கொரோனா இந்தியாவிற்கு வருவதற்கு முன் வைரஸ் எனும் பொது தலைப்பில் மூன்று குறுங்கதைகளை எழுதினேன். தொடர்ச்சியாக எழுத எண்ணியிருந்தேன். ஆனால் மனம் குவியவில்லை. வீட்டில் முழுநேரம் இருப்பதால் சுதிரையும் சபர்மதியையும் கொஞ்சம் கூடுதலாக கவனித்து கொள்கிறேன். அதிலும் சுதீருக்கு யு.கே.ஜி வீட்டுப்பாடங்கள் கற்றுக்கொடுப்பது எழுதவைப்பது என் பொறுப்பு. நான் முழு ஆன்மீகவாதியாககனிந்துவிடுவேன் போலிருக்கிறது. உண்மையில் எத்தனை கவனச் சிதைவு. அவனை ஒரு இடத்தில் இருத்தி ஒரு வார்த்தை எழுத வைக்க ஒருமணி நேரம் ஆகிறது. கிளினிக் அடைத்துவிட்டு வீட்டிற்கே மருந்துகளை கொண்டு வந்து விட்டதால் மருந்து வாங்க வருபவர்களை நானே கவனித்து கொள்கிறேன்.
நாள் தவறாமல் காலையில் பன்னிரண்டு சுற்று சூர்ய நமஸ்காரம் செய்கிறேன். எடை மூன்று கிலோ குறைந்தது கூடுதல் பலன். முக்கிய காரணம் வெளியுணவு இல்லை என்பது தான். ஏறத்தாழ இரண்டு வருடங்களாக வாரயிறுதிகள் முழுக்க பெரும்பாலும் பயணத்தில் இருந்திருக்கிறேன். மாலையில் சற்று நேரம் சுதீர் சைக்கிள் பழகுகிறான். உடன் நானும் நடந்து வருகிறேன். எங்கள் வீடிருக்கும் பகுதி எப்போதும் ஆளரவமற்றது. இப்போது அதனினும் துல்லிய நிசப்தம். வீட்டு தோட்டத்திற்கு மயில்கள் வருகின்றன. மாடியில் இருந்து கிளி கூட்டங்களை காண முடிகிறது. அந்தி வானத்தை மாடியிலிருந்து காண்பது பெரும் நிறைவை அளிக்கிறது.
இதற்கிடையே தான் எழுத்தும் வாசிப்பும். சத்திய சோதனை மொழியாக்கம் தொடர்ந்து வருகிறேன். நாளுக்கு ஒரு அத்தியாயம் செய்து முடிக்க வேண்டும் என எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டுள்ளேன். சில நாட்களில் கணினியில் அமர்ந்து எழுதும் மன அமைப்பு வருவதில்லை. இந்த ஊரடங்கு காலக்கட்டத்திற்குள் இரண்டாம் பாகத்தை முடிப்பேன் என எண்ணுகிறேன். ஒவ்வொரு ஞாயிறும் சக எழுத்தாளர் நண்பர்கள் சிலருடன் சிறுகதை விவாதங்களை ஸ்கைப் வழி செய்கிறோம். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் நீளும் அமர்வுகள் பெரும் உற்சாகத்தை அளிக்கின்றன. இது இப்போது ஐந்தாறு வாரங்களாக தொடர்ந்து வருகிறது. ஞாயிறு சந்திப்பு இப்போது நான் பெரிதும் எதிர்பார்க்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ஒவ்வொருமுறையும் புதியவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு.
இந்த காலக்கட்டங்களில் தினமும் கொஞ்சமாவது வாசிக்கிறேன்.
அன்னையும் அரவிந்தரும் எழுதிய integral healing 1001 arabian nights, அமர் சித்ரகதா படக்கதைகள், மீரா பெண் எழுதிய 'beethoven's mystical vision', Eckhart Tolle 's a new earth, சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரூமியின் கவிதைகள் டாக்டர். வேணு வெட்ராயனின் அலகில் அலகு கவிதை தொகுப்பு ஆகிய நூல்களை வாசித்தேன். இப்போது grimm's fairy tales வாசித்து வருகிறேன். அனைத்து நூல்களும் நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தன. குறிப்பாக அரேபிய இரவுகளும் க்ரிம் தேவதைக்கதைகளும் இத்தனை ஆழமானவை என எனக்கு தெரிந்திருக்கவில்லை. பல கதைகளின் கற்பனையின் ஆழம் பிரமிக்க வைத்தன. அதே போல் மதரின் நூல் எனக்கு தனிப்பட்ட முறையில் சில திறப்புகளை அளித்தன எக்கார்ட் டோல் புத்தகமும் சில புரிதல்களை அளித்தன. அசரடித்த நூல் என்றால் மீரா பெண் எழுதிய பீத்தோவன் நூல் தான். ஒருவகையில் அது பீத்தோவனின் ஆன்மீக வாழ்க்கையின் வரலாறு என சொல்லலாம். கலை மனம் வெளிப்படும் சில இடங்களை தெரிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.. சர்வோதயம் வெளியிடு. நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.
திரைப்படங்கள் பெரிதாக பார்க்கவில்லை. தினமும் அரைமணிநேரம் அல்லது ஒருமணிநேரம் இரவு உறங்கும் முன் கொஞ்சம் பார்க்கிறேன். பெரும்பாலும் மார்வல் படங்கள். ப்ரைமில் குங்க்பூ பாண்டா தொடர் உள்ளது. நண்பர்கள் காணலாம். எனக்கு பிடித்திருந்தது. சுதீருடனும் மானசாவுடனும் சேர்ந்து எட்டு நாட்களுக்கு மதியம் தொடர்ச்சியாக ஹாரி பாட்டர் திரைப்படங்களை பார்த்தோம்.
தினமும் சில நண்பர்களுக்கு தொலைபேசுகிறேன். காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்க நான் மட்டுமே வெளியே சென்று வருகிறேன். முக கவசம் அணிந்து காரைக்குடி வெயிலில் சென்று வருவது பெரும் கொடுமை. எவரேனும் வந்து சென்றாலோ அல்லது வெளியே சென்று விட்டு வந்தாலோ மெல்லிய பதட்டம் தொற்றி கொள்கிறது. நோய் என்னை எதுவும் செய்யாது ஆனால் வீட்டிற்குள் கொண்டு வந்துவிடக்கூடாது எனும் அச்சம் தான் காரணம். மருத்துவ நண்பர்களிடம் உரையாடியபோது நம்மூரில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் செல்லக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் இதை நன்றாக எதிர்கொள்ளக்கூடும் என்பது அவர்களின் ஊகம். அது மெய்யாக வேண்டும்.
கொரோனா பல விஷயங்களை நிரந்தரமாக மாற்றிவிடும். இதன் பொருளாதார பின்விளைவுகள் பாரதூரமனாவை. வாழ்க்கைமுறையில் சில நிரந்தர மாற்றங்களை கோருவது. காந்தி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரக்கூடிய காலகட்டம் இது. தொடக்கத்தில் ஒரு டிஸ்டோபிய உலகம் அளிக்கும் கிளர்ச்சியுடன் தான் கொரோனாவை கண்டேன். ஆர்வமாக எல்லா செய்திகளையும் தொடர்ந்தேன். நாளடைவில் ஆர்வம் வடிந்தது. கொஞ்சம் நானே என்னை நோக்கி கொள்ள பரிசீலித்து கொள்ள உகந்த காலம். katyar kajat ghusli என்றொரு மராத்தி படம்- அதன் இசை மிகவும் பிடித்துவிட்டது. தினமும் கேட்கிறேன். இந்துஸ்தானி, தும்ரி, கவாலி இசை கேட்கிறேன். செய்திகளில் இருந்து நம்மை விலக்கிக்கொண்டு அன்றைக்கு அன்று என வாழ்ந்தால் எந்த குறையும் இன்றி தான் செல்கிறது வாழ்க்கை. ஆனால் இந்த பாதுகாப்பு முட்டையை உடைத்துக்கொண்டு விழும் செய்திகளும் தகவல்களும் வருங்காலம் குறித்தும் கோடிக்கணக்கான மக்கள் குறித்தும் இனம்புரியாத அச்சத்தை எழுப்புகின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படும் வரிதான் என் பிரார்த்தனை. நம் அனைவருக்காகவும்..
பொய்மை நீங்கி மெய்ம்மை வரட்டும்
இருள் நீங்கி ஒளி வரட்டும்
மரணம் நீங்கி அமுதம் வரட்டும்.