Monday, June 1, 2020

ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அகவெளிப் பயணங்கள்

(தமிழினி இதழில் முன்னர் வெளியாகியிருந்த கட்டுரை. ஹக்ஸ்லியின் இறுதி காலத்தை கொண்டு ஒரு புனைவு எழுத வேண்டும் எனும் எண்ணம் எனக்குண்டு.)


“Eternity” he answered. “Believe it or not, it’s as real as shit.” – Island, Aldous Huxley 

ஆல்டஸ் ஹக்ஸ்லியை ஒரு பெயராக எப்போதோ அறிந்திருந்தேன். இப்போது நினைவுகூரும் போது அது ஜூலியன் ஹக்ஸ்லியாக இருக்கக்கூடும். ஜூலியன் ஆல்டஸின் சகோதரர். பேர்போன பரிணாமவியல்  ஆதரவாளர், அறிவியலாளர். இவர்களின் தாத்தா தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி பரிணாமவியல் கோட்பாட்டை தீவிரமாக முன்னெடுத்தவர். சென்ற ஆண்டு திமோதி ஸ்னைடர் எழுதிய ‘கொடுங்கோன்மையைப் பற்றி (On tyranny)’ நூலை வாசிக்கும் போது “சர்வாதிகாரத்தின் வழிமுறைகளை அறிய வேண்டுமெனில் ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ வாசியுங்கள், அதைவிடவும் தீவிரமாக அவருக்கு வெகுகாலம் முன்னரே சர்வாதிகாரத்தின் முகங்களைப் பேசிய நாவல் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘Brave New World’ வாசியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.



புத்தகத் தேடலின்போது தற்செயலாக அகப்பட்டதுதான் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் தேர்ந்தெடுத்த எழுத்துக்கள் அடங்கிய ‘மோக்ஷா’ எனும் தொகுதி. இந்நூல் அவர் ‘சைகடெலிக்’ (மனதின் மீது தாக்கம் செலுத்துபவை) மருந்துகளை உட்கொண்ட அனுபவத்தையும், அதையொட்டிய அக தரிசனங்களையும் பற்றிப் பேசுகிறது. இரண்டு பகுதிகளைக் கொண்டவை. முதல் பகுதி ‘சைகடெலிக்’ மருந்துகளைப் பற்றியும், இரண்டாம் பகுதி அவருடைய மறைஞான மற்றும் தரிசன அனுபவங்களையும் உள்ளடக்கமாகக் கொண்டது. வருட வாரியாக அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கடிதங்கள், கட்டுரைகள், நாவல் பகுதிகள், நினைவுக் குறிப்புகள் என பலவும் இடம்பெற்றுள்ளன. பெயோடி (Peyote) எனும் மெக்ஸிக கள்ளிச்செடியிலிருந்து எடுக்கப்பட்ட ‘மெஸ்கலின்’, புனிதத்தன்மை கொண்டதாக நம்பப்படும் மெக்ஸிக காளானிலிருந்து எடுக்கப்பட்ட சிலோசைபின் (Psilocybin) மற்றும் எல்.எஸ்.டி ஆகியவற்றை வெவ்வேறு காலகட்டங்களில் உட்கொண்ட அனுபவங்களை இந்நூலில் விவாதிக்கிறார்.

அமெரிக்காவில் ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளிலும் செல்வாக்கு பெறத் துவங்கிய எதிர்கலாச்சார இயக்கத்தின் துவக்கப் புள்ளிகளில் அவரும் ஒருவர். கிழக்கின் பவுத்தமும் யோகமும் தாந்த்ரீகமும் மேற்கை வசீகரிக்கத் துவங்கிய காலகட்டம் அது. மாக்ஸ் முல்லர், விவேகானந்தர் போன்றவர்களை ஒரு துவக்கப் புள்ளியாக கருதினால்கூட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் மேற்கு அதிகமும் கிழக்கை நோக்கி தன் கவனத்தைக் குவித்தது. பரமஹம்ச யோகானந்தர், ஹிப்பி இயக்கம், மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ என்றொரு வட்டம் உருவானது. ஹக்ஸ்லி ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடியுள்ளார். வேதாந்தம் மற்றும் பவுத்தம் சார்ந்து ஆழ்ந்த புரிதல்கள் அவருக்கிருந்தன. ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி பிரபவானந்தரின் மீது மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவராக இருந்தார். ‘Vedhantha and the West’ எனும் ஈர்மாதத்தொரு பத்திரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். ஹக்ஸ்லியின் குரு பிரபவானந்தர் லாகிரி வழி ஆன்மீகத் தளத்தை அடைய முடியும் எனும்  பார்வையை ஏற்கவில்லை. இவை ஆன்மீக விழிப்புக்கு எதிரானவை என நிராகரித்தார். எனினும் ஹக்ஸ்லி அவர் மீது நன்மதிப்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். ‘The Divine Within’ எனும் அவருடைய மற்றொரு நூலில் இவை விவாதிக்கப்பட்டுள்ளன (இந்நூல் ‘Vedhantha and the West’ இதழுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு)

ஹக்ஸ்லியின் துவக்க கால எழுத்துக்கள் மறைஞான மறுப்பை உள்ளடக்கமாக கொண்டவை. அவற்றைக் கேலி செய்பவை என ‘The Divinity Within’ நூலின் முன்னுரையில் சுட்டுகிறார் ஹ்யுஸ்டன் ஸ்மித். ஆனால் காலப்போக்கில் அவருடைய நிலைப்பாடு மாறியது. 1930களில் வெளியான அவருடைய மிகப் புகழ்பெற்ற நாவலான ‘Brave New World’ உருவாக்கிக் காட்டிய ‘சோமா’ எனும் அருமருந்து (கண்ணீர் இல்லாத கிறித்தவம், ஒரு புட்டிக்குள் அறம்) என்பதிலிருந்து 60களில் வெளிவந்த அவருடைய இறுதி நாவலான ‘Island’ உருவாக்கும் ‘மோக்ஷ’ (ஞானத்தை, விடுதலையை அடைவது) மருந்துக்கும் இடையிலான நெடும் பயணம் அவர் வாழ்க்கை என நூல் அறிமுகத்தில் குறிப்பிடுகிறார் அலெக்சாண்டர் ஷுல்ஜின். ‘சோமா’ புறச் சூழலுக்கு தொடர்பற்று எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கும் வஸ்து. சர்வாதிகாரத்தின் ஆயுதமாகச் செயல்படுகிறது. ஒருவகையான தப்பித்தல். ‘ஜோர்பா எனும் கிரேக்கன்’ நாவலில் கசன்ஜாக்கிசின் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது. மகிழ்ச்சிக்கும் விடுதலைக்கும் இடையிலான தேர்வில்  மனிதகுலத்தின் பெரும்பான்மையினர் மகிழ்ச்சியையே தேர்வு செய்வார்கள். ஹக்ஸ்லி மகிழ்ச்சியைத் தேர்வு செய்வதிலிருந்து துவங்கி விடுதலை நாட்டத்தை அடைகிறார். அதன் பொருட்டு துணிவுடன் மரணத்தைத் தழுவவும் தயாராக உள்ளார். ‘மோக்ஷா’ தப்பித்தலுக்கு வழி கோலுவதில்லை. நேர்மாறாக முழு விழிப்புணர்வைக் கோருவது.

மனிதருக்கு போதை ஏன் தேவையாய் இருக்கிறது எனும் கேள்வியை எதிர்கொள்ளும் ஹக்ஸ்லி, ‘அவை சுவைமிக்க விடங்கள், நட்பற்ற உலகின் மத்தியிலே வாழும் மனிதர்கள் அவை வழியே குறுகிய கால, நிலையற்ற சொர்க்கங்களை தங்களுக்கென கட்டமைத்துக் கொள்கிறார்கள்’ என்கிறார். மூன்று திசைகளில் நாம் சுயத்தைக் கடக்க முடியும்- கீழ்த்திசை, கிடை மட்டம் மற்றும் மேல்நோக்கி. இதில் மது, அதீத பாலியல் செயல்பாடுகள், கும்பல் மனப்பாங்கு (இதற்கு அவர் பயன்படுத்தும் சொல் ‘herd poisoning’) போன்றவை சுயத்தை கீழ்த்திசையில் இழுத்துச் செல்பவை. சுயத்தைக் காபந்து செய்வதற்கு பழங்களும், காய்களும், பருப்புகளும் சரியானவை, ஆனால் சுய திருப்தியின்மை நிலையில் தன்னைக் கடக்கும் உந்துதல் இருக்கும் போது தனது பிரக்ஞையை மாற்றும் எந்த ஒரு பொருளும் அது மேலானதாகவோ கீழானதாகவோ எப்படி இருந்தாலும் சரிதான். ஆகவே தான் அழிவைத் தரும் என்று அறிந்தும் மக்கள் மதுவை நாடுகிறார்கள். காபந்து செய்யப்பட சுயத்திலிருந்து தப்பிக்க மனிதன் பயன்படுத்திய எத்தனையோ வழிகளில் மதுவும் ஒன்று. தொன்மையான எல்லா மதங்களிலும் ஏதோ ஒருவகையில் போதையூட்டும் பொருட்கள் சடங்குகளின் வழியாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு மதமும் பல தளங்களில் இயங்குவன. ஒரு தளத்தில் சடங்குகளாக, மற்றொரு தளத்தில் குறியீடுகளாக, மற்றொரு தளத்தில் குறியீடுகளில் செலுத்தும் அன்பு, பக்தி, அச்சம் போன்ற ஆதார உணர்வுகளாக, இறுதியாக அதன் ஆழத்தில் ஒருவகையான முன்னறிவாக- எல்லாவற்றிற்கும் இடையில் நிலவும் ஓர்மை உணர்வாக. இவ்வனுபவத்தை அடைவதையே இறைவனோடு சேர்தல் என மறைஞானிகள் குறிக்கின்றனர் என தன் புரிதலைச் சொல்கிறார்.

1931 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், ‘இது கண்டுபிடிப்புகளின் யுகமாக இருந்தாலும் நவீன கண்டுபிடிப்பாளர்கள் ஆரோக்கியமான புதிய இன்பத்தை நுகரும் முறையை இதுவரை கண்டடையவில்லை. இதற்கு நாம் மரபான வழிமுறைகளையே சார்ந்திருக்கிறோம்,’ என்கிறார். நவீன கால இன்பங்கள் எந்த வகையிலும் நம்மை மேம்படுத்துபவை அல்ல, அதற்கு பிரபஞ்சமளாவிய தன்மை ஏதுமில்லை. ஒரு வகையில் வேகத்தை வேண்டுமானால் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கொள்ளலாம், ஆனால் அதுவும் ஆபத்து நிறைந்ததே என வாதிடுகிறார். ஒரு லட்சிய போதை மருந்து என்னவாக இருக்கும் எனும் கேள்வியை ‘Brave new world’ நாவலில் எதிர்கொள்கிறார். ‘அது மூன்று வேறுவிதமான விளைவுகளை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மகிழ்வை, (Euphoric) பிரமையை (Hallucinating), அமைதியை (Sedative), என ஒன்று சேர முடியாதவற்றின் கலவையாக இருக்க வேண்டும்’. அவருடைய ‘சோமா’ இத்தகைய ஒரு கனவுதான். ஐம்பதுகளில் இதே கேள்வியை எதிர்கொள்ளும்போது அவருடைய விடை மாறிவிடுகிறது. அடிமைப்படுத்தக் கூடாது, பிரக்ஞையை சுருக்கக் கூடாது, உடல் ரீதியாக எவ்வித குறுகிய கால மற்றும் நீண்ட கால உபவிளைவுகள் நேரக் கூடாது, ஹேங் ஓவர் இருக்கக்கூடாது. மெஸ்கலின், எல்.எஸ்.டி போன்றவை இத்தகைய இயல்புகள் உடையவை என்றே கருதினார். ‘மோக்ஷா’ இந்தக் கனவுகளின் விளைவில் உருவானது. ஹக்ஸ்லி தன் வாழ்நாளில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் லாகிரிகளை உட்கொண்டார். லாகிரியை முன்மொழிவதாக புரிந்துகொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்ட போது அது குறித்த எச்சரிக்கைகளையும் பிற்கால எழுத்துக்களில் விடுத்தார். ஓர் அறிவுஜீவிக்கு மகத்தான சிம்பொனி என்ன விளைவை ஏற்படுத்துமோ அதை மது சாமானியர்களுக்கு ஏற்படுத்துகிறது என்று சொன்ன அவரே மதுவின் சமூகக் கேடுகளை சுட்டி கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். மேலும், முழுமையாக போதையூட்டிகளை தடை செய்ய இயலாது. அபரிமிதமாக கிடைப்பதால் ஏற்படும் ஆபத்துகளைக் காட்டிலும் அவை தடை செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கிறார்.



அவர் சர்வாதிகாரம் குறித்து பல நுட்பமான கருத்துகளை கொண்டிருந்தார். அச்சம் மக்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பயனற்ற முறை என்பதை ரோமானியர்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டார்கள். ஆகவே வருங்கால பிரசாரகர்கள்/ சர்வதிகாரிகள் நிச்சயமாக வேதியல்/ மருந்தாளுநர்கள் மற்றும் உடற்கூறியல் நிபுணர்களாகவே இருக்க முடியும் எனக் கணித்தார். ‘மருந்தாளுமையை இலக்கியத்துடன் ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சார வழிமுறை வெல்லப்பட முடியாததாக இருக்கும்’ என்பது அவருடைய ஆரூடம். பொதுவான நுண்ணறிவு மற்றும் மன விழிப்பு நல்ல மக்களாட்சியின் குறைந்த பட்ச தேவை, அவையே முற்றதிகாரத்தின் எதிரியும்கூட என்று எழுதினார்.

பண்பாடு குறித்த ஹக்ஸ்லியின் புரிதல் முக்கியமானது. பண்பாட்டு மறுப்பிற்கும் பண்பாட்டு துதிக்கும் இடையிலான பாதையை தேர்வு செய்கிறார். நாம் விரும்பியோ அல்லாமலோ ஒரு பண்பாட்டுச் சூழலில் புழங்குகிறோம். அதை ஆக்கப்பூர்வமாக முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேவேளை அது நம்மை முழுவதுமாக மூடிவிடவும் அனுமதிக்கக் கூடாது. அதில் படைப்பூக்கத்துடன் சில பொத்தல்களை இடவேண்டியது முக்கியம். அதன் வழியாக நம் பிரக்ஞை விரிவடையும். குழந்தைமையில் நாம் சுளுவாக புழங்கிய உலகத்தையும், பிழைப்புக்கு தேவையான நவீன கல்வி கட்டமைத்த உலகத்தையும் ஒருங்கிணைப்பது எப்படி என்பதைப் பற்றிய கேள்விகள் அவருக்கு இருந்தன. மீண்டும் மீண்டும் இவ்விரு உலகங்களில் இருந்து சிறந்தவற்றை எடுத்துக் கோர்க்க வேண்டும் என கனவு கண்டார். தன்னியல்பும் தொழில்நுட்பமும் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றன. அதி உயர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தும் சூழலில் மனிதன் தன்னியல்பாக வெளிப்பட அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார். தொழில்நுட்பம் மனித இனத்தின் சட்டவிதிகளுக்கு ஏற்ப வளர்வதில்லை. அது தன் போக்கில் தன்னிச்சையாக வளர்கிறது. மார்க்சிய உலகிற்கும் முதலீய உலகிற்குமான முக்கியமான வேறுபாடாக ஹக்ஸ்லி இதையே முன்வைக்கிறார். மார்க்சியம் எல்லா எல்லைகளையும் கடந்து முழுவதுமாக மனித சமூகத்தை தொழில்நுட்பமயமாக்க முயல்கிறது ஆனால் முதலீய சமூகத்திற்கு அப்படி தன்னை முற்றளிப்பதில் உடன்பாடில்லை. இன்னமும் தனிமனித சுதந்திரத்தை நம்பி, ஜனநாயக அமைப்புகள் மீது பற்று கொண்டிருக்கிறோம். இதற்கு மிக தொன்மையான உதாரணத்தை அளிக்கிறார். பழைய ஏற்பாட்டில் அரசர் டேவிட் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு யேஹோவாவின் விருப்பை மீறி (அதாவது சாத்தானின் எண்ணத்திற்கு இணங்க) ஆணையிடுகிறார். அப்போதே மக்களுக்கு ‘எண்ணிக்கை’ குறித்து எதிர்மறை எண்ணம் இருந்ததை உணர முடிகிறது என்கிறார். அதை அவர்கள் அரசின் ஊடுருவல் என்றே கருதினார்கள் என்கிறார்.

ஹக்ஸ்லி ஒட்டுமொத்த மானுட வரலாறே சுயத்திலிருந்து வெளியேறும் யத்தனங்களால் நிறைந்தது எனும் கோணத்தில் அணுகுகிறார். அவருடைய ஒரு உரை இப்படித் துவங்குகிறது- ‘வரலாற்றின் நெடும்பாதையில் தன் மதத்திற்காகவோ நாட்டிற்காகவோ உயிர் துறந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிக மக்கள் தத்தமது மதுவிற்காகவும் போதைக்காகவும் உயிர் துறந்தார்கள்.’ அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மாநாட்டில் ‘மதமே வெகுமக்களின் மயக்க மருந்து (ஓபியம்)’ எனும் மார்க்சின் மேற்கோளை ‘மயக்கமே (ஓபியமே) வெகுமக்களின் மதம்’ என தலைகீழாக்குகிறார். மனிதன் நெடுங்காலமாக தானற்ற நிலையை அடையவே முயல்கிறான். ‘Doors of Perception’ கட்டுரை வழியாக அவர் வந்து சேரும் இடம் என்பது மனிதனின் அத்தனை முயற்சிகளும், அவன் தற்செயலாக ஆழத்தில் நுழைந்து மறுபக்கத்தை காண உதவி பின்னர் நினைவிலிருந்து நழுவிப்போன கதவைக் கண்டடைவதற்காகத்தான் என்பதாகவே உள்ளது. கடும் உண்ணாவிரதம், புலன்களை ஒடுக்குதல், குழு நடனம், மது, இசை, பிராணாயாமம், தியானம் என பல்வேறு வழிகளை இதற்கென உருவாக்கியிருக்கிறான் ஆதி மனிதன். பிராணாயாமத்தை குருதியில் கரியமிலவாயு அதிகமாக்கும் முயற்சி என்கிறார். நேரடியாக கரியமில வாயுவை சுவாசித்து வினோதமான பிரமை தரிசனங்களை அடைய முயற்சிக்கிறார். உணவு பழக்கம்கூட இன்றைய காலகட்டத்தில் அக தரிசனத்தை தடை செய்கிறது என்கிறார். தூக்கமின்மை வழியாகவும் அக தரிசனங்களை அடைய முடியும். நவீன காலகட்டம் தரிசனவாதிகளுக்கு உரியதாக இல்லை. அவர்களை எவரும் நம்பத் தயாராய் இல்லை. இப்படியான தரிசனங்களுக்கும் படைப்பூக்கத்திற்கும் தொடர்பு உண்டு. ஆனால் தரிசன அனுபவங்கள் இல்லாமலே மேலான இலக்கியம் இருக்கவும் முடியும் என்கிறார். பெரும்பாலான தரிசன அனுபவங்கள் எழுத்தில் பதிவாவதில்லை. தரிசன தெறிப்புகள் மானுட மேன்மைக்கு செயல்பட்டுள்ளன. அவை குறியீடுகளாக நிறுவப்பட்டுள்ளன. சட்டென நினைவுக்கு வருவது பள்ளியில் பென்சீன் வடிவத்தை தன் வாலைக் கவ்வும் சர்ப்பமாகக் கனவு கண்டு விழிப்பது, ஆர்சிமிடிசின் யுரேகா தருணம் போன்றவை. சக்கரம், நெருப்பு என மாபெரும் கண்டுபிடிப்புகள் ஏதோ ஒருவகையில் ஆழமான சமிங்ஞை வழி பெறப்பட்டிருக்கக் கூடும்.



ஹக்ஸ்லி ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் புள்ளியில் இயங்கினார். ஆன்மீக அனுபவங்களை தர்க்கப்பூர்வமாக விளக்க முயன்றார். அவர் தன்னைப்பற்றி சொல்லும்போது “மறைஞான அனுபவத்தை ஒரே நேரத்தில் ஆன்மீக தளத்தில், உளவியல் தளத்தில் உயிர் வேதியல் தளத்தில் பேசவியலும்,” என்றே சொல்கிறார். ‘நரிக்கு பல விடயங்கள் தெரியும் ஆனால் முள்ளம்பன்றிக்கு ஒன்றே தெரியும்,’ எனும் உவமை வழியாக தன்னை நரியாகவும் துறை வல்லுனர்களை முள்ளம்பன்றியாகவும் உருவகப்படுத்துகிறார். பல்வேறு கூடுகைகளில் மருத்துவம் சாராத ஒரே குரலாக அவருடையது ஒலித்திருக்கிறது. மனித மூளை சாமானியச் சூழலில் பிழைப்பதற்குத் தேவையான அளவில் தன்னை குறுக்கி வெளிக்காட்டுவது. நோய், உணர்வுபூர்வ அதிர்ச்சி, அழகியல் அனுபவம், மறைஞான விழிப்பு போன்றவை வெவ்வேறு வகையில் வெவ்வேறு அளவில் மூளையின் இயல்பான செயல் தளத்தை மட்டுப்படுத்துபவை, அதன்வழி பிரக்ஞையை ‘மற்றைய உலகிற்கு’ உயர்த்துபவை என்கிறார். இப்பகுதிகளை கொண்டு தியாகராஜரின் ராமநாம தவத்தை, இயேசுவின் குரல் கேட்பதாக சொல்வதை, சன்னதத்தை என பலவற்றை பற்றிய புரிதலை விரிவாக்கிக் கொள்ள முடிகிறது. மனச்சிதைவு நோயால் ஆட்படுவதில் உள்ள வசதி வாய்ப்புகள் யாவை என பேராசிரியர் ஒருவருடன் சேர்ந்து ஆராய்ந்து வருவதாக கடிதம் எழுதுகிறார். மெஸ்கலின் வேதியல் ரீதியாக அட்ரினலினோடு நெருக்கமாக தொடர்புடையதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதைச் சொல்கிறார். ஆன்மீக மறைஞான அனுபவங்கள் நிகழும்போது பலரும் அச்சத்தையும் நடுக்கத்தையும் அடைந்திருக்கிறார்கள். ஆணவம் சூழ்ந்த எளிய உயிராக கட்டற்ற ஆற்றலுக்கு முன் தற்செயலாக நிற்கும்போது ஏற்கப்படும் அச்சமும் நடுக்கமும் தான் அது என்பது அவருடைய பார்வையாக இருக்கிறது. ஹக்ஸ்லி பிற அறிவியல் ஆய்வாளர்களிடமிருந்து வேறுபடும் முக்கிய இடம் என்பது இத்தகைய நிலைகளை இயல்பிற்கு மீறிய பிறழ்ச்சி என அவர் கருதவில்லை. மாறாக அவை நாமறியா நோக்கங்களுக்காக நம்முள் இருக்கும் ஒரு பகுதி என்றே கருதுகிறார்.

1953 ஆம் ஆண்டு முதன்முறையாக மெஸ்கலின் எடுத்துக் கொள்கிறார். அவருடைய முதல் மனைவி மரியா அவருடன் இருந்தார். ஹக்ஸ்லியின் நெருங்கிய நண்பராக, இந்நூலில் தொகுக்கப்பட்ட பெரும்பாலான கடிதங்களுக்கு உரியவர் டாக்டர் ஹம்பரி ஆஸ்மான்ட். அச்சமும் தயக்கமும் சூழ ஹக்ஸ்லியின் மெஸ்கலின் சோதனையில் உடனிருந்தார். அவர்தான் அதை ஹக்ஸ்லிக்கு அறிமுகம் செய்தவர். அந்த அனுபவத்தைதான் பிற்காலத்தில் ஹக்ஸ்லி ‘Doors of Perception’ என்றொரு நூலாக்கினார். விந்தையாகவோ விநோதமாகவோ அவர் எதையும் காணவில்லை ஆனால் பிரபஞ்சத்தின் சமநிலையை, ஒருமையை உணர்ந்ததாகச் சொல்கிறார். காலமில்லா முழுமையை உணர்ந்து அதில் லயித்ததாகச் சொல்கிறார். அக தரிசனமும் மறைஞான அனுபவமும் முற்றிலும் வேறானவை. எனினும் ஒன்று மற்றொன்றை நோக்கி இட்டுச் செல்லலாம். மெஸ்கலின் உட்கொண்டபோது தனக்கு நேர்ந்தது அழகியல் ரீதியான தரிசன அனுபவம் என்றும், பின்னாட்களில் எல்.எஸ்.டி மற்றும் மெஸ்கலின் வழியாக நேர்ந்தது இவற்றைக் கடந்த வேறொரு அனுபவம், மேற்கிலும் கிழக்கிலும் சொல்லப்படும் அகவய- புறவய எனும் இருநிலை கடந்த நிலை அனுபவமானது என்கிறார். இந்த மறைஞான அனுபவங்கள் எவ்விதத்திலும் முழு விடுதலையை உறுதிப்படுத்தாது என்பதை அறிந்தே இருந்தார். அவருடைய முதல் மனைவி மரியா சில ஆண்டுகளில் மரணித்த பின் இரண்டாம் மனைவி லாரா ஹக்ஸ்லியின் எல்.எஸ்.டி அனுபவத்தை ஆவணப்படுத்துகிறார். அப்போது அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒரு கணத்தில் ஹக்ஸ்லியால் லாராவுள் ஊடுருவி அவருடைய எண்ண ஓட்டத்தை தன்னிச்சையாக அறிய முடிந்ததை பதிவு செய்கிறார். ஆனால் ஹக்ஸ்லிக்கு அது குறித்து எந்த பிரக்ஞையும் இல்லை.



ஹக்ஸ்லி மனதை பல்வேறு சுவைகள் கொண்ட அடுக்குகளாக உள்ள ஐஸ்க்ரீமோடு ஒப்புமை படுத்துகிறார் *(Neopalitan Ice- ஏறத்தாழ கசாட்டா போன்று என வைத்துக் கொள்ளலாம்). ஒவ்வொரு அடுக்கும் தனித்த ருசியுள்ளது. அதேபோல் பிரக்ஞையும் தனித்துவமானது. மருந்தாளுமை நாம் விரும்பும் அடுக்குக்கு நம்மைக் கச்சிதமாக கொண்டு சேர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்கிறார். ஹக்ஸ்லி அளிக்கும் உதாரணங்கள் ஆச்சரியபடுத்துபவை. அதுவரை ஆஸ்திரேலியா எனும் கண்டத்தை கண்டடையாத முதல் பயணி அங்கு சென்றதும் கற்பனையில்கூட எண்ணி பார்த்திராத கங்காரு, பிளாட்டிபஸ் போன்றவற்றை காணும்போது திகைத்து விடுவான். அவை அங்குதான் உள்ளன, ஆனால் நாமறியாத, நம் பாதை வசப்படாத வெளியில் உள்ளன. அக வெளியிலும் அப்படியான விந்தையான நிலபரப்புகள் உள்ளன. மினோடார், யாளி, டிராகன், மகிஷன், நரசிம்மம் என மனிதன் படைத்த விந்தையான உருவங்களை, கலவைகளை எங்கிருந்து பெற்றிருக்க முடியும்? ஜெயமோகனின் ‘பனி மனிதன்’ இப்படியான கனவுத் தன்மையுள்ள இடங்களை தொட்டுச் செல்கிறது. ‘வெண்முரசி’ன் ‘பன்னிரு படைக்களம்’ நாவலில் பிரம்மன் மேதாவோடு முயங்கி விந்தையான உலகை சிருஷ்டிப்பதை சொல்கிறார். அந்தப் பகுதிகள் ஹக்ஸ்லியின் கூற்றுக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. கற்பனைக்கும் அக தரிசனத்திற்குமான மிக முக்கியமான வேறுபாடு என்பது அக தரிசனத்தின் போது பொருட்களுக்கு மேலதிக முக்கியத்துவம் என ஏதுமில்லை. அவை எதுவாக இருக்கின்றனவோ அதை மட்டுமே பிரதிநிதப்படுத்துகின்றன. அவை எவற்றின் குறியீடும் அல்ல. அவை வெளிப்பட்டு நிலைபெற்றபின் குறியீடுகளாக விளக்கப்படுகின்றன.

ஒரு அத்தியாயத்தில், ஏன் ரத்தினக் கற்களுக்கு இத்தனை மதிப்பு என்றொரு கேள்வியை எழுப்புகிறார் ஹக்ஸ்லி. தொன்மையான எல்லா மதங்களிலும் சொர்க்கத்தைப் பற்றிய விவரணைகள் ஏறத்தாழ ஒன்று போலவே உள்ளன. பெரும்பாலான தேவதை கதை காட்டும் உலகங்களிலும் இரத்தினங்களுக்கு முக்கிய இடமுண்டு. அங்கே எல்லாம் ஜொலிக்கின்றன, மின்னுகின்றன. எல்லாமும் அதிவேகமாக மட்கி மறைந்து கொண்டிருக்கும் நம் உலகில் அவை அழிவற்றதன் பிரதிநிதியாக, மற்றைய உலகை நினைவுபடுத்தும் விதமாக திகழ்கின்றன. ஆகவே அவை மதிப்புமிக்கதாக உள்ளன என்றொரு வாதத்தை முன்வைக்கிறார். எல்லா ரத்தினங்களும் ஏதோ ஒருவகையில் படிகமாக்கப்பட்ட தீ என்கிறார். சொர்க்கம் ஒரு இலக்கல்ல, அது முழுமையை மேலும் தெளிவாக நோக்குவதற்கான ஒரு பார்வைத் தளம். நரகத்தின் விவரணைகள் உளவியல் அளவில் உண்மை. அவ்வனுபவங்களை உளச்சிதைவுற்ற நோயாளிகள் அனுபவிக்கிறார்கள். நரகத்தின் தண்டனைகள் எல்லாமும் இறுக்குவதை, அழுத்தம் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. நம் பிரக்ஞையை இறுக்கி கல்லாக சமைத்தலே அதன் நோக்கம். சொர்க்கம் நரகம் போன்றவற்றை அகவயமான உருவகங்களாக முன்னிறுத்துகிறார்.

உடலற்ற நிலையில் எண்ணங்களும் உணர்வுகளும் பருப்பொருட்களாக வடிவம் கொள்கின்றன. திபெத்திய பார்டோ தளத்தில் மரணத்திற்குப் பின் சென்று சேரும்போது அங்கே அஞ்சுவதற்கு ஏதுமில்லை. அடிப்படை ஒழுங்கமைவு உள்ளதே இப்பிரபஞ்சம் எனும் பிரக்ஞை வேண்டியதாய் இருக்கிறது. நன்மைக்கும் தீமைக்குமான வேறுபாடுகளை ஹக்ஸ்லி பெரிதாக ஏற்கவில்லை. நல்ல மனிதருக்கு சொர்க்க அனுபவம் உறுதி என சொல்ல முடியாது. உண்மையில் இயேசு வழி தவறிய ஆட்டுக்குட்டியை கையில் ஏந்துவதற்கு வேறு அர்த்தங்களை ஹக்ஸ்லியின் கூற்றைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். மெஸ்கலின்கூட அனைவருக்கும் ஒரேவிதமான அனுபவத்தை அளிக்காது. சில நேரங்களில் சிலருக்கு அச்சமூட்டும் கொடூர அனுபவமாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் பதிவு செய்கிறார். ஏனெனில் அறிவு என்பது பொதுவானது என்றாலும் புரிதல் தனித்துவமானது.

வெறும் தியானம் நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது. பிரக்ஞை விரிவுடன் கருணையும் அன்பும் சேர வேண்டியது முக்கியம் என கருதினார். ஹக்ஸ்லி தூய வேதாந்தத்தின் பாதையைக் காட்டிலும் போதிசத்வரின் பாதையையே முன்வைத்தார். வேதாந்தத்தின் பாதையை அவர் மறுபரிசீலனை செய்தார். விடுதலை என்பது தனி ஒருவனுக்கு இருக்க முடியாது, அப்படி இருந்தால் அது எவ்வகையிலும் பொருளுடையது அல்ல. ஆகவே அது ஒட்டுமொத்த மானுட குலத்துக்கானதாகவே இருக்க முடியும் என கருதினார். தியானத்தின் வழி அடையப்பெருவது அன்பின் நிமித்தம் வெளியே அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆழமாக நம்பினார். அன்பே உலகை பிணைக்கும் ஆற்றல் என கருதினார்.

அவருடைய ‘Island’ நாவலின் ஒரு பாத்திரத்தின் மரணத் தருவாயில், கணவன் ‘மோக்ஷ’ மருந்தை அவளுக்கு அளிப்பான். அருகமர்ந்து திபெத்திய மரணமடைந்தவர்களின் புத்தகத்திலிருந்து வாசகங்களை வாசிப்பான். அமைதியாக துணிவுடன் மரணத்தை ஏற்கச் செய்வான். அப்போது மோக்ஷ மருத்துவத்தை மறுப்பவருக்கும் அளிப்பவருக்கும் இடையிலான ஒரு விவாதம் நிகழ்கிறது.

“மூளை பிரக்ஞையை உற்பத்தி செய்கிறது என நீ நம்ப விரும்புகிறாய். அது பிரக்ஞையை கடத்துகிறது என நான் நம்ப விழைகிறேன். உன் விளக்கத்தைக் காட்டிலும் என்னுடையது எந்த வகையிலும் நம்பகமற்றது அல்ல,“ என எழுதுகிறார்.



மரணத்தை ஒரு பயணமாக, வேறோர் தளமாகவே அவர் கண்டார். “முழு மரணத்திற்கான தயாரிப்பு என்பது உன் மிக உயர்ந்த மற்றும் மிகத் தீவிரமான வாழ்வின் வடிவத்துடன் உடன் வருவது, எப்போதும் நிகழும் சிறிய தொடர் மரணங்கள், அதை சார்ந்தே இருக்கின்றன. நாம் மீளமீளவரும் நினைவுகளுக்காக மரிக்க வேண்டும். மிகத் தெளிவாக இதை நினைவுகூரும் அதே வேளையில் அது குறித்து அஞ்சவும் கூடாது,” என்று ஒரு கடிதத்தில் எழுதினார். ஹக்ஸ்லியின் ‘ஐலேன்ட்’ ஒரு தீர்க்கதரிசனம்தான். லாரா ஹக்ஸ்லி ஆல்டசின் மரணத் தருவாயைப் பற்றி எழுதுகிறார். புற்றுநோய் வந்து சிகிச்சைகள் பயனளிக்காமல் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜான் எப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட அதே நாள் ஹக்ஸ்லி அவருடைய இல்லத்தில் மரணமடைந்தார். இருமுறை எல்.எஸ்.டி எனும் அவருடைய மோக்ஷ மருந்தை உட்கொண்டு, லாரா ஹக்ஸ்லி அவரருகே அமர்ந்து திபெத்திய மரணமடைந்தவர்களின் புத்தக வாசகங்களை வாசிப்பதை கேட்டபடி, அமைதியாக, முழு பிரக்ஞையுடன் உடல் நீங்கினார். பொறாமைப்படத்தக்க, கவித்துவமான மரணம். பல தளங்களில் திறப்புகளை அளிக்கவல்ல நூல் இது. எனினும் எல்லாவற்றையும் வேதியலாக, நரம்பியலாக சுருக்க முடியுமா என குழப்பம் நேர்கிறது. இத்தனை தர்க்கபூர்வமான பதில்களை அளித்துவிட்ட பின்னரும் அவை சார்ந்து நம்பிக்கையின்மையும் நிறைவின்மையும் இருக்கிறது. ஹக்ஸ்லி இந்தியச் சூழலில் விரிவாக வாசிக்கப்பட வேண்டியவர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அவருடைய மொழி, கவித்துவமான படிமங்கள் மற்றும் சிந்தனை தெறிப்புகள் நம் படைப்பூக்கத்தை பெருக்க வல்லவை.

ஓடுகிற நீரில் ஐஸ் கட்டிகளை உண்டாக்க முயலக் கூடாது – ஆல்டஸ் ஹக்ஸ்லி

No comments:

Post a Comment