புத்தகங்கள்

Pages

Sunday, June 7, 2020

அந்த 9 பேர்- சிறுகதை

(பதாகையில் வெளியானது- மீள் பிரசுரம்)

காக்கி கால்சட்டையும் மூக்கு நீண்ட தோல் பூட்சும் அவனை காவலன் எனக் காட்டின. உடற்கட்டும் மயிர்வெட்டும் முறுக்கிய மீசையும் அதை உறுதியாக்கியது.  “எழுத்தாளர் பழுவேட்டையன் இருக்காரா?” பணிவாக அந்த பி ப்ளாக் இரண்டாம் மாடியில் எச் 3 குடியிருப்பின் வாசலில் நின்று கேட்டான்.

“அப்படி யாரும் இல்லியே?” என்றாள் மூச்சிரைக்க கதவை திறந்த குண்டு அம்மாள் நரைத்த கூந்தலை அள்ளி முடிந்தபடி.

கைவைத்த பனியனும் ஏற்றிக் கட்டிய லுங்கியுமாக உள்ளறையிலிருந்து வெளியே வந்து கால் மிதியில் காலை அழுத்தித் தேய்த்து கொண்டிருந்தார் அவர். முன்வழுக்கை சற்றே நீண்டு புறங்கழுத்து வரை இறங்கிக் கொண்டிருந்தது. தலையிலிருந்து உதிர்ந்த மயிர் உடலில் விழுந்த இடங்களிலெல்லாம் முளைத்திருந்தன.

காவலன் அவருக்கு வணக்கம் வைத்தான்.

‘இவுரு பேரு சுப்பிரமணியன்ல?”  என்றாள் மிரண்டு போய்.

“சுப்பிரமணியங்கல்லாம் நல்லா எழுதுவாங்களாம்.. சார் கூட காதல் சொட்டச் சொட்ட அருமையான கவிதைங்க எல்லாம் எழுதுவார்மா..” அதிர்ச்சியா ஆச்சரியமா என இனம் காணமுடியாத உணர்ச்சியில் அவளுடைய முகம் உறைந்து போயிருந்தது. நேராக அவரைப் பார்த்து பேசினான்

“சார் நா ஒங்க வாசகர் சார்” என குழைந்தான்.

அவர் முகத்தில் பென்சில் தொலைத்த சிறுவனின் பதட்டம் தென்பட்டது.

“உண்மையிலேயே சார்.. ஒங்க ப்ளாக்ல நீங்க எழுதுன “எருமை தோல் பொதிந்த உன் இதயத்தை என் சிறுநெருஞ்சி மன்மத பானங்கள் துளைக்காதா?’ அபாரமான கவிதை வரி சார்…”

இப்போது படபடப்பு அதிகமாகி அக்குள்களில் பெருகிய வியர்வை பனியனை நனைத்தது.

“சார் நான்தான் சார் தேன் மலர்.. ஒங்க ப்ளாக்ல நீங்க எழுதுன எல்லாத்துக்குமே “அபாரம்”னு கமென்ட் போடுவேனே..”



மூச்சு சற்றே சீரானது. பெரிய மஞ்சள் பூவை காதில் செருகிக் கொண்டிருக்கும் சுட்டிப் பெண் குழந்தையின் படம் ஞாபகம் வந்தது. தேன் மலரின் முகப்பு படம். இருந்தாலும் சந்தேகம் தீரவில்லை. திடுதிடுப்பென வாசகன் என சொல்லிக்கொண்டு ஒருவன் வந்து நிற்க முடியும் என்பதை கற்பனைகூட செய்தவரில்லை. அவரது வலைப்பூவை வாசிக்க அவரை தவிர்த்து எப்போதும் ஒன்பது பார்வையாளர்கள் மட்டுமே வருவார்கள். அந்த ஒன்பது பேருமே பின்னூட்டமும் இடுவார்கள். “அபாரம்” , “பிரமாதம்”, “நாசம்”, “உச்சம்”, “மனதைத் தைக்கிறது”, “அருமை”, “great”, “bull’s eye”, “புரட்சி வணக்கம் தோழர்”. அவர் அவர்களை அப்படித்தான் நினைவில் வைத்திருந்தார். ஒவ்வொரு பின்னூட்டமும் எத்தனை மணிக்கு வரும் என கச்சிதமாக அறிந்துமிருந்தார். 11:27 க்கு “நாசம்”, 20:47க்கு “புரட்சி வணக்கம் தோழர்”. ஒருமுறை நள்ளிரவில் வரவேண்டிய “bull’s eye” மறுநாள் மதியம் வரை வரவில்லையே என நாள் முழுவதும் குடைச்சலாக இருந்தது. யாருக்காக எழுதுகிறோம்? எழுதி என்ன பயன்? விரக்தியின் விளிம்பில் எழுதுவதை நிறுத்தி விடலாமா என ஆழ்ந்துச் சிந்தித்து கொண்டிருக்கையில் “bull’s eye” வந்து சேர்ந்ததும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. பேரருளாளனின் பெருங்கருணை!

“சார் ஒரு சின்ன வாசக சந்திப்பு .. அதான் ஒங்கள கூட்டிட்டுப் போலாம்னு வந்தேன்”, என்றான் அந்த ஆறடி உயரத்தவன்.

கால்கள் இரண்டும் தன்னிச்சையாக அதிர்ந்தன. நா வறண்டு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு வார்த்தையே வரவில்லை.

“ஒரு அரமன்னேரம்தான்.. நீங்க வரத்தான் வேணும்.. உத்தரவு வந்திருக்கு”, என்று மடித்து வைக்கப்பட்ட தாளை சட்டையின் உள் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் காட்டினான். வேர்வையில் ஊறி உப்பு ஏறிய தாளை வாங்கிப் படிக்க வேண்டியதில்லை என்பதை புரிந்துகொண்டார்.

குண்டு அம்மாளின் குழப்பமான பார்வையை பொருட்படுத்தாமல் சட்டை மாட்டிக்கொண்டு வேறு மார்க்கமில்லை எனப் புறப்பட்டார்.

குடியிருப்புக்கு வெளியே சாலையின் திருப்பத்தில் அமரர் ஊர்தி போல ஒரு கருப்புநிற வேன் ஓரமாக நின்றிருந்தது. வண்டிக்கு அருகே வேட்டி கட்டிய ஒருவன் குந்தி அமர்ந்து ஒன்றுக்கு பெய்து கொண்டிருந்தான். இவர்கள் வந்ததும் அவசரமாக எழுந்தவன், வயிற்றில் நீட்டிக் கொண்டிருந்த வாக்கி டாக்கியின் ஆன்டெனாவை மறைத்துவிட்டு எழுந்தான். அவனை தினமும் தெருமுக்கில் உள்ள பேக்கரியில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அங்கு தான் சோகமே உருவாக எதையோ நினைத்தபடி டீ குடித்துக் கொண்டிருப்பான்.

“சார் வாங்க.. நா தா சார் ‘அந்திச்சூரியன்’.. ஒங்க தீவிர வாசகர் சார்.. ஓங்கட்ட இன்னிக்குதான் பேச சந்தர்ப்பம் கெடச்சுருக்கு”, என்று சிரித்து கைகுலுக்கினான்.

இதென்னடா சோதனை! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளிக்கிறாயே ஆண்டவா!

“ நான் குடிக்கும் காப்பிக்கு உன் பெயர் தானே சர்க்கரை”- எவ்ளோ ‘பிரமாதமான’ வரி சார்..”

இப்போது அவருக்கு இரண்டு குழப்பங்கள். இந்த வரியை நான்தான் எழுதினேனா? பாராட்டுக்களை வாசித்துக் கடந்துவிடலாம். நேரில் இப்படி முகத்திற்கு முன் பூரிப்புடன் சொல்லும்போது அதை எப்படி எதிர்கொள்வது? நாணச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.

வண்டியில் மூவரும் ஏறினார்கள். வண்டியின் உட்புறம் ‘அதி ரகசிய உளவுத்துறை – இந்திய அரசாங்கம்’ என சிவப்பு எழுத்துக்களில் எழுதி இருந்தது. அந்திச்சூரியன்  பணிவாக எழுந்து “மன்னிக்கணும் சார்..” என்றபடி ஒரு கருப்பு துணியை இரண்டாக மடித்து அவர் கண்ணை இறுகக் கட்டினான். தேன் மலர் அருகமர அந்திச் சூரியன் சாரதியாக வண்டி கிளம்பியது. .சற்று நேரத்துக்கெல்லாம் யார் கண்ணிலும் படாமல் இப்படியாக அண்ணா சாலை சிக்னலை கடந்து அந்தக் கருப்பு வண்டி ரகசியமாக சென்று கொண்டிருந்தது.

வண்டியில் ஏறியது முதல் எதற்காக நம்மை அழைத்துச் செல்கிறார்கள் என யோசித்து யோசித்து பார்த்தார். வரிகள் எல்லாம் கட்டிவிட்டோமே? இருந்த ஐநூறு ஆயிரத்தை கூட வங்கியில் போட்டாகி விட்டதே? வீட்டு நாய் என தெரியாமல் கல்லெறிந்ததற்காக எல்லாம் இத்தனை ரகசியமாக கூட்டிச் செல்ல மாட்டார்கள். சிறுவயதில் கைப்பழக்கத்தின் போது மாமாவிடம் மாட்டிக்கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. இத்தனை ஆண்டுகளில் தான் செய்த தவறுகளை எல்லாம் ஓட்டிப் பார்த்தபோது அவர் மீது அவரே காரி உமிழ்ந்துகொள்ள வேண்டும் என தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டார். இத்தனை கீழ்மையான ஆளாக இருந்திருக்கிறோம் என எண்ணியபோது நமக்கு இங்கு என்ன நடந்தாலும் அது சரிதான் என ஒரு முடிவுக்கு வந்தார்.



எவ்வளவு நேரம் கடந்தது என தெரியவில்லை. அவர் கண் கட்டை திறக்கையில் ஒரு பாலைவனம் போலிருந்த இடத்தின் மத்தியில் நின்றார். அவர்கள் இருவரும் ஓரிடத்தில் மணலை விலக்கினர். அங்கே ஒரு பாதாள சாக்கடை அடைப்பான் போல மூனாள்  விட்டத்தில் வட்டக் கதவு ஒன்றிருந்தது. அந்தி சூரியன் அதன் அருகே சென்று “அண்டா கா குசும்..அபு கா குசும்..திறந்துடு சீசே” என கூறியதும். அது திறந்து கொண்டது.



அந்த பாதாள வழி நல்ல வெளிச்சத்துடன் மிதமாக குளிர்ந்திருந்தது. அதன் முடிவில் ஒரு மேசையில் அதுவரை கணினியில் ஏதோ ஒன்று செய்த கொண்டிருந்த புடவை அணிந்திருந்த பெண் ஒருத்தி சட்டென எழுந்து நின்றாள். “ஆஹா ..பழுவேட்டையர்” என உலகி அழகி பட்டம் வென்றவள் போல் கன்னத்தில் கைவைத்து உற்சாகமாக கூவினாள். மாருதி வரைந்த ஓவியங்களில் இருப்பது போலெல்லாம் ஒரு பெண் உண்மையில் இருக்க முடியும் என அவர் அன்றுவரை நம்பவில்லை. ஒரு நல்ல குழாய் சொக்காய் அணிந்து வந்திருக்கலாம், பாழாய் போன இந்த சாரத்தை கட்டிக்கொண்டு வந்தோமே என வருந்தினார்.

‘சார் நா ஒங்க தீவிர ரசிகை சார்..” என்று மேசையிலிருந்த நோட்டு புத்தகத்தை எடுத்துக் காட்டினாள். அந்த 90 பக்க நோட்டு முழுவதும் பழுவேட்டையரின் கவிதைகளால் நிரம்பி இருந்தது.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!” என உருகினாலும், மிகுந்த பிரயாசையுடன் கண்ணீரை கட்டுப்படுத்திகொண்டார். அத்தனை நேரம் அவருக்கிருந்த அச்சம், பதட்டம், கவலை எல்லாம் தணிந்தது. இப்படியாக தனக்கொரு வாசகி இருக்கிறார் எனும் அதிர்ச்சியைக் காட்டிலும் இனி வேறு என்ன பெரிய அதிர்ச்சி இருக்க போகிறது! எதையும் தாங்கும் ஆற்றல் அவருக்கு அக்கணம் முதல் வந்துவிட்டது.

“நீங்க ‘விண்மினி’ தான?” என்றார் அவர். இருண்ட வானத்தில் ஒற்றை நட்சத்திரத்தைப் பார்க்கும் பொற்குழல் பெண்தான் விண்மினியின் முகப்புப்படம். .

“சார் எப்புடி சார்! என்றாள் விழி விரிய.

“ஒங்க கமெண்டுல எப்போதுமே ஒரு வாஞ்சை, ஒரு ஆத்மார்த்தமான உணர்ச்சி இருக்கும்” என்றார் நிதானமாக. ஆம் அந்த சிவப்பு பூ புடவைக்காரிதான் “மனதைத் தைக்கிறது” பின்னூட்டத்திற்கு உரியவள்.

“உன் கண்மணிகள் பற்றி எரியும் மின்மினிகளா? இல்லை சூப்பர்நோவா விண் மணிகளா?” இந்த வரிக்காகத்தான் சார் எம்பேரே விண்மினின்னு வெச்சேன்.” என்றாள்.

தேன் மலரும் , அந்திச்சூரியனும் அங்கேயே விடைபெற்றுக்கொள்ள, விண்மினி அவரை மற்றோர் கதவுக்கு அப்பால் அழைத்து சென்றாள். கூடுதல் துணை நிலை நுண் மதியாளர், அதி ரகசிய உளவுத்துறை, இந்திய அரசாங்கம் என பொறிக்கப்பட்டிருந்த கதவுத் துவாரத்தில் கண்ணை நெருக்கமாக காட்டியதும் கதவு திறந்து கொண்டது. உயரம் குறைந்த மேற்கூரை. ஜன்னலற்ற வெளிர் நீல அறை. விளக்கு எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் அறை முழுவதும் வெளிச்சம் பரவி இருந்தது. அங்கே சாம்பல் நிற சஃபாரி அணிந்து சட்டமில்லா கண்ணாடி அணிந்த ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த  ‘அவசரம்’ என எழுதப்பட்ட ஒரு கோப்பை மூடிவைத்துவிட்டு இன்முகத்துடன் வரவேற்றார்.



“வாங்க பழுவேட்டையன்.. உக்காருங்க” என்று எதிரில் இடப்பட்டிருந்த நாற்காலியை காட்டினார். அதில் ‘திரு. பழுவேட்டையன்’ என எழுதி ஒட்டியிருந்தது. விண்மினி அறையை விட்டு விலகிச் சென்றாள். படு பாவி கொஞ்சநேரம் அவள் கூடவே இருந்து தொலைக்க கூடாதோ? அவளின் அழகிய பின்புறம் அலுங்கிக் குலுங்கி செல்வதை காண்கையில் வீட்டுக்கு சென்றதும் இதைப்பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என மனதில் உறுதி பூண்டார்.

‘சிரமத்துக்கு மன்னிக்கணும்.. பயணமெல்லாம் சொகமா இருந்துதா?. போன வாரம் திங்கக்கிழம ஒரு மழ கவிதை எழுதி இருந்தீங்களே.. ரொம்ப அருமையா இருந்துது.. குறிப்பா வரிய சட்டுன்னு நெனவுக்கு கொண்டுவர முடியல.. ஆனா மழைய கடவுளின் மூத்திரத்தோட ஒப்பிட்டு எழுதி இருந்தீங்க.. அருமையான சிந்தன.. ஒரு வாரம் கழிச்சி கூட அத நியாபகம் வெச்சுருக்கேன் பாருங்களேன்’

ஓஹோ. அப்படியென்றால். இவன்தான் அந்த காலப்புழுவாக இருக்க முடியும். எட்டாகப் பின்னிய நாகங்களின் முகப்புப் படம் மனதில் பளிச்சிட்டது. பெருமிதம் கலந்த புன்னகையை அவருக்கு பதிலாக அளித்தார். அந்த பாவனை அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் தான் மூர்க்கமான பிரியத்தைச் சொரியும் வாசக ரசிகர்களை எப்படி எதிர்கொள்வதென ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்என்பதை எண்ணி மேலும் பெருமிதம் கொண்டார். வரிகளாக இன்றிச் சிந்தனைகளாக உட்புகுந்து ஆட்கொண்ட பெருமிதம். ‘இதில் சிந்திக்க என்னவிருக்கிறது?’ என மனதின் விளிம்பில் தலை தூக்கிய கேள்வியை ‘அவரவருக்கு ஆயிரம் வழிகள்’ என பல்வேறு சால்ஜாப்புக்களை சொல்லி அழுத்தி வைக்க முனைந்தார்.

“வாங்க போலாம்” என எழுந்து அவரை அழைத்துச் சென்றார் காலப்புழு. அவர் நாற்காலிக்கு கீழே எதையோ அழுத்தியதும். ஒரு பிலம் அங்கே உருவானது. இரண்டாள் விட்டமிருக்கும். உடல் சில்லிட்டது. மங்கிய வெளிச்சத்தில் கொஞ்ச தூரம் ஊர்ந்தபிறகு. முதன்மை நுண் மதியாளர், ஐக்கிய இந்திய அரசாங்கம் என செதுக்கபட்டிருந்த அறுகோண கதவு ஒன்று தென்பட்டது. அதன் மையத்தில் தெரிந்த கண்ணில் காலப்புழு சபாரி மேற்சட்டையை தூக்கி தனது உந்தி சுழியை வைத்து அழுத்தினார். அறுகோண கதவின் ஆறு மடைகளும் உள்ளிழுத்து கொண்டன. அடுத்தொரு கதவிருந்தால் அதை எப்படி திறப்பார்களோ என அவர் எண்ணியபோது உடல் விதிர்த்தடங்கியது.

ரத்தச் சிவப்பு சுவர்கள் கொண்ட நீள் வட்ட அறை. இவரை உள்ளே சேர்த்ததும் காலப்புழு வணங்கி திரும்பி சென்றார். தனது மடிகணினியை மூடிவைத்துவிட்டு சூட்டணிந்த அந்த இளைஞர் மென்னகையுடன் வரவேற்றார்.

“மிஸ்டர். பழுவேட்டையன்.. வெல்கம்.. கிரேட் டு ஹேவ் யு ஹியர்.. உக்காருங்க’ என்று அவன் காட்டிய இடத்தில் நாற்காலி ஏதுமில்லை. ஒருகணம் எழுத்தாளனை அவமதிக்கிறானோ என ஆத்திரம் வந்தது. நான் ஒரு மகத்தான எழுத்தாளன் எனும் மிடுக்கு அவர் உடல்மொழியில் புலப்பட்டது. கூடவே என்னை நீ அவமதிப்பது சரியல்ல எனும் தொனியும். “ப்ளீஸ்.. சும்மா உக்காருங்க..” என அவன் அந்தரத்தில் அமர்ந்து காட்டினான். அவன் கால் வளைத்து அமருவது போல் குனிந்தவுடன் அங்கே ஒரு நாற்காலி தோன்றியது. அவனுக்கு கச்சிதமாக பொருந்தும் நாற்காலி. அவரும் அதே போல் கால் வளைத்து காற்றில் அமர சென்றவுடன் ஒரு நாற்காலி முளைத்தது. அவருக்கென்றே உருவாக்கப்பட்ட நாற்காலி போல். நீட்டிக் கொண்டிருக்கும் வெளிமூலம் கூட கச்சிதமாக பொருந்தி, அவருடைய ஒவ்வொரு நெளிவு சுளிவுகளுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டது. சரியாக அமர்ந்தவுடன் ஒரு இயந்திரப்பெண் குரலில் “அடையாளம் உறுதி செய்யப்பட்டது” என நாற்காலி சப்தித்தது. அந்த அறையில் குளிரடங்கி மிதமான வெப்பம் நிலவியது. அத்தனை வாசகர்களையும் ஒன்றாகச் சந்தித்திருக்கலாமே, ஏன் இப்படி ஒவ்வொரு அறையாக கூட்டிச் செல்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தார். இப்போது இவன் என்ன சொல்லப் போகிறானோ என எண்ணியபோது மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது.

“நீங்க ஒரு யுனிக் ரைட்டர்..உங்க கிரேட்னஸ் ஒங்களுக்கு தெரியுமான்னு தெரில.. நீங்க தமிழோட வில்லியம் சிம்போர்கான்னு சொல்லலாம்… ஒங்ககிட்ட யாரும் சொன்னாங்களான்னு தெரில ஆனா நா சொல்றேன்.. ஏன்னா எனக்கு உலக இலக்கிய பரிச்சயம் நெறையா உண்டு.. சொற் பயன்பாடு கொடுக்கக்கூடிய எளிமைல எல்லாரும் ஏமாந்துடுவாங்க.. அதோட நுண்ணரசியல், சமூக விமர்சனம் மற்றும் ஆன்மீக தத்தளிப்பையும் ஆன்மீக சமநிலையையும்  யாரும் கவனிச்சாங்களான்னு தெரில… இப்ப உங்க காதல் கவிதைகள எடுத்திங்கன்னா.. ஒரு பக்கம் ஒரு ஆண் பெண்ணுக்கு ஏங்குவதா தோணும், மறுபக்கம் பரமாத்மாவைச் சேர துடிக்கும் ஜீவாத்மாவின் பிரிவாற்றாமைய குறியீடுகளாக, படிமங்களா சொல்லும்…. கவிதைகள்ல அபூர்வமான ஜென் தன்மையும் கலையமைதியும் ஒருவித சூஃபி மெய்ஞானமும் இருக்கு.. ஒரு கவிதல கூட இரும்பு.. கரும்பு.. அரும்புன்னு முடியுற மாறி அடுத்தடுத்த வரிகள் வரும்.. அதன் இசைத்தன்மை என்ன சொக்க வெச்சுருக்கு.. மத்தவங்கள பத்தி தெரியாது..ஆனா ஒவ்வொரு மொற கிரேட்ன்னு நான் கமண்ட் எழுதும்போதும் அத மனசாரதான் எழுதுறேன்”

அவன் பேசுவதைக் கேட்க கேட்க அவருக்கு பீதி அதிகமானது. முதலில் ஒரு பேரைச் சொன்னானே அதை திரும்பச் சொல்லச் சொல்லி கேட்கலாமா? கண்ணதாசன் பதிப்பகத்தில் போட்டிருந்த நூறு ஜென் கதைகள் நூலை வாசிக்க முனைந்ததும், அதில் கதையே இல்லை என இரண்டு பக்கங்களோடு நிறுத்திக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. இவனெல்லாம் வாசகனா? யார் இவனை இப்படியெல்லாம் வாசிக்கச் சொன்னார்கள்? இவர்கள் நடந்து கொள்வது ஒன்றும் சரியில்லை. எப்போது வீட்டுக்கு விடுவார்கள்? இவனோடு இந்த பயணம் முடிந்துவிட்டால் பரவாயில்லை எனச் சிந்தனைகள் தாறுமாறாக ஓடிகொண்டிருந்தன.

இத்தனை உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு, நூறாண்டுகள் பேசப்படபோகும் படைப்பாளிகளுக்கு உரித்தான தோரணையில் “நன்றி திரு சீக்கிங் வேண்டரர்’ அவர்களே. இன்னமும்கூட நீங்கள் ஆழ்ந்து வாசித்தால் வேறு பல தளங்கள் வருங்காலத்தில் உங்களுக்கு பிடிகிட்டக்கூடும். நீங்கள் நிச்சயம் நல்ல வாசகராக வளர முடியும். உங்கள் வாசிப்பு சரியான திசையில்தான் செல்கிறது.” என்றார்.

“போலாமா” என அவன் எழுந்தான். தொலைந்தோம். மேற்கூரையில் ‘அதி ரகசிய உளவமைச்சகம், ஐக்கிய இந்திய அரசாங்கம் என ஒட்டப்பட்டிருந்த இடத்தில் மண்டையால் முட்டினான். அவன் தலைக்கு மேலே ஒராள் விட்டத்தில் ஒரு துளை விழுந்தது. “நீங்க மட்டும்தான்.. போங்க” என அவரை அதற்குள் திணித்தான். சாரம் காற்றில் ஆட எக்கி உள்ளே சென்றதும் அந்த துளை மூடிக்கொண்டது. பளீர் வெண்மை. கண் கூசும் வெண்மை. ஒன்றுமே புலப்படவில்லை. கண் கொஞ்சம் பழகியதும் சுற்றும் முற்றும் நோக்கினார். அலையலையாக விரிந்த தாமரை இதழின் மையத்தில் அவரிருந்தார். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவருமே இல்லை. ஒருவேளை மோர்கன் ஃப்ரீமேன் வெள்ளை கோட்டு அணிந்து கொண்டு வருவாரோ என ஒரு ஐயம்கூட எழுந்தது. அசரீரி போல் ஒரு கம்பீர குரல் எங்கிருந்தோ ஒலித்தது.



“என்னடா மணியா, ரெண்டு மூணு நாளா ஏதோ ஆதார் கார்ட், ரேஷன் கார்டு, பேங்குல கூட்டம், பணமில்ல, காள மாடு,  சித்தி, பெரியம்மானுல்லாம்  எழுதிட்டு இருந்தீயே……. அதான் சும்மா சாரிக்கலாம்னு கூப்டேன்..”

மல்லாக்க கிடத்தி இளவட்டக் கல்லை தூக்கி வைத்தது போல் நெஞ்சிலும் வயிற்றிலும் பயங்கர கனம். புடரி வலித்து தலை சுற்றியது. மிகுந்த பிரயாசைப்பட்டு பேசினார்.

“அது ஏதோ கடுப்புல எளுதி போட்டேனுங்க” என்றார் குத்துமதிப்பாக ஏதோ ஒரு பக்கத்தை நோக்கி.

‘தெரியுது.. ரொம்ப போரடிக்குதோ? வேற ஒண்ணுமில்லையே? ஆங்..அப்புறம் நானும் உன் வாசகந்தாம்பா’

‘வேற ஒண்ணுமே இல்லிங்க்னா’ எச்சி கூட்டி விழுங்கி,  ‘தெரிஞ்சுகிட்டேங்க ..அந்த அகம் பிரம்மாஸ்மி.. சூரியன் படம் போட்டவரு நீங்கதானுங்க’

வெடி சிரிப்பு எல்லா பக்கத்திலும் இருந்து கேட்டது  “உச்சம்டா”.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நெடுநாள் உறக்கம் விட்டு எழுவது போல் அசதியாக அறையில் அமர்ந்திருந்தார். வியர்த்து விறுவிறுத்துக் கிடந்தார். அன்று நடந்ததை திரும்ப நினைவுகூர முற்பட்டார். விரல் விட்டு ஒவ்வொருவராக எண்ணத் துவங்கினார். அப்போதுதான் அது அவருக்கு உறைத்தது. இவர்களுக்கு மேல்  இருக்கும் அந்த மூவர் யாராக இருக்கக்கூடும் என யோசிக்கும்போதே அடி வயிற்றைக் கலக்கியது.

அவர் கழிப்பறையை விட்டு வெளியே வரும்போது குண்டு அம்மாள் நரைமுடியை அள்ளி முடிந்துகொண்டு யாரிடமோ வாயிலில் பேசி கொண்டிருந்தாள். மூக்கு நீண்ட கருப்பு பூட்ஸ் மட்டும் அவருக்கு அங்கிருந்து தெரிந்தது.



(சமர்ப்பணம்- இக்கதை நானறிந்த சுப்பிரமணிய எழுத்தாளர்களில் எனக்கு மிகப்பிடித்த நாஞ்சில் நாடனுக்கு).

No comments:

Post a Comment