வல்லினம் செப்டம்பர் மாத இதழில் வெளியான குறுநாவல்.
1
சரியான…காட்டெருமை” வண்டியின் கதவடைத்து இறங்கும்போது முணுமுணுத்தது மீனாவின் காதில் விழாது என எண்ணிக்கொண்டேன். ஆனால் ஏதோ லேசாக விழுந்திருக்க வேண்டும். நான் இப்போதெல்லாம் பெரும்பாலும் முணுமுணுப்பதால் இயல்பாகவே அதற்கு செவிகூரத்தொடங்கி இருந்தாள். பின்னிருக்கையிலிருந்து இறங்கியபடி “என்னப்பா”என்று முகத்தில் குழப்பத்தை தேக்கியபடி என்னை நோக்கினாள். “ஒண்ணுமில்லம்மா… வண்டி நல்லா தாட்டியமா இருக்குன்னு சொன்னேன்”என்றேன்.
“ஃபோர் வில்லர் எஸ்டேட் ரோட்டுக்கு தோதன காடிப்பா” என சிரித்தபடி மீனாவும் பிள்ளைகளும் இறங்கினார்கள். ஏற்கனவே நின்றிருந்த இரண்டு கார்களுக்கு இடையே கார் நிறுத்த வரையப்பட்டிருந்த வெள்ளை எல்லைகளுக்குள் கச்சிதமாக வண்டியை நிறுத்தியிருந்தான் நவீன். பெயர்ப் பலகையைப் படித்தபோது கோலா சிலாங்கூரில் மெலாவாத்தி மலை பிரபலமானது என நேற்றிரவு ஹரீஷ் சொன்னது நினைவுக்கு வந்தது. காரின் உயரம் காரணமாக ஏறுவதும் இறங்குவதும் சற்று சிரமமாக இருந்தது. பெரிய அளவு சக்கரங்களுடன் உயரமாக இருந்தது வண்டி. நவீன், மீனாவின் கணவன். காரின் கதவடைக்கும் ஓசை கேட்டதும் எங்களை நோக்கி திமுதிமுவென குரங்குகள் பாய்ந்து வந்தன. சட்டென பார்க்கும்போது முதுமலை காடுகளில் உள்ள சுள்ளிய சாம்பல் குரங்கின் தோற்றம். அடர்தாடி மட்டும் இல்லை.
குரங்குகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப் பழங்களை விற்றுகொண்டிருந்த மலாய்க்காரனிடம் நவீன் பழங்களை வாங்கி வந்ததும் ஹரீஷும் பிரியாவும் அவனிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டு ஓடினார்கள். குழந்தைகள் மீது அவை பாய்ந்து ஏறின. ஹரீஷ் கையை உயர உயரத் தூக்கி விளையாட்டுக் காட்டினான். குரங்குகள் எம்பி எம்பி பழங்களைக் கைப்பற்றின. பிரியாவின் முதுகில் குரங்குகள் தொற்றி ஏறின. அவள் கூச்சல் இட்டபடி பழங்களை நீட்டிக்கொண்டிருந்தாள். மீனாவின் தலை மீதேறி ஒரு குரங்கு அமர்ந்து வாழைப்பழத்தை நிதானமாகத் தின்றுகொண்டிருந்தது. கண்ணாடியை பிடித்து இழுத்துவிடும் எனும் பயம் ஒரு பக்கம் இருந்தாலும் அவளுக்குள்ளும் மகிழ்ச்சி கொப்பளித்து முகத்தில் வெளிப்பட்டது.
“அப்பா… நீங்களும் கொடுங்க, ஒன்னுஞ்செய்யாது”என்றாள் என்னிடம். நவீனின் இரண்டு கைகளிலும் இரு குரங்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. கறுக்கும் வெள்ளிப்பாத்திரத்தின் நிறம் என குரங்குகளைப் பார்த்ததும் தோன்றியது. சாம்பல்நிறக் கம்பிகள் வெயில் பட்டு மினுங்கின. முகம் மட்டும் கறுத்திருந்தன. மனிதர்களுக்கு காட்டுவதற்கென அம்முகத்தில் ஒரு அப்பாவித்தனமும் போட்டியிடும் சக குரங்கிற்கு காட்டுவதற்கென ஒரு எரிச்சல் முகமும் வைத்திருந்தன.
குரங்குகள் இயல்பாக ராமப்பனின் நினைவுகளை கொணர்ந்தன. ராமப்பன் தோட்டக் கிணறில் குரங்குகள் கொன்னிப் போய் விரைத்து மிதந்தது இப்போது நடப்பதுபோல் கண்முன் விரிகிறது. நானும் இன்னும் பல சிறுவர்களும் தோட்டத்திற்கு எல்லோரோடும் சேர்ந்து ஓடினோம். ஊருக்குள் எப்போதுமே குரங்குகளின் தொல்லை உண்டு. அவற்றை விரட்ட எல்லோர் வீடுகளிலும் வேட்டு கையிருப்பில் இருக்கும். வேட்டு வீசப்பட்டால் இரண்டு நாட்களுக்கு அண்டாது. ராமப்பன் நெடுங்காலம் மலேசியாவில் இருந்து பெரும்பணத்துடன் ஊர் திரும்பியவன். முப்பது மைலுக்கு அப்பால் உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவன். நொடிந்து கிடந்த ஆறுமுக சேர்வையின் தோட்டத்தை வாங்கினான். மா, பலா, தென்னை, வாழை என கடினமாகப் பாடுபட்டான். குரங்குகளை அவனால் பொறுக்க முடியவில்லை. வாழைக்குலைகளைச் சரித்தன. மாமரங்களைச் சூரையாடின. ஊர்ப் பொதுவில் இதைப்பற்றிப் பேசத் தொடங்கும்போதெல்லாம் “வேட்டு போடு… காவலுக்கு ஆள் நிறுத்து” என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
“உள்ளத சொல்லுங்க… நான் அசலூரான்… இம்புட்டு காசு பாக்குறேனான்னு வவுத்தெரிவு… சும்மா ஒன்னும் பாத்துடல… இம்புட்டுதானே… அதான் தோட்டம் நாசமாப்போனா நமக்கென்னன்னு தண்ணிய தெளிச்சு விடுறீக. இனி உங்கள கேக்கமாட்டேன். நானே ஆவுறத பாத்துக்கிறேன்” எனத் துண்டை உதறி கிளம்பிச் சென்றான். மூன்றாம் நாள் சினைக்குரங்குகள் குட்டிகள் என எல்லாம் மரித்துக் கிடந்தன. அவனுக்கு எதிராகக் கூட்டம் போட்டபோது அப்பச்சியுடன் நானும் சென்றேன். மொத்தம் இருபத்தி ஏழு குரங்குகளை விஷம் வைத்துக் கொன்றதாகச் சொன்னார்கள். ஒரு குரங்கின் குதத்தில் வெடிவைத்து சிதைத்து உடல் பிய்ந்து ரத்தம் தெறிக்க கிடந்ததால் பொண்டு, பொடுசுகள் தோட்டத்திற்குள் நுழையக்கூடாது என சொல்லிவிட்டார்கள்.
“காசு நிறைய இருந்தா குண்டி கொழுக்குமா?”என யாரோ ஒருவர் கூட்டத்தில் கத்தினார்.
“வித நெல்ல திங்குதுன்னு மயிலுக்கு வெஷம் வச்சவய்ங்கதான. வெசம் வைக்காத சம்சாரி இங்க உண்டுன்னா அவன வரச்சொல்லு கால்ல விழுந்து கும்புட்டுக்குறேன்” என ராமப்பன் சொன்னதும் மொத்த ஊரும் அமைதியானது. அப்பச்சி எழுந்து “அதுவும் இதுவும் ஒண்ணாப்பா. தவிச்சு தண்ணி குடிக்க வந்து கிணத்துல உசுர விட்டுபோச்சு. இதெல்லாம் பெரிய பாவம்பா” என பதமாக பேசினார்.
“உங்கள தெரியும்யா… உங்களுக்கு உபகாரம் செஞ்சவன்னு உள்ளார தெரியும். செஞ்சவன் உங்க ஆளு கிடையாது… உங்க ஊரு கிடையாது… இம்புட்டுத்தான்யா” எனக் கத்தினான்.
சற்றுநேரத்தில் என்ன ஏதென்று பிரித்தறிய முடியாத கூச்சல். அப்பச்சி ரத்த திட்டுடன் வாயைத் துடைத்தபடி வெளியே வந்தார். ராமப்பன் காட்டுக்கும் தோட்டத்திற்கும் யாரும் புழங்கக்கூடாது என ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கிணறு பாசி மூடிக் கிடந்தது. ஊரார் அரசமரத்தடியில் குரங்குகளைப் புதைத்து அதன் மேல் லிங்கங்களை நட்டார்கள். கருவிக்கொண்டிருந்த ராமப்பன் தோட்டத்தை விற்றுவிட்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு ஊரிலிருந்து வெளியேறினான். இரண்டு ஆண்டுகள் வெள்ளாமை பொய்த்தது. சோழி போட்டுப் பார்த்ததில் ராமப்பன் தோட்டத்துக் கிணற்றைத் தூத்த சொன்னார் பரியாரி. அப்பச்சி ஏற்றுக்கொண்டு ஊருக்காகச் செய்து முடித்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் ராமப்பனின் வாரிசுகள் என சிலர் ஊருக்கு வந்து அரசமரத்தடியில் ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவிலை எழுப்பினார்கள். அது ராமப்பனின் இறுதி ஆசை என்றும், அதற்கென ஒரு தொகையை வைத்துக்கொண்ட பிறகுதான் பங்கு பிரித்தளித்தார் என்றும் சொன்னார்கள். சில மாதங்களுக்கு முன் அதே கோயிலில் அனுமர் ஜெயந்திக்கு உண்ணாவுடன் சேர்ந்து ராமாயணக் கதை கேட்க பந்தலுக்கு சென்ற காட்சி நினைவில் வந்தது.
சுழலிலிருந்து தூக்கி எறியப்பட்டதுபோல் தலையை உலுக்கி எழுந்தேன். ஒவ்வொருமுறையும் இது இப்படித்தான். உண்ணா இறந்த தினத்திலிருந்து அவ்வப்போது தரையறியா ஆழ்ந்த கிணற்றுக்குள் விழுவது போன்று ஒரு உணர்வு இடம் பொருள் ஏவலைப் பொருட்படுத்தாமல் பீடிக்கிறது. முடிவுற்று நீளும் என அஞ்சும் போது ஒரு நினைவில் தலைமுட்டி விழிப்பேன். எல்லாமும் கொடும் நினைவுகள் மட்டுமே. இயல்பாகவே அனைவரிடமிருந்தும் விலகியிருக்க விரும்பினேன்.
பழங்களை விற்றுக்கொண்டிருந்த மலாய்க்காரனருகே சென்றேன். கரமில்லா சட்டையிலிருந்து அவனுடைய மஞ்சள் நிறக் கைகள் தெரிந்தன. இக்குரங்குகளின் பெயர் என்ன என ஆங்கிலத்தில் கேட்டேன். அழுத்தமான ஆங்கிலத்தில் ‘சில்வர் லீஃப் மங்கீ’ என்றான். பழம் வாங்குவேனா எனும் ஆர்வத்துடன் என்னருகே இன்னும் சில நொடிகள் நின்றான். நான் அவனைக் கவனிக்காமல் எங்கோ வெறித்திருப்பதை பார்த்ததும் ஆர்வமிழந்து நகர்ந்தான்.
வெயிலுக்குரிய வெக்கை இல்லாத, குளிர் மலைகளுக்கே உரிய இதமான வெப்பம். ஹரீஷும் பிரியாவும் குன்றின் மீது ஓடி ஏறினார்கள். மீனா அழைக்கும் வரை நான் தனித்து நின்றிருக்கிறேன் எனும் போதம் எனக்கில்லை. “என்னங்கப்பா… உங்களுக்காகத்தான வந்தோம்… அவருக்கும் நெறைய வேல கெடக்கு. இப்புடி தனியா வந்து நின்னா எப்புடி? என்னயும் கொஞ்சம் நெனச்சு பாருங்க. இப்பவர நீங்க அவரோட முகங்கொடுத்து பேசவே இல்ல. இன்னமும் உங்களுக்கு எங்க மேல கோவம் தீரலையா, ரெண்டு பேத்துக்கு இடையில குறுக்கமறுக்க ஓடிக்கிட்டே இருக்க முடியுமா சொல்லுங்க?”என மூச்சிரைக்கச் சொன்னாள்.
“கோவமெல்லாம் ஒண்ணுமில்லம்மா.”
“பின்ன வேற என்ன? அம்மா நெனப்பா? அவதான் போய் சேந்துட்டாலே, எம்புட்டு கஷ்டத்த கொடுத்தா, சாவுலகூட சந்தி சிரிக்க வெச்சுட்டா. இப்பவாச்சும் நிம்மதியா இருங்க”என்றாள். மெளனமாக அவளைத் தொடர்ந்தேன். நெடிதுயர்ந்த மரங்களின் மீது பறவைகளின் கெச்சல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. கோலாசிலாங்கூர் கடல் பறவைகளின் சரணாலயம் என்றும் அதன் மையமான வனப்பகுதி அருகில் இருப்பதாகவும் நவீன் கூறினான்.
மலேசியா வந்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது. நவீன் அவ்வப்போது இப்படி ஏதேனும் சொல்வான். ஆனால் அவை அரிதாகவே என் மனதில் பதியும். உண்ணாமலை தற்கொலை செய்துகொண்ட பிறகு போலீஸ் வரை வழக்கு சென்ற சூழ்நிலையில் என்னைத் தனியாக விடவேண்டாம் என இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வந்த மீனாவிடம் திரும்பத் திரும்ப சொன்னார்கள். உண்ணாவின் அக்கா, “இங்கேரு மீனா, நல்லாக் கேட்டுக்க, உங்க ஆத்தாவ எனக்கு நல்லாத்தெரியும். உடம்பொறந்தவங்காட்டி சொல்லல. என்ன இருந்தாலும் கொடுஞ்சாவு, ஆத்துமா இங்கனதா சுத்தி சுத்தி வரும், இருக்குற காலத்துலேயே உங்க அப்பச்சிய நிம்மதியா உறங்க விட்டவ இல்ல. இப்ப சும்மா கெடக்குமா. அவருக்கும் பாக்க கொள்ள வேற ஆளு யாரு இருக்கா? தம்பிகிட்ட பழச எல்லாம் மனசுல வெச்சுக்க வேணாம்னு சொல்லு. தங்கமான புள்ள. புரிஞ்சுக்கும். உங்கப்பச்சிய கூட்டிக்கினு போயி கொஞ்சநாள் வெச்சுக்க.”என்றாள் .
நவீனின் தந்தை மலேசியாவில் முக்கியமான ஆள். கெடாவில் அவருக்கு எஸ்டேட்டுகள் உண்டு. தமிழக தொடர்புகளும் நிறைய உண்டு என்பதால் அவருடைய செல்வாக்கைக்கொண்டு வழக்கை சீக்கிரம் முடித்தார்கள். எவரும் உண்ணாமலையின் மரணத்தின் மீது சந்தேகம் எழுப்பவில்லை. ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் கிடந்து செத்தாலும் அவளும் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. நடுநடுவே பேசினாலும்கூட ஏன் இப்படி செய்தாய் என யாராவது கேட்டால் அழுத்தமாக மவுனத்திற்குள் புகுந்து விடுவாள். விசாரணையில் உண்ணா ஆச்சி முன்னரே இரண்டு மூன்று முறை அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை முயற்சிகள் செய்து ஆஸ்பத்திரியில் படுத்து எழுந்தவள்தான் எனத் தெரியவந்ததால் காவலர்களும் பெரிதாக குடையாமல் வழக்கை முடித்து வைத்தார்கள். மீனா பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினாள்.
நவீன் மீது கோபம் வருத்தம் எல்லாம் இருந்தது உண்மை. ஆனால் இப்போது இல்லை. மீனா எங்களிடம் விஷயத்தை சொன்னபோது நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சாதி விட்டு சாதியில் திருமணம் செய்வித்துவிட்டு சிற்றூரில் வசிப்பது பெரும் சங்கடம். ஆனாலும் சங்கடம் எங்களுக்குத்தானே ஒழிய மலேசியாவில் வாழவிருக்கும் அவளுக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துகொள்ள எங்களுக்கு சில மாதங்கள் ஆனது. எனக்குள் என்ன நடக்கிறது எனச் சொன்னால் நிச்சயம் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றுவிடுவார்கள் என்பதால் விலகியிருக்கவே விரும்புகிறேன். என்னால் இனி ஒளிய முடியாது. உண்ணாவிற்கு என்னிடமிருந்து எதுவும் எடுக்க வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளட்டும். என்னை முட்டி சாய்த்து வீழ்த்த வேண்டும் என்றால் அப்படியே நடக்கட்டும். வேறெப்படியும் நான் அவளிடம் மன்னிப்புக் கோர முடியாது. காவலர்களிடம் இறுக வாய் மூடி இருந்ததை நான் என்னை மன்னித்துவிட்டதன் அடையாளம் என எண்ணிக்கொண்டேன். ஆனால் அவள் உத்தேசித்தது மேலதிக வாதையை எனப் புரிந்துகொண்டேன்.
சற்று இடைவெளி விட்டு அவர்களைப் பின்தொடர்ந்தேன். மீனா வேகவேகமாக ஏறிச்சென்று நவீனோடு இணைந்துகொண்டாள். ஹரீஷும் பிரியாவும் ஆளுக்கொரு இரும்பு பீரங்கி மீது அமர்ந்துக்கொண்டு சுடுவதாக பாவனை செய்துகொண்டிருந்தார்கள். டச்சுக்காரர்கள் ஆண்டபோது முக்கிய துறைமுகமாக இருந்த இப்பகுதியில் பாதுகாப்புக்காக அமைத்த சுவடுகளின் மிச்சம் என சொல்லிக்கொண்டிருந்தான் நவீன். இப்போது அது ஒரு அலங்காரப்பொருள். “என்னோடது செம பவர் தெரியுமா… சுவரெல்லாம் உடஞ்சி எல்லாத்தையும் அழிச்சிடும்”என சொல்லிக்கொண்டிருந்தாள் பிரியா. “இதெல்லாம் ஓல்ட். இதவிட செம பவரான பாம் எல்லாம் இருக்கு…” ன்றதும் பிரியா அவனிடம் ஓடிவந்தாள். இருவரும் மீனாவின் கைப்பேசியை இயக்கி ஏதோ ஒரு காணொளியைப் பார்க்க தொடங்கினார்கள். கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். “செமையா இருக்கு, வாட் இஸ் இட்ஸ் நேம்?”எனக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
புல் போர்த்திய ஒரு படியில் அமர்ந்தேன். புல்லீரம் ஆடையில் தொற்றிப் பரவியது. அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அது ஏன் எனக்குள் பதட்டத்தை ஏற்படுத்துகிறது? எப்போதும் வாள் ஒன்று வெட்ட ஓங்கிய கரத்துடன் அருகிலேயே நிற்பதாகத் தோன்றுகிறது. தோளில் மீனாவின் தொடுகைபட்டதும் காட்சிகள் சிதறி கவனம் மீண்டது. “அப்பா போவோமா”என்றாள். இறங்கி வண்டியருகே சென்றபோது எதிரே இருந்த அருங்காட்சியகம் தென்பட்டது. நவீன் இங்கு வரும்போதெல்லாம் அவனுடைய வரலாற்று ஆர்வம் காரணமாக அங்கும் சென்று வருவான் என்றாள் மீனா. “நீங்களும் போயிட்டு வாங்க” என்றாள். எங்களுக்கிடையேயான இறுக்கம் குறையட்டும் என எண்ணியிருக்கக்கூடும். பிள்ளைகள் கால் சோர்ந்திருந்தன. பிள்ளைகளுடன் வண்டியிலேயே இருப்பதாக மீனா சொல்லிவிட்டாள். நானும் நவீனும் உள்ளே சென்றோம். கோலா சிலாங்கூர் மாவட்ட வரலாற்று அருங்காட்சியகம் என எழுதி இருந்தார்கள். உள்ளே இருந்த புகைப்படங்களை, குறிப்புகளை ஒவ்வொன்றாக நவீன் நிதானமாக வாசித்து வந்தான். அருங்காட்சியகத்துக்கு பலமுறை வந்து சென்றவன் இத்தனை நிதானமாக வாசித்து வருவது வியப்பாக இருந்தது. அரசர்கள், ஆயுதங்கள், கப்பல்கள் உடைகள் என விதவிதமான புகைப்படங்கள். எதையும் வாசிக்காமல் படங்களை மட்டும் வேடிக்கை பார்த்தபடி சுற்றி வந்தேன். அப்போது அந்த வரிசையில் ஒரு கிணற்றின் புகைப்படம் மாட்டியிருந்தது. கம்பி அடைப்புகள் கொண்ட சிமிண்டெ கட்டுச் சுவர் கொண்ட சாம்பல் நிறத்து சாதாரண கிணறு. அதை ஒருவன் ஏன் இங்கு மாட்ட வேண்டும் ஆர்வத்துடன் அதனருகே சென்று வாசிக்கத் தொடங்கினேன்.
மெலாவாத்தி மலையின் அருகில்தான் இக்கிணறு உள்ளது. பூகிஸ் மன்னர்கள் துரோகிகளை தண்டிக்க இக்கிணற்றைப் பயன்படுத்துவார்கள். இதில் அரிப்பு ஏற்படுத்தும் செடிகள், விஷச் செடிகளின் சாறுகள், மூங்கில் குருத்துக்கள், முட்கள், போன்றவற்றை இட்டு நிரப்புவார்கள். கழுத்து வரை இறக்கிவிடப்படும் ஒருவன் துடித்து பெரும் வலியை அனுபவித்து இறுதியாக இறப்பான்.
உடல் நடுங்கத் தொடங்கியது. புகைப்படத்தில் இருந்த கிணறு நீர் பிம்பம்போல் அலையடித்தது. நான் அறிந்த கிணறுகள் எல்லாம் ஒன்றையொன்று முட்டி மேலெழும்பின. ஆழ்துளைக் கிணறுகள், பாசனக் கிணறுகள், நன்னீர் கிணறுகள் என ஆயிரம் கிணறுகள் பார்த்திருப்பேன். அவற்றில் பெரும்பாலும் நீர் பொங்கி வளமாக்கும். என்னால் எத்தனை முயன்றும் அவை எவற்றையும் நினைவில் கொணர முடியவில்லை. தொழில் தொடங்கிய புதிதில் ஒண்டியாளாக நாட்கணக்காக இயந்திரத்தின் மாறாத லயத்தை கேட்டபடி பூமியில் துளையிட்டிருக்கிறேன். பலநூறுமுறை பீறிட்டு வரும் செந்நீரைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். உண்ணா அவளுடன் சேர்த்து இனியவை என நான் பொதித்து வைத்திருந்த எல்லாவற்றையும் வழித்துச் சுருட்டிக்கொண்டாள். எஞ்சியவை எல்லாவற்றையும் பற்றிய இழிவான கோரமான நினைவுகள் மட்டுமே. வெட்டி வயலில் ஒரு கிணற்றைத் தூரெடுக்கும்போது வேலையாட்கள் அதற்குள்ளிருந்து ஒரு சிறு குழந்தையின் மண்டையோட்டை எடுத்தார்கள். வட்டானத்தில் ஒரு கிணற்றை தூரெடுக்கச் சென்று பிணமாக மேலேறி வந்தார்கள் குமரேசனும் சேகரும். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நீரில்லா வறண்ட கிணற்றுக்குள் மண்டை பிளந்து இறந்து கிடந்தாள் சிவகாமி. கட்டிட இடிபாடுகளை இட்டு நிரப்பி அந்த கிணற்றை நான்தான் மூடினேன். முத்துமாரி பால்குடத்தின்போது ராமநாதன் காட்டில் உள்ள கிணற்றில் உடல் உப்பி மிதந்த ஆடையற்ற பெண் உடல். மயங்கி விழுந்து விடுவேன் எனத் தோன்றியது. நவீன் அதற்குள்ளாக வந்திருந்தான். கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றான். குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதும் சற்று ஆசுவாசமாக இருந்தது.
அங்கிருந்து வெளியேறி செல்லும் இறுதி நொடியில் அந்தக் கிணறு வேறொன்றாக கணநேரம் தோன்றி மறைந்தது. நொறுக்கிய கண்ணாடிச் சில்லுகளை விழுங்கி குடல் கிழிந்து ரத்தம் கசிந்து இறந்த உண்ணாவின் பிளந்த வாய்தான் அது.
2
முன்பொரு காலத்தில் சான்றோர் அதை ஆதி யுகம் எனச் சொல்வார்கள். அப்போது எல்லாமும் எல்லோருக்கும் கிடைத்து வந்தன. மானுடர்கள் வசிக்கவும் வாழவும் மகிழ்ந்திருக்கவுமாக இறை ஒரு மாபெரும் தோட்டத்தை அளித்திருந்ததாம். அப்போது அங்கு வாழ்ந்தவர்களுக்கு மரணம் என்பது முதிர் கனியின் வெடிப்பாக, ஒரு இனிய விடைபெறலாக மட்டும் இருந்ததாம். இக உலகமும் பர உலகமும் ஒன்று மற்றொன்றின் தொடர்ச்சியாக, மாற்றமில்லா சுவர்க்கபுரியாக இருந்தனவாம். ஓருயிர் உதிர வேறொரு உயிர் முளைக்க என சமநிலை பேணப்பட்டதாம். தூய இருதயமும் பழுதற்ற உடலும் மாசற்ற மனமும் கொண்டிருந்தனராம் மானுடர்கள். விண் சொரியும் நீர் மண் செழிக்க போதும். பிறவாமையை விரும்பினால் தேரலாம் என்றபோதும் பிறந்து இறையின் மடியில் தவழ்ந்து வளர்ந்து மறையவே அவர்கள் விரும்பினர். எந்நாளும் இன்பத்திலிருக்க எப்போதும் இறையுடன் இருந்தனராம். இறையொரு முது தாதையாக, பச்சிளம் பாலகனாக, அரவணைக்கும் அன்னையாக வாளைக் குமரியாக பசும் புல்லாக வானேகும் புள்ளாக என விரும்பும் உருவெடுத்து அவர்களுடன் விளையாடி களித்திருந்தது. வினைச் சக்கரம் பசையிழந்து இறுகியிருந்தது. நிகழ்வதுயாவும் மானிடரின் முழு சுய தேர்வின் பாற்பட்டதே. விளையாடிக் களித்த இறைக்கு ஆட்டம் அலுக்க தொடங்கியதும் ஆட்டத்தை சுவாரசியமாக்க புதியதோர் விதி வகுத்ததாம். திசையற்று விரிந்த தோட்டத்திற்கு எல்லைகள் வகுக்கப்பட்டதால் திசை பிறந்ததாம். ஒருபோதும் தோட்டத்தை விட்டு வேளியேறக்கூடாது. மீறினால் அத்தனை எளிதில் மீளமுடியாது என்றது. வெளி என ஒன்று வகுக்கப்பட்டதால் உள் என ஒன்று உருவானது. அதிலிருந்து வெளியை அறியும் விழைவும் பிறந்தது. எல்லை வரை சென்று வேடிக்கை பார்த்து இறையாணையை மீறாமல் திரும்பினர். தோட்டம் நிகழ்காலத்தின் நடனமென இருக்கையில், கடந்தகாலமும் வருங்காலமும் மட்டுமேயானதாக விரிந்தது தோட்டத்திற்கு அப்பாலான பாழ்வெளி நேற்றைய நசிந்த பொம்மைகளையும் ஒருங்கமைக்கபடாத நாளைய முன்மாதிரிகளையும் இறை சேமித்து வைக்கும் கிடங்கு.
ஒரு நண்பகலில் இறை கண்ணயர்ந்தபோது மானுடர்கள் யாவரும் தன்னை மறந்திருப்பதாக ஒரு தீங்கனா கண்டு விழித்ததாம். பதைப்புடன் செய்வறியாது திகைத்த இறை தீங்கனாவை நினைவிலிருந்து அகற்றும் பொருட்டு அதை வழித்து திரட்டி தோட்டத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு ஆழ் கிணற்றைச் செய்வித்து அதில் இட்டதாம். ஒளிபுகா ஆழத்தில் தீங்கனா நிறமற்ற திரவமாக மிதந்தது. தீங்கனாவிற்கு காரணம் அறியமுடியாமல் வெருண்டது இறை. ஆட்டத்தை சுவாரசியமாக்கவும், கனவை சோதித்தறியவும் முடிவு செய்த இறை தோட்டத்தில் மகிழ்ந்திருந்த மக்களிடம் புதிய நிபந்தனை ஒன்றை இட்டது. தென்மேற்கு மூலையிலிருக்கும் கிணற்றுக்கு மட்டும் எவரும் செல்லக்கூடாது அது தடுக்கப்பட்ட பகுதி. மீறினால் வெளியேற்றப்படுவர் என அறிவித்துவிட்டு வழக்கம்போல் எல்லோருடனும் களியாடியது. தாமறியா இரவுகளில் அங்கு எவரேனும் செல்கிறார்களா என விழிப்புடன் நோக்கியபடி இருந்தது. ஆனால் இறைவாக்கை எவரும் மீறவில்லை. தன் கனா வெறும் அச்சம் என்றெண்ணி ஆசுவாசமடைந்த இறை இங்கு எந்த மீறலும் நிகழப்போவதில்லை எனும் நம்பிக்கையை அடைந்து ஐயம் நீங்கித் தளர்வடைந்தது.
அன்றொருநாள் தோட்டத்தில் பழங்களை வீசிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தsuneel 02 குழந்தைகள், விளையாடி விளையாடி தென்மேற்கு மூலைக்கு களிப்பில் வந்துவிட்டிருந்தனர். எங்கிருக்கிறோம் என்றறிவதற்கு முன் விளாம்பழம் ஒன்று கைத்தவறி கிணற்றுக்குள் விழுந்து ஒலியையும் அலையையும் எழுப்பியது. திரவத்தின் துமிகள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் மீது தெறித்தன. துமியின் குளிர்ச்சி அவர்கள் அதுவரை அறியாதது. அனைவரும் கிணற்றைச் சுற்றி வட்டமிட்டனர். ஒவ்வொருவராக நாம் இப்போதே செல்வோம் இது இறையாணைக்கு விரோதமானது என மாறி மாறி விளம்பினர். சொன்னவர் சில அடிகள் கிணற்றை விட்டு அகன்று செல்வதும் பின்னர் எவரும் உடன்வராததால் மீண்டும் வந்து நிரையில் அமர்வதுமென தொடர்ந்தது விளையாட்டு. கிணற்றில் இறங்கப் படிக்கட்டுக்கள் தோன்றின. அவற்றில் ஒருவர் இறங்குவதும் பிறர் வேண்டாம் இது மீறல் என எச்சரிப்பதும், அதைக்கேட்டு பின்வாங்குவதும் என அடுத்த சுற்று விளையாட்டு நீண்டது. பின்னர் தங்களிடமிருந்த கனிகளை அதனுள் வீசி, தெறிக்கும் துமிகளை எதிர்பார்த்திருந்தனர். பழங்களை வீச வீச திரவம் உயரே உயரே எழுந்தது. தெள்ளிய நீர் என அவர்களின் முகங்கள் துலங்கியது. ஏழு படிகள் இறங்கி சென்றான் முதலாமவன். நீரைத் துழாவி ஒரேயொரு மென்மையான ஒளி ஊடுருவும் கூழாங்கல்லை எடுத்து வந்தான். ஒவ்வொருவரும் அதைக் கையில் பெற்று நோக்கினர். பிறகு ஒவ்வொருவராக படியிறங்கத் தொடங்கினர். படிகளில் இறங்குவது காலம் பிடிப்பதாக ஆனது. ஆகவே பொறுமையிழந்து குதித்தனர். அவர்கள் ஒவ்வொருவராக நீர்பரப்பை தொடும் தோறும் அது ஆழத்திற்கு சென்றபடி இருந்தது. அவர்கள் எடுத்துவரும் கற்களின் அளவு பெருகி நுனி கூர்மையடைந்த வண்ணமிருந்தன. எல்லோரும் விதவிதமான கற்களை கண்களுக்கு அருகே வைத்து நோக்கினர். தூக்கிப்போட்டுப் பிடித்தனர். மரத்தின் மீது வீசியபோது பால் வடிந்தது. கூர்முனைகளால் பட்டைகளை உரித்தபோது அவர்கள் அதுவரை அறியா கிளர்ச்சியை உணர்ந்தனர். கற்களை ஒன்றுடன் ஒன்று மரப்பட்டைகளால் பிணைத்து விதவிதமாக உருவாக்கிப் பார்த்தனர். இருபக்கமும் தட்டையான கற்கள், இரு பக்கமும் கூர்மையான கற்கள், ஒரு பக்கம் கூர்மையான ஒரு பக்கம் தட்டையான கற்கள். அவர்கள் மீது ஏறி விளையாடிச் செல்லும் அணில் ஒன்றை ஒருவன் பிடித்தான். தட்டையான கல்லைகொண்டு அதன் தலையை நசுக்கினான். தெறித்த ரத்தம் சூழ்ந்திருந்தவர்களின் கண்களை மினுங்கச் செய்தது. பிறகு அவர்களுடன் இப்படி விளையாடும் ஒவ்வொரு பிராணியாக இட்டு வந்தார்கள். நிகழ்வதேதன்று அறியாத அப்பிராணிகள் விளையாட்டு எனக் கருதி அவர்களுடன் மகிழ்வாகப் பங்கெடுத்தன. ரத்தம் தெறிக்கத் தெறிக்க விளையாட்டுக்கள் வேறு வேறு என பரிணாமம் கொண்டன. தலைகீழாகத் தொங்கவிட்டு குறிபார்த்து எறிவது, கை, கால்களைத் தனித்தனியாக நசுக்கி எஞ்சிய உயிறாற்றலுடன் அது நகர்வதைக் காண்பது, வாயிலும் குதத்திலும் கூர்முனையால் கிழிப்பது, உடலை குறுக்கும் நெடுக்குமாக கூறு போடுவது எனத் தொடர்ந்தது. கிணற்றில் இறந்காதவன் ஒரேயொருவன் எஞ்சியிருந்தான். அவன் இவை எல்லாவற்றையும் விலக்கத்துடன் நோக்கும் வெளிர்நீல கண்கள் உடையவன். தனித்து அமர்ந்திருப்பவன். தயங்குபவன். பிறர் அவனை நோக்கிச் சிரித்தனர். அவனை உந்தினர். உற்சாகப்படுத்தினர். மிரட்டினர். மெதுவாக, பீடிக்கப்பட்டவன்போல எழுந்து சென்றான். கிணற்றின் ஆழத்திற்குச் சென்று ஆயிரத்தி எட்டு படிகள்; மேலேறி வருவதற்குள் வதைக்கப்பட்ட உயிரினங்கள் மலையெனக் குவிந்திருந்தன. எல்லோரும் குழந்தைமையை உதிர்த்து வளர்ந்திருந்தனர். உள்ளே சென்றவனைக் குறித்து மறந்திருந்தனர். அவனுடைய காலடிகளை இடியோசை என கேட்கத் தொடங்கியதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிணற்றைச் சூழ்ந்து கொண்டனர். அவன் கொண்டுவரப்போவது என்ன என்று அவர்கள் கனவுகண்டார்கள். பெரும் கல்லை சுமது வருவான் என்றார்கள் இல்லையில்லை கூர்மையான நீள் கல்லை எடுத்து வருவான் என்றார்கள். அவன் காலடி ஓசையும் அவர்களின் இதயத்துடிப்பும் ஒரே லயத்தில் இணைந்தன. அவன் முழுக்க நனைந்து வெளியேறி வந்தபோது கையில் ஒரு கவண் இருந்தது. குளிரில் உடல்நடுங்க மூச்சிரைத்தபடி அதைக் கீழே வைத்துவிட்டு நகர்ந்தான். அதை என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றி அமர்ந்து அதைப் பார்த்தார்கள். வெளிர்நீல கண்ணன் கூட்டத்திலிருந்து விலகி தனித்து அமர்ந்திருந்தான். அவனிடம் அதைக் கொண்டு சென்று என்ன செய்வதென்று வினவினார்கள். முதலாமவனின் கூழாங்கல்லைப் பொருத்தி, அதைச் செலுத்திக் காண்பித்தான். கல் வெகுதூரம் சென்று விழுந்தது. அவனிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டார்கள். மரத்தின் மீதிருந்த குருவியின்மீது குறி பார்த்து ஏவினான் ஒருவன். ஒரு துளிக் குருதி குறித்துக் கொடுத்த இடத்தில் வீழ்ந்தது குருவி. ஒவ்வொருவரும் அதை தமதாக்கிக்கொண்டு உயரத்தில் இருப்பவை, தொலைவில் இருப்பவை என ஒவ்வொன்றாகக் குறி பார்த்து ஏவி வீழ்த்தினார்கள். மீண்டும் ஒரு களியாட்டுத் தொடங்கியது.
அப்போது அதுவரை அவர்கள் எவருமே கண்டிராத ஒரு பொன் மஞ்சள் குருவி உச்சிக்கிளையில் தென்பட்டது. ஒரே நேரத்தில் வெகு அருகிலும் வெகு தொலைவிலும் என ஒரு சேர மயக்குரு அளித்தது. ஒவ்வொருவராக அதை நோக்கிக் குறிபார்த்துத் தோற்றனர். தொடக்கத்தில் தோல்விகள் ஏளனத்தோடும் சிரிப்போடும் வரவேற்கப்பட்டன. போகப்போக அதை வீழ்த்துவது ஒரு வெறியாகிப்போனது. சேகரித்து வைத்த அத்தனை ஆயுதங்களையும் அதன்மீது வீசி எறிந்தனர். மரங்கள் மீது ஏறி அதைத் தொடர்ந்தனர். கூட்டமாக ஓடியதில் தோட்டம் சிதைந்தது. அதுவரை ஒதுங்கியிருந்த தோட்டத்தின் பிற பகுதியில் இருந்தவர்கள் அக்குருவியைக் கண்டதும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அதைத் துரத்தி ஓடினர். வெறியேறிய சிலர் குருவியை வீழ்த்த வேறு ஆயுதங்களை தேடிக் கிணற்றுக்குள் செல்லத் திட்டமிட்டபோதுதான் அதன் வாய் குறுகி சுருங்குவதைக் கவனித்தார்கள். உள்நுழைய முயன்றதில் இருவரை உள்ளிழுத்துக்கொண்டு கிணறு மூடியது. முதல்முறை அவர்கள் இழப்பையும் மரணத்தையும் வலியென உணர்ந்தார்கள். ஓலமெழுப்பினார்கள். வெளிர் நீலக்கண்ணன் எல்லாவற்றையும் வெறுமே பார்த்திருந்தான். மறைந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த குருவியை வீழ்த்தியாக வேண்டும் என வெறிகொண்டு ஓடினர். குருவி எல்லா தாக்குதல்களில் இருந்தும் தப்பிப் பறந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசையில் குருவி தென்பட்டது. அவரவர் கண்ட குருவியை பிறர் காண முடியவில்லை. எல்லோரும் பிழையாக குறிவைப்பதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் உருண்டு பிரண்டார்கள். ஆயுதங்களை கையில் எடுத்து உக்கிரமாக தாக்கி வீழ்த்தினார்கள். ஒருவரையொருவர் வெறிகொண்டு வேட்டையாடினார்கள். குருவி அமைதியாக தோட்டத்தின் எல்லையில் ஒரு கிளையில் அமர்ந்திருந்து எல்லாவற்றையும் நோக்கிக்கொண்டிருந்தது. வினைச் சக்கரம் முழுவிசையில் சுழன்றுகொண்டிருந்தது. நிணம் வடிய நின்றவர்கள் சட்டென அபத்தம் உறைக்க எல்லையில் நின்றிருந்த குருவியை நோக்கினர். எஞ்சிய ஆற்றலைத் திரட்டிக்கொண்டு ஆவேசமாக ஓடிவந்து அதை எல்லா பக்கங்களிலுமிருந்தும் சூழ்ந்துகொண்டார்கள். பொன் குருவி அவர்கள் ஓய்ந்த கணநேரத்தில் சட்டென சிறகடித்து தோட்டத்திற்கு வெளியே வெட்டவெளிக்குப் பறந்தது. சந்நதம் கொண்ட அவர்கள் எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு அதைத் துரத்தி ஓடினார்கள். வெளிர்நீலக் கண்ணனும் கடைசியாகப் புட்டத்து மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தான். பொன் குருவி ஒரு காய்ந்த மொட்டை மரத்துக் கிளையில் அமர்ந்தது. வெக்கை எரிந்த விரிநிலத்தில் பித்தேறி ஓடினார்கள். பொன் குருவி ஒரு நிழலென சாம்பல் கொண்டு கருமையில் கரைந்தது. துரத்திச் சென்றவர்கள் திகைத்தார்கள். திரும்பி நோக்குகையில் தோட்டம் அங்கிருந்து மறைந்திருந்தது. ஓய்ந்து அமர்ந்து விசும்பினர். அன்று தொடங்கி அவர்கள் வெளியேற்றப்பட்ட தோட்டத்தைத் தேடினர். இறை மீது கோபம் கொண்டு தாங்களே தங்களுக்கான தோட்டங்களை உருவாக்க முயன்றனர். மீண்டும் மீண்டும் அத்தோட்டத்தின் நகல்களை உருவாக்கி அது முழுமையின்றி இருப்பதை உணர்ந்து மருண்டனர். அவர்களை வெளியேற்றிய பொன் குருவியைத் தேடினர். மீண்டும் அழைத்துச் செல்லும் பாதையை அது மட்டுமே அறியும். பொன் குருவியை நெருங்கும் தோறும் கனவிலிருந்து கிணறு மேலெழுந்து வந்தது. அதன் ஆழத்திலிருந்து அள்ள அள்ள விதவிதமான கொலை எந்திரங்கள் பிறந்தவண்ணம் இருந்தன. வற்றாத நீரூற்றாகப் புதியவற்றைப் பிறப்பித்த வண்ணம் இருந்தது. மேலும் மேலும் என பொன் குருவி அவர்களை விட்டு அகன்றபடி இருந்தது. வெகு சில தனியர்கள் கிணற்றின் ஊற்றுமுகத்தில் நுழைந்து மறுபக்கத்தில் எழுந்து தோட்டத்தை அடைந்தனர். வேறு சிலர் கிணற்றை அறியாத பேதைகளாக அதைக் கடந்து பொன் குருவியை தொடர்ந்தனர். தோட்டம் அவர்களுக்குத் திறந்தே இருந்தது.
அயர்ச்சியின் கணத்தில் மனிதர்கள் தோட்டத்தை மறந்தார்கள். அப்போது இறைக்கு தன்னிருப்பு பற்றிய ஐயம் எழுந்தது. தோட்டத்தைப் பற்றிய கனவு இருக்கும் வரை மட்டுமே தான் இருப்போம் என புரிந்துகொண்டது. ஆகவே தோட்டத்தைப் பற்றிய கனவை, கதைகளை விதைத்தபடி இருந்தது. கிணறும் குருவியும் தோட்டமும் அறுபடாது தோன்றியும் மறைந்தும் களியாடி வருகின்றன.
3
சரவணனின் யமஹா ஆர்.எக்ஸ் 115 வண்டியிலிருந்து, அது ஒரு பழைய வண்டிதான் ஆனால் அதற்கு அவன் புத்துயிர் அளித்திருந்தான், நான் இறங்கியபோது எதிரே இருந்த கட்டிடத்திலிருந்து, அது ஒரு மாவட்ட அருங்காட்சியக கட்டிடம், ஒருவரை அணைத்தவாறு வெளியே கொண்டு வந்தார்கள். என்னைவிட நான்கைந்து வயது மூத்தவராக இருக்கலாம், ஆனால் தமிழ் முகம், மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது, தொண்டையைக் கமறினார். ஒரு திட்டில் தலையைப் பிடித்துக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்தார். அருகே செல்லலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கையில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஃபோர் வீலர் காரிலிருந்து இறங்கிய ஒரு பெண் அவரை நோக்கி ஓடிய அக்கணத்தில் தன்னிச்சையாக அவரை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சரவணன் எனக்கு முன் ஓடிக்கொண்டிருந்தான். இத்தகைய தருணங்களில் நான் என்னுடன் வருபவர்களின் முகத்தை நோக்குவதையோ நோக்கப்படுவதையோ விரும்புவதில்லை. சூழல் மறந்து சிரித்துவிடுவோம் எனும் அச்சம்தான் காரணம்.
சரவணன் நேராக நீர் புகட்டிக்கொண்டிருந்த அந்த பெண்ணை நெருங்கி என்ன ஏதென்று விசாரித்து ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டான். நாங்கள் அடித்திருந்த வாசனைத் திரவியத்தின் வீரியத்தை மீறி எங்கள் உடலிலிருந்து எழுந்த உக்கிர மது நெடியை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். நேற்றைய இரவின் சிவாஸ் ரீகலும் இன்று காலை இறங்கிய பீரும் தோல் துளைகளிலும் மூச்சுக் காற்றிலும் ஆவியாகிக்கொண்டிருந்தன. மூச்சிரைத்து கொண்டிருந்தவர் சட்டெனத் தலைத்தூக்கி ஒன்றுமில்லை கிளம்பலாம் எனச் சொல்லிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டதை கண்டபோது ஏதோ ஒருவகையில் எங்களை அவர் உணர்ந்துகொண்ட சஹ்ருதயர் எனத்தோன்றி புன்னகை அரும்பியது. பாம்பின் கால் பாம்பறியும். எனினும் அவரை வெளியே அழைத்து வந்தவன் இளைஞன். அவனுக்கு சரவணன் வயதிருக்கலாம்.
ஆம் இப்போது சரவணனைப் பற்றிச் சொல்ல வேண்டும்- சரவணன் மலேசியாவின் இளையதலைமுறை எழுத்தாளர்களில் பொருட்படுத்தத்தக்க ஒருவன், ஒரேயொருவன் எனச் சொல்ல மனம் சபலப்படுகிறது, எனினும் என்னை அழைத்ததாலே சரவணனை இப்படி மிகையாக புகழ்கிறேன் என நீங்கள் எண்ணிவிடக்கூடாது. தமிழகத்தில் அப்படிச் சிலமுறை செய்திருக்கிறேன். பிறகு அவர்கள் என்னை மழிக்கப்பட்ட அக்குள் மயிர் என கடாசி இருக்கிறார்கள். கட்டி உருண்டு பற்களை பெயர்த்துக்கொண்ட கதைகள் எல்லாம் உண்டு. சரவணனின் அழைப்பின் பேரிலேயே நானிப்போது இங்கு கவிதைப் பட்டறை நடத்த வந்திருக்கிறேன். தமிழகத்திலேயே எவரும் நான் மேடையில் முழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை என்றாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் என்னை அழைத்திருந்தான். மலேசியாவிற்கு வரமுடியுமா என்றழைத்தபோது, தமிழில் என்னை விடப் புகழ்பெற்ற கவிகள் பலர் இருக்க என்னை எதற்கு அழைக்கிறாய் என அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில் விநோதமானது. சில ஆண்டுகளுக்கு முன் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் மேடையிலேயே அந்நூலை கிழித்து போட்ட நிகழ்வை நினைவுகூர்ந்தான். ‘நீங்கள் ஒரு சமரசமற்ற கலகக் குரல். இங்கே அத்தகைய குரல்களே தேவை.’ என்றான். ஒருவேளை நீங்கள் தலைசிறந்த கவி என சொல்லியிருந்தால் அவனை நம்பியிருக்கமாட்டேன். ‘முதலாளித்துவம் கலகத்தையும் பண்டமாக்கியுள்ளது இல்லையா’ என்றேன். அவன் மறுமுனையில் அமைதியாகி விட்டான். சில நொடிகளுக்கு பின் நான் உரக்க சிரிக்கத் தொடங்கியதும் அவனும் சிரித்தான்.
வெளியே அழைத்து வந்தவனைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். பெரியவரின் நடத்தையால் நாங்கள் புண்பட்டுவிடக்கூடாது என்றெண்ணி, அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தவர் சட்டெனச் சரிந்துவிட்டார் எனவும் கீழே விழுவதற்குள் சற்றுத் தொலைவில் தொடர்ந்து கொண்டிருந்தவன் அவரை தாங்கிப் பிடித்து வெளியே அழைத்து வந்ததாக ஒருவரியில் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தபடி கூறினான். இப்போது இயல்பாக இருக்கிறார் என விட்டுவிட வேண்டாம் எதற்கும் மருத்துவரிடம் அழைத்து சென்று காட்டுங்கள் எனச் சொல்லி முடிப்பதற்குள் வண்டி நகரத் தொடங்கியிருந்தது.
இருவரும் சிரித்துக் கொண்டோம். குரங்குகளுடன் விளையாடினோம். அவற்றுக்கு எங்கள் மதுநெடி பித்தூட்டுவதாக இருந்திருக்க வேண்டும். கிறங்கி சுற்றி வந்தன. புல்வெளிகளில் அமர்ந்து இலக்கிய உள்வட்ட வம்புகளையும் நகைச்சுவைகளையும் பரிமாறிக்கொண்டோம். இளமைக் காலத்தில் நான் இலக்கியக் கூட்டங்களில் செய்த கலகங்கள், கூட்டத்திற்கு பின்பான கைகலப்புகள் போன்றவை தொன்மமாக உலவுகின்றன என்பதை அவன் வழியே அறிந்துகொண்டேன். அவன் கேள்விப்பட்ட ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு ‘இது உண்மையா’ என வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். கருத்து முரண்பாட்டுக்காக இப்படி கட்டி உருள்வீர்களா எனக் கேட்டான். மூளை சூடாகி குருதி கொதித்துக் கொண்டிருந்த காலம். அதுவொரு போதை. எல்லாவற்றையும் புரட்டிப்போடப் போகிறோம் எனும் வேகம். ‘எனக்கு இலக்கிய நோபல் அறிவிக்கப்பட்டால் அப்போது அதை ஏற்க மறுத்து ஆற்றவேண்டிய உரையை முப்பது வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா?’ அவன் உரக்கச் சிரித்தான். இப்போது அவையாவும் பொருளற்ற அபத்தங்களாக தெரிவதால் அவை பொய் என்றாகிவிடுமா? தெரியவில்லை. சிரிப்பினூடே அதைக் கடந்து சென்றேன்.
என் மனதில் வேறொரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அருங்காட்சியகத்தில் ஒரு மனிதன் எதைப் பார்த்து மயங்கக்கூடும்? அல்லது ஏன் மயங்கக்கூடும்? இருதயக் கோளாறு, சர்க்கரை குறைவு, சுவாசக் கோளாறு, என சரவணன் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் இவையெதுவும் காரணமாக இருக்கமுடியாது எனத் தோன்றியது. உள்ளே சென்று பார்க்க வேண்டும் என சரவணனிடம் கூறியபோது அவன் அதுவொரு மொக்கை அருங்காட்சியகம் என்றான். ஒருவனை மயங்கி விழச் செய்யக்கூடிய ஒன்று இருக்கும் அருங்காட்சியகம் மொக்கையாக இருக்கமுடியாது எனக் கூறி அவனை அழைத்துச் சென்றேன். கப்பல்கள், படைக்கலங்கள், புகைப்படங்கள் எனப் பெரிதாக ஈர்க்காத தகவல்களை ஒவ்வொன்றாக கடந்து வந்தோம். எலும்பை நொறுக்கவும், குடலை உருவவும், நரம்புகளைக் கத்தரிக்கவும், தலையை உடைக்கவும் சதையைப் பெயர்க்கவும் என எத்தனை விதமான ஆயுதங்கள்! கற்பனையின் அரிய ஆற்றல் வடிவம் கொண்டு நிற்கின்றன. ஆனால் ஏன்? மனம் எதையோ தேடிச் சலித்தது. இவை எல்லாவற்றையும்விட, பயங்கரமான அல்லது குரூரமான ஏதோ ஒன்று கோரைப் பற்களை நீட்டிக்கொண்டு நிற்கும் என எதிர்பார்த்திருந்தேன். எதிலும் மனம் ஊன்றவில்லை. சரவணன் காட்சிப் பொருள்களையும் தகவல்களையும் திருட்டுத்தனமாக கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் ஒருமுறை மேய்ந்துவிட்டு வெளியே வந்தேன். சரவணன் எனக்கு முன்பாக வெளியே வந்திருந்தான்.
சைனா டவுனுக்கு அழைத்து சென்று பேரம் பேசி ஒரு கடிகாரம் பரிசளித்தான். விதவிதமான வர்ணங்கள் நிறைந்த நெரிசலான தெருவில் ஒருவித மூளைக் களைப்பை உணர்ந்தேன். விதவிதமான பொருட்கள். ஒவ்வொன்றையும் ஆயுதமாக எப்படிப் பயன்படுத்த முடியும் என மனம் தன்னிச்சையாகக் கற்பனை செய்யத் தொடங்கியது. எலெக்ட்ரிக் ட்ரிம்மரின் ஒயரை கழுத்தைச் சுற்றி நெரிக்க முடியும், ஹேர் கிளிப்புகளின் கூர்முனையால் மணிக்கட்டில் கீறிவிட முடியலாம், ரப்பர் பொம்மைகளை வாயில் திணித்து மூக்கை மூடினால் போதும், வண்ண மலர்களில் செய்யப்பட பூங்கொத்தை கண்டபோது இதை எப்படிப் பயன்படுத்தலாம் என மனம் துழாவிக்கொண்டிருந்தது. சட்டென மனம் விழித்துக்கொண்டது. கடைத்தெரு ஆளரவமற்ற இன்னொரு தெருவில் சென்று முடிந்தது. சரவணன் ஏதும் சொல்லாமல் நான்கைந்து கட்டிடங்கள் தள்ளி ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்து மாடியேறினான். ஒரு சிறிய சதுர வளாகத்தில் சின்னஞ்சிறிய அறைகள். வாசலில் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் நுழைந்ததும் பரபரப்பானார்கள். விதவிதமான அழைப்புகள். மாமா இங்க வா மாமா என ஒரு தமிழ் குரலும் ஒலித்தது. “காலேல பாத்தோமே அவ மூஞ்சியும் முலையும் படுத்துது சார்” என சொல்லி சரவணன் நாற்பது ரிங்கிட்டுகள் அளித்துவிட்டு உள்ளே சென்றான். எனக்கான பணத்தையும் தானே அளித்துவிடுவதாக வெளியே நின்றிருந்த தரகனிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான். நான் நிதானமாக ஒவ்வொரு அறையாக நோக்கினேன். பருத்த புட்டமுடைய சீனப் பெண் ஒருத்தி இருந்தாள். தரகனிடம் அவளைச் சுட்டிக் காட்டினேன். நாற்பது ரிங்கிட் என்றான். அவரிடம் வாங்கிக்கொள் என அறைக்குள் சென்றேன். ஆடைகளை களையத் தொடங்கினாள். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ‘நோ செக்ஸ்’ எனச் சொல்லி கையை அவள் புட்டத்தில் அடிப்பதுபோல் தட்டினேன். அவள் சிரித்தபடி ‘யூ வான் ஸ்பாங்க் மை பட்?’என கேட்டுவிட்டு இருபது முறை மட்டுமே அடிக்கலாம் அதுவும் கையால் மட்டுமே அடிக்க வேண்டும் என்றாள். தரகனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் மேலும் இருபது ரிங்கிட் இங்கேயே இப்போதே கொடுக்க வேண்டும் என்றாள். ஒப்புக்கொண்டேன்.
வெளியே வந்ததும் பசித்தது. புக்கிட் பித்தாங் அழைத்துச் சென்றான். இடையில் என்னைத் தனியாக நிற்க வைத்துவிட்டு நீள் முடியும் உடல் முழுவதும் பச்சையும் குத்தியிருந்த தமிழ் இளைஞனிடம் ஏதோ ஒன்றை விலை பேசி வாங்கினான். நாசி லெமாக்கில் பொரித்த கோழி இறைச்சி நல்ல இணை. கொஞ்சமாகத்தான் சாப்பிட முடிந்தது. சரவணன் உண்டது கொய்தியாவ் கோரெங். அதை சீனர்கள் போல ச்சோப் ஸ்டிக்கில் அள்ளித் தின்றான். நாளை முதலைக் கறி சாப்பிட ஜாலான் ஈப்போவில் ஒரு ரகசியக் கடைக்குச் செல்வோம் என்றான். “முதலைக் கறியா?” என அவனிடம் கேட்ட என் குரலில் இருந்த வியப்பைக் கண்டுகொண்டவன். “நர மாமிசம் புசிக்க வேண்டுமா? அதற்கும் யாம் வழி செய்வோம்” என நாடகத் தமிழில் பேசிச் சிரித்தான்.
தெருவில் ஆங்காங்கு சிறிய சிறிய குழுக்களாக நின்று இசைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குருவியைப் போல் மனம் தத்தி தத்தி பறந்து கொண்டிருந்தது. அதை எந்தக் கிளையிலும் அமரவைக்க முடியவில்லை. சாலையில் செல்லும் எவரையேனும் இழுத்து இரண்டு குத்துவிட்டால் மனம் நிலை திரும்பிவிடக்கூடும். அல்லது இரண்டு குத்து வாங்கினால்கூட போதும்.
இருவரும் சொல்லற்று பயணித்து நள்ளிரவு அறையை வந்தடைந்தோம். சரவணன் நிதானமாக பையில் வைத்திருந்த சிவமூலியை வெளியே எடுத்தான். தூள் கலக்காத அசல் வஸ்து கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்றான்.
குடி, கஞ்சா, பெண்கள் என எல்லாவற்றையும் சில ஆண்டுகளாக விட்டிருந்தேன். மிகுந்த கட்டுக்கோப்புடன் இரண்டு ஆண்டுகளாக என்னைப் பிடித்து வைத்திருந்ததெல்லாம் மலேசிய மண்ணில் காலடி வைத்த உடனேயே கரைந்தழிந்தது. முன்பைப்போல் பேனா பிடித்து எழுத முடியாத அளவிற்கு கை நடுக்கம். கணினியிலோ, கைபேசியிலோ படைப்புகளை எழுதப் பழகிக்கொள்ளவில்லை. உடல் சன்னமாக அதிர்ந்துகொண்டிருந்தது.
உலகம் அலையடிக்கத் தொடங்கியது. அடியற்ற கிணற்றில் வீழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அச்சம் மேலேறியது. கண் விழித்தேன். மீண்டும் கிணற்றுக்குள் செல்ல விழைந்தது. முன்பைக் காட்டிலும் சில நொடிகள் அதிகமாக கண் மூடியிருக்கலாம். மீண்டும் விழித்தேன். கால்கள் துணிச்சுருள்கள் எனத் தொய்ந்தன. நாம் விரும்பும் உள்ளத்தின் அடுக்குக்கு மெஸ்காலும் எல்எஸ்டியும் கொண்டு செல்லும் என ஆல்டஸ் ஹக்ஸ்லி நம்பினான் என்றேன். ஆனால் விரும்பும் அடுக்குக்கு செல்வதில் என்ன இருக்கிறது? தற்செயலாக ஏதோ ஒரு கதவை திறப்பதல்லவா லாகிரியின் இயல்பு என சொல்லிக்கொண்டிருந்தேன். ஆமாம் நீங்கள் சொல்வது மிகச் சரி, மலேசியாவில் மகாதீர் பல சிக்கல்களை கொண்டிருப்பவர்தான் என்றான் சரவணன். ஒரேயோருமுறை தற்செயலாக நாம் எதிர்பாராத கதவைத் திறந்துகொண்டால் போதும். அந்தக் கதவைத் தேடித்தேடி துழாவி, அந்தத் தற்செயல் எனும் மந்திரகணம் மீண்டும் நிகழாதா என ஏங்கிச் சாவோம் என்றேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, ஹிண்ட்ராப் காலத்தின் கட்டாயம் என்றான் அவன். சரவணன் சிரிக்கத் தொடங்கினான். சிரிப்பின் ஊடே நீங்கள் அசலான பிரபஞ்ச கவி, எத்தனை விஷயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டான். அவனிடம் “காலையில் கேட்டாயே மாற்றுக் கருத்திற்காக சண்டையா என, பாதுகாப்பாக நின்றுகொண்டு வாழை மட்டையில் கம்பி மத்தாப்புச் சொருகி சுற்றும் உங்களுக்கு அது விளங்காது. உங்கள் தலைமுறையில் எல்லோரும் மிகவும் புத்திசாலிகளாகி விட்டீர்கள். இன்னும் கழுத்துப் பட்டையும், அடையாள அட்டையும் தான் இல்லை. திறமையான வேலைக்காரர்கள்” என்றேன். “ஆம் எங்கள் தமிழ் அடையாளம் உலக அளவில் சினிமாக்களால் சிறுமைப் படுத்தப்பட்டுவிட்டது நாங்கள் செய்வதற்கு ஏதுமில்லை” என்றான்.
அப்போது அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அது வேறொரு காலத்தில் வேறு எங்கோ தட்டப்படுவதின் எதிரொலியைபோல் சன்னமாக ஒலித்தது. மறுகணம் அந்தத் தட்டுதல் என் தலைக்குள் ஒலிக்கத் தொடங்கியது. சீரான தாளத்தைப்போல. உந்தி எழ முடியவில்லை. ஓசை வலுக்கத் தொடங்கியது. கதவைத் தாழிடவில்லை என்பதை அப்போது உணர்ந்தோம். கதவைத் திறந்துகொண்டு பொன்னிற முடியுடைய ஒட்டிய கன்னம் கொண்ட நெடிய வெள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்தான். கறைபடிந்த முன்பற்களுடன் எங்களைப் பார்த்து இளித்தான். “ஐ ஸ்மெல் வீட். கேன் ஐ ஜாயின்?” எனக்கேட்டான். சரவணன் இல்லையெனத் தலையசைத்தான். அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. நாங்கள் வெறுமே குடித்திருக்கிறோம். சிரித்துக்கொண்டே, தயவுசெய்து சென்றுவிடுங்கள் என்றான். அவன் வான் நீலக் கண்களில் வெறி சுடர்வதைக் கண்டேன். அவன் கெஞ்சினான். எங்களைச் சுற்றி சுற்றி வந்தான். என்னை உந்தி எழுப்பிக்கொண்டு அமர்ந்தபோது உடல் முன்னே சரிந்தது. சரவணன் இல்லையென சிரித்துக்கொண்டே மறுத்தான். வேறொரு அறையிலிருந்து வந்திருக்கலாம். தயவுசெய்து சென்றுவிடு எனச் சொன்னான். அவன் குரல் வலுத்தது. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உன் சிரிப்பை பார்த்தாலே தெரிகிறது என சரவணனைச் சுட்டிச்சொன்னான். எழுந்து நிற்க முயன்ற என்னை நெஞ்சில் நெட்டித் தள்ளினான். நான் மீண்டும் கட்டிலில் சாய்ந்தேன். நீர் இருந்த கண்ணாடி லோட்டாவை உடைத்து அதன் கூர்முனையை எங்களை நோக்கி நீட்டினான். பிறகு சட்டென அமர்ந்து அவன் கழுத்தில் வைத்து அழுத்திக்கொண்டு தயவுசெய்து கொடுங்கள் என அழத் தொடங்கினான். சரவணன் சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்து நின்றான். அவனை அமைதியடையும்படி கூறியபடி மெல்ல நெருங்கினான். அப்போதும் சிரிப்பதை நிறுத்த இயலவில்லை. நானும் என்னைத் திரட்டிக்கொண்டு எழுந்து நின்றேன். அறை இடவலமாகக் குலுங்கியது. சரவணன் அவனருகே சென்று அமர்ந்து கால்சட்டைப்பையில் கைவிடுவதாக பாவனை செய்த அந்நொடியில் அவன் மீது பாய்ந்தேன். அவன் கையில் வைத்திருந்த கண்ணாடி என் புறங்கையை கிழித்துக்கொண்டு விழுந்தது. சரவணன் அவன் கன்னத்தில் ஓங்கிக் குத்தினான். உதடு கிழிந்து உதிரம் கசிந்தது. அவன் தேம்பி அழத் தொடங்கினான். மெதுவாக எழுந்தவன் கண்களை நோக்கினேன். சற்று முன் மின்னிக்கொண்டிருந்த ஒன்று அப்போது இல்லை. எல்லாவற்றிலிருந்தும் விலகிய வெறும் வெறிப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. என்னிடம் ‘சாரி’எனச் சொல்லிவிட்டு எங்கள் அறையைவிட்டு தேம்பிகொண்டே மெல்ல நடந்து சென்றான்.
உடல் அயர்ந்தது. ஆனால் மனம் மட்டும் விழிப்படைந்திருந்தது. சரவணன் எஞ்சிய சிவமூலியை கழிவறையில் போட்டு நீரூற்றிவிட்டு என்னருகே வந்து, சிரிப்பின் ஊடே மிழற்றி மிழற்றி சிரிப்பை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை மன்னித்து விடுங்கள் என்றான். சற்று நேரத்திற்கு எல்லாம் உறங்கிப்போனான். அந்த வெள்ளைக்காரன் சென்றபிறகும் கூட கதவை தட்டும் ஓசை நிற்கவில்லை. என்னால் உறங்கமுடியவில்லை. தலை கனத்தது. எழுந்து அமர்ந்தேன். அதிகாலை மூன்று மணி. பத்து மணிக்கு கவிதைப் பட்டறை. புரையோடிய கண்களுக்கு முன் இரு சிறு பூச்சிகள் ஓடித் திரிந்தன. சரவணனின் கைபேசியை எடுத்தேன். அவனுடைய கட்டைவிரலை அழுத்தி அதைத் திறந்தேன். முகம் மறைத்த மேலாடையற்ற பெண்களின் புகைப்படங்கள் சில அவனுடைய கைபேசி கேலரியில் இருந்தன. அன்றைய நாளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கினேன். பத்துமலைக்கோவில் அடிவாரம், பழங்குடி அருங்காட்சியகம், ரெட்டைக் கோபுர நீரூற்று அருகே ஒரு வெளிநாட்டுப் பெண்மணியுடன், எல்லாப் புகைப்படங்களிலும் என் முகத்தில் ஒரு அசட்டுக்கலை. கோலாசிலாங்கூர் புகைப்படங்கள் வந்தன. ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டு வந்தபோது, சிமெண்டு மேடை கொண்ட சாதாரணக் கிணற்றின் புகைப்படத்தையும் குறிப்பையும் பார்த்ததும் உடல் நடுங்கத்தொடங்கியது. கழுவுதொட்டிக்குச் சென்று வாந்தி எடுத்தேன்.
பெரியவர், அவரை அழைத்து வந்தவன், அப்பெண், அவளுடைய குழந்தைகள், அவர்களின் வண்டி, பழக்காரன், அக்கிணறு, சீனப் பெண்னின் சிவந்த புட்டம், நீலக்கண் வெள்ளையன் என அன்றைய நிகழ்வுகளும் முகங்களும் துல்லியமாக மனதில் துலங்கின. ஒன்றுடன் ஒன்று பிணைந்து பொருள்கொள்ளத் தொடங்கின. பெரியவரின் வாழ்க்கை என்முன் கதையாக விரிந்தது. ஆனால், அதில் ஒரு கண்டுபிடிப்பை மட்டுமே என்னால் அளிக்க முடிந்தது. அது ஏன் எனும் கேள்வியை எதிர்கொள்ளவில்லை. மனம் பரபரக்கத் தொடங்கியது. ஒரு காலாதீதமான கேள்விக்கு காலாதீதமான கதை வடிவத்தைதான் தேற முடியும். கிழக்கு மட்டும் மேற்கின் தொன்மங்கள் குழைந்து ஒரு கதையாக உருத் திரண்டது. சொற்கள் மத்தள ஓசையென விழத்தொடங்கின.
எட்டு மணிக்கு சரவணன் எழுந்து அமர்ந்தபோது கவிதை பட்டறைக்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அச்சிடப்பட்டிருந்த தாளின் காலியான மறு பக்கங்களில் நான் எழுதிக்கொண்டு இருந்தேன். அவன் முகம் கறுத்து இறுகியிருந்தது. கண்ணாடித் துண்டங்களைப் பொறுக்கிக் குப்பைத்தொட்டியில் இட்டுவிட்டு ரூம் சர்வீசுக்கு அழைத்தான். நேற்றைய நாளின் நினைவுகள் அவனுக்கு குற்ற உணர்வை அளித்திருக்கும். என்ன எழுதுகிறீர்கள் என கேட்டான். கதை என்றேன். கவிஞர்கள் எல்லாம் கதை எழுத வந்துவிட்டால் பிறகு நாங்கள் என்ன செய்வது? நாங்கள் கவிதை எழுதினால் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். கிண்டல் செய்வீர்கள் என இளித்தான்.
புன்னகைத்தேன். அங்கே வந்தது முதல் அவன் என்னுடைய ஒரேயொரு கவிதை வரியைக் கூட நினைவுகூரவில்லை என்பதை அப்போது உணர்ந்தேன். நான் அவனுக்கு யார்? பேனாவை கீழே வைத்துவிட்டுச் சாய்ந்தேன். நான் ஒருபோதும் என் கவிதைகளுக்காக நினைவுக்கூரப்படப் போவதில்லை. கவிதையைவிட கலகம் எனக்கு எளிதா? எழுதிக்கொண்டிருந்தவரை கைகள் நடுங்கவில்லை என்பதை அப்போது நடுங்கிய கரங்கள் உணர்த்தின. உங்கள் கண்கள் சிவந்திருக்கின்றன. உறங்கவில்லையா என்றான். இல்லை ஒரு பதினைந்து நிமிடங்கள் கண்மூடிக்கொண்டால் போதும் குளித்து கிளம்பியதும் என்னை எழுப்பு என சொல்லிவிட்டுப் படுத்தேன். காபி வேண்டும் போலிருக்கிறது உங்களுக்கும் சொல்லவா எனக் கேட்டான். சொல் எனச் சொல்லிவிட்டு கண் மூடினேன். கண் மூடியிருந்தபோது எல்லாவற்றுக்குமான, பாவ மன்னிப்பைபோல், வெளிறி நிறமிழந்த எல்லாவற்றுக்கும் விடை போல், எல்லாவற்றுக்கும் சேர்த்து இந்த கதை. ஒரேயொரு கதை. எனக்கு நானே நட்டுக்கொள்ளும் நடுகல். கதையின் இரண்டு பகுதிகள் எழுதிவிட்டேன் ஆனாலும் நிறைவின்மை வதைத்தது. இப்போது முற்றிலும் வேறொரு பெரும் பூதம் என் முன் அதன் விளைவைச் சுட்டி எழுந்து நின்றது. நான் அதன் அடிமை. சரவணன் குளித்து வெளிவரும்போது சிவந்து எரிந்த கண்களில் தாளை மறைத்து கட்டியிருந்த நீர் வழிய நடுக்கமற்ற வலக்கரம் கதையை எழுதிக்கொண்டிருந்தது.
4
நீங்கள் வெஸ்டர்ன் டானேஜர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அழகிய மஞ்சள் பறவை. மைனாவைவிடப் பெரியது ஆனால் காக்கையைவிடச் சிறியது. அரிய பறவை என சொல்லிவிட முடியாதுதான். வட அமெரிக்க கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளின் பாலை நிலங்களில், பசிபிக் கடற்கரைகளில் நீங்கள் இந்தப் பறவையை பார்த்திருக்கக்கூடும். அதன் அலகும் சிறகும் கரிய நிறத்தில் இருக்கும். ஆண் குருவியின் தலைக்கு மட்டும் அந்திச் சூரியனின் சிவப்பு. நான் பறவையியலாளன் அல்ல. பறவைகளை கவனிப்பவனும் இல்லை.
இந்தப் பறவை எனக்கு நினைவிலிருக்க சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. லாஸ் அலமோஸுக்கு நான் சென்று சேர்ந்த முதல்நாள் அப்பறவையை ஓப்பி எனக்கு காண்பித்தார். மறைந்து கொண்டிருந்த சூரியன் முகில் முனைகளில் சுடரேற்றி இருந்தது. ‘அழகிய பறவை. நெருப்பை தலையில் சூடிக்கொண்டிருக்கிறது பார். முகில் சிவப்பின் அதே நிறம்’ என சாம்பல்நிற வட்டத்தொப்பி அணிந்து எனது தோள்மீது கைபோட்டு பைப் புகைத்துக்கொண்டே சொன்னார். துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் காவல் காத்து சுற்றும் ஆய்வுக்கூடம் முதலில் எனக்கொரு விலக்கத்தை அளித்தது. அதை அவர் உணர்ந்திருக்கக்கூடும். ஆகவே அவரே என்னுடன் வந்து ஆய்வுகூடத்தைச் சுற்றி காண்பித்துக்கொண்டிருந்தார். அந்தக் கணம் அவர் மீது எழுந்த பெரும் வாஞ்சை இப்போது வரை நீடிக்கிறது. அவருக்காக நான் எதையும் செய்வேன் என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
ஓப்பி எங்களுக்கு அப்படித்தான். ‘ஐன்ஸ்டீன் கடவுள் என்றால் ஓப்பன்ஹைமர்தான் அவருக்கு பிறந்த ஒரே தேவகுமாரன்.’ என்பார்கள். அவருடனிருந்த காலத்தில் ஏறத்தாழ நான் உணர்ந்தது போலத்தான் அங்கே பெரும்பாலானவர்கள் உணர்ந்தார்கள் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் அவருக்கென அங்கு நண்பர்கள் என எவரேனும் இருந்தார்களா? அப்படி நாங்கள் யாராவது அவரை அறிந்த நண்பர் எனச் சொல்லிக்கொள்ள முடியுமா? தெரியவில்லை. கடலின் மத்தியின் தனித்து நின்றிருக்கும் பாறை. பிற்காலத்தில் அவருடைய வெவ்வேறு முகங்களை அணுக்கமாகக் கண்டிருக்கிறேன். அவற்றில் எது அசல் எது போலி என மருண்டிருக்கிறேன். பல இரவுகள் அவரைக் கடுமையாக வெறுத்திருக்கிறேன். பெர்லின் மீதும் டோக்கியோ மீதும் குண்டு வேச வேண்டும் என சூளுரைத்தவரையா? நாகசாகி மீது இரண்டாம் குண்டு வீசப்பட்டபோது அமைதியிழந்து வருந்தியவரையா? தன் நண்பரையும் மாணவர்களையும் தன்னை காப்பாற்றிக்கொள்ள கம்யுனிஸ்ட் என சாட்சி சொன்னவரையா? ஹைட்ரஜன் குண்டை உருவாக்க ஆனமட்டும் தடைபோட்டவரையா? இயற்பியலாளர்கள் பாவத்தை அறிந்துவிட்டார்கள், எங்கள் கரங்களில் உதிரம் படிந்துள்ளது திருவாளர். ட்ரூமன் என தருக்கி நின்றவரையா? ஃபெர்மி விருதை ஏற்றுக்கொண்டவரையா? உண்மையில் எனக்கு எந்த ஓப்பியை தெரியும்? எவரையும் தெரியாது அல்லது எல்லோரையும் தெரியும். இப்போது ஓப்பி மரணமடைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் யோசிக்கும்போது நான் மீண்டும் மீண்டும் அவரிடமிருந்து அதே வாஞ்சையை எதிர்பார்க்கும் முதிரா வளரிளம் பருவத்தவனாக இருந்திருக்கிறேன் என தோன்றுகிறது. எனது கசப்புகள் யாவும் ஓப்பி எனது எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யவில்லை என்பதில் வேர் கொண்டிருக்கிறது.
ஓப்பி, நாங்கள் ராபர்ட் ஓப்பன்ஹைமரை அப்படித்தான் அழைப்போம், ஓப்பியை எப்படி விவரிப்பது? ஒரு வேடிக்கையான நிகழ்வை நண்பர்கள் சொல்வார்கள். லாஸ் அலமோஸ் நிர்மாணிக்கப்பட்ட புதிதில் ஓப்பி தன்னை ராணுவத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினாராம். ஆனால் அதற்குரிய குறைந்தபட்ச உடல் எடையில்லை எனத் திருப்பி அனுப்பி வைத்தார்களாம். மாலை விருந்தில் அவரிடம் நண்பர்கள் இதைப்பற்றி கிண்டல் செய்தபோது ‘என்ன செய்ய சிந்தனையின் எடையை உடல் வெளிக்காட்டுவதில்லை’ என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னாராம். தான் இங்கில்லை எனக் காட்டும் வெளிர்நீலக் கண்கள் அவருக்கு. அவை பரிசுத்தமானவை. கிறிஸ்துவின் கண்களைப்போல. பரிசுத்தமானவற்றின் மீது இயல்பாக ஒரு துயரச் சாயல் கவிந்துவிடுகிறது. ஆனால் உள்ளரங்கு உரையாடல்களில் அதே கண்கள் துளைக்கும் கூர்மையைச் சூடிக்கொள்ளும். எனினும் அது வெகுநேரம் நீடிக்காது. ஒரு கவியின், அல்லது அலைவுறும் கனவுலக வாசியின் கண்கள் அவருடையவை.
ஓப்பியை நான் பார்த்த அத்தனைமுறையும் ஒன்று அவர் பைப் புகைத்துக் கொண்டிருந்தார் அல்லது ஏதேனும் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டிருப்பார். நான் பார்த்தவரையில் அவர் கையிலிருந்த புத்தகங்கள் அறிவியல் தொடர்பானவையாக ஒருபோதும் இருந்ததில்லை. என்ன புத்தகம் வைத்திருக்கிறார் என அறிந்துகொள்ள நான் சிரமப்படுவதை பார்த்துவிட்டு அவரே என்னிடம் புத்தகத்தைக் கொடுத்தார். அப்படித்தான் எனக்கு பகவத் கீதை அறிமுகம் ஆனது. அதன்பிறகு எப்போது என்னைச் சந்தித்தாலும் கையில புத்தகம் இருந்தால் அதை எனக்கு அளிப்பார்.
நான் ஒரு இளம் விஞ்ஞானியாக ஓப்பியை பெர்க்லேயில் அறிந்தவன். அவருடைய அழைப்பின் பேரில்தான் நானும் என்னைப்போன்ற வேறு பலரும் இங்கு வந்து சேர்ந்து கொண்டோம். விஞ்ஞானி என்பது ஒரு வாழ்க்கைமுறை என அவர் சொல்வதை உண்மையென நம்பி அதற்கென என்னை ஒப்புக்கொடுத்தவன். விஞ்ஞானியின் கடமை, அவன் இச்சமூகத்திற்கு ஆற்றும் சேவை என்பது அறிதலை பெருக்குவது மட்டும் தான். இப்போதும் நான் இதை நம்புகிறேனா? அன்றிருந்த உறுதியும் நம்பிக்கையும் எனக்கு இன்றில்லை. இரண்டாம் உலகப்போரை ‘இயற்பியலாளர்களுக்கு இடையிலான யுத்தம்’ எனச் சொல்வார்கள். மறுபுறம் ஜெர்மனியில் ஹீசன்பேர்க் அவர்களுடைய அணுத் திட்டத்தில் இருந்தார். அவர் முதல் தர பியானோ கலைஞர் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தப் போரின் மன்னிக்கமுடியாத குற்றம் எது தெரியுமா? வரலாற்றில் காலந்தோறும் மானுடத் திரள் வெறும் பூச்சிகள் என நசுக்கப்பட்டு மறைந்தார்கள். ஆம் வெறும் பூச்சிகள். அதை மாற்றக் கனவு கண்ட கவிகளையும் கலைஞர்களையும் மேதைகளையும் இப்போர் குருதிச் சேற்றில் இழுத்துவிட்டது. அவர்களைப் பேரழிவிற்குச் சாட்சியாக நிறுத்திக் கேலிப் பொருளாக்கியது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தாங்கள் ஆடையற்றவர்கள் எனும் தன்னுணர்வை புகட்டும் ஆபாசத்தைப்போல. நமக்கு உன்னதங்களும், தூய்மைகளும் ஒரு பொருட்டல்ல. சாதாரணதத்துவம் காலகாலமாக கருவாகச் சேர்த்து வைத்திருந்த வன்மத்தை எல்லை வெளிக்காட்டி கணக்குத் தீர்த்துக் கொண்டது.
லாஸ் அலமோஸ் உண்மையில் ஒரு தனித்தீவு. முன்னூறு மீட்டர் உயரமுள்ள தட்டை நிலம். அங்கே நாங்கள் ஒவ்வொன்றாகக் கட்டி எழுப்பினோம். வெளியே பெரும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் மனித உயிர்கள் ஆவியாகிக்கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் இங்கே வேறொரு உலகத்தில் அவற்றால் எவ்விதத்திலும் சீண்டப்படாமல் பணியாற்றிக்கொண்டிருந்தோம். இப்போது இதனை முடிவுக்கு கொண்டுவரும் ஆற்றல் அமெரிக்காவிற்கே இருப்பதாக உலகம் நம்பியது. ஐன்ஸ்டீன் ரூஸ்வெல்ட்டுக்கு அணு ஆற்றலை பயன்படுத்துமாறு கடிதம் எழுதியது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். மன்ஹட்டன் செயல்திட்டம் உருப்பெற்றது. அதன் ஒரு பகுதியாக லாஸ் அலமோஸ் உருவாக்கப்பட்டது. அதுவரை கல்விக்கூடம், ஆய்வுக்கூடம் என முடங்கி இருந்த சூழலிலிருந்து அறிவியல் விடுதலை அடைந்ததாகத்தான் தொடக்கத்தில் நான் கருதினேன். ஒருவகையில் எங்கள் எல்லோருக்கும் உண்மையில் நகரத்தின் நெருக்கடியும் சந்தடியும் அற்ற விடுமுறை வசிப்பிடம் இது என்றே முதலில் தோன்றியது. உற்சாகமான நட்புக் கூடல்கள், கொண்டாட்டங்கள் என்றே தொடக்க நாட்கள் நகர்ந்தன. ஆனால் அடிப்படையில் இது ஒரு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வுக்கூடம். ஜெனரல் கிரோவ்ஸ் அதைக் காலப்போக்கில் மெல்ல உணர்த்தினார். ராணுவத்தின் உறுதியான கரங்கள் எங்களை நெருக்குவதை உணரமுடிந்தது. அது எங்களைப் பாதுகாக்கவும் தேசத்தைப் பாதுகாக்கவும் சூழ்ந்த கரங்கள் என்பதால் நாங்கள் அதிலிருந்து விடுபடும் துணிவையும் பெறவில்லை. படிப்படியாக ஒப்புக்கொடுத்தோம். ஆனால் ஓப்பி எல்லாவற்றையும் எதிர்கொண்டார். அதிகாரத்தை சமன் செய்யும் அறிவியலின் தரப்பாக எங்களுக்காக நின்றார். அல்லது அப்படித்தான் நாங்கள் எண்ணினோம். அறிவியலாளர்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு விவாத அமைப்பை ஏற்படுத்த விரும்பினோம். கிரோவ்ஸ் அதில் எங்கள் துறை சார்ந்தவற்றை தவிர வேறு எதுவும் பேசப்படுவதை விரும்பவில்லை. எதையும் விவாதிக்கலாம் என அவரை ஏற்க செய்தது ஓப்பிதான்.
ஏழரைக்கு காலை மணி ஒலிக்கும். ஒவ்வொருநாளும் என் வசிப்பிடத்திலிருந்து பணிக்குச் செல்லும்போது டானேஜர் பறவைகளைக் கண் தேடும். சில நாட்கள் அதை காணாமலேயே அலுவலகத்திற்குச் செல்ல நேரிடும்போது மனம் பணியில் நிலைகொள்ளாது. இது வெறும் மூடநம்பிக்கைதான், அற்பமான மிகையுணர்வு என்றெல்லாம் என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன். ஆனால் அவை எதுவும் சோர்வையும் பாதிப்பையும் ஆற்றுவதில்லை. அப்படியான ஒரு நாளில் ஓர் உள்ளரங்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தபோது சாளரத்தின் வெளியே டானேஜர் பறவையின் குரலைக் கேட்டதும் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அணு குண்டை எடுத்து செல்வதற்குரிய ‘ஜம்போ’ உருவாக்கத்தில் உள்ள சிக்கலைப் பற்றி ஓப்பி பேசிக்கொண்டிருந்தார். எனது கவனச் சிதைவும் அந்த பறவையின் ஓசையும் அவரைத் தொந்தரவாக்கியிருக்க வேண்டும். சட்டென உரையை நிறுத்திவிட்டு நேரே என்னை நோக்கினார். மொத்த அரங்கும் என்னை நோக்கித் திரும்பியது. நான்கைந்துமுறை பைப்பில் இழுத்து புகைவிட்டார். பறவையின் ஓசை ஒரு நிமிடத்தில் மறைந்து போனது. என்னைப் பார்த்து ‘தொடரலாமா?’ எனக் கேட்டுவிட்டு மீண்டும் உரையைத் தொடர்ந்தார். அன்றைய இரவு என்னை அவருடைய வசிப்பிடத்திற்கு அழைத்தார். வான்காவின் ஓவியங்களை பற்றிப் பேசியபடி ஒயின் அருந்தினோம். காலை நிகழ்வு குறித்து ஒரு சொல்கூட நாங்கள் பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் எல்லாம் இயல்பாகியிருந்தது.
காலை அலுவலக முதல் மணி ஒலித்து நாங்கள் செல்லும்போதே ஓப்பி அவருடைய அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். ஒருமுறையாவது அவருக்கு முன்பே பணிக்கு செல்ல வேண்டும், அதை அவர் பார்த்து வியக்க வேண்டும் எனும் அற்ப ஆசை எனக்கிருந்தது. ரோட்ப்லாட்டிடம் ஒருமுறை இதைச் சொன்னபோது “அப்படியென்றால் நாம் முந்தைய நாள் இரவு வீடு திரும்பாமல் அங்கேயே இருந்துவிட வேண்டும்” எனக் கேலி செய்தான். மாலை பணி முடிந்து செல்வதற்கென ஒலிக்கும் மணியோசைக்கு பொருளேதும் இல்லை. நள்ளிரவு வரைகூட எங்கள் பணி நேரம் நீளும். ஒருமுறை எங்கள் துறைக்கும் நீர் அறிவியல் துறைக்கும் இடையே நீராவிப் பயன்பாடு சார்ந்து மிக முக்கியமான சர்ச்சை. ஒரு முடிவிற்கு வரமுடியாமல் நள்ளிரவைத் தாண்டி இரு தரப்பினரும் வாதித்து கொண்டிருந்தோம். ஓப்பி உள்ளே வந்ததும் இரு தரப்பினரையும் ஐந்து நிமிடங்களுக்குள் தத்தமது யோசனைகளையும் மறுப்புகளையும் எடுத்துரைக்கச் சொன்னார். ஓப்பியின் நிபுணத்துவம் இத்துறைகளில் இல்லை என்பதால் இதில் அவர் பங்களிக்க ஏதுமில்லை என்பதே என் உணர்வாக இருந்தது. எனினும் நாங்கள் எங்கள் தரப்புக்களை விளக்கிச் சொன்னோம். மேஜையில் கால் பின்னி சாய்ந்துகொண்டு பைப் புகைத்தபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் நிதானமாக இருவரின் கருத்துக்களையும் தொகுத்து மூன்று மூன்று புள்ளிகளாக எழுதிவிட்டு அவற்றில் உள்ள பொதுத்தன்மைகளை சுட்டிக்காட்டி இரு தரப்புகளும் ஒன்றையே சொல்வதாக நிறுவியபோது உண்மையில் எனக்கு வியப்புத் தாங்கமுடியவில்லை. எல்லோரும் ஆம் என உணர்ந்துகொண்டு கைகுலுக்கி, செயல்திட்டத்தை இறுதி செய்தோம். நிபுணத்துவம் அறிவியலைத் துண்டாடிய ஒரு யுகத்தின் இறுதி அறிஞன் என ஓப்பியைச் சொல்ல முடியும்.
எங்கள் ஆய்வுகூடத்திலும் கட்டுமானத்திலும் எங்களுக்கு பணிகள் பிரித்தளிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவும் அவரவர் பணியைச் செய்தால் போதும். அந்தக் குழுவிலும் தனித்தனி மனிதர்களுக்கு பணிகள் மேலும் நுண்மையாக வகுத்தளிக்கப்பட்டன. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் என மூன்று வர்க்கத்தினரும் சேர்ந்து உழைத்தோம். பகுதிகளாக பணி பிரித்தளிக்கப்பட்டபோது அவற்றின் ஒட்டுமொத்த விளைவைப் பற்றி நாங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்பட்ட பணிக்குப் பாராட்டுக் கிடைத்தது. ஒரு விண் அளக்கும் பேருருவை அதன் விரல் நகத்தை செதுக்குபவனால் கற்பனை செய்ய முடியாது. நகத்தைச் செதுக்குபவன் நுண்மைகளை சேர்த்துக்கொண்டே செல்வான். அவன் பிய்த்து வீசப்போகும் மரங்களுக்கும் தான் செதுக்கிய நகத்திற்கும் தொடர்பில்லை என்றே எண்ணிக்கொள்வான். ராணுவம் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டிற்குள் நிர்வகித்தது. ஒவ்வொரு நிலையிலும் ரகசியம் பேணப்பட்டது. நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்த இந்த பூதத்தின் மொத்த வடிவத்தை அறிந்த ஒரே நபர் ஓப்பியாகத்தான் இருக்கமுடியும்.
முதல் அணுகுண்டு சோதனைக்காக தேர்வு செய்யப்பட இடத்திற்கு ஓப்பிதான் ‘ட்ரினிடி’ என ஜான் டானின் கவிதையிலிருந்து எடுத்து பெயர் சூட்டினார். ரோட்பிலாட் ஏறத்தாழ அணுகுண்டு உருவாக்கத்தின் இறுதிக்கட்டத்தில் தான் எங்களுடன் இணைந்து கொண்டான். மாலை நடை இருவரும் ஒன்றாக உலாவினோம். குறுகிய காலத்தில் சில முக்கியமான முடிவுகளில் அவனுடைய பங்களிப்பு இருந்தது. கவிதை, மெய்யியல், இலக்கியம் என ஓப்பியின் கையாளத்தக்க இளைய வடிவமாக அவனிருந்தான் என்பதே அவனை எனக்கு நெருக்கமாக்கியது.
என் நினைவு சரியென்றால் ட்ரினிட்டி சோதனைக் காலத்தில் அங்கே ஊழியர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் என குறைந்தது எட்டாயிரம் பேர் இருந்திருப்போம். அது ஒரு சிறிய நகரமானது. ஓப்பியை இக்காலக்கட்டத்தில் கையில் புத்தங்களுடன் காண்பது அரிதானது. எப்போதும் புகைத்துக்கொண்டே இருந்தார். உள்ளரங்கக் கூட்டத்தில் பெர்லின் மீதும் டோக்கியோ மீதும் நிச்சயம் நாம் அணு குண்டை வீசுவோம். இந்தப் போரை நிறுத்துவோம். போரில்லாத உலகத்தை நாம் உருவாக்குவோம்’ என பலத்த ஆரவாரத்திற்கு இடையே பேசினார். சிலிர்த்து மகிழ்ந்திருந்த கணத்தில் ரோட்பிலாட் கைகட்டி மெளனமாக என்னருகே நின்றிருந்ததைக் கவனித்தேன். அவனிடம் உரையாடுவதற்குள் அவன் அங்கிருந்து வெளியேறி தனித்து நடந்துகொண்டிருந்தான். அன்றிரவு அவனைச் சந்திக்கச் சென்றேன். “இது உனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லையா? ஏன் சோர்வாக இருக்கிறாய்?” எனக் கேட்டேன். முட்டியில் கையை கட்டிக்கொண்டு தலை புதைத்து அமர்ந்திருந்தான். “சொல். நாம் யூதர்கள். இது நமக்கான வாய்ப்பு. நம் அறிவைத் திரட்டி பழிநிகர் செய்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு. அவன் கொன்று குவித்த நம் நண்பர்களின் உறவினர்களின் முகங்கள் உனக்கு நினைவில்லையா? இப்போது என்ன தயக்கம்?” தலை நிமிர்த்தி நோக்கினான் “நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த உலக அமைதி எனும் கட்டுக்கதையை நம்புகிறாயா?” “நிச்சயம் சாத்தியம். அணு குண்டிற்கு பயந்தே நாம் போர்களைக் கைவிடுவோம். இது ஒரு மிக முக்கியமான பேர் ஆற்றலாக இருக்கும்.” என்றேன். அவன் உதடைச் சுழித்து சிரித்தபோது அதில் கசப்பு மண்டியிருந்தது. “நண்பா உன்னைப்போல் தெளிந்த நம்பிக்கை எனக்கும் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்” என்றான். அந்த இரவுக்கு பிறகு நான் அவனை லாஸ் அலமோஸில் காணவில்லை. ஆனால் அவன் அங்கிருந்து செல்வதற்கு முன் எனக்குள் சிறு பிளவை ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றான்.
ஓப்பி ‘கேட்கட்’ சோதிக்கப்படவிருந்த தேதியை இறுதி செய்த கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறும்போது மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றார்கள். இறுதியாக எஞ்சியவர்கள் நாங்கள் இருவர் மட்டுமே. மெதுவாக நடந்தோம். ‘நீ இப்போதும் கவிதைகள் வாசிக்கிறாயா?’ எனக் கேட்டுவிட்டு பைப்பை பற்றவைத்துக்கொண்டார். “ஆம். தினமும்” என்றேன். “நல்லது. அறிவியலால் நமது எல்லா கேள்விகளையும், தேவைகளையும் எதிர் கொண்டுவிட முடியாது. இலக்கியமும் கலையும் மட்டுமே நம் காதில் கிசுகிசுக்கும் பதில்கள் உண்டு. அவை முக்கியமானவையும் கூட” நீலக்கண்களில் பைப்பின் சிறிய கனல் ஒளிர்ந்தது. அவருடைய வசிப்பிடம் வரை மெளனமாகச் சென்றோம். உள்ளே செல்வதற்குமுன், “நான் பலகையை மிதித்தேன்/ அழுது அரற்றினேன்/ ஆனால் இனியில்லை/ நானும் இணைந்துவிட்டேன்/ என்ன? நான் இனி ஏன் ஏங்கவும் புலம்பவும் போகிறேன்?/ என் வரிகளும் வாழ்க்கையும் விடுதலையடைந்தன/ ஒரு சாலையைப் போல்/ காற்றைப்போல் தளர்வாக, கிடங்கை போல் விசாலமாக/ இனியும் நான் வருந்துவேனா?” எனச் சொல்லிவிட்டு புகையை ஆழமாக வெளியேற்றிவிட்டு “நல்லிரவு” கூறி வீட்டிற்குள் புகுந்துகொண்டார். அச்சொற்கள் தீயெனச் சுட்டன. அன்றிரவு முழுக்க தேடி அது ஹெர்பர்ட்டின் ‘கழுத்துப்பட்டை’ எனும் கவிதை என்பதைக் கண்டுகொண்டேன். ஹெர்பர்ட் ஒரு பாதிரியார். அவருக்கு அது தேவாலயம் எனும் கழுத்துப்பட்டை அல்லது மதம் எனும் கழுத்துப்பட்டை. அதற்காக புலம்பி அழும் ஒருவன் மெய்யான இறை அழைப்பை செவி கூர்ந்ததும் அதுவரையிலான புலம்பல் மறைவதாக பொருள் கொள்ளத்தக்க கவிதை. சட்டென எனக்கு வியர்த்தது. ஓப்பியின் கழுத்துப்பட்டை எது? புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கண்ணை மூடியபோது ரோட்பிலாட்டின் முகமும் ஓப்பியின் முகமும் தோன்றி மறைந்தன. அந்தக் கவிதையை பித்தனைப்போல் இரவெல்லாம் திரும்பத் திரும்ப கண்ணில் நீர வர வாசித்தேன்.
மஞ்சள் பறவை என் அறையின் சாளரத்தில் அமர்ந்து கிறீச்சிட்டதை கேட்டு விழித்தபோது பொழுது புலர்ந்திருந்தது. என்னிடம் ஏதோ சொல்ல முயல்வதாகக் கற்பனை செய்துகொண்டேன். ஹெர்பர்ட்டின் ஈஸ்டர் சிறகுகள் கவிதையை எடுத்து அவற்றுக்கு வாசித்து காண்பித்தேன். ‘ஒத்திசையும் வானம்பாடிகளைபோல் நான் எழவேண்டும்/ இந்நாளில் அவன் புகழ் பாட வேண்டும்/ அந்தியில் என் பறத்தல் இன்னும் இன்னுமென நிகழட்டும்’ அவற்றுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை.
ஓப்பி எப்போதும் இப்படித்தான். குழப்பமும் சிக்கலும் சூழ இருக்கும்போது நேரடியாக, திட்டவட்டமாக எதையும் சொல்வதைத் தவிர்ப்பார். ஆனால் அவ்விடத்தைக் கவிதை வரிகள் எடுத்துக்கொள்ளும். கீதையைப்போல் ஜார்ஜ் ஹெர்பர்ட்டை நான் அறிந்துகொண்டதும் அவர் வழியாகதான். அறையைச் சுற்றிச் சுற்றி கையைத் தேய்த்தபடி விறுவிறுவென நடக்கிறார் என்றால் அப்போது அவரை ஏதோ ஒரு கேள்வி ஆட்கொண்டிருக்கிறது எனப் புரிந்துகொள்வோம். மீண்டும் மீண்டும் வாழ்க்கை எனும் எண்ணற்ற ஊடு வழிகள் கொண்ட வசீகர மர்மத்தை எப்படி வகுத்துக்கொள்வது என்பதைப் பற்றியே அவர் அதிகம் பேசினார்.
கேட்கட்’அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. அதைக் கொண்டு செல்ல ஜம்போ எனும் ஒரு பெரும் கலனை உருவாக்கினோம். ஹிட்லரின் மரணம் போரின் காட்சிகளை முற்றிலுமாக மாற்றியிருந்தன. ஹங்கேரிய யூத விஞ்ஞானி சிலார்ட் ஓர் அறிக்கையைத் தயாரித்து இந்த அணுகுண்டுப் பயன்பாட்டை நிறுத்தவேண்டும் எனக் கோரினார். நானும் அதில் கையெழுத்து இடவிருந்தேன். ஆனால் அந்தச் சுற்றறிக்கை விஞ்ஞானிகளுக்கு போய் சேராமல் ஓப்பியும் கிரோவ்சும் பார்த்துக்கொண்டது எனக்கு கடும் கசப்பை ஏற்படுத்தியது. சிகாகோ அறிவியல் வட்டாரத்தில் ஜப்பான் மீது பயன்படுத்துவதற்கு மாற்றாக உலகறிய நமது ஆற்றலை அறியச் செய்யும் சோதனையை நடத்திக்காட்டலாம். எனச் சொன்னார்கள். ஓப்பி அது எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. அரசாங்கமும் அதற்கு செவிசாய்க்கப் போவதில்லை என்றார். ஜோசப் ரோட்ப்லாட் இங்கிலாந்திற்குச் சென்று சேர்ந்திருந்தான். அவன் எழுப்பிய அறக் கேள்விக்கான பதிலாக அவனொரு சோவியத் உளவாளி என எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஓப்பி இதைப்பற்றி எதுவும் பேசாமல் இருந்தது என்னைக் குழப்பியது. அவர் அதை அங்கீகரித்தோ, மறுத்தோ எதுவுமே பேசவில்லை. ஓப்பியும் கம்யுனிஸ்ட் என்பதால்தான் அவர் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை என்றார்கள். ஓப்பி ரோட்பிலாட் மீதான அவதூறை பகிரங்கமாக மறுத்து அறிவியல் உலகின் நம்பகத்தன்மையை காப்பாற்றியிருக்க வேண்டும் என்றார்கள்.
ஓப்பியை தனியாகச் சந்திக்க முயன்றேன். வெகுவாகக் களைத்திருந்தார். எப்போதும் எவரோ அவருடன் இருந்தார்கள். நான் அவரிடம் ரோட்பிலாட் பற்றிக் கேட்க விரும்பினேன். என்னை சந்திப்பதைத் தவிர்த்தார். எப்போதும் வேலையில் மூழ்கியிருப்பதாக காண்பித்துக்கொண்டார். ஒருநாள் பிடிவாதமாக அவருடைய அறையில் அமர்ந்திருந்தேன். ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருந்தார்கள். எப்படியும் என்னைசத சந்தித்தே ஆகவேண்டிய நேரம் வரும் எனக் காத்திருந்தேன். எட்வர்ட் டெல்லரும் அவரும் மட்டுமே இருந்தார்கள். டெல்லர் ஒரு வரைபடத்தை காட்டி ஏதோ விவாதிக்க யத்தனித்தார். அவரை நிறுத்திவிட்டு. எழுதிக்கொண்டிருந்த தாளிலிருந்து விழி தூக்கி ‘என்ன?’ என்பதுபோல் நேராக என்னை நோக்கினார். ‘உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்..’ என்றேன். “பரவாயில்லை சொல். டெல்லர் மட்டும்தான் இருக்கிறார்” என்றார். “இல்லை..ரோட்பிலாட் பற்றி…” இருக்கையிலிருந்து எழுந்து அறையின் சாளரத்தருகே நின்றபடி “எனது கடவுளே, எனது மன்னவனே, நான் காணும் எல்லாவற்றிலும் உன்னைக் காண்பதற்கும், புரியும் அனைத்தும் உன்பொருட்டுதான் என எனக்குக் கற்றுக்கொடு’ எனச்சொல்லிவிட்டு டெல்லரை நோக்கினார். அது ஹெர்பர்ட்டின் எலிக்சிர் கவிதை.
எட்வர்ட் டெல்லர் அன்று ஒப்பிக்கு இணக்கமானவர். என்னை நோக்கி புன்னகைத்தபடி “நண்பா, நன்றாகக் கவனித்துக் கேள், எது நல்லது? எது உண்மை? எது அழகானது? என மூன்று கேள்விகளை பிளாட்டோ போன்ற மெய்யியலாளர்கள் எழுப்பி இருக்கிறர்கள். அவற்றை எதிர்கொள்வது முக்கியம் என எண்ணுகிறேன். ஆனால், நான் அவருடன் முரண்படுகிறேன். இவை மூன்றும் தனித்தனியான கேள்விகள் என்பதே என் புரிதல். இதில், எது உண்மை என்பது மட்டுமே நமக்கான கேள்வி, அதாவது இது விஞ்ஞானியைப் பொருத்தது, எது நல்லது என்பது அரசியல்வாதியை பொருத்தது அல்லது மதத் தலைவர்களைப் பொருத்தது, எது அழகானது என்பது கலைஞனைப் பொருத்தது. இவை மூன்றும் முக்கியமான கேள்விகள்தான் ஆனால் இவை எவையும் பிற பதில்கள் என்ன என்பதை பொருத்து தீர்மானிக்கப்படக்கூடாது. புரிகிறதா?” அவருக்கு எக்காலத்திலும் எந்தக் குழப்பமும் வந்ததில்லை. ஒரு மொந்தையான சமாதானம். ஆனால் அன்று அது எனக்குப் போதுமானதாக இருந்தது. ஓப்பி அதை மறுக்கவும் இல்லை. ஆகவே அதை இறுகப் பற்றிக்கொண்டு வெளியேறினேன்.
வாழ்நாள் முழுவதும் இதே திடமான நம்பிக்கையுடன், ஒருவகையில் அப்பாவியாக, இத்தகைய குழப்பங்கள் ஏதுமற்றவனாக இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என இப்போது தோன்றுகிறது. ஓப்பியின் குரலில் ஒலித்த எலிக்சிர் வரிகளை மறக்க முயன்றேன். டெல்லரின் சொற்களை மந்திரம்போல் மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். ஆனால் மனம் ஓய்ந்த கணத்தில் கவிதை ஒலிக்கத் தொடங்கியது. ஆழ் கிணற்றின் இருண்ட நலுங்கள் என உணர்ந்தேன். லாஸ் அலமோஸ் என் வாழ்வின் ஆக இனிமையான காலகட்டம் என்றே என் மனதில் இருந்தது. இப்போது நான் அந்நினைவுகளை எவருடனும் பகிர்ந்துகொள்வதில்லை. எனது லாஸ் அலமோஸ் தொடர்பை முற்றிலுமாக மறைத்துக்கொண்டே கல்லூரியில் பாடம் நடத்தி ஒய்வு பெற்றேன். ஆனால் இன்றும் தனிமையில் அந்நினைவுகள் இனிமையானவையாகவே உள்ளன. ஓப்பி என்னதான் செய்திருக்க வேண்டும்? ஐன்ஸ்டீன் அல்லது சில்லார்ட் அல்லது ரோட்பிலாட் போல இருந்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் இவர்கள் எவரும் அதிகாரத்தை நெருங்கியவர்கள் அல்ல. வேறெந்த விஞ்ஞானியும் அதுவரை அறிந்திடாத அரசியல் ஆற்றலை ஓப்பி அடைந்தார். அதன் ஆட்டங்களை அணுக்கமாக அறிந்தவர். பின்னர் அவரைவிட சாதுர்யமாக விளையாடத் தெரிந்தவர்களால் வெளியேற்றப்பட்டார்.
முதன்முறையாக நான் அணுகுண்டு சோதிக்கப்பட்டவிருந்த ட்ரினிட்டி களத்திற்கு சோதனைக்கு ஒரு வாரம் முன் சென்றேன். புதர் செடிகள், குட்டை மரங்கள் கொண்ட பாலை. டானேஜர் பறவைகள் வேலிகளில் அமர்ந்து ஓசையிட்டுக் கொண்டிருந்தன. ஓப்பி பைப் புகைத்தபடி எழும்பியிருந்த கோபுரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்த பறவைகளுக்கு என்னவாகும் எனக் கேட்கவேண்டும் எனத் தோன்றியது. அவரருகே சென்று நின்றேன். அவரும் டெல்லரும் குண்டின் ஆற்றல் என்னவாக இருக்கும் என கணக்கிட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்று வட்டாரம் நூறு கிலோ மீட்டர் வரை இதன் அதிர்வை உணரமுடியும் என்றார் டெல்லர் உற்சாகமாக. இந்தக் கேள்வியை கேட்பது எத்தனை அபத்தமாக இருக்கும் என்று உணர்ந்தேன். அங்கிருந்து நகர்ந்து செல்வதை நோக்கிய ஓப்பி என்னை அழைத்தார். “என்னுடன் நீயும் வருகிறாயா? நாம் கம்பானியன் குன்றிலிருந்து இதை நோக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எப்படியும் இங்கிருந்து இருபது கிலோ மீட்டர்கள் இருக்கும். ஜெனரல் க்ரோவ்சிடம் சொல்லவா?” என கேட்டார். “இல்லை நான் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்தே கண்டுகொள்கிறேன்” என்றேன். ஓப்பியின் துளைக்கும் விழிகள் என்னைத் தொட்டு மீண்டன.
ஒரு பெரும் எந்திரம்போல் தன்னுணர்வு ஏதுமற்று எல்லோரும் உழைத்து கொண்டிருந்தோம். முந்தையநாள் இரவு ஓப்பியிடமிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது. என்னையும் ஏற்றிக்கொண்டு கம்பானியன் ஹில்லுக்கு செல்லவேண்டிய ராணுவ வண்டி புறப்பட்டது. எந்த பட்டியலிலும், எந்த ஆவணங்களிலும் எனது இருப்பு பதிவாகவில்லை. அது க்ரோவ்ஸ்க்கு ஓப்பி அளித்த உறுதிமொழி என என்னருகே அமர்ந்து வந்த ஓப்பியின் சகோதரர் ஃபிராங் என்னிடம் கூறினார். நாங்கள் நள்ளிரவு அங்கே சென்று சேர்ந்தோம். ஒப்பி இரவு உறங்காமல் குறுக்கும் நெடுக்கும் புகைத்தபடி நடந்துகொண்டிருந்தார். அவர் கையிலிருந்த பகவத் கீதையின் ஏதோ ஒரு பக்கத்தை அவ்வப்போது விரித்து வாசிப்பதும் மூடுவதுமாக கழித்தார்.
நாற்காலியில் சாய்ந்தபடி கண்ணயர்ந்தேன். ஒரு கிணற்றைச் சுற்றி டானேஜர் பறவைகள் பறக்கின்றன. பலர் அதை சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக அதில் குதித்து எழுகிறார்கள். இறுதி வரை ஒரேயொருவன் குதிக்கத் தயங்கியபடி நிற்கிறான். இறுதியில் அவனும் குதித்து நெடுநேரம் கழித்து எழும்போது அவன் கையில் கேட்கட் இருந்தது. வெளிர்நீலக் கண்களுடன் முழுக்க நனைந்த ஓப்பி நிர்வாணமாக நின்றார். சட்டென எழுந்தேன். ஓப்பி புகைப்பதை நிறுத்தவில்லை.
ஜூலை 16, 1945. அதிகாலை மூன்று மணிக்கு எல்லோரும் தயாராகத் தொடங்கினோம். எல்லோரும் இந்த சோதனையின் விளைவை பற்றி ஊகங்களைச் சொல்லி பந்தயம் கட்டினார்கள். ஆனால் யாருக்கும் என்ன நடக்கும் எனத் தெரிந்திருக்கவில்லை. ஓப்பி நேரத்தை பார்த்துகொண்டு தொலைவானை நோக்கியபடி இருந்தார். அவருடைய பகவத் கீதை பிரதியை கையில் எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன். நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தாமதமானது. சரியாக காலை ஐந்து இருபத்தி ஒன்பது மணிக்கு நான் அதைக்கண்டேன்.
அது ஒரு பேரொளி. ஆழத்திலிருந்து பொங்கி வருவதுபோல் இருந்தது. அதைத்தொடர்ந்து பெரும் ஓசையும் அதிர்வையும் நாங்கள் உணர்ந்தோம். என்னால் எவரையும் கவனிக்க முடியவில்லை. பிழம்பு என தீ நிறம் கொண்டது. பொன் மஞ்சள் நிறமானது. பிறகு பழுப்பும் வெள்ளையுமாக மாறி ஒருவித ஊதா நிறத்தைக் கொண்டது. சில களிப்பின் சிரிப்பொலிகள் காதில் விழுந்தன. சில கேவல்கள் அழுகுரல்களை கேட்டேன். ஃபிராங்கும் ஓப்பியும் என்னருகே நின்றிருந்தனர். ஓப்பியின் முகத்தில் ஒரு பெரும் அமைதி குடி கொண்டிருந்தது. ஃபிராங்கை நோக்கி திரும்பி “அது வேலை செய்துவிட்டது” எனச் சாதாரணமாக கூறி கைகுலுக்கி தோள் தழுவிக்கொண்டனர். பிறகு என்னை நோக்கித் திரும்பினார். “உனக்கு இந்த அனுபவம் எப்படி தோன்றுகிறது?” கையிலிருந்த பகவத் கீதையை பிரித்து அதிலுள்ள ஒரு பக்கத்தை அவரிடம் சுட்டிக்காட்டினேன். “நானிப்போது காலப் பேருரு, உலகையழிக்க வந்திருப்பவன்”. அவருடைய கண்கள் சுருங்கி விரிந்தன. வேறொரு பக்கத்தை புரட்டி அதை என்னிடம் திருப்பி அளித்தார். “வானில் ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக தோன்றினாலும்கூட இந்த மகத்தான வடிவத்திற்கு அது ஈடாகாது.” என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
பல ஆண்டுகளுக்கு பின் ஒரு நேர்காணலில் ஓப்பி இந்த மேற்கோளை ‘ட்ரினிட்டியின்’ போது நினைத்துகொண்டதாகச் சொன்னார். ஆனால் இந்த வரிகளை வந்தடைய, சோவியத் அணு குண்டைத் தயாரிக்க வேண்டி இருந்தது, பனிப் போர் வரவேண்டி இருந்தது, ஹைட்ரஜன் குண்டு வரவேண்டி இருந்தது, கம்யுனிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு அரசின் அண்மையிலிருந்து வீசி எறியப்பட வேண்டி இருந்தது.
அன்றிரவு விருந்தில் எல்லோரும் தத்தமது சொற்களில் அன்றைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். கடவுளின் கண் எனத் தெரிந்தது, ஒரு பெரும் காளான் குடை என விரிந்தது, பூமியில் ஒரு சூரியன் உதித்தது, ஆலமரத்தை போலிருந்தது என சொல்லிக்கொண்டே வந்தார்கள். என் முறை வந்தது. “பூமியின் ஆழத்திலிருந்து அதன் நரகத்தீ ஒரு கரமாகி பொத்துக்கொண்டு விண்ணைக் குத்தியது போலிருந்தது” என்றேன். எல்லாவற்றிலிருந்தும் விலகிய அந்த வெளிர்நீலக் கண்கள் சட்டென மின்னி மறைவதைக் கண்டேன்.
மறுநாளே நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். ஆனால் முடியவில்லை. நான் இரண்டாம் உலகப்போர் முடிந்து இன்னும் சில மாதங்கள் லாஸ் அலமோஸில் தொடர்ந்தேன். அங்கிருந்து வெளியேறும் வரை நான் மீண்டும் ஒருமுறைகூட என் பிரியத்திற்குரிய மஞ்சள் பறவையைக் காணவே இல்லை. ஆனால் அவை நேற்றிரவு வரை என் கனவில் மீண்டும் மீண்டும் பிறந்து பறந்து கிறிச்சிட்டு சாம்பலாகிக்கொண்டே இருந்தன.
--
https://suneelwrites.blogspot.com/2019/05/1.html - சிங்கப்பூர் மலேசிய பயணம் -1
No comments:
Post a Comment