமாற்றம் செவ்வியல் ஆயுர்வேதத்தில் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக முக்கியமான சான்று இது.


இந்திய மருத்துவத்தைப் புரிந்துகொள்ள அதன் வெவ்வேறு அடுக்குகளையும் அவற்றுள் இருந்த சமன்பாடுகளையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும் . திப்பு சுல்தானின் படை கொவாஸ்ஜி எனும் மாட்டுவண்டிக்காரனின் மூக்கை  போரின்போது வெட்டியது. மகாராஷ்டிரத்து குயவர் ஒருவரால் அது சீர் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த ஆங்கிலேயர்கள், தாமஸ் குருசோ மற்றும் ஜேம்ஸ் ஃபின்ட்லே, இங்கிலாந்தின் ஜெண்டில்மேன் மேகசினுக்கு 1794 ஆம் ஆண்டு இத்தகவலை கொண்டு சென்றார்கள். செவ்வியல் ஆயுர்வேத நூலான சுசுருத சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மூக்குச் சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு மிக நெருக்கமான வழிமுறையை கொண்டிருந்தது குயவரின் முறை. அக்கி போன்ற தோல் நோய்களுக்கும் விஷக்கடிகளுக்கும் மரபாக குயவர்களைக் காண செல்வது நம் வழக்கம். வழக்கொழிந்து போன இம்முறை எப்படி குயவர்களின் ஒரு சாராரிடம் மட்டும் நிலைத்திருந்தது?


அயோத்திதாச பண்டிதர் மருத்துவத்தை கைகொண்டிருந்த பூர்வ பவுத்தர்களைத் தாழ்த்தி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றனர் என்றொரு சித்திரத்தை அளிக்கிறார். வைத்தியர்களின் வீட்டில் உணவு உண்ணக்கூடாது என மனு சாத்திரம் சொல்வதாக மேற்கோள் காட்டுகிறார். பெரும்பாலான வைத்திய நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களால்தான் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது என்கிறார்.


ஜார்ஜ் டுமிசில்  பண்டைய இந்திய – ஐரோப்பிய சமூகத்தை மூன்று அடுக்குகளாக வகுக்கிறார். ப்ரோகிதர், போர்வீரர்கள் மற்றும் சாமானியர்கள். சாமானியர்கள் வேளாண்குடி மற்றும் வேறு வேறு தொழில்கள் புரியும் உழைக்கும் மக்களால் ஆனது. கென்னெத் ஜிஸ்க் அதர்வ வேதத்தின் இயல்பை ஆராயும்போது வேளாண்குடிகள் நிறைந்த மூன்றாம் அடுக்கிலிருந்தே அது உருவாகியிருக்க வேண்டும் என்கிறார். இந்த மூன்றாம் அடுக்கில் மருத்துவர்களே பூசாரிகளாகவும் இருந்தார்கள். முதன்மை அடுக்கைச் சேர்ந்த, சடங்குகளை நிர்வகிக்கும் பூசாரிகள், தூய்மைவாதத்தால் தனித்து செயல்பட்டார்கள். மருத்துவ பூசாரிகள் சுதந்திரமாக செயலாற்றினார்கள். எனினும் சடங்கு பூசாரிகள் உயர்வாக கருதப்பட்டார்கள் என்கிறார்.


வேதத்தின் மாந்த்ரீக மருத்துவ கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளி செவ்வியல் மருத்துவம் மேலெழுந்து வந்தது. எனினும், சரகம் மற்றும் சுசுருத சம்ஹிதைகளில் சிறிய அளவில் மாந்த்ரீக மருத்துவத்தின் எச்சங்கள் உண்டு. நன்மையையும் தீங்கும் விளைவிக்கக்கூடிய கடவுள்கள் மனிதர்களை பாதிக்கின்றனர் எனும் வேத சிந்தனையிலிருந்து புறச்சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான சமநிலை பேணுதல் எனும் பார்வையை ஆயுர்வேதம் வந்தடைவது மிகப்பெரிய தாவல். ஆனால் இது எப்படி நிகழ்ந்தது?


முதல் அடுக்கின் சடங்குப் பூசாரிக்கும் மூன்றாம் அடுக்கின் மருத்துவப் பூசாரிக்கும் இடையிலான சர்ச்சையின் காரணமாக,  சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மருத்துவப் பூசாரிகள் ஒரு சிறிய விளிம்புக் குழுவாக மாறி பயணித்தனர் என்கிறார் ஜிஸ்க். இது தொடர்பாக, பி.சி. குடும்பையா அதர்வ வேதக் குறிப்புகளில் இருந்து சில சான்றுகளை அளிக்கிறார். நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் ஆயிரக்கணக்கான மூலிகைகளும் இருக்கின்றன, ஆனால் அவை என்ன நிகழ்த்துமோ அதை மந்திரித்த காப்பு கட்டுவதன் மூலம் நிகழ்த்த முடியும் (A.V. 2. 9.3). மறுபடியும் A.V. 2.9.5 ல் எவர் மந்திரித்த காப்பு கட்டுகிறானோ அவனே சிறந்த மருத்துவன் எனும் குறிப்பு காணக் கிடைக்கிறது. ஆக வேத காலம் தொட்டே மாந்த்ரீக மருத்துவமும், பகுத்தறிவு மருத்துவத்தின் முன்னோடி வடிவமும் இரு தனித்த சரடுகளாக திகழ்ந்தன என்பது புலப்படுகிறது. மனு சாத்திரத்தில் வேதமும் மந்திரங்களும் அறிந்த வைதிக மருத்துவனுக்கும் பிஷக், அம்பஷ்தா (நாவிதர்களை அம்பட்டன் என்றழைக்கும் வழக்கம் உண்டு என்பது நினைவுக்கு வருகிறது) சிகித்சக போன்ற பெயர்களில் அறியப்படும் வேற்று பிரிவு மருத்துவனுக்கும் இடையிலான சர்ச்சைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு வெளியேறிய பயணிக்கும் துறவிகளில் பல பவுத்த பிக்குகளும் அடங்குவர். அவர்களே புதிய அறிதல்களை உருவாக்கினர். பல்வேறு மருத்துவ தகவல்களை தொகுத்தனர். சட்டகங்களை வடிவமைத்தனர் என்கிறார் ஜிஸ்க் .


துவக்க கால பவுத்த  நூல்களில் மனிதனுக்கும் இயற்கைக்குமான புரிதல் பற்றிய கருத்துக்கள் ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளோடு வெகுவாக நெருங்கி இருக்கின்றன. சுய மறுப்புக்கும் அதீத ஈடுபாடு எனும் இரு எல்லைக்கும் நடுவே மத்திம மார்க்கத்தை கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் இடையிலான சமநிலையைப் பேணுதல். பவுத்தத்துடன் மருத்துவம் இணைந்தே பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. பின்னர் முறைப்படுத்தபட்டு, பிராமணர்களால் தொகுக்கப்பட்டது, மருத்துவம் முதல் அடுக்கைச் சேர்ந்தவர்களால் கைகொள்ளப்பட்டது எனும் சித்திரத்தை கென்னெத் ஜிஸ்க் பல்வேறு தரவுகளோடு நிறுவுகிறார்.


முக்கியமான ஆயுர்வேத நூல்களை இயற்றியவர்கள் என்றொரு வரிசை உருவாக்கினால் அவர்கள் பெரும்பாலும் பிராமண – க்ஷத்ரிய வர்ணங்களை சேர்ந்தவர்களாகவே திகழ்ந்தனர். சரகர் கனிஷ்கரின் அவையில் இருந்திருக்கலாம் என்றொரு வரலாற்று ஆவணம் கூறுகிறது. சுசுரதர் காசி அரசன் திவோதாச தன்வந்தரியின் வழி வந்தவர் என கூறுகிறார். பிராமணரா பவுத்தரா என வாக்பட்டரின் அடையாளம் சார்ந்து பல்வேறு குழப்பங்களிருக்கின்றன. சக்ரபாணி தத்தர், ஷாரங்கதரர், பாவ மிஸ்ரர் துவங்கி முகலாய அவையில் இருந்த தோடரமல்லர் வரை பலரும் பிராமணரே. அரச மருத்துவர்களாக அல்லது அரசர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள். சரகர் சுசுருதர் போன்றவர்கள் பெயர்கள் காரணப் பெயர்களை போல் உள்ளதால் அவர்கள் துறவிகளாக இருக்கவும் கூடும். நாகர்ஜுனர் ஆயுர்வேதத்திற்கு பங்களிப்பாற்றிய மிக முக்கியமான பவுத்தர். கல்யானகாரக எனும் நூல் சமணரால் எழுதப்பட்ட ஆயுர்வேத  நூல்.


வேதகாலத்தில் புலப்படும் சடங்கு மருத்துவம்- பகுத்தறிவு மருத்துவம் இருமை பிற்காலங்களில் செவ்வியல் மருத்துவம்- மக்கள் மருத்துவம் எனும் இரு பெரும் போக்குகளாக பிரிகிறது. மக்கள் மருத்துவத்தில் இருந்தே செவ்வியல் மருத்துவம் உருவாக முடியும். மக்கள் மருத்துவம் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியது. நிலப்பரப்பு எங்கும் அலைந்து திரிந்து மருத்துவ தகவல்களைப் பரப்பி ஆவணப்படுத்தும் அலையும் துறவிகளால் ஆன அடுக்கு அதில் முக்கியமானது. பிற்காலங்களிலும் இந்த அடுக்கு தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது. இவ்வடுக்கில் இருந்தே ஹத யோகமும், தாந்த்ரீகமும், இரசவாதமும் உருவானது. பின்னர் இவை மருத்துவத்துடன் முயங்கி மைய நீரோட்டத்தில் இணைந்தன. சித்தர்கள் மக்கள் மருத்துவச் சரடைச் சார்ந்தவர்கள் என உறுதியாகச் சொல்லலாம். இரசவாதமும் ஹத யோகமும் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தின. சாதி அடுக்குகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதை மீறிச் செல்பவர்களாகவே திகழ்ந்தார்கள்.


ஒட்டுமொத்தமாகக் காண்கையில் தொடர்ந்து புதியவற்றை கற்று பரிசோதிக்கும் அறிவு முனை ஒரு சரடாகவும் நிலை பெற்றவை அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்தி முறைப்படுத்தும் அறிவுக் களன் ஒரு சரடாகவும் விளங்கி, பிரமிக்கத்தக்க வகையில் இந்திய மருத்துவ வலைப்பின்னலை உருவாக்கி உயிர்ப்புடன் வைத்திருந்த உண்மை புலப்படுகிறது.  ஆனால் இன்றைய உலகளாவிய சூழலில், மேற்கத்திய மருத்துவ முறை மட்டுமே இவ்விதத்தில் செயல்படுவதைக் காண்கிறோம். அரசு ஆதரவு, மக்கள் வரவேற்பு இரண்டும் குன்றிய நிலை மட்டுமல்ல, மருத்துவர்களே தன்னம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் பரிசோதனைகளில் ஈடுபடுவதோ, புதியனவற்றைக் கற்பதோ, தம்மைச் சுற்றியுள்ளவற்றை தொகுத்து ஆவணப்படுத்துவதோ மேற்கத்தைய  மருத்துவ முறைகளுக்கு வெளியே சாத்தியமா என்று தெரியவில்லை. அறிவு முனை மழுங்கி, அறிவுக் களம் வரண்ட இச்சூழலில் சித்த, ஆயுர்வேத முறைகள் மீண்டும் இந்தியாவில் தலையெடுக்குமா என்பதே இன்று கவலைக்குரிய கேள்வியாக இருப்பது நிதர்சனம்.


இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள வைத்தியர் ப்ருஹஸ்பதி திரிகுணா 1920 ஆம் ஆண்டு பிறந்து 2013 ஆம் ஆண்டு மறைந்தவர். காலனிய காலகட்டத்திற்கும் விடுதலைக்கும், உலகமயமாக்கல் காலத்திலும் வாழ்ந்தவர். பத்ம விருதுகளை பெற்றவர், மகரிஷி மகேஷ் யோகியின் ஆயுர்வேத பிரிவை சர்வதேச மக்களிடம் கொண்டு சென்றவர். இக்கதையின்தர்க்க சாத்தியத்தையும், உண்மைத்தன்மையையும் விட்டுத்தள்ளிவிட்டு நோக்கினால் இந்த தொன்மத்தின் வடிவம் தென்படும். இத்தகைய தொன்மங்கள் ஏன் அக்காலகட்டத்து இந்திய மனதிற்கு தேவையாக இருந்தது? ஓர் மரபான எளிய இந்திய மருத்துவன் பகுத்தறிவு மற்றும் அறிவியல் வளர்ச்சியால் உச்சத்தில் நிற்கும் மேற்கத்தியவனை வென்று செல்வது. காமா பயில்வான் உடல் ரீதியாக எதை நிகழ்த்தி காட்டினாரோ அதை அறிவு ரீதியாக திரிகுணா நிகழ்த்தி காட்டினார். நல்லதொரு டேவிட் கோலியாத் கதை. திரிகுணா ஒரு தனி மனிதர் அல்ல. இந்த கதையை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களுடனும் சூழல்களுடனும் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. பாய்ச்சலுக்கான ஏக்கம், தன்னை நிறுவிகொள்வதற்கான துடிப்பு. ஆனால் அதற்கான வழிமுறைதான் புலப்படவில்லை.


இந்திய மருத்துவ முறைகள் தம் முதல் நிலை இடத்தை மீண்டும் எட்டுவதானால், அதற்குரிய இந்திய அறிவுச் சூழல் உருவாக வேண்டியது அவசியம். அப்போதுதான், சாத்திர அடிப்படையிலான மரபு ஆயுர்வேதம், பள்ளிக் கல்வி வழி புகட்டப்படும் நவீன ஆயுர்வேதம், பெருவாரி மக்களைச் சென்றடையும் வணிக ஆயுர்வேதம், மக்கள் மத்தியில் பரவலான அறிவு ஏற்பட்ட காரணத்தால் தன்னார்வத் தேர்வாகப் பயன்படும் ‘கை மருத்துவ’ ஆயுர்வேதம் ஆகிய நான்கு பயன்பாட்டு தளங்களிலும் ஆரோக்கியமான ஆயுர்வேத வளர்ச்சியை நாம் காண இயலும். இதற்கு மிக முக்கியமான ஒரு அறிவுச்சட்டக நகர்வு (paradigm shift) ஏற்பட்டாக வேண்டும். அதை எதிர்நோக்கியே இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்- 2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு மரபார்ந்த சீன மருத்துவ ஆய்வுக்கு வழங்கப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.