Monday, September 28, 2020

யதார்த்தங்களின் சங்கமம் - ரா. கிரிதரன் - நீலகண்டம் குறித்து

 சொல்வனம் இணைய இதழில் நண்பர் எழுத்தாளர் கிரிதரன் 'நீலகண்டம்' குறித்து  எழுதியுள்ள விமர்சன கட்டுரை. நன்றி  

சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலை ஒவ்வோர் அத்தியாயமாக அவர் அனுப்பும்போது படித்திருந்தேன். முழு நாவலாக வெளியான பின்னர், ஒரு முறை முழுவதாகவும் சில பகுதிகளைத் தனித்தனியேயும் படித்திருக்கிறேன். சுனிலின் சிறுகதைகளையும் தொடர்ந்து படித்துவந்ததிலிருந்து அவரது கதைசொல்லும் பாணி எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதற்கான அடுத்தகட்டச் சாட்சியாக நீலகண்டம் நாவல் உருவாகியுள்ளது. பல காலங்களாக நம்மிடையையே இருந்துவந்து சமகாலத்தில் நாம் ஏற்றுக்கொண்டு ஆராயத் துணிந்திருக்கும் பல துறைகளில் ஆட்டிஸ ஆய்வுகள் இன்று கேன்சருக்கு அடுத்த இடத்தை வகிக்கின்றன. அதைப் பற்றி மிக உணர்வுபூர்வமான புனைவாகத் தந்தமைக்கு முதலில் ஆசிரியருக்கு என் வாழ்த்துகள்.



ஆட்டிஸம் பாதித்த தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கும்போது, பெரிய கவலைகள் ஏதுமற்ற தகப்பனாகச் செந்தில் அறிமுகம் ஆகும்போதே கதைச் சூழல் வாசகர்களுக்குப் பல கேள்விகளை எழுப்பிவிடும். வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கும் செந்திலின் அலட்சியத்துக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்? மனைவி மீதான வெறுப்பு, வேறு ஒரு பெண்ணோடு காதல் எனத் தொடங்கிப் பல காரணங்களை நாம் நினைக்க முடியும். தத்து எடுத்த குழந்தை என வாசகர் தெரிந்துகொள்ளும்போது கதையின் சிக்கல்கள் வேறு தளங்களை அடைகின்றன. ஒரு நவீனத்துவ மனம்கொண்ட ஆண் மற்றும் பெண்ணுக்குப் பிள்ளைப்பேற்றில் சிக்கல் இருப்பதென்பது நான்கு சுவர் வாழ்க்கை முறையில் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடியது. நகரச் சூழலில் தேற்றி ஆறுதல் தரக்கூடிய உறவுகள் அருகில் அமையாது. அதுவும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செந்திலும் பிராமண சமூகத்தைச் சேந்த ரம்யாவும் பெற்றோருடன் சுமூகமான உறவைப் பேண முடிவதில்லை. ரம்யாவின் அம்மா அவளை முற்றிலும் புறக்கணிக்கிறார். பெண்ணுக்குத் தேவையான உணர்வுபூர்வமான அரவணைப்பு ரம்யாவுக்குக் கிடைக்கவில்லை. இத்தனை சிக்கல்களும் நாவலுக்கு வலுவான கட்டமைப்பைத் தந்திருக்கின்றன.


ஆட்டிஸம் பாதிப்புக்கு ஆளான வர்ஷினி செந்தில் எனும் பெண், விலங்கியல் மருத்துவத்தில் முனைவர் பட்டம்பெற்று விலங்கியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக வேலை செய்துகொண்டே எழுதிய முதல் நாவல் என நீலகண்டம் கடைசி பக்கத்தில் நமக்குத் தெரியவருகிறது. குழந்தைகளின் அக உலகில் வரும் விளையாட்டு மாய உலகங்கள், அப்பாவுக்கு இருந்த அலட்சியம், அம்மாவுக்கும் அவள் பிறந்த வீட்டாருக்கும் இடையே இருந்த சிக்கல் என அனைத்தையும் ஆட்டிஸக் குழந்தையின் பார்வையில் பதிந்துள்ள சம்பவங்கள் போன்ற மிகவும் நுணுக்கமான இடங்களை ஆசிரியர் எழுதியுள்ளார்.


சுனில் எழுதிய அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுப்புக்குப் பின்னர் வெளியான முதல் நாவல் இது. சிறுகதை உலகில் அவர் பிரதானமாகக் கையாண்ட கருக்களே இந்த நாவலிலும் வருகின்றன. நம் உயிர் பயனற்ற ஒன்றாக எப்போது பிறருக்கு மாறுகிறது எனும் ஆதாரக் கேள்வியிலிருந்தே வர்ஷினியின் உலகைப் புரிந்துகொள்ளலாம். சுனில் எழுதிய ‘வாசுதேவன்’ சிறுகதையில் இதே கருவைக் கையாண்டிருந்தாலும், வர்ஷினியின் உலகில் இந்தக்கரு மேலும் ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. பிறந்த உடனேயே தேவையற்ற உயிராக உதாசீனப்படுத்தப்பட்டுக் காப்பகத்தில் இருப்பவள் வர்ஷினி. தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்தில் மற்றொரு குழந்தை பிறந்ததும் ரெண்டாம் முறையாகத் தேவையற்றவள் ஆகிறாள். ஆட்டிசக் குழந்தையின்மீது இந்த நிராகரிப்பு மேலும் பல வழிகளில் பாதிப்பைச் செலுத்தலாம் எனும் சாத்தியத்தையும் நாவல் கையாள்கிறது. வர்ஷினி தனக்குள் ஒரு மாய உலகைச் சிருஷ்டித்துக்கொள்கிறாள்.


நீலகண்டம் நாவல், வாசிப்புக்குப் பின்னான பல சிந்தனைகளைத் தூண்டிவிட்ட படைப்பு. பிள்ளைப்பேறு வாய்ப்பில்லாத தம்பதியினர் தத்தெடுத்தபின் சந்திக்கநேரும் சிக்கல்களில் பலவகை உண்டு. பொதுவாக அவர்கள் சந்திப்பது சமூகச் சிக்கல்கள் சார்ந்தவையாகவோ குழந்தையின் உளச்சிக்கல் களமாகவோ இருக்கும் வாய்ப்புகளே அதிகம். இந்த நாவலில் தத்தெடுத்த பெண் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு இருப்பது தெரிந்தபின்னர் பெற்றோரின் மனநிலை அடையும் ஊசலாட்டத்தை விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளார். இவர்களுக்கான சிக்கல் பல வலைப் பின்னல்களைக் கொண்டது. ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால் வரும் பெற்றோரின் விலகலைச் சந்திக்கும் பெண். பிள்ளைப் பேறில்லாமல் இருவரும் கூடுதல் நேரங்களில் அதிக பொறுப்புள்ள வேலைகளைத் தத்தமது அலுவலகத்தில் எடுத்துக்கொண்டதால் வரும் மன உளைச்சல். தொடர்ந்து அது தரும் சோர்வு இட்டுச்செல்லும் உறவு தரிக்க இயலாமை என ஒரு தொடர் சங்கிலியாக இருவரையும் சிக்கல்கள் தொடர்கின்றன.


தத்தெடுப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை மீறி ஒரு காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருந்த பிணக்கும் உதாசீனமும் தீரத் தொடங்கும் நேரத்தில் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். மனித உறவில் ரத்த பந்தத்தை மீறி நிகழும் கரிசனத்துக்கு வாழ்வில் மட்டுமல்லாது இலக்கியத்திலும் பெருமதிப்பு உண்டு. தாய்-மகன், தந்தை -மகள், தாத்தா-பேத்தி எனும் ரத்த உறவுகளுக்கு இருக்கும் ரத்தபந்தத்தின் தொடர்ச்சிக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் உறவுகளில் சுயநலம் பெரும்பங்கு வகிக்கிறது. சொந்தக் குழந்தை பிறந்தபின் ரெண்டாவது குழந்தையைத் தத்து எடுக்கும் காலகட்டம் முன்னர் நம் சமூகத்தில் இருந்துவந்துள்ளது என்றாலும் இன்றைக்கு வெகு சிலரே அதைச் செய்கிறார்கள். ஒரு விதத்தில் தங்கள் இருப்பைத் தொடரவைக்கும் ஆசையே இதற்குக் காரணம் என்றாலும் வீடுபேற்றுக்குப் பிள்ளை குட்டியோடு முழு கிரகஸ்தனாக இருக்கவேண்டிய கட்டாயமும் சமூக அழுத்தத்தையும் உருவாகிறது.


இந்த நாவலில் பல நாட்டார் கதைகளும், கர்ண பரம்பரைக் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் பேசலாம். ரெண்டாயிரத்துக்குப் பிறகான இலக்கிய மற்றும் சமூகச் சூழலில் குழந்தைமை குறித்துப் பெரிதும் பேசப்பட்ட கருத்து என்றால் அது ஆட்டிஸம் எனலாம். ஆட்டிஸத்துடனேயே கூடவே வரும் மிகைப்படுத்தல்கள் அந்தக் குறைபாடுக்கு ஒருவித மாயத்தன்மையை அளித்துவிட்டன. ஐன்ஸ்டீனும், நியூட்டனும், மொசார்டும் இந்தக் குறைபாடுகளோடு பிறந்ததாலேயே அவர்கள் விசேஷத் திறமையுடன் இருந்தார்கள் எனும் பொய்யான எதிர்பார்ப்போடு வாழும் பெற்றோராகச் செந்திலும் ரம்யாவும் இருக்கிறார்கள்.


ஆட்டிஸம் குறைபாடோடு இருக்கும் வருவைத் தத்தெடுப்பதில் தொடங்கும் சிக்கல், அவள் மீது அன்பு பாராட்டாமல் ஒதுக்கி வைப்பதில் உச்சம் கொள்கிறது. செந்திலுக்கும் ரம்யாவுக்கும் ரெண்டாவதாகப் பிறக்கும் சாகர் மீது அவர்களது அன்பு மடைமாறும்போது வரு தன்னுடைய உலகினுள் முழுமையாக ஐக்கியம் கொள்கிறாள். அந்தத் தேசம் ‘அக்‌ஷரா’. அந்தத் தேசத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிகளும் இல்லை.


நாவலின் கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் ஆசிரியரின் சில குறிப்பிட்ட கூறுமுறைத் தேர்வால் அமைந்துள்ளது என்பதை இரண்டாம் முறை படிக்கும்போது உணர்ந்தேன். சதா நழுவிச்சென்றபடி மையச் சரடிலிருந்து விலகிச்செல்லும் கதைகள் புனைவு உத்தியை இரு விதங்களில் கையாளும். மையத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பலவித புனைவு முடிச்சுகளைப் போட்டபடி கதையை ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலாக மாற்றிவைக்கும். இன்னொரு வகை, கருவின் சிக்கலான முடிச்சை வாசகர் பின்தொடர முடியாதபடி பலவித உபகதைகள் வழியாக புதிர்ப்பாதைகளைப் போட்டபடி இருக்கும். இரண்டாம் வகையில் விரிந்துகொண்டே சென்றபடி இருக்கும் முப்பரிமாணப் பாதையில் வாசகரின் கதை உருவாக்கும் திறமை சிறு சிறு மையங்களை உருவாக்கியபடி செல்லும். கற்பனை வளமிக்க வாசகரால் சிறு சிறு உபகதைகளையும் புது கருக்களையும் நெய்தபடி கதையை வாசிக்கமுடியும். அப்படிப்பட்ட உபகதைகளின் முடிச்சுகளில் ஆதாரமான கருவுக்கான மையத்தை அவனால் எட்டிப்பிடிக்க முடியலாம். இது ஒரு விளையாட்டு மட்டுமே. நகுலனின் வாக்குமூலம், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ், உள்ளிருந்து சில குரல்கள், பா.வெங்கடேசனின் வாரணாசி எனப் பல உதாரணங்கள் பின்னதுக்கு உண்டு. இரா.முருகனின் அரசூர் வம்சம், சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி முதல் சமீபத்தில் வந்த சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல் வரை முன்னதுக்கான உதாரணங்கள் பல உண்டு.


நீலகண்டம் இந்த இரு போக்குகளில் பலவீனங்களை அதிகப்படியாக எடுத்துக்கொண்டு பலங்களைக் குறைவாகக் கையாண்டிருக்கிறது. தத்து எடுத்துக்கொள்ளும் குழந்தைக்குப் பிறகு முறையாகக் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை எனும் குழப்பத்துடன் முதல் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு என்பது மிகவும் தனித்துவமான மற்றும் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கக்கூடிய மிகச் சிறப்பான கரு. நிகழ்கால உளச் சிக்கல்களையும், அவசர கதி வாழ்க்கை முறையையும் பின்புலமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் மிக நல்ல புனைவம்சமுள்ள கதை நீலகண்டத்தில் இருக்கிறது. இலை மறைவுகளில் வெளிப்படும் நிலவு வெளிச்சம்போல (எத்தனை பழைய உருவகம், சொற்பிரயோகம்!) கதை தன் போக்கில் சில புதிர்ப்பாதைகளுக்கு இடையே ஆங்காங்கு வெளிப்படுகிறது. புனைவு எழுத்தாளனாக இதற்கு இரண்டு காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது – மையச் சிக்கலிலிருந்து வெளிப்படக்கூடிய புனைவு ஓட்டத்தை நாவலில் அமைக்க முடியாதபடி எழுத்தாளனே சிக்குண்டிருப்பது மற்றும் நேர்கோடாகக் கதை ஓட்டத்தை அமைக்காது கருவுக்குப் பின்னான தத்துவார்த்த அலசல்களை மனித வரலாறு மற்றும் சிந்தனை மீது ஏற்றிப் பார்க்க நினைக்கும் எழுத்தாளரின் மன அமைப்பு. முடிவுகளை முன்வைத்தே ஆகவேண்டும் எனும் தலைவிதி நாவலாசிரியனுக்குக் கிடையாது. ஆனால், அதற்கான சாத்தியங்களை வாசகன் ஊகிக்கத் தேவையான கச்சாப்பொருள் நாவலில் இருக்கவேண்டியது அவசியம். அல்லது, தத்துவ விசாரத்தை முன்வைக்க நினைத்தால் மிகக் கச்சிதமான தர்க்க அமைப்பு கதையில் இருக்கவேண்டியது அவசியம். இக்காலகட்டத்தின் உளவியல் சிக்கல்களையும் அவற்றை ஒரு நவீன மனம் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், ஆட்டிஸம் எனும் குறைபாடு குறித்த நவீன ஆய்வுகளையும் முன்வைக்கும் தத்துவ அலசல் நாவலுக்கு ஒரு மிகப் பிரம்மாண்டமான சாளரத்தைத் திறந்து வைத்திருக்கும்.


நாவலின் பெரும்பான்மையான பகுதிகள் நம் மரபுக் கதைகளில் குழந்தை வளர்ப்பும் பலியும் உறவுகளை ஏற்கவும் எதிர்க்கவும் நினைக்கும் மனதையும் புராணக் கதைகள் வழியாகவும் மிக மேலோட்டமாகத் தொட்டுக் காட்டுகிறது. மையத்தை அலசும் கதைகள் நவீன மனமும் பழைய மனமும் முட்டி நிற்கும் இடங்களாக அமையாமல் புராணக் கதைகளாகவும், குழந்தைகளின் உலகமாகவும் இருப்பது நாவலின் பலவீனம். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் சில உறவுகளையும் சந்தர்ப்பங்களையும் உருவகப்படுத்தி நீலகண்டம் எனும் தலைப்பு வைத்திருப்பது கதையின் மையத்தோடு அழகாகப் பொருந்தியுள்ளது. ஆனால், அதை நீலகண்டனின் கதையில் புராணக் கதையும் தத்துவமும் இரண்டரக் கலந்திருப்பதை உருவகம் சந்திக்கத் தவறியுள்ளது. இந்த இரு எல்லைகளில் ஒரு சூழலுக்கும் தருணத்துக்கும் பொருந்திவரும் கதையம்சத்தை எல்லா காலங்களுக்கும் பொருந்தக்கூடியதாகக் காட்டும் பார்வை கதையில் திரளவில்லை.


தலைப்பிலேயே ஓர் உருவகமாகத் தொடங்கும் கதை மேலதிகமான படிமங்களை உருவாக்கவில்லை. செந்திலின் காமக் கீற்றுகள் மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும் அவை கதையின் பின்பலமாகக் குற்ற உணர்ச்சியின் ஊற்றாக மாறியிருக்க வேண்டிய இடம். அப்படி அமையாமல் விட்டது செந்திலின் குணவார்ப்பு வளரவிடாமல் தடுத்துவிட்டது. நச்சுப்பர்வம் எனும் பகுதி நாவலின் மையத்தோடு விலகி அமைந்திருக்கிறது. வாரிசு இல்லாதவர்கள் பல பரிகாரங்களை நிவர்த்தி செய்தபின் பிறக்கும் குழந்தையிலிருந்து எப்படி விலகிப்போகின்றனர் எனும் இடத்தில் மையச்சிக்கல் தொட்டுச் சென்றாலும், பல முக்கியமான கிளைக் கதைகளில் நச்சுப்பர்வம் சற்றே விலகி இருப்பதை இரண்டாம் வாசிப்பில் உணர முடிந்தது.


ஆட்டிஸம் குறித்து இப்போது பல புரிதல்கள் வந்தாலும், இக்குறைபாடு பற்றிய ஆழமான சித்திரத்தைக் கொடுத்த முதல் நாவல் எனும் வகையில் ஆசிரியர் பாராட்டுக்குரியவர். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆட்டிஸத்தின் உளவியலுக்குள் ஊடுருவப் பார்க்கும்தோறும் சிக்கல் பல வகையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. கேன்சர்போல ஒவ்வொரு ஆட்டிஸ நிறமாலையும் குழந்தையின் தன்மைக்கேற்பத் தனித்துவமானது. புனைவில் இந்த சாத்தியங்களைக் கையாண்டிருப்பதில் நாவல் வெற்றிபெற்றுள்ளது எனச் சொல்லலாம். கூறல் முறையில் மேலும் பல திறப்புகளைக் கொண்டிருக்கலாம் எனும் ஆதங்கம் முழு நாவலாக வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. பல இடங்களில் உணர்வுகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு வெளிப்பட்டதாகத் தோன்றியது – குறிப்பாக கரையான் அரித்த வீடு, வர்ஷினி காணாமல் போகும் கடைசிப் பகுதி எனச் சில இடங்களைக் குறிப்பிட முடியும். செந்திலின் குணவார்ப்பு அதிகம் மாறாமல் இருந்ததும் அப்பாத்திரத்தின் மன ஓட்டங்களைத் தொடரத் தடையாக இருந்தது.

No comments:

Post a Comment