(பதாகையில் வெளிவந்தது. மீள் பிரசுரம. கொஞ்சம் திருத்தியிருக்கிறேன்.)
வரிசை நெடுக கூட்டமோ கூட்டம்.
வாயில் கதவு ஒரு தொலைதூர கருந்துளை என எங்கோ தெரிந்தது.
ரொம்ப காலமாக நின்று அலுத்துவிட்டது.
வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்த எனக்குப்பின் முன்னிருப்பது போல் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது.
விட்டுவரவும் மனமில்லை.
வியர்வை வழியும் கழுத்தில் பவுடர் பொதிந்த கைக்குட்டையைச் சுற்றியிருந்தார் முன்னாலிருப்பவர்.
பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து நெடுநேரமாகத் துழாவியபடி இருந்தார் பின்னாலிருப்பவர்.
யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
தொலைவில் துவங்கிய பரபரப்பு அலையாக என்னை வந்தடைந்தது.
தாழ் திறக்கப்பட்டுவிட்டது.
கதவு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.
“தகுதியுடையவர்கள் இவ்வழி,” என வலப்பக்கம் ஒரு பாதை திரும்பியது.
தயக்கமே இன்றி திரும்பினேன்.
“தனித்துவமானவர்கள் இவ்வழி,” என மற்றொரு பாதை பிரிந்தது.
ஐயமே இல்லை. அதுவே என் வழி.
“சிறப்புடையவர்கள் இவ்வழி,” என திறந்தது மற்றொரு பாதை.
அவ்வழியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரையும் காணவில்லை நான்.
முன்னவரின் பவுடர் நெடி மட்டும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது.
நெடுந்தூரப் பாதை மற்றுமொரு பிரிவில் சென்று முட்டியது – “தன்னம்பிக்கை கொண்டவர்கள் இவ்வழி” என்றது.
முடிவெடுப்பதற்குள் நான் அந்த பாதையில் சென்று கொண்டிருந்தேன்
குறுகியும் இருண்டும் சுழன்றும் குளிர்ந்தும் சென்றது அப்பாதை.
தொலைவிழியாக தெரிந்த ஒளி மெல்ல கீற்றாக மாறியது.
வானுயரத் தெரிந்த வெள்ளை மதில் சுவரில் சென்று முட்டியது பாதை.
வெற்றுச்சுவரை வெறித்தபடி அங்கே அமர்ந்திருந்து பெருங்கூட்டம்.
சுருட்டு பிடித்தப்படி திரும்பிய அவன், “இந்தா வந்துட்டான்யா 934… சவுத்த மூதி எம்புட்டு தடவதான் திரும்பி வருவானோ,” என்றபடி சுருட்டை கீழே போட்டுவிட்டு காலால் தேய்த்துவிட்டு முனகினான்.
திகைப்பு அடங்கியதும், கண்ணுக்கெட்டிய உயரம் வரை வளர்ந்த வெள்ளை சுவரை வெறித்தபடி குந்தி அமர்ந்தேன்.
குறைந்த பட்சம் சுடச்சுட ஒரு கிளாஸ் தேநீராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
No comments:
Post a Comment