(எழுத்தாளர் பாவண்ணன் பரிந்துரைத்ததன் பேரில் நீலகண்டத்தை வாசித்ததாக சொன்னார். நீலகண்டம் குறித்தான வாசிப்பை பகிர்ந்திருக்கும் கடலூர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி. விருது பெற்ற அம்புப் படுக்கைக்கு கிடைத்த வாசிப்புகளை காட்டிலும் நீலகண்டத்திற்கு வெளியான நான்கைந்து மாதங்களுக்கு ஊடாகவே பல வாசிப்பு/விமர்சன கட்டுரைகள் வந்துள்ளன. ஒன்று இதன் வடிவத்தை வகுத்துக்கொள்ளும் முயற்சிகள் காரணமாக இருக்கலாம், அல்லது பேசுபொருள் காரணமாக இருக்கலாம். பலருடன் இந்த நாவல் உரையாடி வருகிறது மகிழ்சியையும் நிறைவையும் அளிக்கிறது.)
திருமணத்திற்கென்று ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போதே, சந்தான பாக்கியம் நல்லாருக்கா என்ற கேள்வி பெற்றோர் வாயிலிருந்து மிக வேகமாக ஓடி வரும். திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே, என்ன குளிக்கிறியா என்ற கேள்வி எந்தப் பெண்ணும் எதிர் கொள்ள வேண்டிய கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்வியை அந்தப் பெண் ஒருசில மாதங்கள் விளையாட்டாக எதிர் கொள்கிறாள். அடுத்தடுத்த மாதங்களில் இந்தக் கேள்வி கேட்பார்களே என மற்றவர்களைத் தவிர்க்கத் தொடங்குகிறாள். அடுத்தடுத்த வருடங்களில் இந்தக் கேள்விக்கான விடையை அவள் தன்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். மாதச் சுழற்சி நெருங்க நெருங்க அதீத ஆர்வமும், எதிர்பார்ப்பும் கொண்டு திரிகிறாள். அதில் ஏமாற்றம் அடையும்போது, தான் இந்த உலகத்தில் வாழ்வதற்கே லாயக்கற்றவள் என்று மன அழுத்தம் கொள்கிறாள். இந்த அவளுடைய நிலைமை இரண்டு பக்கத்துக் குடும்பத்தையே ஆட்டம் காண வைக்கிறது. அப்புறம். அவள் பெற்றெடுக்கும் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்று மீண்டும் எல்லாரும் நிம்மதியிழந்து தவித்து, அந்தக் குழந்தை நல்லபடியாக இருந்தால்(அதாவது… நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பெரிய ஆளாகி, படித்தவுடனே வேலைக்குப் போய், சம்பாதித்து, கார் வாங்கி, வீடு வாங்கி, திருமணம் செய்து, குழந்தை பெற்று…வட்டம் மீண்டும்…..)…இப்படியே இந்த உலகம் சுழலும்போதுதான், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று இந்த உலகம் அர்த்தம் கொள்கிறது. இதில் எந்த இடத்திலாவது மாற்றம் இருந்தால், உலகமே தடுமாறுகிறது.
எவ்வளவுதான் சிறந்த சோதிடர் கணித்துச் சொன்னாலும், பிள்ளைப் பேறு என்பது மனிதர்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல என்பது மீண்டும் மீண்டும் இங்கே நிரூபணமாயிருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது அது எப்படிப்பட்ட குழந்தை என்பது தெரியாது. ஆனால், இங்கே குழந்தைகள், அவர்களாக வளர்வதை விட, பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கவே வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எல்லாம் அவர்கள் மேல் திணித்து, அந்தக் குழந்தையை பெரிய ஆளாக ஆக்கிக் காட்டுகிறேன் பார் என்று நெஞ்சு நிமிர்த்தி மற்றவர் முன் தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காகவே உருவாக்குகிறார்கள் என்பதாகாவே இன்றைய உலகம் இருக்கிறது.
முன்னோர் செய்த பாவம் பிள்ளைகள் தலையிலே என்பதும் ஒரு வழக்காக இன்றளவும் நிலவி வருகிறது. ஒரு குடும்பத்தில், முதல் குழந்தை பெண் குழந்தை. அது மூளை வளர்ச்சியில்லாமல் வளர்கிறது. அடுத்தும் ஒரு பெண் அதே மாதிரி. மூன்றாவதாகவும் ஒரு பெண் அதே போல. இதில் அந்தப் பெற்றோரின் எண்ணம், நம்பிக்கை நிச்சயம் அடுத்துப் பிறக்கும் குழந்தையாவது நல்ல குழந்தையாக இருக்கும் என்பதுதானே?. ஆனால், இப்படி நடக்க என்ன காரணம், யார் காரணம் என்பது தெரியாது. இப்படிப்பட்ட சூழலில், முன்னோர் சாபம் என்றோ, எப்போதோ எந்தத் தலைமுறையிலோ நடந்த துர்மரணம் என்றோ, எந்த சோதிடனோ, எந்த குறிசொல்லியோ சொன்னால் அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
இவை எல்லாவற்றையும் ஒரு புள்ளியிலிருந்து பிரிந்து செல்லும் பல இழைகளாக நெய்திருக்கும் சுனில் கிருஷ்ணன், அந்தப் புள்ளியை, பிள்ளைப் பேற்றுக்காக அல்லாடும் ஒரு இளம் தம்பதியினரின் வேதனையாகவும் படைத்துக் காட்டுகிறார். ஆட்டிசத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையின் நிலை, அதன் பொருட்டு அந்தப் பெற்றோர் படும் கஷ்டங்கள் என எல்லாவற்றையும் சுனில் கிருஷ்ணன் “நீலகண்டம்” நாவல் மூலம் முன் வைக்கிறார்.
ரம்யா, செந்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். வேற்று சாதியைச் சேர்ந்தவனை மணந்து கொண்டதால், ரம்யாவின் பெற்றோர் அவளை விலக்குகிறார்கள். குழந்தை இல்லாமல் அவர்களின் ஆரம்ப வருடங்கள் நகர்கின்றன. அதில் ரம்யாவுக்கு கொஞ்சம் மன நோயாகிறது. ஒரு பெண் குழந்தையை, சட்டப் பூர்வமாக இல்லாமல், குறுக்கு வழியில் தத்தெடுக்கிறார்கள். அதன் பிறகு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவன் ஆரோக்கியமான குழந்தையாகவும், தத்தெடுத்த பெண் குழந்தை ஆட்டிசம் பாதித்த குழந்தையாகவும் வளர்கிறது. பல வருடங்கள் கழித்து ரம்யாவின் பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் அலுவலக நண்பர்களோடு இன்பச் சுற்றுலா போன இடத்தில் அந்தக் குழந்தை தொலைந்து போகிறாள். கிடைத்தாள் என்பதை பூடகமாக சொல்லி முடிகிறது நாவல்.
காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் குடும்பத்தினரின் விலகலை எப்படி சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, அதிலும் குறிப்பாக, பெண்ணுக்கு, அவளுடைய தாயின் அரவணைப்பு கிடைக்காமல், உதாசீனம் மட்டுமே கிடைக்கிறது எனும்போது, அந்த மனநிலையே, அவளுக்கு மனதில் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தும். பிள்ளைப்பேறு சரியாக அமையாமல், கருச்சிதைவு என்பதிலெல்லாம், இந்த மன நிலையின் பங்கு நிச்சயம் இருக்கிறது. இந்த வேதனைகளை ரம்யாவின் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறது நாவல்.
பிள்ளைப்பேறு தள்ளிப் போகிறதே என்று யார் யார் என்ன சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்யும் ஒரு சாதாரணப் பெண்ணின் மனநிலையினை, ( சோதிடம், அரசமரம், கோயில் என்று) எல்லாவற்றையும் வாசிப்பவருக்கு சலிப்பூட்டாமல் நாவல் சொல்லிச் செல்கிறது. தன்னிடம்தான் பிரச்சினை என்று செந்தி உணர்ந்து, செயற்கைக் கருவூட்டல் மருத்துவமனைக்குச் செல்லும் அத்தியாயத்தில், அந்த மருத்துவம் எப்படி ஒரே பண மயமாகியிருக்கிறது என்பதை மிக அழகாக எள்ளலோடு படமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
ஆட்டிசம் பாதித்த குழந்தையை சாதாரண குழந்தையாக ஏற்றுக் கொண்டு பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். சாதாரணக் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். மன நலம் குன்றிய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்தால், இந்த ஆட்டிசக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர் நினைக்கிறார்கள். இது ஒரு ரெண்டுங்கெட்டான் நிலை என்பதை வாசிப்பவரையே உணர வைக்கிறது நாவல்.
குழந்தைகள் ஏன் இப்படி உருவாகிறார்கள்? இதற்கு யார் காரணம்? நாவலாசிரியர், அழகாக மகாகவி கலீல் கிப்ரானைப் புகுத்திப் பேச வைக்கிறார். “அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிக்காது; அம்பை எய்துபவன்தான் தீர்மானிப்பான், அம்பை எய்துபவன் இயற்கையே, கடவுளே; நீங்கள் அல்ல; நீங்கள் வெறும் வில்தான்”. ஒரு குழந்தை எந்தப் பெற்றோராலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதில்லை. கலீலுடைய வார்த்தைகளிலேயே சொல்கிறார்.”அவர்களை போல் இருக்க முயற்சி செய்யலாம்; ஆனால், அவர்களை உங்களைப் போல் ஆக்கி விடாதீர்கள்”. இதுதான் நாம் குழந்தைகளைப் பற்றி அறிய வேண்டியது.
ஆனால், இன்றோ குழந்தைகளை பெற்றோர் விரும்பும் சட்டகத்திற்குள் அடைக்கவே அரும்பாடு படுகிறோம். ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள்தான் அந்தக் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அதிலிருந்து மாறும்போது பதற்றம் அடைகிறோம்.சட்டகத்திலிருந்து விலகினால் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று கவலைப்படுகிறோம்; ஏற்கத் தயங்குகிறோம். இதை, இந்த நாவலில் சுனில் அழகாக ஒரு அத்தியாயத்தில் வேதாளம் சொல்லும் கதையாகப் பதிவு செய்கிறார். மானுட குலத்தின் வரலாறு வடிவமற்றவைக்கும், வடிவத்திற்கும் இடையிலான முரணும், போராட்டமும்தான். வடிவப் பிரக்ஞையையும், வடிவ முரணையும் ஒரு சேர ஏற்கும் காலம்தான் மானிடத்தின் பொற்காலம். என்ற வரிகள், ஒரு குறிப்பிட்ட சூத்திரத்துக்குள், குழந்தைகளை அடைக்க விரும்பும் பெற்றோருக்குச் சொல்லப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.
பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு வளர விடாமல், தங்கள் பெருமைகளை இந்த உலகத்தார் முன் நிலைநாட்டிக் கொள்ளவே பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக குழந்தைகளைப் பலிகடாவாக்குகின்றனர். பரஞ்சோதி என்கிற சிவத்தொண்டர், தன்னுடைய சிவத் தொண்டை நிலை நாட்டிக் கொள்வதற்காக, தன் பிள்ளை, சீராளனைத் தன் கையாலேயே வெட்டிக் கொடுக்கிறார். தன்னுடைய மந்திர சக்தியைப் பெருக்கிக் கொள்வதற்காக, கருவுற்றிருக்கும் தன் மகளையே கருவை எடுத்துப் பலியாக்குகிறான் மாகாளி மந்திரவாதி. தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளான் என அறிந்து, அந்தப் பெண்ணையும், தன் கணவனையும் பழி வாங்குவதற்காக, தன் பிள்ளைகளையே பலியாக்குகிறாள், கிரேக்கத்தின் மெடியா. காலங்கள் வேறானாலும், இடங்கள் வேறு வேறானாலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளைத் தங்கள் உடைமைகளாகப் பாவித்து, தங்கள் விருப்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் என்பதை இப்படி புராணம், நாட்டார் வழக்கியல் கதைகள், வேற்று நாட்டு இலக்கியம் என்று பல இடங்களிலிருந்து எடுத்துக் கையாண்டு கோர்த்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. இதை ஒரு படிமமாக நாவலில் காட்டியிருப்பது மிகவும் ரசனைக்குரியது.
ஒரு பக்கம் இவற்றையெல்லாம் அலசினாலும், பிள்ளைப் பேற்றுக்கும், முன்னோர் சாபம், குடும்பத்தில் நடந்த துர்மரணங்கள் போன்றவற்றிற்கும் கூட ஒரு தொடர்பு இருக்க முடியும் என்பதான மக்கள் மத்தியாலான எண்ணத்தையும் அழகாகக் கையாண்டிருக்கிறது நாவல்.
செந்தியின் பழைய வீட்டில், மீண்டும் மீண்டும் கரையான் வருவதும்,அதற்கு மருந்தடிக்கும்போது அப்பத்தா சொல்லுகின்ற ”பூச்சியண்டாத வீட்டில் மனுஷன் வாழக்கூடாது ராசா” என்பது அந்தக்காலத்து மனிதர்கள் மனங்களில் இருந்த ஈரத்தைக் காட்டுகிறது. வீட்டில் கரையான், பல்லி இவைகள் வருவதைத் தடுக்கவில்லை அவர்கள். எல்லா உயிர்களுக்கும் இடம் தரும், உயிரைக் கொல்லாத ஈரம் படைத்த மனிதர்களாக இருந்தார்கள்; மனதில் ஈரம் கொண்ட மனிதர்களுக்கே சந்ததியை நல்ல முறையில் பெருக்கும் பாக்கியம் கிட்டுகிறது. மனிதர்களின் ஆத்திரங்கள், சண்டைகள், சந்தேகங்கள் இவற்றில் குழந்தைகள் பலிகடாக்களாக ஆக்கப்படும்போது, அந்தக் குடும்பங்களில் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போகிறது என்ற இந்த நம்பிக்கை பல கதைகள் மூலம் நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது. ஏதும் அறியாத, முழுமையாக எல்லாவற்றையும் நம்பும், குறிப்பாக பெற்றோரை நம்பும் குழந்தைகளைக் கொல்லவும் துணிந்த மனம் கொண்ட வம்சத்தில் பிறப்பதையே தவிர்க்கிறது குழந்தைச் செல்வங்கள். இப்படி ஒரு கிளை நாவலில் பிரிந்து செல்கிறது.
குழந்தைகள் உலகத்தில் அதிகமாக அவர்களோடு உரையாடுபவர்கள் பொம்மைகளும், அவர்களுக்குப் பிடித்த கதை நாயகர்களும்தான். குழந்தைகளின் சண்டை என்பது அர்த்தமற்றது. அது வெறும் பிள்ளை விளையாட்டு. ஆனால், பெற்றோர்தான் இதை பெரிய விஷயமாக்கி அவர்களுக்குள் பேதத்தை வளர்த்து விடுகிறோமோ என்ற யோசனைக்குத் தள்ளும் நாவல். இந்த விஷயத்தை, குழந்தைகளுக்குப் பிடித்தமான குழந்தைக் கதைத் தொடரையே பயன்படுத்தி அழகாக சொல்லியிருக்கும் உத்தி மிகுந்த பாராட்டுக்குரியது.
குழந்தைகளைப் பற்றியே பேசும் நாவல் எனில், இந்த நாவலுக்கு இந்தத் தலைப்பு என்ன பொருத்தம் என வாசகரை யோசிக்க வைத்து அதற்கு தானே நாவலாசிரியர் பதில் சொல்கிறார். பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்ததைக் கூறுகிறார். பாற்கடலை இந்த மனித வாழ்க்கையெனக் கொண்டால், அமுதமாகிய பிள்ளைகளைப் பெறுவதற்கான முயற்சியில், சில சமயம் நாமே தேவர்களாகவும், சில சமயம் நாமே அசுரர்களாகவும் மாறுகிறோம். நாம் தேவர்களா, அசுரர்களா எனக் கண்டு கொள்ள முடியாமல் திண்டாடுகிறோம். அமுதம் கிடைத்தால் அதையும் விஷமாக மாற்றுகிறோம். விஷம் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியவில்லை. நாவலாசிரியர் எழுதுகிறார்….” சுரக்கும் விடத்தை உமிழ்ந்து அழிப்பதற்கும், அதை உட்செரிந்து தான் அழிவதற்கும் இடையிலான விளையாட்டாக மாறிப்போனது இப்புடவி’ தன் கண்டத்தில் விடத்தை நிறுத்தத் தெரிந்தவர்களால் நிகழ்கிறது இவ்வுலகு..
நாவலை, இப்படி பல புள்ளிகளிலிருந்து கோடுகளை இழுத்து அழகான கோலமாக ஆக்கியிருக்கும் சுனில் கிருஷ்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். ஆட்டிசம் பாதித்த குழந்தையை பற்றியதாக மட்டுமானதாக இந்த நாவலை உருவாக்கவில்லை அவர். குழந்தைகள் என்பவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே தவிர உங்களிடமிருந்தல்ல என்ற கலீல் கிப்ரானின் வரிகளை சொல்வதற்காகவே. நாவலை ஒரே நேர் கோட்டில் எழுதிச் செல்லாமல், வேதாளம், விக்கிரமன், குழந்தைகள் ரசித்துப் பார்க்கும், அந்தப் பாத்திரங்களோடு ஒன்றி விடும், பேக்மேன்,கடலாமை, நீலயானை போன்ற குழந்தைகள் தொடரின் பாத்திரங்களையும் பேச வைத்திருப்பது, சுடலையையும், மெடியாவையும் ஒரே மேடையில் நாடகப் பாத்திரங்களாக்கியது என ஒரு வித்தியாசமான வடிவில் நாவலை அமைத்திருப்பது சுவாரசியம் மிக்கது.
வித்தியாசமான நாவலை எழுதியிருக்கும் சுனில் கிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர். அழகாக வெளியிட்டிருக்கும் யாவரும் பப்ளிஷர்ஸ் பாராட்டுக்குரியவர்கள். அட்டை வடிவமைப்பு அருமை..
------------------------------
நன்றி
ReplyDelete