புத்தகங்கள்

Pages

Thursday, July 16, 2020

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு

வெண் முரசு இன்றுடன் நிறைவுற்றது. ஏழாண்டுகள் ஒரு படைப்புடன் பின்னி பிணைந்து கடந்திருக்கிறோம். நாவலின் இறுதியில் வெண் முரசு பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு முரசறைபவன்  நிறுத்தி விட்டான் அதன் கார்வை அதை வாசித்தவர்களுக்குள் விதிர்த்தபடி இருக்கும். மீண்டும் மீண்டும் என இனி வருங்காலங்களில் பல்கி பெருகி செவி நிறைத்து அகம் நிறைக்கும். அளவிலும் தரத்திலும் ஒரு பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. வணங்குகிறேன்  

வெண் முரசை பற்றி எவர் எழுதினாலும் அதன் அளவை பற்றி பெரு வியப்புடன் இன்றி குறிப்பிட முடியாது. 1932 அத்தியாயங்கள் கொண்ட 26 நாவல்கள், 25000 த்திற்கு அதிகமான பக்கங்கள். இவை நமக்கு பெரும் மலைப்பை அன்றி வேறு எதையும் தராது.  ஒரு நாளைக்கு ஆறு அத்தியாயங்கள், அதாவது சுமார் அறுபது பக்கங்கள் வாசித்தால் ஒரு வருடத்தில் இந்த நாவல் வரிசையை முடிக்க முடியலாம். இந்த மலைப்பின் மறுபுறம் எழுத்தை எழுதிய அளவை கொண்டு மதிப்பிடக் கூடாது. அதன் தரத்தை கொண்டு தான் மதிப்பிட வேண்டும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சரியான ஏற்புடைய வாதம் தான். 

வெண் முரசு ஒரே நேரத்தில் நவீன இலக்கிய பிரதியாகவும் காப்பியமாகவும் உருக்கொள்கிறது என்பதே இதை அணுகுவதில் விமர்சிப்பதில் நமக்கு  சவாலை அளிக்கிறது. காப்பியம் போல் இதை அணுக்க நூலாக, ஏறத்தாழ ஒரு பக்தி நூலாக வாசிக்கக்கூடிய ஒரு பரப்பு உருவாகி உள்ளது. அங்கே எந்தவகையான விமர்சனங்களும் செல்லுய்படியாகாது. நானும் வெண் முரசை அப்படியே வாசித்து வருகிறேன்.   ஆனால் நவீன இலக்கியப்பிரதியாக  வெண் முரசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பு அல்ல. சில பிசிறுகளை, தர்க்கப் பிழைகளை,, ஒர்மையின்மைகளை சுட்டிக்காட்ட புளங்காகிதம் அடையலாம். பெரும்பாலும் விமர்சனம் எனும் பேரில் இவையே நிகழ்கின்றன. இந்த கதைப்பெருக்கில் இவற்றுக்கு எவ்வித பொருளும் இல்லை. அடுத்த சுற்றில் நவீன இலக்கிய பிரதியாக இதை அணுகி வாசிக்க முயல வேண்டும் என்பதே திட்டம்.

மற்றொரு வகையான விமர்சனம் என்பது மூலநூல் வாதம் சார்ந்தது. மூல நூலில் இல்லாதவற்றை எழுதுகிறார் என திரும்ப திரும்ப சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்விமர்சனமும் பொருட்படுத்தத்தக்கதல்ல. நவீன இலக்கிய தளத்தில் நின்று இதற்கு பதில் அளிக்கலாம் என்றால், ஊகப் புனைவு  போன்றவையெல்லாம் புழங்கும் சூழலில் துரியோதனன் வென்றதாக கூட ஒருவர் தலைகீழாக மாற்றி எழுத முடியும். மகாபாரதம் என தலைப்பிடாமல் தனித்த ஆக்கமாக முன்வைத்தால் போதும். மரபான தளத்தில் நின்று இதற்கு மற்றொரு வகையில் பதில் அளிக்கலாம். .மகாபாரதம் என்பதே  பல கதைசொல்லிகளின், பல்வேறு நிலப்பரப்புகளில் தொல்கதைகளின் தொகுப்பு. மதுரையில் ஒருவர் எதற்காக அர்ஜுனனுக்கும் அல்லிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்? துரியன் மரணத்தை கூத்தாக இங்கு எதற்காக நிகழ்த்த வேண்டும்? கர்ணனுக்கு பொன்னுருவி என ஒருத்தியை ஏன் மணமுடித்து வைக்க வேண்டும்? காளிதாசனின் சாகுந்தலை எல்லாம் மூல நூலுக்கு உட்பட்ட பிரதியா? மீளுருவாக்கம் என்பது எப்போதும் நிகழ்த்துக்கொண்டே இருப்பது. நவீன இலக்கியம் என கொண்டாலும் கூட பருவம், இரண்டாம் இடம், நித்ய கன்னி, யயாதி என இவையாவும்பாத்திர வார்ப்புகளில் கணிசமாக மாற்றங்களை செய்துள்ளன. இதிகாசங்கள் ஒரு மிக நீண்ட ரயிலை போல்.. காலந்தோறும் அதில் சில பெட்டிகள் இணைக்கப்பட்டபடி உள்ளன. இவற்றை அனுமதித்து செறித்து உருமாறி வளர்வதே இந்திய இதிகாசங்கள் சாமானிய மக்களுடன் கொண்டிருக்கும் தொடர்புக்கான சான்று. இங்கே எப்படி சார் ஜடாயு கிடந்திருக்க முடியும், வால்மீகி அப்படி சொல்லலையே  என திருப்புல்லாணியில் ஒருவர் கேட்டால் அவருக்கு என்ன பதில் அளித்து விட முடியும்? மகாபாரதத்தை ஒற்றை மூல நூலாக ஐந்தாவது வேதமாக காண்பதற்கு இடமுள்ளது போலவே பெருகி ஓடும் நதிபரப்பாக கான்பதற்குமிடமுண்டு. 

அடுத்த விமர்சனம் என்பது சமகாலத்தை விட்டுவிட்டு ஜெயமோகன் என்றோ எழுதப்பட்ட ஒரு கதையை எதற்காக வீணாக மீள எழுதுகிறார்? பல இலக்கியவாதிகளும் இந்த விமர்சனத்தை உண்மையான அக்கறையின் பேரில் எழுப்பி இருக்கிறார்கள்.  ஜெயமோகன் தற்காலத்தை எழுதக்கூடாது என சொல்கிறார் என திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. வெண் முரசின் தொடர் வாசகராக ஒன்றை சொல்ல முடியும். ஜெயலலிதா மறைவு தொடங்கி பெரும்பாலான சமகால நிகழ்வுகள் வெண் முரசில் பேசப்பட்டுள்ளன.இலக்கியத்தை பற்றி ஒரு அபார வரி உண்டு. சொன்னவர் ஹெரால்ட் ப்ளூமாக இருக்க வேண்டும். In literature what is present need not be contemporary. ஜெயமோகன் இன்றைய நிகழ்வுகளை எழுதுவதில்லை, ஆனால் அதிலிருந்து ஒரு சாரமான கேள்வியை எடுத்துக்கொண்டு அவற்றை புனைவுகளில் விசாரணைக்கு உட்படுத்துகிறார். நிகழ்வுகள் செய்தி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். எழுத்தாளர் இந்த நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக உடனடியாக ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு எழுதுவதைத்தான் அவர் விமர்சிக்கிறார். செய்திகள் நாளுக்கு நாள் மாறுபடும். ஒரு அன்றாட செய்தியிலிருந்து அதன் அடியாழத்தை தொட முடிகிறதா? அதை எக்காலத்திற்கும் உரிய கேள்வியாக மாற்ற முடிகிறதா? அல்லது குறைந்தபட்சம் இந்த தலைமுறையின், இந்த காலக்கட்டத்தின் கேள்வியாக மாற்ற முடிகிறதா என்பதே கேள்வி. வெண் முரசை முழுவதுமாக வாசித்த ஒருவர் அதில் எத்தனை சமகால விஷயங்கள் வேறு வேறு கோணங்களில் பிரதிபலித்துள்ளன என்பதை அறிய முடியும். இவையாவும் எடுத்துக்கொண்ட கதை களத்திற்கு பொருத்தமாகவும் கையாளப்பட்டுள்ளன. 

அடுத்ததாக இந்நாவலின் வடிவம் சார்ந்து, அமிஷ் நாவல்களை போல இவை மிகை புனைவு, கடந்த கால பெருமையை பேசுபவை என ஒரு விமர்சனம் கூறப்பட்டது. வெண் முரசின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அது ஒரே சமயத்தில் குழந்தை கதையாகவும் மெய்ஞான கதையாகவும் பரிணாமம் கொள்வது தான். நாவலில் அபாரமான மிகு புனைவு பகுதிகள் உண்டு. சட்டென ஷண்முகவேல் வரைந்த கார்கோடகன் ஓவியம் மனதில் எழுகிறது. ஆனால் இதே நாவல் வரிசையில் தான் இமைக்கணம், சொல்வளர்காடு போன்ற மிக கனமான நாவல்களும் உள்ளன. முழுக்க முழுக்க செவ்வியல் தமிழில் கவிதைக்கு வெகு அருகே உள்ள மொழியில் எழுதப்பட்ட நீலத்திற்கு முன்னர் உள்ள நாவல்களில் ஒன்றான மழைப்பாடல் முழுக்க முழுக்க யதார்த்த தளத்தில் ஒரு தால்ஸ்தாய் நாவலின் தன்மையை கொண்டிருக்கிறது. 

இவையெல்லாம் போக இந்துத்துவத்திற்கு ஆதரவான எழுத்து என இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கருதி வாசிப்பை புறக்கணிக்க வலியுறுத்தினர். தொன்மம் என பழமையை மீட்டுருவாக்க மனுநீதியை நிலைநாட்ட வந்த நூல் என கருதினர். இதற்கு என்னிடம் இருக்கும் பதில் முழு நாவலையும் வாசித்து நீங்கள் முடிவிற்கு வாருங்கள். பாரதத்தில் இல்லாத அளவிற்கு வெண் முரசில் தமிழ் அடையாளங்கள் வருவதால் இது தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரதி என்றொரு விமர்சனமும் உண்டு. இந்த விமர்சனத்திற்கும் வாசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். இந்துத்துவர்கள் மூல நூல் பிறழ்வு, வியாசர் மாதிரியான ரிஷியுடன் மானுட பிறவியான ஜெயமோகன் தன்னை இணை வைக்கலாமா? என வேறு வகையான விமர்சனங்கள். அவர்களிடம் இந்தவகையான அரசியல் காரணிகளை தாண்டி வாசிக்கும் திண்மை இருந்தால் முயன்று பாருங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். இத்தனை பிரம்மாண்டமான பிரதியை நமக்குகந்த அரசியலை கொண்டு புறக்கணிப்பது ஆக எளிய வழி. சரியாக சொல்வதானால் சோம்பேறித்தனமான வழி.  

 இந்த ஏழு ஆண்டுகளில் அந்தந்த ஆண்டு சிறந்த நாவல்களின் பட்டியல்களில் நான் உட்பட வெண் முரசு வாசகர்கள் பலரும் பட்டியலில் வெண் முரசை தவிர்த்துவிட்டே பிற ஆக்கங்கள் குறித்து பேசுகிறோம். அசவுகரியமாக இருந்தாலும் கூட நேர்மையாக இன்று தமிழின் முதல் பத்து சிறந்த நாவல்கள் என ஒரு பட்டியல் இட்டால் அதில் பத்து இடங்களும் ஜெயமோகனுக்கே செல்லும், பெரும்பாலானவை வெண் முரசு நாவல்களாகவே இருக்கும். இதை அதிக பிரசங்கித்தனமாகவோ, உணர்ச்சிவசப்பட்டோ கூறவில்லை. 

ஒரு நல்ல படைப்பென்றால் அது என் கனவிற்குள் ஊடுருவ வேண்டும் என்பது எனக்கிருக்கும் ஒரு எதிர்பார்ப்பு. இந்த ஏழு வருடங்களில் வெண் முரசு பலமுறை என் கனவுகளுள் புழங்கியுள்ளது. வெண் முரசின் பல்வேறு கதை மாந்தர்களுடன் என்னை வெவ்வேறு தருணங்களில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இலக்கியம் வாசிப்பதும் எழுதுவதும் தன்னை அறிதலின் ஒரு பகுதி என நம்புகிறேன். முன்னர் விஷ்ணுபுரமும் இப்போது வெண் முரசும் எனக்கு என்னை காட்டித்தந்தன.  

வெண் முரசை ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும்?

நிகர் வாழ்வு- முதன்மையாக புனைவு என்பது நிகர் வாழ்வு வாழ செய்வது. குமரி நிலம் தொட்டு கங்கைக்கரை வடகிழக்கு, இமையமலை, குஜராத், காந்தாரம் என விரிந்த நிலக்காட்சிகளை வாழ்வனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்வை கண்ணுக்கு முன் நிகழ்த்தி காட்டுகிறது. அதில் நம்மையும் ஒரு பகுதியாக ஆக்குகிறது. 

மொழி- புதிய சொற்கள், சொல் இணைவுகள், வழக்கொழிந்த சொற்களின் மீள் பயன்பாடு. வெண் முரசு தமிழுக்கு அளித்த சொற்கொடை அளப்பறியாதது, நவீன இலக்கியத்தில் இதுவரை இல்லாதது. நண்பர்களின் ஒரு கணக்குப்படி 38.5 லட்சம் சொற்கள் வெண் முரசில் உள்ளன என்கிறார்கள். 

கதை மாந்தர்கள்- கதை என்பது என்னவும் செய்யலாம் முதன்மையாக அது சில கதை மாந்தர்களை நமக்கு அறிமுகம் செய்து நம்முள் வளர்த்து எடுக்கிறது. வெண் முரசின் கதை மாந்தர்கள் தனித்துவமானவர்கள். துரியோதனனும் திருதராஷ்டிரனும் சிறுமை அண்டாதவர்களாக நாவல் முழுவதும் திகழ்கிறார்கள். துரியனுக்காக கண்ணீர் சிந்திய நண்பர்கள் பலர் உண்டு. நேர்மறை எதிர்மறை என பாத்திரங்கள் துருவ நிலையில் நிற்பதில்லை. நாமறிந்த பாரத கதை மாந்தர்களை தவிர்த்து சில வரிகளில் வந்து செல்லும் கதை மாந்தர்கள் வெண் முரசில் பேருரு கொள்கிறார்கள். விசித்திரவீரியன், அவனுடைய அமைச்சர், பூரிசிரவஸ் , ஜராசந்தன், சாத்யகி ஆகியோர் அபாரமான கதை மாந்தர்களாக உருவாகி வருகிறார்கள். இவைத்தவிர வெண் முரசின் தனித்துவம் என்பது அதில் வரும் சிறிய  கதை மாந்தர்கள். முக்கியமான பங்களிப்புகளை ஆற்றி தனித்தன்மையுடன் திகழ்கிறார்கள். சட்டென நிருத்தன், பிரலம்பன், மாருதன், மாலினி, மாயை போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். கதை மாந்தர்களின் வரைபடம் முதல் நாவல் துவங்கி இறுதி வரை மிகவும் துல்லியமாக உருக்கொள்வதை காண முடியும். 

எழுத்தாளராக என்னுள் சில படிமங்கள் வளர்ந்து கொண்டே செல்லும். நீவி நீவி அதன் அர்த்தங்களை விரித்துக்கொண்டே செல்லலாம். அத்தகைய ஒரு பெரும் படிமத் தொகையை வெண் முரசு உருவாக்கி அளிக்கிறது. சித்ராங்கதன் காணும் குளம், துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை, ரக்த பீஜன், சித்ரகர்ணி,  அர்ஜுனனின் காண்டீபம், கர்ணனின் கவச குண்டலங்கள் என சிலவற்றை உடனடியாக கூற முடிகிறது. 

நாவலின் மெய்யியல் தளம். இந்திய மெய்யியலின் பல்வேறு தரப்புகளை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது. இவற்றை பற்றி தனியே எழுத வேண்டும்.

எழுத்தாளாராக நாவலின் கற்பனை சாத்தியங்கள் மற்றும் உத்திகளை கவனித்தேன். கனிகர் போன்ற ஒரு பாத்திரத்தை முழுவதுமாக உருவாக்கி மொத்த தீமையின் பிரதிநிதியாக இளைய யாதவருக்கு எதிராக நிற்க வைப்பதும், பாஞ்சாலியின் அவை சபதத்தை மாயை எனும் அவளுடைய அணுக்க சேடியின் வழியாக நிகழ வைப்பதும் அபாரமான இடங்கள். இவை சட்டென நினைவுக்கு வருகின்றன. தர்க்க மனம் குழம்பும் பித்து நிலையின் விளிம்பு புலப்படும் அத்தியாயங்கள் உண்டு. எல்லாவற்றையும் தலைகீழாக்கி அபத்தமாக பகடி செய்யும் சூதர் கதைகளும் உண்டு. 

வரலாறு மற்றும் தகவல்களை பயன்படுத்தும் விதம்- வெண் முரசுக்குள் யுங், ஃபிராய்டு,கிராம்ஷி, லாரி பேக்கர், காந்தி, ஜாரெட் டயமண்டு, கால் சாகன் என எல்லோரும் உண்டு என சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். இத்தனை நூற்றாண்டு கால வரலாறு மற்றும் அறிதலை கொண்டு ஒரு தொல்கதையை மீளுருவாக்கம் செய்யும் போது எவற்றை எல்லாம் எந்தெந்த கோணங்களில் பயன்படுத்தியுள்ளார் என ஆராய்வது எழுத்தாளராக மிக முக்கியம் என எண்ணுகிறேன். ஜெயமோகன் இதுவரை வாசித்த, கற்ற அத்தனை நூல்களின் பிரதிபலிப்பும் வெண் முரசில் நிகழ்ந்துள்ளது. 

இன்னும் யோசிக்க யோசிக்க பல காரணங்கள் மனதில் ஊறியபடி இருக்கின்றன. நவீன இலக்கியவாதிகள், நவீன இலக்கிய வாசகர்கள் தவிர்க்க கூடாத பிரதி என வெண் முரசை சொல்வேன். ஆரம்ப மனவிலக்கத்தையும் முன்முடிவுகளையும் கடந்தால் நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வெண் முரசு ஒரு பெரும் ஊக்க சுரங்கம். வெண் முரசு இல்லையென்றால் ஆரோகணம் மாதிரியான ஒரு கதையையோ நீலகண்டம் மாதிரியான ஒரு கதை வடிவத்தையோ என்னால் தேர்ந்திருக்க முடியுமா என தெரியவில்லை. 

எனக்கு வாசிப்பில் விடுபட்ட நாவல்கள் என ஒரு ஐந்து நாவல்கள் உள்ளன அவற்றையும் வாசித்து முடித்துவிட்டு ஒரே மூச்சாக முழு நாவல்களையும் ஒரு முறை மீள் வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன். வேன்முரசை வாசிப்பதற்கான ஒரு துணை நூலை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 

கண்ணுக்கு முன் ஒரு பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. இதை எப்படி வகுக்க போகிறோம்? எப்படி புரிந்து கொள்ள போகிறோம்? இனிதான் வெண் முரசின் தாக்கத்தை நாம் தமிழ் இலக்கியத்தில் உணர போகிறோம்.  







7 comments:

  1. சுநீல் கிருஷ்ணன்.. வெண்முரசு தொடர்ந்து வாசிக்கும் வாசகன்.

    அற்புதமான பதிவு.

    நன்றி

    ReplyDelete
  2. சற்றும் மிகையில்லாத விமர்சனம்.
    உங்களின் துணை நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. மிகச்சிறந்த கட்டுரை...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. மிகவும் செறிவான பதிவு சுனீல் கிருஷ்ணன் சார். வெண்முரசு விவாதத்தளத்தில், எதிர்காலத்தில் குருவை மிஞ்சப் போகும் சீடர்களை அடையாளம் கண்டுகொண்டே இருக்கிறேன். வெண்முரசை அதன் முதல் அத்தியாயத்திலிருந்து அதன் கடைசி அத்தியாயம் வரை தினமும் படித்து மகிழ்ந்தவன் நான். ஆனால், இன்றுவரை ஜெமோ அவர்களுக்கு ஒரு கடிதம் கூட எழுதியதில்லை. என் இயல்பான தாழ்வுணர்ச்சிதான் அதற்கு காரணம். நான் 60 வயது வரை வெறும் வாசகனாவே தேங்கி விட்டவன். இப்போதுதான் எழுதுவதில் குழந்தைநடை நடக்க பழகிக் கொண்டிருக்கின்றேன். இந்த கடிதத்தை வைத்து நீங்களே அதை கண்டுகொள்ள முடியும். வெண்முரசு விவாதத் தளத்தில் எழுதும் வாசகர்களின் கடிதங்கள், என்னுடைய வாசிப்பை மேலும் செறிவாக்கின. உங்களின் அழகான பதிவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம். உண்மையில் வெண்முரசு திரு.ஜெயமோகன் அவர்களின் அனைத்து நாவல்கள், கட்டுரைகள், தத்துவ நூல்கள், அவற்றின் உள்ளடக்கிய விழுமியங்கள் அவரின் தனிப்பட்ட அனுபவங்களினால் அடைந்த முடிபுகள் என அனைத்தும் சேர்ந்த சாரத்தின் திரண்ட வெண்ணெய் போல அமைந்துள்ளது என்பது என் எண்ணம். வெண்முரசு படிக்கும் ஒவ்வொருவருக்கும் ( அவரின் தொடர்ந்த வாசகர்கள்) அவருடைய பிற ஆக்கங்கள் நினைவில் வராமல் படிக்க முடியாது. கொற்றவை, விஷ்ணுபுரம் மட்டுமல்லாது பின் தொடரும் நிழலின் குரல் முதல் உலோகம், ரப்பர், பனி மனிதன் எந்று அனைத்து வகையறாக்களும் உள்ளன.வெண்முரசு படிப்பது ஆசானின் blog-ல் உள்ள அனைத்தையும் சுருக்கி படிப்பது போல.

    ReplyDelete
  6. மிக சிறப்பான கட்டுரை.
    துணை நூலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  7. அன்புள்ள சுநீல் கிருஷ்ணன்,

    முடிவிலாது தொடரும் கார்வை, தொடக்க வாசகர்களுக்கான ஒரு மிக நல்ல அறிமுகம். இதைப்படிக்கும் வாசகர்கள் வெண்முரசைத் கண்டிப்பாக வாசிக்கத் தொடங்குவார்கள். நல்ல வாசகர்கள் வெண்முரசைப்பற்றி தெரியாமலோ, நேரமின்றியோ படிக்காமலிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தூண்டுகோலாக இருக்கும். நன்றி.

    ReplyDelete