Monday, July 20, 2020

கொஞ்சம் சிறுசா - சிறுகதை

(சொல்வனம் இதழில் வெளிவந்த கதை)

பிளந்து (திறந்து என எழுதலாம்தான், ஆனால் அது பழுவேட்டையருக்கு உகந்தது அன்று) கிடந்த பொலான்யோவின் 2666  நாவலை மூடி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக இருளில் ஆளரவமற்ற தெருவில் வழிந்த பொன்னிற விளக்கொளியை வெறித்தார் பழுவேட்டையர். ஏற்கெனவே வாசித்து முடித்திருந்த Savage Detectives நாவலை இடக்கையிலும்,  கைக்குள் வசப்படாத 2666 நாவலை வலது அக்குளிலும்  பிடித்துக்கொண்டு குறுக்க நெடுக்க நடந்தார். 

இங்கே ஒரு சிறிய பின்கதைs சுருக்கம். ஆர்சிம்பால்டி, அவன்தான் 2666-ன் நாயகன் (நாவலில் நாயகன் என ஒருவனைs சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் குறைந்தபட்சம் கடைசிப் பகுதியின் நாயகன், நாவலின் பகுதிகளை இணைக்கும் கண்ணி என வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்)  சாமரைக் கொன்றுவிட்டான். இப்போது என்ன செய்வது? ஆர்சிம்பால்டி பெரிய எழுத்தாளானாக்கும். கிட்டத்தட்ட நொபேல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுபவன். ஆனால், இது அவன் எழுத்து வாழ்க்கைக்கு முன் நிகழும் சம்பவம். அவனிடம், தாம் எப்படி படிப்படியாக ஐநூறு யூதர்களைக் கொன்றுவிட்டு எவருக்கும் தெரியக்கூடாது என முகாமில் பதுங்கிக் கிடக்கிறேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவனை, அறசீற்றம் கொண்டு யாருக்கும் தெரியாமல் சுருக்கிட்டு கொன்றுவிடுகிறான் ஆர்சிம்பால்டி. 

பழுவேட்டையருக்கு உள்ளம் பொங்கியது. அடுத்தடுத்து வெறிகொண்டவர் போல் Savage Detectives வாசித்து முடித்து, 2666-ம் வாசித்துக்கொண்டிருந்தார். “எம்புட்டு பெரிய வீரன்டா.. நீ எழுத்தாளன் டா..” என்று  வாய்விட்டுக் கூறினார். நெஞ்சு விம்மி அடைத்தது. 

இப்போது பெரும் விசனம் உண்டானது, ஆவேசமாக, கழுவும் தொட்டிக்கு மேல் தொங்கி கொண்டிருந்த சிறிய சவரக் கண்ணாடியில் குனிந்து முகம் நோக்கினார், அது தன் இயல்பின்படி எப்போதும் போல் தாடையை மட்டும் காட்டியது. இன்னும் குனிந்து நகர்ந்து  முழு முகமும் தெரிந்த பிறகு, “பேப்பயலே, நீ எவனையாவது கொன்னுருக்கியாடா? நீயெல்லாம் என்ன மசுத்துக்கு எழுத்தாளன்னு பினாத்திக்கிட்டு கெடக்க?” என உக்கிரமாகக் கண்ணாடியை நோக்கிக் கேட்பதற்குமுன், சாயமடித்த தலையில் சாயம்படாமல் நீட்டிக்கொண்டிருந்த நரைமுடியை மயிர்க் கூட்டத்திற்குள் புதைத்துவிட்டு, நின்று நிதானமாக ஆக்ரோஷப்பட்டார். (விமர்சகன் குறிப்பு – இங்கே நரைமுடி என்பது பழுவேட்டையரின் வயதிற்கான குறியீடு. இத்தனை ஆண்டுகளாக உருப்படியாக எதையும் எய்யவில்லை என்பதை நினைவுருத்தும் படிமம்.)  தாம் யாரையும் கொலை செய்ததில்லை எனும் உண்மை நன்மதியப் பகலவனாக அவரை வாட்டியது. சரி கொல்லவேண்டும் எனும் எண்ணம் எவர் மீதெல்லாம் வந்திருக்கிறது என யோசித்துக் கண் மூடியபோது முகங்களின் குவியலுக்குள் முகம் புதைந்தது. சமகால, முன்னோடிகள், பின்னோடிகள், விமர்சகர்கள், கடன்காரர்கள், மளிகைக் கடைக்காரர், கணக்கு வாத்தியார் எனப் பல பரிச்சயமான முகங்களுடன், புதுமைப்பித்தன், பாரதி, காஃப்கா என என்றோ உடல் துறந்த  எழுத்தாளர்களின் முகமெல்லாம் தென்பட்டது. அலைவுகளின் ஊடாகத் தனக்கு நன்கு பரிச்சயமான ஒரு முகம் துலங்கியது. அது தன்னுடைய முகம்தான் எனப் பிடிபட்டதும்  சட்டெனச் சுதாரித்துக் கண்ணைத் திறந்துகொண்டார். ஆனால், ஏன் பத்தாவது பரிட்சை முடித்தபோது, வகிடெடுத்துத் தலைசீவிய பால்வடியும் பாலகனாகத் தம் முகம் தோன்றியது என்பதில் அவருக்கு ஒரு குழப்பம் வந்தது. எனினும் இப்போது அதற்குரிய நேரமில்லை என்பதால் ஆக்ரோஷ மனநிலைக்கு மீண்டார்.  

சுமந்திருந்த புத்தகங்களைக் கீழே போட்டுவிட்டுத் தளர்ந்து அமர்ந்தார். நிஜத்தில், தாம் எவரையும் கொல்லவில்லை என்றால்  தமது கதைகளில் இப்படி யாரை எல்லாம் அறச்சீற்றம் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறோம் என யோசிக்கத் தொடங்கினார். “புருஷங்காரன்கூட வாழப் பிடிக்காம கற்பகம் அவளா தூக்குப் போட்டுச் செத்துப்போனா”, “குடிகார முத்து வண்டில விழுந்து செத்தான்.” “தாயம்மா கெளவி வயசாகி மண்டையப் போட்டா”, “மணி கூட ரோட்டுல அனாமத்தா அடிபட்டு செத்துக் கிடந்துச்சு.” இன்னும் சில கதை மாந்தர்களின் மரணங்கள் நிழலாடின. தற்சாவு, விபத்து, மூப்பு அவ்வளவுதான். ஆத்திரத்தில், 2666 புத்தகத்தின்மீது ஓங்கி ஒரு குத்துக் குத்தினார். வலித்தது. உதறினார். சட்டென மீண்டும் கண்ணாடியை நோக்கி,  “கேனப்பயலே.. ஒரு ஆளக் கதையிலகூட கொல்ல வக்கு இல்லை.. சோறத் திங்கிறியா, பீ திங்கிறியாடா?” என்று காறி உமிழ்ந்தார். உமிழ்ந்த பிறகு யோசித்தார், இப்போது இங்கு இந்த நாடகத்தைக் காண்பதற்குக்கூட எவரும் இல்லாத நிலையில் இவையெல்லாம் வீண்தானா? குறைந்தபட்சம் கிடாரம் வரும்வரை காத்திருந்திருக்கலாம்.  ஆனாலும், ஆங்காரம் அடங்கவில்லை. ஆத்திரத்தில் புத்தக அலமாரியில் கிடக்கும் தாம் எழுதிய புத்தகங்களைக் கீழே தள்ளினார். எரித்துவிடலாமா? என்றொரு யோசனை எழுந்தது. ஆனால் இப்போதெல்லாம் எழுத்தாளர் பிரதி ஐந்துதான் கொடுக்கிறார்கள் என்பது உரைத்ததும், இந்தத் திட்டத்தைக் கைவிட்டார். 

கிடாரத்தின் சைக்கிள் ஓசையைக் கேட்டதும், உடல் மேலும் முறுக்கேறியது. பத்துக்குப் பத்தடி அறையில், இரண்டு எட்டு வைத்தால் சுவரில் முட்டிக்கொண்டு திரும்ப வேண்டியது மேலும் ஆத்திரத்தை அளித்தது. தான் இந்தச் சுவருக்குள், இந்த உடலுக்குள், இந்தக் காலத்திற்குள், இந்த வெளிக்குள் சிக்கியிருப்பதை முதன்முறையாகப் பழுவேட்டையர் உணர்ந்தார். மண்டியிட்டு ஓவெனக் கதறி அழுதார். (மனதிற்குள் மட்டும்.) கிடாரம் அவருடைய அமைதியின்மையைப் பார்த்துக் குழம்பினான். நெருங்கிப் பேச வாயெடுக்கும்போது பழுவேட்டையர் இன்னும் வேகமாக நடந்தார். இரண்டு மூன்று முறை குரலைச் செருமிக் காட்டினான். பழுவேட்டையர் நடை தளரவில்லை. ஆவேசம் கூடிக்கொண்டே போனது. “அண்ணே உங்களுக்கு விருது அறிவிச்சுருக்காக,” எனக் கத்க்ச் சொன்னான். சட்டென நின்று உடல் இறுக்கம் தளர்ந்து தழைந்து, “எவ்வளவு?” என்றார். “யாரு.. எங்கன்னு கேக்க மாட்டீகளா? எவ்வளவுன்னு கேக்குறீக?” என்றான் கிடாரம். “சரி யாரு, எங்க, எவ்வளவு?” 

”ரொம்ப கோவமா அங்கையும் இங்கயும் நடந்தியே அதான் சும்மா  சொல்லிப் பாத்தேன்” என்றான் நிதானமாக. 

ஜன்னல் மேடையில் வைத்திருந்த சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். 

“என்னண்ணே  விஷயம்? இம்புட்டு டென்ஷனா இருக்கிக.”

வானத்தைப் பார்த்துப் புகைத்த பழுவேட்டையர் சட்டெனத் திரும்பி, “நாமெல்லாம் சுத்த ஃபெக்குடா,” என்றார். “நெசத்துல நமக்கு என்ன வீரம் இருக்கு, நியாயம், நீதி நேர்மை, அறம் ஒரு இழவும் இல்லடா, வெறும் அட்டக்கத்தி.”

“அண்ணே ராத்திரி என்ன படம் பாத்த.. இல்ல எதுவாச்சும் கத படிச்சியா? சும்மா  விடு,  இதெல்லாம் மாசமாசம் வாறதுதானே.”

காற்று இறங்குவதை உணர்ந்தார் பழுவேட்டையர். மௌனம் ஒரு பனிப் பாறையாக அவர்களை இறுக்கியது. (பழுவேட்டையர் சென்னையைத் தாண்டியது இல்லை என்றாலும், பனிப் பாறையைப் பார்த்தது இல்லை என்றாலும்கூட, சம்பிரதாயத்தை மதித்து எழுதப்பட்டது.) “இது அது இல்லடா.. இட்ன்ஹா தடம் நெசமாலுமே குடையுது.. ஒரு இடத்துல தங்க முடியல..  இந்த ஆர்சிம்பால்டி பய புள்ளையப் பாரு கொண்டே போட்டான்…”

பழுவேட்டையரின் மாமா முனியாண்டிதான் கொலைக் கேசுக்காகச் சிறையில் இருப்பவர். ஆனால், ஆர்சிம்பால்டி என்பது நம்ம பக்கத்துப் பேரில்லையே, இது ஏதோ புத்தகக் கோளாறாத்தான் இருக்கும் என யோசித்தான் கிடாரம். யாரு கண்டா, தன்னுடன் ஹாக்கி விளையாடிய சிநேகிதனின் பெயர் கரிபால்டி பழனி. அந்த மாதிரி எதாவது பெயராக இருக்குமோ என எண்ணி எதையும் கேட்காமல் விட்டான். 

“உனக்கு நான் சொல்லுறது விளங்காது. அத விடு, உன்னாண்ட  கேக்குறேன், நீ சொல்லு, உனக்குச் சரின்னு பட்டதுக்காக எவனையாவது கொன்னுருக்கியா? உசுரக் கொடுத்துப் போராடி இருக்கியா? இந்த அர்டுரோ பய எதிர்மற விமர்சனம் வரப்போவுதுன்னு தெரிஞ்சதும் விமர்சகன் கூட கத்தியத் தூக்கிட்டு ஒண்டிக்கு ஒண்டி நிக்கிறான். நாம என்னடா செஞ்சிருக்கோம், அவனுக சொல்லுறத கேட்டுகிட்டு பல்ல காமிச்சிகிட்டு கிடக்கோம்”

“உனக்கே தெரியும், நா ரொம்பக் கோவக்காரன், பொருள் எடுத்தா ரத்தம் பாக்காம உள்ர வெக்கிறது இல்ல, தாயிலி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, சோலிய முடிச்சுபிடுவோம், இதெல்லாம் என்ன எளவுக்குன்னுதான்  விமர்சனம் வாசிக்கிறது இல்ல, பய புள்ளைங்க பயந்துட்டு நம்மளப் பத்தி எதுவும் எழுதுறதும் இல்லன்னு வையி.. நாம படிக்காததுனாலதானே பல பேரு உசுரோடையே திரியுறாய்ங்க” என்று நிதானமாகச் சொன்னான். 

கிடாரம் சிரிக்கிறானா என அவனுடைய முகத்தை நோக்கினார் பழுவேட்டையர். ஆனால் அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.  எரிச்சலடைந்த பழுவேட்டையர் சட்டென உரத்த குரலில் “எப்பப் பாரு உனக்கு விளையாட்டு, நான் இங்கே தவிச்சுகிட்டுக் கிடக்கேன்.. இப்புடி பூரா பயலுவளும் மொண்ணை ஆயிட்டா என்னடா ஆவுறது .. என்னமாவது செய்யணும்டா.”

பழுவேட்டையர் தலைகுனிந்து தரையை நோக்கிக் கொண்டிருந்தார். கிடாரத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சில வினாடிகளுக்குப் பிறகு சீறும் ஒலி மட்டும் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தார். கிடாரத்தின் உடல் நடுங்கி மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. சந்நதம் கொண்டவன் போலிருந்தவனைக் கண்டபோது பழுவேட்டையருக்க்ச் சிலிர்த்தது. நடுங்கும் குரலில்.  

 “மொண்ண பயன்னு சொல்லிபுட்ட இல்ல.. என்னைய மொண்ண பயன்னு சொல்லிட்ட.. சரி விடு.. செஞ்சிரலாம்ண்ணே,  என்ன செய்யோனும் சொல்லு.. யாரச் செய்யணும் சொல்லு.”

“அறத்துக்காக என்னமாவது செய்யணும்டா… அநீதிய அழிக்கனும். அக்கிரமத்த அடக்கணும்.”

“சிஎம்மப் போட்ருவமா ?”

பழுவேட்டையருக்குக் குப்பென வியர்த்தது. 

“கிடாரம்..அவர எதுக்குடா போடணும்,”என நிதானமாக அவனுடைய தோளைத் தொட்டார்.

கையைத் தள்ளிவிட்டவன், விருட்டென நிமிர்ந்தான். ஆவிப் பிரவேசம்  நிகழ்ந்ததுபோல் செந்தமிழில் ஆவேசமாகப் பேசத் தொடங்கினான், “இந்த சமூகம் ஆபாசமானது. சுயநலமானது. கயமை நிறைந்தது. இந்த மக்கள் இழிவானவர்கள். அன்பு எனும் பாவனையைப் போர்த்தி ஏமாற்றித் திரிபவர்கள். கருணையற்றவர்கள். சுரனையற்றவர்கள். தன்மானமற்றவர்கள். அண்டிப் பிழைப்பவர்கள். அழித்து வாழ்பவர்கள். உண்டு பெருக்கிக் கழித்து என வேறு எந்த நோக்கமும் இல்லாதவர்கள். தூய்மையானது என எதையும் விட்டு வைக்காதவர்கள். எல்லாவற்றையும் களங்கப்படுத்தும் அற்பர்கள். வாழத் தகுதியற்றவர்கள். அசிங்கம் பிடித்தவர்கள். கீழ்மை நிறைந்தவர்கள். இவர்கள் இருந்தென்ன வாழ்ந்தென்ன. அழித்து ஒழிப்போம். கொல்வோம்.” கிடாரம் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. அவனுடைய ஆவேசப் பிரகடனம் கேட்ட பழுவேட்டையருக்குக் கண்ணீர் வழிந்தது. அவருடைய  வீடிருக்கும் சாலையில் கடப்பவர்கள் ஒரு நிமிடம் சண்டையை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் அவர்களைச் சூழ்ந்தார்கள். 

“என்னடா சியேம்மு பியேம்முன்னுட்டு.. ரோட்டுல கத்தாதடா,” பழுவேட்டையர் குரல் தழைந்தது. 

“இந்த கேடுகெட்ட சமூகத்துக்குப் பிரதிநிதி யாரு? சொல்லு.. சமூகத்த உலுக்கனும்னா பெருசா இப்புடி எதுனா செய்யணும். எங்கனயாச்சும் உனக்குத் தெரிஞ்ச இடத்துல சாரிச்சு எனக்கொரு வெடிகுண்டு மட்டும் வாங்கிகொடு.. நா கட்டிக்கிட்டு மனித வெடிகுண்டா வெடிச்சுச் சிதறுறேன்.. எனக்காண்டி இத மட்டும் செய்.”

பழுவேட்டையர் அவனை வீட்டுக்குள் பிடித்து இழுத்தார். ஆனால் அவனுக்கு அசுர பலம் வந்துவிட்டது.  

“இப்ப நீ வர்றியா இல்லியா.. இல்லைனாலும் பரவால்ல, நா ஒன்டியாளாப் போறேன்.. நம்ம இலச்சியத்த நிறைவேத்துவேன்.. உன் ஆசீர்வாதம் மட்டும் போதும்,”  என விடுவிடுவெனத் திரும்பினான்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் பின்னாடியே வந்தவர், அவன் கையைப் பிடித்து நிறுத்தினார். கிசுகிசுப்பான குரலில், 

“செய்வோம்டா… மொதல்ல உள்றவா… ப்ளான் செய்வோம்,” எனச் சொன்னதும் உடன் வந்தான். அவனை அமரச் சொல்லி அறையில் இருந்த ஒரேயொரு மேசைக் காற்றாடியை இயக்கி, அதை அவனை நோக்கித் திருப்பி வைத்துவிட்டுக் கதவை உட்பக்கமாகத் தாழிட்டார். ஜன்னலை அடைத்தார். 

சற்று நிதானம் அடைந்ததும், மெதுவாக அவனிடம் பேசினார். “கிடாரம், எடுத்த எடுப்புல சிஎம்முனா என்ன அர்த்தம்? அம்புட்டு பெருசா எல்லாம் யோசிக்கக்கூடாது. கொஞ்சம் சிறுசா செய்வம்.” 

வெடுக்கெனத் திரும்பி அவரிடம், “அப்ப எம்பி ஓகேவா?” என்றான்.

பழுவேட்டையருக்கு வயிறு கலங்கியது.  “அவருக்கும் நமக்கும் தாவா ஒன்னுமில்லையேடா?”

“எப்புடியும் என்னமாவது அநியாயம் செஞ்சிருப்பாரு.. போட்ருவம்,” என்றான் தீர்மானமாக. 

“அதுக்கில்லடா..,” என மென்று விழுங்கிய பழுவேட்டையர் முகத்தில் சங்கடம் அப்பட்டமாகக் குடிகொண்டது.  

“சரி வேணா விடு, நீங்கல்லாம் ஒரு சாதிகாரவுக அதான..”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா.. எடுத்த உடனே பெருசா எதுவும் வேணாம்டா.. கொஞ்சம் சிறுசா எதுனாச்சும் செய்வம்.”

“அப்ப கலெக்டர செஞ்சிருவமா?”

“பெண் பாவம் பொல்லாதுடா.”

“அப்ப எம்எல்எ? இதுக்கு நீ ஒத்துக்குவ. உனக்கு அவனப் பிடிக்காது. போட்ருவமா?” எனப் பெருமிதம் பொங்கச் சொன்னான். 

பழுவேட்டையர் விழித்தார். மாட்டிக்கொண்டதாகப் புலப்பட்டது. 

“மொதமொத செய்றோம்,  இம்புட்டு பெருசா வேணாம்டா.. இன்னும்  கொஞ்சம் சிறுசாப் பாப்போம்டா.”

கிடாரம் சோர்வடையத் தொடங்கினான். அவன் முகத்தில் சலிப்பு குடிகொள்ளத் தொடங்கியது. பழுவேட்டையர் நிம்மதி அடையத் தொடங்கினார். 

கிடாரம், “அப்ப நீயே சொல்லு ?” என்றான். 

“இப்பிடிக்கா.. இலக்கிய உலகத்துல உலாத்துரவனுகளச் செய்வோம். என்ன சொல்லுற?”

“சூப்பர் அண்ணே.”

“இந்த செயமோகன், சாரு, ராமகிருஷ்ணன்..”

“அவிங்கள விடு.. கொஞ்சம் சிறுசா யோசிப்பம்.”

கிடாரம் குழம்பத் தொடங்கினான். “நீயே சொல்லு.”

பழுவேட்டையருக்கு உற்சாகமாக இருந்தது. 

“இந்த அர்டுரோ வழியில செய்வோங்குறேன். கெத்தா திரியுறாய்ங்க பாரு இந்த விமர்சகர்கள்.. அவிங்கள பாப்பம்.. என்ன சரிதான?”

“அப்ப யாரையோ மனசுல நெனைச்சுட்ட.. மொதவே சொல்லித் தொலைச்சிருக்கலாம்ல?”

“இந்தா வாரேன்,” எனப் பழுவேட்டையர் எழுந்து, அலமாரியின் தூசி அடுக்குகளில் இருந்து ஒரு மஞ்சள் நிறக் கோப்பை எடுத்தார். அதில் இரண்டு ஆண்டுகளுக்குமுன் பழுவேட்டையர் நாவலுக்குத் தின சங்கு சனிக்கிழமை இலக்கிய இணைப்பில் வந்திருந்த பெட்டி விமர்சனத்தைக் கத்தரித்து ஒரு பிளாஸ்டிக் தாளில்  வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து ஊதி, தட்டிக் கிடாரத்திடம் நீட்டினார். 

எழுத்தாளர் பழுவேட்டையரின் புதிய நாவல் காலங்களில், அவள் வசந்தம், மல்லிகா எனும் பெண்மணியின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சிறு நகரப் பின்புலத்தில் வைத்துப் பேசுகிறது. மல்லிகா, கணவன் கார்மேகத்தைக் கைவிட்டுக் கல்யாண சுந்தரத்தைக் கைப்பிடித்துக் கடைசியில் இறந்து போவதை உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார் ஆசிரியர். மல்லிகா, கார்மேகத்தைத் தலைமுழுகும் சித்திரம் வைகாசியில் நடப்பதாக எழுதி இருக்கிறார். அப்போது காவேரியில் நீர் இருந்திருக்காது எனும் தர்க்கப் பிழை மட்டுமே எனக்கு உறுத்தலாக இருந்தது. மற்றபடி இது ஒரு நல்ல நாவல். – லேனா 

“மொத்தமா நூறு வார்த்த விமர்சனம், அதுல இருபது வார்த்த தலை குளிச்சதப் பத்தி, எவனாவது வாங்குவானா? அடிச்ச புத்தகம் எல்லாம் அப்புடியே கெடக்கு. அத்தோட மொத்தக் கதையையும் ரெண்டு வரில சொல்லித் தொலஞ்சிட்டான்.. இவன எழுதச்சொல்லி எவனாவது கேட்டாய்ங்களா.. ரெண்டு வருஷமா இவன நானும் சாரிசுகிட்டே இருக்கேன், ஒரு தாக்கலும் இல்ல,” தழுதழுத்தார் பழுவேட்டையர். 

“கவலைப்படாத அண்ணே… இந்த லேனா யாரா இருந்தாலும், எங்க இருந்தாலும்.. எப்புடி இருந்தாலும்.. சரி..  தூக்குவோம்,” எனச் சூளுரைத்தான் கிடாரம்.


.2
லேனா என்கிற லெட்சுமணன் அதற்கு முன்பும், பின்பும் என எங்கும் எந்த விமர்சனமும் எழுதியதாகத் தெரியவில்லை. பத்திரிகை அலுவலகத்திலேயே எவருடைய புனைப்பெயராகவோ இருக்குமோ என யோசித்தார்கள். விடாமல் துப்பறிந்து, லேனா என்கிற லெட்சுமணனுடைய விமர்சனக் கடிதம் வந்த மின்-அஞ்சலைக் கவிஞரான பத்திரிக்கை ஊழியரிடமிருந்து, “அண்ணே நன்றிக் கடிதம் எழுதோணும்ன்னு சொன்னார்,” எனக் கேட்டுப் பெற்றான். அதற்கொரு மின்-அஞ்சல் அனுப்பினான். ஆனால், பதில் ஏதும் வரவில்லை. ஃபோன் கடை செல்வம், வீட்டு விலாசத்தை இணையத்தில் நோண்டி எடுத்துக் கொடுத்தான். “இந்த லேனா பய கடியாவட்டிக் காரன்தான். பேருக்கே சந்தேகப்பட்டேன்.  நம்ம ஏரியா தாண்ணே.. பிடிச்சுடோம்ல,” எனப் பெருமை பொங்கச் சொன்னான். “ஒரே நாள்.. போறோம் தூக்குறோம்.. அம்புட்டுதான் ப்ளான்,” என அவனே முடிவு செய்து, அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு  நாள் குறித்தார்கள். “நம்ம ராதிகா சலூன் மெய்யப்பன்  அண்ணனூட்டு.. ஆட்டையப் போட்டேன்,” என இரண்டு சவரக் கத்திகக்ச் சனிக் கிழமை மாலையே கொண்டுவந்தான் கிடாரம். 

இருவருமாகப் பழுவேட்டையரின் டிவிஎஸ்ஸில் புறப்பட்டார்கள். கிடாரம் வண்டியை முறுக்கினான். ஸ்ரீராம் நகர் கேட்டைத் தாண்டியதும் பழுவேட்டையர் மெதுவாக அவனிடம், “இங்கேர்ரா இப்ப கொல்லவெல்லாம் வேண்டாம்.. கேட்டுக்க, கொஞ்சம் சிறுசா செய்வோம், சும்மா மொவத்துல, கையில, காலுல அப்புடியிப்புடி கீறி மட்டும் விடுவம்,” என்றார். கிடாரம் எதுவும் சொல்லாமல் வண்டி ஓட்டுவதிலேயே குறியாக இருந்தான்.  கொத்தமங்கலத்தைத் தாண்டியவுடன் இன்னும் சன்னமான குரலில்,  “இப்ப கீறக்கூட வேண்டாம்டா.. சும்மா மிரட்டிவிட்டு வந்துருவோம், நாலு சாமான் செட்டத் தூக்கிப் போட்டு உருட்டிவிட்ருவோம்… பயபுள்ள ஆஃப் ஆயிருவான்.. சரியா,” என்றார். இதற்கும் அவன் எதுவுமே சொல்லவில்லை. அது பழுவேட்டையரைக் கலங்கடித்தது. கடியாபட்டியில் நுழைந்ததும் லேசாகப் படபடக்கத் தொடங்கியது. “கிடாரம், இன்னிக்கு உள்ற போவ வேணாம், என்னமோ சகுனம் சரியில்ல, வண்டியக் கெளப்பும்போது பூனை குறுக்க ஓடிருச்சு… ஆளு யாரு, எப்புடின்னு நோட்டம் மட்டும் விடுவம்,” என்றார். கிடாரம் வழக்கம்போல் மௌனம் பேணினான்.

விசாரித்துத் தெருவுக்குள் நுழைந்தார்கள். “நான் இங்கனயே நின்னுக்குறேன்…. ஆத்திரத்துல குத்திகித்தி புட்டேன்னா வையி, நீ போய்ப் பாத்துட்டு வா,” என்றார். புளிய மர நிழலில் வண்டியை நிறுத்திக்கொண்டு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார். சுற்றிலும் நோட்டம் பார்த்தார். உச்சி வெயில். காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. தெருவின் மறுமுனை வெகு தூரத்தில் இருந்தது. ஆனால், ஏழெட்டு வீடுகள்தான் இருக்கும். கிடாரம் இறங்கி அடையாளம் சொல்லப்பட்ட மூன்றாவது வீட்டை நோக்கிச் சென்றான். பழுவேட்டையர் படபடப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றார். வீட்டின் அருகே சென்றவன் இவரை திரும்பி நோக்கினான். சட்டென வீட்டிற்குள் நுழைந்தான். போகாதே போகாதே என இங்கிருந்து கையசைத்தார்.

பழுவேட்டையருக்குத் தலை கிறுகிறுத்தது. டிவியெஸ்சைத் திருப்பி, ஏறி அமர்ந்து தயார் நிலையில் நின்றார். இரண்டு நிமிடங்களில் கிடாரத்தின் குரல் உரக்க ஒலித்தது. “அண்ணே இங்கன வா,” என வாயிலில் நின்று கையசைத்துக் கூவினான். “போதும்டா நீ இங்க வா,” எனச் சைகையில்  பதில் சொன்னார். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. “அண்ணே உடனே வா,” எனக் கத்தினான். அப்போது உள்ளிருந்து வேட்டியை மடித்துக் கட்டிய வேறொருவர் எட்டிப்பார்த்தார். பின்னர் அவரும், “இங்க வாங்கண்ணே,” என்று அழைத்தார். வண்டியை உருட்டிக்கொண்டு வேறு வழியின்றி வீட்டை நெருங்கி வந்தார். கிடாரமும் அவரும் உள்ளே சென்றார்கள். இப்போதுகூட சிக்கல் இல்லை தப்பித்து ஓடிவிடலாம். கிடாரம் எப்படியும் வந்துவிடுவான் எனத் தோன்றியது. வண்டியைத் திருப்பலாம் என யத்தனிப்பதற்குள் உள்ளே சென்றவர் வெளியே வந்து அவருக்காகக் காத்து நின்றார். “சீக்கிரம் வாங்கண்ணே,” என்று கையசைத்தார்.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். கனமான இரும்புக் கிராதிக் கதவில் மயில் தோகை விரித்து நின்றது. வீட்டு முகப்பில் சுதைச் சிற்பமாகக் கண்ணன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். “அப்பச்சி இப்பத்தான் வந்தாக,” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார். பெரிய தூண்கள் உள்ள திண்ணையில் கிடாரம் அமர்ந்திருந்தான். கண்ணால் அவனிடம் பேச முற்பட்டார் ஆனால், அவன் கவனிக்கவில்லை. முற்றம் உள்ள இரண்டாம் கட்டிற்குள் மூவரும் நுழைந்தார்கள். அங்கு இரண்டு அலமாரி நிறையப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. முற்றத்தில் வெயில் இடப்பக்கமாகச் சாய்ந்திருந்தது. கருங்கல் தரையில் மிளகாய் காய வைத்திருந்தார்கள். நான்கு  மூலைகளிலும், மழை நீரைப் பிடிக்கக் காது வைத்த குண்டான்கள் இருந்தன. மரப் படிகள் கொண்ட மாடிக்குச் சென்றார்கள். திறந்து கிடந்த மூன்றாவது அறைக்குள் நுழைந்தார்கள். “இதத்தான் அண்ணே இறக்கணும்.” என்று ஒரு பிரம்மாண்ட பழைய பர்மா தேக்குக் கட்டிலைக் காண்பித்தார். “ஆளுக வரல, எதேச்சையா நீங்க வந்தீக, படியில கொண்டார முடியாது, கயிறக் கட்டி முத்தத்துல இறக்கிருவோம், கொஞ்சம் ஒத்தாச செய்ங்க,” என்றார்.

பழுவேட்டையர் குழப்பத்துடன் கிடாரத்தைப் பார்த்தார். கிடாரம் கட்டிலைப் பிணைக்கத் தொடங்கியிருந்தான். இரண்டு பக்கமும் கட்டி மெதுவாகத் தூக்கி மூவருமாக அதைக் கீழே இறக்கினார்கள். பழுவேட்டையருக்கு மூச்சு வாங்கி நெஞ்சு அடைப்பதுபோல் இருந்தது. கீழே இறங்கிய மூவரும்  கட்டிலைத் தூக்கிக்கொண்டு பின்கட்டிற்குச் சென்றார்கள். வீடு ஆளரவமற்றுத் துப்புரவாக இருந்தது. மூன்றாம் கட்டில், சாய்வு நாற்காலியில் நெஞ்சு வரை ஏற்றிக்கட்டிய வேட்டியுடன் நரைத்த மார்முடியுடன், வழுக்கைத் தலைத் தாத்தா ஒருவர் சாய்ந்திருந்தார். பழைய கால மர நாற்காலியின் கைப்பிடிக்குக் கீழே மூத்திரப்பை கிடந்தது. வாய் பிளந்து உறங்கி கொண்டிருந்த அவரைக் காணும்போது இறந்து கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. அவரருகே அமர்ந்திருந்த கெச்சலான முதிர்ந்த ஆச்சி, ஓர் அறையைத் திறந்துவிட்டார். சற்று மெனக்கெட்டு கட்டிலை உள்ளே கொண்டு  சென்றார்கள். பின்னர் தயாராக இருந்த நீர் மெத்தையை அதன்மீது கிடத்திக் கிழவக்ச் சுமந்து சென்று, அதில் சாய்வாகக் கிடத்தினார்கள்.

கிழவரைத் தொட்டுத் தூக்கும்போது கண்ணை வெறித்துப் பார்த்தார். அவருடைய வெறிப்பு பழுவேடையரைச் சற்று நிலைகுலையச் செய்தது. “பாத்து ண்ணே,” என்று கிடாரம் கூவி எடையை வாங்கிக்கொண்டு விழாமல் பார்த்துக்கொண்டான்.  பின்கட்டு முற்றத்தில் மூச்சிரைக்க மூவரும் அமர்ந்தார்கள்.  “வேல கெடக்கு நன்றிண்ணே,” எனச் சொல்லிவிட்டுப் பழுவேட்டையரை உள்ளே அழைத்தவர் கிளம்பிச் சென்றார். ஆச்சி ரவிக்கைக்குள் கைவிட்டு எடுத்த மணிபர்சில் இருந்து இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை நீட்டினார், “சமயத்துல உதவியா வந்தீக தம்பிகளா.” “இருக்கட்டும் ஆச்சி, அய்யாவுக்கு என்ன ஆச்சு?”  

“அதாச்சுப்பா ரெண்டு வருஷம் .. அய்யா வயசு காலத்திலேந்து பொஸ்தவமும் கையுமாவே திரிவாரு, இப்பிடித்தான் எவனோ ஒரு கேடுகெட்ட பயலோட பொஸ்தவத்தப் படிச்சு அதப்பத்தி பத்திரிகைக்கு எழுதிப் போட்டாரு.. அதுவும் இவரா செய்யல, எம்புட்டு வருஷம்தான் படிச்சுகிட்டே இருப்ப, அப்பப்ப எதாவது எழுதுன்னு இவரோட சிநேகிதர் உசுப்பேத்தி விட்டார்.. தின சங்குல அவருக்குத் தெரிஞ்ச ஆளு இருக்காங்க, நான் சொல்லுறேன்னு ஒத்துக்க வைச்சார்.. அம்புட்டுத்தான்… மக்ஞா நாள் காலேல சோத்தாங் கையும் காலும் விழுந்து போச்சு, பாக்காத வைத்தியமில்ல, அடையாறுல மவன் வீட்டுல இருந்துட்டு இன்னிக்கிதான் வாரோம். சாவுற காலத்துல சொந்த வீட்டுல இருப்போம்னுதான்” என்றார் பெருமூச்சுடன். 

பழுவேட்டையருக்கு வியர்வையில் உடல் குளிர்ந்தது. “காப்பித் தண்ணி கொடுக்கலாம்னா பால்கூட இல்ல தம்பி. இனிமேதான் வாங்கியாரனும்,” என்றார். “தம்பிய ஒத்தாசைக்கு வெச்சுக்குங்க, இந்தா வாரேன்” எனச் சொல்லிவிட்டு எழுந்துபோன பழுவேட்டையர் சற்று நேரத்திற்கு எல்லாம் ஒரு பால் பாக்கெட், ஹார்லிக்ஸ் டப்பா, ரெண்டு சாத்துக்குடி , ரெண்டு ஆப்பிள் என ஒரு பையில் வாங்கிகொண்டு, ஆச்சியுடன் கிழவர் இருந்த அறைக்குள் சென்றார். வாய் பிளந்து மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார் கிழவர். காலடியில் நின்று, “எதுவும் தப்புத்தண்டா செஞ்சிருந்தா மன்னிச்சுக்குங்க,” எனச் சன்னமாக முனகினார் பழுவேட்டையர். சட்டெனக் கண் விழித்தவரின் முகத்தில் குழப்பமா, குரோதமா என விளங்கிக்கொள்ள முடியாத உணர்வு. மீண்டும் கண்ணை மூடி வாயைப் பிளந்து உறக்கத்தைத் தொடர்ந்தார். “டவுனுக்குப் போவணும், இன்னொரு நாள் வாரோம்,” என ஆச்சியிடம் அவசரம் அவசரமாக விடைபெற்று வெளியேறியபோது முழுவதுமாக இருட்டியிருந்தது. கோட்டையூர் வரும்வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. “எவனோ ஒருத்தன் நாவலுக்குள்ள சூனியம் வெச்சிருக்கான், எம்புட்டு பவரு பாத்தியா,” என்றான் கிடாரம். பழுவேட்டையர் வண்டியைத் தாமரைக் குளத்திற்கு அருகே நிறுத்தி, ஆல மரத்தின் அடியில் அமர்ந்து, வேட்டி மடிப்புக்குள் இருந்து ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு குளத்தில் தாவிக்கொண்டிருந்த தவளைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கிடாரம், “எது எப்புடியோ, நெனைச்ச காரியத்த முடிச்சோம், லேனாவத் தூக்குனோமா இல்லியா?” என்றான்.

No comments:

Post a Comment