(நண்பர் நம்பி பல உலக இலக்கிய படைப்புகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். அவருடைய கட்டுரை தொகுப்பு 'பாண்டியாட்டம்' விரைவில் பதாகை - யாவரும் வெளியீடாக வரவிருக்கிறது. விரிவான விமர்சனம்
சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது. சொல்வனமிதழுக்கும் நம்பிக்கும் நன்றிகள்.)
Man hands on misery to man.
It deepens like a coastal shelf.
Get out as early as you can,
And don’t have any kids yourself.
– Philip Larkin, This be the Verse
“No! The world must be peopled.”
– Benedick, from Shakespeare’s Much Ado About Nothing.
பிரதிகள் தம்மைத் தாமே எழுதிக் கொள்ளுமோ என்றும்கூட சில சமயம் நினைத்ததுண்டு – எழுதும் கை எழுதிக்கொண்டே செல்லும் என்கிற மாதிரியான விஷயத்தை சொல்கிறேன். சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் படித்து முடித்ததும் இந்த விஷயங்களைப் பற்றி கொஞ்சம் இலக்கின்றி நினைத்துப் பார்க்கும் இடைவெளி கொரோனா வைரஸ் புண்ணியத்தில் அரசாங்கமே லாக் டவுன் கொடுக்கவும் ஏராளமான நேரம் கிடைத்ததால் அமைந்தது.
என்னைப் பற்றி கொஞ்சமே உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இதுபோல் எங்கெங்கோ செல்லும் நினைவுகளில் என்னைத் தொலைப்பவன் நான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். எது எப்படியானாலும், முதலிலேயே சொன்னதுபோல, நான் 2019ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். வினோதமான வகையில், கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாய்ச் சொல்லப்படும் பாத்திரங்களுடன் இந்திய தொன்மத்தின் சுழல் ஆழங்களிலிருந்து அது விரிந்தெழுகிறது. இடம், பொருள், ஏவல் என்று எதையும் பொருட்படுத்தாது கதை மிக வித்தியாசமான வகையில் தனக்கே உரிய தொல் இசையுடன் துவங்குகிறது:
“கானகம் வெறும் ஓசைகளாக உயிர்த்திருந்த இரவில் கால்கள் அவசியமற்ற வெள்ளை வேதாளம் வெள்ளி மயிர் பறக்க விக்கிரமனின் தோளில் திமிறிக் கொண்டிருந்தது.“
வேதாளம் அவிழ்த்துவிட்ட கதைக் கடலில் விக்கிரமன் தன்னை இழக்கத் தயாராவதுடன் இந்த அத்தியாயம் இசைத் தொனியிலேயே நிறைவு பெறுகிறது:
“சினம் தணிந்து மனம் கிளர்ந்து நடை தளர்ந்தான். உலகு கதைகளால் புனையப்பட்டது என்பதை அவன் அறிந்தான். அரசன் மறைந்து சிறுவன் எழுந்து விந்தை உலகை விழி விரிய வாய்பிளந்து நோக்கி நினறான்…”
இந்தியக் கதைகளையும், காமிக் பூதங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் ரசித்தவர்களுக்குத் தெரியும், விக்கிரமனும் வேதாளமும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘வேதகால பஞ்சவிம்ஷதி’ என்ற தொகை நூலில் உள்ள நேசத்துக்குறிய இரட்டையர் என்பது. (இந்தக் கதை மக்களிடையே ‘பைதாள் பாசிசி’ என்று அறியப்படுகிறது.) இதன் மூல நூல் தொலைந்துவிட்டது என்றாலும், 11ஆம் நூற்றாண்டில் சோமதேவர் என்பவர் தொகுத்த புகழ்பெற்ற ‘கதாசரித்ர சாகரம்’ என்ற கதைத் தொகுதியில் இதன் பிற வடிவங்கள் முதலில் தோன்றுகின்றன. இவை இந்தியா எங்கும் அறியப்பட்ட கதைகள், நானும்கூட இதை அதன் தமிழ்ப் பேச்சு வடிவில் என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நீலகண்டம் படித்துக் கொண்டிருக்கும்போதே என் நூலகத்தில் எங்கோ புதைந்திருந்த ரிச்சர்ட் பர்டனின் ஆங்கில மொழியாக்கத்தைத் தேடியெடுத்துச் சற்றுப் புரட்டிப் பார்த்தேன். அவர் இதை தன் போக்கிற்கு ஏற்றவாறு மாற்றி எழுதினார் அல்லது படித்தார் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவரது கதை ரிக் வேத மேற்கோளுடன் இப்படித் துவங்குகிறது:
“கண் இருப்பவன் கண்டான்; விழியற்றவர் காண்கிலர். ஒரு கவிஞன், அவன் ஒரு சிறுவன், அதை உணர்ந்திருக்கிறான். இதைப் புரிந்து கொண்டவன் அவனது தந்தைக்குத் தந்தை ஆவான்”.
– ரிக் வேதம், 1.164.16
அம்மேற்கோளின் மற்றொரு மொழியாக்கம் இப்படிச் செல்கிறது:
“ரிஷி புதல்வன் இதைப் புரிந்து கொண்டான்; இதைச் சரியாக விளங்கிக் கொண்டவன் அவனது தந்தையின் தந்தை.”
(குழந்தை, பெரியவனின் தந்தை என்ற வொர்ட்ஸ்வர்த்தின் புகழ்பெற்ற வரியை நமக்கே உரிய புதிர்ப் பாணியில் அவருக்கு முன்னேயே நாம் மொழிந்துவிட்டோமோ?)
வெவ்வேறு சட்டகக் கதையாடல்கள், கதைக்குள் கதைகள், அறச் சிக்கல்கள், வம்ச விருத்தி… இனி வருவதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்களை வழிகாட்டும் (அல்லது கட்டுப்படுத்தும்), கதையாடல் உத்திகள் நாவலின் துவக்கத்திலேயே, அதன் அரங்கேற்ற வேளையிலேயே, அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
“விக்கிரமனும் வேதாளமும்” சட்டகக் கதையாடல் என்பதன் புகழ்பெற்ற உதாரணம், சட்டகத்தினுள் உள்ள கதைகள் பலவும் அதன் எல்லைகளுக்கு அப்பால் விரியும் அற / ஒழுக்கப் புதிர்களாய் இரட்டிக்கின்றன. இந்த இரட்டையர்களுடன் துவங்கும் நீலகண்டம், வம்ச விருத்தியின் புதிர்களை விவாதிக்கும் தன்மைகொண்ட சட்டகக் கதையாடலை இயல்பாகவே கைக்கொள்கிறது: குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய உள்ளார்ந்த தேவை மனிதனுக்கு உண்டா, அல்லது சமூகம் தன் இருப்பை உறுதி செய்துகொள்ளும் தேவையால் அவன் உள்ளத்தில் எழுப்பும் உந்துதலா? பிள்ளைப் பேறின்மை குறித்த இழிவுகள், அதைச் சரிக்கட்டும் விதமாய்த் தத்து எடுத்துக்கொள்வதில் உள்ள சங்கடங்கள், செயற்கைக் கருத்தரிப்பு முறைகள்; கருத்தரிக்க இயலாமை அளிக்கும் மிகப் பெரிய குற்றவுணர்வின் சுமை, அது குறித்து அர்த்தமற்ற காரண காரியங்களைக் கற்பனை செய்துகொள்வது, அதன் மிகையச்சங்கள் (பூர்வ ஜன்ம பாபங்களா, அல்லது மூதாதையரின் சாபங்கள் நம்மை வழிவழியாய்த் தொடர்கின்றனவா?), குழந்தை வளர்ப்பின் பொறுப்புகள், நவீன நகர்ப்புறக் குடும்பத்தில் இது போன்றவை விட்டுச்செல்லும் பொருளாதார, உணர்வுச் சிக்கல்கள்; குறையுடன் பிறக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் உள்ள அழுத்தங்கள், இவை எல்லாவற்றுக்கும் மேல், வரலாற்றுத் துவக்கம்முதல் நம்மீது சுமையாய்க் கவியும், “குழந்தையைச் சரியாய் வளர்ப்பது எப்படி?”, “செய்ய வேண்டியது அத்தனையும் செய்தோமா?” போன்ற கேள்விகள். இந்த மையத் தண்டுவடத்தில் பிரியும் பின்நவீனத்துவக் கிளைகளில் உண்மையான மற்றும் கற்பனை பாத்திரங்கள் (விக்கிரமாதித்தியன், வேதாளம் தவிர டிஜிடல் அவதார்களாகிய சோட்டா பீம், காப்டன் மிஸ்டர் இசட், நீமோ, பாக்மேன்… அதுபோக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும், ரத்தமும் சதையுமாய் நம்முடன் வாழ்ந்த / வாழும், வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்ட சமூக சேவை இரட்டையர்கள் வானவன் மாதவி மற்றும் இயல் இசை வல்லபி), வெவ்வேறு அத்தியாயங்களில் வருவதும் போவதுமாக இருப்பது கதையின் மையக் கருவின்மீது ஒரு திரிபு வெளிச்சம் வீசி சொல்லப்படும் கதை நிகழ்கையிலேயே அது குறித்து விமரிசிக்கவும் செய்கின்றது.
தொன்ம இசையின் செறிவு உங்களுக்கு அலுப்பூட்டுவதாக இருக்குமானால் நாவல் தன் குழப்பமான துவக்கங்களிலிருந்து வெகு சீக்கிரமே மருத்துவமனைக் காத்திருப்பு அறையின் கண் கூசவைக்கும் வெண்மைக்குத் தாவிச் சென்றுவிடும் என்ற முன்னறிவிப்பை ஆறுதலாக அளிக்கிறேன். அது வாசகரை அடுத்த அத்தியாயத்தின் துவக்கத்துக்கும் கொண்டு செல்கிறது. அந்த அத்தியாயம்தான் நாவலின் கதையாடலை நகர்த்தும் மையக்கருவை அறிமுகப்படுத்துகிறது. செந்திலும் அவனது ஏழு வயதுப் பெண் வர்ஷினியும் மருத்துவமனைக் காத்திருப்பு அறையில் ஸ்பீச் தெரபிஸ்ட்டைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். இனிவரும் அத்தியாயங்கள் வர்ஷினியை அவர்கள் தத்தெடுத்த கதையை சீரான தொடர்ச்சியற்ற காலவரிசையில் விவரிக்கும்: செந்தில் – ரம்யா கலப்பு மணம், அதன் விளைவாய் ரம்யாவின் அம்மா விலகிக்கொள்வது, பணி அழுத்தங்கள் காரணமாய் இருவருக்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி, கர்ப்பம் தரிக்க இயலாமை, பல்வேறு பகுத்தறிவுக்கு உட்பட்ட, அப்பாற்பட்ட உத்திகள் (பரிகாரங்கள், போலி மருத்துவம், விபசாரம்), ரம்யாவின் கருச்சிதைவு, அதன்பின் கணப்பொழுது முடிவாய் அவள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவது, அந்தத் தத்தினை சட்டப்படி முறையாக்க மேற்கொண்ட தந்திரங்கள்…
இந்த அத்தியாயத்தில் பல்வேறு முன்னோட்டங்கள் அளிக்கப்படுகின்றன: ஆட்டிச குழந்தையை வளர்க்கும் பொறுப்பு ரம்யாவின்மீது மட்டுமே சுமத்தப்படுகிறது என்பதை உணர்கிறோம் (“… ஆபீசுக்கு தாமதமாக வருவதாகச் சொல்லிவிட்டு வந்தான். இவ்வளவு காலத்தை விழுங்கும் என்று அவன் நினைக்கவில்லை”), ஒற்றைப் பெற்றோராய் வளர்க்கும் நிர்ப்பந்தம் வலுக்கட்டாயமாக சுமத்தப்படுவதன் அடியாழ வாதையும் அறிந்தும் அறியாமலும் அந்தக் காயம் வெளிப்பட்டு தணிவதும்: “இல்ல… நீ போயிட்டு வா… அவ பழகிக்கணும். நீயும் பழகிக்கணும், அவ உம்பொண்ணும் தான்“.
நாவலின் உப திரிகள் மிகச் சுருக்கமாக இந்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன: வர்ஷினிக்கு கிளிப்பச்சை பிராக் மீது இருக்கும் பிரத்யேக விருப்பம் கதையின் மையத்தை விட்டுவிட்டுத் தொடரும் வரலாற்றுத் தொன்மத் திரிகளுடன் இணைக்கின்றன. ஆட்டிசக் குழந்தை இந்த உலகை எப்படி அறிகிறது என்பது (எறும்புக்கூட்டம், வர்ஷினி அளிக்கும் ரொட்டித் தூள்கள்) மொபைல் கேம்கள் மற்றும் தொலைக்காட்சிப் பாத்திரங்களுடன் உறவாடும் டிஜிடல் யதார்த்த திரிகளில் எதிரொலிக்கிறது. துரதிருஷ்டங்களை ஒப்பிடுவது, “நிலைமை இன்னும் எவ்வளவோ மோசமாக இருந்திருக்கலாம்,” என்ற எண்ணத்தில் ஆறுதல் தேடுவது போன்ற பெற்றோரின் இயல்பான விழைவுகள் உட்பட, முந்தைய அத்தியாயத்தில் உள்ள புராதன சரக்கை வெறுத்த வாசகனுக்கு, பல சுவாரசியமான விஷயங்கள் இந்த அத்தியாயத்தில் அளிக்கப்படுகிறது. சமகால நவீனத்துவத்தில் அவன் தீர்மானமான நிலைகொள்கிறான், இனி கதையில் அவனால் பங்கேற்க இயலும்.
குழந்தைப் பேறின்மை இந்திய சமூகத்தில் ஒரு சாபமாய் பார்க்கப்படுகிறது, இதன் வேர்கள் பண்டைய காலங்களில் தொடங்கினாலும் இன்று வரையில் நீடிக்கின்றன. மூன்று மனைவிகள் இருந்தாலும் ராமாயண தசரதன் பிள்ளை இல்லாதவன், அவன் தந்தையாக ஒரு பரிகார யாகம் நடத்த வேண்டியிருக்கிறது. மகாபாரதத்தின் முக்கியக் கதை நாயகர்களான பாண்டவர்களும் கௌரவர்களும் பாலுறவில் பிறந்தவர்கள் அல்லர், வரத்தின் பலனாய் பெறப்பட்டவர்கள். அமங்கலம் என்று அறியப்படும் வம்சமின்மை ஏறத்தாழ எப்போதும் பெண்ணின் மலட்டுத் தன்மை என்று குற்றம் சாட்டப்படுகிறது., அது சில சமயம் ஆண்மையின்மை என்று ஆண் குற்றமாகிறது.
அண்மையில் வெளிவந்து அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகமொன்றில் குடி போதையில் இருவர் பேசிக் கொள்ளும்போது பேச்சு திடீரென்று தடம் மாறி குழந்தை இல்லாத நாயகனின் மனதைக் காயப்படுத்தி விடுகிறது:
“தண்ணி அருமைடா“
“குடிக்கற தண்ணி அருமையா இருந்து என்னடா. உடற தண்ணியும் அருமையா இருக்கோணும்டா“
நவீன காலம் வரை இந்தச் சிக்கலான பழி தன் ஆற்றலை இழக்காமல் தொடர்ந்து நீடிக்கிறது, அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் உத்திகளும் அவ்வளவு அதிகம் மாறியதாய்த் தெரியவில்லை. யுவனின் குள்ளச் சித்திரன் சரித்திரத்தில், குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியர் ஜோதிடரை நாடுகிறார்கள், மணமாவதற்கு முன்பே கர்ப்பம் தரிக்கும் அபாக்கியவதி ஒருத்தியின் கன்னிமையை சாமியார் ஒருவர் மீட்டுத் தருகிறார், குழந்தைப் பேறு இல்லாத வேறொருவன் வீட்டு வாசலில் தொப்புள் கொடிகூட அறுபடாத, அப்போதுதான் பிறந்த அந்தக் குழந்தையை விட்டுவிடுகிறார் அவர். அண்மைக் காலத்தில், இன்னும் பரபரப்பாக பேசப்பட்ட பெருமாள் முருகனின் மாதொரு பாகன் கதை, காளியும் பொன்னாளும் பல பரிகாரங்கள் செய்வதைச் சொல்கிறது, இறுதியில் சிவ பெருமான் அவரது இருபால் அவதாரமான மாதொரு பாகன் வடிவில் வழிபடப்படும் தேர்த் திருவிழாவில், ஒரு அந்நியனோடு கலவி கொள்வது என்ற விபரீதமான தீர்வை தேர்ந்தெடுக்கிறாள் பொன்னாள். கதையின் பெரும்பாத்திரங்கள் இருவரும் நகரில் வாழ்ந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற வாழ்க்கை முறை கொண்டிருந்தாலும், இது போன்ற இசைவு உத்திகள் இன்னும் அசாதாரண வகையில் மாறாதிருப்பதை நீலகண்டம் நினைவுபடுத்துகிறது.
ஆனால் குள்ளச் சித்தன், மாதொருபாகன் இடம் பெற்றிருக்கும் இலக்கிய மரபில்தான் அவை பேசும் யதார்த்தங்களை விமரிசிக்கும் போக்கும் உடனிருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் – புதுமைப்பித்தன் எழுதிய, பள்ளி நாள்களில் படித்த கவிதை, “உருக்கமுள்ள வித்தகரே” நினைவிற்கு வருகிறது. குறிப்பாக
“இடுப்பில் வலி இல்லாதான்
இராமேசுரம் போனால்
‘புள்ளை’ வரம் பெற்றிடலாம்
புத்தைக் கடந்திடலாம்
என்பதுபோல்-
சொத்தைக் கதை எல்லாம்
அளக்காதீர்”
– என்ற வரிகள்.
நம்பிக்கை மற்றும் சடங்குகளைத் தாண்டி பகுத்தறிவுக்கு உட்பட்ட வகையிலும் இந்நாவல் மையச் சிக்கலை எதிர்கொள்கிறது. செந்திலும் ரம்யாவும் செயற்கைக் கருத்தரிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள், இறுதியில் பெண் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்கிறார்கள். இது போன்ற நடைமுறைச் சாத்தியம் கொண்ட அணுகுமுறையை தேர்ந்தெடுப்பதிலும் நிறைய உணர்ச்சிக் குழப்பங்கள் இருக்கின்றன. முதல் அணுகுமுறையைப் பகடி செய்யும் வகையில் நுகர்வுத் தன்மை கொண்ட குழந்தைப் பேற்றுச் சந்தையில் நிலவும் மோசமான எதிர்காலம் ஒன்றைக் கற்பனை செய்து நாவல் இந்த குழப்பத்தை இரட்டிப்பாக்கும் அதே வேளை, இரண்டாம் அணுகுமுறையில் உள்ள அரசமைப்பு முட்டுக்கட்டைகளை மையப்படுத்தி, அவற்றை அலட்சியப்படுத்துவதில் உள்ள தவிர்க்க முடியாத ஆபத்துகளையும் குறிப்பிடுகிறது.
தத்து எடுப்பது குறித்த அவர்களுடைய அர்த்தமற்ற அச்சங்களை உறுதி செய்வதுபோல் வர்ஷினி ஆட்டிசக் குழந்தையாய் வளர்கிறாள், அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தையால் தவறு செய்துவிட்டோம் என்ற வருத்தம் அதிகரிக்கிறது, அதன்கூடவே அந்த வருத்தம் குறித்தக் குற்றவுணர்வும். தத்து எடுத்துக்கொள்ளும்போது ரம்யாவுக்கும் அவளது அம்மாவுக்கும் இடையே ஏற்கெனவே இருக்கும் இடைவெளி வளர்கிறது, அது குறித்து இருக்கும் எதிர்மறை எண்ணங்களை இது அடிக்கோடு இடுகிறது. இங்கே தாமஸ் ஹார்டியின் ஜூட் நினைவுக்கு வருகிறது, அவனே ஓர் அநாதை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் வருந்துகிறான்:
“பெற்றவர் எவர் என்ற பிச்சைக்கார கேள்வி… என்ன இருந்தாலும் அதன் பொருள் என்ன? யோசித்துப் பார்த்தால், குழந்தையுடன் ரத்த சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி நமக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது?நம் காலத்தின் குழந்தைகள் அத்தனை பேருமே இன்று பெரியவர்களாய் இருப்பவர்களின் குழந்தைகள், நம் பொது வளர்ப்புக்கு பாத்தியதைப் பட்டவர்கள். பெற்றவர்கள் தம் குழந்தைகள் மீது அளவுக்கதிகம் பாசம் வைப்பது, மற்றவர்கள் குழந்தைகள் குறித்து அசூயைப்படுவது என்பது வர்க்க உணர்வு, தேசபக்தி, உன் ஆன்மாவைக் மட்டுமே காப்பாற்றிக் கொள்ளச் சொல்லும் சித்தாந்தம் மற்றும் இன்ன பிற ஒழுக்கங்கள் போலவே அடிப்படையில் மிகவும் கேவலமான தான் மட்டும் தனி என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் விஷயங்கள். ”
நீலகண்டம் சொல்வது உண்மை என்றால், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தாலும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.
ஆனால் நீலகண்டம் குழந்தையின்மை ஒன்றை மட்டும் பேசுவதில்லை. வம்ச விருத்தியில் தோற்றுப் போதல் என்ற விபத்தைத் தாண்டி, பிறந்தபின் குழந்தை எப்படிப் பேணப்படுகிறது என்ற இன்னும் முக்கியமான கேள்வியை எதிர்கொள்ள முனைகிறது. கதைக்கரு குழந்தை வளர்ப்பு என்ற திருப்தியற்ற, ஒழுங்கு செய்ய முடியாத வேலையைச் சரியாகப் பேச வராத ஆட்டிசக் குழந்தையை வளர்க்கும் அசாதாரண சூழ்நிலைக்குக் குறைத்துவிடுகிறது என்றாலும் அதன் மீகதையாடல்கள் அவற்றின் நிராகரிக்கப்பட்ட, பலி கொள்ளப்பட்ட குழந்தைகளின் வரிசையைக்கொண்டு பதில் சொல்ல முடியாத சான்றாவணங்களைக் குவிக்கின்றன: மெடியாவின் குழந்தைகள், சிறுதொண்டரின் மகன் சீராளன், செந்திலின் முன்னோர்களில் ஒருவரான நாகம்மை…
தனி மனிதர்களுக்கும், சமூகங்களிலும் வம்ச விருத்தி செய்வதற்கான உந்துதல் இருப்பதன் நியதிகள் குறித்து அண்மையில் என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த வயதில் நானே வெகுளியாய் இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் அவன் நான் பிள்ளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாய்ச் சொன்னான். இது போன்ற உரையாடல்கள் எப்படி முடியும் என்பது உங்களுக்கே தெரியும், இப்படிப்பட்ட உலகில் ஒரு குழந்தையைக் கொண்டுவந்து விடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றான் அவன், பொறுப்பேற்றுக் கொள்ள பயந்து கொண்டு, குற்ற உணர்ச்சியில் நீ சமூக ஒப்பந்தத்தின் உன் பங்கை நிறைவேற்ற மறுக்கிறாய், அதுவாவது பரவாயில்லை, பிறக்காத குழந்தைமீது ஏதோ தார்மீக அக்கறை இருப்பது போலவும், உலகின் குறுகிய வளங்களைக் காப்பாற்ற ஆசைப்படுவது போலவும், நீ பாவனை செய்கிறாய் என்று நான் எதிர்வாதம் செய்தேன். நினைத்தது போலவே இந்த விவாதம் முடிவற்று நீண்டது, ஆனால் அது தொண்ணூறுகளில் பி. டி. ஜேம்ஸ் எழுதிய நாவல் பற்றி நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்புத் தந்தது. (நாம் வாசிக்கவே இவ்வுலகம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது என்ற என் வழிகாட்டி வாசகத்தை நினைவுபடுத்துவதுபோல்.) The Children of Men என்ற அவரது பிறழ்வுலக நாவல் மனிதர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறது (இதோ வந்து விட்டது, அந்த 2021ஆம் ஆண்டு). “இறுதியில் காத்திருக்கும் இந்த தோல்வியின் அதீதத்திற்கும், கீழ்மைக்கும் நம்மை மேற்கத்திய அறிவியலும் மருத்துவமும் தயார்ப்படுத்தத் தவறிவிட்டது,” என்று அவரது ஆக்ஸ்போர்டு நாயகன் தியோ ஃபாரன் வருந்துகிறான், இந்தக் கீழ்மை, “மனித இனம் அழியப்போகிறது என்பதைவிடவும், நம்மால் அதைத் தடுக்க முடியாது என்பதைவிடவும், அதன் மூல காரணத்தை நாம் கண்டுபிடிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான்.”
நாம் நம் சந்ததியினருக்கு இன்னும் நல்ல எதிர்காலத்தை ஈட்டிக் கொடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை இல்லாதபோது, நம் தர்ம மற்றும் ஒழுக்கக் கட்டுமானங்கள் இடிந்துவிழும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வதோடு மட்டுமல்லாது , மீதமிருப்பது எதுவாக இருந்தாலும் அது தனி மனிதனின் இன்றைய, இப்போதைய வசதி, பாதுகாப்பு மற்றும் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான, மனித ஆன்மாவைக் குறுக்கிவிடும் செயலாக மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அடிக்கோடிடுகிறது அந்த நாவல். ஜேம்ஸ்சின் பிறழ்வுலக, மென்பாசிச இங்கிலாந்தில், அரசு போர்ன் கடைகள் நடத்துவது என்ற இடத்திலிருந்து ஒரு காலத்தில் அமெரிக்காவாக இருந்த தேசத்தில் இப்போது எஞ்சியிருக்கும் கர்ப்பம் தரிக்கக்கூடிய பெண்கள் கைப்பாவைகள் என்று முத்திரை குத்தப்பட்டு கற்பழிக்கப்படும் சடங்குக்குப்பின் பிள்ளை பெற்றுத்தர கட்டாயப்படுத்தப்படும் சாமியாராட்சி நிலவும் மார்க்கரட் அட்வுட்டின் ஜிலியட் வெகு தூரமில்லை.
பாதி பிறழ்வுலகாய் மாறி விட்ட கொரானா காலத்தில் நீலகண்டம் படிப்பது ஒரு சுவையான பொழுதுபோக்காக இருந்தது, இதை எல்லாம் மீண்டும் நினைத்துச் சரிபார்க்கவும் வாய்ப்பு அளித்தது. ஆனால் நாவலைப் படிப்பது எப்போதும் சுலபமாக இருந்தது என்று சொல்ல முடியாது. நல்ல வகையில் எடிட் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவ்வப்போது எழுந்த எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம் . தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு தாம் கற்பனை செய்து வைத்திருக்கும் எதிர்காலங்கள் குறித்து ரம்யா சொல்லிக்கொண்டே போகும் இடங்களில் தாட்சண்யமற்ற ஒரு எடிட்டிரின் கத்தரி நல்ல பலன் தருவதாக இருந்திருக்கும். அதேபோல் வர்ஷினியின் நீல யானை அவளது சகோதரன் சாகரை நீதிமன்ற மொழியில் நியாயப்படுத்துவது, அது கதைக்கு எதுவும் கூடுதலாய் சேர்க்காது துருத்திக் கொண்டு நிற்கிறது. அதைவிட முக்கியமாய், பேச்சு மொழி கவனமில்லாமல் கையாளப்படும் இடங்கள் உறுத்தலாக இருக்கின்றன. மெடியா- சுடலை நாடகத்தின் கோரஸ் பகுதிகளின் மொழியும் வினோதமாக இருந்தாலும், கோரஸ்சை சுடலை திட்டும்போது நாவலின் மிகவும் நகைச்சுவையான வசனம் வருவதால் அதைக் கடந்து செல்கிறோம்: “நிறுத்துங்கடி. சும்மா கத்திக்கிட்டு. அடுத்த முறை விளாத்திக்குளம் செட்ட வரச் சொல்லிருவேன்.” ரம்யா இரண்டு முறை பால்கனியிலிருந்து குதிக்க முயற்சித்துப் பின்னர் மணிக்கட்டை கீறிக்கொள்வதெல்லாம் சற்றுத் தேய்வழக்காகத் தோன்றியது. குறிப்பாகச் சுனிலின் பிரபலமான, பரிசு பெற்ற ‘பேசும் பூனை’ கதையைப் படித்தவர்களுக்கு (மொபைல் கேமில் வரும் பாத்திரம் ஒன்று மெய்ம்மையில் பிரவேசிப்பதை விவரிக்கும் அக்கதையிலும் கதாநாயகி மணிக்கட்டை கீறிக் கொள்கிறாள்) இம்மாதிரியான காட்சிகள் இன்னமுமே அலுப்பூட்டலாம். .
நாவலின் மிகப் பெரிய பலவீனம், இதுவரை துணிச்சலாக வெளிச்சமிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு யதார்த்தத் தளத்தில் தீர்வு காணமுடியாத முட்டுச் சந்தில் அதன் இறுதி அத்தியாயங்கள் வந்து நிற்பதுதான். வர்ஷினி காணாமல் போனது ஏதோ ஒரு மனமாற்றம் நிகழ்வதுபோல் சொல்லப்படுகிறது, ஆனால் அது பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதுபோல் கதைக்கு மிக எளிய தீர்வாக அமைந்துவிடுகிறது. நம் எல்லோருக்குமே குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்பது தெரியும், ஆனால் நாம் வேண்டுவது பிரச்சினைகளை இரக்கத்துடன் அணுகும் புரிதலும், அவற்றின் தீவிரத்தைத் தணிக்க யதார்த்த உத்திகள் என்ன இருக்க முடியும் என்ற விவாதமும்தான். தம் பரம்பரை பற்றிய தனிப்பட்ட தொன்மக் கனவுக்குள் செந்தில் இறங்குவதும், விலக்கம் கொண்ட மகளுடன் இணக்கம் கொள்வதும் திருப்தி தருவதாய் இல்லை, என்னதான் தேவதைகள் சலங்கை ஒலிக்க அதை வரவேற்றாலும்.
தம் பெற்றோர், சகோதரன், மற்றும் தாத்தாக்கள் பாட்டிகளுக்கு நாவலை அர்ப்பணித்து வர்ஷினி முடிக்கும் “கும்பாயா” பின்குறிப்பையும் மீறி நாம் எடுத்துச் செல்லும் உணர்வு பிலிப் லார்கின் சொன்னதன் (‘ஈதே மூதுரையாகட்டும்’ என்று நக்கலாக தலைப்பிடப்பட்டிருக்கும் ‘This be the Verse’ என்ற கவிதையில்) சற்று மாற்றி சொல்லப்பட்ட வடிவத்தை ஒட்டியதாய் அமைகிறது: “They Fucked me up / my mum and dad.” (“என்னை வச்சு செஞ்சிட்டாங்க / என் ஆத்தாளும் அப்பனும்” – நன்றாக இருந்தாலும், மொழி கிட்டத்தட்ட ஒத்திருப்பினும், லார்கினின் வரிகளுக்கு இது நியாயம் செய்வதாக இருக்காது. ‘This be the Verse’ என்று ஹை ரிஜிஸ்டரில் தலைப்பு வைத்து, கவிதைக்குள் ‘They fucked me up’ என்று அனாயாசமாக பேச்சு மொழியில் இறங்கி விடுகிறார் லார்கின். ஆண்டனி த்வைட் எழுதிய லார்கினின் சரிதை அவரது ஈமச் சடங்கில் சிலர் அவரது முழுக் கவிதைகளை நினைவிலிருந்து வாசிப்பதுடனும், வேறு சில தனி வரிகளை, அதிலும் குறிப்பாய், இப்பத்தியின் துவக்கத்தில் வரும் மேற்கோளில் உள்ள அம்மா அப்பா பற்றிய வரிகளையும், அவரது ‘Arundel’s Tomb’ என்ற கவிதையின் இறுதியில் நகைமுரண் தன்மையுடன் எழுதப்பட்ட, “அன்பே நமக்குப் பின்னும் வாழும்” என்ற வரியையும் எடுத்துரைப்பதுடனும் முடிகிறது. சரி, லார்கின் பற்றி இது போதும். அவரைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுத வேண்டும்.)
நீலகண்டத்தைப் பொறுத்தமட்டில் வர்சினியின் அப்பனும் ஆத்தாளும் அவளை வச்சு செஞ்சுட்டாங்க என்ற உணர்வுடன் நாவலை வாசித்து முடிப்பது சற்றுக் கடுமையாக இருக்கலாம். அப்படியில்லாமல், ஒரு வேளை நாவல் முடிவில் ஒரு முட்டுச் சந்தில் நிற்பது, பிள்ளை வளர்ப்பில் சரியான தேர்வுகள் கிடையாது என்ற செய்தியைப் பிரதிபலிப்பதாய் இருக்கலாம். செய்தாலும் தப்பு, செய்யாமல் விட்டாலும் தப்பு என்ற நிலையில் தோன்றும் கையாலாகாத உணர்வைத் தலைப்பின் விடமேறிய நீலம் சுட்டுவதாகவும் இருக்கலாம். குழந்தைப் பேற்றின் அமிழ்தத்துக்கும், பிள்ளை வளர்ப்பின் நஞ்சைப் போல் அச்சுறுத்தும் கூழிற்கும் இடையில் நின்று கொண்டு, “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை” என்ற எதிர்காலத்தின் சாத்தியத்தை நோக்கி நம் குழந்தைகளின் சிறுவிரல்கள் சுட்டலாம் என்பதை நாவல் கற்பனை செய்து பார்க்கச் சொல்கிறது. ஒரு நாள் அவ்விரல்களைப் பற்றிக்கொண்டு அவற்றைப் பின்பற்றும் துணிச்சல் நமக்கு கிடைக்கலாம். ஒரு வேளை!