(ரமேஷ் கல்யாண் ஒரு வகையில் இலக்கிய உலகில் well wisher என சொல்லத்தக்க எழுத்தாள நண்பர். அம்புப்படுக்கை அங்கீகாரம் பெறும் முன்னரே அது குறித்து முக்கியமான வாசிப்பை பகிர்ந்திருந்தார். நாவல் குறித்த அவரது வாசிப்பு நிறைவை அளிக்கிறது. நன்றி)
இதுவரை பல சிறுகதைகளை கச்சிதமாக எழுதியவரும் யுவ புரஸ்கார் பெற்றவருமான எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் முதல் நாவல் நீலகண்டம். யாவரும் பதிப்பகம். எழுத்தாளர் மட்டுமின்றி மேலை இலக்கியங்கள் உட்பட்ட படைப்புகளின் ஆழ்ந்த வாசகரும், படைப்புகளை விமர்சகத்தன்மையோடு எழுதியும் பேசியும் வருபவர்.
ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் வளர்ப்பு பற்றிய நாவல் என்று ஒரு வரியில் சுருக்க முடியாமல் அப்படியான குழந்தையின் பெற்றோரியம், குழந்தையின்மை பற்றிய மனச்சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும்போது அவை மேலும் சிக்கலாதல், அதனால் உருவாகும் இடைவெளி, அவற்றை நிரப்ப குடும்பம் எனும் அமைப்புக்கு உட்பட்ட தம்பதிகள் செய்துகொள்ளும் சமரசங்கள், விட்டுக்கொடுத்தல், அல்லது வெடித்தல், அப்படியான குழந்தைகளின் உலகம் மற்றும் நிலைமை, தத்து எடுப்பதற்கான மன நிலை, தத்து எடுக்க செல்லும்போது அங்கு நிலவும் வணிக, சட்ட, மருத்துவமனை சூழல்கள் , அப்போது உருவாகும் நிலைகொள்ளாமை, காதல் திருமணத்தால் விலகிப்போன குடும்ப உறவுகள் நெருங்க முயலும் நிர்பந்தங்கள், அவற்றை ஏற்கும்போது உணரப்படும் மனநிலைகள், என பல்வேறு சிடுக்குகள் உள்ளே நுழைந்து பயணிக்கிறது இந்த நாவல். ஆட்டிசம் குழந்தை வளர்ப்பு பற்றிய முதல்வகை நாவல் என்பதாலும், அந்த குறைபாடு பற்றிய நாவலாக கருணை நரம்புகளை சீண்டும் நாவலாக விரியாமல், அதை எதிர்கொள்ளும் பெற்றோரியம் பற்றி பேசுவதாலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய நாவலாகிறது. சுவாரசியமான நாவலாக அல்ல.
நாவலில் பல இடங்களில் சமூக நிதர்சனம் என்பதை தயக்கமில்லாமல் தொட்டுக்காட்டியபடியே நாவல் நகர்கிறது. உதாரணமாக - ஆட்டிசம் உள்ள தனது குழந்தையை செந்தில் ரம்யா தம்பதிகள் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது பெரிய சோதனைக்காலம். சாதாரண பள்ளிகளில் சேர்த்தால், உணர்ச்சி கொந்தளிப்பும், பேசி புரியவைக்க முடியாத அல்லது நமது மொழியை புரிந்துகொள்ள முடியாத அந்த சிறு குழந்தை முரண்டு செய்தோ அல்லது மயக்கமுற்றோ விழுந்தால் அது அங்கிருக்கும் பிற சாதாரண குழந்தைகளை பாதிக்கும் என்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் அந்த குழதையை புரிந்துகொண்டு அனுசரிக்க வேண்டும் என்று பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் அந்த குழந்தையை ஸ்பெஷல் குழந்தைகள் படிக்கும் வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்றால் அங்கே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள் என்பதால் அது தனது குழந்தையை பாதிக்கும் என்று இந்த பெற்றோர் அஞ்சுகிறார்கள். இந்த இரண்டு அச்சத்தில் எதை சரி என்று நியாயப்படுத்த முடியும் ? இந்த குரலை செந்திலின் நண்பனின் குரல் மூலம் நாவல் ஒலிக்கிறது. இப்படியாக சில முக்கியமான இடங்கள் நாவலில் உள்ளது.
இதைவிட முக்கியமாக, குறைப்பிரசவத்தில் ஆண் குகுழந்தையை இழந்தபின், உடல் நிலை கருதி அந்த குழந்தை தத்து எடுக்கப்பட்ட குழந்தை என்பதும், குழந்தையாக நன்றாக இருந்த அந்த பிள்ளை வளரும்போதுதான் ஆட்டிசம் குறை இருப்பது தெரிய வருவதும், தத்து எடுத்த பிறகு அவர்களுக்கு சுயமாக ஒரு குழந்தை பிறக்கிறது என்பதும், அந்த நிலையில் அவர்களது உலகம் என்னவாக கிறுகிறுக்கிறது என்பதும் நாவலில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு ஆற்றல்கள் உண்டு, முழு அனுபவத்தை அடைய நமக்கு தியானம் போன்ற filter கள் உண்டு ஆனால் அவர்களுக்கு கிடையாது. மொசார்ட் போன்றவர்கள் ஆட்டிசம் இருந்தவர்கள்தான் போன்ற தனித்தனியான உண்மைகளை வைத்துக்கொண்டு ஆட்டிசம் என்பது மேதைமையின் ஒரு கூறு என்று அந்த குழந்தையின் அம்மா நம்பத் தொடங்குகிறாள். இதெல்லாம் நாவலில் நாம் வேகமாக கடந்து போய்விடக்கூடிய மிக அருமையான இடங்கள்.
மேலும் நாவலில் நாட்டார் கதை, புராண உபகதை, வேதாளம் விக்ரமாதித்தன் கேள்வி பதில் வகை, மேஜிக்கல் ரியலிச வடிவம், நாடக வடிவம் போன்றவை ஆங்காங்கே விரவி வருகிறது என்பது புதியதாக இருக்கிறது. இதில் சில சரியாக பொருந்தியும், சில உதிரியாகவும் நிற்கின்றன. இவற்றில் வரும் கிளைக்கதைகள் அனைத்துமே குழந்தை இன்மை அல்லது குழந்தை பெற்றோர் உறவு குறித்த அடையாளம் கொண்டதாகவே உள்ளன என்பதால் அவை நாவலோடு இணைந்து ஓடுகின்றன. சிறுத்தொடர் கதை, சுடலைமாடன் கதை, கிரேக்க துன்பியல் நாடக பாத்திரம் மெடியா, நாகம்மை கதை போன்றவை.
நாவலில் சொல்லப்பட்ட உபகதையின் பாத்திரம் வந்து நாவல் பாத்திரத்தை சந்திப்பது போன்ற உத்தியும் நன்றாக வந்திருக்கிறது. (திலீப் குமார் தனது ரமாவும் உமாவும் நாவலில் இப்படி ஒரு உத்தியை பயன்படுத்தி இருப்பார் என்று நினைவு). சிறுத்தொண்டர் கதையில் சொல்லப்பட்ட சீராளன், நாவல் பாத்திரம் செந்திலிடம், காவியுடை உடுத்திய முதியவனாக (ஏனோ திருவருட்ச்செல்வர் சிவாஜி மேக்கப் நினைவுக்கு வருகிறது ) வந்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த தன் பெயர் குறித்த அதிருப்தியை சொல்வதும், மரணம் இல்லாத தனது வாழ்வு பெரும் துன்பம் என்பதும், "எனக்கு காலமின்மையும் வேண்டாம்; மரணமின்மையும் வேண்டாம்' என்ற இடம் நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது. முதுமையை தானே விரும்பி கேட்டதாக சொல்லும் சீராளன் , தனது தலையை அரிந்து, அமுது படைத்த அப்பா தான் உயிர்த்தெழுந்து வந்த பிறகு கண்ட அப்பாவும் வெவ்வேறாக தான் உணர்வதை சொல்லும் இடம் அருமை. இப்படியான இடங்களை நிதானித்து பிறகு நாவலை தொடர்ந்தால்தான் நாவலை சரியாக வாசித்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. நாவல் முடிந்த பிறகு, சீராளனும், ஆட்டிச குழந்தை 'வரு'வும் தராசின் இரு தட்டுகளில் இருப்பதாக வைத்து நாம் யோசிக்கவைக்கிறது.
நிஜவாழ்வில் இருந்த வான்மதி அருண்மொழி நாவலில் ஒரு வந்துபோகும் பாத்திரமாக இணைத்திருப்பது நாவலுக்கு பெரிதாக பலம் எதையும் சேர்ப்பதில்லை. அதன் இடம் இன்னும் சற்று விரிவு பட்டிருந்தால் ஒருவேளை சிறப்பாக அமைந்திருக்கக்கூடும். அதேபோல கரையான்களால் ஒரு மிகப்பெரிய வீடு அரிக்கப்பட்டு சிதிலமுறுவதை மிக அழகாக ஒரு அத்தியாயம் பேசுகிறது. கரையான் மண்ணுக்குள் ஓடும் நெருப்பு என்று ஒரு அருமையான வரி வருகிறது. அந்த வீட்டை விட்டு செந்தில் போனபின் மறுபடி வந்து பார்க்கும்போது அங்கு இருக்கும் பெண் "நீங்க போனப்பறம் கரையான் வருவதே இல்லை' என்று சொல்கிறாள். இவ்வளவு கனமாக உருவான அந்த பகுதி நாவலோடு சரியாக பொருந்தி வரவில்லை. (காச்சர் கோச்சர் நாவலில் விவேக் ஷான்பாக்க்கும், ஒரு சிறுகதையில் சுரேஷ் வெங்கடாத்ரியும் எறும்புகள் பற்றி இதைப்போல எழுதி இருப்பார்கள்.) இப்படியான பகுதியை கையாளும் விதம் பற்றி படைப்பாளிக்கு கருத்து சொல்லுதல் வாசக வன்முறை என்றாலும், கரையானுக்கும் காலத்துக்கும் ஒரு தொடர்பு உண்டாக்கி, இதை மிகச்சிறந்த ஒரு உபகாரணமாக அல்லது உபாயமாக செதுக்கி புகுத்தி இருந்தால் இது நாவலின் சிறந்த பகுதியின் ஒன்றாக ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறை மனிதர்களை ஒரு பெரிய மண்புழு போல தின்று தள்ளுகிறது. ரம்யா தனது பணியில் இருக்கும் இறுக்கம் காரணமாக இடையிடையே எதையாவது தின்பண்டம் கொறிக்கிறாள். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சமயங்கள் குறைவு. ஒரு சமயத்தில் அவள் உடல் பருமன் அதிகரிக்கிறது. பிற்பாடு குழந்தை பேறின்மைக்கு அதுவும் ஒரு உப காரணமாக அமைகிறது. குழந்தைப்பேற்றுக்கான மருத்துவம், இந்தந்த நாட்களில் உறவு கொள்ளவேண்டும் என்று சொல்லி உணர்ச்சியை இயந்திர தன்மை கொள்ள வைக்கிறது. (திட்டமிட்ட கால அட்டவணை கலவையிலிருந்து காமத்தை வெளியே தள்ளியது என்று ஒரு அழகான வரி வருகிறது.) அதுவே பிறகு ஒரு ஆயாசமாக மாறுகிறது. இதற்காக இருவரும் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சை, அது தரும் அசௌகரியங்கள் என்று பலவும் நாவலில் வெவ்வேறு புள்ளிகளில் விரிகின்றன. தனது பெற்றோர்கள் வீட்டுக்கு வரும்போது தத்து எடுக்கப்பட்ட ஆட்டிசம் உள்ள முதல் குழந்தை வரு மறைத்து வைக்கப்படுகிறாள். பிறகு சப்தம் போடும்போது உள்ளே சென்று பார்க்கும்போது அது படுக்கையில் மலம் கழித்து அலங்கோலம் ஆக்கி வைத்திருப்பபது கண்டு 'எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குது' என்று கடிந்து கொண்டு மூர்க்கமாக நடக்கிறாள் தாய் ரம்யா. ஆனால் நிதர்சனத்தில் இங்கே யாரையுமே குற்றம் சொல்ல முடியாமல் இருக்கிறது என்பதும், தன் மேல் கவனம் விழுவதற்காக அந்த குழந்தை அப்படி செய்திருக்கும் வாய்ப்பே அதிகம் என்பதும் நாவலின் சன்னமான புள்ளிகள். இவற்றை சற்று ஊன்றி கவனித்து கடக்கும்போதுதான் நாவலின் அடர்த்தியை நாம் உணரமுடியும். ஆனால் இவையெல்லாம் மிக வேகமாக, சிறுகதைத்தன்மையோடு சுருக்கமாக கடந்து போய்விடுகிறது. இவை நாவலுக்குரிய சுதந்திரத்துடன் விரிந்து கொடுக்கலாம்.
எவ்வளவு படித்த சமூகமாக மாறினாலும், பெண்ணுக்கு குறை எனும்போது இல்லாத அழுத்தம், சீற்றம், ஆணுக்கு குறை எனும்போது அவனுக்குள் உருவாவதையும், விந்தணுவை கொடையாக பெற்று குழந்தை பெறுவதை ஏற்றுக்கொள்வது தம்பதிகளுக்கு பெரிய சவாலாகவே இருப்பதையம் சூட்சுமமாக சொல்லி போகிறது நாவல்.
காதல் திருமணம் செய்துகொண்டதால் பெண்ணோடு உறவை முறித்துக்கொண்டு விட்ட பெண்ணின் பெற்றோருக்கு சுகவீனங்கள் உண்டாகின்றன. ஆனால் மகளோடு சேர விரும்புவதில்லை. மகளுக்கும் குழந்தை இன்மை, தத்து எடுத்த குழந்தை ஆட்டிசம் நோயில் இருப்பது, நிம்மதி இன்மை, வேலைப்பளு என்று நசுக்கும்போது, அவரவர் அகத்தின் வீரியத்தால் நெருங்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் நெருங்குவதில்லை. பின்னொரு சமயம் அவர்கள் மகளோடு இணையும்போது, கணவன் தான் விலக்கப்படுவதாக உணரும் இடம் நிதர்சனமான ஒன்று.
ஆட்டிச குழந்தை வரு வின் உலகம் மற்றும் சிக்கல்கள் பற்றி நீல யானைப் பொம்மை நீதிமன்றத்தில் பேசுவதாக அமைந்த சிறு அத்தியாயம் நாவலின் முக்கியமான ஒன்று. குழந்தையின் நிலைமை குறித்து சொல்லமால் நாவல் முழுமை பெறாது. அதைப் பற்றி விளக்கினால் நாவல் ஒரு விளக்கப்பட தன்மையை உண்டாக்கிவிடும். இங்கே யானை பொம்மையின் மூலமாக அவற்றைப் பேசவைத்த இந்த உத்தியில் சுநீல் நல்ல நாவலாசிரியராகிறார்.
நாவலில் நம்மைத் தைக்கின்ற இடங்களில் இரண்டைச் சொல்லலாம் என்றால் - ஆட்டிச தத்து எடுத்து வளரும் குழந்தை வரு பற்றி தந்தை செந்தில் தனது அலுவலக சகா முரளியிடம் "வேற எல்லாத்தையும் விட்டு விடலாம் ..இப்ப வரைக்கும் அவ நன்றி விசுவாசத்தோடயே இருக்கா ..அதை என்னால தாங்கிக்கவே முடியலைடை டா " என்கிறான்.
மற்றொரு இடத்தில் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யும்போது பிள்ளை கூட்டல் எனும் முறைப்படி நன்றாக வளர்ந்த பின் ஒரு குழந்தையை தத்து எடுத்தால் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. சொத்து பிரச்சனைகள் வராது என்பதால் பிள்ளை கூட்டலாம் என்று கணவன் சொல்லும்போது மனைவி ரம்யா "குழந்தையை வள்ளக்கறதுல இருக்கற சந்தோஷத்துக்குத்தான் நான் தத்தே எடுக்கணும்னு சொல்றேன். நீ என்னடான்னா இருபத்தைந்து வருடம் அப்புறம்ன்னு பேசுறே " என்கிறாள். தத்து குழந்தை ஒரு ஆணுக்கு என்னவாகவும் பெண்ணுக்கு என்னவாகவும் தெரிகிறது என்பதை சொல்லும் இடம்
இறுதியாக வரு வை அழைத்துக்கொண்டு செந்திலும் ரம்யாவும் குடும்ப சுற்றுலாவுக்கு மகாபலிபுரம் செல்வதும், வண்டியில் இருந்த குழந்தை வரு காணாமல் போவதும் ஒரு திருப்பத்தை உருவாக்குகிறது. தேடிக்கொண்டே இருக்கிறார்கள். வேறொரு தளத்தில் வரு காகம், மீன், அரசமரம், சூரியன், ரயில் என்று ஒவொருவரோடும் போய்க்கொண்டே இருக்கிறாள். குழந்தை காணாமல் போனாள் என்று பதட்டமாக தேடிக்கொண்டு இருக்கும் செந்திலுக்கு அதே சமயம் 'இனி ஆன்சைட்ட்டுக்கு வெளிநாடு போகலாம் " என்றும் 'ரம்யாவுக்கு நிம்மதியாக இருக்கும் " என்றெல்லாமும் தோன்றுகிறது. பிரச்சனைகளில் ஆழத்தில் அமுக்கப்பட்டு திணறும்போடு மனிதன் கருணையற்றவனாகி விடுகிறான். (இந்த இடத்தில் புனலும் மணலும் நாவலில் ஆற்றின் ஆழத்தில் தனது காலைப் பற்றிக்கொண்டு மேலே வந்துவிட துடிக்கும் கோரமான முக அமைப்பு கொண்ட மகளை உதறிவிட்டு மேலே வரும் தந்தையின் பிம்பம் நம் கண்முன் தோன்றும் சாத்தியம் உண்டு.)
வேதாளம் விக்ரமனிடம் நீலகண்டன் கதையை சொல்கிறது. தேவரும் அசுரரும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைகிறார்கள். தலை வால் என இடம் மாறி நின்றும் கடைகிறார்கள். தாம் அசுரர் தேவர் என்பதை மறந்து கடைகிறார்கள். கடையும் பகுதியை மிக வித்யாசமாக எழுதுகிறார் சுனீல். நாவலின் இந்த பகுதி நிதானமாக நாவலை தலைப்புக்கு கொண்டு சேர்க்கிறது. ஈசன் தன் பிரியர்களின் பொருட்டாக நீளத்தை விழுங்க உமையவள் தொண்டையில் நிறுத்த அதையே ஆசீர்வதிக்கிறார். அமுது நஞ்சாக மாறும் தருணம் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. அதை அன்பின் முள்ளாக தொண்டையில் தேக்கியவர்களாலேயே நிகழ்கிறது இவ்வுலகு என்கிறது வேதாளம்.
செந்தில் ரம்யாவுடன் வேதாளமும் விக்ரமனும் கூட சேர்ந்து குழந்தை வரு வை பலகாலமாக தேடுகிறார்கள். எப்போதுமே கிளிப்பச்சை நிறைத்து கவுனோடுதான் வெளியே வரவேண்டும் என்று அடம் பிடிக்கும் வரு எப்போதும் அதையே அணிகிறாள். தொலைந்து போன அவளை அந்த நிறம் கொண்டே நமது மனமும் தேட ஆரம்பிக்கிறது.
அமுதும் நஞ்சும் ஒருங்கே பிறக்கும் பாற்கடல்தான் குடும்பம் எனும் லாசராவை தவிர்க்க முடியாமல் நாம் இங்கே நினைவு கூறுகிறோம். ஆனால் இங்கு அமுதே நஞ்சாக மாறுவது என்பது புதிய பரிணாமம் கொள்கிறது. தொண்டையில் நீலமாக நிற்பது நஞ்சு அல்ல. நஞ்சாக மாறிப்போன அமுது என்கிறது நாவல். இப்படியான இக்கட்டான இறுதி புள்ளிகளை நோக்கி நெருக்கும் சமயத்தில் ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நீலகண்டர் ஆகிறார்கள்.
இறுதி அத்தியாயம் இந்த நாவல் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக இருக்கும் வர்ஷினி செந்தில் (ஆட்டிச குழந்தை வரு தான்) என்பவள் எழுதியது என்கிறது. தந்தை செந்தில் ஒரு புத்தகம் எழுதுகிறார். சகோதரன் சாகர் விஞ்ஞானியாகி ஆட்டிச குழந்தைகள் பிறரோடு தொடர்பு கொள்ளும்படி ஒரு மின்னணு சாதனத்தை வடிவமைக்கிறான். இந்த நாவலே அப்படியான வர்ஷி ஆட்டிபேட் என்ற சாதனத்தால் எழுதப்பட்டதே என்கிறது இறுதி அத்தியாயம்.
வரு வை அனைவரும் ஒரு புறம் தேடிக்கொண்டிருக்க அவள் மற்றொரு புறம் விளையாட்டாகவே நகர்ந்து கொண்டிருப்பதும், வேதாளம் முதல் மனிதன் வரை அவளை தேடிக்கொண்டிருப்பதாக இருக்கும் இடத்தில் நாவல் தனது முகட்டினை தொடுகிறது. ஆட்டிச குழந்தைகள் நிலை அவர்கள் பெற்றோர் நிலை தவிப்பும், மேன்மையும் கீழ்மையும் கூடியதாகவே இருப்பதாக சொல்கிறது. அதன் பிறகு வரும் அத்தியாயம் சட்டென ஒரு சம்பிரதாயமான நேர்மறையான முடிவை நோக்கி நாவலை தள்ளிக் கொண்டு நிறுத்துகிறது. கடைசி அத்தியாயத்தை நாம் பொருட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், சிறுமி வரு காணாமல் போவதிலிருந்து, அவள் ஒரு முனைவராகி இந்த நாவலை எழுதுவது வரையிலான பகுதி மிக நீண்ட இடைவெளியாக, எழுதப்பட்டிருக்கும் நாவலின் அம்சத்துக்கு இணையாக வேறெங்கோ நடக்கிறது. அதனால் அது நாவலுக்குள் மறைமுகமாக கூட நுழைய இடமில்லாமல் போகிறது.
குழந்தைகள் உற்பத்தி முனையம் எனும் அத்தியாயம் குழந்தைகளை நமது தேவைக்கு தகுந்தபடி உருவாக்கிக் கொள்ள முடியும் எனும் அறிவியல் வாணிகத்தைப் பற்றி கிழித்து தொங்கவிடுகிறது.
நாவலில் பல அழகான இடங்கள் ஒரு சிறுகதையின் அவசரத்தோடு வேகமாக நகர்கிறது அல்லது அப்படி தோன்றுகிறது. கரையான் குறித்த அத்தியாயம், திருவண்ணாமலை நண்பன் அவன் அப்பா பற்றிய இடங்கள், அண்ணாமலை கதை போன்ற சில நல்ல அம்சங்கள் தம்மளவில் சிறப்பாகவும் நாவலோடு இணைய முடியாமல் தொக்கியும் நிற்கின்றன. அதே சமயம் பச்சை பாவாடை சிறுமி நாகம்மை கதை ஜோசியர் சொல்லும் குறிப்புக்கு சரியாக பொருந்தி வருகிறது.
வழக்கமான சமூக வரம்புகளை உதறி, சில்லி பவர் ஜேம்ஸ் என்று கோபிக்கும் நவீன மனம் கொண்ட முரளி பாத்திரம் ஆதவனை நினைவு படுத்துகிறது. செயற்கை கரு தரிப்பு பற்றி சொல்லும்போது நக்கலான கிண்டலோடு சொல்லும் டாக்டரை அப்படியே' மல்லாக்க தள்ளி நெஞ்சில் குத்தவேண்டும் போல இருந்தது' எனும்போது சற்று சுஜாதாவையும் நினைவு கூறவைக்கிறது. ஒன்பது மாத கருவை ஒன்பது மாத சிசு என்று ஒரு வரி போன்ற மிகச்சில தவிர்த்து நாவலில் மிளிரும் வரிகள் பல உண்டு.
· ஒரு சின்ன சட்டகத்தில் மூடிவிலீயை அதைத்து விடுகிறார்கள்
· சலிப்படைந்தவனின் காலம் அவன் முன் ஊர்ந்து செல்கிறது
· சாபங்களில் கல்லாக ஆகும் புராண மாந்தர்கள் போல் அவர்களும் மெல்ல மெல்ல கல்லாவார்கள் (தசை சிதைவு நோய் பற்றி )
· வன்மம் அளிக்கும் நிறைவை அன்பு அள்ளிப்பதில்லையோ
· பேரன்பில் ஒரு துளி நஞ்சு விழும்போது அதுவே பெருநஞ்சு
· நீலகண்டர்களால்தான் இந்த உலகம் நிகழ்கிறது
நாவலைப் படிக்கையில் முக்கியமான ஒரு சந்தேகம் வருகிறது. சரியாக பேச்சு வராத நாகம்மை சிறுமி கிணற்றுக்குள் குதிக்கிறாள் அல்லது விழுந்துவிடுகிறாள். (இந்த நாகம்மை கதை நிகழ்ச்சியாக ஒரு முறையும் அமானுஷ்ய கதையாக ஒரு முறையும் சொல்லப்படுகிறது). வரு சிறுமியும் பிரச்சனை முற்றும்போது பேருந்தில் இருந்து காணாமல் போகிறாள். நாகம்மைக்கும் சகோதரன் உண்டு. வரு வுக்கும் உண்டு. இந்த ஒப்பீட்டில் நாகம்மையும் வரு வும் ஏறக்குறைய ஒரே நிறை. சிக்கல் முற்றும்போது அவர்கள் நிலைமை நாவலில் தீர்மான முடிவுகளை நோக்கி செல்லாமல் மறைந்து போயோ மறைந்து கொண்டோ தப்பித்துக்கொள்கின்றனவா ?
ஆனால் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து, நடப்புலகில், ஆட்டிச குழந்தையை பெற்ற பெற்றோர்கள் - அதுவும் நன்றாக இருக்கிறது என்று எண்ணி தத்து எடுத்து பிறகு ஆட்டிசம் இருப்பதை அறிவதும், அதற்கு பிறகு தங்களுக்காக தம் ரத்தத்தில் ஒரு குழந்தை பிறப்பதும் அப்போது அவர்கள் தங்களுக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் உருவான உறவுகளில் ஏற்படும் அதிர்வுகளும், அதன் கடைசல்களில் தவிப்பதுமான பின்னணியில் - விலகி நின்று சொல்லப்பட்டிருக்கும் நாவல் அதனளவில் முக்கியமான ஒன்று. உணர்ச்சிகரமான நாடகீயமான இடங்கள் உருவாகிவிடுவதை திட்டமிட்டு தவிர்த்து நாவலை சொல்ல முயலும்போது நாம் அதற்கான இடத்தில் வைத்து இந்த நாவலை வாசிக்கவேண்டும்தான்.