புத்தகங்கள்

Pages

Monday, May 25, 2020

ஏதேன் மற்றும் லீலை- ஜெயமோகனின் இரு கதைகள்

ஜெயமோகனின் புனைவு களியாட்டு கதைகளை முழுவதுமாக வாசித்து முடிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வாசித்து வருகிறேன். நேற்று நண்பர்களுடன் விவாதிப்பதற்கு அவருடைய 'லீலை' மற்றும் 'ஏதேன்' கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கதைகளின் பல்வேறு சாத்தியங்கள் விவாதத்தின் ஊடே துலங்கி வந்தன.

ஏதேன்

நண்பர் தன்ராஜ் மணி ஏதேன் கதை குறித்து ஒரு சிறு குறிப்பை எழுதியிருந்தார். அதில் திபெத் மலையேற்ற அனுபவத்தில் சாமை போன்ற ஒரு 'அசடரை' நினைவுகூர்ந்தார். காளி ஒரு நடைபயணத்தின்போது நண்பர்களுடன் ஜெய்மோகன் பகிர்ந்துகொண்ட இக்கதைக்கான ஆதார நிகழ்வை நினைவுகூர்ந்தார். வியப்பாக இருந்தது. ஒரு நிகழ்வு எப்படி கதையாகிறது? என்பதற்கு இது ஒரு பாடம் என தோன்றியது. ஒரு நிகழ்விலிருந்து சாரமான ஒரு கேள்வியை எழுப்பி அக்கேள்விக்கான விடையை கதையில் அடைதல் என கூறலாம். ஏதேன் கதையின் கேள்வி கடவுளுக்கு நெருக்கமானவர் யார் என்பதே. 

விவிலியத்தை அறியாதவனுக்கா? விவிலியத்தை போதிப்பவனுக்கா? விவிலியத்தை அறியாத கபடமற்ற ஒருவன் கர்த்தருக்கு வெகு அருகே இருப்பவன் எனும் விடையை கதை கண்டடைகிறது. மேற்கிலக்கியத்தில் இந்த ‘Holy fool’ என்பது ஒரு ஆழ்படிமம். தாஸ்தாவெஸ்கி, சிங்கர் என பலரும் கையாண்ட ஒரு படிமம். ஜெயமோகனின் கதைகளில் உலகியல் சமர்த்து இல்லாதவர்களின் ஆன்மீக மற்றும் கலை உன்னதம் தொடர்ச்சியான பேசுபொருட்களில் ஒன்று. விஷ்ணுபுரம் நாவலின் இறுதி தலைவன் வேத தத்தன் அறிவு எனும் நாகத்தால் தீண்டபடாதவன். நன்மை தீமை எனும் இருமை பகுத்தறிவின் விளைவு. அகங்காரத்தின் விளைவே உரிமை கொண்டாடுதல் என்பதும். ஆதி மனிதன் ஏதேன் தோட்டத்தில் உட்கொண்ட தடுக்கப்பட்ட கனி அவனுடைய துன்ப சுழலுக்கு காரணமாகியது. ஆப்பிரிக்க தொல்குடிகள் தனியுரிமை அறியாதவர்கள். பழுத்த பழம் என்பதொரு வேட்டை அவர்களுக்கு. இயற்கையின் கொடை. அது அனைவருக்குமானது. நிலத்தின் மீதிருக்கும் வேலிகள் அவற்றை எவருக்கும் உரிமையாக்கிவிடுவதில்லை.

ஜெயமோகனின் வெண் கடல் தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘அம்மையப்பம்’ கதையும் நினைவுக்கு வந்தது. ஏணி கூட்ட முடியாத ஆசாரி அபராமான மர புடைப்பு சிற்பத்தை செய்து முடிப்பான். இங்கு ஏணி உலகியலின் குறியீடாகிறது. பாலாஜி ப்ருத்வி ராஜ் இக்கதையில் கபடமற்ற தன்மை மூன்று தளங்களில் இருப்பதை குறிப்பிட்டார். தொல்குடிகளின் மற்றும் சாம் ஜெபத்துரையின் களங்கமின்மை கதைக்குள் துலங்கி வருவது. சாமிற்கு அவனுடைய அத்தனை தோல்விகளுக்கு பிறகும் செலவுக்கு பணம் அளிக்கும் அவனுடைய அம்மாவின் களங்கமின்மை மூன்றாவது. 

பொதுவாக ஜெயமோகன் புனைவு எழுத்திற்கு முன்வைக்கும் அடிப்படைகளில் ஒன்று என ‘சொல்லாதே காட்டு’ என்பதை சொல்லலாம். எதேன் கதை ஒரு குடி மேசையில் சொல்லப்படுகிறது. இது இந்த கதைக்கு ஒரு அழகியல் குறைபாடா என்றும் விவாதிக்கப்பட்டது. டாக்டர். வேணு வெற்றாயன் ஆப்பிரிக்க பின்புல கதையில் முதல்வரியில் வரும் கோக் பற்றிய குறிப்பு கதைக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றுகிறது என்றார். இந்த உரையாடலில் கதை சொல்லப்படுவது இந்த கதைக்கும் அதன் களத்திற்கும் பொருந்திவருவதாக செந்தில் குமார் கூறினார். முக்கியமாக சாமின் அன்னை சமாதனப்படுத்த அளித்த ஐம்பதாயிரத்தில் தான் அந்த குடிவிருந்தே நடைபெறுகிறது என்பது சாமின் இயல்பை சுட்டுகிறது என்றார்.

சத்தியசோதனை பற்றி ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது காந்தியின் நண்பர் ஷேக் மெஹ்தாப் பற்றி அறிந்துகொண்டேன். 

அவருடைய சகோதரரின் நண்பராகத்தான் மெஹ்தாப் காந்திக்கு அறிமுகமாகிறார். அவரை சீர்திருத்தச்வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்பு கொண்டேன். என எழுதுகிறார். திரிதீப் சுஹ்ருத்தின் அடிக்குறிப்பிலும், குகாவின் தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலிலும் மேதாப் பற்றிய சித்திரம் உண்டு. காந்திக்கு அசைவ உணவை பரிச்சயம் செய்யும் இதே மேதாப் தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் கொஞ்ச காலம் வீட்டை பகிர்ந்து கொள்கிறார். காந்தி இல்லாத போது விலைமாதரை வீட்டிற்கு அழைத்து வந்த விவரம் தெரிந்து காந்தி அவரை வெளியேற்றுகிறார். பின்னரும் மேத்தாப் தென்னாப்பிரிக்க போராட்டங்கள் குறித்து கவிதைகள் எழுதி அவை இந்தியன் ஒபினியனில். வெளியாயின. மேத்தாபும் அவருடைய மனைவி ஃபாத்திமாவும் போராட்டங்களில் பங்கு கொண்டார்கள். போராட்டத்தில் பங்கு கொண்டதும் கவிதைகள் எழுதியதும் இந்நிகழ்விற்கு பிறகு தான். ஏதோ ஒருவகையில் காந்தியின் இந்த அதீத நன்னம்பிக்கையை எனக்கு சாம் ஜெபத்துரையுடன் இணைத்து புரிந்து கொள்ள முடியும் என தோன்றியது.

--


முதல் வாசிப்பில் இந்த வரிசை கதைகளில் அத்தனை சிறந்த கதை இல்லையோ எனும் உணர்வு ஏற்பட்டது. ஜெயமோகனின் கெய்ஷா கதை நினைவுக்கு வந்தது. நீ விரும்பும் கதையை அல்லது வடிவை அளிப்பவள். ஒருபோதும் என்னை நீ அறியமுடியாது எனும் அதே விளையாட்டு. அல்லல்படும் மகளிர்களை ஆற்றுபடுத்தும் ஆடவர்களுக்கு என்றொரு உலகம் உண்டு. குறிபார்த்து அந்த உணர்வை பயன்படுத்தி தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை என சொல்லலாம். இந்த பொது மதிப்பீடுகளின் மீதான சீண்டல் இக்கதையை முக்கியமாக்குகிறது என பாலாஜி குறிப்பிட்டார். மேலும் இறுதி திருப்பத்தின் வலுவில் ஒரு கதை இன்று எழுதப்படுவது வாசகனை ஏமாற்றுவது என்றொரு பார்வை வலுபட்டிருக்கும் நிலையில் இக்கதை இறுதி திருப்பத்தை சரியாக பயன்படுதியுள்ளது என்றார். தாட்சாயினி யார் என இறுதியில் தெரிவது உண்மையில் திருப்பம் என சொல்லிவிட முடியாது. ஏனெனில் இறுதிக்கு சில பத்திகள் முன்னரே தாட்சாயினி சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிக்கும்போதே அவள் யாரென தெரிந்துவிடுகிறது.

உரப்பன் கணேசனிடம் ஒரு உரையாடலில்  டேய் ஆளு அப்டியே மாறிடணும், அதாக்கும் கலை என்கிறாள். சர்க்கஸ் ஆட்டக்காரர்கள் எம்ஜியாரகவும் சிவாஜியாகவும் அந்தந்த பாத்திரங்களை ஏற்று அதை நகலெடுத்து ஆடுகிறார்கள். தாட்சாயினிக்கு நடனம் பெரிதாக வராது. ஒன்றுபோலவே சில அசைவுகளை திரும்பத்திரும்ப செய்வாள். ஆனால் மேற்சொன்ன 'ஏற்கும் பாத்திரத்தில் ஒன்றுதல்' என்பதைத்தான் அவள் இறுதிவரை பின்பற்றுகிறாள். கதையில் அவளுடைய உண்மையான பெயர் என்னவென்பதே தெரியாது. அவளுடைய இத்தகைய வாழ்க்கைக்கு ஒரு சோகக்கதையை காரணமாக// பின்புலமாக புனைந்துகொள்ள துவங்கினால் அது அவளின் வெற்றி. நம்மை நோக்கி தாட்சாயினி புன்னகைக்கக்கூடும்.

கதையின் திருப்பம் என்பது தாட்சாயினி யார் என்பதில் இல்லை, மாறாக உரப்பன் கணேசனின் சிரிப்பில் உள்ளது என நான் நம்புகிறேன். ஒருவகையில் இது கணேசனின் வயதடைதல் கதை என சொல்லலாம் என அனோஜன் ஒரு வாசிப்பை அளித்தார். வயதடைதல் என்பதைவிட அவனுக்கு வாழ்வின் தரிசனம் ஒன்று கிட்டுகிறது. வைரத்தின் வெவ்வேறு பட்டைகளை, அதன் முகங்களை காணும் தருணம் அது. தாட்சாயினி சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடியபின் அவன் கடும் வெறுமை தன்னை அழுத்துவதை உணர்கிறான். பேருந்தில் தன்னை கண்டுகொண்டு பேசும் தாட்சாயினி அங்கிருந்து மகேஸ்வரியாகி லீலாவாக இறங்கி செல்லும்போது அவளும் இவனை நோக்கி புன்னகைக்கிறாள் இவனுக்கும் முன்னர் இருந்த வெறுமை உணர்வோ/ ஏமாற்றப்பட்ட உணர்வோ இப்போது ஏற்படவில்லை. மாறாக புன்னகைக்கிறான். கதையின் தலைப்பான லீலையுடன் அவன் அறிந்து கொண்டது பொருந்தி போகிறது. கதை லீலையாக ஆகிறதா அல்லது லீலாவாக நின்றுவிடுகிறதா என்றொரு விவாதம் நிகழ்ந்தது. அன்னைமையின் கூறுகள் என அவளிடம் எதுவும் வெளிப்படவில்லை என்பதால் இதை அருளும் அழிக்கும் அன்னையின் வெவ்வேறு முகங்கள் எனும் ஆழ்படிமத்துடன் இணைக்க முடியவில்லை ஆகவே லீலையாக இல்லாமல் லீலாவை பற்றிய கதையாக எஞ்சிவிடுகிறது என்றொரு விமர்சனம் வைக்கப்பட்டது. தாட்சாயினியை அன்னை வடிவாக காண்பதில் உள்ள குழப்பத்தினால் நேர்வது இது. அவளுடைய பாத்திரத்தை இதே வரிசை கதைகளில் வரும் 'வருக்கை' கதையின் கள்ளனுடன் ஒப்பிடலாம். வருக்கையின் கள்ளன் ஒருவகையில் கிருஷ்ணனின் வடிவம். தாட்சாயினியையும் அத்தகைய தன்மை கொண்ட பெண்ணாகவே புரிந்துகொள்ள முடியும். உரப்பன் கணேசனின் சிரிப்பு வழியாக கெய்ஷாவில் கண்டடைந்த ஒன்றின் மற்றொரு பரிணாமத்தை இக்கதையில் அடைந்திருக்கிறார் என தோன்றியது. இயல்பாக ஆன்மீக தளத்தை நோக்கி கதை திறக்கிறது.

இந்த இருகதைகளும் இருவிதமான அறிதல்களை முன்வைக்கின்றன. ஏதேன் கள்ளம் கபடமற்ற, களங்கமற்ற தன்மையின் வழியாக கடவுளை நெருங்குதலை சொல்கிறது என்றால் லீலை கள்ளத்தனத்தை ஒரு விளையாட்டு என உணர்ந்துகொள்வதன் வழியாக ஏற்படும் அறிதலை சொல்கிறது. 

No comments:

Post a Comment