Sunday, June 7, 2020

லட்சிய இலக்கிய வாசகன்- சிறுகதை


(பதாகையில் வெளிவந்த கதை)
“அண்ணே.. கண்டுபிடிச்சுட்டேண்ணே.. கண்டே பிடிச்சுட்டேன்..” என்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் கிடாரம்கொண்டான்.

கையில் புத்தகத்துடன் சுவற்றில் சாய்ந்து படித்தபடியே கண்ணயர்ந்திருந்த எழுத்தாளர் பழுவேட்டையன் கிடாரத்தின் குரலைகேட்டு திடுக்கிட்டு விழித்தார். கண்ணாடியை மூக்குக்கு மேலே நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு அவனைப் பார்த்தார்.

கிடாரம் அவர் கையில் பிடித்திருந்த புத்தகத்தின் அட்டையைத். திருப்பி உற்று நோக்கினான்.

“என்னடா கிடாரம்” என்றபோது அவர் குரலில் மத்தியான உறக்கம் கலைந்ததன் சலிப்பு அப்பட்டமாக புலப்பட்டது. அந்த அறையில் ஓடிக்கொண்டிருந்த ஒரேயொரு மேசை மின்விசிறி நடுக்குவாதம் வந்தது போல் தலையை ஆட்டியது. அதிலிருந்து காற்றை காட்டிலும் இரைச்சல் அதிகமாக வெளிவந்து கொண்டிருந்தது.

“அண்ணே .கெளம்பு.. அவன கண்டுபிடிச்சுட்டேன்..”

“யாரடா?’

“அதாண்ணே இம்புட்டு வருஷமா நாம தேடுற லட்சிய இலக்கிய வாசகன”

“டேய்…கடுப்பக் கெளப்பாத”

“நீகூட போன வாரம் விமர்சன கூட்டத்துல கோவமா சொன்னியேண்ணே.. ஒங்கள மாதிரி கூமுட்டைகளுக்கு எங்கத வெளங்காதுடா.. லட்சிய இலக்கிய வாசகன நம்பி எழுதிருக்கேன்னு.. கோவத்துல நாக்காலிய ஒதஞ்சுட்டு வெளிய வந்தியே.. மறந்துட்டியா?”

“நல்லா நினவிருக்கு.. அதுக்கு என்ன இப்ப?”

“அண்ணே அம்மாறிய சத்தியமா சொல்றேண்ணே .. அவன் இருக்கான்.. லட்சிய இலக்கிய வாசகன் இருக்கான்.. அதுவும் நம்மூருலயே…. அவன கண்டுபிடிச்சுட்டேன்..”

“என்னடா சொல்ற? ..நெசமாத்தான் சொல்றியா..”, என்று எழுந்து கைலியை இறுக்கிச் செறுகினார் எழுத்தாளர் பழுவேட்டையன்.



“அன்னிக்கு நீ பேசுனத கேட்டு ரொம்ப விசனப்பட்டேன்.. ஒருவாரம் விடாம தேடி அலஞ்சேன்.. எப்புடியோ கண்டுபிடிச்சுட்டேன்.. வா போவோம்” என்று இழுத்து சென்றான் கிடாரம்.


கிடாரம் சைக்கிளை டவுனுக்குள் விட்டான். இடுகலான சந்துகளில் சைக்கிள் வேகவேகமாக ஒழுகிச் சென்றது. இருபுறமும் காரைச்சுவர்கள் நெடிதுயர்ந்து நின்றன. சுவர்களை ஒட்டி சாக்கடைகள் சலசலத்தன. காவாயின் முள்ளுச்செடிகள் ஓரம் பன்றிகள் புழங்கின. பழுவேட்டையன் கேரியரில் அமர்ந்து பீடி வலித்து கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் லயித்திருந்தார். லட்சிய இலக்கிய வாசகன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியம், திருக்குறள் துவங்கி பாரதி வரை மறைபொருளாக புதைந்து கிடக்கின்றன என்கிறார் ஆய்வாளர் அர.சு. ராமையா. திருமந்திரமேகூட அவனை நோக்கி எழுதப்பட்ட படைப்புதான் என்றொரு பேச்சும் உண்டு. மூவாயிரம் வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றும், பரகாய பிரவேச சித்தி அடைந்தவர் என்பதால் உடல் மாற்றிகொண்டு உயிர் நீடிப்பவர் என்றும் அவரைப்பற்றி இலக்கிய வட்டாரத்தில் தொன்மங்கள் பல உண்டு. இளமையில் மரித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் அவரை ஒருமுறையேனும் கண்டுவிட வேண்டும் எனத் துடித்து, அது சித்திக்காமல் விரக்தியில் மரித்தவர்கள்தான் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார் முனைவர் சேரன் செங்குட்டுவன். பாரதியும், புதுமைப்பித்தனும் அவரை மிக அணுக்கமாக நெருங்கி கடைசி நொடியில் சந்திக்க தவறியவர்கள் என்பதற்கான சில வாய்மொழி சான்றுகள் உள்ளன . கடைசியாக அவரைச் சந்தித்த தமிழ் எழுத்தாளர் யாரென்றே தெரியவில்லை. அசோகமித்திரன், பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, மௌனி, நகுலன் என பல பெயர்கள் இலக்கியவாதிகள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகின்றன. இலக்கிய உலகம் அழுது அரற்றி தேடிச் சலித்த ஒருவர் தன் ஊரில், அதுவும் கிடாரமே எளிதாக கண்டுபிடிக்கும் நிலையில் இருக்க முடியுமா என்றொரு குழப்பம் பழுவேட்டையனை வாட்டியது.

முட்டுச் சந்தில் நுழைந்து கடைக்கோடியில் உள்ள ஒரு பாழடைந்த செட்டிநாட்டு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தினான் கிடாரம். சுவர் விரிசலில் வேம்பும் அரசும் முளைத்து வளர்ந்திருந்தன. முகப்பில் இருந்த சரஸ்வதி சிலையின் கரங்கள் துண்டுபட்டிருந்தன. அவள் கையில் வீணையிருந்த இடத்தில் பாதி வளைந்த இரும்புக்கம்பி நீண்டிருந்தது. பழுப்பும் செம்மண்ணும் சேர்ந்த புதுநிறத்தில் நின்ற அக்கட்டிடத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறியே தென்படவில்லை. உளுத்துப் போயிருந்த வாசல் கம்பிக்கதவை திறந்து இருவரும் உள்ளே சென்றார்கள். எலிப் புழுக்கைகளும் பல்லி முட்டைகளும் திண்ணையில் விரவிக்கிடந்தன. நிலைப்படி புடைப்பிலிருந்து கரையான்கள் அவதி அவதியென வெளியேறிக் கொண்டிருந்தன.

“என்னடா இது ..ஏதோ துப்பறியும் கதையாட்டமிருக்கு.. இங்க ஆளே இருக்க முடியாதுடா”

பதிலேதும் கூறாமல் கிடாரம் மரக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்று, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். வளவு வீட்டு மாடியறையில் விளக்கெரிந்தது. மரப்படிகளில் ஏறி அந்த அறையை நோக்கி இருவரும் சென்றார்கள்.

அறை வாயிலில் ‘இடியாப்பம்’ ‘கடிகாரம்’ ‘பங்கனபள்ளி’ போன்ற சிற்றிதழ்களின் புதிய பிரதிகள் பிரிக்கப்படாமல் கிடந்தன.

“இதெல்லாம் இன்னமும் வருதாடா?” என்றார் பழுவேட்டையன் ஆச்சரியமாக.

கிடாரம் அவரை அமைதியாகச் சொல்லி சைகை செய்துவிட்டு கதவைத் தட்டினான். பழுவேட்டையனுக்குள் ஏதோ ஒன்று மினுங்கி மறைந்தது. இம்மாதிரியான பதட்டமான சூழல்களை அவர் வழக்கமாக ஒரு மேரி ரொட்டியை மென்று தின்று எதிர்கொள்வார். அன்று அவசரத்தில் அப்படியே கிளம்பி வந்துவிட்டதால், பதற்றத்தில் பற்றிக்கொண்டு எரியும் வடவத்தீயை எச்சில் கூட்டி முழுங்கி அணைக்க முயன்றார்.

ஐந்து நிமிடங்கள் ஆகியும் உள்ளே சிறு சலனம்கூட எழவில்லை. மீண்டும் கதவை வலுவாகத் தட்டியபோது அது சற்றே நகர்ந்தது. மெதுவாக கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார்கள். கதவை முழுவதுமாக திறக்க முடியவில்லை. ஓராள் விட்டத்திற்கே வழிவிட்டது. இருபுறமும் கூரையை முட்டும் அளவுக்கு நான்கு வரிசைகளாக சிற்றிதழ்கள், நடு இதழ்கள், சிறப்பிதழ்கள் அடுக்குகள் இருந்தன. என்னென்ன இதழ்கள் என வேகமாக ஓட்டிப் பார்த்தார். அறையிலிருந்த இரண்டு ஜன்னல்களையும் புத்தக அடுக்குகள் மறைத்திருந்ததால் நண்பகலிலேயே இருண்டிருந்தது. கொஞ்சம் வெளிச்சம் கண்ணுக்குப் பழகியபிறகு நோக்கினால் அந்த வரிசையில் எழுத்து, கசட தபற, சுபமங்களா, சரஸ்வதி போன்றவை இருந்ததுகூட ஏதும் ஆச்சரியமில்லை, ஆனால் இந்தியன் ஒப்பினியன், சுதேசமித்திரன், பாரிஸ் ரிவ்யு  எல்லாம்கூட இருந்தன. அப்போதுதான் பழுவேட்டையன் எதேச்சையாக தரையை நோக்கினர். பட்டுகோட்டை பிராபகர், ராஜேஷ்குமார், முத்துலெட்சுமி ராகவன், இந்திரா சவுந்தரராஜன், ரமணிச்சந்திரன் எனப் பலருடைய பாக்கெட் நாவல்களே தரைக்கு தளமாக திகழ்ந்தன. கிடாரம் கால் இடறியபோது காலுக்கு கீழே பல அடுக்குகள் உள்ளன என்பது பிடிபட்டது. ஒருவேளை இந்த அடுக்குகள் கீழ் தளத்திலிருந்தே துவங்குகிறதோ என்றொரு ஐயம் ஏற்பட்டது. புத்தகங்கள் மீது கால்வைக்க இருவருமே கூசினார்கள். கிடாரம் யோசிக்காமல் சட்டென முழந்தாளிட்டான். “கலைவாணியில்லியா” என்றான். சுவிசேஷ ஜெபக்கூட்டத்தில் நடப்பது போல் மண்டியிட்டு நடக்க துவங்கினான்.

அந்தக் கூடத்தின் முடிவில் வலப்பக்கம் ஓர் அறை திரும்பியது. அங்கே தலைக்கு மேலே அந்தரத்தில் தொங்கும் எல்ஈடி விளக்குக்கு நேர் கீழே  சுமார் ஐந்தடிக்கு பிரமிட் போல் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மேலே, பத்மாசனத்தில் அமர்ந்து இவர்கள் வந்ததைக்கூட கவனிக்காமல் ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். சோடாபுட்டி கண்ணாடி அணிந்த வழுக்கை தலையர், வயது ஐம்பதுகளில் இருக்கலாம், பென்சில் மீசை, மயிரடர்ந்த வெற்று மார்பு, சாம்பல் கட்டங்கள் போட்ட கைலி என அவருடைய அடையாளங்கள் நன்றாக பரிச்சயமாயிருந்தது. அப்போது பழுவேட்டையனுக்கு பிடி கிட்டியது, தோள் தினவும் தொந்தியும் அவரை வைக்கம் முகமது பஷீர் இல்லை என நிறுவியது.

அத்தனை நேரம் வாசித்துக் கொண்டிருந்தவர், சட்டென புத்தகத்தை மூடி வீசி எறிந்தார். அடுக்களை மேடையில் சென்று புதைந்து கொண்டது. அவரருகே சுமார் நான்கடி நீளமும் மூன்றடி விட்டமும் உள்ள தடித்த கணக்கு நோட்டு போல இருந்த ஒரு புத்தகத்தை பிரயாசைப்பட்டு திறந்து, அதில் என்னவோ எழுதிவிட்டு மூடிவைத்தார். அதன் பின் அவர்களை நேருக்கு நேராக நோக்கினார்.

“வாங்க பழுவேட்டையன்.. வாங்க கிடாரம் கொண்டான் “ என வரவேற்றார். தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கு உரிய திடமான இயந்திர குரல். முகத்தில் விஜிபி காவல்காரன் போல் அத்தனை இறுக்கம்.

“உக்காருங்க” என அவர் காட்டிய நாற்காலி முழுக்க புத்தக அடுக்குகளால் உருவாகியிருந்தது.

“தைரியமா உக்காரலாம்.. காலுக்கு முன்னலாம் கம்பராமாயணம், தால்ஸ்தாய் பயன்படுத்துவேன். இப்போ ஜெயமோகன், பா.வெங்கடேசன் எல்லாம் பயன்படுத்துறேன்.. நல்லா வலுவா இருக்கும்.. குஷன் வந்து சேதன் பகத், ஷோபா டே மாதிரி இலகுவான புக்ஸ் .. நல்லா மெத்துன்னு இருக்கும்” என்றார்.

சுவர்களை ஆங்கில அயல்மொழி நூல்களின் வண்ண வண்ண அட்டைகள் வியாபித்திருந்தன. எல்லாம் அவரறியாத பெயர்கள். சுயசரிதைகள், மானுடவியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள்! இத்தனை பெயர்கள் இத்தனை புத்தகங்கள் அவரை நிலையிழக்கச் செய்தன. சாப்பாட்டு மேசை சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர், எனிட் ப்ளைடன் புத்தகங்களால் உருவாகி இருந்தது. சமையல் மேடை முழுக்க பயண நூல்களால் அமைக்கப் பெற்றிருந்தது. ஒருகால் கூரையைத் தவிர அனைத்து இடத்திலும் புத்தகங்களால் நிரம்பியிருக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் அண்ணாந்து நோக்கினார். மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த மின்விசிறியின் ரெக்கைகள் மீது இரண்டடுக்கு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தரத்தில் வலைகட்டி அதிலும் புத்தகங்களை நிறைத்திருந்தார். புத்தகங்களால் ஆன கூரை.

“அண்ணே ..கக்கூஸ ஒரு தடவ பாத்துரனும்ணே.. எனக்கென்னமோ நம்ம புக்குல்லாம் அங்கதான் இருக்குமொனு கிலியா இருக்கு” என்று காதில் கிசுகிசுத்தான் கிடாரம்.

“எதாவது சாப்புடுறீங்களா..நா இப்பத்தான் ஜூலியன் பர்ன்ஸ் சாப்புட்டு முடிச்சேன்.. மத்தியானத்துக்கு மிலன் குந்திரா வதக்கல்.. ராத்திரிக்கு திஜா தான் ஒத்துக்குது”

பழுவேட்டையனால் இதை உள்வாங்கவே முடியவில்லை. திகைத்து சொல்லறுந்து அமர்ந்திருந்தார். ‘இலக்கியத்தில் வாழ்வது’ என்றால் என்ன என்பதை அப்போதுதான் முதன்முறையாக உணர்ந்து கொண்டார். கண்களில் கசிந்த நீரை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனையாண்டு கால வாழ்வில் உருப்படியாக நாம் ஒரு முன்னூறு நானூறு புத்தகங்கள் வாசித்திருப்போமா? அவமானமாக இருந்தது. நெடுநேரம் மௌனம் களைந்து பேச துணிந்தார்.

“இதெல்லாம் உண்மையா இருக்கும்னு என்னால நம்பவே முடியல. அப்ப ஒங்களப் பத்தி நிலவுர கதையெல்லாம் நிசம்தானா?”

அக்கேள்வியை அமைதியாக கடந்தார்.

“அந்தக் கணக்கு நோட்டு என்ன?”

“அது ஆவணப் புத்தகம். புத்தகத்தோட பேரும் அதப்பத்தி ஒரு வார்த்தையில அபிப்ராயமும் எழுதி ஆவணப்படுத்தனும்.”

“ஒரு வார்த்தையா?”

“ஆமா. அதுக்குமேல வேற என்ன எழுதணும்? ஒரு புத்தகத்தைப் பற்றி சொல்ல ஒரேயொரு கச்சிதமான சொல் போதும்.”

“அபாரம்.. அற்புதம்.. இதெல்லாம் திரும்பத் திரும்ப வருமா”

“இல்ல. ஒரு சொல் கூட திரும்ப எழுத முடியாது. அந்த புத்தகம் அத ஏத்துக்காது… அது மாதிரி நாம நம்பாத போலியான, பொய்யான சொற்களையும் எழுத முடியாது”

“ஆச்சரியமா இருக்கே.. பாக்கலாமா?”

“இல்ல.. அனுமதி கிடையாது”

கிடாரம் இந்த பெரிய புத்தகத்தை எப்படி லவட்டலாம் என்று திட்டம் போடத் துவங்கினான்.

சற்று நேரம் நீடித்த மவுனத்தை களைந்து அவரே பேசினார்.

“நீங்க ‘சுவரொட்டி’ இதழ்ல  எழுதுன ‘பீளை’ கதை படிச்சேன்.”

“நல்லாயிருந்துதா?”

“இதே மாதிரி நா படிக்கிற நூத்தி முப்பத்தி மூணாவது கதை.”

“அப்ப நல்லாயில்லையா?”

“சில பேருக்கு பிடிக்கலாம்”

பழுவேட்டையன் சோர்ந்தார். அவருடைய சொற்கள் எல்லாம் கூர்மையாக கிழித்து சென்றன.

கிடாரம் ஆர்வமிகுதியால் அவரிடம், “என்னோட கவிதைய வாசிச்சதுண்டா?”

“கவிதையா?”

அவன் முகம் சிறுத்தது. பழுவேட்டையன் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

“சாருக்கு சம்சாரம் இல்லிங்களா?”

“அதெல்லாம் அப்பத்திக்கு அப்ப”

“புரியலியே”

“சோஃபி, நடாஷா, அபிதா, யமுனான்னு வாழ்ந்துட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்’

“அதான பாத்தேன்.. இருந்தா இம்புட்டு பொஸ்தவம் சேத்துர முடியுமா என்ன?” என்றான் கிடாரம்.

என்ன மனுஷன்யா என்று மனதிற்குள் நினைத்துகொண்டார். ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து கண்ணீர் உகுக்க வேண்டும் எனும் உந்துதலை கவுரவம் கருதி தவிர்த்தார்.

“உங்கள கடசியா பாத்த தமிழ் எழுத்தாளர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“வேண்டாம். அப்புறம் இதனால ஒரு பதிப்பகக் குழு சண்ட வரும்”

கிடாரம் கீழே கையூன்றி அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கம்ப இராமாயண உரைத்தொகுப்பு இருந்தது. உடனே அவரிடம் “கம்பன பத்தி என்ன நினைக்குறீங்க?”

“நல்ல மனுஷன். எளிமையா பழகுவாரு.”

இதைச் சொல்ல லட்சிய இலக்கிய வாசகன் எதற்கு என்று சுணங்கினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை கிடாரம்.



“அதில்ல..கவிச்சக்கரவர்த்தியில்லியா..அவரோட ஆகிருதிய பத்தி”

“நெடுநெடுன்னு கருப்பா மொட்டத்தலையா இருப்பார்,  இந்த படத்த பாருங்க, கவிஞன் மாரியா இருக்கான், கோவில் பூசாரியாட்டம் இருக்கான், என்னே நம் கற்பனை வறட்சி.”

“கம்பன பாத்திருக்கீங்களா?” என்று பழுவேட்டையன் ஆச்சரியமாக வினவினார்.

“வள்ளுவர் கூட வேற மாதிரி ..சரி அத விடுங்க.. அப்புறம் தேவையில்லாம சாதிச் சண்ட  மதச் சண்டையெல்லாம் வரும்” என்று மீண்டும் இறுகிய மௌனத்திற்கு திரும்பினார்.

“நீங்க எதுவும் எழுதினதில்லையா”

“இல்ல நா வாசகன் மட்டும்தான்.”

“எழுதிப் பாக்கனும்னு தோணினதே இல்லியா?”

“எத எழுதினாலும், அது எந்த புக்குலேந்துன்னு மூணாவது வார்த்தையில தெரிஞ்சு போய்டுது..எரிச்சலா இருக்கும்.. அதனால எழுதுறதில்ல”

“விமர்சனம்.. வாசகர் கடிதம் கூட எழுதுறதில்லியா?”

“தேவையில்லன்னு நினைக்குறேன்”

“இல்ல ஒரு ஊக்கமா இருக்குமேன்னு”

“அது என் வேலையில்லியே”

“இருந்தாலும் இம்புட்டு கறாரா இருக்கக்கூடாதுண்ணே” என்றான் கிடாரம். பழுவேட்டையனுக்கும் அவருடைய பதில்கள் ‘கொஞ்சம் கூட பிடி கொடுத்து பேசாமல் இருக்கிறாரே’ என அயர்ச்சியாகத்தான் இருந்தது.

“இல்ல எதுக்காக இம்புட்டு புத்தகங்களையும் படிக்கணும்..ஒரு நோக்கம் வேணாமா?”

“எனக்காகப் படிக்கிறேன். வாசிக்கிறேன், ஆகவே வசிக்கிறேன். Reading is not a means to achieve an end, its an end in itself. அதாவது எதையும் அடையணும்னு இல்ல, வாசிப்பே அடைவதுதான்.”



“இருந்தாலும் வெளிவாழ்க்கைன்னு ஒன்னு இருக்கே.. அதுக்கு வாசிப்பு உதவனும்ல.. வாசிச்சத போட்டு பாக்கணும்ல..நாலு சனங்கள புரிஞ்சிக்கலாம்”

“எனக்கு அப்படியொண்ணு கிடையாது. முன்னுக்குப் பின் முரணான சமூகம்தான இது. திருக்குறளையும் ஆத்திச்சூடியையும் இவ்ளோ வருஷமா படிச்சுட்டுதான வர்றோம். அதனால எல்லாம் மாறிட்டோமோ என்ன? நான் என்ன இந்த வெளையாட்டுக்கு வெளியேவே நிறுத்திக்குறேன்”

“எல்லா புக்கும் படிச்சுருவீங்களா.. இங்க இருக்குறத எல்லாமே படிச்சுட்டீங்களா?”

“ஆமா. லட்சிய இலக்கிய வாசகனை நம்பி எழுதப்படும் எல்லாத்தையும்”

“இப்ப தமிழ்ல எழுதுற எல்லாரையும் படிச்சுருவீங்களா? இணைய இதழ், ஃபேஸ்புக் எல்லாம் இருக்கே?”

முதுகுக்குப் பின்னிருந்த டேபை எடுத்து உயர்த்தி காண்பித்தார்.

“இதுக்கெல்லாம் காசு எங்கேந்து வரும்?”

“லட்சிய இலக்கிய வாசகனுக்கு இவையெல்லாம் இலவசமாக எப்படியோ வந்து சேரும்”

“அதான பாத்தேன்” என கிடாரம் நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யாரு?”

“தெரிஞ்சி என்னப்பண்ண போறீங்க?”

“இல்ல எங்களுக்கும் பிடிக்குமான்னு ..தெரியாத பேருன்னா தேடிப் போய் வாசிக்கலாம்..”

“சாண்டில்யன்”

“சாண்டில்யனா? யவன ராணி, கடல் புறா சாண்டில்யனா?”

“ஆமா”

“என்ன சார் இது.. நா கூட நீங்க தால்ஸ்தாய் பாஸ்டர்நாக் மாதிரி ஏதாவது சொல்வீங்கன்னு நெனைச்சேன்”


REPORT THIS AD

“நா சிறந்த எழுத்தாளர சொல்லல .. எனக்கு பிடிச்ச எழுத்தாளர சொன்னேன்..”

“அப்ப சிறந்த எழுத்தாளர சொல்லுங்க”

“நா லட்சிய இலக்கிய வாசகன்தான், அத லட்சிய இலக்கிய விமர்சகன்தான் சொல்லணும்”

“அவரு எங்க இருக்கார்?”

“தேவைன்னா நீங்கதான் தேடிக் கண்டுப்பிடிக்கனும்”

பேசிப்பேசி மூச்சிரைத்தது பழுவேட்டையனுக்கு. இப்படியும் விட்டேந்தியாக ஒரு மனிதன் இருக்க முடியுமா?

நோண்டிக்கொண்டிருந்த கைபேசியை கீழே வைத்துவிட்டு கிடாரம் அவரிடம், “இந்த கொன்றை வேந்தன் பூங்காவனத்த தீட்டி எழுதி அமக்களப்படுதே. அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல. இன்னிக்கு படிச்சு முடிக்க இன்னும் பதினேழு புத்தகங்கள் இருக்கு.”

“ஏன் சார் எல்லாத்துக்கும் கோவப்படுறீங்க.. இவன் அவன திட்றதும்.. அவன் இவன திட்றதும்.. எல்லோரும் சேந்து நியாயம் கேக்குறது.. பஞ்சாயத்து பண்றதுன்னு .. இதெலாம் ஒரு ஜாலி சார்.. இலக்கியம் வளர இதெல்லாம் தேவ சார்’ என்றான் கிடாரம்.

“நான் லட்சிய இலக்கிய வாசகன், எனக்குன்னு இங்க ஒரு கடமை இருக்கு, அதிலிருந்து விலக முடியாது”

இதற்கு மேலும் அங்கிருப்பதில் எந்த பயனும் இல்லை எனும் முடிவுக்கு பழுவேட்டையன் வந்தார்.

“சரி புரியுது ..கெளம்புறோம்..அதுக்கு முன்னாடி என்னோட எழுத்தப்பத்தின அபிப்ராயத்த சொன்னிங்கன்னா சவுரியமா இருக்கும்”

“ஒருவேள கிடாரம் வயசில செத்து போயிருந்தா நல்ல எழுத்தாளர்னு சொல்லிருக்க ஒரு வாய்ப்புண்டு.. இப்ப இனியும் முப்பது வருஷம் காத்திருக்கணும்.. எப்பிடியும் மூணு நாள் நியாபகம் வெச்சுப்பாங்கன்னு நினைக்குறேன்””

பழுவேட்டையனுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. அத்தனை நேரமும் நகராமல் அமர்ந்திருக்கும் அந்த பிரமிட் புத்தகப் பீடத்தை தகர்த்துச் சாய்க்க வேண்டும் என்று வந்த வெறியை மிகுந்த சிரமத்துடன் அடக்கிக்கொண்டார்.

“சரி வரோம்” என்று வேகவேகமாக எழுந்தார்.

கிடாரம் அமர்ந்த இடத்திலிருந்து இரண்டு புத்தகங்களை லவட்டி சட்டையில் மறைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக எழுந்தான்.

“கிடாரம் அந்த புஸ்தகங்களை வெச்சுடுங்க” என்று கட்டளையிட்டார்.

“இது ரமணி சந்திரன் புக்குதான் சார்..சும்மா பழக்க தோஷத்துல” என்று வழிந்துக்கொண்டே கீழே வைத்தான்.

பழுவேட்டையரை ஆங்காரம் பிடித்து ஆட்டியது. இன்றிரவு சரக்கடித்துவிட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என வஞ்சினம் உரைத்தார். வெளியே செல்வதற்கு முன் திரும்பி, “சார் ஒரேயொரு கேள்வி.. எழுத்தாளன் பெரியவனா வாசகன் பெரியவனா?” என்று கேட்டபோது இயல்புக்கு மீறிய கடுமை அவர் குரலில் வெளிப்பட்டது.

பீடத்திலிருந்து சட்டென கீழே குதித்து இறங்கி நின்று கைகொட்டி சிரித்தார், சிரிப்பின் எடைதாளாமல் கீழே புத்தகங்களின் மீது உருண்டு புரண்டு அடக்க முடியாமல் சிரித்தார்.

பழுவேட்டையன் முழு வெறியில் கிடாரத்தை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். சைக்கிளை எடுத்து சாலையில் செல்லும் வரைக்கூட அந்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. இருவரும் மவுனத்தில் ஆழ்ந்திருந்தனர். மகரநோம்பு பொட்டலில் சைக்கிளை அழுத்திக் கொண்டிருந்தபோது பழுவேட்டையன் சன்னமாக  “நமக்கு இந்த சூனாபானா கூமுட்ட வாசகர்களே போதும்டா கிடாரம்..என்ன நாஞ் சொல்லுறது” என்றார்.


No comments:

Post a Comment