Friday, June 19, 2020

மீண்டு நிலைத்தவை

(நவீனின் மீண்டு நிலைத்த நிழல்கள் குறித்து மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை. ஜெயமோகன் தளத்தில் இடம்பெற்றிருந்தது )


யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலில் ஹோமோ சாபியன்ஸ் ஆகிய நாம் நம்மை விட பலசாலிகளான நியாண்டர்தல்களை எப்படி வெற்றி கொண்டு உலகை நிறைத்தோம் என்பதை விளக்குகிறார். சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான ஒரு நரசிம்ம வடிவை மத்திய ஐரோப்ப அகழ்வாராய்வில் கண்டெடுத்ததாக சொல்கிறார். நரசிம்மம் சர்வ நிச்சயமாக ஒரு புனைவு. ஆனால் அவனுக்கு அப்படியான புனைவு ஏன் தேவையாய் இருக்கிறது? புனைவுகள் வழியாகத்தான் அவன் மாபெரும் மக்கள் திரளை ஒருங்கிணைக்க முடிந்தது. கடவுளை, இம்மையை, மறுமையை என ஒவ்வொன்றையும் புனைந்தான். மனித வரலாற்றில் இருமுறை நியாண்டர்தல்களிடம் தோற்றவர்கள் தான் நாம். கலையை பற்றிய மிக முக்கியமான நம் நம்பிக்கைகளில் ஒன்று, மேலான கலை உருவாக உணவு உயிர் பாதுகாப்பு அவசியம். நிறைவு கொண்ட சமூகமே உணவிலிருந்து வாழ்க்கையின் பொருளை நோக்கித் திரும்பும். ஆனால் ஆதி மனிதர்கள் நேரெதிராக நெருக்கடிகளில் புனைவுகளை உருவாக்க முடியும் என்பதை உணர்த்துகிறார்கள். கலை சில சமயங்களில் உணவுக்கு பதிலியாகிவிடவும் கூடும். ஒரு பித்தாக எவரையும் ஆட்கொண்டுவிடும்.



சஞ்சிக் கூலிகளாக கோடிக்கணக்கான தமிழர் ஆங்கிலேய ஆட்சியில் மலாயா, மேற்கிந்திய தீவுகள், மொரிசியஸ், பசிபிக் தீவுகள், தென்னாபிரிக்கா என ஆங்கிலேய அரசின் அத்தனை நிலங்களுக்கும் பிழைப்பிற்காக சென்று சேர்ந்தார்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மா. ஜானகிராமனின் நேர்காணலில் வரும் ஒரு வரி என்னை வெகுவாக அலைகழித்தது- “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வது சாவதற்காக அல்ல. இந்த நாட்டுக்கு வந்து மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு நாட்டை உருவாக்க வந்து உயிர்ப்பலி கொடுத்திருக்கிறார்கள்.” விண்ணை முட்டும் கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் உப்பாக தமிழர்கள் இருக்கிறார்கள்.



சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருது பெற்ற சீ. முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவலைப் பற்றி எழுதிய கட்டுரையில் “பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்திற்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” மண்புழுக்கள் கண்ணுக்கு தெரியாமல் மண்ணுக்கடியில் வாழ்கின்றன. வாழ்ந்து மண்ணை வளமாக்கி எவரும் அறியாமல் உரமாகிச் சாகின்றன. இந்த ரப்பர் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் என கண்காணா நாடுகளில் ஒப்பந்தக் கூலிகளாக பிழைக்கச் சென்ற மக்களுக்கு அந்நாடேகூட ஒரு பெரும் வெகுமக்கள் சவக்குழிதான் என எனக்குத் தோன்றியது. புழுக்களைப் போல் அடையாளமிழந்து மொத்தமாக மண்ணுக்கடியில் மரித்தவர்களின் சிலரின் நினைவுகளை, வாழ்வின் அடையாளங்களை காலத்துக்கு அப்பால் நிறுத்துவதற்கான முயற்சியே இந்நாவல்,.” என எழுதி இருந்தேன். இது அவருடைய நாவலுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. ஒட்டுமொத்த புலம் பெயர் இலக்கியத்தின் அடிநாதம் என கொள்ளலாம்.





புலம் பெயர் இலக்கியத்தின் படிநிலைகள் எவை? அன்னிய நிலத்திற்கு பிழைக்க வந்ததும் தங்கள் வேர்களை நோக்கி நினைவுகள் திரும்புவது இயல்பே. சீ. முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவலில் முக்கிய கதாபாத்திரம் அப்படித்தான் தர்மபுரியில் வாழ்ந்த தன் தந்தையின் மூத்த தாரத்தை நினைவுகொள்வார். பல்வேறு படைப்பாளிகளிடம் நவீன் தமிழக சார்பு அல்லது தமிழக நகலெடுப்பு பற்றி திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இவற்றில் ரெ. கார்த்திகேசுவின் பதில் முக்கியமானது “மலேசிய தமிழ் இலக்கியம் தமிழக இலக்கிய அடிவேரிலிருந்து வளர்ந்ததுதான். அதன் DNA தான் நம் இலக்கியத்துக்குள் இருக்கிறது.” தமிழ் இலக்கியத்தின் நீட்சியாகவும் அதே சமயம் தனித்தன்மை கொண்டதாகவும் திகழ வேண்டிய எதிர்பார்ப்பு மலேசிய இலக்கியத்தின் மீதுண்டு. முதற்கட்டத்தின் சொந்த ஊர் நினைவேக்கத்தில் இருந்து அடுத்தகட்ட பரிணாமம் நிகழ்கிறது. தான் வாழுமிடத்தை தன் சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் அதற்கு அவசியமானவை. மாரியம்மனும், பத்துமலை முருகனும் அப்படித்தான் வந்து சேர்கிறார்கள். அடையாளமிழப்பிற்கு அஞ்சி பண்பாட்டை இறுகப் பற்றுகிறார்கள். முத்தம்மாள் பழனிசாமி புலம்பெயர் வாழ்விலும் சாதிகளாக பிரிந்திருந்த சித்திரத்தை அளிக்கிறார். டாக்டர் ஜெயக்குமார் தேவலாயங்களில்கூட சாதி இருந்தது என்கிறார்.

naveen





பின்னர் ஒரு நுனி தன் பண்பாட்டு தனி அடையாளத்தை துறந்து புதிய வசிப்பிடத்தின் அன்னிய பண்பாட்டில் தன்னை முற்றிலுமாக கரைத்துக்கொள்ள விழைகிறது. அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ நினைவுக்கு வருகிறது. இந்த நிலையில்தான் பிற பண்பாடுகளை உற்று நோக்கத் துவங்குகிறார்கள். அதீத சுயமிழப்பிற்குப் பின் சுதாரித்துக்கொண்டு பண்பாட்டு மீட்பை பேசுகிறார்கள். கோ. சாரங்கபாணியின் தமிழர் திருநாள் முன்னெடுப்பு முதல் வகையான அடையாளமிழப்புக்கான எதிர்வினை என்றால் ‘ஹிண்ட்ராப்’ இயக்கம் இரண்டாம் வகையான அடையாளமிழப்புக்கு எதிர்வினையாக உருவானது. பல சமூக/ வரலாற்று ஆய்வாளர்களும் ‘ஹிண்ட்ராப்’ எழுச்சியை அச்சத்துடன் பார்க்கிறார்கள். ஒரு பக்கம் அது நிகழ்த்திய அடையாள ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள் மறுபுறம் இனவாதமாக, அடையாளம் இறுகி இந்தியர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்துவதாக அது மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள். உலகளாவிய வலதுசாரி எழுச்சியுடன் சேர்ந்தே இதையும் புரிந்துகொள்ள வேண்டும்.



இந்த தொகுப்பை வாசிக்கும் போது மலேசிய தமிழ் இலக்கியம் இன்னும் போதுமான அளவிற்கு அங்கு வாழும் பிற சமூகத்தை அவதானிக்கவில்லை எனும் எண்ணம் ஏற்படுகிறது. விதிவிலக்கு ராம கண்ணபிரான், சிங்கை இளங்கோவன். மலாய், சீன இனங்கள் இருக்கட்டும், உண்மையில் வேறு இந்தியர்கள் பற்றிய பதிவும்கூட அரிது என்றொரு எண்ணம் ஏற்படுகிறது. மலேசிய – சிங்கப்பூர் ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சி உலக இலக்கியத்தில் தனக்கான இடத்தை பெறுகிறது. கே. எஸ். மணியன் அப்படியான ஒரு முன்னோடி. இளங்கோவன், பாலபாஸ்கரன், முத்தம்மாள் பழனிசாமி, ஜானகிராமன் என பலரையும் கவனிக்கும்போது வருங்காலத்தில் மலேசியாவில் இருமொழி படைப்பாளுமைகள் அதிகமும் உருவாவார்கள் எனும் எண்ணம் ஏற்படுகிறது.



மொத்தம் இருபத்தி ஐந்து நேர்காணல்கள் கொண்ட தொகுப்பு. இதில் ஆறு சிங்கப்பூர் இலக்கியத்தை பிரதிநிதிப்படுத்துபவை. வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பதினோரு மலேசிய இலக்கியவாதிகளின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. மீதியிருக்கும் கட்டுரைகள் மலேசிய சமூக, அரசியல், வரலாறு, கல்வி மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்தவை. மொத்தமாக சுப. நாராயணன் மற்றும் பைரோஜி நாராயணன் ஆகியோர் நடத்திய ‘கதை வகுப்பு’, கு. அழகிரிசாமியின் ‘இலக்கிய வட்டம்’ கோ. சாரங்கபாணியின்   தமிழ் நேசன் முன்னெடுத்த ‘தமிழர் திருநாள்’ போட்டிகள், பவுன் பரிசு திட்டங்கள், மாணவர் மணி மன்றம், நவீன இலக்கிய சிந்தனை, வானம்பாடி புதுக்கவிதை இயக்கம் ஆகியவற்றின் தாக்கம் மற்றும் அவற்றின் வழியாக உருவாகி வந்த ஆளுமைகளை அடையாளம் காட்டுகிறது. இத்தொகுப்பில் சுட்டப்படும் முன்னோடிகளான கோ. சாரங்கபாணி, எஸ்.ஏ. கணபதி, ஆதி குமணன் ஆகியோரின் ஆளுமைகளின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.



என் வாசிப்பில் திரைப்பட இயக்குனர் சஞ்சய் குமார் பெருமாள் மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் / நாடகாசிரியர் இளங்கோவன் நேர்காணல்கள் கலைக்குறித்த தனித்த மற்றும் தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பவை. டாக்டர். மா. சண்முக சிவா நேர்காணலில் அவரளிக்கும் ஒரு பதில் கலைக்கும் நிலையாமைக்கும் இடையிலான தொடர்பை கோடிட்டு காட்டுகிறது. “நான் சௌகரியமாக இருக்கிறேன். சந்திக்கும் அனைவரும் என்னிடம் அன்பைக் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். வாழ்வில் பெரும் துயரங்கள் என்னிடம் இல்லை. இதுவே எனக்கு குற்ற உணர்வாகி விடுகின்றது. எனவேதான் நான் மீண்டும் மீண்டும் துன்பம் நிறைந்த முகங்களைத் தேடிச் செல்கிறேன்.” ஒரு மருத்துவனாகவும், எழுத்தாளனாகவும் சண்முக சிவாவை என் மனதிற்கு மிக நெருக்கமானவராக உணர்கிறேன்.



நல்ல நேர்காணல்கள் நேர்காணல் செய்யப்படுபவரின் மொழியின் தனித்தன்மையை வெளிக்கொணர வேண்டும். இணைய வழி நேர்காணல்களில் இத்தகைய சிக்கல் இருப்பதில்லை. ஆனால் பேச்சை நேர்காணலாக உருமாற்றும்போது தனித்தன்மை மறைந்து பொதுத்தன்மையை எட்டிவிடும். இத்தொகுப்பில் சீ. முத்துசாமி, சஞ்சய் குமார் பெருமாள் மற்றும் சிங்கப்பூர் இளங்கோவன் ஆகியோரின் நேர்காணல்களில் அவர்களுடைய தனித்துவம் வெளிப்படுகிறது. சஞ்சய்குமார் நேர்காணலில் அவருடைய ஜகாட் குறும்படத்திற்கு கிடைத்த எதிர்வினைகளைப் பற்றி சொல்லும்போது, ஒரு மலாய் நண்பர் திரைப்படத்தை பார்த்துவிட்டு சொன்னதாக சொல்கிறார் “தோட்டத்தை விட்டு வெளியேறியபோது ஃபெல்டா நிலத்திட்டம் போலவே உங்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்தது என்றே நினைத்தோம். ஆனால் உங்களை அப்படியே விட்டுவிட்டார்கள் என இப்போதுதான் தெரிந்துகொண்டோம்”. தமிழ் இலக்கியங்களில் பிற சமூகங்களைப் பற்றிய பதிவுகள் இல்லாதது போலவே பிற சமூகங்கள் தமிழர்களிடம் இருந்து வெகுவாக விலகி இருப்பதை உணர முடிகிறது. மலேசியா ஒரு பல்லின தேசம் என சொல்லிக்கொண்டாலும் சமூகம் துண்டாடிக் கிடப்பதை காட்டுவதாக இருக்கிறது.



தமிழ் மட்டுமின்றி அடுத்த கட்டமாக மலாய், சீன மொழிகளில் வெளிப்படும் தமிழர் வாழ்வு எத்தகையது என்பதை வல்லினம் ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான் இது முழுமையடையக்கூடும். அவர்களின் பார்வையில் நாம் தவறவிட்ட எத்தனையோ கோணங்கள் புலப்படக்கூடும். பாலபாஸ்கரனின் நேர்காணலில் ஆங்கில தரவுகளின் வழி தமிழர் வாழ்வைப் பற்றி தான் கண்டடைந்த பல சுவாரசியமான தகவல்களை சொல்கிறார். 19 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட சீன பத்திரிக்கை ஒன்றிற்கு தமிழர் ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது அப்படியான ஒரு தகவல். தம்புசாமி பிள்ளை பற்றிய பகுதிகள் எல்லாம் நல்ல எழுத்தாளர் கையில் கிடைத்து தேர்ந்த நாவலாக உருவாக்க முடியலாம். சி.வீ குப்புசாமியின் ‘ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள்’ கூட ஒரு நாவலுக்கான களம்தான். காட்டு பெருமாள், எஸ். ஏ. கணபதி பற்றிய நினைவுகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.


தமிழ் நவீன இலக்கியகர்த்தாக்களிடம் தங்கள் ஆதர்சம் யார் எனக் கேட்டால் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரையே பெரும்பான்மையினர் அடையாளப்படுத்துவர். மு.வ., நா.பா., அகிலன் போன்றோரை தங்கள் ஆதர்சம் என பெரும்பான்மையான நவீன எழுத்தாளன் கருதுவதில்லை. அரிதாக அப்படி எவரும் சொன்னாலும்கூட அவர்களின் இலக்கிய தகுதி குறித்து சில ஐயங்கள் எழுப்பப்படும். வெகு மக்கள் எழுத்தாளர்கள் என்றே அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பான்மை இலக்கியவாதிகளும் தங்கள் ஆதர்சமாக மு.வ., நா.பா., அகிலனைச் சொல்கிறார்கள். அதிலிருந்து மேலெழும்பி, விலகி சிலருக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாகிறார். வேறு சிலர் வண்ணதாசனையும் வண்ணநிலவனையும் வந்தடைகிறார்கள். பி. கிருஷ்ணன் மட்டுமே புதுமைப்பித்தனை தன் ஆதர்சமாக சொல்கிறார்.   ‘புதுமை தாசன்’ எனும் பெயரில் இயங்கினார். 1950 களில் கோ. சாரங்கபாணியால் உருவான இலக்கிய அலை என்பது திராவிட கருத்தியல் அடிப்படையில் உருவானது. ஒருவேளை புதுமைப்பித்தன் இன்னும் பலருக்கு ஆதர்சமாக இருந்திருந்தால் நவீன மலேசிய இலக்கியப் போக்கு வேறு திசையில் காத்திரமாக வளர்ந்திருக்குமோ எனும் எண்ணம் வந்தது. தன் நிலத்திலிருந்து வேறொரு நிலத்தில் வேர் பிடித்து வாழ முனைந்து அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறைக்கு மு.வவும், நாபாவும், அகிலனும் ஆசுவாசம் அளித்திருக்கக்கூடும். புதுமைப்பித்தன் ஒருபோதும் அந்த ஆசுவாசத்தை அளித்திருக்க மாட்டார். அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வில் எதையும் கடந்துவிட முடியாது. நவீன இலக்கியம் கூரையற்ற வெட்டவெளியில் நிற்கும் மனிதனின் காலடி மண்ணையும் சரிப்பது. இந்த நேர்காணல்கள் லட்சியவாத எழுத்துக்களின் மீதான மதிப்பீடுகளை என்னளவில் மறுபரிசீலனை செய்யத் தூண்டின.



நவீனின் நேர்காணல் தொகுப்பை வாசிக்கும்போது கிடைக்கும் சித்திரம் என்பது 50 களில் மலேசிய- சிங்கப்பூர் இலக்கிய களம் வளமாக துவங்கி அறுபதுகளில் வளர்ந்து எழுபதுகளில் உச்சம் பெறுகிறது. ஐம்பதுகளில் புதுமைப்பித்தனின் இலக்கிய இடம் குறித்து நாளிதழ்களில் ஏழெட்டு மாதங்கள் சர்ச்சைகள் நீடித்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏழெட்டு இலக்கிய அமைப்புகள் உருவாயின. சிறுகதை எழுத்தாளர்களே எழுத்தாளர்களாக கருதப்பட்டனர். அவர்கள் நட்சத்திரங்களாக கொண்டாடப்பட்டனர். அங்கிருந்து இயல்பான அடுத்தக்கட்ட வளர்ச்சிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கனகலதா அவருடைய நேர்காணலில் “1990 களுக்குப் பிறகான காலகட்டத்தில், இந்நாட்டில் இலக்கியமே இல்லாமல் போய் விடுமோ, இளையவர்கள் எழுதாமலே விட்டு விடுவார்களோ என்ற பயத்தில் எழுதுபவர்களையெல்லாம் தட்டிக்கொடுக்கத் துவங்கினோம்” என்கிறார். சுமார் இருபத்து ஆண்டுகள் நீடித்த தொய்வு நிலையை கடந்து இணைய உலகில் மலேசிய இலக்கியம் விழித்து கொள்கிறது. சென்ற ஆண்டு விஷ்ணுபுர விருது பெற்ற எழுத்தாளர் சீ. முத்துசாமியும் கூட படைப்பூக்க உச்சத்திலிருந்த சூழலில் இருந்து ஒதுங்கி பின்னர் இடைவெளிக்கு பின் மீண்டும் எழுத வருகிறார். அரு.சு ஜீவானந்தம் அவருடைய நேர்காணலில் “சில சமயங்களில் எழுத்தை இழந்து விட்டேனோ என மிகுந்த துயரமாக இருக்கும். அதனால்தான் வாழ்க்கை என்னைத் தின்றுவிட்டதாக சொல்கிறேன். எனக்குள் இருக்கும் இலக்கியவாதியையும் அது சுருட்டி வாயில் போட்டுக்கொண்டது.” அக்கினி அவருடைய நேர்காணலை இப்படி முடிக்கிறார்- “வாழ்க்கையின் முடிவில் அந்தக் கடைசி காலகட்டத்தில், அந்த நேரத்தில் என் நினைவு சரியாக இருந்தால் நான் இழந்தது என்னவென்று நீங்கள் கேட்டால் கவிதை என்பேன்.” இவ்வரிகள் எனக்குள் அச்சத்தையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது. கலையைத் தொலைத்த கலைஞன் என்னவாக வாழ்வை கடப்பான்?



சை. பீர்முகமது உட்பட இன்னும் சிலரின் நேர்காணல்கள் வழியாக ஏறத்தாழ இதே போன்றவொரு சித்திரத்தை அடைகிறோம். எண்பதுகளில் பெரும்பாலானவர்களின் செயலூக்கம் ஒன்றுபோலவே குன்றியது. இது ஏன் நிகழ்ந்தது? எந்த எழுத்தாளரும் நேரடியாக அதைப் பற்றி பேசவில்லை. ஆனால் என்னை துரத்திய கேள்வி இதுதான். எழுத்து பொருளாதார உய்வுக்கு வழியல்ல என உணர்ந்த ஒரு தலைமுறையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தமிழில் இயங்கிய பெரும்பாலான மகத்தான இலக்கியவாதிகள் தங்கள் அடுத்த தலைமுறையை வாசிப்பிலிருந்தும் எழுத்திலிருந்தும் விலக்கியே வைத்தார்கள். ஆனால் இது மட்டும்தான் காரணமா? கோ. முனியாண்டி அவருடைய நேர்காணலில் ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார் “1980 களுக்குப் பிறகு பொதுவாக எந்தப் பத்திரிக்கையும் தரமான இலக்கிய படைப்புகளை வெளியிடவில்லை. தமிழ் நேசன் அதற்கொரு விதிவிலக்கு” என்கிறார்.



நவீனின் இந்த நேர்காணல் தொகுதியை இரண்டாக வகுக்கலாம். இலக்கியவாதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள்/ ஆய்வாளர்கள். இவற்றை ஏன் ஒன்றாக தொகுத்தார் என்பதொரு கேள்வியாக இந்நூலை வாசிக்கத் துவங்கும்போது எழுந்தது. கறாரான வரலாற்றுப் பார்வையில் நினைவுகளுக்கான இடம் இரண்டாம்பட்சம்தான். ஏனெனில் நினைவுகள் மனச் சாய்வுகளுடன் ஊடாடுபவை, நம்பகமற்றவை. புறவயமான சட்டகங்களுடன் இசையும்போது மட்டுமே அவை பொருட்படுத்தத்தக்கவையாகின்றன. ஆனால் வரலாறு உண்மையை ஒற்றை பரிணாமத்தில் காட்டுவது. நினைவுகள் பல கோணங்களில் பல நிறங்களில் உண்மையை நோக்கி விரிபவை.



மா. ஜானகிராமனுடனான நேர்காணலில் போகிற போக்கில் ‘ஆனால், 80-85 ஆம் ஆண்டுகளில் இந்தத் தோட்டங்கள் துட்டாடப்பட்ட்ன. மறுநடவு என்ற பெயரில் ரப்பர் மரங்களை அழித்துவிட்டு செம்பனையை பயிரிட்டார்கள். தோட்டங்களுக்குள் இந்தோனேசியர்கள் நுழைந்தார்கள்.’ எனச் சொல்கிறார். இங்கிருந்து மலேசிய இலக்கியத்தின் தொய்வுக்கான காரணத்தை என்னால் ஊகிக்க முடிகிறது. மலேசிய தமிழர்களும் அவர்களின் இலக்கியமும் பெரும்பங்கு தோட்டப்புறத்தை சார்ந்ததே. இந்த இணைப்பை புரிந்துகொண்டதன் வழியாக நவீன் இந்த நூலை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். இலக்கியவாதிகளின், கள செயல்பாட்டாளர்களின் நேர்காணல்களை ஒன்றாக தொகுத்ததன் மூலம் அவர் மலேசிய இலக்கிய பரிணாமத்தை முழுமையாக கட்டமைக்க முயல்கிறார்.



நவீன் முன்னுரையில் எழுதியது போல் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல்களில் இருந்து 25 நேர்காணல்களை தேர்ந்தெடுத்து, அதன் வழி மலேசிய இலக்கியத்திற்கு ஒரு வரைபடத்தை உருவாக்கும் முயற்சி இந்நூல். நவீன் இலக்கிய வரைபடத்தை உருவாக்க முனைவதுடன் நிற்கவில்லை. இலக்கியத்திற்காக, தங்கள் இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மலேசிய ஆளுமைகளை இந்த தொகுப்பின் வழியாக அடையாளம் காட்டுகிறார். இதன் வழியாக மலேசிய இலக்கியத்தின் வருங்கால செல்திசையை நவீன் அடையாளப்படுத்துகிறார். முன்னோடியான கோ. சாரங்கபாணி அமைத்துக்கொடுத்த பண்பாட்டுச் சாலையை நீட்டிப்பதை இலக்காக கொண்டுள்ளார். பசுபதி சிதம்பரம், டாக்டர் ஜெயக்குமார், பி. எம் மூர்த்தி மற்றும் மா. ஜெயராமன் போன்றோர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.



சில நேர்காணல்கள் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம், படைப்பின் ஊற்றுமுகத்தைக் காட்டியிருக்கலாம் எனும் எண்ணம் ஏற்பட்டது. மேலும் பிற்சேர்க்கையாக இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் ஆளுமைகளின் பட்டியல் பக்க எண்ணுடன் சேர்த்து வெளியிட வேண்டும். இந்நூல் ஆய்வு நூலாக பரிணாமம் கொள்வதற்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டது. நேர்காணல் செய்த தேதிகளையும் சேர்க்க முடிந்தால் வசதியாக இருக்கும்.



நவீனும் வல்லினம் நண்பர்களும் அத்தனை இக்கட்டுக்களையும் கடந்து தொடர்ந்து தாங்கள் தேர்ந்த பாதையில் நம்பிக்கை இழக்காமல் முன்செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்.



சுனில் கிருஷ்ணன்

No comments:

Post a Comment