புத்தகங்கள்

Pages

Friday, June 5, 2020

நீலகண்டம்- ஸ்ரீதேவி கண்ணன் வாசிப்பு

|(ஸ்ரீதேவி கண்ணன் அவர்களை கடலூர் நற்றிணை கூடுகையில் சந்தித்தது நினைவில் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் அவர் நீலகண்டம் குறித்து எழுதிய பதிவை இங்கே பதிகிறேன். நன்றி)

ஆட்டிஸம் பாதித்த வர்ஷினி என்ற குழந்தையின் பின் அமைந்த கதை. அவளைப் போல் எதுவும் தெரியாமல் எதையும் பேசாமல் நமக்கே நமக்கான கற்பனை உலகில் வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தைத் தான் விட்டுச் செல்கிறது இக்கதை. 

உன் மனைவியை உன்னுடனே தக்க வைக்க சாகும்வரை செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும் இது ஒரு தோல்வியடைந்த பிஸினஸ் மாடல் என்று எந்த சமூக கட்டமைப்பை உடைத்து பேசும் ஹரி.

 காதலர்கள் திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் சவால்களில் குழந்தையின்மையும் சேர்ந்து கொண்ட செந்தி ரம்யா சேர்ந்து வருவை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அன்புக்கும் வன்மத்துக்குமான போராட்டத்தில் ஒவ்வொரு முறையும் மனம் வன்மத்தின் பக்கமே சாய்கிறது வன்மம் அளிக்கும் நிறைவை அன்பு அளிப்பதில்லையோ? காதல் காலப்போக்கில் எப்படி காணாமல் போகிறது என்பதற்கு "எனது நேற்றைய நான் நிராயுதபாணியாக ஓடி ஒளிந்துகொள்ளும். கருணையற்ற தன் தடித்த கால்களால் எனது புதிய நான் அந்த கழுத்தை நெரித்து விடுகிறது. அன்பும் காதலும் நிறம் வெளிறிய கண்ணாடி சில்லாக இப்படித்தான் புதைந்து விடுகிறது." ஆனால் காலத்தோடு இயங்க அந்த புதிய நானுக்கு விரும்பி ஒப்பளிக்கிறோம். 

வீட்டிலிருக்கும் மனைவி கணவனின் பணி முடித்த கால தாமத வருகைக்கும் தூங்காமல் காத்திருப்பது பழையவள். அவளையே பொருளாதாரத் தேவைக்கு வேலைக்கனுப்பிய பின் அங்கே அந்த பழைய நானை மீட்டிவர முடியாது. அவளின் பழைய நான் செல்லரித்திருக்கும்.

 சலிப்பு, குளிர்ந்த கற்பாறையாக இறுகிக்கிடக்கிறது.
 சலிப்பே எல்லாவற்றையும் இயக்கும் மூலப்பொருள் ஆகிவிடுகிறது என்பது போன்ற வாழ்வியல் எதார்த்தத்தை பேசுகிறார்..

அழகான ஒரு அக்ஷரா தேசத்தை வருவின் கற்பனையில் வடிக்கிறார்.
" தன் கூரிய முனையால் எல்லோரையும் குத்தி விரட்டும் முட்களை கொண்ட கடிகாரம் என்பதே அந்த தேசத்தில் எங்குமே கிடையாது. எழு... குளி... சாப்பிட என்ற எதுவும் அவர்களை துரத்த முடியாது.  காலத்தை அவர்கள் மற்ற உயிர்களைப் போல் வெளிச்சமாகவும் இருட்டாகவும் பசியாகவும் தூக்கமாகவும், பூக்கும் மலர்களாகவும் கொட்டும் மழையாகவும் சுடும் வெயிலாகவும் மட்டுமே அறிந்திருந்தனர்" இந்த கற்பனை தேசம் இந்த கொரோனா தடையில் நிகழ்தேசமாகியிருக்கிறது. மேஜிக்கல் ரியாலிசம் ரியல் மேஜிக்கானது கண் முன். 

"செங்காந்தளின் நச்சு எங்கும் பரவியது, நன்றியின் பிரியத்தின் நச்சை மனிதர்கள் விரும்பி ஏற்றார்கள்" என்பதில் செங்காந்தள் என்ற தேசத்தின் குறியீட்டை வைத்து உள்நாட்டு அரசியலை பேசுகிறார்.

 ஐன்ஸ்டீன் நியூட்டன் ஜெஃபர்சன் மொஸார்ட் என்று கற்றல் குறைபாடுள்ள இவர்கள் விஞ்ஞானிகள் ஆனதை போல் வருவும் ஆவாள் என்று முழு நம்பிக்கையோடு வளர்ப்பவள் ரம்யா.  கோணல் கூட வரமாகிவிட முடியும். மேதைமைக்கும் பிறழ்வுக்கும் இடையில் ஊடாடுவது ஒரு மெல்லிய திரை"  என்ற நம்பிக்கையில் சாமானியர்களுக்கும் மேதைகளுக்குமான வேறுபாடு ஆட்டிஸம் தான்  என்ற முடிவுக்கு வந்து வளர்க்கும் ரம்யா. இதில் அக்கறை ஏதும் காட்டாமல் கரையான் அரிக்கும் பூர்வீக அரண்மனை வீட்டை கைவிடவும் முடியாமல் விற்கவும் முடிமாமல் பராமரிக்க தவிக்கும் செந்தி.. இருவருக்குமான உள்மனம் வெவ்வேறாக இருக்கும்போது அமுது நஞ்சாவதும் நஞ்சு அமுதாவதும் எந்த கணத்தில் நிகழ்கிறது என்றறிய முடியாதபடி ரம்யா தன் தாய் வீட்டோடு சேர்ந்த பின் வருவின் மீதான பிடிப்பு விலகுவதும் செந்திக்கு ஈர்ப்பாவதுமாக மாறுகிறது.  

 இதைத்தான் நீலகண்டர் கதை மூலம் "இவர்கள் அவர்கள் ஆகவும் அவர்கள் இவர்கள் ஆகவும் யார் இவர்கள் என அறிய முடியாத படிக்கு கடைதல் நிகழ்ந்து கொண்டிருந்தது" என்கிறார்.

 "இவ்வுலகம் நீலகண்டர் களால் ஆனது அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள்.

 தங்கள் பிரியத்தின் அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். என்ற படிமத்தின் மூலம் இதை நிறுவுகிறார்.

ஆயுர்வேத மருத்துவராக இருந்தும் சோதனை குழாய் மூலம் குழந்தை பேற்றிற்கு  ஆகும் செலவையும் ஒவ்வொன்றிற்கான பேரத்தையும் பகடி சித்திரமாய் சொல்கிறார். புராணங்களில் பரஞ்சோதி முனிவர் கதையும் நடைமுறையில் உள்ள ரயில் கதையும் கதைக்குள் வருகிறது. நம்பூதிரி, நாகம், நம்பிக்கை என்று பழமை சார்ந்தும் கதைகள் விரிகிறது. கருப்பு வெள்ளையும் அல்லாத கலரும் அல்லாத ஈஸ்ட்மன் நிறமொத்த காட்சிகளால் கற்பனை விரிகிறது. பின் இணைப்பு மூலம் சுபம் முடிவு தந்த ஒரு படத்தை பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment