கிளாரிஸ் லிஸ்பெக்டர் (1920-1977) பிரேசிலை சேர்ந்த பெண் எழுத்தாளர். லத்தீன் அமெரிக்க எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமையாக கருதப்படுபவர். அவருடைய மொத்த தொகுப்பிலிருந்து மூன்று கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். போர்த்துகீசிய மொழியிலிருந்து மொழியாக்கம் செய்தவர் கத்தரீனா டாட்சன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு செய்தவர் நரோபா.
2020 கல்குதிரை இதழில் வெளிவந்துள்ளது.
நூற்றாண்டு கால மன்னிப்பு
நீங்கள் இதுவரை திருடியதே இல்லை என்றால் என்னை புரிந்துகொள்ள இயலாது. அதுவும் நீங்கள் ரோஜாக்களை திருடியதே இல்லை என்றால் என்னை ஒருகாலும் புரிந்துகொள்ள இயலாது. நான் என் பால்யத்தில் ரோஜாக்களை திருடியிருக்கிறேன்.
ரெசிஃபியில் எத்தனையோ தெருக்கள் இருந்தன, செல்வந்தர்களின் தெருக்கள், விசாலமான தோட்டங்களுக்கு மத்தியிலே இருக்கும் மாளிகைளின் வரிசையால் ஆனவை. எனது பால்ய சிநேகிதியும் நானும் இந்த மாளிகைகள் எவருடையது என தீர்மானிக்கும் விளையாட்டில் அடிக்கடி ஈடுபடுவோம். “அந்த வெள்ளை மாளிகை என்னுடையது.” “இல்லை, வெளுப்பானவை எல்லாம் என்னுடையவை என முன்னரே சொல்லியிருக்கிறேன்.” “ஆனால் இது முழுக்க வெளுப்பாக இல்லையே. அதற்கு பச்சைநிற சாளரங்கள் உள்ளனவே.”
பல சமயங்களில் எங்கள் முகங்கள் இரும்பு கம்பி வேலிகளில் பதிய நெடுநேரம் வெறித்திருப்போம்.
இப்படித்தான் அது தொடங்கியது. “இது என் வீடு” என்று விளையாடிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில், நாங்கள் சிறுகோட்டையைப் போலிருந்த மாளிகைக்கு முன் நின்றிருந்தோம். அதன் பின்புறம் பெரிய பழத்தோட்டம் இருந்ததை காண முடிந்தது, முன்புறத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட மலர் வெளியில் மலர்ச் செடிகள் நடப்பட்டிருந்தன.
எனினும், மலர் வெளியில் ஒளிரும் இளஞ்சிவப்பில் அலர்ந்து கொண்டிருந்த ஒற்றை ரோஜா தனித்து தெரிந்தது. இன்னும் முழுதாக மலர்ந்திடாத செருக்கு மிகுந்த ரோஜாவை பிரியத்துடன் கண்ணிமைக்காது சொல்லற்று திகைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அது நிகழ்ந்தது, இதயத்தின் அடியாழத்திலிருந்து நான் அந்த மலரை எனக்கென விழைந்தேன். எனக்கு அது வேண்டும், ஒ, எனக்கு அது எந்த அளவிற்கு வேண்டியதாய் இருந்தது! ஆனால் அது எனக்கு கிடைப்பதற்கு எந்த வழியும் இல்லை. தோட்டக்காரர் அருகிருந்திருந்தால் இந்த ரோஜாவை கேட்டிருப்பேன். கேட்டிருந்தாலும் கூட, தெருப் பிள்ளைகளை வெளியே விரட்டிவிடுவது போல எங்களையும் செய்திருப்பார் என்பதை நன்கறிவேன். தோட்டக்காரர் கண்ணுக்குப் புலப்படவில்லை, எவருமே புலப்படவில்லை. வெயிலின் பொருட்டு சாளரங்கள் அடைக்கப்பட்டிருந்தன. டிராம்கள் கடக்காத, அரிதாக கார்கள் செல்லும் தெருவது. எனது மௌனத்திற்கும் ரோஜாவின் மௌனத்திற்கும் இடையே, எனக்கு மட்டுமே உரிமையுள்ள பொருளை- எனதாக்கிக் கொள்ளவேண்டும் எனும் எனது அவா இருந்தது. நான் அதை பறித்து பற்றிக்கொள்ள முடிய வேண்டும். அதன் மதிமயக்கும் தீவிர வாசனையில் கண்கள் சொக்கி இருளும் வரை அதை நுகர வேண்டும் என்று விழைந்தேன்.
அதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. ஆவலின் உந்துதலில் உடனடியாக ஒரு திட்டம் என்னில் உருக்கொண்டது. திட்டமிடுவதில் நானொரு நிபுணர் என்பதைப்போல், எனது விளையாட்டு தோழியுடன் சேர்ந்து நிதானமாக ஒரு திட்டத்தை வகுத்தேன். சாளரங்களை நோட்டம் விடுவது அல்லது தோட்டக்காரர் நெருங்கி வருகிறாரா என கவனிப்பது, தெருவைக் கடந்து செல்லும் சிலரை கண்காணிப்பது என அவளுடைய பங்களிப்பை விளக்கினேன். இதற்கிடையே, திறக்கும்போது எழும் லேசான கிறீச் ஒலியை எதிர்பார்த்து, கொஞ்சமாக துருவேறிய கதவை மெதுவாகத் திறந்தேன். எனது ஒல்லியான குட்டிப்பெண் உடல் கடந்து செல்லும் அளவிற்கே திறந்தேன். வேகமாகவும் ஒசை எழுப்பாமலும் நடந்து மலர் வெளியை சூழ்ந்திருக்கும் சரளைக் கற்களை கடந்தேன். எனது இதயம் ஒருநூறு முறை துடித்த காலத்தில் நான் ரோஜாவை அடைந்திருந்தேன். .
பிறகு, ஒருவழியாக நான் அதன் முன் நின்றிருந்தேன். ஆபத்தான நிலை என்றாலும் கூட அதன் முன் ஒரு நொடி நின்றேன், ஏனெனில் நெருக்கத்தில் இது இன்னும் வசீகரமாக இருந்தது. கடைசியாக, அதன் முட்களில் விரலைக் கீறிக்கொண்டு, விரல்களில் வழிந்த உதிரத்தை உறிஞ்சியபடி அதன் கிளையை முறித்தேன்.
சட்டென அது முழுமையாக என் கைக்கு வந்துவிட்டது. வாயில்கதவுக்கு திரும்ப ஓடுவதும் ஓசையின்றி இருக்க வேண்டும். ரோஜாவைப் பற்றியபடி, லேசாக திறந்துவைத்திருந்த கதவின் வழியாக வெளியேறினேன். நானும் அந்த ரோஜாவும், இருவருமே வெளிறிப்போயிருந்தோம், அந்த வீட்டைவிட்டு வெகுதொலைவு ஓடினேன்.
நான் அந்த ரோஜாவை வைத்துகொண்டு என்ன செய்தேன்? அது என்னுடையது ஆகவே இதைச்செய்தேன்.
வீட்டுக்கு கொண்டு சென்றேன், நீர் நிரம்பிய பூக்குவளையில் வைத்தேன். அதன் இதழ்கள் அடர்ந்து, மென்மையாக, வெளிறிய இளஞ்சிவப்பின் பல்வேறு அடர்வுகள் கொண்டதாக, பார்க்க அதி அற்புதமாக இருந்தது. அதன் நிறம் குவிமையத்தை நோக்கி செல்லும்தோறும் அடர்ந்துக்கொண்டே இருந்தது, அதன் இதயம் கிட்டத்தட்ட செந்நிறத்தில் இருந்தது.
மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
மிக மகிழ்ச்சியாக உணர்ந்ததால் நான் தொடர்ந்து ரோஜாக்களை திருடினேன். அதன் வழிமுறை எப்போதும் ஒன்றுதான். அந்த சிறுமி நோட்டம் பார்ப்பாள், நான் உள்ளே சென்று, கிளை முறித்து, ரோஜாவுடன் தப்பித்து வருவேன். எப்போதும் என் இதயம் படபடக்க, எப்போதும் என்னிடமிருந்து எவரும் பறிக்க முடியாத பெருமிதத்துடனும் வெளியே வருவேன்.
நான் பிதாங்க (முளகு நெல்லி) பழங்களையும் திருடியிருக்கிறேன். எனது வீட்டருகே உயர்ந்த பசுமை வேலியால் சூழப்பட்ட பிரஸ்பீடிரியன் தேவாலயம் இருக்கிறது. தேவாலயத்தையே மறைக்கும் அளவிற்கு அந்த பசுமை வேலி அடர்த்தியானது. அதன் கூரையின் ஒரு மூலையைத் தவிர வேறெதையும் நான் பார்க்க முடிந்ததில்லை. அந்த பசுமை வேலி பிதாங்க புதர்ச்செடியால் ஆனது. ஆனால் பிதாங்க பழங்கள் ஒளிந்து கொள்பவை: ஒரு பழம் கூட தென்படவில்லை. வேறு எவரும் வரவில்லையா என சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, இரும்பு கம்பிகளுக்குள் கையை விட்டு புதருக்குள் ஆழ்ந்து சிறிய பழத்தின் ஈரத்தை என் விரல்கள் உணரும்வரை துழாவினேன். பலமுறை எனது அவசரத்தில் பழுத்த பிதாங்க பழங்களை விரல்களாலேயே நசுக்கியிருக்கிறேன். என் விரல்கள் ரத்தக்கறை படிந்ததைப் போல் ஆகும். பறித்த பழங்களில் பலதை அங்கேயே உண்பேன். பழுக்காத காய்களை அங்கேயே வீசியெறிவேன்.
எவருமே எப்போதுமே இதை கண்டுபிடித்ததில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை: ரோஜாக்கள் மற்றும் பிதாங்க பழத் திருடர்களுக்கு நூற்றாண்டு கால மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பிதாங்க பழங்களே தாம், கிளையிலேயே பழுத்து கொள்ளப்படாமலேயே மரிப்பதற்கு பதில், எம்மை பறித்துகொள்ளுங்கள் என கெஞ்சுகிறது.
- (one hundred years of forgiveness- from the complete stories Clarice Lispector, new direction publication)
கடவுளை மன்னித்தல்
எதைப்பற்றியும் எண்ணாமல் கவனமின்றி கட்டிடங்களையும், துண்டுகளாக தெரியும் கடலையும், மனிதர்களையும் பார்த்தபடி அவெனிடா கோப்பகபானாவில் நடந்து கொண்டிருந்தேன். உண்மையில் நான் கவனமின்றி இல்லை என்பதை நான் அதுவரை உணரவில்லை, எச்சரிக்கையுணர்வு இல்லாமல் இருந்த அரிதான ஒருநிலையில் நான் இருந்தேன்: சுதந்திரமாக. நான் எல்லாவற்றின் மீதும் பார்வையை வெறுமே அலையவிட்டேன். நான் பொருட்களை கவனிக்கிறேன் என்பதை இயல்பாக கவனிக்கத் தொடங்கினேன். எனது சுதந்திரம் சுதந்திரமாக இல்லாமல் ஆகாமலேயே இன்னும் தீவிரமாக வளர்ந்தது. இது உரிமையாளரின் மேற்பார்வை பயணம் அல்ல, அவற்றில் எதுவும் என்னுடையது அல்ல, அவற்றை எனதாக்கிக்கொள்ளவும் நான் விழையவில்லை. ஆனால் நான் கண்டவை எனக்கு நிறைவை அளிப்பதாக உணர்ந்தேன்.
அதற்கு முன் தோன்றியிராத ஒரு உணர்வு என்னை அப்போது ஆட்கொண்டது. தூய்மையான அன்பினால் நான் என்னை கடவுளின் அன்னையாக உணர்ந்தேன், நான் இந்த புவி, இந்த உலகம். உண்மையில் அகந்தையோ பெருமிதமோ அற்ற, இம்மியளவு உயர்வுமனப்பாங்கோ சமத்துவ மனநிலையோ இல்லாத, தூய்மையான அன்பின் பாற்பட்டு இங்கு இருக்கும் யாவற்றுக்கும் அன்னையென உணர்ந்தேன். மேலும் நான் இப்போது உணர்வது தவறான உணர்வாக இல்லாத பட்சத்தில், உண்மையென்றாகும் போது, கடவுள் பெருமிதமோ அற்பத்தனமோ கொள்ளாத ஒருவரை அவரை நோக்கி அன்பு காட்ட, எவ்வித நிபந்தனையும் இன்றி அனுமதிப்பார் என்பதை கண்டடைந்தேன். நான் அன்பை அத்தனை அணுக்கமாக உணர்வது அவருக்கு ஏற்புடையதாகவே இருந்திருக்கும். இந்த உணர்வு எனக்கு புதியது. முன்னர் அது என்னுள் இல்லாததால் எனக்கு அது தோன்றியதில்லை என்பது உறுதியானது. நாம் எதை நேசிக்கிறோமோ அதுதான் கடவுள் என்றறிவேன். உண்மையான அன்புடன், தீவிரமான நேசத்துடன், மரியாதையுடன், அச்சத்துடன், வணக்கத்துடன் அவரை அணுகுகிறோம். ஆனால் கடவுள் மீது ஒரு அன்னையாக அன்பு செலுத்துவதை பற்றி நான் கேள்வியுற்றதே இல்லை. மகன் மீது நான் வைக்கும் அன்பு அவனை குறுக்காது, அது அவனை விரியச்செய்யும் என்பதால் இந்த உலகத்தின் அன்னையாக இருப்பது என்பது தடையற்ற அன்பை அளிப்பதுதான்.
அப்படியான தருணத்தில்தான் நான் கீழே மரித்துக்கிடந்த பெரிய எலியின் மீது கால்பதிக்க இருந்தேன். ஒருநொடிக்கும் குறைவான காலத்தில் வாழ்தலில் உள்ள அச்சுறுத்தலால் உடல் நடுங்கிக்கொண்டிருந்தேன், ஒரு நொடிக்குள்ளாக பீதியில் சிதைந்து கொண்டிருந்தேன், அடியாழத்தில் எழுந்த ஓலத்தை கட்டுக்குள் வைக்க இயன்ற அளவு போராடிக்கொண்டிருந்தேன். பயத்தில் ஓட முயன்று, இத்தனை மக்கள் சூழ இருந்தும் பார்வையிழந்தவளாக, எதையும் பார்க்க விரும்பாதவளாக கண்ணை வலுக்கட்டாயமாக இறுக மூடியபடி, அடுத்த கட்டிடத்தின் அருகே இருந்த தூணில் சாய்ந்துக்கொண்டு என்னுள் சுருண்டிருந்தேன். ஆனால் அந்த பிம்பம் என் கண்ணிமைக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது. பெருத்த, நீண்ட வாலுடைய, கால்கள் நசிந்த, சிவப்பு குறுமயிர்கள் கொண்ட அசைவற்ற, பழுப்புநிற செத்த எலி. எலிகளின் மீதான எனது அச்சத்திற்கு எல்லையே இல்லை.
உடல் முழுக்க நடுங்கியது என்றாலும் எப்படியோ நான் தொடர்ந்து உயிர்த்திருந்தேன். முற்றிலும் குழம்பிய நிலையில் நான் தொடர்ந்து நடந்தேன். என் வாய் வியப்பினால் ஒருவித குழந்தைத்தனத்தை அடைந்திருந்தது. நான் சில நிமிடங்களுக்கு முன்னர் உணர்ந்தது மற்றும் இந்த எலி, இவ்விரு உண்மைகளுக்கு இடையிலான உறவை துண்டிக்க முயற்சித்தேன். ஆனால் பலனில்லை. நிகழ்வு தொடர்ச்சி காரணமாகவேனும் அவை உறவு கொண்டிருந்தன. இரண்டு உண்மைகள் எவ்வித தர்க்கமும் இல்லாமல் ஒன்றாக பிணைந்திருந்தன. ஒரு எலி என்னுடைய இணையாக இருந்தது என்பது அதிர்ச்சியளித்தது. சட்டென ஒருவித கலகக்குரல் என்னை பீடித்தது: அப்படியென்றால் நான் தடையற்று அன்பிடம் சரணடைய முடியாதா? கடவுள் எனக்கு எதை நினைவூட்ட விரும்பினார்? உள்ளே இருப்பது முழுக்க குருதி என நினைவுறுத்தப்பட வேண்டிய நபரல்ல நான். நான் உள்ளிருக்கும் குருதியை மறந்தவளில்லை என்பதோடு நான் அந்த குருதியை விழைபவளும் கூட, அந்த விழைவை அனுமதிப்பவளும் கூட. குருதியை மறக்கமுடியாத அளவிற்கு நான் குருதியால் நிரம்பியவள். எனக்கு ஆன்மீக தளம் எவ்விதத்திலும் பொருட்டில்லை. பூவுலகும் கூட பொருட்டில்லைதான். என் முகத்திற்கு நேராக அப்பட்டமாக ஒரு எலியைத் தூக்கி வீசியிருக்கத் தேவையில்லை. அது சரியான செயலில்லை. குழந்தைப்பருவத்தில் இருந்து என்னை பேதலிக்கச் செய்யும், என்னை இழிவு செய்யும், சென்ற உலகத்தில் என்னை வேகவேகமாகவும் ஆக்ரோஷமாகவும் தின்று தீர்த்த எலிமீது எனக்கிருந்த பீதியை எளிதாக கணக்கில் கொண்டிருக்க வேண்டும். அப்படித்தானே? நான் இந்த உலகத்தில் எதையும் கோராமல், எதையும் விழையாமல், தூய்மையான பரிசுத்தமான அன்பை அளித்துக்கொண்டு சுற்றித்திரிந்தபோது கடவுள் அவருடைய எலியை எனக்கு காட்டுகிறார். கடவுளின் கருணையின்மை என்னை புண்படுத்தி அவமதித்தது. கடவுள் ஒரு காட்டுமிராண்டி. மூடிக்கொண்ட இதயத்துடன் நடந்து கொண்டிருந்தேன். எனது ஏமாற்றம் தேற்றமுடியாதது. குழந்தையாக நான் உணர்ந்த தேற்றமுடியாத ஏமாற்றத்திற்கு இணையானது. மறக்க முயன்று தொடர்ந்து நடந்தேன். ஆனால் அப்போது எனக்கு தோன்றிய ஒன்றேயொன்று பழிதீர்த்தல்தான். ஆனால் சர்வ வல்லமை வாய்ந்த கடவுளை, வெறும் ஒரேயொரு நசுங்கிய எலியைக் கொண்டு என்னை நசுக்கிய கடவுளை, பாதிக்கும் வகையில் நான் எப்படி பழிதீர்க்க முடியும்? ஒற்றை உயிராக நான் பலவீனமானவள். பழிதீர்க்கும் விழைவில் நான் அவரை சந்திக்க கூட முடியாது, ஏனெனில் அவர் பெரும்பாலும் எங்கு வசிப்பார் என்பதை நானறியேன். எந்த பொருளில் அவர் அதிகமும் வசிப்பார் என்பதும் தெரியவில்லை. அப்படி அந்த பொருளை கண்டடைந்தால் கூட அதை கோபமாக உற்றுநோக்கினால் அதில் அவரைக் காண்பேனா? இந்த எலியில்? அந்த ஜன்னலில்? தரையில் கிடக்கும் கற்களில்? எனக்குள் அவர் இப்போது இல்லை. எனக்குள் தான் நான் அவரை காணவே முடியாது.
பிறகு பலவீனரின் பழிதீர்த்தல் முறை எனக்குள் உதித்தது; ஆ, அது அப்படித்தானே? நான் இனி எந்த ரகசியத்தையும் பேண மாட்டேன், நான் அம்பலப்படுத்தப் போகிறேன். ஒருவரின் தனிவாழ்க்கையில் நுழைந்து அவருடைய ரகசியங்களை அம்பலப்படுத்துவது கீழ்மையானது என்றறிவேன். ஆனால் நான் சொல்லத்தான் போகிறேன்- சொல்லிவிடாதே, அன்பின் பொருட்டேனும் சொல்லிவிடாதே, உனக்குள்ளேயே இருக்கட்டும், உனக்கு முன் அவர் வெட்கித் தலைகுனிகிறார்- ஆனால் நான் சொல்லத்தான் போகிறேன், ஆம், எனக்கு என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் சொல்லத்தான் போகிறேன். இந்தமுறை, அதுவும் இந்த நிகழ்வில் அவர் என்னிடமிருந்து தப்பிவிட முடியாது. அவர் எனக்கு என்ன செய்தார் என்பதை சொல்லி அவருடைய நற்பெயரை களங்கப்படுத்துவேன்..
... ஆனால் யாருக்குத் தெரியும், ஒருகால் இந்த உலகமே ஒரு எலி என்பதால் இது நடந்திருக்கலாமோ, மேலும் நானும் இந்த எலியை எதிர்கொள்ள தயார் என்று எண்ணியிருக்கக் கூடும். ஏனெனில் நான் என்னை இதைவிட வலுவானவளாக கற்பனை செய்துகொண்டேன். அன்பைப்பற்றி நான் பிழையாக கணக்கிட்டிருந்தேன்: எல்லாவற்றையும் கூட்டிச் சேர்க்கும்போது நான் அன்பு செய்தேன் என புரிந்து கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் கூட்டிச் சேர்த்தல் உண்மையான அன்பிற்கான வழியல்ல என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. நேசத்தை உணர்ந்த மாத்திரத்தில் அன்பு செலுத்துதல் எளிது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஏனெனில் நான் புனிதமான அன்பை விழையவில்லை, புனிதப்படுத்துதல் புரிந்துகொள்ளமுடியாததை சடங்காக மாற்றியளிக்கும் என்பதை நான் உணரவில்லை. மேலும் நான் எப்போதும் அதிகம் சண்டையிட்டே வந்திருக்கிறேன், சண்டையிடுவதே என் வழிமுறையில் செயலாற்றுவதாகும். ஏனெனில் நிகழ்வுகளை என்போக்கில் எதிர்கொள்ளவே எப்போதும் விரும்புவேன். ஏனெனில் எப்படி வளைந்து கொடுப்பது என்பதை இப்போது வரை நானறியேன். ஏனெனில் நான் உள்ளார்ந்து எதன் மீது அன்பு செலுத்த விழைகிறேனோ அதன்மீது அன்பு செலுத்தவே விரும்புகிறேன்- அது எதுவாக இருந்தாலும். ஏனெனில் நான் இன்னும் நானாகவே இல்லை ஆகவே தானாக இல்லாத இந்த உலகத்தை நேசித்தற்கான தண்டனை இது. ஏனெனில் நான் என்னையே காரணமின்றி புன்படுத்திக்கொண்டேன். ஏனெனில் நான் மிகவும் பிடிவாதம் கொண்டவள் என்பதால் முகத்தில் அடித்தாற்போல் எனக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் மிகுந்த உடமையுணர்வோடு இருப்பதால் சற்றே முரண்நகையாக இப்படியொரு எலி எனக்கும் வேண்டுமா என என்னிடம் கேட்கப்பட்டது. ஏனெனில் நான் எனது கையினால் எலியை எடுக்கமுடியும்போதுதான் யாவற்றின் அன்னையாக ஆக முடியும். மிக மோசமாக மரணமடைந்த பின்னும் கூட என்னால் ஒரு எலியை கையில் எடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். ஆகவே அறியமுடியாததை அல்லது பார்க்கமுடியாததை பற்றி புகழ்பாடும் ‘மேக்னிபிகாட்டை(கன்னி மேரி பற்றிய துதிப்பாடல்)’ கைக்கொள்கிறேன். மேலும் என்னை வெளியே தள்ளும் சடங்கு சம்பிரதாயங்களையே கைக்கொள்கிறேன். ஏனெனில் சடங்கு சம்பிரதாயம் எனது எளிமையை பாதிக்கவில்லை ஆனால் எனது பெருமையை பாதித்திருக்கிறது. இந்த உலகத்துடன் நான் மிக அணுக்கமாக உணர்வது இந்த உலகத்தில் பிறந்தேன் எனும் பெருமிதத்தால் தான். எனினும் நான் இந்த உலகத்தை என்னுள்ளே இருந்து ஒரு மௌன அலறலில் பிறப்பித்தேன். ஏனெனில் நான் இருப்பது போலவே இந்த எலியும் இங்கிருக்கிறது, ஒருகால் நானோ இல்லை எலியோ ஒருவரை ஒருவர் சந்தித்திருக்க கூடாதோ என்னவோ, தொலைவு எங்களை சமானமானவர்களாக ஆக்கியது. ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எலியின் மரணத்தை தான் என் இயல்பு விழைகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமோ என்னவோ. ஒருவேளை, நான் இன்னும் எனது குற்றங்களை நிகழ்தாததால் என்னைப் பற்றி நானே மிகையான கண்ணியவானாக கருதிக்கொள்கிறேனோ என்னவோ. எனது குற்றங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே காரணத்தினால் நான் பரிச்சுதமான அன்பினால் ஆனவன் என எண்ணிக்கொண்டேன். ஒருவேளை எனது தளையுண்ட ஆன்மாவை பெரும் ஆவேசம் இன்றி நோக்க முடியாதவரை என்னால் இந்த எலியை நோக்க முடியாதோ என்னவோ. ஒருவேளை இந்த “உலகத்தை” இப்படி எல்லாவற்றின் கலவை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டுமோ. எனது இயல்பின் தன்மையை நேசிக்காமல் இந்த உலகத்தின் மகத்துவத்தை என்னால் எப்படி நேசிக்க இயலும்? நான் மோசமானவள் என்பதால் “கடவுள்” நல்லவர் என கற்பனை செய்துகொள்ளும் வரை என்னால் எதையும் நேசிக்க முடியாது. உண்மையில் அது என்னை நானே மறுதலிக்கும் வழிமுறையாக மட்டுமே இருக்கும். என்னை நானே முழுமையாக தேடியறிந்து கொள்வதற்கு முன்னரே எனது எதிரீடை நேசிக்க முடிவு செய்துகொண்டேன், எனது எதிரீடை கடவுள் என அழைக்க விரும்பினேன். என்னை நானே ஒருபோதும் முழுமையாக ஏற்றுக்கொண்டதில்லை எனும்போது இந்த உலகம் என்னை அச்சுறுத்தாது என நம்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில் இதுவரை என்னிடம் நான் மட்டுமே சரணடைந்திருக்கிறேன், காரணம் நான் எனக்காக கூட கொஞ்சமும் மனமிரங்க மாட்டேன். எனக்கு ஈடாக என்னவிவிட வன்முறை குறைந்த புவியை சேர்ந்த என்னையே முன்வைக்க முடியும் என நம்பினேன், ஏனெனில் எனக்கு நான் தேவைப்படாத காரணத்தினால் கடவுளை நேசிக்கும் வரை நான் ஒரு கள்ளப் பகடை மட்டுமே, எனது பெருவாழ்வின் ஆட்டம் விளையாடப்படவே மாட்டாது. நானாக கடவுளை உருவாக்குவதற்கு முன்புவரை அவர் இருந்ததே இல்லை.
- Forgivig God, Clarice Lispector, The complete stories
அதீத அன்பின் கதை
முன்பொரு காலத்தில் ஒரு சிறுமி இருந்தாள். அவள் கோழிக்குஞ்சுகளை எந்த அளவிற்கு நுண்மையாக அவதானித்தாள் என்றால் அவற்றின் ஆன்மாவையும் உள்ளார்ந்த ஏக்கங்களையும் அறிந்தவள் ஆனாள். கோழி பதட்டமாக இருக்கிறது ஆனால் சேவல் ஏறத்தாழ மனிதனைப்போலான துயரத்தில் வாடுகிறது. அதன் அந்தப்புரத்தில் அதற்கு உண்மையான காதல் கிடைக்கவில்லை. மேலும் இரவெல்லாம் கண்விழித்து கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது, அப்போதுதான் எங்கோ வெகு தொலைவில் எழும் முதல் புலரி ஒளியை விட்டுவிடாமல் எவ்வளவு உரக்கக் கூவ முடியுமோ அவ்வளவு உரக்க கூவ முடியும். அதுதான் அதன் கடமையும் கலைவெளிப்பாடும் கூட. இப்போது மீண்டும் கோழி குஞ்சுகளுக்கு வருவோம், இந்தச் சிறுமி அவளுக்கென இரண்டு கோழிக்குஞ்சுகளை வளர்த்தாள். ஒன்றின் பெயர் பெட்ரினா மற்றொன்றின் பெயர் பெற்றோநிலா.
இவற்றில் ஒன்றுக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளது என எப்போதெல்லாம் அவள் எண்ணுகிறாளோ அப்போதெல்லாம் அவற்றின் ரெக்கைக்கு அடியில், ஒரு செவிலியின் நேர்த்தியுடன், நோயின் முதன்மை அறிகுறி அதுதான் என்பதுபோல், முகர்ந்து பார்ப்பாள். உயிருள்ள கோழியின் வாசனையை அறிவது ஒன்றும் விளையாட்டல்ல. பிறகு அவளுடைய அத்தையிடம் சென்று அதற்காக ஏதேனும் மருந்தை கோருவாள். அதற்கு அவளுடைய அத்தை சொல்வார் “உனது கல்லீரலில் எந்தவித சிக்கலும் இல்லை.” பிறகு அவளுக்கு பிடித்த அந்த அத்தையுடன் மனதில் நெருக்கமாக உணர்வதால், இந்த மருந்து யாருக்கு என அவருக்கு விளக்கினாள். நோய் தொற்று புலப்படாத வகையில் பரவாமல் இருக்க பெற்றோநிலாவிற்கு அளிப்பது போலவே பெட்ரினாவிற்கும் மருந்து அளிப்பது புத்திசாலித்தனம் என அந்தச் சிறுமி கருதினாள். பெட்ரினாவிற்கும் பெற்றோநிலாவிற்கும் மருந்து கொடுப்பது கிட்டத்தட்ட பொருளற்ற செயல். நாள் முழுக்க மண்ணைக் கொத்தி கண்டதையும் உண்பதை தொடர்வதால் கல்லீரலை துன்புறுத்தி கொள்கிறார்கள். ரெக்கைகளுக்கு அடியில் எழும் மணம் என்பது அதனால் எழும் கெடுமணம்தான். அவளுக்கு அதற்கு நாற்றப்போக்கியை (deodarant) பூசிவிட வேண்டும் எனத் தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் வசித்த மீனாஸ் ஜெராயிஸ் பகுதியில் மஸ்லின் உள்ளாடைகளை அணிவதால் நைலான் உள்ளாடைகள் எப்படி அணிவதில்லையோ அதேப்போல் நாற்றப்போக்கியை யாரும் பயன்படுத்துவதில்லை. அவளுடைய அத்தை அவளுக்கு தொடர்ந்து மருந்தை கொடுத்து வந்தாள். ஒரு கரிய திரவம். சில துளிகள் காபி கலக்கப்பட்ட தண்ணீர் தான் அது என அந்தச் சிறுமி ஐயுற்றாள். அதன் பிறகு கோழிக் குஞ்சுகளின் அலகை பிளந்து அவை கோழிக் குஞ்சாக இருப்பதை குணமாக்கும் மருந்தை புகட்ட கடுமையாக முயன்றாள். மனிதர்கள் மனிதர்களாக இருப்பதையும், கோழிகள் கோழிகளாக இருப்பதையும் குணப்படுத்த முடியாது என அவளுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. மனிதர்களும் சரி கோழிகளும் சரி அந்தந்த இனங்களுக்கே உரிய துயரங்களையும் மகத்துவங்களையும் கொண்டவர்கள்தான். (கோழிகள் வடிவ நேர்த்தி கொண்ட வெண் முட்டைகளை இடுகின்றன). அந்தச் சிறுமி கிராமப்புறத்தில் வசித்ததால் அவளுக்கு ஆலோசனை சொல்ல அங்கு எந்த மருந்துக்கடைகளும் இல்லை.
பெட்ரினாவோ பெற்றோநிலாவோ இறகுகளுக்கு அடியில் மிகவும் ஒல்லியாக இருப்பதாக, அவர்கள் நாளெல்லாம் அப்படியே இருந்தாலும் கூட ,அந்தச் சிறுமிக்கு திடிரென தோன்றும்போதெல்லாம் மற்றுமொரு நரக வேதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை குண்டாக்குவது உணவு மேஜையில் சீக்கிரம் கொண்டு சேர்க்கும் எனும் விதியை அந்தச் சிறுமி புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் எல்லாவற்றிலும் கடினமான அந்தப்பணியை செய்யத் தொடங்குவாள்- அலகை பிளக்கும் முயற்சியில் ஈடுபடுவாள். மீனாஸ் ஜெராயிஸ்சின் அந்தப்பெரிய பண்ணையில் அந்தச் சிறுமி கோழிகளின் உள்ளுணர்வை அறிவதில் நிபுணரானாள். அவள் வளர்ந்தபிறகுதான் வட்டார மொழியில் கோழி என்பது வேறொன்றை குறிப்பது என உணர்ந்துகொண்டாள் (உறவுக்கு அலைபவள்). இந்த மொத்த நிகழ்வின் வேடிக்கை புரியாமல் அவள் சொன்னாள்:
“ஆனால் இந்த சேவல் தான் கடினமாக உழைக்கிறது, ஆனால் யாருக்கும் அது தேவையில்லை! கோழிகள் எதையுமே செய்வதில்லை! நீங்கள் அதை கவனிக்கும் முன்னே உங்களை விட்டு விரைவாக சென்றுவிடுகிறது! சேவல் தான் எப்போதும் இவற்றில் ஒன்றை காதலிக்க முயல்கிறது ஆனால் அதனால் முடியவில்லை!”
வீட்டைவிட்டு தொலைவில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சிறுமியை ஒரு நாள் கூட்டிச்செல்வதாக குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அந்த சிறுமி திரும்பியபின், உயிருடன் இருந்தபோது பெற்றோநிலா என அழைக்கப்பட்ட கோழிக்குஞ்சை காணவில்லை. அவளுடைய அத்தை அவளிடத்தே சொன்னாள்:
“நாங்கள் பெற்றோநிலாவை உண்டுவிட்டோம்”
அந்தச் சிறுமிக்கு அபரிமிதமான நேசிக்கும் ஆற்றல் உண்டு. நீங்கள் கொடுக்கும் அன்பை ஒரு கோழியால் உங்களுக்கு திருப்பியளிக்க முடியாது என்றாலும் எதிர்பார்ப்பின்றி அந்தச் சிறுமி அதை தொடர்ந்து நேசித்து கொண்டிருந்தாள். பெற்றோநிலாவிற்கு என்ன ஆனதென அறிந்து கொண்டதிலிருந்து அவள் கோழி சாப்பிட பிடிக்காத அம்மாவையும் மாட்டுக்கறி அல்லது வால்கறியை சாப்பிடும் வேலையாட்களைத் தவிர்த்து வீட்டிலிருந்த பிற எல்லோரையும் வெறுக்கத் தொடங்கினாள். அவளுடைய தந்தையைப் பொறுத்தவரை, அவருடைய முகத்தில் முழிக்கக்கூட அவளுக்கு பிடிக்கவில்லை. உள்ளதிலேயே அவருக்கு தான் கோழிக்கறி மிகவும் பிடிக்கும். அவளுடைய அம்மா எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் விளக்கிச் சொன்னாள்.
“மனிதர்கள் பிராணிகளை உட்கொள்ளும்போது அந்த பிராணிகள் அதிகமும் மனிதர்கள் போலவே ஆகின்றன. ஏனெனில் அவை நம்முள் சென்றுவிடுகின்றன. இந்த வீட்டில் உள்ளவர்களில் நம்மிருவரின் உள்ளே மட்டும்தான் பெற்றோநிலா இல்லை. இது மிக துயரமானது.”
பெட்ரினாவை சிறுமி ரகசியமாக அதிகம் நேசித்தாள். அது இயற்கையான காரணங்களினால் செத்து விழுந்தது. அது எப்போதுமே பலவீனமானது தான். பண்ணையில் சுட்டெரிக்கும் வெயிலில் நடுங்கிக்கொண்டிருந்த பெட்ரினாவை கண்ட சிறுமி அதை ஒரு கரிய துணியில் சுற்றினாள். முழுமையாக சுற்றியபிறகு கொண்டு பொய் மீனாஸ் ஜெராயிசின் பண்ணைகளில் உள்ள பெரிய செங்கல் தணல் அடுப்பின் மேலே வைத்தாள். அவள் பெட்ரினாவின் மரணத்தை துரிதப்படுத்துகிறாள் என எல்லோரும் எச்சரித்தனர். ஆனால் அந்த சிறுமி பிடிவாதமாக துணி போர்த்திய பெட்ரினாவை சூடான கற்களின் மீது வைத்தாள். மறுநாள் காலை பெட்ரினாவின் நாள் மரணத்தின் விறைப்போடு தொடங்கியது. ஓயாத கண்ணீருக்கிடையே அந்த சிறுமி அன்பிற்குரிய பெட்ரினாவின் மரணத்தை துரிதப்படுத்திவிட்டதை அப்போதுதான் உணர்ந்து கொண்டாள்.
அவள் இன்னும் கொஞ்சம் வளர்ந்தபோது ஈபோனினா எனும் கோழியை வளர்த்தாள்.
ஈபோனினாவின் மீது இம்முறை அவளுக்கிருந்த அன்பு கற்பனாவதத்தன்மையானது அல்ல, யதார்த்தமானது. முன்னரே அன்பினால் துன்புற்ற ஒருவரின் அன்பு அது. ஈபோனினாவை உட்கொள்ளவேண்டிய தருணம் வந்தபோது அந்த சிறுமிக்கு அது தெரிந்திருந்தது மட்டுமில்லாமல், எவரொருவர் கோழியாக பிறந்தாலும் அவர்களின் தவிர்க்க முடியாத விதிப்பயன் இதுதான் என்பதை ஒருமாதிரி ஏற்றுக்கொண்டாள். கோழிகளுக்கு தங்கள் விதியை முன்னுணரும் ஆற்றல் உண்டு போலும். ஆகவேதான் அவை அதன் உரிமையாளர்களின் மீதோ சேவலின் மீதோ அன்பு செலுத்த கற்றுக்கொள்வதே இல்லை. ஒரு கோழி இந்த உலகில் தனித்திருக்கிறது.
அந்தச் சிறுமி அவளுடைய அம்மா பிரியத்திற்குரிய பிராணிகளை உட்கொள்வதை பற்றி சொன்னதை மறக்கவில்லை: ஈபோனினாவை மற்ற குடும்பத்தாரைக் காட்டிலும் அதிகமாக உட்கொண்டாள். பசியில்லாதபோதும் உண்டாள். ஆனால் மகிழ்ச்சியாக உண்டாள். ஏனெனில் ஈபோனினா அவளுடைய பகுதியாக ஆகி உயிருடன் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அவளுடையதாக ஆவாள் என இப்போது அறிந்திருந்தாள். ஈபோனினாவை குருதி சாறில் சமைத்திருந்தார்கள். அந்த சிறுமி பாகனிய சடங்கில் ஈடுபடுவதைபோல் உடலில் இருந்து உடலை கடத்தினாள். நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்ததைப்போல் அதன் மாமிசத்தை உண்டு குருதியை குடித்தாள். இந்த உணவு வேளையில் ஈபோனினாவை உட்கொண்ட பிறர் மீது பொறாமை கொண்டாள். அந்தச் சிறுமி அன்பு செலுத்தவே உருவானவள். ஆண்கள் இருக்கும் உலகில் இளம் பெண்ணாக வளரும் வரை அப்படித்தான் இருந்தாள்.
- A tale of so much love, -Clarice Lispector, The complete stories