Thursday, June 11, 2020

ஒரு துளி நீலம்- அலகில் அலகு தொகுப்பு குறித்து


வேணு வேட்ராயனுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வேணு நவீன மருத்துவர், மெய்யியல் நாட்டம் கொண்டவர்.

மெய்யியலுக்கு மிக நெருக்கமான கலைவடிவம் கவிதைதான். நவீன காலகட்டத்தில் கூட அரவிந்தரின் சாவித்திரி மெய்யியலை பேசும் கவிதை வடிவ காப்பியம் தான். தமிழில் மெய்யியல் தள கவிதைகளுக்கு பாரதி துவங்கி ஒரு மரபு இருக்கிறது. பிச்சமூர்த்தி, நகுலன், பிரமிள், அபி, தேவதேவன், தேவதச்சன் ஷங்கர், சபரி வரை அது நீள்கிறது. வேணுவின் கவிதைகள் சபரி அல்லது ஷங்கரின் கவிதைகளில் இருக்கும் பகடித்தன்மை இல்லாதது. ஆகவே சமகாலத்திலிருந்து விலகியது. அபி, தேவதச்சன் கவிதைகளுக்கு நெருக்கமானது வேணுவின் கவியுலகம் என தோன்றியது. தமிழ் கவிதைகளின் மெய்யியல் தளம் அதிகமும் வேதாந்தம் சார்ந்தது. தொகுப்பில் உள்ள முதல் கவிதையே இந்த தொடர்ச்சியை சுட்டுவதாக ஆகிறது.  

இருள் அது மருள் அது \
ஒளி அது அருள் அது 
துயில் அது விழி அது 
என இசைத்த்னமையுடன் ஒரு அடுக்கை உருவாக்கி செல்லும் அக்கவிதை இப்படி முடிகிறது. 

திரிசடை அதிர் நிலம் உகிர் தோய் உதிரம் 
பற்றி நாளமெல்லாம் நீரோடும் நெருப்பு 
படபடபட சடசடசட
நடனமிடும் குளம்படிகள் 
சுழன்றடிக்கும் காற்றில் புரளும் செந்தீயின் 
பிடரி 
சுடரும் மலரிதழ் மேல் அனந்தசயனம் 
சாந்தம் சாந்தம் சாந்தம் 

ஒரு பெரும் இயக்கத்தை, நடனத்தை சுட்டிவிட்டு அவ்வியக்கத்திற்கு சாட்சியாக மலரில் அமைதியாக சயனித்து இருப்பதை காட்டி முடிகிறது இக்கவிதை. 

வேணுவின் கவிதைகள் பலவும் காட்சித்தன்மை கொண்டவை. பெரும்பாலும் ஒரு காட்சியை/ அவதானிப்பை கூறி நின்றுவிடும். இத்தகைய கவிதைகளில் எந்த காட்சியை கவிதை ஆக்குகிறார் எனும் தேர்வே அதை கவிதை ஆக்குகிறது. வேணுவின் கவிதைகளில் தோன்றும் காட்சிகள் இயல்பாகவே ஆழமான அடுக்குகள் கொண்டவை என கூறலாம். உதாரணமாக 

சிறு சிறு குட்டைகளில் 
தேங்கி நிற்கிறது 
முன்னொரு காலத்தின் பெருநதி 
அவை ஒவ்வொன்றிலும் 
உதித்தெழுகிறது 
அதிகாலைச் சூரியன். 

ஒரு மழைகால காட்சி தான். ஆனால் குடாகாசம் மடாகாசம் எனும் வேதாந்த உவமையுடன் இணைத்து புரிந்துகொள்ள முடியும். 
மற்றொரு கவிதையையும் சொல்லலாம் 

அந்தரத்தில் ஆடும் 
சிறுகிளையில் 
வனவேந்தன் சிலையென 
வீற்றிருக்கிறது ஒரு குரங்கு

ஒரு காட்சி துணுக்கு தான். ஆனால் சுடரும் மலரிதழில் ஒரு அனந்தசயனம் எனும் பயன்பாடு சுட்டும் அதே தளத்தை இதுவும் சுட்டுகிறது. மனமெனும் குரங்கு என மரபில் புழங்கும் பயன்பாட்டை கணக்கில் கொண்டால் அசையும் புறம் அசையா அகம் என சாட்சி பாவத்தை காட்டுவதாக இக்கவிதையை பொருள்கொள்ள முடியும். ஏறத்தாழ இதே நிலையை இதே பாணியில் சொல்லும் மற்றொரு கவிதை – தனிமையில் வளரும் நள்ளிரவு நிலா/ உறக்கத்தில் புரளும் கடல் அலைகள்/ அலையலையாய் மோதிச்செல்லும் மழைகாற்று/ கருவறையில் உதைத்து விளையாடும் செல்ல குழந்தைகள்/ மின்னல் இடும் கணப்பொழுது கோலங்கள்/ மௌனமாய் விழித்திருக்கும் இரவு. இங்கும் நிலா, அலைகள், மழை, குழந்தை, மின்னல் என அனைத்தும் இயங்கிக்கொண்டிருக்க அதை இரவு வெறுமே விழித்திருந்து நோக்கிக் கொண்டிருக்கிறது. தொகுப்பின் தலைப்பிற்குறிய கவிதையும் இதே அசைவின்மை அசைவு எனும் எதிரீடை பேசுகிறது. சரேலென பறந்து/ சரிந்து இறங்கி/ நிலைத்த நீரின் மேல் நின்றது/ ஒரு நிறமற்ற பறவை/ அலகில் அலகு பொருத்தி/ அலைகளிலாடும் தன்னை/ அது/ அருந்திவிட்டுச் சென்றது.’  கார் காலத்தில் மேகம் மறைக்கும் சூரியன் என்பதொரு காட்சி. அதை ‘வேங்களிறேறி / காரிருள் வனத்தினில்/ செந்தழல் கனி தேடுதல்’ என கவிதையாக்குகிறார் 

நீரினில் விழும் 
ஒரு துளி நீலம்
உடைந்து சிதறும் 
கண்ணாடி குடுவை 
வெளியினில் நீந்தி 
விளையாடும் மீன்கள் 

பாதசாரியின் ‘மீனுக்குள் கடல்’ எனும் தலைப்பு நினைவில் எழுந்தது. அகவெளியும் புறவெளியும் எல்லைகளை உடைத்து ஒன்றாவதன் சித்திரத்தை அளிப்பதாக ஒரு வாசிப்பை அளிக்க முடியும். ஒரு துளி நீலம் என்பது மனதிற்குள் வளர்ந்தபடி இருக்கிறது. ஒரு நல்ல கவிதையின் கூறு என இதை சொல்லலாம். ஏறத்தாழ இதேபோன்ற வெளிகளுக்கு இடையிலான எல்லைகள் கரைவதை குறிக்கும் மற்றொரு நல்ல கவிதை – சிறு பூக்கொலத்தின்/ இரு இதழ்களை கரைத்து/ சின்னஞ்சிறு பூக்களென/ பெரும்பரப்பில்/ இறைத்து சென்றிருக்கிறது மழை.’   

கவிதை தத்துவத்திற்கு நெருக்கமானது போலவே குழந்தைமைக்கும் நெருக்கமானது. ஏனெனில் கற்பனையின் வலுவில் நிற்பது. வேணுவின் இக்கவிதை தேவதச்சனின் கவியுலகிற்கு நெருக்கமானது

மெதுவாக நழுவி 
உண்டியலுக்குள் விழ்ந்துகொண்டிருந்தது
அந்திமாலை சூரியன்
ஒரு நள்ளிரவில்  
என் கை நழுவி 
மண் உண்டியல் விழுந்துடைந்து 
சேமித்த சூரியன்கள் சிதறி 
உருண்டோடக்கூடும் 

மற்றொரு கவிதை- ‘முடிவின்றி/ சொட்டிக்கொண்டிருக்கும்/ கடிகார முட்கள்/ அடியற்ற/ ஆழத்தில்/ விழுந்துகொண்டிருக்கும்/ காலத்துளிகள். கடிகாரம் வழிந்து ஒழுகும் டாலியின் சர்ரியலிச ஓவியத்தை நினைவுபடுத்தும் கற்பனை. தேவதச்சனின் ‘வாழ்வின் வினோத நடனம்’ கவிதையை நினைவுபடுத்தும் கவிதை என ‘இலை உதிரும் கணத்தில்/ தொடங்கும் ஒரு நடனம்/ இலை உதிரும் தருணம்/ நிகழும் ஓர் நடனம்/ மரணம்.’ கவிதையை சொல்லலாம். வேணுவின் கவிதைகளில் சில சிறப்பான வரிகள் கவிதையை செறிவாக்குகின்றன. ‘சிறு மனக்கூட்டில் கூச்சலிட்டபடி/ ஆயிரம் அலகுகளால் தீராத எண்ணங்களை/ தின்றுகொண்டிருக்கின்றன. குருவிக் குஞ்சுகள்/ மரக்கிளையில் தனித்துவிடப்பட்ட/ பறவைக்கூடொன்று/ தரையில் விழுகிறது சத்தமின்றி. ‘சிற்பி வகுத்த இலக்கணம் மீறாமல்/ வீற்றிருக்கிறாள் அணங்கு’ எனும் பயன்பாடு சட்டென ஒரு காட்சியாக விரிகிறது.  
  
பதுங்கி இருந்து பார்த்தல் நலம் 
சிறிதுதூரம் மெல்ல பின்தொடர்தலும் நலமே 
அண்டுவதற்கு இடமற்ற 
தனியொரு வெளியில் 
யாரும் இடைவராத தருணம் 
நாலுகால் பாய்ச்சலில் 
நகங்களால் பற்றி 
வலுத்த தாடையின் கோரை பற்கள் 
உயிரைத் தீண்டுதல் உச்சம் 
சுடும் குருதியை சுவைக்கையில் 
குற்ற உணர்வு கொண்டால் 
நீயெல்லாம் என்ன வேட்டை விலங்கு|?

எனும் இக்கவிதை இத்தொகுப்பில் உள்ள வேணுவின் பிற கவிதைகளிலிருந்து வெகுவாக வேறுபடுகிறது. பொதுவாக தவழும் அமைதியிலிருந்து ஒரு உணர்வு கொந்தளிப்பை சுட்டுகிறது. எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று என சொல்வேன். 

சில கவிதைகளில் குறுஞ்சித்தரிப்புகள் உள்ளன. அவை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. சில கவிதைகள் வெறும் காட்சி துணுக்குகளாக எஞ்சி விடவும் செய்கின்றன. சில கவிதைகள் ஒரு சிந்தனையோட்டம் எனும் நிலையில் நின்றுவிடுவதும் உண்டு. சூரியன், நிலா, ஒளி மலர் பறவை, மீன், கடல் என பழகிய படிமங்களையே வேணு அதிகமும் பயன்படுத்துகிறார் என தோன்றியது. சில கவிதைகளுக்கு ஒருவித வானம்பாடி தன்மையை அளிக்கிறது என எண்ணுகிறேன்.

இறுதியாக தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று. ஒருவகையில் தாஸ்தாவேசஸ்கிக்கு மரியாதை செலுத்தும் கவிதை என சொல்லலாம். (அசடன் எனும் சொல் ஒன்றிற்காக மட்டும் அல்ல.)  
அசடனாக இருக்கிறாய்
விலகி விலகி 
ஓடி ஒளிந்து கொண்டு 
ஒரு குழந்தை வந்து உன்னை கண்டுபிடிக்கும் 
என 
கற்பனையில் காத்திருக்கிறாய் 
அசடன் அசடன் 
குழந்தைகளோ தங்களுக்குள் 
வேறெங்கோ கண்ணாமூச்சி 
ஆடிக்கொண்டிருக்கிறார்கள் 
ஒரு பூதத்தின் முரட்டு கரங்கள் மீண்டும் உன்னை 
வெளிச்சத்தில் வீசும்போது 
இவ்வுலகம் ஏன் இவ்வளவு கொடுமையானதாய் இருக்கிறது 
என 
மேலும் ஒரு அசட்டு கேள்வி கேட்கிறாய் 
ஒரு வாழ்வை 
வெறும் காலம் கடத்தும் கேலிக்குரியதாய் ஆக்குகிறாய் 
வாழ்வோ உன்னை கேலிக்குரியனாய் ஆக்குகிறது 
அசடன் அசடன் 
இருள்நீக்கும் இச்சிறு நெருப்பின் மேல் 
காரணங்களின் ஒற்றை பெருமூச்செறிகிறாய் 
அதுவோ  நீ இதுவரை அறியாத காரணங்களால் 
எரிந்துகொண்டிருக்கிறது 
அசடாய் இருக்கிறாய் 
வேறென்ன சொல்ல 

வேணு ஒரு கவிஞராக முன்னோடியின் நீட்சியும், அதிலிருந்து தனக்கான தனித்த குரலையும் கண்டைந்தவராக தெரிகிறார்.  அவருடைய முதல் தொகுப்பில் சில பிரமாதமான கவிதைகளும் கவிதை வரிகளும் காணக் கிடைக்கின்றன.  விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது பெற்றதற்கு கவிஞர் வேணு வேட்ராயனுக்கு வாழ்த்துக்கள். 

அலகில் அலகு
விருட்சம் வெளியீடு 
விலை -60 



1 comment:

  1. Yogeswaran from South Africa here. I would like to talk to you. I am a South African of Sri Lankan origin. my whatsApp: 0094766312955

    ReplyDelete