புத்தகங்கள்

Pages

Tuesday, June 2, 2020

சார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது-

(மரப்பாச்சி கூடுகையில் விவாதித்த கதை குறித்து பதாகையில் எழுதிய கட்டுரை. இப்படி ஒவ்வொரு சிறுகதையாக மீண்டும் எழுத வேண்டும் எனும் யோசனை வருகிறது)

ஏப்ரல் மாத ‘மரப்பாச்சி இலக்கிய கூடுகை’யை வழக்கமான காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து மாற்றி எங்காவது வெளியே வைத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை துளிர்விட்டபோது நண்பர் டாக்டர். சலீம் நேமம் கோவிலில் சந்திப்பை நிகழ்த்தலாம் என்றொரு யோசனையை முன்வைத்தார். நல்ல ஏற்பாடாக தோன்றியது. இப்பகுதியில் அழகிய சிற்பங்களும் அமைதியான சூழலும் ஒருங்கே அமைந்த இடம். எப்போதுமில்லாத அதிசயமாக இம்முறை கூடுகைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தொட்டது. மொத்தம் பதினொரு பேர், அதில் நால்வர் பெண்கள்.

இந்தக் கூடுகையில் நாங்கள் விவாதிக்கவிருந்த கதை சார்வாகனின் ‘யானையின் சாவு’. யானையைப் பார்த்தது முதல் அது தனக்கு வேண்டும் என அடம் பிடிக்கிறது ஆறு வயது குழந்தை. ஒருநாள் கோவில் வாசலில் கிளிப்பச்சை நிறத்தில், தங்க நிற வேலைப்பாடும், ரோஸ் நிற வாயும், எலுமிச்சை மஞ்சள் நிற தந்தமும் கொண்ட யானையை கேட்கிறது. தன் அழகுணர்ச்சி மீது நம்பிக்கை கொண்டவனுக்கு இது யானை குலத்தையே பரிகாசம் செய்வதாக தோன்றுவதால் வாங்காமல் எரிச்சல் அடைகிறான். ஓரளவு யானை அமைப்பு கொண்ட மர யானையை வெளியூரிலிருந்து குழந்தையின் நச்சரிப்பு தாங்காமல் வாங்கி வருகிறான். அந்த யானையுடன் எப்போதும் தன் நேரத்தைக் கழிக்கிறது குழந்தை. அது அவனை நெருடுகிறது. ஒருநாள் பொறுக்க முடியாமல் இது பொம்மை என கடிந்து கொள்கிறான். ஒருநாள் முழுக்க குழந்தை அவனோடு பேசவில்லை எனும் வருத்தத்தில் இது நிஜ யானைதான், சரியாக பார்க்காதது தன் குற்றம் என சொல்லி சமாதானப்படுத்துகிறான். இருவருமாக அந்த யானையுடன் விளையாடத் துவங்குகிறார்கள். ஊருக்குச சென்றுவிட்டு வீடு திரும்பும்போது யானையுடன் விளையாட விதவிதமான விளையாட்டுக்களை யோசித்தபடி வருகிறான். குழந்தையையும் யானையையும் காணவில்லை. பிறகு குழந்தை தூங்கிவிடுகிறது. காலையில் எழுந்தவுடன், யானை எங்கே எனக் கேட்கிறான். “இங்கேதான் எங்கேயாவது கிடக்கும்,” என்று அசிரத்தையாகச சொல்கிறது குழந்தை. மூலையில் அழுக்குத் துணி குவியலில் யானை கிடக்கிறது. ஐயோ பாவம் அதற்கு காய்ச்சல் இருக்கும் என ரங்கநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, குழந்தை, இது என்ன நிஜ யானையா வெறும் பொம்மைதானே, அதற்கு காய்ச்சலும் பேதியும் வருமா, எனக் கேட்டுவிட்டு எதிர்வீட்டு அம்மா கொடுத்த தகர காரை காட்டுகிறது. ரங்கநாதன் திகைத்து நிற்கிறான். செத்துப்போன யானையின் சடலம் “நான் வெறும் மரம். யானையில்லை,” என்று சொல்லிவிட்டும் திரும்பவும் செத்தது என்று கதை முடிகிறது.

வளர்ச்சிப் போக்கில் உதிரும் நினைவுகள், நம்பிக்கைகள் பற்றி பரிவுடன் பேசும் கதை. சிறுவர்கள் உலகில் கால மாற்றம், மனமுதிர்ச்சி சட்டென ஏற்படும் போது பெரியவர்களின் உலகம் அத்தனை எளிதாக மாற்றங்களை ஏற்பதில்லை. வேறொரு நண்பர் என், ‘பேசும் பூனை’ கதையில் ஹர்ஷிதா டாக்கிங் டாமை விட்டுவிட்டு வேறோர் விளையாட்டை பின் தொடர்ந்து சென்றுவிடுவாள், ஆனால் தேன்மொழி அந்த விளையாட்டை விட்டு வெளியேற மாட்டாள், என்பதை இக்கதையுடன் ஒப்பிட்டுச சொல்லியிருந்தார்.

இந்த கதை விவாதத்தில் சில நுட்பங்கள் விவாதிக்கப்பட்டன. குழந்தை எந்த பாலினம் என்பது சொல்லப்படாமல் உள்ளது ஒரு உத்தியா, குறைபாடா, என்றொரு கேள்வியை டாக்டர் ரவி எழுப்பினார். நான் வெகு இயல்பாக ஆண் குழந்தை என்றே வாசித்தேன். வேறு சிலர் பெண் குழந்தையாக வாசித்திருந்தார்கள். யானை பொம்மை மீது ஈர்ப்பு கொண்டதால் பெண்ணாக இருக்கலாம் என்றும் ஆனால் காரின் மீது ஈடுபாடு உள்ளதால் ஆணாக இருக்கலாம் என்றும் பேசிக்கொண்டோம். குழந்தைக்கு தந்தை ரங்கநாதன் மட்டுமே உள்ளார். அன்னை பற்றிய குறிப்பே இல்லை. தகர காரைக்கூட எதிர்வீட்டு அம்மாதான் வாங்கித் தருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. கதையில் ‘அந்த பொம்மை யானை உயிருள்ள யானை மாதிரி அதுவும் செல்லம் கொடுத்து கெட்டுப்போன ஒரு குழந்தை யானை மாதிரி லூட்டியடிப்பது,’ தாங்க முடியவில்லை என்று வருகிறது. இந்த விவரணை அந்தக் குழந்தைக்கும் பொருந்துகிறது. அதன் இயல்பைச் சுட்டுவதாகவும் இருக்கலாம். பொய்யிலிருந்து பொய்க்குத் தாவுகிறது மனம், பொய்யைக் கைவிடவும் தயாரில்லை. இந்த கதையில் அவன் பச்சை யானையை அழகுணர்ச்சியின் பாற்பட்டு நிராகரிக்கிறான். தன் அழகுணர்ச்சியின் மீது கர்வம் கொள்கிறான். பொய் எனும் பிரக்ஞையுடன் இருக்கிறான், பொய்யை உண்மை என ஒரு பேச்சிற்கு கட்டமைக்கிறான், அதற்குள் சிக்கிக் கொள்கிறான். குழந்தை அதை உதறிவிட்டுச் சென்றுவிடுகிறது. ரங்கநாதன் திகைக்கிறான். கதையின் முடிவில் சடலமாகக் கிடக்கும் யானை திரும்ப எழுந்து தானொரு மரம் என சொல்லிவிட்டுச் சாகிறது. அதாவது இருமுறை, குழந்தையின் பிரக்ஞையிலும் ரங்கநாதனின் பிரக்ஞையிலும், சாகிறது. குழந்தை வளரும்போது ஏற்படும் திகைப்பின் கணத்தை அழகான நேரடி கதையாக ஆக்குகிறார். அதுவே இக்கதையின் வலிமை.

‘Toy story’ திரைப்படம் இப்படியான உணர்வுநிலையை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படம். ஜெயமோகன் யுஜின் ஃபீல்ட் எழுதிய ஒரு கவிதை பற்றி எழுதிய கட்டுரை இந்த கதையுடன் சேர்ந்தே நினைவுக்கு வந்தது.

நீலக்கண் குட்டிப்பயல்

சின்ன நாய்ப்பொம்மை தூசிபடிந்திருக்கிறது
ஆனால் திடமாக காலூன்றி நின்றிருக்கிறது
சின்ன பொம்மைப்படைவீரன் துருவால் சிவந்திருக்கிறான்
அவன் தோளில் துப்பாக்கி நிமிர்ந்திருக்கிறது
அந்த நாய் புதிதாக இருந்த காலமொன்றிருந்தது
படைவீரன் அழகாக இருந்திருக்கிறார்
ஆனால் அது நம் நீலக்கண் குட்டிப்பயல்
அவற்றை முத்தமிட்டு அங்கே வைத்தபோது!

”நான் வருவது வரை போகவே கூடாது என்ன?”
என்று அவன் சொன்னான் ”மூச்,சத்தம் போடக்கூடாது!”
அதன் பின் தளர்நடையிட்டு தன் குட்டிப்படுக்கைக்குச் சென்று
அவன் அழகிய பொம்மைகளைக் கனவுகண்டான்
கனவுகாணும்போது ஒரு தேவதையின் பாடல்
நம் நீலக்கண் பயலை எழுப்பியது
அது எத்தனையோ காலம் முன்பு
வருடங்கள் பல சென்றுவிட்டன
ஆனால் பொம்மை நண்பர்கள் விசுவாசமானவர்கள்

நீலக்கண்குட்டிப்பயலின் கட்டளைக்குப் பணிந்து அவர்கள்
அதே இடத்தில் நின்றிருக்கிறார்கள்
அவனுடைய குட்டிக்கைகளின் தொடுகை வந்து எழுப்புவதற்காக
அவன் குட்டி முகத்தின் புன்னகைக்காக
வருடங்களாகக் காத்திருக்கையில்
அந்த குட்டி நாற்காலியின் தூசுப்படலத்திலிருந்தபடி
அவர்கள் எண்ணிக்கொண்டார்கள்
அவர்களை முத்தமிட்டு அங்கே நிற்கவைத்துச் சென்ற
நீலக்கண் குட்டிப்பயலுக்கு என்ன ஆயிற்று என்று

உயிருள்ளவைக்கும் உயிரற்றவைகளுக்குமான வேறுபாடு நம் அக்கறையில், பிரக்ஞையில்தான் இருக்கிறது போலும். அண்மைய ஊட்டி விஷ்ணுபுர அரங்கில் திருமூலநாதன் தேர்ந்தெடுத்த திருக்குறள் பற்றிய விவாதத்தில் இந்த குறள் பற்றியும் பேசப்பட்டது.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். (குறள்: 1070, அதிகாரம்: இரவச்சம்)

இரப்பவருக்கு யாசகம் மறுத்து அவன் இறந்தபின்தான், அவருக்கும் உயிர் இருந்தது என்பது நம் பிரக்ஞையில் உதிக்கிறது என்றொரு வாசிப்பை அளிக்கலாம் என்று சொல்லப்பட்டது. உயிருள்ளவர்களும் ஜடப் பொருட்களாகத்தான் இருக்கிறார்கள். உயிரற்றவையும் உயிர் கொள்ள முடியும்.

கதையைப் பற்றி பேசி முடித்ததும், நேமம் கோவில் அர்ச்சகர் அங்கு வந்த எங்களைப் பற்றி விசாரித்தார். “இந்த பிள்ளையார் கோவில் வாசல்ல இருந்த ரெண்டு கல் யானையை காணும்… நீங்க வேற யானை செத்துப் போச்சுன்னு என்னென்னமோ பேசுறீங்க… சிசிடிவி பாத்து மெட்ராஸ்லேந்து ட்ரஸ்டி போன் அடிச்சார்… ரொம்ப நேரமா மூணு கார் நிக்குதேன்னு விசாரிக்கச் சொன்னார்,” என்றார். இப்படியாக இலக்கியக் கூட்டம் சிலை திருடும் கும்பலாக ஆனது.

அர்ச்சகருக்கு அவர் அறிந்த யானை செத்ததைப் பற்றி கவலை இருக்கத்தானே செய்யும். நாங்கள் அந்த யானையைப் பற்றி பேசவில்லை என்றறிந்தபோது அவருக்குள் மற்றுமொருமுறை யானை செத்திருக்கும்.

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10615

https://www.jeyamohan.in/2010#.WwulaEgvzIU

No comments:

Post a Comment